Published:Updated:

“நான் பழைய பெருமாள் முருகன் இல்லை!” - பெருமாள் முருகன்

“நான் பழைய பெருமாள் முருகன் இல்லை!” - பெருமாள் முருகன்
பிரீமியம் ஸ்டோரி
“நான் பழைய பெருமாள் முருகன் இல்லை!” - பெருமாள் முருகன்

சந்திப்பு : வெய்யில், வரவனை செந்தில்படங்கள்: ஸ்டீவ்ஸ், சு.இராட்ரிக்ஸ்

“நான் பழைய பெருமாள் முருகன் இல்லை!” - பெருமாள் முருகன்

சந்திப்பு : வெய்யில், வரவனை செந்தில்படங்கள்: ஸ்டீவ்ஸ், சு.இராட்ரிக்ஸ்

Published:Updated:
“நான் பழைய பெருமாள் முருகன் இல்லை!” - பெருமாள் முருகன்
பிரீமியம் ஸ்டோரி
“நான் பழைய பெருமாள் முருகன் இல்லை!” - பெருமாள் முருகன்

“உங்கள் வாழ்க்கையில்
ஒரே ஒரு நாளை
ஒரே ஒரு நாளை உங்களால்
ஒருபோதும் மறக்க முடியாது
உங்கள் கண்ணெதிரே
நீங்கள் கொல்லப்பட்ட நாள்.”


இந்தச் சிறிய கவிதை, ஓர் எழுத்தாளனின் வலி மிகுந்த வாக்குமூலம். அதிகாரத்துக்கு எதிரான எளியனின் விசும்பல்... துரத்தப்பட்ட நாள்களில், தனக்குள் அடைந்துகிடந்த நாள்களில் ஒரு கவிஞன் துயர்நிறைந்த தன் மனத்தால் கீறிய ஆறு வரிகள்...

பெருமாள் முருகனின் சமீபத்தியக் கவிதைத் தொகுப்பான ‘கோழையின் பாடல்கள்’ நூலில் இந்தக் கவிதையை நீங்கள் வாசிக்கலாம்.

‘மாதொருபாகன்’ நாவல் பிரச்னைக்குப் பிறகு தனது தீவிரமான இலக்கியச் செயல்பாடுகளிலிருந்து முழுவதுமாக ஒதுங்கியிருந்தவர், மீண்டு வந்திருக்கிறார். நிறையப் புன்னகை, மெல்லிய கோபம், நிதானமான சொற்கள் எனச் செம்மொழிப் பூங்காவின் புற்களை வருடியபடி பேசுகிறார் பெருமாள் முருகன்.

“நான் பழைய பெருமாள் முருகன் இல்லை!” - பெருமாள் முருகன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“ ‘கோழையின் பாடல்கள்’ கவிதைத் தொகுப்பில் ‘கவிதைதான் எனக்கு உயிர் கொடுத்தது’ என்றும், ‘ஒரு கவிதைகொண்டு எல்லாவற்றையும் சரிப்படுத்திவிட முடியும் என்று தோன்றுகிறது அவனுக்கு’ எனவும் எழுதியிருக்கிறீர்கள். இந்த மனநிலை பற்றி சொல்லுங்களேன்...”

“நான் கவிதையிலிருந்துதான் எழுதத் தொடங்கினேன். தமிழில் பலரும் அப்படித் தொடங்கியவர்கள்தாம். உரைநடைக்குப்போன பிறகு, பெரும்பாலானோர் கவிதையைக் கைவிட்டுவிடுவார்கள். ஆனால், என்னால் அப்படிச் செய்ய முடியவில்லை. தொடர்ந்து எழுதினேன்; எழுதுகிறேன். என் மனதுக்கு நெருக்கமான வடிவமாகக் கவிதை எப்போதும் இருந்துவருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளின் நெருக்கடியான சூழலிலிருந்து மீண்டு வர, கவிதைகளே எனக்குப் பெரிதும் உதவின. மூன்று நான்கு மாதங்கள் ஒன்றுமே செய்ய முடியாமல் உள்ளுக்குள் உறைந்துபோய் இருந்தேன். ஒரு சந்தர்ப்பத்தில் திடீரென எழுதத் தொடங்கினேன். சரியான தருணத்தில் கவிதையைப் பற்றிக்கொண்டேன். இவ்வளவு கவிதைகளை ஒருசேர நான் இதற்கு முன் எழுதியதே இல்லை. ஒவ்வொரு மனிதரும் நெருக்கடியிலிருந்தும் அழுத்தத்திலிருந்தும் மீள்வதற்குப் பல வழிகளை வைத்திருக்கிறார்கள். சிலருக்குக் கடவுள், சிலருக்கு மதம், எனக்குக் கவிதை!”

“அவ்வளவு நெருக்கடிகளிலிருந்தும் சட்டென உங்களை விடுவித்த அந்த முதல் கவிதையை நினைவிருக்கிறதா?” 

“‘ஆயிரம் ஆயிரம்’ எனத் தொடங்கும் இந்தத் தொகுப்பின் முதல் கவிதைதான் அது. ‘வெளிஉலகம், வெயில் வெளிச்சம் படாமல், தனக்குப் பாதுகாப்பான ஒரு பொந்துக்குள் பதுங்கிக்கொள்ளும் எலி’ என என்னைப் பற்றிய ஒரு படிமம் தோன்றியது. கவிதையில் கடைசி வரிகளாக இடம்பெற்றிருக்கும் இந்த வரிகளைத்தான் முதலில் எழுதினேன்.

“நான் பழைய பெருமாள் முருகன் இல்லை!” - பெருமாள் முருகன்‘யாராலும் கண்டறிய இயலாத
ஏதோ ஓர் அடைப்புக்குள்
இப்போது
எங்கே இருக்கிறேன் நான்’


இந்த வரிகளை அடிப்படையாகக்கொண்டு முழுக் கவிதையையும் எழுதினேன்.  ‘அடைப்பை’ப் பற்றி எழுதிய இடத்தில் ஒரு  ‘திறப்பு’ கிடைத்ததுதான் இதில் சுவாரஸ்யம்.”

“கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, விமர்சனம் என இலக்கியத்தின் பெரும்பான்மையான வடிவங்களில் எழுதி வருகிறீர்கள். அப்படி இயங்குவது, படைப்புத்திறனைப் பாதிக்கும் எனச் சொல்வார்கள். விஷயங்கள் ரெப்பிட்டிஷன் ஆகாமல் எப்படி உங்களால் தொடர்ந்து இவ்வளவு வடிவங்களில் எழுத முடிகிறது?”

“ஒரு கவிதை எழுதினால், அடுத்த சில நாள்களுக்கு அல்லது வாரங்களுக்குக் கவிதை சார்ந்த மனநிலை மட்டுமே எனக்குள்  ஓடிக்கொண்டிருக்கும். சிறுகதை, நாவல் என  எல்லாவற்றுக்குமான மனநிலை இதுதான். பருவகாலங்கள்போல ஒரு குறிப்பிட்ட வடிவம் அதற்கான காலத்தை எடுத்துக்கொண்டு வளர்ந்து, பின்னர்  வடிந்து வேறொரு வடிவத்துக்கு வழிவிடும். ஒரு மனநிலையில் இருந்து மற்றொன்றுக்கு சட்டென மாற முடியாது. அதுபோலவே நாவல் எழுதும்போதும் இடையில் நிறுத்தி, பகுதி பகுதியாகவெல்லாம் என்னால் எழுத முடியாது. முழுவீச்சில் எழுதி முடித்துவிட வேண்டும் என்றே முயல்வேன்.”

“நீங்கள் எழுதுகிற வடிவங்களில் எது ஒன்றைக் கடினமானது என்று கருதுகிறீர்கள்?”

“என்னைப் பொறுத்தவரை சிறுகதைகள்தான் மிகவும் கடினமான வடிவம். ஒரு கதைக்கான கரு எளிதில் கிடைத்துவிடும். ஆனால், அதை சொல்வதற்கான வடிவத்தைக் கண்டடைவது சவாலான விஷயம். சிறுகதைக்குச் செறிவான வடிவம் இருக்கிறது என்று நம்புகிறேன். இன்று அது பெரிதும் நெகிழ்ந்திருக்கிறது என்பதும் உண்மைதான். நானேகூட, ‘பீ’க்கதையில் சில நெகிழ்வான வடிவங்களைக் கையாண்டிருக்கிறேன். ஆனாலும், சிறுகதைகள் எப்போதுமே சவாலானவை. படைப்பு மனநிலை கைகூடிவிட்டால், இலகுவாக எனக்குக் கைவரும் வடிவம் எப்போதும் கவிதைதான்.”

“உங்கள் படைப்புகளுக்கான கருப்பொருள்களை எங்கிருந்து பெறுகிறீர்கள்?”

“பெரும்பாலும் அனுபவத்திலிருந்துதான் எடுத்துக்கொள்கிறேன். ஆரம்பத்தில், என் சொந்த அனுபவம், என் குடும்பம் மற்றும் என்னைச் சுற்றியுள்ளவர்களின் அனுபவங்களிலிருந்து எடுத்துக் கொண்டிருந்தேன். நாவலில் இயங்கத் தொடங்கியதும் ஒரு போதாமையை உணர்ந்தேன். எனது சுய அனுபவங்களைத் தாண்டி ஒரு பரந்துபட்ட வெளிக்குச் செல்ல வேண்டும் என்கிற எண்ணம் எனக்குள் உருவானது. எனக்குள்ளேயே நான் வைத்துக்கொண்டிருந்த பல கட்டுப்பாடுகள் உடைந்தன. நாவல் என்பது, சுதந்திரமாகச் செயல்பட வேண்டிய ஒரு வடிவம் என்பதை அறிந்தேன். நம்முடைய அனுபவ எல்லைகளைத் தாண்டி நமக்குத் தொடர்பே இல்லாத விஷயங்களுக்குள்ளும் நுழைந்து எழுத முடியும் என்பதைக் கண்டுகொண்டேன். ‘கூளமாதாரி’ நாவல் எழுதியபோது பலவிதங்களில் தெளிவு கிடைத்தது. மேலும், நான் மாணவர்களுக்கு மிகவும் நெருக்கமான ஆசிரியராக இருப்பதால், பல்வேறு வாழ்க்கைக் கதைகள் என்னிடம் வந்து சேர்ந்தபடியே இருக்கும். ஒரு புனைவாளனாக எனக்கு அவை மிக முக்கியமான ஆதாரம் என்று சொல்லலாம்.”

“சிறுகதைச் சூழல் தற்போது தேக்கம் கண்டுவிட்டதாகச் சொல்லப்படுகிறது. உங்களின் பார்வை என்ன?”


“தற்போது சிறுகதைகளில் அதிகம் பேர் இயங்குவது இல்லை. உண்மைதான். யார் யாரெல்லாம் புதிதாகச் சிறுகதையில் உருவாகி வருகிறார்கள். அவர்கள் அடுத்தக் கட்டத்துக்குத் தாவுகிறார்களா,  என்றெல்லாம் கேள்விகள் இருக்கத்தான் செய்கின்றன. இரண்டாயிரத்துக்குப் பிறகு எழுதத் தொடங்கியவர்களில் தொடர்ந்து எழுதுகிறவர்கள் வெகுசிலர்தான். கே.என்.செந்தில், கணேசகுமாரன், என்.ஸ்ரீராம், திருச்செந்தாழை என வெகுசிலரைத்தான் குறிப்பிட முடிகிறது. அதிலும் திருச்செந்தாழை தொடந்து எழுதவில்லை. இப்படிக் குறைவான நபர்களே சிறுகதை எழுதுவது, சூழல் சார்ந்த பிரச்னையா அல்லது வடிவம் சார்ந்த பிரச்னையா எனக் கண்டறிய முடியவில்லை. ஒருவேளை நன்றாக எழுதும் புதியவர்களை நான் வாசிக்கத் தவறியதால் இப்படி உணர்கிறேனா எனத் தெரியவில்லை. ஆனால், கவிதையில் ஒரு பெருங்கூட்டம் களமிறங்கி எழுதுகிற தோற்றம் இருக்கிறது. அது சிறுகதைகளில் இல்லை.”

“நான் பழைய பெருமாள் முருகன் இல்லை!” - பெருமாள் முருகன்

“கருப்பொருள்களைப் பொறுத்தவரை வெளியிலிருந்து எடுத்துக்கொள்ள முடியும். புதிய புதிய வெளிப்பாட்டு வடிவங்களை எப்படிப் பெறுகிறீர்கள்?”

“எழுதிய முந்தைய வடிவங்களிலிருந்து அடுத்தடுத்த வடிவங்களுக்குத் தாண்டிச் செல்ல வேண்டும் என்கிற உந்துதல் இயல்பிலேயே எனக்கு உண்டு. எனது நாவல்களைக்கொண்டே நீங்கள் அதை கவனிக்க முடியும்.  ‘ஏறுவெயில்’ ‘நிழல் முற்றம்’ இரண்டுக்கும் இடையே பெரிய வித்தியாசம் இருக்கும். அப்படியான கருக்களையும் நான் மிகக் கவனமாக எடுத்துக்கொண்டேன். முந்தைய படைப்பின் சாயல் அடுத்தவற்றில் துளியும் இல்லாமல் பார்த்துக்கொள்வேன். அதற்கு வாசிப்பு ஒரு  முக்கியமான பலம். அதன் வழியாக புதிய புதிய வடிவங்களை நாம் கண்டடையலாம். கவிதைகள், சிறுகதைகள், நாவல் என ஏராளமான மொழிபெயர்ப்புகள் இன்று வாசிக்கக் கிடைக்கின்றன. அவற்றிலிருந்து புதிய வடிவங்களைக் கண்டெடுக்கும் கண்ணோட்டத்துடனும் வாசிப்பது உண்டு; பெறுவதும் உண்டு.”

“ஒரு கரு, மனதுக்குள் உருவாகிறபோது அது கவிதைக்கானது என்றோ சிறுகதைக்கானது என்றோ அல்லது மற்ற வடிவங்களுக்கானது என்றோ எப்படித் தீர்மானிக்கிறீர்கள்?”

“அந்தக் கரு உருவாகும்போதே அது என்னவாக உருவாக வேண்டும் என்கிற  தொனியோடேதான் வருகிறது. இது கவிதைக்கானது, இது சிறுகதைக்கானது எனத் தெரிந்துவிடும். மிகச் சொற்பமாகவே இதில் விபத்து நிகழும். என் முதல் கவிதைத் தொகுப்பான ‘நிகழ் உறவு’-ல் இருக்கும் சில கவிதைகள் சிறுகதைகளாக எழுதியிருக்க வேண்டியவை. ஆனால், அவற்றை நான் வலிந்து கவிதையாக்கியிருப்பதை பின்னர் உணர்ந்தேன். ‘குமரேசனின் நான்கு அதிர்ஷ்டங்கள்’ என்கிற எனது சிறுகதையை நூறு அடிகள்கொண்ட கவிதையாகத்தான் முதலில் யோசித்திருந்தேன். ஆனால், அது கவிதைக்கான கரு அல்ல என்பதை சிறுகதையாக எழுதி முடித்தபோது உணர்ந்தேன். எனது அனுபவத்தில் சொல்வதென்றால்,  படைப்புகள் தங்களது வடிவத்தை தானே தீர்மானித்துக் கொள்கின்றன.”

“ஒரு சிறுகதைக்கான, நாவலுக்கான கரு கிடைத்த உடனேயே எழுதத் தொடங்கிவிடுவீர்களா?”

இல்லை. என்னால் திடீரென்று எழுத முடியாது. விஷயம் மனதுக்குள் ஓடிக்கொண்டே இருக்கும். அதைப் பற்றி யோசித்து யோசித்து, அதோடு பேசிப் பேசித்தான் உருவாக்குவேன்.   பெரும்பாலும் பயணங்களில் தீவிரமான நினைவுகள், கற்பனைகள் வரும். வெகுநாளாக அழுத்திக்கொண்டிருக்கும் ஒரு படைப்புக்கான திறப்பு கிடைத்துவிடும்.” 

“அப்படியானால் முழுக்கதையும் உள்ளுக்குள் தயாரான பிறகுதான் எழுதுகிறீர்கள் அல்லவா?”


“ஆமாம். மனதுக்குள்ளேயே ஒரு படைப்பை ஓரளவு முழுமை செய்துவிட்டுத்தான் எழுத உட்காருவேன். அதே சமயம் எழுதும்போது உருவாகிற முக்கியமான மாற்றங்களையும் அனுமதிப்பேன். ‘பூனாச்சி’ நாவலின் இறுதி வரி ‘அது கற்சிலை’ என்பது. முதலில் ‘அது இறந்துவிட்டது’ என்றுதான் எழுதத் திட்டமிட்டிருந்தேன். ஆனால், ‘கற்சிலை’ என்கிற வார்த்தை திடீரென்று மனதில் தோன்றியது. அதை எழுதியவுடன் எனக்கு, நாவல் இங்கு முடிந்துவிட்டது என்ற நிறைவு வந்துவிட்டது. இதுபோலவும் நடப்பது உண்டு.”

உங்களுடைய முன்னுரை ஒன்றில்  ‘மனப்பழக்கம்’ என்கிற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறீர்கள். ‘படைப்பு மனநிலை’ என்கிற சொல்லுக்கும் உங்களுடைய ‘மனப்பழக்கம்’ என்கிற சொல்லுக்கும் என்ன தொடர்பு?

“இரண்டுமே ஒன்றுதான் என்று நினைக்கிறேன். ஏதேனும் ஒரு கற்பனையில், சிந்தனையில் நான் பல நேரங்களில் யதார்த்தச் சூழலை மறந்துவிடுவேன். எல்லோருக்கும் இதுபோலத்தானா என்று தெரியவில்லை.   இறங்க வேண்டிய இடத்தைத் தாண்டி பஸ்களிலும், ரயில்களிலும் பலமுறை பயணித்தது உண்டு. சமயங்களில் சிக்னலில்கூட நிற்காமல் போய்விடுவது உண்டு. இதன் காரணமாகவே எனது மனைவி, என்னை டூ-வீலர் ஓட்டுவதற்கு அனுமதிப்பது இல்லை (சிரிக்கிறார்).

சிறுவயதில் இருந்தே நான் அதிகம் பேசுகிறவன் இல்லை. ஆசிரியரான பிறகுதான் ஓரளவுக்குப் பேசத் தொடங்கினேன். இப்போதும்கூட நான் பேச்சாளன் இல்லை. இன்றளவும் மேடைகளில் குறைவாகவே பேசுகிறேன். பெரும்பாலும் மனதுக்குள் பேசிக்கொள்வது, விவாதித்துக்கொள்வது என்பது சிறுவயதிலிருந்தே என்னைத் தொடரும் பழக்கம். சமயங்களில் அப்படிப் பேசிக்கொள்ளும் வார்த்தைகள் உதட்டைத் தாண்டியும் வந்துவிடுவது உண்டு. என் மனைவிக்கு அது நன்றாகத் தெரியும்.”

“ஒரு படைப்பை எழுதுவதற்கு களஆய்வு அவசியமா?”

முக்கியமான படைப்புகளைக் கொடுத்தவர்கள் பலரும் களஆய்வு செய்துள்ளனர். எல்லாவற்றையும் சுய அனுபவத்தின் வாயிலாகவே அணுகிவிட முடியாது. ஒரு படைப்பில் பல்வேறு அனுபவங்களை, பல்வேறு சூழல்களைப் படைப்பாளி நுட்பமாகச் சொல்ல வேண்டியது வரும். அதற்குக் களஆய்வு நிச்சயம் உதவும். மற்றொரு புறம், களஆய்வுக்குச் செல்வதன் மூலம் புதிய புதிய கதைக் கருக்கள் கிடைக்கும் வாய்ப்பும் உண்டு. ஆராய்ச்சியாளரின் ஆய்வைப்போல ஒரு படைப்பாளியின் களஆய்வு இருக்காது. ஓர் ஆராய்ச்சியாளர், தனது கள ஆய்வின் மூலம் ஒரு வரலாற்றைக் கட்டமைக்க முயல்வார். ஆனால், படைப்பாளனின் பார்வையோ, அந்தச் சூழலின் மனிதர்கள், அவர்களின் வாழ்க்கை மற்றும் மன உணர்வுகள் போன்றவற்றின் மீது கவனம்கொள்ளும். எனக்கு நன்கு  தெரிந்த இடங்களைப் பற்றி எழுதும்போதுகூட, ஒருமுறைபோய் அதைப் பார்த்துவிட்டு வந்து எழுதுவதையே வழக்கமாக வைத்திருக்கிறேன்.”

“நான் பழைய பெருமாள் முருகன் இல்லை!” - பெருமாள் முருகன்

“ஓர் எழுத்தாளன், வரலாற்றைப் புனைவாக்க வேண்டிய தேவை என்ன?”

“வரலாற்றுப் புனைவுகள் என்று நமக்குச் சொல்லப்பட்ட பெரும்பாலானவை, கற்பனைக் கதைகளே. நாம் நமது பழைய வரலாற்றை, அரசு மற்றும் மன்னர்களைப் பற்றிய கதைகளைப் பெருமிதமாகக் கருதினோம். பிறமொழிகளில் அதையெல்லாம் கேள்விக்கு உள்ளாக்கி நிறைய படைப்புகள் வெளிவந்துள்ளன. தமிழில் பெருமளவில் இது நிகழவில்லை. அதற்கு நமது அரசியல் சூழலும் ஒரு முக்கியமானக் காரணம். நாம் நமது மரபார்ந்த விஷயங்களை எண்ணிப் பெருமிதப்பட்டுக்கொண்டோம். எல்லா காலங்களிலும் மனிதர்கள் அற்பமானவர் களாகவும் மோசமானவர்களாகவும் இருந்திருப்பதற்கான வாய்ப்புகள் உண்டுதானே என நாம் சிந்திக்கவில்லை.அப்படி ஓர் உரையாடல் உரிய நேரத்தில் வலுவாக இங்கு நிகழாமல் போனது. நாம் நமது வரலாற்றைப் பெருமிதத்துக்கு உரிய ஒன்றாகவே தொடர்ந்து கட்டமைத்துக்கொண்டிருக்க முடியாது. அது சரியான வரலாறும் ஆகாது. 90-களுக்குப் பிறகு அனைத்து வரலாறுகளையும் கேள்விக்கு உள்ளாக்கும் போக்கு உருவானது. அதுதான் இன்று தமிழில் எழுதப்படும் வரலாற்றுப் புனைவுகளில் பிரதிபலிக்கிறது என்று நினைக்கிறேன். ஒரு சமூகத்தில் யாருக்குப் பிரதிநிதித்துவம் உள்ளது, யாருக்கு இல்லை என்கிற அரசியல் கவனத்தோடு, ஒரு வரலாற்றுப் புனைவு படைக்கப்பட வேண்டும். இனி, தமிழில் வரலாற்றுப் புனைவுகள் அதிகமாக எழுதப்படும் என்று நம்புகிறேன்.”

“எதிர்காலத்தில் ஒருவேளை அதிகமான  வரலாற்றுப் புனைவுகள் எழுதப்படும்பட்சத்தில்  ‘மாதொருபாகன்’ நூலுக்காக நீங்கள் சந்தித்த அதே பிரச்னைகளை அந்த எழுத்தாளர்களும் சந்திக்க வேண்டியது வருமல்லவா? அப்படியான அரசியல் சூழல்தானே இங்கே உள்ளது...”

“ஆமாம். சூழல் அப்படித்தான் இருக்கிறது. எல்லா எழுத்தாளர்களும் அதை உணர்ந்தே இருக்கிறார்கள். ஆகவே, வரலாற்றுப் புனைவுகளை எழுதும்போது கூடுதல் கவனத்துடன் சாதிய அடையாளங்களை, இட அடையாளங்களைத் தவிர்த்து எழுதுவது, வடிவங்களில், குறியீட்டு பாணி சொல்முறையில் எழுதுவது எனப் புதிய மாற்றங்களைச் செய்து முயற்சிக்க வேண்டும்.”

“வரலாற்றை விசாரணை செய்யும் போக்கில் ஒரு படைப்பை உருவாக்குகிற படைப்பாளி, அச்சுறுத்தல்களுக்குப் பயந்து அதைக் குறியீட்டுப் பாணியிலும் வடிவங்களை மாற்றியும் தரும்போது படைப்பு, தன் காத்திரத்தன்மையை இழந்துவிடாதா?”

“திறனுள்ள ஒரு படைப்பாளி, இதுபோன்ற சிக்கல்களை வடிவ ரீதியாகவே கடந்துவிட முடியும் என்றே நினைக்கிறேன். எல்லா காலத்திலுமே படைப்பாளிகளுக்கு அச்சுறுத்தல்கள் இருந்தன; இருக்கும். ஆனால், அவற்றால் ஒருபோதும் படைப்பாளியை முழுமையாக முடக்கிப்போட்டுவிட முடியாது. அச்சுறுத்தல்கள் ஒரு படைப்பாளியை  முன்பைக் காட்டிலும் காத்திரமாக இயங்கச் செய்யும்; செய்கின்றன.”

“ ‘மாதொருபாகன்’ என்கிற பெயர் உங்களின் வாழ்க்கையில் இவ்வளவு முக்கியமான ஒன்றாக மாறும் என்று நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா?”

“நான் பழைய பெருமாள் முருகன் இல்லை!” - பெருமாள் முருகன்“(பெரிதாகச் சிரிக்கிறார்) அப்படி நினைத்துப் பார்த்ததே இல்லை. அந்தப் பெயரின் மூலம் இவ்வளவு பெரிய அடையாளம் உருவாகும் என்று ஒரு சதவிகிதம்கூட கற்பனை செய்தது இல்லை.”

“ ‘மாதொருபாகன்’ பிரச்னையில் இருந்து வெளியே வந்து, பழைய பெருமாள் முருகனாக இயல்பாகிவிட்டீர்களா?”

“பழைய பெருமாள் முருகனாக மாற இனி வாய்ப்பே இல்லை. ஒரு நாவலை எழுதுவதற்கு முன்பிருக்கும் பெருமாள் முருகன், எழுதி முடித்த பின்பு இருப்பது இல்லை. அவன் முற்றிலும் மாற்றமடைந்திருப்பான். அதுபோலத்தான், இந்த பிரச்னைக்குப் பிறகான நான், பழைய பெருமாள் முருகன் இல்லை.”

“இந்தப் பிரச்னையினால் நிகழ்ந்த நேர்மறை மற்றும் எதிர்மறை விஷயங்களாக நீங்கள்  கருதுவது எது?”

“எழுத்தாளர்கள் எனக்கு ஆதரவாக நின்றது, போராடியது மிக முக்கியமான விஷயம். காலச்சுவடு கண்ணன், ஆ. இரா. வேங்கடாசலபதி, ச.தமிழ்ச்செல்வன் ஆகியோரின் ஆதரவு மிக முக்கியமான பலமாக இருந்தது. ஒரு பக்கம் அமைப்பு சார்ந்து த.மு.எ.க.ச. பல கண்டனக் கூட்டங்களை நடத்தியது. அமைப்பு சாராமல் கோணங்கி, லக்ஷ்மி மணிவண்ணன் போன்றவர்களின் ஏற்பாட்டில் சென்னையில் இருநூறுக்கும் மேலான எழுத்தாளர்கள் ஒன்றுகூடிப் போராடினார்கள். இவற்றையெல்லாம் முக்கியமான நேர்மறை அம்சங்களாகப் பார்க்கிறேன். அதேசமயம், இந்த விஷயத்தில் ஆதரவு தெரிவித்துப் போராட முன்வந்த பலரை ஒன்றிணைக்க, ஒன்றிணைத்துப் போராட நம்மிடம் வலுவான அமைப்புகள் இல்லாமல் இருந்தது என்பதை எதிர்மறை அம்சமாகப் பார்க்கிறேன்.”
 
“நீங்கள் இயங்கிவந்த அமைப்புகளில் இருந்து வெளியே வந்துவிட்டீர்கள். ஆனால், அமைப்புகள் இல்லாதது குறித்து வருத்தப்படுகிறீர்கள். இதை எப்படிப் புரிந்துகொள்வது?”

“நான் இயங்கிவந்த அமைப்புகளைவிட்டு வெளியே வந்துவிட்டாலும்கூட  ‘அமைப்புகள் தேவை’ என்ற கருத்தைத்தான் தொடர்ந்து முன்வைத்து வருகிறேன். அதே சமயம், அதன் வடிவங்கள் நெகிழ்வானவையாக இருக்க வேண்டும் என்கிறேன். குறிப்பாக, மார்க்ஸிய அமைப்புகள் இன்னும் நெகிழ்வாகவும், மக்களைப் பரந்த அளவில் இன்னும் உள்ளே கொண்டுவரும் வகையிலும் இருக்கவேண்டும் என விரும்புகிறேன். மார்க்ஸியர்களிடையே அறிவுஜீவி பிம்பம் வந்துவிட்டது. அவர்கள் மற்றவர்களிடம் இருந்து தங்களை மேம்பட்டவர்களாகக் கருதிக்கொள்ளக்கூடிய நிலை உள்ளது. மக்களிடம் இருந்து கற்றுக்கொள்கிறோம் என்று சொன்னாலும் மக்களை மேலிருந்து பார்க்கும் நோக்கில்தான் இன்னும் இருக்கிறார்கள். அது மாற வேண்டும். அமைப்புக்குள் எழும் சிறுசிறு கருத்து வேறுபாடுகளை நாம் பூதாகரப்படுத்திவிடுகிறோம். கருத்து வேறுபாடுகளுக்கு ஊடேதான்  ஓர் அமைப்பு இயங்க வேண்டும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.”

“படைப்பாளிக்கு அரசியல் சார்ந்த ஈடுபாடும் கருத்தும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?”

“அரசியல் உட்பட, படைப்பாளிக்குப் பலதுறைகள் சார்ந்த ஈடுபாடு வேண்டும். அப்போதுதான், புதிய களங்களையும், பாத்திரங்களையும் படைப்பில் உருவாக்க முடியும். நீங்கள் எந்தக் காலகட்டத்துப் படைப்பை எழுதிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை அறிந்துகொள்ள ஒரு படைப்பாளிக்கு அரசியல் அறிவு அவசியம்.”

“படைப்பாளிகளில் பலர், அரசியலில் கட்சிகள் சார்ந்து ஈடுபடுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“ஆரோக்கியமான ஒன்றாகவே நான் பார்க்கிறேன். வெகுகாலமாகவே வெளியே இருந்தபடியே அரசியலை விமர்சித்துக் கொண்டிருக்கிறோம். அதற்குள் நுழைந்து செயல்படும்போதுதான் நம்மால் என்னவிதமான மாற்றங்களை அங்கே கொண்டுவர முடியும் என்பதை அறிந்துகொள்ள முடியும். இலக்கியம் சார்ந்த குரல்களுக்கு  அங்கே ஓர் இடம் கிடைக்கும்.”    

“நான் பழைய பெருமாள் முருகன் இல்லை!” - பெருமாள் முருகன்

“தமிழ்ப் படைப்பாளிகள் கவனம்கொள்ளாத களம் இவை என்று நீங்கள் கருதுகின்ற விஷயங்கள் பற்றி...”

“ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. முதலில், படைப்பாளிகள் தங்களின் அனுபவ எல்லைகளைவிட்டு வெளியேவந்து படைப்புகளை உருவாக்க வேண்டும்.  விவசாயம், தொழில்கள் சார்ந்து எவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன.  எங்கள் பகுதியில்  குச்சிக் கிழங்கு விவசாயம் பெருமளவில் நடக்கிறது. அதன் மாவில் ஜவ்வரிசி தயாரிக்கப்படுகிறது. அந்த விவசாயம் ஒரு பெரிய நிலப்பரப்பையே ஆக்கிரமித்திருக்கிறது. அது சார்ந்த ஒரு கலாசாரம் இருக்கிறது. அந்த விவசாய வாழ்க்கை, அதுசார்ந்த தொழில்நுட்பம், இயற்கை சார்ந்த விஷயங்கள் என்று எழுத எவ்வளவோ இருக்கின்றன. எனக்கு சோடா தொழிலில் நன்கு அனுபவம் உண்டு. படைப்பு சார்ந்து கதாபாத்திரங்களுக்கு ஏதாவது தொழிலை யோசிக்க வேண்டுமானால், எனக்கு சோடா தொழில்தான் முதலில் தோன்றும். இப்போது சென்னையின் பல இடங்களில் கவனித்தேன்,  சிறிய தள்ளு வண்டிகளில் சோடா தயாரித்து வடமாநிலத் தொழிலாளர்கள் விற்பனை செய்கிறார்கள். பெரிய பெரிய குளிர்பான நிறுவனங்களின் வருகையால் முடங்கிப்போன சோடா தொழில் இப்படி மீண்டு வந்திருக்கிறது. படைப்பாளிகள் இதிலெல்லாம் கவனம் செலுத்த வேண்டும். தமிழகம் முழுக்க லட்சக்கணக்கான கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. ஆனால், கட்டடத் தொழில் சார்ந்து முழுமையாக ஒரு நாவல்கூட இன்னும் இங்கு எழுதப்படவில்லை.”

“ஒரு படைப்புக்கு எடிட்டர் அவசியம் என்று நினைக்கிறீர்களா?”

“கட்டாயம் அவசியம் என்றேதான் கருதுகிறேன். 2000-ம் ஆண்டுக்குப் பிறகுதான் இப்படியான கேள்விகளே தமிழில் எழுந்திருக்கின்றன. எனது முதல் நாவலான  ‘ஏறுவெயில்’-ஐ முதலில் சுகுமாரன் படித்தார். அதில், ஒரு பகுதியை வேண்டாம் என்று நீக்கிவிட்டார். உண்மையில் அதன் பின்னரே அது செம்மைப்பட்டது.  ‘கூளமாதாரி’ நாவல் எழுதியபோது தமிழினி வசந்தகுமார் சில முக்கியமான உள்ளீடுகளைக் கொடுத்தார். எடிட்டர் உதவும்போது படைப்பு முன்பைக்காட்டிலும் செழுமையடையும் என்றே நம்புகிறேன். எனது எழுத்தில் யாரும் கைவைக்கக் கூடாது என்பது ரொம்பப் பழைமையான ஒரு கருத்து. எடிட்டர்கள், வேறு  எந்த வடிவத்தைவிடவும் தமிழில் கவிதைகளுக்கே அதிகம் தேவைப்படுகிறார்கள் என்று நினைக்கிறேன். அப்படி இருந்திருந்தால், தமிழ்க் கவிதைகள் இவ்வளவு திருகலான மொழியினைத் தவிர்த்திருக்கும். இன்னும் அதிக வாசகர்களைச் சென்றுசேர்ந்திருக்கும்.ஆனால், தமிழில் பதிப்பகங்களின் நிலை ஒரு எடிட்டரை நியமித்து அவருக்குச் சம்பளம் கொடுக்கும் சூழலில் இல்லை. இது கவலைக்குரிய விஷயம்.”

“எழுதுவதற்கு சவாலான விஷயம் என்று எதையாவது கருதுகிறீர்களா?”

“ஆமாம். நூறு வருடங்களுக்கு முந்தைய எனது முன்னோர்களின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்பதை எழுத ஆர்வமாக இருக்கிறேன். ஆனால், அதை அறிந்துகொள்வதற்கான ஆவணங்கள் நம்மிடம் இல்லை. ஒரு காலகட்டத்தில் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதி எப்படி இருந்திருக்கும் என்று என்னால் கற்பனைசெய்து எழுதிவிட முடியும். ஆனால், அந்தக் காலகட்டத்தின் மனிதர்களுடைய பாடுகள், விருப்பங்கள், மன ஓட்டங்கள், பிரச்னைகள், கனவுகள் என்னவாக இருந்திருக்கும் என்பதை யூகிக்க முடியவில்லை. தேடிக்கொண்டிருக்கிறேன். ஒருவகையில் இந்த விருப்பம் எனது வேர்களை நான் அறிந்துகொள்ள விரும்பும் வேட்கையும்தான்.”

“ ‘வட்டார இலக்கியம்’ என மொழி சார்ந்து ஒரு படைப்பு அடையாளப்படுத்தப்படுவது சரிதானா?” 

“ஆதிக்க சாதியினர்... அல்லது உயர் வகுப்பினர் என்று வைத்துக்கொள்ளுங்கள். (சாதிப் பெயர்களைப் போட்டுவிட வேண்டாம் என்றபடி சிரிக்கிறார்) அவர்கள், தங்களின் மொழியில் தங்களுடைய வாழ்க்கையை நாவலாக எழுதிக்கொண்டிருந்தபோது, கிராமம் சார்ந்த வாழ்க்கையை குறிப்பாக, வேளாண்மை சார்ந்த சாதிகளுடைய வாழ்க்கை எழுதப்பட்டபோது, அதை எப்படி ஏற்றுக்கொள்வது, என்னவாக அடையாளப்படுத்துவது என்கிற  குழப்பம் வருகிறது. அப்போது, அதை வட்டார இலக்கியம் என்று அழைத்து வகைப்படுத்த வசதியாக இருந்தது. அப்படிப் பார்த்தால், 1960-களுக்குப் பிறகு எழுதப்பட்ட எல்லா நாவல்களும் வட்டார நாவல்கள்தான். வட்டார இலக்கியம்தான். ஆக, இன்றைக்கு அந்த வகைப்படுத்துதல் தனது அர்த்தத்தை இழந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால், இன்றைக்கு எந்த ஒரு படைப்பையும் வட்டாரம் சாராமல்,  ஓர் அடையாளம் சாராமல் எழுத முடியாது. எனவே, வட்டார இலக்கியம், வட்டார நாவல் என்று ஒன்றைத் தனியே வகைப்படுத்த முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை.”

“கொங்கு வட்டார மொழியின் சிறப்பு அம்சம் எது? அப்படி ஏதாவது இருக்கிறதா?”


“ஒவ்வொரு வட்டார மொழிக்குமே ஒரு தனித்தன்மை உண்டு. அப்படியான தனித்தன்மையினாலேயே அது வட்டார மொழியாக இருக்கிறது. அதில் உயர்வு தாழ்வு கிடையாது. மொழியியல்ரீதியாகவும் அப்படியான பெருமிதங்களை அங்கீகரிக்க மாட்டார்கள். கொங்கு வட்டார மொழிக்கு என்று சில தனித்தன்மைகள் உண்டு. அதில்,  மிக முக்கியமானதாக நான் கருதுவது, மிகப் பழைமையான, பொதுமொழியில் வழக்கொழிந்துபோன பல இலக்கியச் சொற்களைக் கொங்கு மொழி பாதுகாத்துவைத்துள்ளது. விவசாயம் சார்ந்த பொதுமொழியில் இல்லாத பல சொற்கள் கொங்கு மொழியில் உள்ளன. அதனுடைய ஒலிப்பு முறையும்கூட மிகவும் தனித்தன்மையானது. தூரத்திலிருக்கும் ஒரு மனிதரிடம் பேசும் தொனி அதிலிருக்கும். இலக்கண வழக்கில் அண்மை விளி, சேய்மை விளி என்று சொல்வார்கள். கொங்கு மொழி சேய்மை விளித் தன்மை கொண்டது. விவசாயம் பிரதான தொழில் என்பதால், தூரத்து வயல்களில் வேலை செய்துகொண்டிருக்கும் ஒருவரோடு பேசும்போது, சத்தமாகவும் கொஞ்சம் இழுத்தும் பேச வேண்டியிருக்கும் அல்லவா? அந்த தொனி அதில் இருக்கும். மேட்டுக்காட்டு விவசாயத்தால் வந்த அழகான தொனி இது.”

“ ‘கெட்டவார்த்தை பேசுவோம்’ என்ற உங்களது புத்தகம் எப்படியாக தமிழ்ச் சமூகத்தால் எதிர்கொள்ளப்பட்டது? உங்களுக்கு என்ன மாதிரியான அனுபவத்தைத் தந்தது?”


“அந்தத் தொடரை மணல்வீடு இதழில் நான் புனைப்பெயரில் எழுதினேன். அந்தத் தலைப்புக்காகவே அதைப் படிக்காமல் விட்டவர்கள் உண்டு. மறைத்துவைத்துப் படித்தவர்களும் உண்டு. முகச்சுழிப்போடு அணுகி, அதை முழுவதுமாகப் படித்த பின் பாராட்டியவர்களும் உண்டு. அது ஏதோ சுவாரஸ்யத்துக்காக எழுதப்பட்ட  ‘கெட்ட வார்த்தைகள்’ குறித்த புத்தகம் அல்ல. சமூகத்தில் புழங்கும் ஒரு கெட்டவார்த்தைக்குப் பின்னிருக்கும் மனித மனம், அதன் உளவியல், அரசியல், வரலாறு என வேறொரு தளத்தில்வைத்து எழுதப்பட்ட விஷயம். பெருமளவில் இளைஞர்கள் மத்தியில் நிறைய வரவேற்பைப் பெற்றது. கெட்டவார்த்தைகளுக்குப் பின்னே இருக்கும் ஒரு வரலாற்றுத் தொடர்ச்சியை அவர்கள் புரிந்து கொண்டார்கள். அந்தப் புத்தகத்துக்கு சந்தையில் நல்ல வரவேற்பு இருக்கிறது. ஆனாலும், அதை மறுபதிப்பு செய்ய வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டேன்.”

“ஏன்?”

“இப்போது இருக்கிற சூழலில் அதைக்கொண்டு வேறு ஏதாவது பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியது வருமோ என்ற அச்சம்தான் காரணம். மீண்டும் இன்னொரு சர்ச்சைக்கு இப்போது நான் தயார் இல்லை.”

“நான் பழைய பெருமாள் முருகன் இல்லை!” - பெருமாள் முருகன்

“ ‘சாதி முன்பைவிட கூர்மையாகி இருக்கிறது’ என்றும், ‘இல்லை அதன் கூர்மை மழுங்கிக் கொண்டிருக்கிறது’ என்றும் இரண்டு தரப்புகளில் விவாதங்கள் நிகழ்கின்றன. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”

“சாதி சார்ந்த விஷயங்களில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. முன்பு இருந்த அதே இறுகிய நிலையில் தற்போது இல்லை. அனைத்து சாதிகளும் அதனதன் உரிமைகளை, இடத்தைப் பெறுவதில் விழிப்போடு முனைப்பு காட்டி வருகின்றன. வாழ்க்கைமுறை நிறையவே மாறியிருக்கிறது. எந்த ஒரு சாதியும் மற்றொரு சாதியை  இன்று முழுமையாக ஆதிக்கம் செலுத்த முடிவது இல்லை. முற்றிலுமாக எல்லாம் மாறவில்லை என்றாலும் நிறைய நெகிழ்வுகள் ஏற்பட்டிருக்கின்றன.

சாதி சார்ந்த அமைப்புகள், சாதி சார்ந்த கட்சிகள், புதிது புதிதாக உருவாவதை இரண்டு வகைகளில் பிரித்துப் பார்க்கவேண்டியிருக்கிறது. தலித் அமைப்புகள், பொதுவெளியில் தங்களுக்கான அங்கீகாரமும் ஏற்பும் கிடைக்க வேண்டும் என்பதற்கான  போராட்ட அமைப்புகளாக இருக்கின்றன. பிற சாதி அமைப்புகள், தங்களிடம் இதுவரை இருந்துவந்த  ஆதிக்கத்தை  விட்டுவிடக் கூடாது. அதைத் தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்பதற்கான அணிதிரளலாக இருக்கின்றன. பதைப்புடனும் பதட்டத்துடனும் தங்களின் அதிகாரத்தைக் காப்பாற்ற அவை இயங்கி வருகின்றன. சாதியம் சார்ந்த விஷயங்களில் நேர்மறையான முன்னேற்றங்கள் நிகழ்வதாகவே நம்புகிறேன். அதைப் பின்னுக்குப் பிடித்து இழுக்க நினைக்கும் சக்திகளின் எண்ணம் ஒருபோதும் பலிக்காது.”

“பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளும், நவீனத் தொழில்நுட்பத்தின் மூலம் பாலியல் சீண்டல்களும் இன்றைக்கு அதிகமாகி உள்ளன. பாலியல் கல்வியின் அவசியம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”


‘‘நமது சமூகத்துக்குப் பாலியல் கல்வி அவசியமான ஒன்று. இன்னும்கூட இருபாலர்களும் தனித்தனியாகப் படிக்கும் பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள்அதிகமாக இருக்கின்றன. ஒன்றாகச் சேர்ந்து படிக்கும் பள்ளிகளில் இருபாலர்களும் அருகில் சேர்ந்து அமரக்கூடிய நிலை இல்லை. ஒருவரை ஒருவர் தொட்டுப்பேசுவதுகூட பெரிய குற்றம்போல அணுகப்படுகிறது. ஒரு மாணவனும் மாணவியும் பேசிக்கொண்டாலே, அவர்கள் தவறு செய்வதற்குத் திட்டமிடுவதாகப் பார்க்கும் சந்தேகப் பார்வைதான் சமூகத்திடம் இருக்கிறது. எதிர்பாலினத்துடன் சகஜமாக இருக்கும் போதுதான், அவர்கள் குறித்த அறிதல் நமக்கு ஏற்படும். அவர்களை அணுகக்கூடிய நிலையில் மாற்றங்கள் வரும். இன்றைக்கு நிறையக் குடும்பங்களில் கணவனுக்கு மனைவியின் உடல்ரீதியான பிரச்னைகளைக்கூட புரிந்துகொள்ள முடிவது இல்லை. காரணம், எதிர்பால் குறித்த அக்கறையோ, கவனமோ, புரிதலோ இல்லாததுதான். கல்வியில் நிறைய மாற்றங்கள் நிகழ வேண்டும். பெண்களைக் கல்வி கற்க முழுமையாக அனுமதிக்க வேண்டும்.”

“இந்தியச் சூழலில் சாதிய அகமண முறைக்கான காவலில், பெண்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்படுகிறதே?”


“கல்வி முறையில் முக்கியமான பல நல்ல மாற்றங்கள் வராமல் போனதற்கு இந்தச் சாதிய மனநிலையும் ஒரு முக்கியமான காரணம். உயர்நிலைப் பள்ளிகளைக் கொண்ட கிராமங்களில் உள்ள படித்த பெண்களின் எண்ணிக்கைக்கும், தொடக்கப் பள்ளிகளை மட்டுமேகொண்ட கிராமங்களில் உள்ள படித்த பெண்களின் எண்ணிக்கைக்கும் பெரிய வேறுபாடு உள்ளது. காரணம், காதல் ஏற்பட்டு சாதியக் கலப்பு நிகழ்ந்துவிடுமோ என்கிற அச்சத்தில் பெற்றோர், பெண்களைக் கிராமம் தாண்டிப் படிக்க அனுப்புவது இல்லை. சாதிய 

“நான் பழைய பெருமாள் முருகன் இல்லை!” - பெருமாள் முருகன்

அமைப்பு அனைத்து வகைகளிலும் சமூகத்தின் முன்னேற்றத்தில் ஒரு முட்டுக்கட்டையாக முளைத்து நிற்கிறது. இது ஆபத்து!”

“இன்றைய பெண் படைப்பாளிகளின் இயக்கம் குறித்த உங்களது பார்வை?”


“90-க்குப் பிறகு தமிழில் நிறையப் பெண் படைப்பாளிகள் எழுத வந்துள்ளார்கள். பாமா, சிவகாமி, உமா மகேஷ்வரி, சல்மா, மாலதி மைத்ரி, சுகிர்தராணி, குட்டிரேவதி  போன்று நிறைய பெயர்களைச் சொல்ல முடியும். தமிழ் மொழியில் இதுவரை அறிமுகமாகாத வாழ்க்கையையும், புதிய புதிய பார்வைக் கோணங்களையும் பெண் படைப்பாளிகள்தான் காத்திரமாக முன்வைத்தார்கள்.” 

 “ஒரு தமிழ்ப் பேராசிரியராக, தமிழ் மொழியின்  ‘போதாமை’ என்று எவற்றைச் சொல்வீர்கள்?”

“தமிழில் போதும் எனச் சொல்ல எதுவுமே இல்லையே. எல்லாமே போதாமையாகத்தான் இருக்கின்றது. இந்த மக்களிடம் இந்த மொழி இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக எப்படி உயிர் வாழ்கிறது என்பதே ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. இதை தமிழ் மொழியின் தனித்திறன் என்றுதான் சொல்லவேண்டும். கல்வியில் தமிழ் இல்லை. ஆரம்பப் பள்ளிகளில்கூட தமிழ் இல்லாமல் போய்விட்டது. நிர்வாக மொழியிலும் தமிழ் இல்லை. உயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதாட வாய்ப்பு இல்லை. கடைகளின்  விளம்பரப் பலகைகளில்கூட தமிழ் இல்லை. உலகத்தில் எந்த மொழி பேசக்கூடியவர்களிடத்திலும் தனது பெயருக்கு முன்பாக வேறு ஒரு மொழியின் எழுத்தை முன்னெழுத்தாகப் போட்டு எழுதும் கிறுக்குத்தனம் இருக்கிறதா? போதாமைகளை நாம்தான் களைய வேண்டும். எல்லா துறைகளிலும் தமிழ் மொழி சார்ந்த கவனத்தை அக்கறையோடு கொண்டுவர வேண்டும்.”

“உங்கள் மாணவர்களுடன் நட்பாக நீங்கள் இணையும் புள்ளி எது?”


“நான் ஆசிரியராக மிக இளம் வயதிலேயே- பணியில் சேர்ந்துவிட்டேன். எனது வயதும் உருவமும் ஒரு முக்கியமான காரணம். பணியில் சேர்ந்த புதிதில், கல்லூரியில் ஒரு துறையில் போய் வருகைப் பதிவேடு கேட்டதற்கு ‘மாணவரிடம் தர முடியாது’ என்று சொல்லிவிட்டார்கள். (சிரிக்கிறார்) அன்றைய எனது தோற்றம் அவ்வாறு இருந்தது. அது, மாணவர்களிடம் இயல்பாகப் பழக வாய்ப்பாக அமைந்தது.

பொதுவாக ஆசிரியர்கள், இளம்வயது  மாணவர்களை அங்கீகரிப்பது இல்லை. குற்றம் செய்பவர்களாகவே அவர்களைப் பார்ப்பார்கள். அவர்களைக் கண்டிப்பதும், திருத்துவதும்தான் தன் முக்கிய வேலை என்று நம்புவார்கள். நான் அப்படிப் பார்ப்பது இல்லை. என்னைப் பொறுத்தவரை வளர்ந்தவர்கள்தான், பெரியவர்கள்தான் அதிகமாகக் குற்றம் செய்பவர்கள். சமூகத்தில் நடக்கும் பெரும்பான்மையான குற்றங்களைச் செய்பவர்கள் அவர்கள்தான். இளைஞர்கள், வாழ்க்கையை அறிந்துகொள்ளத் துடிப்பவர்கள். இன்னும் வாழ்க்கையை அனுபவிக்காதவர்கள். அவர்களுக்கு அங்கீகாரம் தேவைப்படுகிறது. ஆனால், இளைஞர்களுக்கு வீட்டிலும் சரி, பள்ளியிலும் சரி எந்த இடத்திலும் அங்கீகாரம் கிடைப்பது இல்லை. நான் அவர்களை அங்கீகரிப்பேன். ஒருவரின் சின்னச்சின்னத் திறமைகளையும்கூட மதித்துப் பாராட்டுவேன். சமகால விஷயங்களை அவர்களிடம் பேசுவேன்.மாணவர்களின் கண்களின் வழியாகத்தான் நான் இந்த உலகத்தைப் பார்க்கிறேன் அதுவே, இன்னும் “அந்தக் காலத்தில் நாங்கலெல்லாம்” என்று என் நண்பர்களைப் போல என்னைப் பேசாமல் தடுத்து வருகிறது.”

“உங்கள் குடும்பப் பின்னணி பற்றிச் சொல்லுங்கள். வீட்டில் இலக்கியம் பேசுவது உண்டா?”

“என் மனைவியும் தமிழ்ப் பேராசிரியர்தான். அவரும் கவிதைகள் எழுதுவார். ஒரு தொகுப்பும் வெளியிட்டுள்ளார். நான் அதிகம் இலக்கியம் குறித்து அவரிடம் பேசுவது இல்லை என்கிற வருத்தம் அவருக்கு உண்டு. பிள்ளைகள் இருவரையுமே சிறுவயதில் இருந்தே வாசிப்புப் பழக்கத்துக்குத் தயார்செய்துவிட்டோம். அவர்களுக்குத் தேவையான சிறுவர் புத்தகங்களைச் சந்தா கட்டி வாங்கிக் கொடுத்துப் பழக்கினோம். இருவரையும் தமிழ் வழியிலேயே படிக்க வைத்தேன். தற்போது ஆங்கில நாவல்களையும் வாசிக்கப் பழகியுள்ளனர். மகன் எழுதுவது இல்லை. என் மகளுக்கு எழுதும் ஆர்வம் உள்ளது.”

“ ‘மாதொருபாகன்’ பிரச்னையின்போது வீடு எந்தளவுக்கு உங்களுக்கு ஆறுதலாக இருந்தது?”

“என் குடும்பம் என்னை முழுமையாகப் பாதுகாக்க முற்பட்டது. உடன் நின்றது. என்னைவிட மிகத் துணிச்சலாக என் மனைவிதான் அனைத்தையும் எதிர்கொண்டார். நான் என் பிள்ளைகளுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்றே பெரிதும் கவலைப்பட்டேன்.”

“நான் பழைய பெருமாள் முருகன் இல்லை!” - பெருமாள் முருகன்

“உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா?”

“எனக்கு அடிப்படையில் கடவுள் நம்பிக்கை கிடையாது. சமயங்களில் தேவையென்றால் கும்பிட்டுக் கொள்வது உண்டு.”

“என்ன மாதிரியான தேவைகளின்போது?”

“அதை எப்படிச் சொல்வது? (சிரிக்கிறார்)உதாரணத்துக்குச் சொல்ல வேண்டும் என்றால், மனிதர்கள் யாரிடமும் நம்பிக்கையோடு பகிர்ந்துகொள்ள முடியாத ஒரு விஷயத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டுமென்றால், எனக்குப் பிடித்த ஒரு கடவுள் உருவத்தை நினைத்துக்கொண்டு அதனிடம் பகிர்ந்துகொள்வேன்.”

“ஒவ்வொரு கணத்திலும் நீக்கமற உங்களோடு பயணிக்கிற ஒரு சொல் அல்லது பொருள் அல்லது நினைவு ஏதாவது உண்டா?

“ஆமாம். என் அம்மாவின் நினைவு. எனது பல நல்ல இயல்புகளை வடிவமைத்ததில் முக்கியமானப் பங்கு அவருடையது. எனது மனைவி, குழந்தைகள், உறவினர்கள் எனப் பலரும் நான் அவரைப் போலவே பேசுவதாகவும், சிரிப்பதாகவும் நடப்பதாகவும் சொல்வது உண்டு. ஒரு நாளைக்கூட அவரது நினைவின்றி நான் கடந்தது இல்லை. அவர் இப்போது  இல்லை என்றாலும் எப்போதும் என்னோடுதான் இருக்கிறார்.”  

“உங்களை எப்படி அடையாளப் படுத்திக்கொள்ள விரும்புகிறீர்கள்?” 

“நான் பழைய பெருமாள் முருகன் இல்லை!” - பெருமாள் முருகன்


எழுத்தாளனாக! என்னை ஓர் ஆசிரியனாக அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பியது உண்டு. ஆனால், ஓர் ஆசிரியனாக நான் செய்ய நினைத்ததில் 25 சதவிகிதத்தைக்கூட என்னால் செய்ய முடியவில்லை என்பதால், எனக்கு அதில் தயக்கம் இருக்கிறது. ஆனால், ஓர் எழுத்தாளனாக என்னை அடையாளப்படுத்திக்கொள்வதில் எந்தவித மனத்தடையும் இல்லை. ஏனென்றால், ஓர் எழுத்தாளனாக நான் செயல்படுவதற்கான வாய்ப்புகளும் வெளியும் இன்னும் நிறைய இருப்பதாக நம்புகிறேன்.”

“கருத்துச் சுதந்திரத்துக்கான அடிப்படை  அல்லது எல்லை என்று நீங்கள் கருதுவது?”

“கருத்துச் சுதந்திரத்துக்கு எல்லை கிடையாது. இருக்கக் கூடாது. அதுவே ஒரு நல்ல ஜனநாகய சமூகத்தின் அடிப்படையான அம்சம். அதேசமயம், நமக்கு உவப்பில்லாத கருத்துகளை எதிர்கொள்வதற்கான முறைகளுக்கு ஒரு வரையறை வேண்டும்.எந்தக் கருத்தையும் நாம் ஜனநாயக வழிகளிலேயே மறுக்க வேண்டும்; எதிர்ப்புத்  தெரிவிக்க வேண்டும். போராடுவதையோ வழக்குத் தொடுப்பதையோகூட செய்யலாம்.அது ஜனநாயக வழியிலானதாக இருக்க வேண்டும். மிகச் சுலபமாகக் கருத்துகள் திரிக்கப்படுகின்றன. அதை முன்னிட்டு வன்முறைகள் நிகழ்த்தப்படுகின்றன. இது தவறான, ஆபத்தான வழிமுறை. ஒரு கருத்துக்கு எதிர்வினை செய்வது என்பது, ஒரு தனி நபரை, சூழலை, அச்சத்துக்கு உள்ளாக்குவதாகவோ, அவர்களை முடக்குவதாகவோ இருக்கக் கூடாது. எல்லா வகையான கருத்துகளுக்கும் ஒரு சமூகத்தில் இடம் இருக்க வேண்டும்.”    

“நிர்பந்திக்கப்பட்ட மௌனம் என்பது எவ்வளவு வலி மிகுந்தது?”

வலியான விஷயம் என்பதோடு  ஒருவகையில் மகிழ்ச்சியான விஷயமும்தான். அந்த மௌனத்தின் மூலம் கிடைக்கக்கூடிய ஆற்றல், கூடுதலான பட்டறிவு மிக முக்கியமானது. ஒருகட்டத்தில் எனக்கு மௌனமாகவேகூட இருந்துவிடலாம் என்று தோன்றியது. ஒதுங்கி இருப்பதை எப்போதுமே விரும்பக்கூடியவன் நான். என் சுபாவமும்கூட அதுதான். மௌனம் என்பது என் அளவில் இயல்பு... துக்கம்... நிதானம்... வலிமை!”