பிரீமியம் ஸ்டோரி

உப்பு கலந்த...

ஒவ்வொரு முறையும்
உனதன்பை
ஒளிரும் வண்ணக் காகிதம் சுற்றிய
உயர்ரகப் பரிசுப்பொருள்போலவே
என்னிடம் நீட்டுகிறாய்
எனது எதிர்பார்ப்பெல்லாம்
ஓர் ஆரம்ப வகுப்பு மாணவன்
அவசரத்தில் கிழித்த அரிச்சுவடித் தாளில்
ஊறிய ஊதா நிறம் வெளியில் தெரிய
கசியும் வியர்வையுடன்
கசங்கிய உள்ளங்கைகளில்
நீ தரப்போகும்
உப்பு கலந்த
சில நாவற்பழங்கள் மட்டுமே.

- கே.ஸ்டாலின்

தேன் சிந்தும் நேரம்...

பண்பலையில் ஒலித்துக்கொண்டிருந்தது
`சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்...' பாடல்.

கைகள் பூக்களைப் பின்ன
பாலுவோடு பாடிக்கொண்டிருந்தாள்
பூக்காரி.

அழுக்குப் பாவாடை
அண்ணனின் சட்டை
களை இழந்த முகமென
இருந்த அவள்
`கேளாய் பூ மனமே...' என
பாலு உச்சஸ்தாயியில் முடிக்கும்போது
பல்லக்கு ராணியென மாறியிருந்தாள்.

குழுமியிருந்த பூக்கள்
மறுமுறை மலர்ந்தத் தருணத்தில்
துள்ளிக் குதித்து
ராசாவின் கைகளில் முத்தமிட்டு
நாரில் வரிசையாக அமர்ந்தன.

ஒவ்வொரு பூவிலும்
ராசா சிரித்துக்கொண்டிருந்தார்.

- முத்துக்குமார் இருளப்பன்

சொல்வனம்

உளுந்தவடை ஒன்று... ஆமைவடை ஒன்று...

பாட்டி வடை சுட்டக் கதை சொல்லப்போகிறேன்.
கேட்டுக் கேட்டுச் சலித்தாலும் மறுபடியும் கேட்பீர்கள்
ஏனெனில், வடை என்றால் அதிக ப்ரியம் உங்களுக்கு.
பாட்டியின் நிலம் பேக்கரியாக மாறிய பின்
காக்கைகள் திருட்டுப் பட்டத்தை இழந்துவிட்டன.
பாட்டியின் வாழ்வு திருடுபோனதை
வியாபார வளர்ச்சி என்கிறார்கள்.
உளுந்தவடையின் முகத்தில் சாம்பார் ஊற்றுகையில்
விவசாயியின் சாயலில் தென்பட்ட மாஸ்டரை
விழியுருட்டிப் பார்த்தது கண்விழித்த உளுந்து.
ஆமைவடையின் நாவு சுடப்பட்டிருந்தது
சிறுதானியங்கள் பல வடிவம்கொண்டு
ஆங்கிலப் பெயர்களோடு
அழகழகாகக் காட்சிதருகின்றன.
சதுரவடிவ கேக்கில் படுத்திருக்கும் முயல்குட்டி
முறைத்துக்கொண்டே அசைவற்று...
புழுக்கத்துக்கு மின்விசிறியை உயிர்ப்பிக்கையில்
மரம் கொல்லப்பட்டது நினைவிருப்பதில்லை.
ஸ்நாக்ஸ் கொறித்து தேநீர் சுவைத்தபடி
நாளிதழில் கொலை, கற்பழிப்புச் செய்திகளில்
அவரவருக்கான கிருபையைப் பொழிந்துவிட்டு
அந்த நாளை அப்படியே மடித்துவைத்துவிடுகிறோம்.

- பூர்ணா

நீங்கள் உடுத்திவிடுவது யாதெனில்...

கொளுத்தும் வெயிலில் உங்களுக்கு நேர் மேலாகப்
பறந்து செல்லும் பறவையொன்று
தனது நிழலால் உங்களின் உச்சந்தலையை
வருடிச் செல்லுமெனில்
நீங்கள் இருப்பது ஒரு வனத்தினிடையில்.
உங்களின் நாற்சக்கர வாகன வேகத்தை மெதுவாக்கி
ஒரு பாம்பு பத்திரமாகச் சாலையைக் கடக்க
அவகாசம் தருவீர்களெனில்
நீங்கள் காத்திருப்பது நெளிந்தோடும் நதிக்கரையில்.
பூவில் புணரும் பட்டாம்பூச்சிகளைக் கண்டு
பறிப்பதைப் பாதியில்விடுத்து வீடு திரும்புவீர்களெனில்
எக்காலமும் உங்கள் தோட்டம்
நந்தவனம் என்றே அழைக்கப்படும்.
ஈன்ற பசுக்களின் நஞ்சுக்கொடிகள்
தொங்கும் ஆலமரத்தினடியில்
எந்தத் தயக்கமுமின்றி இளைப்பாற அமர்வீர்களெனில்
இலைகளின் அசைவில் நீங்கள் உணரக்கூடும்
நின்றபடியே மாநிலம் கடக்கும்
அடிமாடுகளின் அவஸ்தையான சுவாசத்தை.
ஆண்டின் முதல் மழை நாளில்
உடல் சீக்குக் குறித்த அச்சமின்றி
மொட்டைமாடியில் முற்றாய் நனைந்திட
குழந்தைகளை அனுமதிப்பீர்களெனில்
ஆடை களைந்த அவர்களுக்கு
நீங்கள் உடுத்திவிடுவது ஒரு பருவத்தை.

- கே.ஸ்டாலின்

கோணங்கள்...

`கடல்லேருந்து கொஞ்சம்' என்று
சொல்லியபடியே
ஒரு நீர் ஜாடியைச் சட்டென
என் மீது கவிழ்த்தாள் ஜானவி.

ஆடைகள் நனைந்தனவோ என அதிர்ச்சியுற்றேன்.
என் மீது சிப்பிகள்.

 - ராம்பிரசாத்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு