Published:Updated:

யானை வீட்டுக்காரி - சிறுகதை

யானை வீட்டுக்காரி - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
யானை வீட்டுக்காரி - சிறுகதை

எஸ்.செந்தில்குமார் - ஓவியங்கள்: செந்தில்

யானை வீட்டுக்காரி - சிறுகதை

எஸ்.செந்தில்குமார் - ஓவியங்கள்: செந்தில்

Published:Updated:
யானை வீட்டுக்காரி - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
யானை வீட்டுக்காரி - சிறுகதை
யானை வீட்டுக்காரி - சிறுகதை

சாவித்திரி, அலுவலகத்தில் இருந்து வெளியேறி மெயின்ரோட்டுக்கு வந்தபோது இருட்டிவிட்டது. அவளது அலுவலகத்தில் இருந்து பேருந்து நிறுத்தத்துக்கு அரைமணி நேரம் நடந்து, இரண்டு பெரிய சந்துகளைக் கடந்து கடைவீதிக்கு வர வேண்டும். நடைபாதை ஓரத்தில் விற்கும் காய்கறிகளையும் துணிகளையும் வேடிக்கை பார்த்தபடி வேலை முடிந்துவரும் ஜனங்களுடன் ஜனங்களாக வரிசையாக நடந்து, சந்நதித் தெருவுக்குள் நுழைய வேண்டும். இரவில் சந்நதித் தெரு நெரிசலாக இருக்கும். இரவு ஏழு மணிக்குப் பிறகு அவளது வீட்டுக்குப் போக பேருந்து வசதி குறைவு. இரண்டு ஷேர்ஆட்டோக்கள் மாறிப்போக வேண்டும். ஷேர்ஆட்டோவில் போவதற்குப் பதிலாக நடந்தே வீட்டுக்குச் சென்றுவிடலாம் என அவளுக்குத் தோன்றும். அதிலும் தீட்டாகயிருக்கும் சமயத்தில் ஷேர்ஆட்டோவில் ஏறினால், வயிற்றில் இருக்கிற ரத்தம் முழுக்கக் கொட்டிவிடுகிற மாதிரி உலுக்கியெடுத்துவிடுவான் ஆட்டோக்காரன். சாவித்திரி அதற்குப் பயந்து ஆட்டோவில் ஏறுவதில்லை.

அலுவலகம் முடிந்ததும், பாலாஜி அவனது ஹோண்டாவில் அழைத்துவந்து இறக்கிவிடுவதாகச் சொல்வான். அவனுடன் ஒரேஒரு முறைதான் வண்டியில் பேருந்து நிறுத்தம் வரை சென்றிருக்கிறாள். அவன் பேருந்து நிலையத்துக்கு அழைத்துச்செல்லாமல் பேக்கரி கடைக்கு அழைத்துச்சென்று அவளிடம், “ஏன் இன்னமும் கல்யாணம் செய்யாமே இருக்கீங்க. நாற்பது வயசாச்சு உங்களுக்கு. எப்படிக் கவலையில்லாம இருக்கீங்க, வேற யாரையாவது காதலிக்கிறீங்களா? சொல்லுங்க நான் ஹெல்ப் செய்றேன்” என்று அவன் பேசியது சாவித்திரிக்கு எரிச்சலாக இருந்தது.

அலுவலகத்தில் பணிபுரியும் ஆண்கள் யாராவது, “மேடம் வாங்க உங்களை ஸ்டாப் வரைக்கும் வந்து விடுறேன்” என்று சொன்னால் அவளுக்குக் கோபம் வந்துவிடும். அலுவலகம் முடிந்ததும் யாருடனும் பேசாமல் நடந்துவிடுவாள்.

சாவித்திரி மெயின்ரோட்டுக்கு வந்தபோது அவளுடன் பேருந்தில் வரும் இரண்டு கல்லூரிப் பெண்கள் நின்றிருந்ததைப் பார்த்தாள். அவர்கள் சாவித்திரியைப் பார்த்ததும் சிரித்தார்கள். அவள் அவர்களின் அருகே சென்றாள். “கரெக்ட் டயத்துக்கு வந்துருவீங்க. ஏன் இன்னைக்கு லேட்?” என்று அவர்களில் சிவப்பு நிற சுடிதார் அணிந்திருந்த பெண் கேட்டாள். மற்றொருத்தி சேலை உடுத்தியிருந்தாள். என்ன பதில் சொல்வது என சாவித்திரி யோசித்தாள். அவளுக்குப் பொய் பேசுவதற்கு உடனே வார்த்தைகள் கிடைக்காது. மேற்கொண்டு அவளுக்குத் தெரிந்த ஒரே ஒரு பொய், `பாத்ரூமுக்குப் போக வேண்டும்’ என்று சொல்வதுதான். சிவப்பு சுடிதார் அணிந்திருந்தவளிடமும் அதையே சொன்னாள். அப்போது அவளின் கால்களுக்கு நடுக்கம் எடுத்தது.

சாவித்திரிக்கு அடிக்கடி கால்கள் நடுக்கம் எடுப்பது பயமாக இருந்தது. அவளது தெருவில் இருக்கும் கவிதா நாராயணசாமி டாக்டரிடம் கேட்டபோது, `நாற்பது வயதைக் கடந்துவிட்டால் சர்க்கரை, ரத்த அழுத்தம், உப்பு, கொழுப்பு போன்றவற்றைப் பரிசோதிக்க வேண்டும். மேற்கொண்டு உன் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சர்க்கரை இருப்பதால் உனக்கும் சர்க்கரை இருக்க வாய்ப்பு உள்ளது’ என்று சொன்னார். சாவித்திரி `தற்சமயம் வலிநிவாரணி மாத்திரை மட்டும் கொடுங்கள் போதும்’ என்று வாங்கிக்கொண்டாள். ஒரு வாரத்துக்கு மாத்திரைகளைச் சாப்பிட்டு வயிற்றைப் புண்ணாக்கிக்கொண்டாள். திரும்பவும் வலி வரும்போது அந்த மாத்திரையை வாங்க வேண்டும் என, டாக்டர் எழுதிக்கொடுத்த சீட்டைப் பத்திரமாக வைத்திருந்தாள். மருந்து சீட்டில் சாவித்திரி என்ற பெயருக்குப் பதிலாக ‘யானை வீட்டுக்காரி’ என்று டாக்டர் ஆங்கிலத்தில் எழுதியிருந்தது அவளுக்குக் கோபத்தை வரவழைத்தது. எனினும், அமைதியாக க்ளினிக்கைவிட்டு வெளியே வந்துவிட்டாள்.

யானை வீட்டுக்காரி - சிறுகதை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தனக்கு கால்கள் நடுக்கம் எடுப்பது எப்போதிருந்து என்பது சாவித்திரிக்கு ஞாபகத்தில் இல்லை. ஆனால், எப்போதிருந்து தன்னை ‘யானை வீட்டுக்காரி’ என அழைக்கிறார்கள் என்பது ஞாபகத்தில் உள்ளது. அன்றைய நாள் தன் நினைவுச்சரட்டிலிருந்து அறுத்துவிட முடியாதது என்பது அவளுக்குத் தெரியும். யானைக் கொட்டத்தில் தூக்கு மாட்டி இறந்துபோன அவளின் தாத்தாவையும் அவளின் அம்மாவையும், ஊரைவிட்டு ஓடிப்போன அவளின் அண்ணனையும், தினமும் குடித்துவிட்டு தெருவில் சண்டை போடும் அப்பாவையும் யானை வீட்டுக்காரர் என்று யாரும் இதுவரை அழைத்ததில்லை. பெயர்களைச் சொல்லித்தான் அழைத்திருக்கிறார்கள். ஏன் தன்னை மட்டும் யானை வீட்டுக்காரி என்று அழைக்கிறார்கள் என்று அவளுக்குக் குழப்பமாகவும் அதேசமயம் கோபமாகவும் இருந்தது. ஏழெட்டு வருஷங்களாக `யானை வீட்டுக்காரி... யானை வீட்டுக்காரி...’ எனக் கேட்டுப் பழகிய அவளே சிலசமயங்களில், சாவித்திரி என்பதற்குப் பதிலாக யானை வீட்டுக்காரி என்று கையெழுத்துப் போடும் அளவுக்கு மாறியிருந்தாள். தன்னை ஜனங்கள் அவர்களது பெயருக்கு மாற்றிவிட்டார்களே என்ற கவலை அவளுக்கு இருந்தது.

மூன்று நாள்கள் தொடர்ந்து மழை பெய்த சமயம். அலுவலகம் முடிந்து ஒவ்வொரு நாளும் வீட்டுக்கு தாமதமாக வருவாள். குடையும் டிபன் பாக்ஸும் லெண்டிங் லைப்ரரி புத்தகங்களுமாக அவள் பஸ்ஸைப் பிடித்து வருவதற்குள், இரவு எட்டுமணி ஆகிவிட்டது. இதோடு மழையும் சேர்ந்துகொண்டது. அவளது வீட்டின் முன்பாகக் குடித்துவிட்டு மயங்கிக்கிடந்த கூத்தலிங்கத்தைச் சுற்றி, ஆள்கள் குடையைப் பிடித்து நின்றிருந்தனர். அவரது வேட்டி அவிழ்ந்துகிடந்தது. சட்டையில் முதல் இரண்டு பித்தான்கள் இல்லாததால் நெஞ்சு தெரிந்தது. உடம்பு முழுக்க மண் ஒட்டியிருந்தது. பாக்கெட் கிழிந்திருந்தது. உடம்பும் உடையும் மழையில் நனைந்துவிட்டன. அவளது அம்மாவும் தாத்தாவும் யானைக் கொட்டத்தில் தூக்குப் போட்டு இறந்ததிலிருந்து கூத்தலிங்கத்துக்குக் குடியைத் தவிர வேறு எதுவும் துணையாக இல்லை. அவருடன் விணையாக பக்கிரிசாமியும் சேர்ந்து கொண்டு சிறிது நாள்கள் குடித்துக்கொண்டிருந்தான். பக்கிரிசாமி ஏலமலைக்குச் சென்றதும் வீட்டில் வைத்து அவராகக் குடிக்கிறார் கூத்தலிங்கம்.

சாவித்திரி, தன் வீட்டின் முன்பாக ஆள்கள் கூடியிருந்ததைப் பார்த்ததும் வேகமாக நடந்து வந்தாள். அங்கிருந்தவர்களை விலக்கிவிட்டு தெருவில் கிடந்த அப்பாவின் முகத்தைப் பார்த்தாள். உதட்டில் அடி விழுந்து ரத்தம் உறைந்திருப்பது தெரிந்தது. தனது அப்பா குடித்துவிட்டு சண்டைபோடுவார் என்பது அவளுக்குத் தெரியும். ரோட்டில் கிடப்பார் என்று நினைக்கவில்லை. கூட்டத்தை விலக்கிவிட்டு கூத்தலிங்கத்தைத் தூக்கினாள்.

இரு கரங்களில் அப்பாவை ஏந்திக்கொண்டு வீட்டுக்குள் சென்ற காட்சியைக் கண்ட வயதானவர், “யானை தும்பிக்கையிலே தூக்கிட்டுப் போறதுகணக்கா கூத்தலிங்கத்தை அச்சுக்குண்டா தூக்கிட்டுப் போறா. அவங்க தாத்தா மாதிரியே வாட்டம்சாட்டமா வந்துட்டா யானை வீட்டுக்காரி” என்று சொல்லியதை, அவள் வீட்டுக்குள் செல்லும்போது கேட்டாள். 

கூத்தலிங்கத்தைச் குளிக்கச்செய்து வேறு உடை மாற்றிவிட்டு நாற்காலியில் உட்காரவைக்கும் வரை, அவள் காதுகளுக்குள் `யானை வீட்டுக்காரி... யானை வீட்டுக்காரி...’ என்று யார் யாரோ பேசுவதைக் கேட்க முடிந்தது. மழை நின்ற மறுதினம் ரோட்டில் விளையாடிய சிறுவர்கள் `யானை வீட்டுக்காரி’ எனக் கத்தினார்கள். சாவித்திரியை யானை வீட்டுக்காரி என்று அவளுக்கு முன்பாகவும் அவளுக்குத் தெரிந்தும் தெரியாமலுமாக அழைத்தார்கள்.

பேருந்து வருகிறதா என்று பார்க்கிறதுபோல தன் உடலைப் பார்த்தாள் சாவித்திரி. தலைகுனிந்து செருப்பையும் தரையையும் பார்த்துக்கொள்வதுபோல கால்களையும் தொடைகளையும் பார்த்தாள். அவளுக்கு `நாம் எவ்வளவு உயரமாக இருக்கிறோம்’ என்று தோன்றியது. தனது தாத்தாவின் உயரமும் உடம்பும் இருப்பதாக பிறர் சொல்வது உண்மைதான் என்று அவளுக்குத் தோன்றியது. வீட்டில் வேறு யாருக்கும் தாத்தாவைப் போலில்லை. தாத்தா நடந்துவருவதைப் பார்க்கும்போதும் நின்றிருப்பதைப் பார்க்கும்போதும் அவளுக்கு யானையின் தோற்றம் ஞாபகத்துக்கு வரும். ஆனால், தாத்தாவின் குணம் வேறு; யானையின் குணம் வேறு. அவள் ஏழாவது வகுப்பு படித்த போதிலிருந்து மருது தாத்தாவை அவளுக்குப் பிடிக்காது.  

யானை வீட்டுக்காரி - சிறுகதை

சாவித்திரியின் அண்ணன் முத்துச்சாமி அவனது அம்மாவைப்போல நோஞ்சானாக இருந்தான். அவன் பாரிஜாதத்தைக் காதலித்து ஊரைவிட்டு ஓடிப்போனதை பாரிஜாதத்தின் தந்தை வந்து சொன்னார். கூத்தலிங்கத்தால் நம்பமுடியவில்லை.

“மணிப்பிள்ளை... நீங்க என்னையைக் கேலி செய்றதுக்கு ஓர் அளவு வேணும்” என்று சிறிது கோபமாகப் பேசினார்.

ஆனால், மணிப்பிள்ளை அழுததையும் அவருக்குப் பின்னால் வந்து நின்ற அவர் மனைவியின் கூப்பாட்டையும் பார்த்த கூத்தலிங்கம், ``என் மகனா... என் மகனா..?’’ என்று திரும்பத் திரும்பக் கேட்டார். சந்தனத்தை நெற்றியிலும் முழங்கையிலும் மார்பிலுமாகத் தடவி கோயிலிலிருந்து வந்த மருது தாத்தா, அவர்களைச் சமாதானப்படுத்தி உள் வீட்டு அறைக்கு அழைத்துச் சென்றார். அறைக்குள் அவர்கள் என்ன பேசினார்கள் என்று சாவித்திரி கேட்பதற்கு முயற்சிசெய்தாள். அவளால் கேட்க முடியவில்லை. ஆனால், மருது தாத்தா ரூபாய் நோட்டுகளை எண்ணி மஞ்சள் பைக்குள் வைப்பதை மட்டும் அவளால் பார்க்க முடிந்தது. மணிப்பிள்ளையும் அவரது மனைவியும் அறையிலிருந்து வெளியே வந்தபோது, அவர்களது முகம் தெளிச்சியாக இருந்தது. மணிப்பிள்ளையின் கக்கத்தில் மஞ்சள் துணிப்பை இருந்ததை சாவித்திரி பார்த்தாள்.

ரண்டு யானைகள் ஒன்றன் பின் ஒன்றாக பேருந்து நிறுத்தத்தைக் கடந்து சென்றதை அவளும் கல்லூரிப் பெண்களும் வேடிக்கைப் பார்த்தார்கள். சிவப்பு சுடிதார் அணிந்த பெண் தனக்கு அருகில் சேலையுடுத்தி நின்றிருந்தவளிடம் ``நீ யானை மேலே ஏறியிருக்கியா?” என்று கேட்டாள். அவள் ``இல்லை’’ என்று சொன்னவள், ``சின்னப் பிள்ளைகளைத்தான் யானை மேலே ஏத்திவிடுறாங்க. நம்மளை மாதிரி இருக்கிறவங்களை ஏன் ஏத்திவிட மாட்டேங்கிறாங்கன்னு தெரியலை” என்று அவளிடம் வருத்தமாகச் சொன்னாள். அவளும் ``ஆமாம் அதானே’’ என்று பதில் பேசினாள். சாவித்திரிக்கு அவர்கள் பேசுவது உண்மை என்று தோன்றியது. யானை ரோட்டைக் கடந்து சென்றதும் பஸ் வந்து நின்றது. அவர்கள் பஸ்ஸில் ஏறிக்கொண்டார்கள்.

சாவித்திரி கூட்டத்தில் நின்றுகொண்டாள். டிபன்பாக்ஸ் மட்டும்தான் தோள்பையில் இருந்ததால், ஸீட்டில் உட்கார்ந்திருப்பவர்களிடம் தரவில்லை. கம்பியில் சாய்ந்து நின்றாள். நடுமுதுகை கம்பியின் மேல் சாய்த்து நின்றது நிம்மதியாகவும் சுகமாகவுமிருந்தது.

தன் கூந்தலைச் சரிசெய்துகொள்வதுபோல இடுப்பை நீவிவிட்டாள். சந்தோஷமான நேரத்தில் சாவித்திரி இப்படிச் செய்வது வழக்கம். யானை ஒருமுறை தனது வாலை ஆட்டிவிட்டு நிறுத்திக்கொள்வதுபோல, அவள் தனது கையால் இடுப்பை நீவிவிட்டுக்கொள்வாள். டிக்கெட் வாங்கியதும் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தாள். இரண்டு யானைகள் இப்போது ரோட்டைக் கடந்து சென்றிருந்தன. முதலில் சென்ற யானையின் மேல் குழந்தையை ஏற்றி அமர வைத்திருந்தனர். குழந்தை பயத்தில் வீல் வீலென அலறியதைப் பார்க்க முடிந்தது.

சாவித்திரி, ஏழாவது படிக்கும்போது அழகு யானையின் மேலேறி சந்நதித் தெருவில் சென்றதை நினைத்துக்கொண்டாள். தனக்கு பின்பு மருது தாத்தா அமர்ந்து கோல்பிடித்து வந்தார். அப்போது அவள் மருது தாத்தா மேல் உயிராக இருப்பாள். வரிசையாக ரோட்டோரங்களில் விற்ற வெள்ளரிப்பிஞ்சுகளையும் கொய்யாப்பழங்களையும் அழகுக்குக் கொடுத்துவந்தார்கள்.

``யானைக்குப் போய் யாராவது அழகுன்னு பேரு வைப்பாங்களா? அழகுன்னா பொம்பளை பேரு” என்று சாவித்திரி தாத்தாவிடம் சொன்னாள்.

மருது சிரித்துக்கொண்டார். ``பேர்ல என்னா இருக்கு? ஆம்பளை பேருன்னு பொம்பளை பேருன்னு. அதுவும் யானைக்கு” என்று மீசையைத் திருகியபடி சிரித்தார். தாத்தாவும் அவளும் யானை சவாரியாக சந்நதித் தெருவிலிருந்து கல்பாலத்துக்கு வந்துவிட் டார்கள். அதற்கு அருகில் பாண்டி கடையில் சுக்காவும் இட்டிலியும் வாங்கினார் மருது.

``யானை கறியெல்லாம் தின்னுமா தாத்தா” என்றதும், தாத்தா அவளது முதுகில் தட்டிவிட்டு “பேசாமே வா” என்றார்.

மருதுவுக்கு ராத்திரியில் விரகனூரிலிருந்து இரண்டு பாட்டில்களில் சாராயம் வந்தது. கட்டிலில் உட்கார்ந்து கொண்டு சாராயம் குடித்தார். இரண்டு மட்டைகள் உசிலம்பட்டி கண் மார்க் எலுமிச்சை ஊறுகாயும்
கல்பாலம் பாண்டியின் சுக்காவும் இட்டிலியும் தீர்ந்ததும், மருது கட்டிலில் விழுந்து உறங்கினார்.

சாவித்திரியின் அம்மா அதிகாலையில் எழுந்து மருது தாத்தா சாப்பிட்ட இடத்தைச் சுத்தம் செய்ய வேண்டும். சிகரெட்டையும் வாழை இலையையும் அள்ளி, பெருக்கிக் கூட்ட வேண்டும். தினமும் அதிகாலை எழுந்ததும் அம்மா கூட்டித் துப்புரவு செய்கிற வேலையை வாசலில் நின்று வேடிக்கை பார்க்க வருவாள் சாவித்திரி. அம்மா அவளை வீட்டுக்குள் அனுப்பி வாசற்கதவை அடைத்து விடுவாள். அரைப்பரீட்சை விடுமுறை நாளில் ஒருநாள் அதிகாலை இருட்டில் தூக்கச்சடவுடன் எழுந்து வேடிக்கை பார்க்க வாசலில் நின்றாள். வாசல் பெருக்கும் சத்தம் கேட்கவில்லை. மருது தாத்தா படுத்திருந்த கட்டிலைப் பார்த்தாள். தாத்தா இல்லை. சிகரெட்டும் வாழை இலையும் தரையில் கிடந்தன. கொட்டத்துக்குப் போகிற பாதையில் நடந்தாள்.

கரும்புத் தோகையும் கம்பம்புல்லும் தரையில் கிடந்ததில், நடக்க நடக்க அவளுக்கு மெத்தைமேல் நடப்பதுபோல் இருந்தது. இருட்டில் எந்த இடத்தில் மிதிக்கிறோம். எந்த இடத்துக்குப் போகிறோம் என அவளுக்குத் தெரியவில்லை. ஆனால், அவளுக்குப் பழக்கப்பட்ட இடம். யானையை நோக்கி நகர்ந்தன அவளின் பாதங்கள். யானை கட்டிப்போட்டிருக்கும் கொட்டகையின் கூரையில் விடிவிள்ளி ஒன்று மினுங்கித் தெரிந்தது. அதைப் பார்த்தபடி அவள் நடந்தவள் தரையில் படுத்துக்கிடந்தவர்களின் மேல் தடுமாறி கீழே பொத்தென விழுந்தாள். இருட்டில் யார் என அவளால் பார்க்க முடியவில்லை. ஒருவரா... இருவரா என்ற சந்தேகம் இருந்தது. காய்ந்த வைக்கோல்படப்பு தரையில் கிடந்ததால் அவளுக்கு அடியில்லை. ஆனால், அம்மா என்று வாய்விட்டுச் சத்தமிட்டாள். யானை திரும்பிப்பார்க்கும் சத்தம் அதன் சங்கின் சலசலப்பில் கேட்டது.

சாவித்திரியின் அம்மா, விடியற்காலையின் வெளிச்சம் கொட்டகைக்கு முன்பாகப் பரவியபோது சிவப்பு அரிசி அவலையும் வெல்லத்தையும் ஆட்டுரலில் அரைத்துக் கொண்டிருந்தாள். பொரிகடலையையும் கடலைமாவையும் குருனையாக இடித்துவைத்து, தேங்காயை அரைத்தும் அரைக்காமலுமாக இடித்து மருது தாத்தாவிடம் தந்தாள். மருது சற்றுமுன்பாக குளித்துவிட்டு நெற்றி நிறைய விபூதி அடித்து கண்கள் சிவக்க மேல்துண்டு காற்றில் ஆட அங்கு நின்றிருந்தார். சாவித்திரியின் அம்மா கொட்டத்தைக்கூட்டி லத்தியை அள்ளிப்போட்டாள். வைக்கப்புல்லை தரையில் பரப்பிவிட்டாள். கூத்தலிங்கம்  வீட்டுக்குப் பின்பாக இருக்கும் வாழைமரத்திலிருந்து பெரிய இலையை அறுத்துவந்து யானையின் முன்பாக விரித்துவைத்தார். வீட்டுக்கு வந்த மாப்பிள்ளைக்கு மாமனார் உபசரிப்பதுபோல அவர் கைக்கட்டி, துண்டை இடுப்பில் இறுக்கி, யானையின் முன்பாக நின்றிருந்தார். சாவித்திரியின் அம்மா முகமும் தாத்தாவின் முகமும் கூடவே யானையின் முகமும் மாறியிருந்தன. வழக்கமான வேலையைத்தான் அவரவர்கள் செய்துமுடித்திருந்தனர். இருந்தபோதிலும் ஏனோ அவர்களுக்குள் பதற்றம் தெரிந்தது. 

யானை வீட்டுக்காரி - சிறுகதை

மருது பெரிய அண்டாவில் தீவணங்களைப் போட்டு அளவாக தண்ணீர்விட்டு உருண்டையாக்கினார். ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொள்வதற்கு மட்டும்தான் எண்ணெய்ப் பசைபோல தண்ணீர். தண்ணீர் கூடுதலாகவோ, குறைவாகவோ இருந்தால் அழகு முகத்தை திருப்பிக் கொள்ளும். யானையின் முன்பாக நிற்கும்போது குளித்து விபூதி பட்டை அடித்து புது உடுப்பு உடுத்திச்செல்வார் மருது. அழகுவும் தலையை ஆட்டி தென்னந்தோகையை அசைபோடும். மருது தனது கையால் பொரிவிளங்கா உருண்டையை உருட்டித் தர வேண்டும். மருதுவைத் தவிர ,வேறு யாரும் உருண்டை பிடித்து அழகுக்குத் தருவதில்லை. கூத்தலிங்கம் முயற்சித்ததுகூட இல்லை. சாவித்திரி ஒருதடவை யானையின் மேலேறி குழந்தைக்கு ஊட்டிவிடுவது போல் முயன்றிருக்கிறாள். முடியவில்லை. அன்று மருது தாத்தா தந்த உருண்டையை அழகு வாங்கிக்கொள்ள வில்லை. தலையை ஆட்டி ஆட்டி, பின்னங்கால் எடுத்துவைத்து, கொட்டத்துக்குள் அலைந்தது. கரும்பை ஒடித்துத் தரையில் போட்டது. தோகையை நாள் முழுக்க விசிறியடித்தது.

மறுநாளும் அதற்கு மறுநாளும் யானை பொரிவிளங்கா உருண்டையை வாங்கிக்கொள்ளவில்லை. மருது தாத்தா அதன் பிறகு, உருண்டையை உருட்டவில்லை. சாவித்திரியின் அம்மாவை அழைத்து, ``பங்கஜம்... இனிமேற்பட்டு நீ அரிசியை ஆட்டாதே. யானைக்குத் தண்ணிவைக்காதே. யானை நிற்கிற கொட்டத்துக்கு முன்னாடி நிக்காதே” என்று கோபத்துடன் சொல்லியதோடு அவரும் அப்படியாகச் செய்தார்.

சாவித்திரி தீவணங்களை அரைத்து அவளுக்குத் தெரிந்த அளவில் உருண்டையாக்கி வாளியில் வைத்து யானையின் முன்பாக நின்றபோது, அழகு அதற்காகத்தான் காத்திருந்ததுபோல மண்டியிட்டு, கால்கள் மடக்கி, அவள் முன்பாக நின்றது. தன் முகத்தை ஏந்தி அந்தச் சிறுமியின் கரத்தால், தனது தீவணத்தை வாங்கி விழுங்கியது. அவளை அணைத்து தன் முகத்தின் அருகே நிறுத்திக்கொண்டது. கருணைபெருகும் தாய்மையை சாவித்திரி அதன் கண்களில் உணர்ந்தாள். அன்றிலிருந்து சாவித்திரி யானையைவிட்டுப் பிரியவில்லை. தீவணம் தருவதிலும் குளிக்கச் செய்வதிலும் அவள் தீவிரமாக அதனுடன் இருந்தாள்.

சாவித்திரி சிறுவயதிலிருந்து யானை மேலேறி பழகியதால் குமரியானதும், அவளாக முழங்காலிட்டுப் படுத்திருக்கும் அழகுவின் காலை மிதித்து காதைப் பிடித்து முதுகின் மேலேறி அமர்ந்துகொள்வது எளிதான காரியமாக இருந்தது. பாவாடையை சுருட்டி, கால் கொலுசை ஆட்டி ஆட்டி, அழகை எழுந்து நிற்கச் செய்வாள். யானை மெதுவாக எழுந்து அவளது உடலோடு தனது உடலையும் அசைத்து அசைத்து, தோட்டத்தைவிட்டு வெளியேறும். வேலி அடைப்பைத் தாண்டி வேப்பமரத்தின் நிழலுக்குச் சென்று நிற்கும். அதற்கு மேல் அழகு நகராது. அதற்குள் சாவித்திரி தனது கால்களை பரத்தி அழகின் பொடனியில் தன் முகம்வைத்து நெஞ்சை அழுந்தவிட்டுப் படுத்துவிடுவாள். அழகின் கணத்த உடம்பு தனது கால்களுக்கு ஊடே அசைந்து அசைந்து உடம்பை ரணமாக்கி அறுத்துவிடுவதுபோலிருக்கும். யானையின் மேல் சுகமாகப் படுத்துக்கிடந்தவள், வேப்பமரத்தின் அடியில் நின்றதும் மயக்கத்திலிருந்து முழித்துக்கொள்வாள். யானை மேலேறி நடந்து செல்லும்போது தன்னை மறந்து மயங்கி எழுவாள்.

சாவித்திரி அடுத்த நிறுத்தத்தில் இறங்கினாள். சிறிது தூரம் நடந்தால், அவளது வீட்டுக்குச் சென்றுவிடலாம். நிறுத்தத்திலிருந்து பார்த்தால் தெரியும் வேப்பமரமும், அதற்கு சில அடி தூரத்திலிருக்கும் தன் வீட்டுத்தோட்டத்து வேலிக்கதவும் அவளின் கண்களுக்குத் தெரிந்தன. தனக்கு நாற்பது வயது. கண் பார்வை மங்கவில்லை என்பதை மரத்தையும் வேலிக்கதவையும் தன்னால் பார்க்கமுடிகிறது என்று நிம்மதியடைந்துகொள்வாள். தினமும் அவளுக்கு அப்படிப் பார்ப்பது பயிற்சியாக இருந்தது.

சாவித்திரி ரோட்டில் மெதுவாக நடந்தாள். ரோட்டின் இருபுறமும் இருந்த வீட்டின் வெளிவிளக்குகள் எரிந்தன. காம்பவுன்ட் வீட்டின் வாசலில் நின்றிருந்த பெண் ஒருத்தி குழந்தையை இடுப்பில்வைத்து ஊட்டிக்கொண்டிருந்தாள். அவள் கடந்துசென்றதும், “இந்தா பாரு... யானை வீட்டு அக்கா போறாங்க. நீ சாப்பி டலைன்னா அவங்ககிட்டே கொடுத்துடுவேன்” என்று குழந்தையைப் பயமுறுத்தினாள். இரண்டு, மூன்று வீடுகள் தள்ளி நடந்துகொண்டிருந்த சாவித்திரிக்கு, அவள் பேசியது காதில் கேட்டது.

இரண்டு மின்கம்பங்களைக் தாண்டிச் சென்றதும் சைக்கிளில் வந்துகொண்டிருந்த இரண்டு பள்ளி மாணவிகள் அவளைக் கடந்தார்கள்.

“யானை வீட்டக்கா ஆபீஸ் விட்டு வர்ற நேரமாச்சு. டியூசன் ஸார் திட்டப்போறார் இன்னைக்கு” என்று ஒரு மாணவி பேசியபடி சைக்கிளை ஓட்டிச் சென்றாள். சாவித்திரிக்கு இவை எல்லாம் பழக்கமானதுதான்.

வீட்டின் வாசற்படியை ரோட்டிலிருந்து அவளால் பார்க்க முடிந்தது. நல்லவேளை கூட்டம் இல்லை. அப்பா குடித்துவிட்டுத் தடுமாறி விழுந்திருக்கவில்லை. அன்று விழுந்ததோடு சரி. எத்தனை முறை காலில் விழுந்து எழுவது? அவருக்கும் குனியும்போது இடுப்பும் முதுகும் வலிக்கத்தான் செய்யும். அவரே காலில் விழுந்ததுபோதும் என்று சொல்லிவிட்டதோடு வீட்டில் வைத்துக் குடித்துக்கொள் வதற்குச் சம்மதிவிட்டார்.
 
வீடு இப்போது அவருக்குக் கோயில் இல்லை. மாதத்தில் ஒருநாள் எம்.ஜி.எம் கோல்டு பாட்டில்களை எல்லாம் சாக்குமூட்டையில் கட்டி பழைய சாமான்கள் வாங்குபவனிடம் விலைக்குப் போட்டுவிட்டு, கூட்டி, அலசிவிட்டு பத்தி, சூடம், கம்யூட்டர் சாம்பிராணி... போன்ற சகல பக்தி மணங்களை ஏற்றி கோயிலாக்குவார். ஒரே ஒருநாள் மட்டும் கோயில் நடை திறந்திருக்கும். மறுநாள் நடையைச் சாத்திவிடுவார். பாட்டில் வந்து மேஜையின் மேல் நிற்கும். சாவித்திரிக்குப் பாட்டிலின் வண்ணம் பளீச்சென்று இருக்கிறதைப் பார்த்து அலுப்புத் தட்டிவிட்டது. வீட்டுக்குள் நுழைந்ததும், முன்னால் நாற்காலியில் பக்கிரிசாமி அமர்ந்திருப்பது தெரிந்தது.

பக்கிரிசாமியும் அவளும் பேசிக்கொள்வதில்லை. அவன் கன்னத்தில் ஓங்கி அடித்துவிட்டாள் சாவித்திரி. அதன்பிறகு அவன் உடுப்பாஞ்சோலை ஏலத்தோட்டத்து வேலைக்குப் போய்விட்டான். ஊரை விட்டுச் சென்று ஏழெட்டு வருஷங்கள் ஆகியிருக்கும். இரண்டொரு முறை மலையிலிருந்து வந்து பெண் கேட்டுவிட்டுப் போனான். அவள் முடியவே முடியாது என பிடிவாதமாக மறுத்துவிட்டாள். `பக்கிரிசாமியுடன் பேசலாமா... வேண்டாமா... என்ற யோசனையோடு பானையில் இருந்து தண்ணீரை மோந்து குடித்தாள். அவள் குடித்த தண்ணீர் அவளது நெஞ்சை வகிடெடுத்ததுபோல நனைத்து, தொப்புள் அருகே படர்ந்ததை அவளால் உணர முடிந்தது. பக்கிரிசாமியும் நனைந்த ஈரத் தடத்தைப் பார்த்தான். அவளுக்குத் தெரியும்... பக்கிரியின் பார்வை எப்போதும் இப்படிதான். `பார்த்தால் பார்த்துவிட்டுப் போகட்டும்’ என்று விட்டுவிட்டாள். `எத்தனை வருஷமானாலும் பக்கிரியின் குணம் அப்படியேதான் இருக்கும்’ என்று சாவித்திரி நினைத்தாள்.

தனது அறைக்குள் சென்று கதவை உள்தாழ்ப்பாள் போட்டாள். உடை மாற்றினாள். கதவைத் திறக்கவில்லை. கட்டிலின் மேல் விழுந்தாள். மின்விசிறியை வேகமாகச் சுழலவிட்டாள். காதுக்குள் தனது ஹியர்போனை வைத்து, தனக்குப் பிடித்தமான பாடல்களைக் கேட்க ஆரம்பித்தாள். ஆனால், மனம் முழுக்க பக்கிரியைச் சுற்றித்தான் ஓடியது. அவனுடன் பேசியிருக்கலாம் என்ற எண்ணம் அவளுக்கு வந்தது. அதேநேரம் இன்னமும் அவளுக்கு வலி மனதுக்குள் இருந்தது.

ருதுவும் பங்கஜமும் யானைக்கொட்டத்துக்கு முன்பாக இருக்கும் வேப்பமரத்தில் தூக்குப் போட்டு இறந்துபோனார்கள். அம்மா இறந்த அன்று சாவித்திரி கண்ணீர் விடவில்லை. பதிலாக பொரிவிளங்கா உருண்டை உருட்டி யானைக்கு கொடுத்துக் கொண்டிருந்தாள். யானையும் வாலை ஆட்டிக்கொண்டு சிரித்த முகத்துடன் உருண்டைகளை வாங்கியது. பத்து நாள்கள் துக்கத்துக்குப் பிறகு யானையைப் பார்த்துக் கொள்ள பக்கிரியை அவளது அப்பா வரவழைத்தார். சாவித்திரி படித்து ஏதாவது வேலைக்குப் போக வேண்டும் என அவர் தினமும் குடித்து விட்டுப் புலம்புவதால் அவள் சம்மதித்திருந்தாள்.

பக்கிரிசாமி அவருக்குத் தூரத்து உறவுக்காரன். அவனுக்கும் சாவித்திரிக்கும் ஒரே வயது. பெருமாள்கோயில் நாமத்தை யானையின் முகத்தில் அச்சடித்துவிட்டதுபோல வரைவதில் கெட்டிக்காரன் என்று சாவித்திரியிடம் அவர் அப்பா சொன்னார். கோயில் யானைகளுக்குப் பட்டம்போடுவது, முகப்பு தீட்டுவது எனக் கோயில்கோயிலாகச் சுற்றி, பகலில் கோயில் திண்ணையில் சீட்டு ஆட்டமும், ராத்திரியில் பிச்சைக்காரர்களுடன் கஞ்சாவுமாக வாழ்ந்துவிட்டான் என்ற கவலை அவருக்கு. நல்லவனாக இருந்தால் தனது மகளைத் திருமணம் செய்துமுடிக்கலாம் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. ஆனால், பக்கிரிசாமியின் எண்ணம் வேறாக இருந்தது.

சாவித்திரி குளிப்பதை இரண்டொரு தடவை மறைந்திருந்து பார்த்தவன், அவளைக் கேலிசெய்தான். அழகு பக்கத்தில் நின்று தென்னந்தோகையைக் கிழித்துப்போட்டபோது, “என்னைக் கல்யாணம் செஞ்சுக்கிறயா?” என்று சாவித்திரியிடம் கேட்டான். அவள் பதில் எதுவும் பேசாமல், யானையின் தும்பிக்கையைத் தடவியபடி முகத்தைத் திரும்பிக்கொண்டாள். பக்கிரிசாமிக்குக் கோபம் வந்து, வேகமாக அவளின் பின்புறம் சென்று அணைத்துக் கொண்டான். கூடவே, அவளின் மார்பை அழுத்தினான். வலியில் கத்தியவள் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அப்படியே அழகுவின் காலடியில் அமர்ந்தாள். ஆனால், மறுநொடியில் எழுந்து அவனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள். தரையில் கிடந்த கரும்புத்தட்டையை எடுத்து விளாசினாள்.

அந்த நாள் முழுக்க நெஞ்சில் வலி இருந்தது. தொட்டுக் குளிக்க முடியவில்லை. ஜாக்கெட் கொக்கிகளை இழுத்து மாட்டுவதற்குள் உயிர் போனது. அடிவாங்கிக்கொண்டு சென்ற பக்கிரிசாமி, இரண்டு தினங்களுக்குப் பிறகு, அவளது அறையின் கதவைத் திறந்து வந்தான். அவள் உறக்கத்தில் இருந்தாள். தன் அடிவயிற்றின் மேல் பெரும் சுமை விழுந்து அழுத்துவதுபோல் உணர்ந்தவள் அலறி எழ முயன்றாள். தன் பலத்தை கையில் திரட்டி பக்கிரியின் இடுப்பைப் பிடித்துத் தள்ளினாள். பக்கிரிசாமி கட்டிலிலிருந்து கீழே விழுந்தான். சாவித்திரி அறையின் விளக்கைப் போட்டதும், பக்கிரிசாமி அவசரமாகத் தரையில் கிடந்த துணிகளை அள்ளி உடுத்திக்கொண்டு வெளியேறினான். விடிந்ததும் அவனது நிர்வாண உடம்பின் மேல் ஒட்டியிருந்த தனது பாவாடைத் துணியை அவள் கொளுத்திவிட்டாள். ஆனால், மனதிலிருந்த சம்பவத்தைக் கருக்க முடியவில்லை.

சாவித்திரி காதில் மாட்டியிருந்த ஹியர்போனைக் கழற்றி வைத்துவிட்டுக் கதவைத் திறந்து வெளியே வந்தாள். முன்னறையில் கல்தூணுக்குப் பக்கத்தில் கூத்தலிங்கமும் பக்கிரிசாமியும் அமர்ந்து குடித்துக்கொண்டிருந்ததைப் பார்த்து நின்றாள். சமையலறைக்குப் போய் தோசை சுட்டுச் சாப்பிட்டாள். அவளுடன் இருவரும் பேசவில்லை. ஆனால், அவர்கள் இருவரும் ஏதோ பேசுவதைக் கேட்கமுடிந்தது.
 
“இனிமேற்பட்டு நான் தனியா இருக்க முடியாது மாமா” என்று பக்கிரிசாமி கோபமாகப் பேசினான்.

“சரி... அதுக்காக இப்படியா நடுராத்திரியில வந்து நிப்பே. திடுதிப்புன்னு கல்யாணம்னா நான் என்ன செய்வேன்” என்று கூத்தலிங்கம் கவலையோடு பேசுவதை அவள் சமையலறைக்குள் இருந்து கேட்டாள். 

சா
வித்திரி தனது அறைக்குள் சென்று கதவைத் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டாள். கதவை உடைத்து பக்கிரிசாமி அறைக்குள் வந்தாலும் வந்துவிடுவான் என்ற பயம் அவளுக்கு இருந்தது. அந்தப் பயத்தால் திரும்பவும் நெஞ்சில் வலியெடுப்பதுபோலிருந்தது. கட்டிலில் படுத்துக் கொண்டாள். உறக்கம் வரவில்லை. தன்னைக் கல்யாணம் செய்துகொள் என்று சொன்னால் தான் சம்மதிக்கக் கூடாது என்று முடிவாக இருந்தாள். எழுந்து பீரோவை நகர்த்தி கதவுக்கு முன்பாக வைத்தாள். கட்டிலில் படுக்காமல் கட்டிலுக்குக் கீழே பாய் விரித்து படுத்தாள். அப்போதும் அவளுக்கு உறக்கம் வரவில்லை. தனது நெஞ்சிலும் வயிற்றிலும் தொடைகளிலும் தலையனையை வைத்து பாவாடை நாடாவில் இறுக்கமாகக் கட்டினாள். அன்றிரவு முழுக்க அவள் விழித்தபடி படுத்துக்கிடந்தாள். அவளுக்கு பயத்தில் கால்கள் நடுக்கம் எடுத்தன.

காலையில் பீரோவை நகர்த்திவைத்துவிட்டு கதவைத் திறந்து வந்தபோது வீட்டில் பக்கிரிசாமி இல்லை; கூத்தலிங்கமும் இல்லை. வீடு திறந்திருந்தது. அவர்களது செருப்பு வாசலில் இல்லை. ஈரத்துண்டு கொடியில் காய்ந்தது. வீட்டில் யாருமில்லை. அவள் நிம்மதியாகக் குளிக்கலாம் என நினைத்தாள். குளித்துவிட்டு வந்து உப்புமா கிளறி சாப்பிட்டாள். அலுவலகத்தில் இருந்து ஒரு மணிநேரத்துக்கு முன்பாகவே வந்து தூக்க மாத்திரை போட்டுக் கொண்டாவது உறங்கவேண்டும் என நினைத்தாள்.

லுவலகத்துக்குச் செல்வதற்கு பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தபோது கல்லூரிப் பெண்கள் வந்து நின்றனர். அவர்களைப் பார்த்து சாவித்திரி சிரித்தாள். அவர்களும் சிரித்துக்கொண்டு, சாவித்திரி உடுத்தியிருந்த புடவையைப் பற்றி அவர்களாக ஏதோ பேசிக்கொண்டார்கள். இலந்தைப்பழ நிறப் புடவையை அன்று அவள் உடுத்தியிருந்தாள். பெரிய பெரிய மஞ்சள் பூக்கள் அந்தப் புடவையின் மேல் படர்ந்திருந்ததுதான் அவர்களுக்கு ஆச்சர்யத்தைத் தந்திருக்க வேண்டும். அவர்கள் பேருந்தில் ஏறிக்கொண்டனர்.

பேருந்தில் வழக்கத்தைவிட கூட்டமாக இருந்தது. தவறுதலாக வேறு பேருந்தில் ஏறிவிட்டோமா என்ற சந்தேகம் அவளுக்கு வந்தது. அதேநேரத்தில் தன்னுடன் வரும் கல்லூரிப் பெண்களைத் திரும்பிப் பார்த்தாள். அவர்களும் இதே பேருந்தில்தான் வருகிறார்கள். வழக்கமான பேருந்தில்தான் செல்கிறோம் என்று தைரியமாக இருந்தாள். சாவித்திரி தனது நிறுத்தத்தில் இறங்கிக்கொண்டாள். கல்லூரிப்பெண்கள் இருவரும் தாங்கள் பேருந்து நிலையத்துக்குச் சென்று, பஸ் பாஸ் எடுக்க வேண்டுமென்று அவளிடம் சொன்னார்கள்.

சாவித்திரி மெயின்ரோட்டைக் கடப்பதற்காக நின்றிருந்தாள். அவளைப்போல மெயின் ரோட்டைக் கடந்து வேலைக்குச் செல்லும் பெண்களும் ஆண்களுமாகப் பலரும் சிக்னலுக்காகக் காத்திருந்தனர். அரைமணி நேரம் நடக்க வேண்டும் என்பதை நினைத்தபோது அவளுக்குச் சோம்பலாக இருந்தது. உப்புமாவும் பொங்கலும் சாப்பிட்ட தினத்தில் அவளுக்கு உறக்கமாக இருக்கும். மெதுவாக நடந்தாள். கடைவீதியிலிருந்து சந்நதித் தெருவுக்கு நுழைந்தபோது ஈரமான காற்று முகத்தில் அடித்தது. கோபுரத்திலிருந்து புறாக்கள் பறப்பதும் மரங்களிலிருந்து பறந்துவந்து கோபுரத்தின் மேல் அமர்வதுமாக இருந்தது. 

ஹோட்டல் வாசலில் ஜனங்கள் கூட்டமாக நின்றிருந்ததை அவள் பார்த்தாள். கல்யாணக் கூட்டம். பெண்ணும் மாப்பிள்ளையும் மேற்குப் பக்கமாகத் திரும்பி நின்றிருந்ததால் அவளால் அவர்களது முகத்தைப் பார்க்க முடியவில்லை. மாலையையும் கழுத்தையும் மட்டும்தான் பார்க்க முடிந்தது. அவர்களைச் சுற்றி ஆள்கள் நின்றிருந்தனர்.

சாவித்திரி அவர்களை நெருங்க நெருங்க ஹோட்டல் வாசல் முன்பு மேலும் இரண்டு மூன்று கல்யாண கோஷ்டியினர் கூடிவிட்டனர். நின்றிருந்தவர்கள் ஹோட்டலுக்குள் புகுந்து சாப்பிட்டு விட வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்தனர். இரண்டு, மூன்று திருமண வீட்டுக் காரர்கள் ஒன்றாக ஹோட்டல் வாசலில் நின்றிருந்தனர். குழப்பமும் கூச்சலுமாக நின்றிருந்த இடத்தில் மாப்பிள்ளையும் பெண்ணும் ஜோடிஜோடியாக நின்றிருந்தனர்.  சற்றுத்தொலைவில் பக்கிரிசாமி மாலையோடு நடந்துவருவதை அவள் பார்த்தாள். அவனுக்குப் பின்பாக கல்யாணப்பெண்ணும் உறவினர்களும் வரிசையாக நடந்துவந்தனர். கூத்தலிங்கம்  பிளாஸ்டிக் கவரில் சுற்றிய பெட்ஷீட்டையும் தலையணையையும் தலையில்வைத்து நடந்துவந்தார். சாவித்திரிக்கு அலுவலகத்துக்கு தாமதமாகியது. அவள் பிளாட்பாரத்தைவிட்டு இறங்கி இன்னும் வேகமாக நடந்தாள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism