Published:Updated:

கதைகள் செய்யும் மாயம்!

கதைகள் செய்யும் மாயம்!
பிரீமியம் ஸ்டோரி
கதைகள் செய்யும் மாயம்!

எஸ்.ராமகிருஷ்ணன்

கதைகள் செய்யும் மாயம்!

எஸ்.ராமகிருஷ்ணன்

Published:Updated:
கதைகள் செய்யும் மாயம்!
பிரீமியம் ஸ்டோரி
கதைகள் செய்யும் மாயம்!

கோடை வெயிலுக்கு இதமாக குளிர்பானங்கள். ஐஸ்கிரீம் சாப்பிடுவது குழந்தைகளுக்குப் பிடித்தமானது. உடலைக் குளிர வைக்க, இந்தக் குளிர்பானங்கள் உதவுகின்றன. அது போல மனதைக் குளிரவைப்பதற்கு நல்ல கதைகளைப் படிக்க வேண்டும். கதைகள், நம்மை விநோதமான உலகத்துக்கு அழைத்துப்போகும் மாயக்கம்பளங்கள்.

கதைகள் செய்யும் மாயம்!

கோடைக்காலத்தில் சிறுவர்கள் வெயிலில் அலைந்துதிரியாமல், வீட்டு நிழலில் நண்பர்களுடன் அமர்ந்து விளையாடவோ, கதைபேசவோ, அரட்டை அடிக்கவோதான் விரும்புகிறார்கள். கூடி உண்பது, கூடிப் பேசுவது போலவே ஒன்றுகூடிப் படிக்கலாம்; படித்ததைப்  பகிர்ந்துகொள்ளலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கதைகள் செய்யும் மாயம்!

ஒரு நாளில் எத்தனை புத்தகம் படிக்க முடியும் என நண்பர்களுடன் போட்டிபோடலாம். படித்த புத்தகங்களைக் கதையாகச் சொல்லி விளையாடலாம். சினிமா தியேட்டருக்குப் போவது போல, ஷாப்பிங் மாலுக்குப் போவது போல, புத்தகக்கடைக்கு போய், விருப்பமான புத்தகங்களை வாங்கி வரலாம். அல்லது இணையத்திலுள்ள ஆன்லைன் புத்தகக் கடைகளில் புத்தகம் வாங்கலாம்.

கோடையை நாம் புத்தகங்களுடன் கொண்டாட வேண்டும். இரண்டு மாத விடுமுறைக்குள் குறைந்தது 20 புத்தகங்களைப் படித்துமுடித்துவிடலாம். என்ன படிப்பது... எப்படித் தேர்வு செய்வது என்பதற்கு உதவிசெய்வதற்கு ஒரு வழியிருக்கிறது.

கதைகள் செய்யும் மாயம்!

குழந்தைகளுக்காக இந்த உலகில் வெளியிடப்பட்ட எல்லா புத்தகங்களையும் படித்த தவளை ஒன்றிருக்கிறது. அதன் பெயர் டூமா. அந்தத் தவளைக்கு நாள் முழுவதும் படிப்பதுதான் வேலை. அந்தத் தவளையிடம் சுட்டிவிகடன் வாசகர்களுக்கு எட்டு புத்தகங்களைப் பரிந்துரை செய் என்றதும், அது எட்டு புத்தகங்களைச் சொன்னது.

என்னென்ன புத்தகங்கள் தெரியுமா?

கதைகள் செய்யும் மாயம்!

ஆமை காட்டிய அற்புத உலகம்

-யெஸ்.பாலபாரதி

ராமேஸ்வரத்தில் ஆறாம் வகுப்பு படிக்கும் குமார், பாண்டி, ஜான்சன், முருகன் மற்றும் அமீர் ஆகியோர், ஒருநாள் நீச்சலடிக்க கடலுக்குப் போகிறார்கள். கரையோரத்தில் மாட்டிக்கொண்ட ஓர் ஆமைக்கு உதவுகிறார்கள்.  அந்த ஆமையின் பெயர்: ஜூஜோ, தன்னைக் காப்பாற்றியதுக்கு நன்றியாக, அவர்களைக் கடலுக்குள் அழைத்துப் போகிறது ஆமை.

கடலுக்குள் திருக்கை மீன்கள், ஜெல்லி மீன்கள், கடல் குதிரைகள், ஆக்டோபஸ்கள் போன்ற கடல் நண்பர்களைச் சந்திக்கிறார்கள். சுற்றியலைந்து எப்படித் திரும்பவும் கரைக்கு வருகிறார்கள் என்பதுதான் மையக்கதை.
கடலுக்குள் நாம் போய் வர விரும்பினால், இந்தக் கதையைப் படித்தால் போதும்.

நீங்களும் படியுங்கள். கடலுக்குள் ஆமையோடு சுற்றுலா போய்வாருங்கள்.

வெளியீடு:

பாரதி புத்தகாலயம் (புக் ஃபார் சில்ரன்), 421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை- 600 018.

கதைகள் செய்யும் மாயம்!

புத்தக தேவதையின் கதை

-எஸ்.சிவதாஸ், தமிழில்: யூமா வாசுகி

 அலியா ஒரு சிறுமி, அவளுக்குக் கதை கேட்பதில் அதிக விருப்பம். அவளுடைய அப்பா அம்மா அவளுக்கு நிறையக் கதைகளைச் சொல்கிறார்கள். நல்ல புத்தகங்களை வாசிக்கத் தருகிறார்கள். அலியா ஆசை ஆசையாக புத்தகங்களைப் படிக்கிறாள். அதன்மூலம் அவளது அறிவு வளர்கிறது. ஒரு சந்தர்ப்பத்தில் அவள் புத்தகங்களைக் காப்பாற்றும் புத்தக தேவதையாக மாறுகிறாள். புத்தகங்களின் மாய சக்தி  அற்புதமானது என்பதை உணர்த்துகிறார்  இந்தக் கதையை எழுதிய பிரபல மலையாள எழுத்தாளர், பேராசிரியர் எஸ். சிவதாஸ்.

கதைகள் செய்யும் மாயம்!

வெளியீடு:

பாரதி புத்தகாலயம் (புக் ஃபார் சில்ரன்), 421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை- 600 018.

கதைகள் செய்யும் மாயம்!

சிங்கம் பறந்தபோது

ஆப்பிரிக்கக் கதைகள்

நிக் க்ரீவ்ஸ் - தமிழில்: பிரிஜிட்டா ஜெயசீலன்).

லகில், முதல் மனிதன் எவ்வாறு உருவானான், குரங்குகளுக்கு ஏன் வால் வந்தது,  முதன்முதலில் ஆறு எப்படி உருவானது. ஆடைகள் எப்படி உருவாக்கப்பட்டன, தீயைக் கண்டுபிடித்தவர் யார், வானம் எவ்வாறு மேலே சென்றது, குள்ள மனிதர்கள் ஏன் உருவானார்கள் என வியப்பூட்டும் விஷயங்களைப் பற்றிய கதைகளே இந்தத் தொகுப்பு. பெரும்பான்மைக்  கதைகள் விலங்குகளைப் பற்றியதே. விலங்குகள் குறித்த அபூர்வமான தகவல்கள், உண்மைகள் இதில் அடங்கியுள்ளன. 

கதைகள் செய்யும் மாயம்!

இந்தக் கதைகளைப் படித்து முடித்துவிட்டு, அவற்றை நாம் படம் வரைந்து ரசிக்கலாம்.

வெளியீடு:

நேஷனல் புக் டிரஸ்ட், ஏ-5, கிரீன் பார்க், புதுடில்லி - 110 016.

கதைகள் செய்யும் மாயம்!

ஈரான்

மர்ஜானே சத்ரபி -  ஒரு குழந்தைப் பருவத்தின் கதை, காமிக்ஸ் வடிவில்.

காமிக்ஸ் புத்தகங்களை விரும்புகிறவர்களுக்கு, ’மர்ஜானே சத்ரபி’யின் காமிக்ஸ் புத்தகங்களை நிச்சயம் பிடிக்கும். குறிப்பாக - ‘ஈரான் - ஒரு குழந்தைப் பருவத்தின் கதை’ என்ற இந்த காமிக்ஸ் புத்தகம், உலகப் புகழ்பெற்றது. அனிமேஷன் படமாகவும் வெளியாகியுள்ளது.

பெண்குழந்தையின் பால்ய கால வாழ்க்கையை விவரிக்கும் இந்த காமிக்ஸ், ஈரானில், பெண்கள் எவ்வாறு உரிமைகள் மறுக்கப்பட்ட அவலநிலையில் வாழ்கிறார்கள் என்பதை அடையாளம்காட்டுகிறது.

பத்து வயதான மர்ஜிதான் நாயகி. அவளது ஆசைகளையும் கனவுகளையும் இந்த காமிக்ஸ் பேசுகிறது.  இந்த காமிக்ஸ் புத்தகத்தை  12 முதல் 15 வயது வரை  உள்ளவர்கள் படிக்கலாம்.

கதைகள் செய்யும் மாயம்!வெளியீடு:

விடியல் பதிப்பகம், 11 பெரியார் நகர், மசக்காளிபாளையம் வடக்கு, கோயம்புத்தூர் - 641 015.

கதைகள் செய்யும் மாயம்!

குமாயுன் புலிகள் 
  
- ஜிம் கார்பெட் 
 
புகழ்பெற்ற புலி வேட்டைக்காரரான ஜிம் கார்பெட், இமயமலைத் தொடரில் உள்ள குமாயுன் மலையில் மனிதர்களைக் கொன்று வந்த 12 புலிகளை வேட்டையாடிக் கொன்றிருக்கிறார். புலிகளின் வாழ்க்கை முறை, அவை வேட்டையாடும் விதம், மனிதர்களை ஏன் அவை கொல்கின்றன என்பதை நேரடி அனுபவங்களின் அடிப்படையில் இந்தப் புத்தகத்தில் மிக சுவாரஸ்யமாக விவரிக்கிறார், ஜிம் கார்பெட்.

புலி வேட்டை பற்றி வாசிக்க விருப்பமுள்ளவர்களுக்கு, சுவாரஸ்யமான புத்தகம் இது.

கார்பெட்டின் துணிச்சலைப் பாராட்டி, அப்போதைய கவர்னர் ஜே.பி.ஹெவிட்டால் அவருக்கு வேட்டைத் துப்பாக்கி ஒன்றை பரிசாகத் தந்திருக்கிறார். அது, இன்றும் அவரது காப்பகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
 

கதைகள் செய்யும் மாயம்!

புலிகளும் சிறுத்தைகளும் ஆட்கொல்லியாக மாற, காடுகளில் அவற்றின் இயல்பான உணவுகள் குறைவடைதல், அவை காயமுறுதல், வயதாகி வேட்டையாடும் ஆற்றலை இழந்திருத்தல், சினைப்பட்டிருத்தல் அல்லது குட்டிகளுடன் இருத்தல் போன்ற காரணிகளை ஜிம் கார்பெட் கூறுகிறார்.

வெளியீடு:

காலச்சுவடு, 669, கே.பி.சாலை, நாகர்கோவில் - 629 001.

கதைகள் செய்யும் மாயம்!

எண்ணும் மனிதன் 

- மல்பா தஹான் (தமிழில் கயல்விழி) 

ணிதத்தைக் கதைகளாக மாற்ற முயற்சிப்பது பெரிய சவால். இந்த நூலைப் படிக்கும் ஒவ்வொருவரும், கணிதம் மீது நிச்சயம் ஆர்வம் கொள்வார்கள். கணிதத்தை நன்றாகப் புரிந்து கொள்வார்கள். கணிதம் என்பது வெறும் எண்கள் மட்டுமில்லை என்பதை ஆழமாக உணர்ந்து கொள்வார்கள்.

 மல்பா தஹான் என்ற புனைபெயரில் எழுதியவர், பிரேஸில் நாட்டின் ஜீலியோ சீசர் என்ற எழுத்தாளர். பிரேஸிலின் புகழ்பெற்ற கணிதப் பேராசியராக இருந்தவர். 60-க்கும் மேற்பட்ட கணிதம் தொடர்பான புத்தகங்களை எழுதியிருக்கிறார். 

பிரேஸில் மொழியில் 1949 -ம் ஆண்டு வெளியான இந்த நாவல், அதீத கணிதத்  திறன் படைத்த பெரமிஸ் சமீர் என்பவரின் சாதனைகளையும் சாகசப் பயணத்தையும் விவரிக்கிறது.

கதைகள் செய்யும் மாயம்!ஒவ்வொரு பறவையும் ஒரு புத்தகமே. அதனுடைய பக்கங்கள் திறந்திருக்கும் சொர்க்கம்.  கடவுளின் இந்த நூலகத்தைத் திருடவோ அல்லது அழிக்கவோ முயற்சிப்பது மிக அசிங்கமான குற்றம் என்கிறான் சமீர்.

வெளியீடு:


அகல், 342, டி.டி.கே.சாலை, ராயப்பேட்டை, சென்னை-600 014.

கதைகள் செய்யும் மாயம்!

போயிட்டு வாங்க சார்!

குட் பை மிஸ்டர் சிப்ஸ் - தமிழில்: ச.மாடசாமி,

‘ஜேம்ஸ் ஹில்டன்’ எழுதி, 1933-ல் ‘பிரிட்டிஷ் வீக்லி’ என்ற ஆங்கிலப் பத்திரிகையில் வெளியான,  ‘குட் பை மிஸ்டர் சிப்ஸ்’ என்ற நெடுங்கதையின் தமிழாக்கம். கதையின் நாயகனான சிப்ஸ், ஒரு பள்ளி ஆசிரியர். வாழ்நாள் முழுவதும் கற்றுக் கொடுப்பதில் ஆர்வம்கொண்டவர். மாணவர்களின் பேரன்பைப் பெற்றவர். ஒய்வுபெறும் நிலையுள்ள அவரது வாழ்க்கை அனுபவத்தைச் சொல்லும் அற்புதமான நூல். ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக சிப்ஸை குறிப்பிடலாம். புகழ்பெற்ற இந்த நாவல், திரைப்படமாகவும் வெளியாகியுள்ளது.

கதைகள் செய்யும் மாயம்!

வெளியீடு:

புக் ஃபார் சில்ரன், 421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை- 600 018.

கதைகள் செய்யும் மாயம்!

தாத்தாவும் பேரனும்

- ராபர்ட் டி ருவாக் (தமிழில்: வல்லிக்கண்ணன்) 


மெரிக்க இலக்கியத்தில் முக்கியமான எழுத்தாளர், ராபர்ட் ருவாக். இவர் எழுதிய, தாத்தாவும் பேரனும்  பால்ய கால நினைவுகளைப் பற்றிய உலகின் மிகச் சிறப்பான புத்தகமாகும்

ருவாக்கின் தாத்தா, கேப்டன் எட்வர்ட் ஹால் அட்ஹின்ஸ். தன் பேரன் கோடை விடுமுறையில் வீட்டில் அடைந்து கிடப்பதை விரும்பாமல், அருகில் உள்ள ஏரி, குளம், காடு, மலை எங்கும் அழைத்துச் செல்கிறார். ராபர்ட் ருவாக் தனது தாத்தாவைப் பற்றி மிக விரிவாக எழுதியுள்ளார். தாத்தா என்ன கற்றுக்கொடுத்தார், எப்படிக் கற்றுக்கொடுத்தார் என்பதே நாவலின் மையக்கதை.

தனது தாத்தா  மீன்பிடித்தலை மட்டுமல்லாமல் அதன்பின் உள்ள வாழ்க்கை உண்மைகளையும் புரியவைத்தார் என, ருவாக் பெருமையுடன் குறிப்பிடுகிறார்.

வெளியீடு: 

சந்தியா பதிப்பகம், 57, 53வது தெரு, 9வது அவென்யூ, அசோக் நகர், சென்னை - 600 083.

மேற்சொன்ன புத்தகங்களில் பெரும்பான்மை வெளிநாட்டுக்கதைகள். சிறுவர்களுக்காக நம் ஊரில், நமது எழுத்தாளர்கள் எழுதிய நிறைய நல்ல புத்தகங்கள் உள்ளன. அவற்றையும் வாங்கி, நீங்கள் வாசிக்க வேண்டும்.

1. உலகின் மிகச் சிறிய தவளை - எஸ்.ராமகிருஷ்ணன், 2. பூனையின் மனைவி - எஸ்.ராமகிருஷ்ணன்,

3.
படிக்கத் தெரிந்த சிங்கம் - எஸ். ராமகிருஷ்ணன், 4. வாத்துராஜா - விஷ்ணுபுரம் சரவணன்,

5. மாகடிகாரம் - விழியன், 6. பெனி எனும் சிறுவன் - யூமா.வாசுகி, 7. திரு.குரு ஏர்லைன்ஸ் - விழியன்,

8. ஆயிஷா - ஆயிஷா இரா.நடராசன், 9. இருட்டு எனக்குப் பிடிக்கும் - ச.தமிழ்ச்செல்வன்,

10. கதை கதையாம் காரணமாம் - வாண்டுமாமா, 11. குழந்தைப் பருவக் கதைகள் - கி.ராஜநாராயணன்,

12. சஞ்சீவி மாமா - கொ.மா.கோ.இளங்கோ, 13. மாயக்கண்ணாடி - உதயசங்கர்,

14. கனவினை பின்தொடர்ந்து - த.வே. பத்மா, ஜே. ஷாஜஹான் 15. அபாயப் பேட்டை - ரமேஷ் வைத்யா.