Published:Updated:

அசோகமித்திரன் - புற உலகோடு மன உலகை இணைக்க முயன்ற கலைஞன்! கதை சொல்லிகளின் கதை - 30

அசோகமித்திரன் - புற உலகோடு மன உலகை இணைக்க முயன்ற கலைஞன்! கதை சொல்லிகளின் கதை - 30

அவர் இல்லாமையைப் பேசிய கலைஞன். பொருளாதாரக் காரணங்களால் வாழ்விழந்த மனிதர்களைப் பற்றிப் பேசிய கலைஞன்.

அசோகமித்திரன் - புற உலகோடு மன உலகை இணைக்க முயன்ற கலைஞன்! கதை சொல்லிகளின் கதை - 30

அவர் இல்லாமையைப் பேசிய கலைஞன். பொருளாதாரக் காரணங்களால் வாழ்விழந்த மனிதர்களைப் பற்றிப் பேசிய கலைஞன்.

Published:Updated:
அசோகமித்திரன் - புற உலகோடு மன உலகை இணைக்க முயன்ற கலைஞன்! கதை சொல்லிகளின் கதை - 30
பாகம்1- வ.வே.சு.ஐயர் பாகம்-2- ஆ.மாதவய்யா பாகம்-3- பாரதியார்
பாகம்-4-புதுமைப்பித்தன் பாகம்-5- மௌனி பாகம்-6 - கு.பா.ரா
பாகம்-7- ந.பிச்சமூர்த்தி பாகம்- 8 - பி.எஸ்.ராமையா பாகம்- 9 - தொ.மு.சி. ரகுநாதன்
பாகம் -10- அறிஞர்.அண்ணா பாகம்-11- சி.சு.செல்லப்பா    பாகம்-12- ந. சிதம்பர சுப்ரமணியன்
பாகம் - 13 - எஸ்.வி.வி பாகம்-14-  தி.ஜ.ரங்கராஜன் பாகம்- 15.1  கல்கி
பாகம்-15.2 கல்கி பாகம்- 16- ராஜாஜி பாகம்-17 -அநுத்தமா
பாகம்18.1-கு.அழகிரிசாமி பாகம் 18.2- கு.அழகிரிசாமி பாகம் 19- கிருஷ்ணன் நம்பி
பாகம்-20- ல.சா.ரா பாகம்-21 - விந்தன் பாகம்-22-  மா.அரங்கநாதன்
பாகம்-23- ஜி.நாகராஜன் பாகம்- 24-  பெண் படைப்பாளிகள் பாகம்-1 பாகம்-25 - பெண் படைப்பாளிகள் பாகம்-2
பாகம்- 26 - ஆ.மாதவன்  பாகம்-27 - ஜெயகாந்தன் பாகம்-28 - கிருத்திகா
பாகம்-29 தி.ஜானகிராமன்    

சோகமித்திரனும் நானும் தமிழ்ச் சிறுகதைகள் குறித்து உரையாட, வாஸந்தி ஒருங்கிணைக்க, அது `இந்தியா டுடே' இதழில் வெளிவந்தது. இரண்டு தலைமுறை எழுத்தாளர்கள் பேசட்டும் என அவர்கள் நினைத்திருப்பார்கள்போலும். 80-களின் முற்பகுதியில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய நாவல் அரங்கு ஒன்றில் கலந்துகொண்டு அவர் எங்களோடு நாவல் குறித்து உரையாடினார். எழுதும் மனநிலை குறித்த கேள்வி ஒன்றுக்கு அசோகமித்திரன் அப்போது சொன்ன பதில் என் மனதில் இன்றும் அழுத்தமாகப் பதிவாகியுள்ளது. ``அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. உழைப்பும் சமூக அக்கறையும் இருந்தால் எப்போது வேண்டுமானாலும் எழுதலாம்” என்று சொன்னார். எழுதுவதற்கான மகோன்னத மனநிலைகள் பற்றி அந்த நாளில் என் அந்தரங்கத்தில் நிலைபெற்றிருந்த சில கற்பிதங்களை அவரது சாதாரண வார்த்தைகள் தகர்த்தன என்றுதான் சொல்ல வேண்டும்.

அவரது சிறுகதைகளை நான் பிறகுதான் வாசிக்கத் தொடங்கினேன். `18-வது அட்சக்கோடு' நூலின் அப்பாவி நாயகனுடன் மிகவும் ஒன்றிபோய் பெரும் மனக்கிளர்ச்சியுடன் அந்த நாவலை வாசித்தேன். தண்ணீரின் ஜமுனாவுக்காக மனம் கரைந்துகொண்டிருந்தேன். கரைந்த நிழல்கள் காட்டிய நான் அறியாத உலகத்தை வியந்து வாசித்துக்கொண்டிருந்தேன். அவருடைய நாவல்களிலிருந்து சிறுகதைக்கு வந்தபோது, இது வேறு ஒரு தளத்தில் நுட்பமாக இயங்குவதைக் கண்டேன். கோவில்பட்டியிலிருந்து அப்போது வெளிவந்துகொண்டிருந்த நீலக்குயிலின் ஆசிரியர் அண்ணாமலை, எனக்கு அசோகமித்திரனின் எழுத்துகள் மீது ஈர்ப்பை ஏற்படுத்தினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அவருடைய கதை மாந்தர்கள் பெரும்பாலும் ஹைதராபாத், சென்னை ஆகிய இரு பெருநகரங்களில் வாழ்பவர்கள்தாம். அந்த நகரங்களில் வாழும் கீழ்மத்தியதர மக்களும், உழைப்பாளி வர்க்கமும்தான் அவருடைய கதை மாந்தர்கள். கிட்டத்தட்ட ஜெயகாந்தன் படைப்புகளில் புழங்கிய வெளிதான் இவருடையதும். ஜெயகாந்தன் சத்தமாகப் பேசினார். அசோகமித்திரன் ஒடுங்கிய குரலில் கதை சொன்னார்.

அவருடைய நாவல்களில் நான் சற்றும் சந்திக்காத ஒரு சிறு சலிப்பை முதன்முதலாக அவருடைய சிறுகதைகளை வாசிக்கையில் அடைந்தேன் என்பது உண்மை. தொடர்ந்து வாசிக்க வாசிக்க, அவருடைய சிறுகதைகளில் காணப்படும் `சாதாரணத் தன்மை’ மற்றும் அபூர்வமான ஓர் எளிமை, சிறுகதைகளில் எவருக்கும் சித்திக்காத ஒரு கலைநுட்பம் என்பது பிடிபட ஆரம்பித்தது.

புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, ஜெயகாந்தன் என உணர்ச்சிகரமான, பிடிப்புள்ள பாதையில் பயணித்துவிட்டு அசோகமித்திரனிடம் வந்ததால் ஏற்பட்ட ஆரம்ப அயர்ச்சி அது என்று பிறகு புரிந்துகொண்டேன்.

`இந்த பாணி. இதை என் பாணி என்று கூறிக்கொள்ள முடியுமானால், சொல்லவேண்டியதை நேரிடையாக அடைமொழிகளைப் பயன்படுத்தாமல், ஆசிரியராகச் சார்புகொள்ளாமல் எழுத முயல்வது. ஆசிரியரே தம் பாத்திரங்கள் எவருடனும் ஒன்றாமல் எழுதுவதின் ஒரு விளைவு, வாசகர்களுக்கு அப்படிப்பட்ட ஒன்றிக்கொள்ளுதல் முடியாமல்போவது. பொதுவாக வாசகர்கள், அதுவும் தமிழ் மொழி வாசகர்கள் ஏதேனும் ஒரு பாத்திரத்தில் ஒன்றிக்கொள்வதுதான் ஆரம்ப நாளிலிருந்தே வழக்கம். இந்த அம்சம்தான் திரைப்பட நடிகர்கள் பெரும் நட்சத்திரங்களாகவும் பெரும் செல்வாக்குக்கொண்டவர்களாகவும் மாறுவதற்குக் காரணம். என் கதைகள், இந்த உணர்ச்சிக்கு இடம்கொடுப்பதில்லை. இதனால் பாத்திரங்கள் எவ்வளவு பழகியவர்கள் அல்லது தெரிந்தவர்கள்போல் இருந்தாலும் வாசகர்கள் அந்தப் பாத்திரங்களிலிருந்து விலகி இருக்கவே செய்வார்கள். இப்படி விலகியிருப்பதில் பாத்திரம் அல்லது சம்பவம் பற்றி அதிக தகவல்களை அறிய சாத்தியம் உண்டு' - `பேனாவே ஊன்றுகோலானதும்’ என்கிற தலைப்பிலான கட்டுரை ஒன்றில் அசோகமித்திரன் தன் சிறுகதை பாணி குறித்துக் குறிப்பிடுகிறார்.

இவர், எல்லோரும் போன பாதையில் போகாமல் தனி வழியில் நடந்தவர். தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் தனித்துவம்மிக்கவர். `அம்ருதா' இதழுக்காக அளித்த பேட்டியில் அசோகமித்திரன் இதுபற்றி மேலும் விளக்குகிறார்.

``தமிழ்க் கதைகளுக்குள் ஆசிரியரின் குரல் உரத்து ஒலிப்பது என்பது ஒரு பாணி. நீங்கள் அதை முற்றிலும் தவிர்த்துவிட்டீர்கள். முப்பது முப்பத்தைந்து ஆண்டுகள் கழித்து இன்று அது ஒரு முக்கிய எழுத்துப் பாணியாகவே வளர்ந்திருக்கிறது. இதை எப்படிச் செய்தீர்கள்?''

``ஆசிரியரின் குரல் ஒரேயடியாக இல்லை எனக் கூற முடியாது. ஒரு குரல் இருக்கிறது. ஆனால், உங்களை வற்புறுத்தும் குரல் அல்ல. ஒரு நண்பனுக்கு யோசனை கூறுவதுபோல அந்தக் குரல் உள்ளது.''

தியாகராஜன் என்கிற இயற்பெயர்கொண்ட இவர், அசோகமித்திரனாகத் தன்னை வரித்துக்கொண்டதற்கு ஒரு கதை உண்டு. அவருடைய சிறுகதைத் தொகுப்புக்கு (காலச்சுவடு பதிப்பகம்) முன்னுரை எழுதிய மோகனரங்கன் குறிப்பிடுகிறார். ``அவர் ஜெமினியில் பணிபுரிந்தபோது, அவருடைய சக ஊழியராகவும் அவருக்கு ஆதர்சமாகவும் விளங்கியவர் என்.வி.ராஜாமணி. அவர் எழுதிய நாடகம் ஒன்றில், லட்சிய வேகம் மிகுந்த அரசன்  ஒருவன், அவனாகவே வேறு பெயரில் புரட்சியாளர் குழுவில் சேர்ந்துவிடுவான். அந்தக் குழுவினர் அரசனை யார் கொல்வது எனச் சீட்டுக் குலுக்கிப் போட்டுத் தேர்வு செய்கையில் அவன் பெயரே வந்துவிடுகிறது. அவனை அவனே கொல்ல வேண்டும். அந்தக் கதாபாத்திரத்தின் பெயர்தான் `அசோகமித்திரன்'. அந்தப் பாத்திரம்போலவே இவரும் ஓர் எழுத்தாளனாக தனது மொழியின் அடையாளத்தை மறைத்துக்கொண்டு, கதையின் பாத்திரங்கள் அவற்றின் வார்ப்புக்கேற்ப சுயேச்சையாக இயங்கவும் பேசவும்கூடிய பொதுமொழி ஒன்றை உருவாக்கிப் பயன்படுத்துகிறார் என நாம் உருவகித்துக்கொள்ளலாம். தவறில்லை.”

272 சிறுகதைகளை எழுதியுள்ள அசோகமித்திரனுக்கு, அவரது `அப்பாவின் சிநேகிதர்’ சிறுகதைத் தொகுப்புக்காகவே 1996-ம் ஆண்டில் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. 1931-ம் ஆண்டு ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள செகந்திராபாத் நகரில் பிறந்தவர். தந்தையின் மறைவுக்குப் பிறகு தனது 21-வது வயதில் சென்னையில் குடியேறினார். உருப்படியான வேலை ஏதும் கிடைக்காமல் அவதிப்பட்ட வாழ்வே அவருக்கு லபித்தது. தனக்கு ஓர் உத்தியோகம் வாங்கிக்கொள்ளத் தெரியவில்லை என்று அவர் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். ஜெமினி சினிமா கம்பெனியில் எடுபிடி வேலைகள் செய்திருக்கிறார். டிரைவராகும் முயற்சியில் ஓட்டுநர் உரிமம்கூட வாங்கி வைத்திருக்கிறார். ஒரு கட்டத்துக்குப் பிறகு முழுநேர எழுத்தாளராக வாழத் தீர்மானிக்கிறார். அதுபற்றி ஒரு நேர்காணலில் கூறுகிறார்...

``எழுத்தையே நம்பி வாழ்பவர் நீங்கள். பிரபல பத்திரிகைகளில் தொடர்கதைகள் எழுதுவது, சினிமாவுக்கு எழுதுவது போன்ற பிரயாசைகள் உங்களிடம் இல்லை. வாழ்க்கையை எப்படி நடத்தினீர்கள்?’’

``சிரமம்தான். எஸ்.எஸ்.வாசனும் என்னுடைய தகப்பனாரும் நெருங்கிய சிநேகிதர்கள். அந்த நட்பில்தான் என்னை ஜெமினி ஸ்டுடியோவுக்கு வேலைக்கு வரச்சொன்னார் வாசன். ஒருகட்டத்தில் அந்த வேலை எனக்குப் பிடிக்காமல்போனது. வெளியே வந்தால் வேறு வேலை கிடைக்கவில்லை. 30 வயதுக்கு மேற்பட்டவர்களை அப்போதெல்லாம் `அரை கிழம்' எனச் சொல்லி வேலைக்கு எடுக்க மாட்டார்கள். பத்திரிகைகளில் கதை எழுதினேன். சன்மானம் குறைவு. கஷ்டப்பட்டேன். ஆங்கிலத்தில் கட்டுரைகள் எழுதுவதில் ஓரளவுக்கு வருமானம் வந்தது. ஆனால், என் மூன்று மகன்களைப் படிக்கவைப்பதில் பெரிய சிரமம் இருக்கவில்லை. அரசுப் பள்ளிக்கூடங்கள், இனாம் பள்ளிக்கூடங்களில்தான் மூவரும் படித்தார்கள். அதேசமயம், அன்றைக்கு அங்கு நல்ல கல்வி கிடைத்தது. இன்று அதை எல்லாம் கற்பனையே செய்ய முடியாது.

``உங்கள் 60 ஆண்டு எழுத்து வாழ்க்கை, திருப்தி தருகிறதா?’’

``இதுவரைக்கும் 9 நாவல்கள், முந்நூற்றிச் சொச்ச சிறுகதைகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளேன். என்னுடைய எழுத்தின்மேல் திருப்தி இருக்கிறது. வாழ்க்கைமீது புகார்கள் கிடையாது. ஆனால், என் எழுத்தைப் படித்துவிட்டு எழுத்தாளனாகப்போகிறேன் எனச் சொல்லிக்கொண்டு யாராவது என்னைப் பார்க்க வந்தால் மட்டும், எனக்குப் பொல்லாத கோபம் வரும். `போடா மடையா... உருப்படியா ஏதாவது வேலையைத் தேடிக்கொள்’ எனக் கத்தத் தோன்றும். நான் எப்படியோ வாழ்ந்துவிட்டேன். எதிர்பார்ப்புகள் இல்லாத வாழ்க்கை. மற்றவர்களுக்கு இந்தக் கஷ்டம் வேண்டாம்.’’

யார் தமிழ்ச் சிறுகதைகளைத் தொகுத்தாலும் அதில் தவறாமல் இடம்பெறும் அசோகமித்திரனின் கதை, `புலிக் கலைஞன்’. புலி வேஷம் போடும் கலைஞனான டகர் பாயிட் காதர், ஒரு சினிமா கம்பெனியின் கதை இலாகாவில் இருக்கும் சர்மாவைப் பார்த்து ``ஏதாச்சும் வேலை கிடைக்குமா?'' எனக் கெஞ்சி நிற்கிறான். ``இப்போ ஒண்ணும் படப்பிடிப்பு இல்லை. போய்வா!'' என்று சர்மா அவனைத் திருப்பி அனுப்புகிறார். ஆனால், அவன் தன்னுடைய புலி வேஷத்தை ஒருமுறை பார்க்கும்படி வற்புறுத்துகிறான்.

``உனக்கு நீந்தத் தெரியுமா?'' என்று சர்மா கேட்டார்.

``நீச்சலா?'' என்று அந்த ஆள் திருப்பிக் கேட்டான். பிறகு, ``கொஞ்சம் கொஞ்சம் தெரியுங்க'' என்றான்.

``கொஞ்சமெல்லாம் தெரிஞ்சாப் போறாது. ஒரு ஆளு மேலேந்து ஆத்துலே பாய்ஞ்சு நீந்திப் போற மாதிரி ஒரு சீன் எடுக்கவேண்டியிருக்கும். அதுக்கு நீ போறாது.''

``எனக்கு டகர் பாயிட் வரும்ங்க. என் பேரே `டகர் பாயிட் காதர்'தானுங்க.''

``அதென்ன டகர் பாயிட்?''

``டகர் பாயிட்டுங்க. டகர்... டகர் இல்லே..?''

இப்போது எல்லாரும் கவனமாக இருந்தோம். ஒருவருக்கும் புரியவில்லை.

அவன் சொன்னான். ``புலிங்க, புலி, புலி பாயிட்.''

``ஓ... டைகர் ஃபைட்டா, டைகர் ஃபைட், நீ புலியோட சண்டைபோடுவியா?''

``இல்லீங்க. புலி வேஷம் போடுவேங்க. அதைத்தான் டகர் பாயிட்னுவாங்க இல்லீங்களா?''

``புலி வேஷக்காரனா நீ? புலி வேஷமெல்லாம் சினிமாவுக்கு எதுக்கப்பா? புலி வேஷமா... சரி, சரி. ஏதாவது சான்ஸ் இருந்தா கட்டாயம் சொல்லி அனுப்புறேன்.''

``நான் ரொம்ப நல்லா டகர் பயிட் பண்ணுவேங்க. நிஜப்புலி மாதிரியே இருக்கும்.''

``நிஜப்புலிக்கு நிஜப்புலியே கொண்டுவந்துடலாமே!''

``இல்லீங்க, நான் செய்றது அசல் புலி மாதிரியே இருக்கும். இப்ப பார்க்கிறீங்களா?''

``ஆஹாம், வேண்டாம்பா... வேண்டாம்பா!''

``சும்மா பாருங்க சார். ஐயாவெல்லாம் எங்கே புலியாட்டம் பார்த்திருப்பாங்க.''

``ஏன், ஒவ்வொரு மொகரத்துக்கோ ரம்ஜானுக்கோ தெருவுல புலி வேஷம் நிறையப்போகிறதே?''

``நம்பளது வேற மாதிரிங்க. நிஜப்புலி மாதிரியே இருக்கும்.''

அவன் எங்கிருந்தோ ஒரு புலித்தலையை எடுத்தான். அப்போதுதான் அவன் ஒரு துணிப்பையை எடுத்து வந்திருந்தது தெரிந்தது. புலித்தலை என்பது தலையின் வெளித்தோல் மட்டும். அதை அவன் ஒரு நொடியில் தன் தலையில் அணிந்துகொண்டு முகவாய்க்கட்டை அருகே அந்தப் புலித்தலை முகமூடியை இழுத்துவிட்டுக்கொண்டான். அவன் சொந்தக் கண்களோடு ஒரு சிறுத்தையின் முகம் உடையவனாக மாறினான். அறையை, ஒரு விநாடி அங்குமிங்கும் பார்த்துக்கொண்டான்.

``பேஷ்'' என்று சர்மா சொன்னார். நாங்கள் அவனையே பார்த்தவண்ணம் இருந்தோம்.

அவன் கைகளை ஒருமுறை உடம்பைத் தளர்த்திக்கொண்டான். அப்படியே குனிந்து நான்கு கால்களாக நின்று முகத்தைத் திருப்பித் திருப்பிப் பார்த்தான்.

``பேஷ்'' என்று சர்மா மீண்டும் சொன்னார்.

அவன் பூனைபோல் முதுகை மட்டும் உயர்த்தி உடலை வளைத்துச் சிலிர்த்துக்கொண்டான். பிறகு, வாயைத் திறந்தான். நாங்கள் திடுக்கிட்டோம். அவ்வளவு நெருக்கத்தில் அவ்வளவு பயங்கரமாக புலி கர்ஜனையை நாங்கள் கேட்டது கிடையாது.

அவன் மீண்டும் ஒருமுறை புலியாக கர்ஜித்து, தன் பின்பக்கத்தை மட்டும் ஆட்டினான். அப்படியே நான்கு கால்களில் அறையில் காலியாக இருந்த நாற்காலிமீது பாய்ந்து ஒடுங்கினான். நாற்காலி தடதடவென ஆடியது. நான் ``ஐயோ!'' என்றேன்.

அவன் நான்குகால் பாய்ச்சலில் என் மேஜை மீது தாவினான். கண் இமைக்கும் நேரத்தில் சர்மா மேஜை மீதும் பாய்ந்தான். சர்மா மேஜை மீதும் தாறுமாறாகப் பல காகிதங்கள், புத்தகங்கள், வெற்றிலைப் பொட்டலம் முதலியன சிதறி இருந்தன. ஒன்றின் மீதுகூட அவன் கால்கள் படவில்லை. அவன் சர்மா மேஜை மீது பதுங்கி சர்மாவைப் பார்த்து மீண்டும் ஒருமுறை குலை நடுங்கவைக்கும் முறையில் கர்ஜித்தான். அங்கிருந்து அப்படியே உயர மேலே பாய்ந்தான். நாங்கள் எல்லோரும், ``ஓ'' எனக் கத்திவிட்டோம்.

அது பழங்காலத்துக் கட்டடம். சுவர் நெடுக சுமார் பத்தடி உயரத்தில் இரண்டு அங்குலத்துக்கு விளிம்பு மாதிரி இருந்தது. ஒரு பக்கச் சுவரில் அந்த விளிம்புக்குச் சிறிது உயரத்தில் ஓர் ஒற்றைக் கம்பி போட்ட ஜன்னல் வென்டிலேட்டராக இருந்தது. அதில் ஏகமாகப் புழுதி, அழுக்கு ஒட்டடை படிந்திருந்தது.

அவன் நான்கு கால்களையும் வைத்து ஆள் உயரத்துக்கும்மேல் எகிறி எங்கள் தலைக்குமேல் அந்த ஈரங்குலச் சுவர் விளிம்பில் ஒரு கணம் தன்னைப் பொருத்திக்கொண்டான். பிறகு, கைகளால் வென்டிலேட்டர் கம்பியைப் பிடித்துக்கொண்டு மீண்டும் புலிபோல கர்ஜித்தான்.

``பத்திரம்பா... பத்திரம்பா'' என்று சர்மா கத்தினார். அந்த உயரத்தில் அவன் முகத்துக்கு நேரே கூரை மின்சார விசிறி பிசாசாகச் சுற்றிக்கொண்டிருந்தது. அவனுக்கும் அந்த விசிறிப் பட்டைகளுக்கும் நடுவே சில அங்குலங்கள்கூட இருக்காது.

அவன் அவ்வளவு உயரத்திலிருந்து அப்படியே நாற்காலி மீது தாவினான். அப்படியே எம்பித் தரையில் குதித்தான்.

நாங்கள் திகிலடங்காத அதிர்ச்சியில் இருந்தோம். சிறுத்தை முகத்தில் இருந்த அவன் கண்கள், புலிக்கண்களாக மின்னின. இன்னொரு முறை சிறுத்தை பயங்கரமாக வாயைப் பிளந்து கர்ஜித்தது. அடுத்த கணம் அவன் உடல் தளர்ந்து தொங்கியது. அவன் எழுந்து நின்றுகொண்டான்.

சர்மாவால்கூட `பேஷ்' என்று கூற முடியவில்லை. அவன் சிறுத்தை முகமூடியைக் கழற்றிவிட்டான்.

நாங்கள் எல்லோரும் பேச முடியாமல் இருந்தோம். அவன்தான் முதலில் பழைய மனிதனானான்.

``நான் கட்டாயம் ஏதாவது பார்க்கிறேம்பா'' என்று சர்மா சொன்னார். அவர் குரல் மிகவும் மாறியிருந்தது. அவன் கையைக் குவித்துக் கும்பிட்டான்.

``நீ எங்கே இருக்கே?'' என்று சர்மா கேட்டார். அவன் ``மீர்சாகிப்பேட்டை'' என்று சொல்லி, ஒரு எண், சந்தின் பெயர் சொன்னான். நான் குறித்துக்கொண்டேன். அவன் தயங்கி, ``ஆனா, எவ்வளவு நாள் அங்கே இருப்பேன்னு தெரியாதுங்க'' என்றான்.

``ஏன்?'' என்று சர்மா கேட்டார்.

``இல்லீங்க...'' என்று ஆரம்பித்தவன் சடாலென்று சர்மா காலில் விழுந்தான்.

``எழுந்திருப்பா எழுந்திருப்பா காதர்'' என்று சர்மா பதறினார். நாங்கள் எழுந்து நின்றிருந்தோம். அவனும் எழுந்து கண்களைத் துடைத்துக்கொண்டான். ``நம்ம சம்சாரம், வீட்டுப் பக்கமே வராதேன்னு சொல்லியிருக்குங்க'' என்றான். அவன்தான் சில நிமிடத்துக்கு முன்பு புலியாக இருந்தான்.

``நான் சம்பாரிச்சு எவ்வளவோ மாசமாகுதுங்க. அதுதான் என்ன பண்ணும்? நாலு குழந்தைங்க. எல்லாம் சின்னச் சின்னது'' அவன் இப்போது அழுதுகொண்டிருந்தான்.

இதற்கு மேலும் கொஞ்சம் கதை நீளும். ஆனாலும் ``அவன்தான் சில நிமிடத்துக்கு முன்பு புலியாக இருந்தான்” என்கிற புள்ளியில் நம் மனம் நிலைகுத்தி நின்றுவிடுகிறது. சாய்மானம் இல்லாமல் எழுதுவதாகச் சொன்னாலும் `புலிக்கலைஞன்’ மீது நாம் சாய்மானம்கொள்ளும்படிதான் அசோகமித்திரன் எழுதியிருக்கிறார். பசியும் பட்டினியும் அசோகமித்திரன் கதைகளில் முக்கிய இடம்பிடிக்கும் அம்சங்களாகும்.

``இன்று ஓர் இரவிலேயே சுந்தரத்துக்குத் தெரிந்து அப்பா மூன்று முறை வெளியே போயிவிட்டு வரும்படி நேர்ந்துவிட்டது. சுந்தரத்துக்கு, ஊரெல்லாம் கட்டணக் கழிப்பிடம் கட்டிவருவது கவனத்துக்கு வந்தது. அவன் சிறுவனாக இருந்தபோது அப்பாவும் அவனுமாக ஒருமுறை மவுன்ட் ரோடுக்குச் சென்றிருந்தபோது இந்த வசதிக்காக அப்பா தேடியது நினைவுக்கு வந்தது. அப்போது அண்ணாசிலை இருக்கும் இடத்தில் பூமிக்குக் கீழே படி இறங்கிச் சென்றார்கள். அந்தப் புரியாத வயதிலும் சுந்தரத்துக்கு அங்கே செல்வது பயம் எழுப்பியது. அப்போது அந்த இடத்தைப் பயன்படுத்த காசு பணம் கிடையாது. இப்போது அந்த மாதிரி இடங்களை எல்லாம் அகற்றிவிட்டார்கள். புதிதாகக் கட்டணக் கழிவறைகள், வாசலில் பட்டியல். இதற்கு பத்துக் காசு, இதற்கு பதினைந்து காசு, இதற்கு... இத்தோடு இன்னோர் அறிவிப்பையும் எழுதிவிடலாம். `காசு கொடுக்க முடியாதா? போ, ஒதுக்குப்புறமாக உள்ள சந்தையும் சுவரையும் தேடிப்போ!' இதை ஆண்கள் செய்துவிடலாம். பெண்கள்?

இந்தச் சேரிக்காரர்களிடம்தான் இதற்கெல்லாம் ஒவ்வொரு முறையும் பணம் காசு இருக்குமா? சேரியில்கூட வசிக்க முடியாமல் நடைபாதைகளிலும் தெரு ஓரங்களிலும் வாழ்க்கை நடத்துபவர்கள் என்ன செய்வார்கள்? முன்பாவது ஒருசில இடங்கள்தாம் அசிங்கமாக இருக்கும். இனி ஊரே அப்படியாகவேண்டியதுதான்.

காலையில் எழுந்தவுடன் டீ குடிப்பதற்காகச் சில நாணயங்களைப் பத்திரப்படுத்தியவர்கள் இனி காலைக்கடன்களைக் கழிப்பதற்கும் காசு தயார்செய்து கொள்ளவேண்டும். மறைவிடம் தேவைப்படும்போது அவர்களிடம் காசு இருக்க வேண்டும் அல்லது காசு இருக்கும்போது மறைவிடத்தை நாடிப் போக வேண்டும். உடல் இயக்கங்கள், கையில் இருக்கும் சில்லறைக்குத்தக்கபடி இயங்க வேண்டும். இது சாத்தியமா? இதுதான் சாத்தியமாக வேண்டுமென்றால் எவ்வளவு கொடுமை?' (1981-ம் ஆண்டில் அசோகமித்திரன் எழுதிய `தனியொருவனுக்கு' என்னும் சிறுகதையிலிருந்து...)

பல பரிமாணங்களை உடையது அவரது எழுத்து என்பதை அறிந்திருந்தாலும், வறுமையைப் பாடிய கலைஞன் என்றே அவரைக் குறிப்பிட நான் ஆசைப்படுகிறேன். வாசகனை ஈர்க்க எந்த மெனக்கெடலையும் செய்யாத இயல்பான எழுத்தின் மூலம் அடித்தட்டு மக்களின் வாழ்வையே ஒவ்வொரு கதையிலும் பேசுகிறார். எந்தத் தீர்வையும் அவர் முன்வைப்பதில்லைதான். எதை நோக்கியும் அவர் கதைகள் நம்மை அழைத்துச் செல்லவில்லைதான். ஆனாலும் அவருடைய மனிதர்கள் யார்? எளிய மனிதர்கள். நகர்ப்புற வாழ்வில் உழலும் நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் உதிரிப்பாட்டாளி வர்க்கத்தினர்.

இறுதிவரை அவர் தன் பிராமணாள் பாஷையை விடவில்லை. ``நன்னா இருக்கேளா?'' என்றுதான் கேட்பார். தான் பிராமணனாகப் பிறந்ததால் அவமதிக்கப்பட்டதாகவும் வஞ்சிக்கப்பட்டதாகவும் ஓர் உணர்வு அவருக்கு இருந்தது. அதில் ஓர் அரசியல் பார்வை அல்லது தெளிவு அவருக்கு இல்லை என்கிற விமர்சனம் அவர்மீது இருக்கிறது.

அதையும் கணக்கில்கொண்டே நான் கூற விரும்புகிறேன். அவர், இல்லாமையைப் பேசிய கலைஞன்; பொருளாதாரக் காரணங்களால் வாழ்விழந்த மனிதர்களைப் பற்றிப் பேசிய கலைஞன்; தனக்குள் பயணம் போவதாகப் பம்மாத்துப் பண்ணாமல், புற உலகோடு மன உலகங்களை இணைக்க தன் எழுத்தில் முயன்ற கலைஞன்.

தமிழ்ச் சிறுகதைக்கு வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் மிகப்பெரிய கொடைகளை நல்கியவர் அசோகமித்திரன்.

2017 மார்ச் 23 அன்று சென்னை வேளச்சேரியில் உள்ள தன் மகன் வீட்டில், 86-வது வயதில் காலமானார்!