Published:Updated:

ஜூ.வி நூலகம் - பருவநிலை மாற்றம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஜூ.வி நூலகம் - பருவநிலை மாற்றம்
ஜூ.வி நூலகம் - பருவநிலை மாற்றம்

அந்தக் காலம் மாதிரி இல்லை!

பிரீமியம் ஸ்டோரி

- என். ராமதுரை

(க்ரியா, புதிய எண் 2, பழைய எண் 25, 17-வது கிழக்குத் தெரு, காமராஜ் நகர், திருவான்மியூர், சென்னை-41. விலை: ரூ.130/-)

ஜூ.வி நூலகம் - பருவநிலை மாற்றம்

எல்லோரும் சொல்கிறோம், ‘அந்தக் காலம் மாதிரி இல்லை’ என்று. அது மனமாற்றம் மட்டுமல்ல. பருவநிலை மாற்றமும் சேர்ந்ததுதான். பருவம், அதன் பருவத்துக்கு ஏற்ற மாதிரி இருக்கவில்லை. மிகவும் மாறிக்கொண்டு இருக்கிறது; மிகவும் மோசமாக மாறிக்கொண்டு இருக்கிறது. மழைக் காலத்தில் மழையே இல்லை. அல்லது தாங்க முடியாத வெள்ளமாக மழை கொட்டித் தீர்க்கிறது. ‘அதிகாலை வெயில் உடலுக்கு நல்லது’ என்று சொல்லி வந்திருக்கிறோம். ஆனால், அடிக்கிற எந்த வெயிலும் உடலுக்கு நல்லதாகப் படவில்லை. எல்லா நேரமும் சுட்டெரிக்கிறது வெயில். வறட்சியைப் பற்றி சொல்லவே வேண்டியது இல்லை. ஓராண்டு முழுக்கவே மழை பெய்தாலும் நிலம் குளிர்ச்சி அடையாது போல. அந்த அளவுக்கு நிலத்தின் தன்மை மரத்துப் போய்விட்டது. முன்பெல்லாம் ‘அந்த ஊரில் வெயில் அதிகம்’, ‘இந்த ஊரில் மழை குறைவு’ என்று சொல்வோம். இப்போது எல்லா ஊர்களும் அப்படித்தான் இருக்கின்றன. இவை அனைத்துக்குமே பருவநிலை மாற்றம்தான் காரணம். இயற்கையை இயற்கைக்கே தெரியாமல் சிதைத்ததன் விளைவை அனுபவிக் கிறோம்; அனுபவிக்கப் போகிறோம்.

நாம் எதிர்கொள்ளப்போகும் அபாயத்தைச் சொல்லவே எழுத்தாளர் என்.ராமதுரை இந்தப் புத்தகத்தை எழுதி உள்ளார். கடந்த முப்பது ஆண்டுகளாகப் பல்வேறு இதழ்களில் அறிவியல் கட்டுரைகளை எழுதி வருபவர். அறிவியலை சாதனையாக மட்டும் பார்க்காமல், அதன் மக்கள் பயன்பாட்டையும் யோசிக்கக்கூடியவர். ‘சில சமயம் நமக்கு உடம்பு ஒரு மாதிரியாக இருப்பதாகத் தோன்றும். ஜுரம் இருப்பதாகவே தெரியாது. ஆனால் வெப்பமானியை வைத்துப் பார்த்தால் 100 டிகிரி ஜுரம் இருப்பதாகக் காட்டும்’ என்ற எளிமையான உதாரணம் சொல்கிறார் ராமதுரை. அப்படி இந்த உலகத்துக்கு வந்துள்ள காய்ச்சலைக் காட்டும் வெப்பமானியாக இந்தப் புத்தகம் இருக்கிறது.

பூமிக்கு ஜுரம் கண்டுள்ளதா, கோடையில் வாட்டிய குளிர், கரியமில வாயு நச்சு வாயுவா, எண்ணெயால் வந்த வினை, வானிலை வேறு பருவ நிலை வேறு, மிரட்டும் கடல் மூழ்கும் தீவுகள், நிலக்கரியின் ஆக்கிரமிப்பு, அதென்ன பசுமைக் குடில், காற்றின் மூலம் மின்சாரம்... என்ற தலைப்பிலான கட்டுரைகள் அனைத்துமே நிகழ்காலப் பிரச்னைகளை அறிவியல்பூர்வமாக அணுகுகின்றன. அணுசக்தியை மாற்றாக அவர் முன்வைப்பது விவாதத்துக்குரியது.

அவர் முடிவாகச் சொல்வது, கரியமில வாயு வெளிப்பாட்டைக் குறைப்பது. இது, மக்களின் கையில், அரசாங்கத்தின் கையில் இருக்கிறது. சராசரி மனிதனும் அரசாங்கமும் என்ன செய்ய வேண்டும் என்பதையும் பட்டியலிடுகிறார். காதுள்ளவர்கள் கேட்கக் கடவது!

- புத்தகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு