Published:Updated:

அடுத்து என்ன? - லீனா மணிமேகலை

அடுத்து என்ன? - லீனா மணிமேகலை
பிரீமியம் ஸ்டோரி
அடுத்து என்ன? - லீனா மணிமேகலை

ரேப் நேஷன்படம் : சொ.பாலசுப்பிரமணியன்

அடுத்து என்ன? - லீனா மணிமேகலை

ரேப் நேஷன்படம் : சொ.பாலசுப்பிரமணியன்

Published:Updated:
அடுத்து என்ன? - லீனா மணிமேகலை
பிரீமியம் ஸ்டோரி
அடுத்து என்ன? - லீனா மணிமேகலை

டைப்பியக்கம் என்பது படைப்பதைவிட காத்திருத்தல்தான் என்று ஆழமாக நம்புகிறேன். படைப்பின் உன்னதத் தருணங்களை அந்தக் காத்திருப்பே பெற்றுத் தருகிறது. கதாபாத்திரங்களின் இசைவுக்காக, அவர்கள் பகிரும் வாழ்க்கையின்அதிஅந்தரங்கத் துண்டுகளுக்காக, கண்களில் நிறையும் நம்பிக்கைக்காக, ஈரம்கூடிய கைப்பற்றுதலுக்காக, ஒளிக்கீற்றுகளின் சாய்வுக்காக, இதயத்தின் அடுக்குகளிலிருந்து கிளம்பும் குரலுக்காக நான் காத்திருக்கிறேன். கால தூரங்களை அந்தக் காத்திருப்பின் சுகத்தில் கடக்க முயல்கிறேன்.

2014-ல் தொடங்கிய ‘ரேப் நேஷன்’ என்ற எனது முழுநீள அபுனைவு திரைப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் இருக்கிறேன்.

“என்னை நிர்வாணப்படுத்துவதாலும், என் உடலில் மின்சார அதிர்ச்சியைக் கொடுப்பதாலும், என் உறுப்பில் கற்களையும் போத்தல்களையும் நுழைத்துத் துன்புறுத்துவதாலும்  இந்த நாட்டின் நக்ஸல் பிரச்னைகளை நீங்கள் ஒழித்துவிட முடியுமா?” என்று உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியை நோக்கிக் கேள்வி எழுப்பினார் சோனி சூரி. சத்தீஸ்கரின் பஸ்தரில் ஆரம்பப் பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றிக்கொண்டிருந்த சோனி சூரியை, நக்ஸல்பாரியின் அனுதாபி எனச் சந்தேகித்துக் கைதுசெய்த போலீஸ், அவரைச் சிறையில்வைத்து பலாத்காரம் உள்பட பல கொடுமைகளுக்கு உட்படுத்தியது. அவரின் மீதான பொய் வழக்குகள் சட்டரீதியாக முறியடிக்கப்பட்டன. என்றாலும், அவரைச் சிறையில்வைத்துச் சித்ரவதை செய்த ‘அங்கித் கர்க்’ என்ற போலீஸ் அதிகாரியின் மீது ஒரு எஃப்.ஐ.ஆர் (FIR)கூடப் பதிவுசெய்ய முடியாத சூழ்நிலைதான் இந்த நாட்டில் நிலவுகிறது. சோனி சூரியின் யுத்தம் இன்று தனக்கான நீதிகோரும் யுத்தம் மட்டுமல்ல; நக்ஸல்பாரிகளை அடக்குகிறோம் என்ற பேரில், இந்தியாவின் சிவப்பு பூமியான பஸ்தரின் ஆதிவாசிப் பெண்களுக்குக் காவல் துறை இழைத்துவரும் அத்தனை கொடுமைகளுக்கும் எதிரான யுத்தமும்கூட.

அடுத்து என்ன? - லீனா மணிமேகலை

“17 வயதுப் பெண்ணும் ஐந்து மாதக் கர்ப்பிணியுமான என் மனைவியை முஸ்லிம் என்பதாலேயே பலாத்காரம் செய்தார்கள்.கைக்குழந்தையையும் உறவினர்களையும் அவர் கண்ணுக்கு எதிரில் கொன்றுகுவித்த மத வெறியர்கள்தான் பாவிகள்; என் மனைவி அல்ல” என்ற தீர்க்கமான குரலுக்கு உரியவரான யாகூப் ரசூல், 2002-ம் ஆண்டு குஜராத் கலவரத்தின்போது தாக்கப்பட்ட ‘பில்கிஸ் பானு’வின் கணவர். சுதந்திர இந்தியாவின் வரலாற்றிலேயே ஒரு மதக்கலவரத்தின்போது நடந்த பாலியல் பலாத்காரத்துக்கான வழக்கில், 20 குற்றவாளிகளில் 13 பேருக்கு கடும்தண்டனைகளைப் பெற்றுத்தந்த வரலாறு பில்கிஸ் பானு மற்றும் அவரின் கணவர் யாகூப்பினுடையது. மோடியின் அரசாங்கத்தில் நீதி கிடைக்காது என்பதால், மும்பை நீதிமன்றத்தில் விடாது போராடி இந்த வழக்கை வென்றார்கள். காவிக்கறை படிந்திருந்தாலும், தாங்கள் வாழ்ந்த வடோதராவிலேயே துணிச்சலாக வாழ்க்கையைத் தொடரும் பால் வியாபாரியான யாகூப்பும், நான்கு குழந்தைகளுக்குத் தாயுமான பில்கிஸ் பானுவும் கொத்துக்கொலைகாரர்கள் ஆளும் இந்த நாட்டில் இன்னும் நீதி சாகவில்லை என்பதற்கான சான்றுகள்.

“ஒரு கீழ்ச்சாதிப் பெண்ணை மேல்சாதி ஆண்கள் எப்படித் தொடுவார்கள்?  தலித் பெண்ணான பன்வாரி தேவியை மானபங்கப்படுத்தினார்கள்; அதுவும், அவரின் கணவர் மற்றும் உறவினரின் கண் முன்னே இது நடந்தது என்பதை எப்படி நம்புவது?” என்று மாவட்ட நீதிமன்ற மாஜிஸ்திரேட் வழக்கைத் தள்ளுபடிசெய்ய, ராஜஸ்தானில் மனித உரிமைப் போராளிகளும், பெண்ணியச் செயல்பாட்டாளர்களும் பெரும் எழுச்சியோடு ஒன்றுசேர்ந்து போராடி, உச்ச நீதிமன்றத்தின் வாயிலாக இந்த நாட்டுக்கு ‘விசாகா’ ஜட்ஜ்மென்ட்டைப் பெற்றுத்தந்தார்கள். அவரின் நடத்தையைக் குறித்து உயர்சாதியினர், அபாண்டமான குற்றச்சாட்டுகளை வீசி, அவரை ஊரிலிருந்தே விலக்கிவைத்தனர். ஆனாலும், தனக்கு நேர்ந்த அநீதியைத் துணிச்சலாக வெளி உலகத்துக்குச் சொன்னதோடு, இறுதி வரை உறுதியாகக் களத்தில் நின்றதால்தான், பன்வாரி தேவியால் இந்திய நாட்டின் அனைத்து உழைக்கும் பெண்களின் பாதுகாப்புக்கான உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களைப் பெற்றுத்தர முடிந்தது. ‘அரசாங்க அலுவலகங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் ஒரே ஒரு பெண் வேலைசெய்தாலும்கூட, அங்கே பாலியல் வன்முறையை முறையீடு செய்வதற்கு உரிய விசாகா செல் அமைக்கப்பட வேண்டும்’ என்று விசாகா தீர்ப்பு வலியுறுத்துகிறது. சமீபத்தில், சத்யஜித் ரே திரைப்படக் கல்லூரி மாணவிகள் இந்தத் தீர்ப்பின் துணைகொண்டே தங்களிடம் பாலியல் அத்துமீறல்கள் செய்த பேராசிரியர்கள் மீது முறையிட்டு நீதி பெற்றுள்ளனர்.

இந்திய இறையாண்மையைக் காக்கும்பொருட்டு வடகிழக்கிலும், காஷ்மீரிலும் ராணுவத்துக்கு அதிகபட்ச அதிகாரங்களை வழங்கும் ‘Armed Forces Special Power Act’(AFSPA), அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண்களின் உடலைச் சூறையாடும் அதிகாரத்தையும் கூடவே வழங்கியிருக்கிறது. 2004-ல், “மாவோயிஸ்ட் என்று சந்தேகப்படுகிறோம்; விசாரிக்க வேண்டும்” என்று வீட்டிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட மனோரமா, மறுநாள் யோனி சிதைக்கப்பட்ட நிலையில் மலையடிவாரத்தில் இறந்துகிடந்தார். மணிப்பூரின் தாய்மார்கள், தங்களின் மகள்களை விட்டுவிடுமாறும், முடிந்தால் தங்களின் மேல் கைவைத்துப் பார்க்குமாறும் முழக்கமிட்டு அசாம் ரைஃபிள்ஸ் கூடாரத்துக்கு முன் நிர்வாணப் போராட்டம் நடத்தினார்கள். மணிப்பூர் வெடித்தது. அன்று இயக்கமாக ஒன்றிணைந்த தாய்மார்கள் இன்று வரை மணிப்பூரின் முக்கிய அரசியல் செயல்பாட்டாளர்களாக இயங்கிவருகிறார்கள். மணிப்பூரிலிருந்து முற்றிலுமாக ராணுவத்தை வெளியேற்றி, AFSPA-வைச் செயலிழக்கச் செய்யும் வரை ஓய மாட்டோம் என்று ஒலிக்கும் அந்தத் தாய்மார்களின் குரல், வடகிழக்கு மற்றும் காஷ்மீர் பெண்களின் ஒட்டுமொத்தக் குரலாகும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அடுத்து என்ன? - லீனா மணிமேகலை

தான் பெற்ற மகளையே வல்லுறவு செய்ததால், கண்ணூரில் ஆயுள் தண்டனை சிறைக்கைதியாக இருக்கும் ஹாரிஸ் தன் மனைவியிடமும் பிள்ளைகளிடமும் மன்னிப்புக் கேட்டு நாள்தோறும் கடிதங்களை எழுதிக்கொண்டிருக்கிறார். தன் தந்தையையே எதிர்த்துக் காவல் துறையில் முறையீடு செய்ததால், தங்கள் கிராமத்தில் தொடர்ந்து வாழ்வதற்கு வழியில்லாமல் வெளியேறி, அரசாங்கத்தின் நிர்பயா ஆதரவு இல்லத்தில் தன் தாயார் மற்றும் தங்கை தம்பிகளோடு அடைக்கலம் புகுந்தார் 16 வயதேயான ரெஹனாஸ். இன்று சட்டக் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் ரெஹனாஸ், சுயசரிதம் எழுதிக்கொண்டிருக்கிறார். படித்து முடித்துச் சட்ட வல்லுநராகி, பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் சிறுமிகளுக்காகப் பணியாற்ற வேண்டும் என்பதே அவரின் கனவு.

‘ரேப் நேஷன்’ திரைப்படத்துக்காக கடந்த மூன்றரை வருடங்களாக ரெஹனாஸின், சோனி சூரியின், பன்வாரி தேவியின், பில்கிஸ் பானுவின், மணிப்பூர் தாய்மார்களின் இயக்கத்தின் கைகளைப் பிடித்து அலைந்துகொண்டிருக்கிறேன். எல்லோரும் எல்லாமும் கைவிட்டாலும், நம்பிக்கையோடு விடாமல் போராடி நீதியை நிலைநிறுத்திக்கொண்டிருக்கும் இந்தப் பெண்களின் நிழலில்தான் எமது நாளைக்கான தரு கிளைக்க வேண்டும். பெண்ணின் உடலைத் தங்களின் அதிகாரத்துக்கான கொடிக்கம்பமாகப் பார்க்கும் சமூகமும், நாடும், குடும்பமும், கலாசாரமும், மதங்களும், சாதிகளும் தம்மை நிலைநிறுத்திக்கொள்ள பெண்ணினத்தை நூதனமாகக் காவுகேட்கின்றன. படத்தொகுப்பு வேலைகளில் இருக்கும் எனக்கு, இந்தப் பிரபஞ்சமே ஒரு மாபெரும் பலிபீடமாகக் காட்சியளிக்கிறது. என் தலையை அவ்வப்போது தொட்டுப்பார்த்துக்கொள்கிறேன். கண்ணீரும் உதிரமும் விந்துவுமாக வீச்சமடிக்கும் இந்தக் கதைகளில் என் வியர்வையையும் சேர்க்கிறேன். நிச்சயமாக எழுவேன்; எழுவோம். இந்த ஆண்டு இறுதியில் திரைக்கு வர இருக்கிறது ‘ரேப் நேஷன்.’

கடந்த சில வருடங்களாக, உலையில் கொதிக்கப்போட்டிருந்த திரைக்கதைகளில் ஒன்றுதான் அடுத்து நான் இயக்கவிருக்கும்  ‘சூரியரேகை’ (The Sunshine) என்ற முழுநீளக் கதைப்படம். 2010-ல் தாய்லாந்து துறைமுகத்திலிருந்து கிளம்பிய SunSea என்ற சரக்குக் கப்பலில் 492 ஈழத் தமிழ் அகதிகள், கனடா நோக்கிப் பயணிக்கின்றனர். பயணிகள் அவசரத்துக்கு மூத்திரம் போகக்கூட அடிப்படை வசதிகள் இல்லாத சரக்குக் கப்பலில், பசிபிக் மாக்கடலில் 40 நாள்கள் பயணம். சூறைக்காற்று, கடல் கொந்தளிப்பு, உணவுப் பற்றாக்குறை, முதலுதவி மருந்து மாத்திரைகள்கூட இல்லாத சூழல், அவ்வப்போது செயலிழக்கும் கப்பலின் இன்ஜின், எமர்ஜென்சிக்கு இருப்பில் இல்லாத ஆக்ஸிஜன் அங்கிகள் என்று எந்தச் சாதகங்களும் அற்ற பிரயாணத்தில், இன்னும் ஒரு நாள் கூடுதலாக வாழ்ந்துவிட முடியாதா என்ற மனித ஏக்கத்தின் நெடும் மூச்சுதான் ‘சூரியரேகை’. யூதப் படுகொலைகளைக் குறித்து இதுவரை 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் ஐரோப்பாவில் எடுக்கப்பட்டுவிட்டன. உலகின் பாரதூரங்களில் அகதிகளாகத் தூக்கி எறியப்பட்டிருக்கும் லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களின் பாடுகளும் ‘உயிரைப் பணயம்’ வைத்து அவர்கள் மேற்கொண்ட சாகசப் பயணங்களும் திரைப்படங்களாக உருவாக்கப்படவில்லை. இந்திய-பிரெஞ்ச்-ஜெர்மானிய-கனடிய சர்வதேச இணைத் தயாரிப்பாக உருவாகிக்கொண்டிருக்கும் சூரியரேகை, தமிழில் ஒரு முன்னோடி முயற்சி. இந்தப் படம் சாத்தியமாகும் காலகட்டம் - கோடம்பாக்கச் சந்தைக்கு விலைபோகாமல் இண்டிபெண்டென்ட் சினிமாவுக்கான கங்குகளை ஊதி ஊதி, தங்கள் கார்காலத்துக்காகக் காத்திருக்கும் படைப்பாளர்களுக்குச் சர்வதேச வாசல்களைத் திறந்துவிடும் என்று உறுதியாக நம்புகிறேன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism