Published:Updated:

குற்றமும் தண்டனையும் - சு.வெங்கடேசன்

குற்றமும் தண்டனையும் - சு.வெங்கடேசன்
பிரீமியம் ஸ்டோரி
குற்றமும் தண்டனையும் - சு.வெங்கடேசன்

ஓவியங்கள் : ஜி.ராமமூர்த்தி

குற்றமும் தண்டனையும் - சு.வெங்கடேசன்

ஓவியங்கள் : ஜி.ராமமூர்த்தி

Published:Updated:
குற்றமும் தண்டனையும் - சு.வெங்கடேசன்
பிரீமியம் ஸ்டோரி
குற்றமும் தண்டனையும் - சு.வெங்கடேசன்

து குற்றம்? அதற்கு என்ன தண்டனை? என்பதை எல்லாக் காலத்திலும் அதிகாரமே தீர்மானிக்கிறது. அதிகாரத்தின் அளவுகோல் காலத்துக்குக் காலம் மாறுபட்டது ஆனால், நோக்கம் எப்போதும் மாறுபடாதது. 

அதிகாரத்தைப் போன்றதொரு குற்றச்செயல் வேறில்லை. ஆனால், குற்றம் அதிகாரத்தில் இருப்பதால் அது தன்னைக் காத்துக்கொண்டு தனக்கு எதிரானவற்றை குற்றம் என முத்திரை குத்துகிறது. குற்றமும் தண்டனையும் ஒட்டிப்பிறந்த இரட்டைச் சொற்கள்கூட அல்ல. உடைந்திருக்கிற ஒற்றைச் சொல்.

குற்றமும் தண்டனையும் எப்படியெல்லாம் உருமாறிவந்தது என்பதன் வரலாறு மிக நீண்டது. ‘குற்றம் கடிதல்’ என்று புதியதொரு சொல்லை, தமிழுக்குச் சொன்ன வள்ளுவனில் தொடங்கி, ‘நடந்தது எதுவும் குற்றமில்லை’ என்று தீர்ப்பு சொன்ன குமாரசாமியின் காலம் வரை. குற்றத்துக்கு அப்பாலாக குற்றவியல் சட்டம் இருப்பதால், சட்டத்துக்குள் இருப்பவன் குற்றமற்றவனாகவே இருக்கிறான். எனவே, ஒருவன் குற்றவாளியா, இல்லையா என்பது செய்கிற செயலைப் பொறுத்ததில்லை, இருக்கிற இடத்தைப் பொறுத்ததே.

குற்றமும் தண்டனையும் - சு.வெங்கடேசன்

குற்றம் என்பதற்கு இலக்கணம் வகுக்க முற்பட்ட நவீன கால அறிஞர்கள் “குற்றவியல் சட்டத்தை மீறும் செயல் குற்றமாகும்” என்று பொதுவாகக் கூறினர். இந்த இலக்கணப்படி பார்த்தால், ஒருபோதும் குமாரசாமிகளை குற்றத்தின் நிழல் தொடவே முடியாது. நிழல்தொடா நெடுமரங்களின் கதைகள் இப்படியே இருக்கட்டும். குற்றமும் தண்டனையும் காலமாற்றத்தின் வழியே எப்படியெல்லாம் மாறிவந்தது என்பதில் இருப்பதும் சுவாரஸ்யமான கதையே.

கெளடலீயம், சுக்கிரநீதி உள்ளிட்ட பழைமையான சட்ட நூல்கள் குற்றங்களையும் அதற்கான தண்டனைகளையும் வரையறுத்தன. “அரசர்களின் தண்டனையுடனான நீதியினாலேயே எல்லா காரியங்களும் நிறைவேறுகின்றன. அதனால், அறம் எல்லாவற்றிற்கும் தண்டனையே சிறந்த புகழிடமாக எண்ணப்படும்” என்று கூறுகிறது சுக்கிரநீதி.

இந்த இரட்டைச் சொற்களுக்குள்  எவ்வளவோ உண்மைகள் உறைந்துகிடக்கின்றன. நீதியும் அறமும் தண்டனையினாலே நிலைநிறுத்தப்படுவதாகச் சொல்லுகிறது அதிகாரம்.

அதிகாரத்தின் நீதியும் அறமும் தண்டனையினால்தான் நிலைநிறுத்தப் படுகிறது. ஆனால், வெகுமக்களின் நீதியும் அறமும் அதிகாரத்துக்கு எதிரானது. அதிகாரத்துக்கு எதிரான போராட்டத்தின் வழியேதான் அது, தன்னை நிலைநிறுத்திக்கொள்ள எல்லா காலங்களிலும் முயல்கிறது.

அதிகாரம், நீதியை நிலைநாட்ட தண்டனையைத்தான் இறுகப்பற்றி நிற்கிறது. தண்டனை என்பது என்ன? இந்தச் சொல்லின் விளக்கம்தான் என்ன என ஆராய்ந்தால், அதற்கு கெளடலீயத்தின் உரை செம்மையான விளக்கத்தைத் தருகிறது. தண்டம் என்றால் தடி. ஒரு தடி கொண்டு கை, கால் முதலிய உடல் உறுப்புகளுக்குச் சேதம் விளைவிப்பதைத் தண்டக்கொடுமை என்றும், தண்டனை என்றும் கூறுகிறது. அதனை வகைப்படுத்தவும் செய்கிறது. அதாவது, ‘தண்டத்தைக்கொண்டு ஊறுபடுத்துதல், ஓங்குதல், அடித்தல்’ என்று வரிசைப்படுத்துகிறது. இந்த ஒவ்வொரு செயலுக்கும் விரிவான விளக்கத்தையும் அளிக்கிறது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் கெளடிலீயர் அளித்த விளக்கத்தை, பண்டிதமணி மு.கதிரேசச் செட்டியார் முப்பது ஆண்டுகளுக்கு முன் தமிழில் விளக்கியும், ஜார்ஜ், அமல்ராஜ் போன்ற காவல்துறை அதிகாரிகள் மூன்று மாதங்களுக்கு முன் (ஜனவரி 21) தமிழகத்தில் விளாசியும் பொழிப்புரை எழுதியவண்ணம் உள்ளனர்.

சரி, தண்டனையின் பால் ஒருவனைத் துன்பப்படுத்துதல் பாவமல்லவா என்று யாராவது கேட்டுவிட்டால், பதிலின்றி நின்றுவிடக் கூடாது என்பதற்காக, சிறந்த பதில் ஒன்றையும் பழங்காலச் சட்ட ஆச்சாரியர்கள் எழுதிவைத்தார்கள்.  ‘வேதத்தில் கூறியபடி வேள்வியிற் பசுக்கொலை புரிதல் எப்படித் துன்பமாகாதோ, அதனைப்போலவே தீயவர்களைத் தண்டனையால் ஒடுக்குதலும் துன்பச் செயலாக (பாவச்செயலாக) ஆகாது’. 

பாவமும் துன்பமும், கொலை மற்றும் உயிர் சம்பந்தப்பட்டவை அல்ல, அவை அதிகாரத்தின் விருப்பம் சம்பந்தப்பட்டவை. விருப்பமே விதியாகிறது. அதைவிடச் சிறந்த விருப்பம் விதிவிலக்காகிறது. எனவே, எல்லா காலத்திலும் விதிவிலக்குகளைக் காப்பதற்குத்தான் விதிகள் உருவாக்கப்படுகின்றன.

யாருக்கெல்லாம் அரசன் தண்டனைகளை வழங்க வேண்டும் என்பது பெரும் பட்டியல். அவற்றில் சில, ‘சூதாடுவோன், கள்வன், பிறர்மனை நயப்போன், கடுஞ்சினமுடையவன், வருணாசிரமத் தருமங்களை இழந்தோன், நாத்திகன், பிறர்பாற் பொய்பழி சுமத்துவோன், பெரியோரையும் கடவுளையும் பழித்துரைப்போன், பொய்பேசுவோன், தூய்மையில்லாதவன், வழித்தடை செய்வோன், பொய் சான்று கூறுவோன், நடுநிலை பிறழ்ந்தோன், போரில் விருப்பமற்ற படைவீரன், வஞ்சகன், தன் சுற்றத்தாரை வெறுப்போன், அறத்திற்கு கேடு விளைவிப்போன், அரசனுக்கு வரும் தீங்கை புறக்கணிப்போன், கற்பொழுக்கமில்லாத பெண்’ என்று பட்டியல் நீள்கிறது. இவர்களுக்கு  அரசன் தண்டனை அளிக்க வேண்டும் என்று சுக்ரநீதி கூறுகிறது.

குற்றச்செயலின் அடிப்படையில் தண்டனை பொதுவானதல்ல, ‘அச்செயல் உயர்ந்தோர்பால் செய்யப்பட்டால், இருமடங்கு; இழிந்தோர்பால் செய்யப்பட்டால் அரையளவு’ என்ற அடிப்படை விதியே எல்லா தண்டனைகளையும் கட்டுப்
படுத்தக்கூடியது.

இந்த அடிப்படையின் கீழ் எண்ணற்ற விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. சில முக்கிய உதாரணங்கள், புண்ணியத் தலங்களில் கவர்தல், முடிச்சழித்தல், மேற்கூரையை துளைத்து உள்ளிறங்குதல் என்னும் இவற்றை முதல் முறை செய்தால், 54 பணம் தண்டம்; இரண்டாம் முறை செய்தால் 100 பணம் தண்டம்; மூன்றாம் முறையாயின் 400 பணம் தண்டம்; நான்காம் முறையாயின் விரும்பியவாறு கொலை. அதாவது, சித்திரவதை இல்லாதபடி அவன் விரும்பியவாறு கொலைசெய்ய வேண்டும் என்பது. தான், கொலைசெய்யப்படுவதை யாராவது விரும்புவார்களா என்று கேட்கக்கூடாது. கொலைசெய்பவன் விருப்பப்படி கொலை செய்யப்படுவான் என்பதே அதன் சாரம்.

அரசைக் கவர்ந்து கொள்ளவிரும்புவன், அந்தப்புரங்களுக்குள் கண்ணமிட்டு உள்ளிறங்குபவன், காட்டிலியங்கு வோருக்கும், பகைவருக்கும் ஊக்கமளிப்பவன், மக்களுக்கும், சேனைக்கும் கோபத்தை உண்டு பண்ணுபவன் ஆகியோரைத் தலையிலும், கையிலும் தீயிட்டுக் கொலைசெய்தல் வேண்டும்.

ஆடவர், மகளிரை வலிந்து கொலையெய்பவன், மகளிரை இணங்கிவரச் செய்பவன், துன்புறுத்துபவன், தகர்ப்பவன், இல்லங்களில் களவு செய்பவன், அரசனுடைய யானை, குதிரை, தேர் ஆகியவற்றிற்குத் தீங்கு விளைவிப்பவன், அவற்றைக் கவர்பவன் ஆகியோரைக் கழுவில் ஏற்றிக் கொல்ல வேண்டும் என்று குற்றத்தையும் அதற்கான தண்டனையையும் பற்றி விரிவாகக் கூறுகின்றன பழங்கால சட்ட நூல்கள்.

அதன் பின், இந்தப் பரந்த தேசத்தில் எத்தனையோ முறையில் குற்றங்களும்  தண்டனைகளும் தீர்மானிக்கப்பட்டுள்ளன. நவீன காலத்தில் இவற்றைப் பற்றிய முறையான பதிவுகளை, பிரிட்டிஷார் காலத்தில் நாம் பார்க்க முடிகிறது. குறிப்பாக, இன்றைக்கு நடைமுறையில் இருக்கும் குற்றவியல் சட்டத்தின் அடிப்படை பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்டதே.

தமிழகத்தைப் பொறுத்தவரை பிரிட்டிஷாரின் ஆளுகை 1801-ல் இருந்து முழுமையாகத் தொடங்குகிறது. நவீன குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1861-ல் இயற்றப்பட்டது. இடைப்பட்ட 60 ஆண்டு காலம் இங்கு ஏற்கெனவே முகலாய ஆட்சியில் இருந்த தண்டனைச் சட்டத்தையே பிரிட்டிஷார் பின்பற்றினர். அதில் அவ்வப்போது மாறுதல்களைச் செய்துவந்து, இறுதியாக 1861-ல் புதிய சட்டத்தை நிறைவேற்றினர்.

சென்னை மாகாணத்தில் காரன்வாலீஸ் முறை மூலமாக, 1802-ல் குற்றவியல் நீதித்துறை தொடங்கப்பட்டது. அதன்படி, ஜில்லா நீதிபதியே குற்றவியல் நடுவராகச் செயல்பட்டார். அதற்கு முன்பு நடைமுறையில் இருந்த சட்டத்தின்படியே விசாரித்து தீர்ப்பு வழங்கினார். உதாரணமாக, ஒருவரை கெட்டவார்த்தைகளால் திட்டுதல், அவதூறு செய்தல், தாக்குதல் அல்லது சச்சரவில் ஈடுபடுதல் போன்ற குற்றங்களுக்கு 15 நாள்களுக்குச் சிறையிடுதல், ரூ.50-க்கு மிகாமல் அபராதம் இடுதல் போன்றவை. திருட்டு வழக்குகளுக்கு 50 பிரம்படிகள் போன்ற உடல்வதைத் தண்டனைகள் வழங்கப்பட்டன. பெரிய குற்றங்களுக்கு ரத்தப்பலி தண்டனைகள் வழங்கப்பட்டன. அதாவது, குற்றத்தின் தண்டனைக்கு ஏற்ப உடலுறுப்புகளை அகற்றுவது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குற்றமும் தண்டனையும் - சு.வெங்கடேசன்

சிறிது காலத்துக்குப் பின், மரணம் விளைவித்த குற்றத்துக்்குக் கடுமையான ரத்தப்பலி தண்டனைக்குப் பதிலாக சிறைத் தண்டனை முறை அறிமுகமானது. இரண்டு கைகளை வெட்டுவதற்குப் பதிலாக 14 வருடத் தண்டனையும், ஒரு கையை வெட்டுவதற்குப் பதிலாக 7 வருடத் தண்டனையும் அளிக்கப்பட்டன. ஏற்கெனவே இருந்த உறுப்பு குறைப்புத் தண்டனை, படிப்படியாகக் குறைக்கப்பட்டது.  

1816-ம் ஆண்டு நிர்வாகரீதியாக அதிகப்படியான மாற்றங்கள் நடைபெற்றன. அவை, குற்றத் தண்டனை முறையிலும் பிரதிபலித்தன. ஆனாலும், கசையடி உள்ளிட்ட தண்டனை முறைகள் நீடிக்கவே செய்தன. 1828-ம் ஆண்டு, குறிப்பிட்ட சில பகுதியில் பிரம்படித் தண்டனைக்குத் தடை விதிக்கப்பட்டது. 1833-ல் பெண்கள், கசையடித் தண்டனையிலிருந்து விலக்களிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து படிப்படியாக கோரத்தண்டனை முறைகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டன. 1859-ல் சிவில் நடைமுறைச் சட்டம் உருவாக்கப்பட்டது. 1860-ல் தண்டனைச் சட்டமும், 1861-ல் குற்றவியல் நடைமுறைச் சட்டமும் இயற்றப்பட்டன. புதிய சட்டத்தின்படி, சிறையில் கடுந்தண்டனை தருதல், நாடுகடத்தல் உள்ளிட்டவை  இருந்தன. பின்னர் மறைந்தன.

கெளடிலீயம், சுக்ரநீதி உள்ளிட்ட வட இந்தியச் சட்ட நூல்கள், பின்னர் முகலாய ஆட்சிகாலச் சட்டங்கள், அதன் பின்னர் பிரிட்டிஷார் உருவாக்கிய சட்டங்கள் ஆகியவற்றை மட்டுமே எடுத்துக்கொண்டு, குற்றம் மற்றும் தண்டனையின் வரலாற்றை எழுதிவிட முடியாது. இந்த மண்ணில் இருந்த எத்தனையோ இனக்குழுக்களுக்கும், சமூகங்களுக்கும், தனித்த சடங்குகளும், பழக்கவழக்கங்களும் இருக்கவே செய்தன. அவை பற்றிய குறிப்புகள் ஏதேனும் உண்டா என்று பார்த்தால், யாழ்ப்பாணத் தமிழர்களின் ‘தேசவழமைச் சட்டம்’ முக்கியமானதாக இருக்கிறது.

தென்னிந்திய மற்றும் திராவிட பழக்கவழக்கத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணப் பகுதியில் உருவான பழக்கவழக்கங்கள் ‘தேசவழமைச் சட்டங்கள்’ என்று அழைக்கப்படுவதாக அறிஞர்கள் கூறுகின்றனர். யாழ்ப்பாணத்தை ஆட்சிசெலுத்திய டச்சுக் கவர்னர் சைமன், 1701-ம் ஆண்டு இந்தப் பழக்கவழக்க முறைகளைத் தொகுத்தளித்தார்.

தொடர்ந்து, 1806-ம் ஆண்டு யாழ்ப்பாணம், பிரிட்டீஷாரின் ஆளுகையின் கீழ் வந்ததும் அவர்கள் தேசவழமைச் சட்டங்களில் சில மாறுதல்களைச் செய்துள்ளனர். பின்னர், இலங்கை சுதந்திரம் பெற்றதும், அதற்குப் பின்னரும் பல மாறுதல்கள் செய்யப்பட்டன.

தமிழகத்தில் உள்ளூர் சமூகத்தின் நடைமுறையில் இருந்த பழக்கவழக்கம் மற்றும் குற்ற தண்டனை முறைகளைப் பற்றிய ஆவணங்கள் கிடைத்துள்ளனவா என்பது முக்கியமான கேள்விகளில் ஒன்று. 1949 மற்றும் 1950-ம் ஆண்டுகளில் தென்இந்தியாவில் மானுடவியல் ஆய்வுக்காக வந்த லூயிஸ் டூமண்ட், மதுரைக்கு அருகில் இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்து ஆய்வினை மேற்கொண்டார்.

‘எழுவம்பட்டி ஏட்டுச் சட்டம்’ ஒன்று இருப்பதைக் கேள்விப்பட்டு, அதனைக் கண்டறிய தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டார். அது பலனளிக்கவில்லை. அந்த ஏடுகள் தீயில் அழிந்துவிட்டன என்று அவரிடம் சொல்லப்பட்டது. ‘அது தீயில் அழியவில்லை. எனக்குத் தர அவர்களுக்கு விருப்பமில்லை. அதனால் அப்படி சொல்லுகின்றனர்’ என்று கருதினார் லூயிஸ் டூமண்ட். இந்தப் பகுதி மக்களின் பழக்கவழக்க நடைமுறைகள், மரபுசார் மதிப்பீடுகள் அந்த ஏடுகளில் இருக்கலாம் என்று அவர் கருதி, தனது எண்ணத்தையும் பதிவு செய்துள்ளார்.

லூயிஸ் டூமண்ட் இந்த ஏடுகளைத் தேடிய அதே பகுதியில் சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு நானும், எனது தோழர்களும் தேடி அலைந்தோம். அந்தச் சின்னஞ்சிறிய கிராமத்தில் பலரிடமும் கேட்டும் அவை கிடைக்கவில்லை. ஆனால், தோழர்கள் தங்கராஜும், முத்துப்பாண்டியும் தொடர்ந்து முயற்சிகள் செய்துவந்தனர்.

அந்த முயற்சி ஒருநாள் பயனைத் தந்தது. ஊருக்குள்ளேயே தேடிக்கொண்டிருந்தவர்கள் தோட்டத்து வீடுகளை நோக்கி போனபோது கிடைத்த தகவலின் அடிப்படையில் எனக்கு போன் செய்து, “உடனே வா” என்றனர்.

நான், பெருமகிழ்வோடு அங்கு புறப்பட்டுப் போனேன். ஒரு மாலை நேரத்தில் பம்பு செட்டில் குளித்தபடி அந்தப் பெரியவர் பேசிக்கொண்டிருந்தார், நான் கேள்வி மாற்றி கேள்வி கேட்டுக்கொண்டிருந்தேன். அவர் அசரவில்லை. எதைக் கேட்டாலும், “எனக்கென்னப்பா தெரியும்” என்று ஒற்றைப் பதிலையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார்.

நான், ஒரு கட்டத்தில் சோர்வடைந்தேன். அழைத்துப் போனவர்களைப் பார்த்து, “எதக்கேட்டாலும் தெரியாது என்கிறாரே, அப்புறம் எதுக்கப்பா என்னை வரச் சொன்னீங்க?” எனக் கேட்டேன்.

குற்றமும் தண்டனையும் - சு.வெங்கடேசன்“அவருக்கு இதுவெல்லாம் தெரியும்னு சொல்லியா ஒன்னைய வரச் சொன்னோம்” என்றார்கள் தோழர்கள்.

“அப்புறம் எதுக்கு என்னை வரச் சொன்னீர்கள்?” எனக் கேட்டேன்.

“அவர்கிட்ட ஏடு இருக்கிறதாலதான் உன்னைய வரச் சொன்னோம்” என்றார்கள்.

ஒரு நிமிடம் திகைத்துப் போனேன். ஏடு யாரிடமும் இருக்கப்போவதில்லை, அதனைப் பற்றி தெரிந்தவர் யாராவது இருந்தால் அவரிடம் பேசி, விஷயத்தை வாங்கலாம் என நினைத்து, மாதக் கணக்கில் அலைந்ததால் ஏற்பட்ட பயிற்சி இது. பல நேரம் பயிற்சிதான் நம்மை தோல்வியடையச் செய்யும்.

நான் தோல்வியடைந்த கணத்தில் வெற்றி வாய்ப்பை உணரத் தொடங்கினேன். அவர் தலையைத் துவட்டிக்கொண்டே உள்ளே போனார்; ஈரம் படாமல் போர்த்திய துணியோடு கொண்டுவந்து எனது கையிலே கொடுத்தார். லூயிஸ் டூமண்ட் அவ்வளவு அலைந்தும் கிடைக்காத ஒன்று எனது கையில் கிடைத்தது. பெரியவருக்கும், தோழர்களுக்கும் எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை.

காவல்கோட்டம் நாவலுக்கான தரவுகளைத் தேடி அலைந்த பயணம்தான் அது. வரலாற்றின் எவ்வளவோ தடயங்களை அது அள்ளி வழங்கிக்கொண்டே இருந்தது. அதில் மிகச்சிறந்த ஒன்று எழுவம்பட்டி ஏட்டுச் சட்டம்.

இந்த ஏட்டுச் சட்டம், எட்டு ஏடுகளையும் இருபது பத்திகளையும் கொண்டுள்ளது. அதில் பழக்கவழக்கம், சடங்குமுறைகள், உறவுகள் சார்ந்த விளக்கம் பலவும் இடம்பெற்றுள்ளன. நான்காவது ஏட்டின் பத்தாவது பத்தி குற்றத்தையும், அதற்கான தண்டனையைப் பற்றியும் கூறுகிறது.

“ஆணுக்கு பலி சேதமானால், 70 பொன். கொண்டையை அறுத்துப் போட்டால், அதுக்கு பலி அபராதம் 24 பொன். ஒரு கண் சேதமானால் பலி 35 பொன். மூக்கு ஒரு பக்கம் சேதமானால் பலி 12 பொன். அதில், நடுத்தண்டு ஒரு பக்கம் சேதமானால் 24 பொன். மூணு அங்கோலமும் சேர்ந்து சேதமானால் பலி 35 பொன். முன் காதுக்குப் பலி 30 பணம். நடுக்காது ஓவாயா போனால் பலி 12 பொன். கடுக்கன் போடுகிற காதுக்கு பலி 6 பொன். மேல்காதும், அடிக்காதும் சேர்ந்து போனால் பலி 15 பொன். கீக்காதும் நடுக்காதும் சேர்ந்து போனால் பலி 18 பொன். மூன்று அங்கோலமும் சேர்ந்து போனால், பலி 24 பொன். உதட்டுக்கு ஒரு பல் தெரிய ஓவாயாப் போனால், பலி 12 பொன். ஒரு பல் விழுந்து போனால், பலி 6 பொன். ஒரு பல் அசைவுக்கு பலி 30 பணம். கால் எலும்பு தெரிவுக்கு 12 பொன். கொண்டக்கை தெரிவுக்கு 12 பொன். மணிக்கட்டு முன்கொண்டைக்கு பலி 6 பொன். விரல் வரிசைக்கு வராமல் போனால், பலி 30 பணம். நெரிவுகளுக்கு இதில் பாதி. நெகத்துக்கு 5 பணம். இதில், கால் மிதிக்கவும், கை பிடிக்கவும் இல்லாமல் போனால், பலி 35 பொன். இதில், பாதி பலி பெண்ணுக்கு.” என்கிறது  ‘எழுவம்பட்டி ஏட்டுச்சட்டம்’.

இதுபோன்ற எண்ணற்ற உள்ளூர் சமூகங்களின் பழக்கவழக்கங்களும், குற்ற முறைகளும் ஏதாவது ஒரு வகையில் தொகுக்கப்பட்டோ, நினைவின் சேகரமாகவோ இருக்கத்தான் செய்யும். அவற்றைக் கண்டறிவதும், திரட்டுவதும், நாம் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கும் செயல் அல்ல, நம்மையே பார்க்கும் செயல்.