Published:Updated:

துர்கா !

துர்கா !

துர்கா !

துர்கா !

Published:Updated:

நடிப்பு : ஐஸ்வர்யா
கலை : ஸ்யாம்
ஒளிப்பதிவு : கே.ராஜசேகரன்
கதை, திரைக்கதை : தேவிபாலா 
இயக்கம் : நீங்களேதான்

##~##

துர்கா மீது ஆனந்த்தின் சந்தேகம், அதனால் நடேசன், அன்வர் இருவருக்கும் அதிர்ச்சி. இனி, துர்காவின் எதிர்காலம் என்னாகும்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடந்த எபிசோட், இப்படி 'திடுக்’ கேள்வியோடு முடிந்திருந்தது. அடுத்த எபிசோட், பயணிக்க இருக்கும் ரூட்டைத் தீர்மானிக்க... இங்கே விதம்விதமாக யோசிக்கிறார்கள் வாசகிகள்.

மரகதம் - ஹைதராபாத், சுகுணா ரவி - சங்கரன்கோவில் இந்த இருவரும் ஆனந்த்தின் சந்தேகப் பிரச்னையை ஊதிப் பெரிதாக்குகிறார்கள்! கருத்துக்கள் நன்றாக உள்ளன. ஆனால், வேகம் போதவில்லை!

திலகா - பெரம்பூர், வசந்தி - திருத்தணி, ரஞ்சனி - குடவாசல்... இந்த மூன்று சகோதரிகளும் பாலாஜிக்கு இரண்டாம் கல்யாணம் செய்து, ஆனந்த்தின் சந்தேகத்துக்கு நிவர்த்தி தேடத் துடிக்கிறார்கள்.

அம்பிகா - பெங்களூரூ, மும்தாஜ் பேகம் - பரங்கிப்பேட்டை.... ராஜாவை ஹாஸ்டலில் சேர்த்து விடலாம் என்பது இந்த இருவரின் முடிவு. இது, பரவாயில்லை ரகம் என்று சொல்லலாம்!

எஸ். மங்கை - குளித்தலை, சந்திரா - நாகப்பட்டினம் இருவரும் அன்வர் - ஆனந்த் மோதலைத் தொடங்கி வைப்பதைப் பாராட்டலாம். ஆனால், இன்னும் வேகம் வேண்டும்.

புஷ்பா - காரைக்குடி சொல்கிறார்.... 'இரு குழந்தைகளின் பாரத்தையும் அன்வர் ஏற்கட்டும்’ என்று இது ஒரு அதிசய திருப்பம் என்பதால்... வரவேற்க மட்டும் செய்யலாம்!

திலகவதி சத்யன் - போரூர்... 'பிரச்னைகளைத் தீர்க்க பாலாஜி ஊரை விட்டுப் போகலாம்' என்று புது ரூட் போடுகிறார். ஆனால், இது முழுமையான தீர்வாக தெரியவில்லையே!

ஆர். மீனா - மும்பை... விவரம் கேட்ட துர்காவின் ஆவேசம்... அதைத் தொடர்ந்த கொந்தளிப்பு... இனி வரக் கூடிய பின்விளைவுகள்... என்று கதை பின்னியிருக்கிறார். புதிதாக இன்னும் சேர்த்திருந்தால்... முதலிடத்தைப் பிடித்திருப்பார்.

ராஜேஸ்வரி நடராஜன் - சென்னை... இந்த சகோதரி மிகவும் யதார்த்தமாக சிந்தனை செய்கிறார். அதைவிட, துர்காவின் கதாபாத்திரத்தை சரியாகப் புரிந்து கொண்டு... இயல்பாக அவள் இதை அணுகட்டும் என்று கதையைக் கடத்துகிறார். உறவுகளை, துர்கா கையாளும் விதத்தையும் அழகாகச் சொல்கிறார். எனவே, இந்த எபிசோட் இயக்குநர்.... இவரே! பாராட்டுகள் தோழியே!

துர்கா !

அன்வர் சரக்கென வெளியே வந்துவிட்டான். ஆனந்த் சொன்னதை, அன்வர் கேட்டுவிட்டான் என்பது தெரியவர, நடேசனுக்கு அடுத்த அதிர்ச்சி.

மெள்ள நடேசனை நெருங்கிய அன்வர், ''என்ன சார் இது? ஏன் இப்பிடி பேசறாரு? அக்காவை இவர் சந்தேகப்படறாரா? உருப்படுவாரா இவர்?''

நடேசனுக்கு பதில் பேச முடியவில்லை.

''ஸாரி சார்! உங்க மகன்தான். நான் பேசறது தப்புதான். ஆனா, என்னால தாங்கிக்க முடியலையே?''

''நீ பேசறதுல தப்பே இல்லை அன்வர். ராஜத்தை விட்டுட்டு, துர்காகூட இவன் தனிக்குடித்தனம் வந்தப்ப நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன். ஆனா, இப்பிடி ஒரு முள்ளை நெஞ்சுல சுமந்துகிட்டா இவன் இங்கே வந்திருக்கான்? இது துர்காவோட வாழ்க்கையை குத்திக் கிழிச்சுடுமே!''

ஆனந்த் வெளியே வந்தான்.

''நான் இப்பவே கேட்டுடட்டுமா?'' என்று அன்வர் துடிக்க, அன்வரின் கைகளை அவசரமாகப் பிடித்தார் நடேசன்.

''நான் வெளியில போயிட்டு வர்றேன்பா!'' என்றபடியே கடந்தான் ஆனந்த்.

''அவசரப்படாதே. நேரடியா கேட்டா, விபரீதமா ஆயிடும். அது, துர்காவை இன்னும் அதிகமா பாதிக்கும்.''

''அதுக்காக பேசாம இருந்தாலும் போராட்டம்தானே சார்? இது புரியாம அக்கா இயல்பா இருப்பாங்க... பாலாஜி சார் இங்கே வருவாரு... அவர்கிட்ட அக்கா பேசற ஒவ்வொரு வார்த்தைக்கும் இவர் அர்த்தம் கண்டுபிடிப்பாரே?''

''துர்காகிட்ட சொல்லிட லாம்னு நினைக்கிறியா?''

''தப்பென்ன?''

துர்கா !

''வெள்ளை மனசு பொண்ணு... துடிச்சுப்போக மாட்டா?''

குழந்தைகள் இரண்டும் ஏதோ சாப்பிட்டபடி விளையாட, துர்கா வெளியே வந்தாள்!

''நீங்க ரெண்டு பேரும் எதுக்கு வாசல்லயே நிக்கறீங்க? அன்வர்... உனக்கு நிறைய வேலை இருக்கு. உள்ளே வா...''

''வேண்டாம்க்கா. உள்ள வரவே பயமா இருக்கு!''

''ஏண்டா?''

''இந்த பந்தம், பாசம் எதுவும் இனி வேண்டாம்க்கா. நாங்கள்லாம் விலகிக்கறோம்!''

நடேசன் அவன் பேசுவதைக் கேட்டு மிரண்டு போனார்.

''என்னை மன்னிச்சுடுங்க சார். அக்காகிட்ட இதை மறைக்க எனக்கு விருப்பமில்லை.''

ஆனந்த்தின் மனப்போக்கை அன்வர் உடைத்துவிட்டான். துர்காவை நிமிர்ந்து பார்க்க முடியாமல் நடேசன் தலை குனிந்து நிற்க,துர்கா கலகலவெனச் சிரிக்க... இருவரும் அதிர்ந்துபோய் பார்த்தார்கள்.

''என்னம்மா சிரிக்கறே நீ?    நாங்க சொல்றது பொய்னு நெனச்சியா?''

''சத்தியமா இல்லை மாமா! ஆனந்த் நேத்து வரைக்கும் ஏறத்தாழ ஆஸ்பத்திரியில நோயாளியா இருந்திருக்கார். வேலை சாசுவதமில்லைனு ஒரு நிலை வந்திருக்கு. ஏகப்பட்ட பணப்பிரச்னை. குடும்பக் குழப்பம். ஒடம்பு தளர்ந்துபோனா, மனசுல பலம் இருக்காது. திடமில்லாத மனசு தறிகெட்டு ஓடத்தான் செய்யும். அவரைச் சொல்லித் தப்பில்லை!''

''துர்கா... நீயா பேசற? பிரச்னைகள் உச்சத்துல இருக்கறது உண்மை £ன். அவனா சமாளிக் கறான்? சகலத்தையும் இழுத்துப் போட்டுட்டு நீதானே தவிக்கறே? மாப்பிள்ளை கடனை அவனா அடைச்சான்? ராஜத்தோட விஷப் பேச்சை அவனா தாங்கினான்? செத்துப் போனது உன் அக்கா. வெளிநாட்டுப் பயணம் உனக்கு. இத்தனையும் தாங்கி நிக்கற உன்னை ஆதரிக்காம... சந்தேகப்படறவன் ஒரு மனுஷனாம்மா?''

''அக்கா... நீ போட்ட திட்டப்படி வெளிநாட்டுக்குப் போயிடு. அதுதான் உனக்கு நல்லது!''

''கண்ணுக்கு முன்னால் சந்தேகப்படறவர், கடல் கடந்து சந்தேகப்படட்டும்னு சொல்றியா அன்வர்?''

''என்னக்கா இத்தனை சுலபமா எடுத்துக்கற இதை? ராஜா இங்கே இருக்கறது இனி நல்லதா? அவனைப் பார்க்க பாலாஜி சார் வருவாரு... அது விபரீதமில்லையா?''

''எலிக்கு பயந்து, வீட்டைக் கொளுத்த முடியுமா அன்வர்? அத்தான் பாலாஜி, எனக்கு அப்பா மாதிரி. நீ தம்பி. மாமா தெய்வத்துக்குச் சமம். புரியுதா?''

''எங்களுக்கு புரிஞ்சு என்னம்மா லாபம்? இந்தக் களங்கமில்லாத மனசை அவன் புரிஞ்சுக்கலயே?''

- நடேசன் கொந்தளித்தார்.

''மாமா... ராமாயண சீதைக்கே தீக்குளிக்கற வேதனை. தப்பிக்க முடிஞ்சுதா? புராண விளக்கங்கள் ஆயிரம் இருக்கலாம். பொண்ணா பொறந்து பல சமயம் புண் படணும்னு தலையில எழுதியிருந்தா, அதை மாத்த யாரால முடியும்?''

''இதை இப்படியே விட்டுற முடியுமா?''

''விடமாட்டேன். நான் பார்த்துக் கறேன். அக்கா குழந்தையையும் விட முடியாது!''

''அவனுக்கு அப்பா இருக்கா ரேம்மா. பாலாஜி பார்த்துக்கட்டும். முடிஞ்சா, அஞ்சுவுக்கும் அனுமதி கேட்டு, அவளையும் கூட்டிட்டு வெளிநாட்டுக்குப் போயிடு. இவன் நாறட்டும். நல்ல மனைவியை சந்தேகப்படறவன்... நடுரோட்டுக்கு வரணும்!''

ஆனந்த் வருவது தென்பட்டது.

''போதும்... ரெண்டு பேரும் நிறுத் திக்குங்க. எதையும் கண்டுக்க வேண் டாம். நான் பாத்துக்கறேன்.''

''அம்மாடி... நான் புறப்பட றேன்.''

''அக்கா... எனக்கும் வேலை இருக்கு!''

''சரி அன்வர்... போன் பண்றேன்.''

ஆனந்தை பார்க்கக்கூடப் பிடிக்காமல் நடேசன் வெளியேற, அன்வர் பைக்கை உதைத்தான். துர்காவுக்குப் புதுக்குடித்தனம் என்பதால் பொருட்களை சீர்செய்ய வேண்டியிருந்தது. நிறையப் பொருட்கள் வாங்க வேண்டி வந்தது. ஆனந்த்திடம் எதுவும் பேசவில்லை. இரவுக்கான உணவைத் தயார் செய்தாள். குழந்தைகள் இருவரும் சாப்பிட்டுவிட்டு உறங்கத் தொடங்கி விட்டார்கள்.

செல்போன் ஒலிக்க, துர்கா எடுத்தாள். எதிர்ப் பக்கம் பாலாஜி!

''என்ன துர்கா... புது வீடு சரியா இருக்கா?''

''பழகப் பழகத்தான் சரியாகும் அத்தான்!''

பாலாஜி எனத் தெரிந்ததும், காதுகளைத் தீட்டிக் கொண்டான் ஆனந்த். அவளும் ஓரக் கண்ணால் கவனித்தாள்.

''நீங்க இந்தப் பக்கம் வரவேயில்லையே?''

''நாளைக்கு வர்றேன்மா...''

''அவசியம் வாங்க. ராஜாவைப் பாக்க வேண் டாமா? தனியா சமைச்சுக்கிட்டு எதுக்காக கஷ்டப்படறீங்க?''

இன்னும் கொஞ்சம் பேசிவிட்டு இணைப்பைத் துண்டித்தாள். இரவு ஒன்பதாகிவிட்டது.

''ஆனந்த்... சாப்பிட வாங்க.''

''வேண்டாம். எனக்குப் பசியில்லை.''

''பால் தரட்டுமா?''

''அதுவும் வேண்டாம்.''

''சரி... நான் சாப்பிட்டு வந்துடறேன்'' என்றவள், சப்பாத்தியை பிளேட்டில் வைத்து, குருமாவை வைத்தாள்.

''துர்கா... ராஜாவுக்கு அம்மா போயாச்சு. அப்பா வையும் பிரிஞ்சு எதுக்காக அவன் இருக்கணும். கொண்டுபோய் நான் விட்டுடறேன்!''

''ஏங்கிப் போயிடுவான். அவன் இங்கயே இருக்கட்டும். அத்தான் வந்து போகட்டும்.''

''அதுதான் தேவையில்லைனு சொல்றேன்''

- குரல் உயர்ந்தது.

''உங்கம்மா இவனை நம்ம வீட்ல வெச்சுக்கத் தயாரா இல்லை. நான் தனிக்குடித்தனம் வந்ததே இதுக்காகத்தான். புரியுதா?''

''இது நல்லாயிருக்கா துர்கா?''

''நான் உங்களை வரச் சொல்லலியே? நீங்க தானே புறப்பட்டு வந்தீங்க?''

''நானும் வராம, நீ மட்டும் ரெண்டு குழந்தைங்க கூட இருந்தா, ராஜாவை பார்க்க அடிக்கடி பாலாஜி வருவார்!''

''வரட்டும்!''

''ஊரும், உலகமும் என்ன பேசும் துர்கா?''

''ஆயிரம் பேசட்டும். அத்தான், எனக்கு அப்பா மாதிரி.''

''நீ சொல்லலாம். அவர் வயசு சொல்லுமா? பொண்டாட்டியை இழந்த மனுஷன் வேற!''

''அதனால?''

''ஸ்டாப் இட் துர்கா. நீ பச்சைக் குழந்தை இல்லை. என் பொறுமையை சோதிக்காதே! வெளிநாட்டுக்குப் போகாதேனு நான் தடுத்தப்ப நிக்கல. பாலாஜி மயங்கி உன்மேல சரிஞ்சப்ப, யோசிக்கறே. பெத்த மகளை விட்டுட்டுப் போக கவலைப்படல. அக்கா பையனை விட மன சில்லை. என்ன அர்த்தம் இதுக்கெல்லாம்?''

''கட்டின பொண்டாட்டியை நீங்க நம்பலனு அர்த்தம். உங்க குடும்பத்துக்காக, உங்களுக்காக வாழற அவமேல உங்களுக்கு சந்தேகம் வந்தாச்சுனு அர்த்தம். மனசைவிட, உடம்புக்கு அதிக முக்கியத்துவம் தர்றீங்கனு அர்த்தம்.''

ஆனந்த் ஆடிப்போனான். துர்கா அவனையே பார்த்தாள். அந்தப் பார்வையை நேருக்கு நேர் சந்திக்க முடியாமல் தடுமாறித் தத்தளித்தான்.

''நான்... நான் ஒண்ணும் காவிய புருஷன் இல்லை. சராசரி மனுஷன்தான்.''

''புரியுது. இன்னிக்கு உங்க சந்தேகப் பட்டியல்ல முதல் ஆள் பாலாஜி. நாளைக்கு வராகன், மறுநாள் அன்வர். உங்கப்பாவைக்கூட நீங்க சந்தேகப்படலாம்...''

''துர்கா... என்ன பேசறே?'' - கைகளை ஓங்கி விட்டான் ஆனந்த்.

''வயசானாலும் அவரும் ஆம்பளைதானே ஆனந்த்?''

ஆனந்தின் உடம்பு உணர்ச்சிவசப்பட்டு தடதடவென ஆடியது.

''அத்தான் மயக்கமாகி என்மேல சரிஞ்சு, அவருக்கு நான் முதலுதவி செஞ்சப்ப, உங்க முகம் போன போக்கை அப்பவே நான் பாத்துட்டேன். அந்த நொடியில நான் எடுத்த முடிவுதான் வெளிநாட்டுக்குப் போகக்கூடாதுங்கற முடிவு. உள்ளூர்ல, அப்பா மாதிரி ஆளாக்கின ஒரு அத்தானையே சந்தேகப்படற நீங்க, வெளிநாட்டுல நான் இருந்தா, தினம் தினம் எத்தனை கற்பனைகளுக்கு ஆளாவீங்க?''

''துர்கா...''

''அந்த ஆத்திரம் முழுக்க அஞ்சு மேல பாயும். உங்க மகள்தானானு நினைக்கச் சொல்லும்!''

ஆனந்த் முகம் சிவந்து, ரத்தம் தலைக்கேறியது.

''எத்தனையோ பாசமா இருந்தும் உங்கம்மா என்னை புரிஞ்சுக்கல. ஒருநாள்கூட நல்ல வார்த் தைகளை எங்கிட்டப் பேசல. உங்கக்கா, தங்கை என் மேல அன்பு வைக்கல. எதுக்காக அத்தனை கசப்புகளையும் தாங்கி அந்தக் குடும்பத்துல வாழ்ந்தேன். கட்டின புருஷன் என்னைப் புரிஞ்சுக் கிட்டவர்னு ஒரு நம்பிக்கைலதான். அதுவே இல்லைனு ஆன பிறகு, அந்த வீட்ல எதுக்கு நான் வாழணும்?''

''............!''

''நீங்க மனைவியைப் பிரிய முடியாம, என்கூட வரல. பாலாஜி இங்கே வந்துடுவாரோங்கற பயத்துலதான் வந்தீங்கனு அப்பவே தெரியும். இதைக் கேட்டு மாமாவும், அன்வரும் பாவம் துடிச்சுப் போயிட்டாங்க''

''துர்கா... நீ பேசினது போதும்!''

''இன்னும் கொஞ்சம் பாக்கியிருக்கு ஆனந்த். இப்ப விட்டா... பிறகு பேச முடியுமானு எனக்குத் தெரியல''

ஆனந்த் முகத்தில் அதிர்ச்சி!

''ஒரு நல்ல மனைவி, தன் கணவன் சந்தேகப் பட்டா துடிச்சுப் போவா... கண்ணீர் விடுவா... அல்லது எதிர்த்து ஆர்ப்பாட்டம் பண்ணுவா. இது எதையும் நான் செய்யப் போறதில்லை''

ஆனந்த் முகத்தில் குழப்பம்!

''தாம்பத்யத்தோட ஆணிவேரே நம்பிக்கை தான். நாம இல்லாத நேரத்துல மனைவி யார்கூட இருக்காளோங்கற எண்ணம் வந்துட்டா, அது சாவைவிடக் கொடுமை. குடும்பநல நீதிமன்றத்துல விவாகரத்து வழக்குகள் குவிஞ்சு கிடக்கு. தாம்பத்யத்துக்கு ரொம்ப அவசியம் பொறுமை. அது ஆம் பளைக்கோ, பொம்பளைக்கோ விடுபட்டா... வாழ்க்கை நரகமா யிடும். தன் கால்ல நிக்கற ஒவ்வொரு பொண்ணும், கோர்ட் படியை மிதிக்க பயப்படறதேயில்லை தெரியுமா?''

ஆனந்த் குபீரென நிமிர்ந்தான்.

''பயப்படாதீங்க. அந்த முடிவுக் கெல்லாம் நான் வரல. என் குழந்தை அஞ்சுவோட எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க நான் தயாரா இல்ல.''

''அப்படீனா?''

''வேற்று மத அன்வரை சுதா விரும்பினப்ப, அவன் ஒரு நல்ல மனுஷன்னு அந்தக் காதலை நான் ஆதரிச்சேன். மூணாவது மனுஷங் களுக்கே உதவற நான், மனைவியை இழந்து, குழந்தையோட நிக்கற அத்தான் மேல பரிவு காட்டினது குற்றமில்லை. புருஷன் கட்டின தாலியும், தாம்பத்யமும், அவன் கொடுத்த குழந்தையும் உசத்திதான். அதுக்காக பிறந்த வீட்டுப் பந்தங்களுக்கு ஒரு பெண் செய்யற கடமையை துறக்க முடியாது. அதை விகாரப்படுத்தற புருஷனை மன்னிக்கவும் முடியாது.''

''துர்கா..!''

''கண்ணாடில விரிசல் விழுந் துட்டா, அழகு போயிடும். தாம்பத் யத்துல கல் வீசி, அதை நீங்க உடைச்சாச்சு. நான் தனிச்சு வாழ முடியும். என் அவசரத்துல, ஆத்திரத்துல அஞ்சு அடிபடறதை நான் விரும்பலை. ஒரே வீட்ல வாழலாம். நான் தயார். அதுவும் பிடிக்கலைனா, நீங்க உங்கம்மா வீட்டுக்கே போயிட லாம். ராஜா என்கிட்டத்தான் இருப்பான். அத்தான் இங்கே வருவார். அன்வர் மாதிரி மனித நேயம் உள்ளவங்ககூட என் நட்பு தொடரும். 'புருஷனுக்கு முன்னா லேயே பூவும் பொட்டும் வந்தாச்சு'னு சொல்லுவாங்க. உறவுகளும், நட்பும் கூட அப்படித்தான். புரிஞ்சுக்கிட்டா... கைகோத்து காலம் முழுக்கப் பயணிக்கலாம். இல்லைனு நெனச்சா, நமக்குரிய ஸ்டேஷன் வந்தாச்சுனு இறங்கிப் போயிட்டே இருக்கலாம். குட் பை!'' - உள்ளே போய்விட்டாள் துர்கா.

ஆனந்த் ஆடிப்போய் நின்றான். ரத்தம், நரம்புகளில் வேகமாகப் பாய்ந்தது. உடம்பு முழுக்க ஒரு மாதிரி மின்சாரத் தாக்கம். 'பாலாஜி இனி வரமாட்டார். ராஜா இங்கே இருக்க வேண்டாம்’ என பல காம்ப்ரமைஸ்களுக்கு துர்கா வந்து தன் முன் மண்டியிட்டால், மன்னித்துவிடலாம் என்கிற புருஷத் திமிர் தலை விரித்தாடிக் கொண் டிருந்த நிலையில்... அதை செருப்பால் அடித்துவிட்டாள் துர்கா. பல மாதங்களுக்கு கோர்ட்டுக்கு நடந்து செருப்பு தேய்ந்து, கரன்ஸிகள் கரைந்து, முடிவில் கிடைக்கப் போகும் ஒரு தீர்ப்பை, சுலபமாக சில நிமிடங்களில் வழங்கிவிட்டாள்.

'அவளால் தன் கால்களை ஊன்றி நிற்க முடியும். என்னால் முடியுமா? துர்காவை உதறிவிட்டு என்னால் வாழ முடியுமா? வாழ்வின் போராட்டங்களைச் சந்திக்க முடியுமா? இத்தனை பேசிய பிறகு துர்காவுடன் இயல்பாக வாழ முடியுமா?’ இப்படியாக கேள்வி மேல் கேள்விகள் அவனுக்குள் புறப்பட, அதிர்ச்சி அதிகமானது. அந்த அதிர்ச்சி பயத்தைக் கொடுத்தது. அதேசமயம், 'ஒரு பெண்ணுக்கே இத்தனை துணிச்சல் என்றால்... ஆண் - நான் என்ன குறைந்தவனா?' என்கிற ஈகோவும் தலை விரித்து ஆடியது.

உறங்க முடியவில்லை. நள்ளிரவு 12 மணி என தேவாலய மணி அறிவித்தது. விடியலை நோக்கி விநாடிகள் வேகம் பிடிக்க, 'விடிந்தால் என் நிலை என்ன?’ என்ற கேள்வி அவனுக்குள் பூதாகரமாக எழுந்து நின்றது.

ஆனந்த் என்ன செய்யப் போகிறான்... துர்காவின் அடுத்த கட்ட பயணம் என்ன?

- தொடருங்கள் தோழிகளே...

ஆடைகள் உதவி: பி.எம். சில்க்ஸ்,
மயிலாப்பூர்,
சென்னை

பிரஷர் குக்கர் பரிசு!

"நிஜம்மா.. நிஜம்மா எனக்குத்தான் எபிசோட் இயக்குநர் நாற்காலியா?" என்று பலமுறை திரும்பத் திரும்பக் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டார் ராஜேஸ்வரி நடராஜன்... அவருக்கு சற்று நேரம் பேச்சே வரவில்லை.

துர்கா !

"என்னால நம்பவே முடியல. ஒவ்வொரு முறை கதை சொல்றப்பவும்... 'இந்தத் தடவை நமக்குதான் இயக்குநர் வாய்ப்பு கிடைக்கும்'னு ஆசையோட... உற்சாகமா சொல்வேன். பகவான் கிருபையால இந்த முறை அந்த வாய்ப்பும் அதிர்ஷ்டமும் கிடைச்சுருக்கு’’ என்று குதூகலிக்கும் இந்த சூப்பர் சீனியர் சிட்டிசன்,

நல்ல கதையும் கொடுத்து... பரிசும் கொடுக்கிறது ரொம்ப ஆச்சர்யம்தான்" என்கிறார் முகம் கொள்ளாத சிரிப்புடன்!

இவருக்கு பிரஷர் குக்கர் அன்புப் பரிசாக அனுப்பி வைக்கப்படுகிறது!

இந்த அத்தியாயத்தைப் படித்து முடித்ததுமே... அடுத்த அத்தியாயம் எப்படி என்பதை தீர்மானியுங்கள். அதை அப்படியே மனதில் வடித்துக் கொண்டாலும் சரி, எழுதி வைத்துக் கொண்டாலும் சரி... 044-42890014 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு உங்கள் பெயர், ஊரை முதலில் சொல்லி விட்டு உங்கள் குரலிலேயே கதை திருப்பத்தை பதிவு செய்யுங்கள். மிகச்சிறந்ததாக தேர்ந்தெடுக்கும் கதைத் திருப்பத்தை வைத்து அடுத்த அத்தியாயத்தை நகர்த்துவார் தேவிபாலா. அத்தகைய எபிசோடை சூப்பராக சமைக்கும் வாசகிக்கு பிரஷர் குக்கர் பரிசு!

முக்கிய குறிப்பு: செவ்வாய் விட்டு செவ்வாய் 'அவள் விகடன்' கடைக்கு வருவது உங்களுக்குத் தெரிந்ததுதான். இதழ் வெளிவரும் வாரத்தின் சனிக்கிழமை அன்று மாலைக்குள் 044-42890014 எண்ணைத் தொடர்பு கொண்டு கதைத் திருப்பத்தை பதிவு செய்ய மறக்காதீர்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism