Published:Updated:

தியானம் செய்வேன் - அ.முத்துலிங்கம்

தியானம் செய்வேன் - அ.முத்துலிங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தியானம் செய்வேன் - அ.முத்துலிங்கம்

தியானம் செய்வேன் - அ.முத்துலிங்கம்

தியானம் செய்வேன் - அ.முத்துலிங்கம்

தியானம் செய்வேன் - அ.முத்துலிங்கம்

Published:Updated:
தியானம் செய்வேன் - அ.முத்துலிங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தியானம் செய்வேன் - அ.முத்துலிங்கம்

தவு திறந்துகிடந்தது. நான் கம்பனிக்குள் நுழைந்தேன். பன்னிரு பேர் வட்டமாக நின்று ஆழ்ந்த கவனத்துடன் பேசிக்கொண்டிருந்தார்கள். சிலர், கையில் வைத்திருந்த குறிப்புப் புத்தகங்களில் எழுதிக்கொண்டிருந்தார்கள். நான் அந்த வட்டத்துக்கு நடுவில் நின்றேன். கம்பனி காவல்காரர் உள்ளே நுழைந்து, என்னை மீட்டு அழைத்து வந்து வரவேற்பறையில் உட்காரவைத்தார்.

காவல்காரர் எனக்கு விளக்கினார்.  “இங்கே காலை வேளைகளில் நடக்கும் கூட்டம் இது. கூட்டத்துக்கு அறை தேவை இல்லை. மேசை தேவை இல்லை.

15 நிமிடங்களுக்கு மேல் கூட்டம் நீடிக்காது. எல்லோரும் நின்றுதான் பேசுவார்கள்; குறிப்பெடுப்பார்கள். இடமும் சிக்கனம்; நேரமும் சிக்கனம். ஆதேசமயம், உடனுக்குடன் முடிவுகள் எடுக்கப்படும்.”

தியானம் செய்வேன் - அ.முத்துலிங்கம்

அந்த கம்பனியின் தலைமைச் செயலரை நேர்காணல் செய்யவே வந்திருந்தேன். அவருடைய பெயர் ரவி குகதாசன். கனடாவுக்குப் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர். ரொறொன்ரோ பல்கலைக் கழகத்தில் படித்து, வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றவர். வேதிப்பொருள்கள் உற்பத்திசெய்யும் ஒரு கம்பனியின் சொந்தக்காரர். 2017-ம் ஆண்டில் கனடா, தன் 150-வது பிறந்தநாளைக் கொண்டாடும் சமயத்தில் ரவி குகதாசன், தான் பயின்ற ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில் தமிழ்க் கல்வி மையம் நிறுவ, இரண்டு மில்லியன் டொலர்கள் (இந்திய ரூபாய் 10 கோடி) வழங்கியிருக்கிறார்.  புலம்பெயர்ந்த தமிழர் ஒருவர் கனடாவில் இந்தக் கொடை மூலம் சரித்திரம் படைத்திருக்கிறார்.

அவருடைய உதவியாளரான  ஒரு ரஷ்ய இளைஞர் என்னை அழைத்துச் சென்றார். சாதாரணமான அலுவலக அறை. மலிவான மரமேசை. புன்முறுவலுடன் வரவேற்றார் ரவி. மெல்லிய தாடி. பச்சை நிற சேர்ட்டின் மேலே கறுப்பு நிற அரைச்சட்டை அணிந்திருந்தார். கழுத்திலே தடித்த வெள்ளிச் சங்கிலி. கைகளிலே வெள்ளிக் காப்புகள். தமிழுக்கு  வாரி வழங்கியவருக்குத்  தமிழ் பேச வருமா என்பது தெரியவில்லை. ஆங்கிலத்திலேயே நேர்காணல் நடந்தது.

கையில் எடுத்துவந்த தமிழ் மாத இதழை அவரிடம் கொடுத்து வாசிக்கச் சொன்னேன். ‘த-ட-ம்’ என்று படித்தார். பின்னர் என் முகத்தைப் பார்த்தார். வாத்தியாரை மாணவன் பார்ப்பதுபோல இருந்தது. தொடர்ந்து ‘வி-க-ட-ன்’ என்று படித்துவிட்டு மறுபடியும் என்னைப் பார்த்தார். நான், ‘சரி!’ என்றதும் அவர் முகத்தில் ஏதோ பெரிதாகச் சாதித்துவிட்டதுபோல ஒரு புன்னகை தோன்றி அப்படியே நின்றது. பிரச்னை என்னவென்றால், இந்த இரண்டு வார்த்தைகளையும் படிக்க அவர் ஐந்து நிமிடங்கள் எடுத்துக்கொண்டார். நான் கேட்காமல் அவராகவே சொன்னார். “நான் 1974-ல் இலங்கையை விட்டு வெளியேறினேன். அப்பொழுது எனக்கு சின்ன வயது. அதன் பின்னர் நான் தமிழே படிக்கவில்லை.”

“தமிழை எழுதவோ, வாசிக்கவோ சிரமப்படுகிறீர்கள். ஆனால், தமிழ் வளர்ச்சிக்கு இரண்டு மில்லியன் டொலர்கள் அள்ளி வழங்கியிருக்கிறீர்கள். இது எப்படி நடந்தது?”

‘‘தமிழ் எழுதப் படிக்கத் தெரிவது வேறு; தமிழ் உணர்வு வேறு. அது மாறவில்லை. இன்றும் தொடர்ந்து பேசப்படும் ஒரே ஆதி மொழி தமிழ். அதன் பெருமையை நாங்கள் இன்னும் முற்றிலும் உணரவில்லை. அது அதற்கு ஒரு காலம் உண்டு. இந்தக் கொடையும் அப்படி நடந்ததுதான்.”

“இந்த நன்கொடையை நீங்கள் வழங்க, உங்களைத் தூண்டிய சம்பவம் அல்லது காரணம் ஏதாவது இருக்குமே?”

“மூன்று காரணங்களைச் சொல்லலாம். 13 வருடங்களுக்கு முன்னர் இதற்கான முதல் விதை விழுந்தது. 17, 18 வயது மதிக்கத்தக்க 10 தமிழ் இளைஞர்கள் ஒன்றுகூடி, தமிழின் எதிர்காலம் குறித்து விவாதித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் எல்லோரும், ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில் அப்போது படித்துக்கொண்டிருந்த மாணவர்கள். நான் தற்செயலாக அங்கே போனபோது அவர்களுடைய விவாதத்தைக் கேட்டேன். அந்த இளம் மாணவர்களின்  தமிழ்ப்பற்றும் ஆர்வமும் என்னைச் சிந்திக்க வைத்தன. அவர்களுக்குத் தலைவன்போலத் தோன்றிய மாணவனிடம் 10,000 டொலருக்கு  காசோலை எழுதிக்கொடுத்தேன். தமிழை முன்னெடுக்கும் உங்கள் முயற்சிக்கு நான் ஆதரவாக இருப்பேன் என்று சொன்னேன். உடனே அந்த விசயத்தை மறந்துவிட்டேன்.”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“ஏன் மறந்தீர்கள்?”

“எனக்கு ஒரு வியாதி இருக்கிறது. ADD என்று பெயர். ஒன்றைக் கவனித்து தொடர்ந்து புரிந்துகொள்ளும் திறமையில் எனக்குக் குறைபாடு உள்ளது. மனதை ஒருமுகப்படுத்த முடியாது; அது அலைந்தவாறு இருக்கும். இதைச் செய்ய வேண்டும் என்று பெரிய ஆர்வம் உண்டாகும். சில நாள்களில் அது மறைந்து, மனம் மாறி வேறு ஒன்றில் ஆர்வம் வரும். இப்படியாக, தமிழுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆரம்பகால ஆர்வம் மறைந்துவிட்டது.”

தியானம் செய்வேன் - அ.முத்துலிங்கம்“பின்னர் என்ன நடந்தது?”

“நான் வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றது 1986-ல். வேதிப்பொருள்களை உற்பத்திசெய்து விற்பதுதான் என் கம்பனியின் வேலை. என்னுடைய பழைய பேராசிரியர் மற்றும் ரொறொன்ரோ பல்கலைக்கழக நிர்வாகிகள் என்னை அடிக்கடி நிதி கேட்டு அழைப்பார்கள். கடந்த பல வருடங்களாக வேதியியல் படிப்புக்கு ஏறக்குறைய அரை மில்லியன் டொலர்கள் நன்கொடை வழங்கியிருக்கிறேன். அப்படிக் கொடுக்கும்போதெல்லாம் தமிழுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றும். ஆனால், என்ன செய்வது என்பதுதான் தெரியாது. அந்தச் சமயத்தில்தான் கனடிய நாடாளுமன்றம் தை மாதத்தை தமிழ் மரபுரிமைத் திங்களாக அறிவித்தபோது, அதைக் கொண்டாடும் விதமாக ஏதாவது தமிழுக்குச் செய்யலாம் என்று தோன்றியது. அத்துடன் கனடாவின் 150-வது பிறந்த நாளும் வந்தது. தமிழ் மையம் தொடங்குவதற்கு நன்கொடையாக இரண்டு மில்லியன் டொலர்கள் அளித்தேன்.”

தியானம் செய்வேன் - அ.முத்துலிங்கம்

“இந்த கம்பனியைத் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் எப்படி வந்தது? தொடங்கியது மட்டுமல்லாமல் அதை லாபகரமாகவும் நடத்தினீர்கள். அதுபற்றி சொல்லுங்கள்...”

“அது நீண்ட கதை...”

“பரவாயில்லை. நீண்ட கதைகள் கேட்க எனக்குப் பிடிக்கும்...”

“சிறுவயதில் இருந்தே எனக்கு பிசினஸில் ஆர்வம் உண்டு. பணம் பண்ணுவது பிரச்னையாகத் தோன்றியதே கிடையாது. நான் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில் படித்தபோது, எனக்கு 19 வயது. அப்போது நானும் நண்பனும் சேர்ந்து ஒரு திட்டம் போட்டோம். பல்கலைக்கழகத்தின் பெயர் அச்சடித்த  டீசேர்ட்டுகளை மாணவர்களுக்கு விற்பனை செய்வது என. அதுவரை, அதைப் பற்றி ஒருவருமே சிந்தித்திருக்கவில்லை. எங்களுடைய டீசேர்ட்டுகள் அமோகமாக விற்றுத்தள்ளின. கிடைத்த லாபத்தில் நான் ஒரு கார்கூட வாங்கினேன். அந்த வயதில் பல்கலைக்கழகத்தில் கார் வைத்திருந்த ஒரு சில மாணவர்களில் நானும் ஒருவன்.

என் முனைவர் பட்டப் படிப்பை முடித்த உடனேயே ஒரு பிசினஸ் தொடங்குவதுதான் என் திட்டம். ஆனால், நடந்தது வேறு.  முனைவர் படிப்பை முடிப்பதற்கு நாலு மாதங்கள் இருந்தபோது... வேதிப்பொருள்கள் தயாரிக்கும் ஒரு கம்பனியின் இயக்குநர், பெரும் செல்வந்தர்,  ஹரி ஜோர்ஜ் என்று பெயர், பல்கலைக்கழகத் தலைவரைச் சந்தித்தார். தன்னுடைய கம்பனி உற்பத்தி செய்யும் முக்கியமான பொருளில் ஒரு சிக்கல் இருக்கிறது என்றும், அதைத் தீர்த்து வைக்கும்படியும் கேட்டார். அவர் என்னுடைய பெயரைக் கொடுத்து என்னைப் போய்ப் பார்க்கச் சொல்லியிருக்கிறார். நான் மாணவன்தானே, அவர் என்னைச் சந்திக்கவில்லை. என்னுடைய பேராசிரியரைப் போய் பார்த்தார். அவரும் என் பெயரைச் சொல்லவே, வேறு வழியின்றி என்னிடம் வந்தார். நான் அவருடைய பிரச்னையைக் கேட்கவில்லை. நாலு மாதங்கள் கழித்து, நான் முனைவர் பட்டம் பெற்ற பின்னர், வந்து  பார்க்கும்படி சொன்னேன். அப்படியே எனது வழக்கம்போல, அதை மறந்தும்போனேன்.

முனைவர் பட்டத்தை நான் முடித்த பிறகு,  ஹரி ஜோர்ஜ் என்னை வந்து சந்தித்து தன் பிரச்னையைச் சொன்னார். ஒரு நாளிலேயே அதைத் தீர்த்துவைத்தேன். அவருடைய கம்பனியில் வேலைசெய்த நிபுணர்கள், அவரை ஏமாற்றிப் பணம் கறப்பதற்காகப் பிரச்னையை நீட்டிக்கொண்டே போயிருக்கிறார்கள். என்னை, தன் கம்பனியில் சேரச் சொன்னார். நான் மறுத்து, தனியாக ஒரு கம்பனியைத் தொடங்கினேன். நான் கேட்காமல் அவராகவே முழுப்பணத்தையும் என்னை நம்பி என் கம்பனியில் முதலீடு செய்தார். என்ன உற்பத்தி செய்வது என்பதைப் பற்றி அவரோ, நானோ யோசிக்கவே இல்லை. நான்தான் வேதியியல் படித்திருக்கிறேனே. எதையும் உற்பத்தி செய்யலாம் என்ற தைரியம் இருந்தது.

இரவு இரவாக வேதிப் பொருட்களின்  பட்டியலைத் தயாரித்தேன். அது ஒன்றும் பெரிய காரியம் இல்லை. ஏற்கெனவே இருந்த பட்டியல் புத்தகங்களை நகல் எடுத்தேன். ஒரு நண்பர் வீட்டு கராஜில் அவற்றை அச்சடித்துப் புத்தகங்களாக்கி, கம்பனிகளுக்கு அனுப்பிவைத்தோம். மெதுவாக வேதிப்பொருள்கள் அனுப்பாணைகள் வரத் தொடங்கின. கம்பனி, எதிர்பாராத வளர்ச்சி கண்டது. சில வருடங்களிலேயே ஒரு மில்லியன் முதலீட்டுப் பணத்தை ஹரி ஜோர்ஜிடம் திருப்பிக்கொடுத்து, கம்பனியை எனதாக்கினேன். லாபம் கொட்டியது. இந்த 30 வருடங்களில் (1986–2016), முதல் 28 வருடங்கள் பணம் பணம் என்று பறந்தேன். அதன் பின்னர்தான் என்னில் மாற்றம் ஏற்பட்டது.”

தியானம் செய்வேன் - அ.முத்துலிங்கம்“மாற்றமா?”


“ஒரு புத்தகம் படித்தேன். புத்தகத்தின் பெயர் Man’s Search for Meaning. இதை எழுதியவர் பெயர் Victor E Frankl. இவர் ஒரு யூத மனநல மருத்துவர். பல வருடங்கள் நாஜிக்களின் அவுஸ்விட்ச் கொலை முகாமில் சிறைபட்டுக் கிடந்தவர். அவர் விடுதலை பெற்ற பின்னர், அந்த அனுபவத்தை எழுதினார்.  அந்தப் புத்தகம்  25 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, 10 மில்லியன் பிரதிகள் உலகம் முழுவதும் விற்பனையாகிறது.  மனிதன் உயிர் தரிக்கும் ஆசையில் செய்யும் எல்லாவற்றையும் அதில் அவர் விவரிக்கிறார். ‘400 பேர் தங்கும் அறையில் 800 பேரை அடைத்துவைக்கிறார்கள். எல்லோருமே இறுதியில் நச்சுவாயுவினால் கொல்லப்படப் போகிறவர்களே. அப்படிஇருந்தும் திடீரென்று ஒருவர் சாகும்போது மற்றக் கைதிகள் ஊர்ந்துபோய் செத்துப்போனவரின் உடல் மேல் விழுந்து அவர் உடைகளையும், சப்பாத்துகளையும் திருடுகிறார்கள். செத்தவரின் உடம்பில் இன்னும் சூடு இருக்கும்.’ இப்படியான காட்சிகளை ஆசிரியர் வர்ணிக்கிறார்.”  

‘‘அந்தப் புத்தகம் உங்களை அடியோடு மாற்றியதா?”


‘‘இல்லை. புத்தகம் மாற்றவில்லை. ஏற்கெனவே, பல வருடங்கள் நானே அறிந்து வைத்திருந்ததை உறுதிசெய்தது. அவர் விவரிக்கும் வலிகளை எல்லாம் அனுபவித்தவன் நான்; என்னால் அவற்றை உணர முடிந்தது. என் பெற்றோர் என்னை நாலு வயதிலேயே பண்டாரவளை என்னும் இடத்தில் விடுதியில் சேர்த்துப் படிக்கவைத்தார்கள். பெற்றோரின் அன்பை நான் காணவே இல்லை. அந்தச் சின்ன வயதில், நான் எழுத்தில் கூற முடியாத துன்பங்களை அனுபவித்திருக்கிறேன். அதரவற்ற என் நிலையை இன்று நினைத்தாலும் உள்ளம் நடுங்கும்.”

‘‘நீங்கள் வேதிப்பொருள்கள் தயாரிக்கும் கம்பனியை நடத்துகிறீர்கள். இது உண்டாக்கும் அசுத்தமான வாயுக்களால்  ஏற்படும் சுற்றுச்சூழல் கேடு பற்றி யோசித்திருக்கிறீர்களா?”

‘‘நான் ஒன்று சொல்வேன். நீங்கள் நம்ப மாட்டீர்கள். நான் மணமுடித்தது ஒரு ஜேர்மன் பெண்மணியை. எங்களுக்கு இரண்டு பிள்ளைகள். ஒன்று ஆண், அடுத்தது பெண். என் மகனுக்கு ஒரு வயது நடந்தபோது அவனுடைய முதல் முடியை  காணிக்கையாகச் செலுத்துவதற்கு பிட்ஸ்பேர்க் கோயிலுக்குப் போனோம். முடிகாணிக்கை செலுத்தியபோது, எனக்கு ஒரு காட்சி தோன்றியது. அதை எப்படி வர்ணிப்பது என்று எனக்குத் தெரியவில்லை. உள்ளொளி அல்லது தரிசனம் என்று சொல்லலாம். ஏதோ ஒரு சொல் இருக்கிறது. ஆனால், எனக்குக் கிடைத்த செய்தி துல்லியமாக இருந்தது. சுற்றுச்சூழல் பற்றிய செய்திதான் அது. அதன் காரணமாக, இன்று எங்கள் தொழிற்சாலையில் பெரிய மாற்றங்களைச் செய்துவருகிறோம். இன்னும் இரண்டே வருடங்களில் எல்லாம் சரியாகிவிடும். Zero emission, அதுதான் எங்கள் இலக்கு.”

தியானம் செய்வேன் - அ.முத்துலிங்கம்

‘‘இந்த ‘உள்ளொளி’ என்று சொல்கிறீர்களே... இது உங்களுக்கு அடிக்கடி ஏற்படுமா?”

‘‘வீட்டிலோ, கம்பனியிலோ அப்படி நடந்தது நினைவில் இல்லை. ஆயிரம் மைல்கள் பயணம் போவேன், பின்னர், சில நிமிடங்களிலேயே திரும்பியிருக்கிறேன். செய்தி கிடைத்துவிடும். ஒருமுறை திருப்பதிக்குப் பயணம் செய்தேன். மூன்று நாள்கள் எடுத்தது. அங்கே பத்து நிமிடங்கள்தான் நின்றேன். தரிசனம் கிடைத்தது. எனக்குக் கிடைத்த செய்தி ‘இங்கே மெனக்கெடாதே. போ. நீ பாதியில் விட்டதைச் செய்து முடி.’ நான் திரும்பிவிட்டேன்.”

“தரிசனம் மூலம் கடவுள் உங்களுக்கு வழிகாட்டுகிறாரா?”

“நீங்கள் எப்படியும் வைத்துக்கொள்ளுங்கள். இந்தப் பிரபஞ்சத்தை சிருஷ்டித்த ஒரு மாபெரும் சக்தி இருக்கிறதல்லவா? அதை நான் நம்புகிறேன். என் வாழ்க்கையில் நான் சந்தித்த சம்பவங்கள் அனைத்தும் முன்கூட்டியே தீர்மானித்த ஒரு பாதையில்தான் நடந்திருக்கின்றன. யேசு ‘மன்னித்துவிடு’ என்றார். மன்னித்துவிடும் மனிதரிடம் அகங்காரம் இருக்காது. ‘நான்’ என்ற எண்ணம் அழிந்துவிடும். அதை அழிப்பதுதான் பிறவியின் முக்கிய நோக்கம். புத்தரும் வாழ்க்கையின் நிலையாமை பற்றித்தானே போதித்தார்.”

தியானம் செய்வேன் - அ.முத்துலிங்கம்“உங்கள் கொடைகள் எல்லாம் கல்விக்குத்தானா?”

‘‘கல்வி மிகவும் முக்கியம் என்று நினைக்கிறேன். ஆனால், அத்துடன் நிற்க வேண்டும் என நான் சொல்லவில்லை.”

“நீங்கள் வழங்கிய  நன்கொடையை பல்கலைக்கழகம் எப்படிப் பயன்படுத்துகிறது என்பதைக் கண்காணிப்பீர்களா? மேற்கொண்டு என்ன செய்வதாக உத்தேசம்?”

“கண்காணிப்பது என் வேலையல்ல. அதைப் பல்கலைக்கழகம் பார்த்துக்கொள்ளும். இது ஓர் ஆரம்பம்தான். இது முடிவு என்று எண்ணக் கூடாது. கனடாவில் புலம்பெயர்ந்த தமிழர்களிடம் அளவற்ற தமிழ்ப்பற்று உள்ளது. அவர்கள் போட்டி போட்டுக்கொண்டு என்னைத் தாண்டி நன்கொடை வழங்க வேண்டும். தமிழுக்கு நிரந்தரமான மையம் அமைந்தால், அது எத்தனை மகிழ்ச்சியான விடயம். இங்கே 3,50,000 புலம்பெயர் தமிழர்கள் வாழ்கிறார்கள். இவர்கள், ஆளுக்கு 100 டொலர் தந்தாலே, 35 மில்லியன் டொலர் திரண்டுவிடும். தமிழ்க் கல்வி கனவு நனவாகும்.  தமிழை மட்டும் பாதுகாத்தால் போதாது. இருபதுக்கும் மேலான கனடியப் பேச்சுமொழிகள் அழிவுநிலையில் உள்ளன. அவற்றையும் காப்பாற்ற வேண்டும்.”

* * *

நான் வெளியே வந்தேன். நாலு ஏக்கர் நிலப்பரப்பில் அந்தக் கம்பனியும் தொழிற்சாலையும் அமைந்திருந்தன. நிலத்தை அவர் வாங்கியபோது ஒரேயொரு மரம்தான் இருந்தது என்று சொன்னார்கள். இப்போது மரங்கள் பெருகியிருந்தன.  கம்பனியில் வேலைசெய்த அத்தனை பேரும் ஒரே அச்சில் வார்த்து எடுத்ததுபோல நட்புணர்வோடு பழகினார்கள். ஒருவர் முகத்திலும் அன்றைய வேலையை முடித்துவிட வேண்டும் என்ற பதற்றம்  கிடையாது.

“என்ன மாதிரியான வேதிப்பொருள்கள் இங்கே உற்பத்தியாகின்றன?” என்று ஓர் ஊழியரிடம் கேட்டேன். ‘கம்ப்யூட்டர் சிப்’ தயாரிக்கும் கம்பனிகளுக்கு ஒருவிதத் திரவம் தேவைப்படும். அவை மிகவும் ஆபத்தானவை. அதில் ஒரு சொட்டு கீழே விழுந்தாலும் வெடித்து பெரும் விபத்தாகிவிடும்.    அவற்றை விநியோகிப்பதும் கடினமான காரியம்.  அத்துடன் வேறு பல அபூர்வமான வேதிப்பொருள்களும் தயாரிக்கப்படுகின்றன”      என்றார்.

நான் விடைபெறும்போது தலைமைச் செயலரிடம்  கேட்ட  கேள்வியும் அவர் சொன்ன பதிலும்  நினைவுக்கு வந்தன. “நீங்கள் பல்கலைக்கழகத்துக்கு அளித்த கொடை இங்கே மட்டுமல்ல, வெளியுலகிலும் உங்களைப் பிரபலமாக்கிவிட்டது. கடந்த
51 வருடங்களில் இப்படியான கொடை ஒன்றை யாரும் வழங்கியது இல்லை என பத்திரிகைகள் எழுதுகின்றன. இந்த திடீர் புகழ் உங்களுக்குத் தொந்தரவாக இருக்குமே.  ‘நான்’ என்ற தன்முனைப்பை   அழிக்கவல்லவோ நீங்கள் பாடுபடுகிறீர்கள்?’

“நான்  பயப்படுவது அதற்குத்தான். வீடு சென்றதும் தியானம் செய்வேன்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism