Published:Updated:

மோசடிப் புத்தகம் - சு.வெங்கடேசன்

மோசடிப் புத்தகம் - சு.வெங்கடேசன்
பிரீமியம் ஸ்டோரி
மோசடிப் புத்தகம் - சு.வெங்கடேசன்

கதைகளின் கதை - 12ஓவியங்கள் : ஜி.ராமமூர்த்தி

மோசடிப் புத்தகம் - சு.வெங்கடேசன்

கதைகளின் கதை - 12ஓவியங்கள் : ஜி.ராமமூர்த்தி

Published:Updated:
மோசடிப் புத்தகம் - சு.வெங்கடேசன்
பிரீமியம் ஸ்டோரி
மோசடிப் புத்தகம் - சு.வெங்கடேசன்

மோசடி என்பது தமிழ்ச் சொல்லா? ‘ஆம்’ என்றும் ‘இல்லை’ என்றும் இருவேறு கருத்துகள் உள்ளன.  ஆனால், தமிழகத்துக்கு எல்லா வகையிலும், எல்லா துறைகளிலும் மிகப் பொருத்தமாகத் தன்னை இணைத்துக்கொள்கிற சொல் இது என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடம் இல்லை.

‘மோடிமஸ்தான் வேலை’ என்ற சொல்லில் இருக்கும் ‘மோடி’ என்பதில் இருந்துதான் ‘மோசடி’ என்ற சொல் வந்திருக்க வேண்டும் என்று சிலர் கருதுகின்றனர். இன்றைய அரசியலை  எடுத்துக்காட்டாகக்கொண்டால், இதற்கான பொருத்தப்பாடு விலகிச் செல்லாமல் இருப்பதைப் பார்க்க முடியும்.

‘ஏமாற்று’ என்னும் பொருளில் பயன்படுத்தப்படும் ‘மோசடி’ என்னும் சொல்லுக்கான விளக்கங்களாக அகராதிகள் என்ன சொல்கின்றன என்று பார்த்தால், ‘சுயலாபத்துக்காகச் செய்யும் சட்டத்துக்குப் புறம்பான ஏமாற்றுச் செயல்’ என வரையறுக்கின்றன. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, இதற்குப் பின்வரும் மூன்று மேற்கோள்களைக் காட்டுகிறது: (1) சீட்டு நிறுவனம் நடத்திப் பல லட்சம் ரூபாய் வரை மோசடி செய்தவர் கைது. (2) நிறுவனக் கணக்குகளைத் தணிக்கைசெய்தபோது, பல மோசடிகள் வெளியாகின. (3) ‘நரம்புத் தளர்ச்சியை நீக்கும்’ என்று செய்யப்படும் பல விளம்பரங்கள் மோசடியானவை.

அகராதிகள் தற்காலப்படுத்தப்படுவது போல மோசடியும் தன்னைத் தற்காலப்படுத்தியபடியே வருகிறது. காலமாற்றத்தில் சமூகத்தின் வளர்ச்சி, உற்பத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், கண்டுபிடிப்புகள் எனப் பலவற்றின் மூலம் நாம் தெரிந்துகொள்ளவும் ஒப்பிடவும் முடிவதைப்போல சமூகத்தில் நிகழும் மோசடிகள் மூலமாகவும் நாம் தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம். வளர்ச்சி அல்லது மாற்றங்களுக்கு ஏற்ப மோசடிகளும் தங்களைப் புதிதுபுதிதாக உருமாற்றம் செய்துகொள்கின்றன.

‘மோசடிகள் எத்தனை வகைப்படும்? அவை என்னென்ன? அவை குறித்த கதைகள் எப்படிப் புழக்கத்தில் இருக்கின்றன?’ என்பவற்றையெல்லாம் தொகுத்து, 100 ஆண்டுகளுக்கு முன் தமிழில் ஒரு புத்தகம் எழுதப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தின் பெயர் ‘மதிமோச விளக்கம்’.

1907-ம் ஆண்டு ‘ராஜகோபால பூபதி’ எழுதி, தானே வெளியிட்ட இந்தப் புத்தகத்தில் 121 வகையான மோசடிகளைப் பற்றி விரிவாக விளக்குகிறார். மோசடிக்காரர்களிடமிருந்து மக்கள் விழிப்புஉணர்வோடு இருந்து தங்களைக் காத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இதனை எழுதினாராம்.

ஜோசியர், கட்டுப்பிடித்துப் பார்த்தல், தென்னாட்டார் குறி சொல்லுதல், சந்நியாசிகள், நாட்டாக்கார், பொன் துண்டு மோசம், அங்காளம்மன் பிச்சை, கோயில் குளம் கைங்கர்ய யாசகம், பிராமணர்கள் யாசகம், புதையல் எடுத்தல், கழிப்பெடுத்தல், சுபகாலத் திருட்டு, அசுபகாலத் திருட்டு, பேயோட்டல், கஸ்தூரி மோசம், அரிசித் திருட்டு, கோழித் திருட்டு, புஸ்பம் வைத்துக் கேட்டல் என 121 வகை மோசடிகளைப் பட்டியலிட்டு அவை நடக்கும் விதங்களைச் சற்றே கதை வடிவில் எழுதியுள்ளார்.

மோசடிப் புத்தகம் - சு.வெங்கடேசன்

அவற்றிலிருந்து சில எடுத்துக்காட்டுகள்:

1. அர்ச்சனை திருவிளக்குத் தர்மம்

மதுரை, சிதம்பரம், ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை முதலிய ஷேத்திரங்களில் உள்ள பிராமணர்கள், சென்னை முதலிய பெரிய நகரவாசங்களுக்கு வந்து தனவந்தர்களையும் உத்தியோகஸ்தர்களையும் வர்த்தகர்களையும் கண்டு, பகவத் விஷயமாகப் பழுத்த பழம்போலப் பேசி “இன்ன முதலியார் பேரில் ஓர் அர்ச்சனையும், ஒரு நெய் தீபமும் சிதம்பர ஷேத்திரமாகிய தென்கயிலாயத்தில் நடந்துவருகிறது. தவிர, முத்தியாலுப்பேட்டை மண்டி, பாலு செட்டியார் சுமார் பதினைந்து வருஷமாக அர்ச்சனை நடத்தி வருகிறார்” என்று சிற்சில பெரிய மனுஷர்களைக் குறிப்பிட்டுச் சொல்லுவார்கள். “நமது ஆத்துமா கடைத்தேறும் பொருட்டு பகவத் விஷயத்தில் ஈடுபட வேண்டியதாகையால், தாங்களும் தங்கள் பேரால் ஓர் அர்ச்சனை ஏற்படுத்தினால் மிகவும் நன்மையாயிருக்கும். சிவாலயங்களில் நெய் தீபமிடுவதனால் உண்டாகும் பலன்கள் விசேஷமென ஆகமங்கள் முறையிடுகின்றன. சில தக்க பெரிய மனுஷாளிடம்தான், நான் ஒப்புக்கொண்டு செய்துவருகிறேன். சிலர் பணம் அனுப்பக் காலதாமதம் செய்தபோதிலும், நான் அர்ச்சனையை மாத்திரம் சில பிராமணர்களைப்போல நிறுத்திவிடுவதில்லை. கேவலம், பணத்திற்காகவா பாடுபடுகிறது? தங்களைப் போன்றவரை சத்விஷயத்தில் ஈடுபடுத்த வேண்டிய முயற்சி எடுத்துக்கொள்ள வேண்டியதாயிருக்கிறது” என்று சர்க்கரைக் கஞ்சி வார்த்துப் பக்குவப்படுத்தி, “மாதம் ஒன்றுக்கு அர்ச்சனை ஒரு ரூபாயும், நெய் தீபம் வைப்பதற்கு ஒரு ரூபாயுமாகும். தங்களுக்கு இது ஒரு லட்சியமா?” என்று மாதக் கட்டளையாக முடிவுசெய்துகொண்டு போய்விடுவார்கள். தாங்கள் அர்ச்சனை செய்வதாகவும், நெய்தீபம் வைப்பதாகவும் ஒப்பந்தம் செய்தவர்களுக்கெல்லாம் பிரதி மாதம் தவறாமல் (சென்னை வர்த்தகர்கள் மெயிலுக்கு லெட்டர் போடுவதுபோல்) இதற்காக அச்சிட்ட நோட்டீஸில் எழுத வேண்டியவற்றை எழுதி, அதனுள் கொஞ்சம் விபூதியும் குங்குமமும் வைத்துப் பாக்கி ஜாபிதாவுடன் அடியிற்கண்டபடி அனுப்புவார்கள். (நோட்டீஸை முழுமையாகப் பிரசுரித்திருக்கிறார்) மேற்படி கைங்கரியம் நடத்துகிறவர் எப்போதாவது ஒருகாலத்தில் போய் “நம்முடைய தீபம் வைக்கப்படுகிறதா?” என்று மேற்சொன்ன தீட்சிதரைக் கேட்டால், அவர் மனங்கூசாமல் அந்தக் கோயில் தீபத்தைக் காட்டுவார். திருவிளக்குத் தருமம் நடத்துகிறவர் நம் பேரால் அர்ச்சனை செய்யவில்லையே என்றால், “இம்மாதம் நம்முடைய முறையல்ல, முறைக்காரர்கள் கண்டிப்பாக அர்ச்சனை செய்துவிடுவார்கள். நம்முடைய முறையில் அவர்கள் கட்டணக்காரர்களது அர்ச்சனையை நாம் நடத்துகிறோம். அப்படியே இவர்களும் நடத்துகிறார்கள்” என்று மெழுகி வழிகூட்டி அனுப்பிவிடுவார்கள். சுவாமி பேரைச் சொல்லி காப்பு, கொலுசு, காசுமாலை முதலியவற்றை இவர்கள் செய்துகொள்வதற்காக நாம் அருமையாகத் தேடிய பொருளைச் செலவிடுவதா?

மோசடிப் புத்தகம் - சு.வெங்கடேசன்

2. நரிக்கொம்பு மோசடி

தங்களிடம் நரிக்கொம்பு இருப்பதாகவும் அது, பல விஷயங்களுக்கு உபயோகப்படும் என்றும் சொல்லுவார்கள். அவர்கள் ஏதாவது ஓர் எலும்பை கூராகச் செய்து அதைச் சுற்றிலும் நரித்தலை தோலால் பிசைந்து காயவைத்துக்கொண்டு “ஐயா எங்களிடமிருப்பது ஒரே ஒரு நரிக்கொம்புதான். அந்த நரிக்கொம்புக்கு வெள்ளிப்பூண் கட்டி, அதைச் செவ்வாய்க்கிழமைகளில் சாம்பிராணி தூபங்காட்டி, ஒரு மஞ்சள் கொம்புடன் நாலு அரிசி போட்டு எட்டு நாள் பொறுத்தெடுத்தால் எட்டரிசியாகும். இதுதான் நரிக்கொம்புச் சோதனை. இதைக் கடைகளில் வைத்திருந்தால் நல்ல வியாபாரம் நடக்கும். இதை எடுத்துக்கொண்டு போலீஸ், கோர்ட்டுகளுக்குப் போனால், கேஸ் ஜெயமாகும். பிரதி தினம் இதன் முகத்தில் விழித்தால் நல்ல லாபம் கிடைக்கும்” என்பார்கள். “நீங்கள் நரிக்கொம்புடன் வருகிறீர்களே, உங்களுக்கும் நல்ல லாபம்தானே” என்று யாராவது அவர்களைக் கேட்டால், அதற்கு அவர்கள் “நாங்கள் நரியை அடிக்கிறோம்; கொல்கிறோம்; தின்னுகிறோம் ஆகையால் எங்களுக்குப் பலிக்காது. இது சாபக்கட்டு. தவிர, நரி நகம் குழந்தைகளுக்குக் கட்டினால், காற்று கருப்பு அண்டாது” என்று பலவிதமாகப் புளுகி, ஒரு நரிக்கொம்பை ஒரு ரூபாய் முதல் ஓர் அணா வரையிலும், நரி நகத்தை ஓர் அணாவிலிருந்து காலணா வரையிலும் சமயத்துக்குத் தக்கபடி விற்பார்கள்.

நரி, தந்திரம் உள்ள ஜந்துவாதலால் அத்தந்திரமுள்ள பிராணியைப் பிடித்து ஜீவிப்பவர்களில் சாமானியர்களை எளிதில் ஏமாற்றுகின்றனர்” என்கிறார்.

3. நாடகக்காரர் படாடோப நோட்டீஸ்

இந்த நோட்டீஸில் முக்கிய அறிக்கை என்று கீழ்க்கண்டவை பிரசுரிக்கப்பட்டுள்ளன. “இந்தச் சரித்திரங்களை அநேகர் நடத்தியிருப்பினும் எமது ஆக்டர்களைப்போல ஒருவரும் நடத்தாரென்பது திண்ணம்! திண்ணம்!! திண்ணம்!!! நோட்டீஸ் படாடோபமாகப் போடவில்லை என்பதாக யோசிக்க வேண்டாம். எமது கம்பெனி எல்லாருக்கும் தெரிந்ததுதானே என்று நாங்கள் விசேஷமாக எழுதவில்லை. இந்தக் கம்பெனியானது ரங்கோனுக்குச் செல்வதாயிருந்தும் துச்சாதனன் திரெளபதியுடைய சேலைகளை அவிழ்க்கிற பாகத்தினையும் சந்திரனுக்குத் தாரை எண்ணெய் தேய்க்கிற பாகத்தையும் பார்க்க வேண்டும் என்று அவாவுற்ற பல கனவான்கள் நேரிலும் கடித மூலமாயும் கேட்டுக்கொண்ட விருப்பத்தைப் பூர்த்திசெய்யும் பொருட்டு மேல்கண்ட சரித்திரங்களை இன்று ஸ்பெஷலாக நடத்தலாயினோம். இது சமயம் தவறினால் மற்றெப்போதும் வாய்க்காதென்பதை ஸ்திரமாக நம்பி முன்னாடியே டிக்கெட் பெற்றுக்கொள்வது நலம். பிறகு, எங்கள் மேல் பழி சொல்வதில் பயனில்லை.”

மோசடிப் புத்தகம் - சு.வெங்கடேசன்

டிக்கெட்டுகளின் விவரம்:

பாக்ஸ் சீட்    2-0-0
1 - வது சேர்    1-0-0
2 – வது சேர்    0-8-0
3 – வது சேர்    0-6-0
புருஷாள் தரை    0-4-0
ஸ்த்ரீகள் சமுக்காளம்    0-4-0
ஸ்த்ரீகள் தரை    0-3-0

இந்நாடகக் கம்பெனியார் மிகவும் ஆடம்பரமாக விளம்பரப் பத்திரிகைகளை வெளியிடுவார்கள். அவர்களிலே சிலர் அந்தக் கம்பெனியின் ஆக்டர்களைப் புகழ்ந்து அடியில் வருகிற வேறு விளம்பரங்களையும் பிரசுரம் செய்வதும் உண்டு.

முக்கியக் கவனிப்பு:

ஸ்பெஷல் ஆட்டம்! ஸ்பெஷல் ஆட்டம்!

பார்சி வர்ணமெட்டமைந்த புகழ்பெற்ற கீதம்வேறு கம்பெனியாருக்கு நிகரற்ற நாடகம்இது கம்பெனி இனிமை தரும்இவர்கள் நாடகம் இந்திரனுக்கொப்பாகும்.

என்று தொடங்கும் விளம்பரம், ‘இந்நாடகத்தின் சிறப்பை மிகவும் வியந்து, இதுபோன்ற நாடகத்தைப் பார்ப்பது வாழ்வில் எவ்வளவு முக்கியமானது எனக் கூறி, நாங்கள் ரசித்துப் பார்த்த இந்நாடகத்தை மீண்டுமொரு முறை பார்க்க ஆசைப்பட்டு கேட்டுக்கொண்டதன் பேரிலே இவர்கள் இப்பொழுது அதனை நடத்துகிறார்கள். அனைவரும் கண்டுகளியுங்கள். இப்படிக்கு உண்மை விளம்பிகள்’ என்ற  விளம்பரத்தையும் செய்து மக்களை மோசடி செய்யும் விதத்தை மிக விரிவாக எழுதிச்செல்கிறார்.

4. பொங்கல் பிச்சை

போலீஸ் சேவகர், முனிசிபல் சேவகர்கள் பொங்கல் மரியாதை வந்து சேரவில்லை என்று கேட்பார்கள். சமூகத்தின் பிற பணிகளைச் செய்வோர், “நல்ல நாள் ஆகையால் தங்களைக் காண வந்தோம்” என்று பல்லை இளிப்பார்கள். என்றும் முகமறியாதவர்கள் வந்து “நாங்கள் காலமெல்லாம் அய்யாவிடம் பிழைக்கிறவர்கள், நல்ல நாளதுவும் வந்தோம்; வருஷத்துக்கு ஒரு நாள், வருகிற வருஷம் சாவோமோ, பிழைப்போமோ” என்று நய்யப்பாட்டுப் பாடுவார்கள். ஓர் அணாவுக்கு நாலு நாளானாலும் நடையாய் நடப்பார்கள்.

இவர்களன்றி, மார்கழி மாதம் விடியற்காலை பாடிவரும் கிளிப்பாட்டுக்காரன், சிறுத்தொண்டன் பாட்டுக்காரன், இதனைப் போன்ற மற்றவரும் சென்னையிலுள்ள ஒவ்வொரு பேட்டைக்கும் அம்மாதத்தின் இரண்டொரு நாள் வந்து போவார்கள். ஆனால், தாங்கள் முப்பது நாளும் தவறாது வந்தவர்களைப்போல வீடு ஒன்றுக்கு அரையணாவுக்குக் குறையாமல் கொடுக்க வேண்டும் என்பார்கள். கொடுத்தவர்கள் வீட்டில் தமது குறியாகிய கிளி, லிங்கம், வ, து, கி, முதலியவைகளில் ஒன்றை எழுதிச் சுண்ணாம்பு அடித்த சுவற்றைக் கெடுத்துவிடுவார்கள்” என்று பட்டியலிடுகிறார்.

மோசடிப் புத்தகம் - சு.வெங்கடேசன்இதில் எண்ணற்ற சமூகச் செய்திகள் உண்டு. குறிப்பாக விளிம்புநிலை மக்களின் கலை வடிவங்கள், அவற்றைப் பற்றிய விவரணைகள், அவர்களுக்கான குலக்குறிகள் என்று நுட்பமாகக் கவனிக்க வேண்டியவை உண்டென்றாலும், மிக முக்கியமாகத் திருவிழா இனாம் என்பது பொங்கலை மையப்படுத்தியே இருந்துள்ளது. தீபாவளி என்ற ஒரு பண்டிகைக்கான அடையாளங்கள் ஏதும் இல்லை.

‘நரகாசுரன் கொல்லப்பட்டான்’ என்ற வைதீகக் கதையின் பரவலாக்கம் இந்தப் புத்தகம் எழுதப்பட்ட காலத்தில் மோசடி செய்யப்படும் அளவுக்கு அறியப்பட்ட ஒன்றாக இல்லை என்பது கவனிக்கத்தக்கது. பொங்கலை மையப்படுத்தி இருந்த தமிழ்ச் சமூகத்தின் திருவிழா என்பது தீபாவளியை மையப்படுத்தியதாக மாறியதன் வரலாற்றுக்கு இது ஒரு ‘மோசடி’ச் சான்றைத் தருகிறது. 

அதேபோல, போலீஸ்காரர்களும் முனிசிபல் சேவகர்களும் திருவிழாவினை முன்னிட்டு இனாம் பெறுவதைத் தொடங்கி 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது என்ற வரலாற்றையும் இது பதிவுசெய்கிறது.

5. கள்ளுக்கடை ஆசாரம்

கள்ளுக்கடையில் இன்னின்ன சாதிக்காரனுக்கு இன்னின்ன குடுவைகள் என்று கழுவிவைத்திருப்பார்கள். அந்தக் குடுவைகளை வருகிறவருக்குத் தக்கபடி எப்படியெல்லாம் கடைக்காரன் மாற்றுகிறான் என்பதை மிக விரிவாக ஆசிரியர் எழுதுகிறார். உதாரணமாக, குறிப்பிட்ட சாதிக்காரன் மொத்தமாக வந்தால், கடையில் இருப்பதில் பாதிக் குடுவைகள் அந்தச் சாதிக்காரனின் குடுவையாகக் கணநேரத்தில் மாறிவிடுகிறது. அதேபோல இன்னொரு சாதிக்காரன் கூட்டமாக வந்தால், அவன் வந்து உட்கார்ந்த உடன் அவனுக்காக எண்ணிலடங்கா குடுவைகள் எப்படி உருவாகின்றன.  “உங்களின் குடுவை அதோ மாடத்தில் இருக்கிறது. இங்கே கீழே இருக்கிறது” என்று கடைக்காரன் செய்யும் சாமர்த்தியத்தை விரிவாக விவரிக்கிறார்.

இதில் முக்கியமாக, சாராயக்கடைகளில் எல்லா ஜாதியாருக்கும் கிளாஸ்கள்தான். கண்ணாடி டம்ளர்களுக்கும் பீங்கான் வகைகளுக்கும் எச்சில் இல்லை என்று ஆங்கிலேயர் இந்த நாட்டுக்கு வந்துசேர்ந்த சொற்ப காலத்துக்குள் சொல்லி நம்பவைத்துவிட்டதால், ‘மனுதர்ம சாஸ்திரத்தில் வரி பிளந்து எழுதியதைச் சொல்லி ஜாதி மூட்டைகளை இறக்கிவைக்க’ வலியுறுத்துகிறார்.

ஜாதிய மோசடியைப் பின்பற்றுபவர்களை நம்பவைக்க, கள்ளுக்கடைக்காரன் செய்யும் மோசடி மிக முக்கியமானதாக இருக்கிறது. மோசடிக்கு எதிராக மோசடி களம் இறக்கப்படும் காட்சியாக அது அமைகின்றது.

மோசடிப் புத்தகம் - சு.வெங்கடேசன்

6. ஜாதிப் போராட்டம்

‘ஜாதிப் போராட்டம்’ என்ற தலைப்பில் அவர் கூறியிருப்பது மிக முக்கியமான சமூகச் சான்றாக விளங்குகிறது. பூணூலுடைய சாதிகள் எவை எவை, செட்டிப்பட்டம், ஐய்யர் பட்டம், ராவ், ராயர் பட்டம், பிள்ளை பட்டம், முதலியார் பட்டம், நாயுடு பட்டம் உள்ள சாதிகள் எவை எவை என்று பட்டியல் தருகிறார். இதன் தொடர்ச்சியாக பிராமணராக விரும்பும் சாதிகள் எவை எவை, ஷத்திரியராக விரும்பும் சாதிகள் எவை எவை, வைசியராக விரும்புவோர், வேளாளராக விரும்புவோர் யார் யார் என்று சாதிவாரியாக ஒரு பட்டியலைத் தருகிறார்.

“இந்தப் பட்டப் பெயர்களினாலும் பூணூலினாலும் இன்னார்தான் உயர்ந்த ஜாதியார்கள் என்று கண்டுபிடிப்பது கஷ்டமாக இருக்கிறது. இந்தப் பட்டப்பெயர்களும், உபவீதமும், இன்னார்தான் அணிந்துகொள்ள வேண்டியதென்றும், இன்னாருக்குத்தான் இந்தப் பட்டம் உரியதென்றும் யாதொரு நிபந்தனையும் இல்லை” என்று சொல்லி கால மாற்றத்தின் பொருட்டு நிகழுகின்ற மாற்றங்களை எடுத்துவைக்கிறார்.

இவ்வாறு மோசடிகளின் வகைகளையும் நுட்பங்களையும் பற்றி பல நுண்ணிய தகவல்களைத் தருகிறார். இது ஒரு சமூகத்தின் மிக முக்கியமான சாட்சியமாக அமைகிறது. குறிப்பாக, சமூக உளவியலின் தன்மையை அறிந்துகொள்ள சிறந்ததோர் ஆவணம் என்றே இதனைச் சொல்ல வேண்டும். சமூகத்தின் குறுக்கு வழிகளைப் பற்றி அறிவது, நேர்வழியின் தன்மையையும் அதன் உறுதிப்பாட்டையும் பற்றி தெரிந்துகொள்வதற்கான சிறந்த வழிகளில் ஒன்று. புழக்கடை வழியில்தான் தலை
வாசலின் உண்மைகள் மறைந்திருக்கின்றன.

இவர் விளக்கியுள்ள மோசடிகளில் 80 சதவிகிதத்துக்கும் அதிகமானவை சாதி, மதம், சடங்கு சார்ந்தவையாக இருக்கின்றன. இவை மூன்றும் மோசடி செய்பவர்களுக்கு எப்படி இயல்பான களங்களாக இருக்கின்றன என்பதை மிகத் தெளிவான ஆதாரங்களுடன் இந்தப் புத்தகம் நிறுவுவதால், இதற்கு வேறொரு பரிமாணமும் கிடைக்கிறது. மட்டுமல்லாமல் எல்லா காலத்துக்குமான பாடங்களை அது தன்னகத்தே தாங்கியபடியும் இருக்கிறது.

மோசடி சம்பந்தமாக மிக விரிவாக எழுதப்பட்டுள்ள இந்த நூலில், லஞ்சம், ஊழல், கையூட்டு, பணம் பெற்றுக்கொண்டு காரியமாற்றல் போன்ற சொற்கள் எங்கேயும் இல்லை. இப்படி ஒரு மோசடி நடந்ததற்கான எந்தவோர் அடையாளமும் இந்த நூலில் இல்லை. 100 ஆண்டுகளில் நம் சமூகத்தில் நடந்துள்ள மாற்றங்கள் நம்மை எங்கே கொண்டுவந்துள்ளன என்பதை திரும்பிப் பார்க்கச் சொல்கிறது இந்த நூல்.

மோசடிப் புத்தகம் - சு.வெங்கடேசன்இதில் வரும் இராப்பிச்சைக்காரனும், குடுகுடுப்பைக்காரனும், கிளிஜோசியக்காரனும், நரிக்கொம்பு விற்பவனும், பகல் பூசாரியும் நம்மைப் பார்த்துச் சிரிக்கிறார்கள். “எங்களை மோசடிக்காரர்களாகச் சித்திரித்து இன்பம் கண்ட கூட்டம்தானே நீங்கள். இப்பொழுது எத்தனை எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள், மந்திரிகள், அதிகாரிகள், கான்ட்ராக்ட்காரர்கள், பன்னாட்டு கம்பெனிகள், அவற்றின் செல்வாக்குமிக்கத் தரகர்கள்,……, எங்கே இப்பொழுது எழுதுங்கள் புத்தகங்களை?” என்று கேட்பதுபோல் இருக்கிறது.

சுயநலத்துக்காகச் செய்யும் சட்டத்துக்குப் புறம்பான செயல்தான் மோசடி என்று ஒரு காலத்தில் விளக்கம் சொல்லப்பட்டது. ஆனால், இன்று அந்த விளக்கம் முழு பொருத்தப்பாடு கொண்டதாக இல்லை. சுயநலத்துக்காகச் சட்டப்படி செய்யும் செயல்களையும் மோசடி, தனக்கான விளக்கத்துக்குள் மிக எளிதாக உள்வாங்கிக்கொண்டுவிட்டது.

அது நிறுவனப்பட்டுவிட்டது. எல்லா நிறுவனங்களையும் எளிதில் விழுங்கிவிடும் ஆற்றல்கொண்டதாக மாறியிருக்கிறது. எளிய மனிதர்கள் தங்களின் வயிற்றுப்பாட்டுக்காகச் செய்யும் மோசடிகளைப் பட்டியலிடும் இந்த நூலைப் படிக்கும்போது நாம் அவமானகரமான உணர்வுக்கு உள்ளாவதைத் தவிர்க்க முடியவில்லை.

இயற்கையைச் சுரண்டுகிற, அழித்தொழிப்பையும் பேரழிவுகளையும் உயிர்ப்பலிகளையும் நிகழ்த்துகிற மோசடிகளைத் தினசரி ஊடகங்களில் பார்த்தபடி கடக்கும் நமக்கு, கோழி திருடுபவனிடம் விழிப்போடு இருப்பதற்கான உத்திகளை விலாவாரியாக எழுதிவைத்துள்ள ராஜகோபால பூபதியின் அக்கறை, பெரும் துக்கத்தைக் கடத்துகிறது.

ராஜகோபால பூபதி எதிர்காலத்தால் தோற்கடிக்கப்படவில்லை; தனது நிகழ்காலத்திலேயே அவர் வீழ்த்தப்பட்டார். 1907-ம் ஆண்டு இந்தப் புத்தகத்தின் முதல் பதிப்பு வந்துள்ளது. நல்ல வரவேற்பைப் பெற்று இரண்டு பதிப்புகள் விற்றுத்தீர்ந்த நிலையில் இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்ட விஷயங்களை வைத்தே இன்னொரு புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. தனது மூன்றாவது பதிப்பின் முன்னுரையில் அவர் கூறுகிறார், “இது மோசங்களை விளக்கும் புத்தகம். இதிலிருந்து திருடிப் பணம் பறிக்க மோசம் செய்பவர்கள் எத்தன்மையர் என்பதைக் கூறவேண்டியதில்லை. நாவன்மை, சொல்வன்மை, எழுதுந்திறமை முதலிய எதுவுமில்லாத பாவலர், நாவலர் என்ற சிலர் பிறர் கஷ்டப்பட்டு எழுதியுள்ள சில கதைகளைத் திருடியும், வகையின்றி சில பாகத்தைச் சிதைத்தும், சிலவற்றைக் குறைத்தும் எழுதுவதினால் கதைகளின் போக்கும் நடையும் கெடுவதோடு உண்மையில் கஷ்டப்பட்டு எழுதுவோருக்கு கஷ்டமும் நஷ்டமும் உண்டாகின்றன. இத்தகைய மோசக்காரர்களும் நம் நாட்டிலிருப்பதைக் கருதி வருந்துவதின்றி வேறு என் செய்வது” என்று கூறி “ஜி.செல்வபதி செட்டி அண்டு கம்பெனியாருக்கு என் புஸ்தக உரிமையை விற்று, இந்நூலை வெளியிட அனுமதியும் கொடுத்துவிட்டேன்” என்கிறார்.

121 மோசடிகளை விளக்கும் இந்தப் புத்தகமே, 122-வது மோசடியின் சான்றாக மாறியுள்ளது. மோசடியைப் பற்றி எழுதப்பட்ட முதல் நூல் மட்டுமல்ல, மோசடிக்கு இரையான முதல் நூலாகவும் இது இருக்கக்கூடும். ஒரு வகையில் அந்த மோசடி நிகழ்வும் நூலின் உள்ளடக்கத்துக்கு வலுச்சேர்க்கும் பங்களிப்பையே செய்துள்ளது. மோசடிக்கு எதிரான விழிப்புஉணர்வுக்கு மோசடிக்காரர்களும் தங்களின் பங்களிப்பைச் செய்துள்ளனர்.

ஊழலை ஒழிக்கும் முயற்சியில் அரசியல் தலைவர்கள் பலர் தங்களை இணைத்துக்கொள்வதைப்போல.

- முற்றும்