Published:Updated:

அடுத்து என்ன? - சாரு நிவேதிதா

அடுத்து என்ன? - சாரு நிவேதிதா
பிரீமியம் ஸ்டோரி
அடுத்து என்ன? - சாரு நிவேதிதா

"மறக்க இயலாத துயரக் காவியத்தை எழுதிக்கொண்டிருக்கிறேன்"படங்கள் : பா.காளிமுத்து

அடுத்து என்ன? - சாரு நிவேதிதா

"மறக்க இயலாத துயரக் காவியத்தை எழுதிக்கொண்டிருக்கிறேன்"படங்கள் : பா.காளிமுத்து

Published:Updated:
அடுத்து என்ன? - சாரு நிவேதிதா
பிரீமியம் ஸ்டோரி
அடுத்து என்ன? - சாரு நிவேதிதா

துவரையில் நான் எழுதிய நாவல்கள் அனைத்துமே ஆட்டோஃபிக்‌ஷன் வகையைச் சேர்ந்தவை. கடைசி நாவலான ‘எக்ஸைல்’, முழுக்கவே ஆட்டோஃபிக்‌ஷன். நாவல்களின் பிரதான பாத்திரம் நானாகவே இருந்தேன். அதனால், அடுத்து எழுதும் நாவல்களில் அந்தப் பாணியை விடுத்து, வேறுவிதமான கதைகளைச் சொன்னால் என்ன என்று தோன்றியது. அப்படி சமீபத்தில் எழுதி முடித்ததுதான் ‘ஸ்ரீவில்லிபுத்தூர்’ நாவல். 150 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு ஸ்ரீவைஷ்ணவக் குடும்பம் பற்றிய கதை அது. அதைத் தொடர்ந்து, என்னை எழுத உந்திக்கொண்டிருந்த ஒரு சம்பவம், தில்லி பஸ்ஸில் நடந்த வன்கலவியும் கொலையும். அந்தச் செயலில் ஈடுபட்ட ஐந்து பேரைப் பற்றிய கதையை எழுதினால் என்ன என்று தோன்றியது. அவர்கள் யார், கிராமத்தில் நல்ல பையன்கள் என்று எல்லோரிடமும் பெயர் எடுத்த அவர்கள், நகரத்துக்கு நகர்ந்ததும் குரூரமான வன்முறையாளர்களாக மாறியதன் பின்னணிக் கதை என்ன என்றெல்லாம் எழுத யோசித்துக்கொண்டிருந்தபோது, சி.சு.செல்லப்பாவின் ‘சுதந்திர தாகம்’ நாவலில் இடம்பெறும் ஒரு சம்பவம் என்னை ஈர்த்தது. ஒன்றிரண்டு வாக்கியங்களில் கடந்துபோகும் அந்தச் சம்பவம் ஒரு மாபெரும் நாவலுக்கான கண்ணி என்பதைக் கண்டேன். பிறகு, அது தொடர்பான நூல்களைத் தேடிப் படித்துக்கொண்டிருக்கிறேன்.  

1789-ம் ஆண்டு அயர்லாந்தில் பிறந்த ஹ்யூக் வீலர், தன்னுடைய பதினான்காவது வயதில் ‘கிழக்கிந்திய கம்பெனி’ ராணுவத்தின் வங்காளப் பிரிவில் அதிகாரிகளுக்கான பயிற்சி மாணவனாகச் சேர்கிறான்.  அவனுடைய தந்தையும் கிழக்கிந்திய கம்பெனியின் கேப்டனாக இருந்தவர். பதினைந்து வயதிலேயே லெப்டினன்டாக ஆன வீலருக்குத் தொடர்ந்து கிடுகிடுவெனப் பதவி உயர்வு கிடைக்கிறது.  அவனது ராணுவப் பணியின் இறுதிக் காலத்தில், 1856-ம் ஆண்டில் கான்பூர் நகரின் கமாண்டராகப் பதவி ஏற்கிறான் வீலர். அப்போது அவனுக்கு வயது 67. 50 ஆண்டுகள் இந்தியாவிலேயே இருந்ததாலும் இந்தியப் பெண்ணையே மணம் முடித்திருந்ததாலும் வெகுசரளமாக இந்தி பேசிய வீலர், சிப்பாய்களிடம் பெரும் செல்வாக்கு பெற்றிருந்தான்.  அதிகாரிகள்தான் ஆங்கிலேயரே தவிர, சிப்பாய்கள் அனைவரும் இந்தியர்கள் என்பதை நினைவில்கொள்ள வேண்டும். கான்பூரில், வீலரை ஒரு ஹீரோவாகவே எல்லோரும் கொண்டாடினார்கள். தோலின் நிறத்தைத் தவிர, மற்றபடி அவனை ஓர் இந்தியனாகவே கருதினார்கள் கான்பூர்வாசிகள். 

அடுத்து என்ன? - சாரு நிவேதிதா

கான்பூரில் இருந்து 15 மைல் தொலைவில் உள்ள பித்தூரில், இரண்டாம் பாஜி ராவ் என்பவனை அந்த ஊரின் பேஷ்வாவாக நியமித்திருந்தது பிரிட்டிஷ் அரசு. பாஜி ராவின் மரணத்துக்குப் பிறகு, அவனது வளர்ப்பு மகன் நானா சாஹிப் பதவிக்கு வந்தான்.  பேஷ்வாக்களுக்கான உரிமைகள் குறித்து ஆங்கிலேய அரசுடன் நானா சாஹிபுக்குக் கருத்துவேறுபாடுகள் இருந்தாலும், வீலருடன் அவன் நல்ல நட்புகொண்டிருந்தான். 

இந்த நிலையில்தான், 1857, மே மாதம் 10-ம் தேதி மீரட்டில் சிறிய அளவில் தொடங்கிய சிப்பாய் கலகம் இந்தியா முழுதும் பரவியது. ஜூன் முதல் வாரத்தில் ஜெனரல் வீலரின் படையில் இருந்த 3,000 இந்தியச் சிப்பாய்களும் தங்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.  முற்றுகையிடப்பட்ட ஆங்கிலேய அதிகாரிகளின் எண்ணிக்கை 300. வீலரும் முற்றுகையில் சிக்கியிருந்தான். தனது கடந்த காலப் போர் அனுபவங்களையும் (குறிப்பாக ஆஃபனின் கஜினியிலும் காபூலிலும் நடந்த போர்களில் கிடைத்த மகத்தான வெற்றி) உள்ளூர் செல்வாக்கையும் எண்ணி கான்பூரில் அவ்வளவு பிரச்னை இருக்காது என்று எண்ணினான் வீலர். தனது சிறிய படையுடன் அவர்களது குடும்பங்களையும் அழைத்துக்கொண்டு அவன் தில்லி சென்றிருந்தால், கான்பூரில் நடந்த படுகொலைகளைத் தவிர்த்திருக்கலாம்.  ஆனால், அவனுடைய தன்னம்பிக்கையே அவனது பெரும் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தது. அது வீலர் என்ற ஒரு தனிமனிதனின் வீழ்ச்சி அல்ல.  ஏனென்றால், மூன்று வாரங்கள் நீடித்த அந்த முற்றுகைக்குப் பிறகு நடந்தது, ஒரு மாபெரும் துயரம். 

1857, ஜூன் 27-ம் தேதி அன்று நிபந்தனையின் பேரில் சரணடைய ஒப்புக்கொள்கிறான் வீலர். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அடுத்து என்ன? - சாரு நிவேதிதா

கான்பூரிலிருந்து அவனுடைய துருப்பும் அவர்களின் குடும்பத்தினரும் படகுகளின் மூலமாக அலஹாபாத் செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்பதே நிபந்தனை.  நிபந்தனையை ஒப்புக்கொள்கிறான் நானா சாஹிப். ஆனால், அந்த வாக்குறுதியை அவன் நிறைவேற்றவில்லை. படகுத் துறையில் அத்தனை ஆங்கிலேய வீரர்களும் கொல்லப்பட்டார்கள். படகுகள் தீ வைக்கப்பட்டன. இறந்தவர்களில் மேஜர் ஜெனரல் வீலரும் ஒருவன். கதை அதோடு முடியவில்லை. ஆண்கள் அத்தனை பேரும் சண்டையில் ஈடுபட்டு இறந்துபோக, மிச்சமிருந்த பெண்களும் குழந்தைகளும் சிறைப்பிடிக்கப்பட்டார்கள். அவர்களில் பலர் குண்டடிபட்டு ரத்தம் சிந்திக் கொண்டிருந்தார்கள். சிலர் மீது வாள் வெட்டு விழுந்து சதை கிழிந்து தொங்கியது.  எல்லோருடைய ஆடைகளும் நனைந்து ரத்தச்சகதியாக இருந்தன. அவர்கள் மறைத்து எடுத்துவந்திருந்த விலை உயர்ந்த நகைகளைப் பறித்துக்கொண்ட சிப்பாய்கள், அனைவரையும் பீவிகர் (பெண்களின் வீடு) என்ற இல்லத்துக்குக் கொண்டுசென்றார்கள்.   

சுமார் 200 பெண்களும் குழந்தைகளும் சிறை வைக்கப்பட்டனர்.  நானா சாஹிபுக்குச் சொந்தமான அந்தப் பீவிகர், இப்போது சிறையாக மாறியிருந்தது.  அதை ஹுசேனி பேகம் என்ற தவாயிஃப் (தாசி) நிர்வகித்துக்கொண்டிருந்தாள்.  அங்கே சிறை வைக்கப்பட்ட ஆங்கிலேயச் சீமாட்டிகளே தங்கள் உணவைத் தயாரித்துக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டாள் ஹுசேனி. நினைத்துப் பாருங்கள். முந்தின தினம் வரை அதிகாரத்தின் உச்சாணிக் கொம்பில் இருந்த அந்தச் சீமாட்டிகள், மறுநாள் சப்பாத்திக்கு மாவு உருட்ட வேண்டியிருந்தது; கழிப்பறையைச் சுத்தம் செய்ய வேண்டியிருந்தது. சகிக்க முடியாத துர்நாற்றமும் அசுத்தமும் நிரம்பிய அந்த இடத்தில், சில குழந்தைகளும் பெண்களும் காலரா வந்து இறந்துபோயினர். 
இந்த நிலையில் நானா சாஹிப் அந்தப் பெண்களையும் குழந்தைகளையும் வைத்து ஆங்கிலேயருடன் பேரம் பேச எண்ணினான்.  ஆனால், அதிக எண்ணிக்கையில் கம்பெனித் துருப்புகள் கான்பூரை நோக்கி வந்துகொண்டிருக்கும் செய்தியை அறிந்து, எல்லோரையும் கொன்றுவிடச் சொல்லிவிட்டான்.

அடுத்து என்ன? - சாரு நிவேதிதா

அந்த வீட்டின் ஜன்னல்களில் தங்களின் துப்பாக்கிகளை வைத்த சிப்பாய்களால், அங்கிருந்த பெண்களையும் குழந்தைகளையும் கொல்ல முடியவில்லை. உடனே நானா சாஹிப், தன் அடியாட்களை அனுப்பினான்.  அவர்கள் அந்தப் பெண்களையும் குழந்தைகளையும் ஒவ்வொருவராக வாளால் வெட்டிக் கொன்று, பிணங்களை அருகிலிருந்த கிணற்றில் போட்டனர்.  அந்தக் கிணறு இன்னமும் கான்பூரில் பீவிகரின் அருகே இருக்கிறது.

நாவலில் இது ஒரு முடிவு. இன்னொரு முடிவில், அந்தப் பெண்களையும் குழந்தைகளையும் கொல்லச்செய்தது ஹுசேனி பேகம் என்று வருகிறது.  அதன்படி, ஜன்னல் கம்பிகளில் துப்பாக்கிகளை வைத்துச் சுட்டதுமே அங்கிருந்த பெண்களும் குழந்தைகளும் கதறி அழுத அழுகையைக் கேட்கச் சகிக்காமல் மேலும் சுட மறுத்துவிட்டார்கள் சிப்பாய்கள். அதன் பிறகு ஹுசேனி, தன்னுடைய காதலனான சர்வர் ‘கானை’ அழைத்து எல்லோரையும் கொல்லச் செய்கிறாள்.

பீவிகர் படுகொலைதான் நாவலின் முடிவு என்றாலும் நான் சொல்லப்போகும் கதை, வீலரின் வாழ்க்கை. 55 ஆண்டுகள் இந்தியாவிலேயே வாழ்ந்த அவனுடைய தாய்நாடு இந்தியாவா அல்லது வெறும் 13 ஆண்டுகள் இளம் பிராயத்தில் வாழ்ந்த அயர்லாந்தா? இந்தியாதான் எனில், ஏன் அவன் அந்நியனாகக் கருதப்பட்டான்?  சாம்ராஜ்ஜியங்களின் போராட்டத்தில் அலைவுற்று மடியும் கோடானுகோடி மனிதத்துகள்களில் ஒருவனான வீலரின் கதையினூடாக, மனித வரலாற்றில் நிகழ்ந்த ஒரு மறக்க இயலாத துயரக் காவியத்தை நாவலாக எழுதிக்கொண்டிருக்கிறேன்.

நாவலுக்கு இன்னும் பெயரிடவில்லை.  ஆனால், நாவலை முடிப்பதற்கு முன் லண்டனில் ஒரு மாத காலம் தங்கி பிரிட்டிஷ் ஆவணக்காப்பகத்தில் உள்ள வீலரின் நாட்குறிப்புகளைப் படிக்க வேண்டும். யோசித்துக்கொண்டிருக்கிறேன். நாவல் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒரே சமயத்தில் வெளிவரும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism