Published:Updated:

திங்கட்கிழமைகள் - பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

திங்கட்கிழமைகள் - பாலசுப்ரமணியன் பொன்ராஜ்
பிரீமியம் ஸ்டோரி
திங்கட்கிழமைகள் - பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

ஓவியம் : செந்தில்

திங்கட்கிழமைகள் - பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

ஓவியம் : செந்தில்

Published:Updated:
திங்கட்கிழமைகள் - பாலசுப்ரமணியன் பொன்ராஜ்
பிரீமியம் ஸ்டோரி
திங்கட்கிழமைகள் - பாலசுப்ரமணியன் பொன்ராஜ்
திங்கட்கிழமைகள் - பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

ன்மாக்களின் நடுக்கத்தோடு தொடங்கும் திங்கட்கிழமைகளை இழப்பதென்பது
எளிதானதில்லை
குழந்தைகள் புத்தகங்களைப் பையிலடுக்கும் திங்கட்கிழமைகளில்
(திங்கட்கிழமைகளில் குழந்தைகளுக்கும் நேரமில்லை)
அன்று கேட்கப்படும் கேள்விகளுக்கெல்லாம் அரைகுறைப் பதில்களும் அதட்டல்களுமே அவர்களுக்குக் கிடைக்கின்றன
பெற்றோரில் ஒருவராவது அல்லது இருவருமே ஒரு வேன் அல்லது ஆட்டோவின் வருகைக்காக நொடியின் வேகத்தைவிடவும் அதிகமாகத் துடித்துக் காத்திருக்கிறார்கள்
பேருந்து பாஸ் மறந்த சிறுவர்கள் அவசரமாகச் சில்லறைகளைச் சேர்க்கின்றனர்
இலைகள் கிளைகளில் சோர்ந்து அசைவின்றி சுணங்குகின்றன
செருப்பின்றி பள்ளிக்கு நடப்பவர்களின் தரித்திரம் திங்கட்கிழமைகளின் துயரச் சித்திரம்
வெறுக்கத்தக்க திங்கட்கிழமைகளின் மழையின் ஒவ்வொரு துளியிலும் நூறு சாபம்
எதிர்காலத்தின் பற்கள் ஒளிர திங்கட்கிழமைகள் ஏணியைப் பச்சை குத்தி வருகின்றன
சில படிகளாவது ஏற முனைகின்றவர்கள் பேருந்து நிலையங்களில் உடல்கள் உரச நிற்கின்றனர், எதிர்காலத்தின் சிறிய இரத்தினத் துண்டிற்காக

திங்கட்கிழமைகள் - பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!


முடிவேயற்ற எதிர்காலத்தில் மிளிரும் மகிழ்ச்சியின் அரூப உறுதிக்காக,
பேருந்துகளில் இடநெருக்கடியையும் மற்றமை உடல்களின் நெருக்குதலையும்
நம்பிக்கையளிக்கும் பச்சை ஒளிக்காகப் பொறுத்துக்கொள்கின்றனர்
போராட்டக்காரர்கள் துவண்டுபோய் தோல்வியோடு வீடு திரும்ப
திங்கட்கிழமைகளின் சூடு நிறைந்த தேநீரை தெருமுனையில் அருந்துகிறார்கள்
நேற்றோ அவர்கள் மகத்தான எதிர்காலப் பாதையின் ஒளிர்விளக்குகள்
இளமையின் வடிந்த துடிப்போ பாதியில் முடிவதின் நிறைவின்மையை
பிறிதொரு தருணத்தின் தொலைதூரப் பயணத்திற்கான முதுகுப்பையாகச் சுமக்கிறது – மின் கிதார்கள் இடையே ஒலிக்கும் பாடல்கள் எங்கே?
செவிப்பறை கிழித்த பறையிசைக்கு/குத்துப்பாடல்களுக்கு ஆடிய கால்களும் அசைந்த இடைகளும்
வலிக்க வலிக்கத் தொழிற்சாலைப் படிகளேறுகின்றன
பூதக்கண்ணாடியில் பார்த்து ஆள் கணக்கெடுப்பவர்களுக்கு அலுப்பேயில்லையா?
ஒரு பாடலிசையேன் தேன்சிட்டே உன் கூரலகு இன்றும் தேனுறுஞ்சுகிறதா?
கார்மென்ட்ஸில் வேலை செய்யும் மெலிந்த பெண்கள்
பெருநிறுவனங்களில் பணிபுரியும் அடையாள அட்டையணிந்த பெண்கள்
மீதி உறக்கத்தோடு காலையின் அழகிலிருந்து முகம் திருப்புகின்றனர்
சூரியனை மறந்த கால் சென்டர் முகங்கள் வங்கி வேலைகளை முடிக்க கண் விழிக்கின்றன, மருத்துவப் பரிசோதனை செய்யவும், குழந்தைகளுக்குக் கட்டணம் கட்டவும் கூட,

அனைத்தும் நிறைவாகப் பெற்றவர்கள், திட்டமிருப்பவர்கள், ஒழுங்குகளில் அடைந்தவர்கள், மஞ்சள் நிறக் குறிப்பு ஒட்டிகளில் வார நாள்களை வடிவமைத்தவர்கள், காரியத் தெளிவிருப்பவர்கள், நம்பிக்கையாளர்கள்
ஞாயிறு மதியம் நம்பிக்கையோடு உறங்கி, திங்கட்கிழமைகளில் உறக்கம் மெருகூட்டிய அதே நம்பிக்கையோடு விரைகிறார்கள்
ஒருமுறையும் ஆடைகளைத் தேய்க்க மறந்திராத அவர்களது வாகன டாங்குகளில்
அடுத்த வாரத்திற்கான பெட்ரோல் நிரம்பியிருக்கிறது

திங்கட்கிழமைகள் - பாலசுப்ரமணியன் பொன்ராஜ்


உழவர்சந்தைச் சுவர்களை மாடுகள் அடைகின்றன
மீந்த காய்கறிகளை, வாழை மட்டைகளை, பாதியழுகிய பழங்களை
காருண்யத்தோடு கொட்டியவர்கள் சில்லறைகளை நேற்றிரவே எண்ணி
வட்டிக்காரர்களுக்குத் திருப்பியளிக்கத் தொடங்கிவிட்டனர்
அவர்களது நாள்கணக்கில் திங்கட்கிழமைகள் நிதானமானவர்களுக்கானது
அதாவது வேலையில்லாதவர்களுக்கானது
புதிய பற்பசை டியூப்பைப் பிதுக்குபவர்கள், உறைபிரித்த சோப்பில் குளிப்பவர்கள்,
முன்பு அணிந்தேயிராத உள்ளாடையை அணிபவர்கள், புதுச்செருப்பில் தேய்த்த எண்ணெயைத் துடைப்பவர்கள், ஞாயிற்றுக்கிழமை அடக்கம் செய்யப்பட்டவர்கள்,
நாள்கணக்கை மறந்தவர்கள், சாலையோரப் பைத்தியங்கள், மதுவிடுதியில் கிதார் இசைத்தவர்கள், வார இறுதியில் அளவுக்கதிகமாகும் வாடிக்கையாளர்களால் இடுப்பொடிந்த விபசாரிகள், கூட்டமேயிராத கோயிலுறைத் தெய்வங்கள், சீரியல் பார்க்கத் தயாராகின்றவர்கள், பணி ஓய்வுபெற்ற சர்க்கரை வியாதிக்காரர்கள், சிறையிலிருப்பவர்களைப் பார்க்க மனுப்போடுபவர்கள், வழக்குரைஞர்கள்,
திறந்திருக்கும் தொழிற்சாலை வாயில்கள், கசாப்புக் கடைக்காரர்கள்,
நித்தியக் கடமையாற்றும் மாநகராட்சிப் பணியாளர்கள், ஜன்னலுக்கு உள்ளேயிருந்து கசகசாப் பழங்களைப் பொறுக்கும் அம்மை விழுந்த அல்லது டெங்குக் காய்ச்சலில் விழுந்த சிறுவர்கள், மோசமான வசவுகளுக்குப் பயந்து மொபெட்டுகளில் விரையும் கான்ஸ்டபிள்கள், செய்திகளே கிடைக்காத ரிப்போர்ட்டர்கள், தெருவோரப் புற்களின் மீது கிடக்கும் காலியான பீர் பாட்டில்கள், கர்ப்ப எதிர்ப்பு மாத்திரைப் பெட்டிகள், திங்கள் ஓரையில் சிவன் கோயிலுக்குச் செல்பவர்கள், தேசப்பிதாவின் சிலை, யோகா வகுப்புகளுக்குச் சென்று திரும்புபவர்கள், நத்தை, சூரியக் கதிர், இரவெல்லாம் குடித்துக் கண்கள் சிவந்தவர்கள், பணமில்லாதவர்கள்….
திங்கட்கிழமை இரண்டு வெவ்வேறு மதங்களாக இருக்கிறது
திங்கட்கிழமை நீண்ட துயரக் கவிதையாகவும், பழைய சாம்ராஜ்ஜியங்களின் வரலாற்று நினைவாகவும், இரயில் பயணங்களின் பெருமூச்சாகவும் இருக்கிறது
திங்கட்கிழமை கேள்வி கேட்கும் இயந்திரமாக, ரிப்போர்ட் ஷீட்டாகவும்,
இரத்தக்கறை கழுவித் துடைக்கப்பட்ட போலீஸ் லத்தியாகவும் இருக்கிறது.
நீதிபதிகள் சுத்தியல் கொண்டு பரிபாலனம் செய்கிறார்கள் செந்நிறக் கட்டிடங்களுக்கு உள்ளே, சிறைச்சாலைகளின் சுற்றுச்சுவர் உயரமும் காலப் பழுப்புமே திங்கட்கிழமைகளிலும் வசீகரம்,
திங்கட்கிழமைகளில் கோர்ட் பரபரப்பாகிறது, பரபரப்பில் நீதிக்கான வேட்கையும் தண்டனைக்கான அவசரமும்.
இறைஞ்சுபவர்கள், மன்றாடுபவர்கள் முன்னே நீதிபதிகள்
கனத்த சட்டப்புத்தகமாகவே இருக்கிறார்கள். அவர்களது பரிபாலனத்தில் திங்கட்கிழமைகளன்று நிறையத் தலைகள் உருளுகின்றன. கைவிலங்குகள் குழந்தைகளுக்காகவும்கூட கழற்றப்படுவதில்லை.
திங்கட்கிழமைகள் நீதிமன்றங்களிலும் நீதிமிக்கவை.
சட்டங்களில் நெகிழ்வேயற்றவை.
எல்லோரையும் கறாராக அணுகுகிறவை. கொண்டாட்டத்திலிருந்து, ஓய்விலிருந்து, தற்காலிக விடுவிப்பிலிருந்து பூமியில் கால்பதிக்கச் செய்பவை. வழிகாட்டுவதாகவும், எண்ணிக்கையற்ற துவக்கமாகவும் இருப்பதாக திங்கட்கிழமைகளின் இரண்டு ஏற்பாடுகளும் சொல்கின்றன.
திங்கட்கிழமைகளை இழந்தவர்கள் அச்சமடைகிறார்கள்
திங்கட்கிழமைகளில் செய்வதற்கு வேலையில்லாதவர்கள் பழைய சுரைக்காய் பெட்டிகளாக உணர்கிறார்கள் அல்லது குழந்தைகளாக இருந்தபோது பயன்படுத்திய எழுது மேசைகளாக அல்லது முன்னோர்களின் வரவுசெலவுப் புத்தகங்களாக, கணவர்களின் அல்லது மனைவிகளின் முகத்தில் எரிச்சலோடு விழிப்பவர்களாகவும்.
வீட்டுப் பெண்களின் திங்கட்கிழமைகள் மதிய உறக்கமெல்லாம் அனாதை இல்லங்களின் பிரார்த்தனைப் பாடல்களை ஒத்திருக்கிறது, அது விடுவிப்பல்ல, ஓய்வுமல்ல.
திங்கட்கிழமைகளில் மேலதிகாரிகளை அழைத்து விடுப்புக் கேட்பவர்களெல்லாம் மூச்சுக்காற்று எடைமிக்கதாக மாற்றமடைவதை உணர்கிறார்கள்

திங்கட்கிழமைகள் - பாலசுப்ரமணியன் பொன்ராஜ்


ஏசி பேருந்துகளில் குசு நாற்றத்தை முகர்வதற்கு ஒப்பானது அவர்களது நிலை
அல்லது மிகச் சரியானதை நெருங்கக்கூடிய அளவிற்கு சொன்னால்
பணமளிக்க மறுக்கும் வாடிக்கையாளனிடம் பணத்தை இறைஞ்சும் பரத்தையர் நிலை
இது கடினமாகவும் அதிகப்படியாகச் சொல்லப்பட்டதாகவும் இருந்தால்
MRI ஸ்கேன் எடுப்பவர்களின் நிலை அல்லது
நகரத் துவங்கிய இரயிலைத் தாமதமாகக் கிளம்பியவர்கள் பிடிக்கின்ற நிலை
ஆட்சியர் அலுவலகத்தில் மனுப்போடுபவர்கள், கருவூலங்களில் ஓய்வூதியத்தை எடுக்க நிற்பவர்கள், வங்கிப் பணியாளர்கள், போக்குவரத்துக் காவலர்கள்
ஒடிந்து தொங்கும் கிளை, சாம்பல் புகையெழுப்பும் சிமென்ட் ஆலைகள்,
கோப முகங்கள், வாடிய முகங்கள், அசையா திங்கட்கிழமைகள்
ஆனாலும் திங்கட்கிழமைகளில் உரம் வாங்கச் செல்பவர்கள் இருக்கிறார்கள்.
திங்கட்கிழமைகளில் விதைகள் முளைப்பதைக் காண்பவர்களும்,
மாடுகளுக்குக் காயடிப்பவர்களுமேகூட.
அவர்களுக்கு வேறு உலகம், இறந்த நட்சத்திரங்களின் பயணிக்கும் ஒளியைப் போன்றவர்கள்.
ஒரு பெருங்காற்றாவது, கண்டத் திட்டுகளின் அசைவாவது
திங்கட்கிழமைகளை நகர்த்துவதில்லை. ஒரு காவியமும் நல்ல விதத்தில் பாடியதில்லை, திங்கட்கிழமைகள்-திங்கட்கிழமைகள்-திங்கட்கிழமைகள்-
மீ திங்கட்கிழமைகள்- மீண் திங்கட்கிழமைகள்- மீண்டு திங்கட்கிழமைகள்-மீண்டும் திங்கட்கிழமைகள்.
தாழப்பறப்பவை, விலகாப் பனி(பருவத்தில்), தண்ணீர்,
அகதிகளின் துயர நிலைமை, போர் இயந்திரங்கள், கனவுகள், மரங்கள்,
புத்தகங்கள், கைவிடப்பட்ட வீடுகள், அமைதிப் பள்ளத்தாக்குகள், நாய்கள்

திங்கட்கிழமைகள் - பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

மொழி
இவையும் இவையல்லாத இவை போன்றவையும் இவை போன்றே அல்லாத வேறு சிலவும் திங்கட்கிழமைகளில் வசிப்பதில்லை, திங்கட்கிழமைகளை நாட்காட்டிகளில் காண்பதில்லை, திங்கட்கிழமைகளின் கட்டாரியை விழுங்குவதில்லை.
ஒரு பாடல் பாடப்படாதா? ஒரு துண்டு இசை இசைக்கப்படவும்?
திங்கட்கிழமைகள் கால்பந்தைப் போல உதைபடவும், பயனேயில்லாத குடல்வாலாக மாறவும், ஒருமுறையே நிகழ்ந்த ஜூலியஸ் சீசரின் மரணத்தைப் போல, டினோசர்களைப் போல, ULIP முதலீடுகளைப் போல,
திங்கட்கிழமைகள் திரும்ப வராமல்!
மறைந்த நினைவே தங்காமல்!
திங்கட்கிழமைகளில் எதுவொன்றுமே துவங்காமல் போனால்
திங்கட்கிழமைகளில் எல்லோரும் வீடுகளில் அடைந்தால்
திங்கட்கிழமைகளில் எல்லோரும் அலுவலகக் குறிப்புகளுக்குப் பதிலாக
திங்கட்கிழமைகளில் மிச்சமிருக்கும் பியர்பாட்டில் மூடிகளைத் திறந்தால்
திங்கட்கிழமைகளில் கையிலிருக்கும் பணத்தை எரித்தால்
திங்கட்கிழமைகளில் ரயில்களில் கட்டணமின்றிப் பயணித்தால்
திங்கட்கிழமைகளில் பள்ளிகளுக்குச் செல்லாமல்
திங்கட்கிழமைகளில் சீருடை அணிய மறுத்தால்
திங்கட்கிழமைகளில் ராணுவம் துப்பாக்கிகளை ஏந்தாமலிருந்தால்
திங்கட்கிழமைகளில் சூதாடினால்
திங்கட்கிழமைகளில் இசையரங்குகளில் அதிகாலை கூடினால்
திங்கட்கிழமைகளில் வங்கிகளைப் புறக்கணித்தால்
திங்கட்கிழமைகளில் மைதானத்திற்கு விரைந்தால்
திங்கட்கிழமைகளில் அரசு அலுவலகங்களுக்குப் பதிலாக
திங்கட்கிழமைகளில் முடிவெட்டப் போனால்
திங்கட்கிழமைகளில் நாளிதழ்களின் அனைத்துப் பக்கங்களையும் வாசித்தால்
திங்கட்கிழமைகளில் எழுந்து பரபரப்படைவதற்குப் பதிலாக
திங்கட்கிழமைகளில் இணைகளைப் புணரத் தலைப்பட்டால்
திங்கட்கிழமைகளில் எறும்புகளை உற்று நோக்கினால்
திங்கட்கிழமைகளில் தியானித்தால்
திங்கட்கிழமைகளில் நீண்ட பயணத்திற்கான திட்டத்தைத் தயாரித்தால்
திங்கட்கிழமைகளில் சொர்க்கக் கனவுகளைக் கண்டால்
திங்கட்கிழமைகளில் வெறுமனே
திங்கட்கிழமைகளில்
திங்கட்கிழமைகள்-திங்கட்கிழமை- திங்கட்கிழமை- திங்கட்கிழ- திங்கட்கி- திங்கட்- திங்க- திங்- தி-   -   -  -