Published:Updated:

பசியைப் பாடிய கலைஞன் எம்.வி.வெங்கட்ராம் - கதை சொல்லிகளின் கதை பாகம் 31

பசியைப் பாடிய கலைஞன் எம்.வி.வெங்கட்ராம் - கதை சொல்லிகளின் கதை பாகம் 31

20-ம் நூற்றாண்டின் இணையற்ற எழுத்தாளர்களில் ஒருவர் எம்.வி.வி என்பதற்கு அவரது பைத்தியக்காரப் பிள்ளையே சான்று என்று அசோக மித்திரன் குறிப்பிட்டுள்ளார்.

பசியைப் பாடிய கலைஞன் எம்.வி.வெங்கட்ராம் - கதை சொல்லிகளின் கதை பாகம் 31

20-ம் நூற்றாண்டின் இணையற்ற எழுத்தாளர்களில் ஒருவர் எம்.வி.வி என்பதற்கு அவரது பைத்தியக்காரப் பிள்ளையே சான்று என்று அசோக மித்திரன் குறிப்பிட்டுள்ளார்.

Published:Updated:
பசியைப் பாடிய கலைஞன் எம்.வி.வெங்கட்ராம் - கதை சொல்லிகளின் கதை பாகம் 31
பாகம்1- வ.வே.சு.ஐயர் பாகம்-2- ஆ.மாதவய்யா பாகம்-3- பாரதியார்
பாகம்-4-புதுமைப்பித்தன் பாகம்-5- மௌனி பாகம்-6 - கு.பா.ரா
பாகம்-7- ந.பிச்சமூர்த்தி பாகம்- 8 - பி.எஸ்.ராமையா பாகம்- 9 - தொ.மு.சி. ரகுநாதன்
பாகம் -10- அறிஞர்.அண்ணா பாகம்-11- சி.சு.செல்லப்பா    பாகம்-12- ந. சிதம்பர சுப்ரமணியன்
பாகம் - 13 - எஸ்.வி.வி பாகம்-14-  தி.ஜ.ரங்கராஜன் பாகம்- 15.1  கல்கி
பாகம்-15.2 கல்கி பாகம்- 16- ராஜாஜி பாகம்-17 -அநுத்தமா
பாகம்18.1-கு.அழகிரிசாமி பாகம் 18.2- கு.அழகிரிசாமி பாகம் 19- கிருஷ்ணன் நம்பி
பாகம்-20- ல.சா.ரா பாகம்-21 - விந்தன் பாகம்-22-  மா.அரங்கநாதன்
பாகம்-23- ஜி.நாகராஜன் பாகம்- 24-  பெண் படைப்பாளிகள் பாகம்-1 பாகம்-25 -பெண் படைப்பாளிகள் பாகம்-2
பாகம் -26- ஆ.மாதவன் பாகம்-27 - ஜெயகாந்தன் பாகம்-28 - கிருத்திகா
பாகம்-29 - தி.ஜானகிராமன் பாகம்-30- அசோகமித்திரன்  

`விழிப்பு வந்ததும் ராஜம், தன் கண்களைக் கசக்கிக்கொண்டு எழுந்து உட்கார்ந்தான். தூக்கக்கலக்கம் இல்லாவிட்டாலும் எதையோ எதிர்பார்த்தவன்போல் கொஞ்ச நேரம் காத்திருந்தான். அவன் எதிர்பார்த்தபடி பக்கத்து வீட்டுச் சேவல் `கொக்… கொக் கொக்கோகோ...’ எனக் கூவியதும் அவனுக்குச் சிரிப்புவந்தது. `நான் கண் திறக்க வேண்டும் என்று இந்தச் சேவல் காத்திருக்கும்போல! இப்போ மணி என்ன தெரியுமா? சரியா நாலரை!’ என்று தனக்குள் சொல்லிச் சிரித்தவாறு இடுப்பு வேட்டியை இறுக்கிக் கட்டிக்கொண்டு எழுந்தான்.

காலையில் அம்மா முகத்தில் விழித்துவிடக் கூடாது என அவனுக்குக் கவலை. இருட்டில் கால்களால் துழாவியபடி இரண்டு தங்கைகளையும் தாண்டினான். அப்பால்தான் அம்மா படுத்திருந்தாள். கீழே குனியாமல் சுவிட்சைப் போட்டான். வெளிச்சம் வந்ததும் உள்ளங்கைகளைப் பார்த்துக்கொண்டான். ஆணியில் தொங்கிய கண்ணாடியை எடுத்து முகத்தைப் பார்த்துக்கொண்டான். பிறகுதான் மனசு சமாதானப்பட்டது. அது என்னவோ, அம்மா முகத்தைப் பார்த்தபடி எழுந்தால், அன்றைய பொழுது முழுவதும் சண்டையும் சச்சரவுமாகப் போகிறது!' - இப்படி ஆரம்பமாகிறது எம்.வி.வெங்கட்ராமனின் சிறுகதை ஒன்று.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`பைத்தியக்காரப் பிள்ளை’ என்பது கதையின் தலைப்பு. எம்.வி.வி எழுதிய மிக அபூர்வமான கதை இது. தறி நெசவுத்தொழில் செய்து பிழைக்கும் ஓர் ஏழைக்குடும்பத்தின் கதை. தகப்பன், குடித்துக் குடித்தே செத்துப்போனவன். பத்துப் பிள்ளைகள் பெற்ற தாய், ஒரு சண்டைக்கோழி. அவளைப் பற்றி நினைத்தாலே மூத்த மகனான ராஜத்துக்கு எரிச்சலும் பயமும் ஒருசேர வந்துவிடும்.

அவன் கவனம், தறிமேடை மீது சென்றது. இரண்டு முழம் நெய்தால் சேலை அறுக்கலாம். கடைசிச் சேலை. இன்றைக்குச் சாயங்காலம் அறுத்துவிட வேண்டும். முடியுமா? முதலாளி கூப்பிட்டு ஏதாவது வேலை சொல்லாமல் இருக்க வேண்டும். அம்மா சண்டை வளர்க்காமல் இருக்க வேண்டும். முதலாளி கூப்பிட்டால் சால்ஜாப்பு சொல்லலாம்? ஆனால், இந்த அம்மாவை எப்படி ஒதுக்குவது?

குனிந்து தைரியமாக அம்மாவைப் பார்த்தான். தூக்கத்திலேகூட உர்றென… பார்க்கச் சகிக்கவில்லை. பெற்றவளை அப்படிச் சொல்வது பாவமில்லையா? ஒன்றா... இரண்டா? ஆண் பிள்ளையில் ஐந்து, பெண் பிள்ளையில் ஐந்து. பத்தும் பிழைத்துக் கிடக்கின்றன, சேதாரம் இல்லாமல். அப்பா நெசவு வேலையில் கெட்டிக்காரர். குடித்துவிட்டு வந்து அம்மாவைத் தலை, கால் பாராமல் உதைப்பார். உதைத்துவிட்டுத் தொலைவாரா... அம்மா காலில் விழாத குறையாக இரவு முழுவதும் அழுதுகொண்டிருப்பார்.

ராஜம், வீட்டுக்கு மூத்த பிள்ளை. அப்பாவும் அம்மாவும் சண்டைபோட்டுப் போட்டு பத்துக் குழந்தைகள் பிறந்த கதை அவனுக்குத் தெரியும்.

``இவ்வளவு சண்டைபோட்டிருக்காவிட்டால் இத்தனை குழந்தைகள் வந்திருக்காது. பொண்டாட்டியை ஏன் அடிக்கணும், பிறகு அது மோவாயைப் பிடித்து ஏன் கெஞ்சணும்? அதான் எனக்குப் புரியல.''

அப்பாவால்தான் அம்மா கெட்டுப்போயிருக்க வேண்டும். ஆரம்பத்தில் அவள் அப்பாவை எதிர்த்துப் பேசுவதில்லை. அடிதாங்க முடியாமல், எதிர்த்து வாயாடத் தொடங்கினாள். உடம்பில் தெம்பு குறைந்ததும் பதிலுக்கு அடிக்கவும் கடிக்கவும் ஆரம்பித்தாள்.

அம்மாவுக்கு சோழிப்பல். உதடுகளைக் காவல் காப்பதுபோல் வெளியே நிற்கும். அப்படிக் குடிபோதையில் அவளை அடிக்கும்போது கையோ, காலோ, வாயோ, வயிறோ, பல்லில் சிக்கிய இடத்தைக் கடித்துக் குதறிவிடுவாள்.

அவளிடம் கடிபடாமல் தப்புவதற்காக அப்பா தறிமேடையைச் சுற்றிச் சுற்றி ஓடிய காட்சியை நினைத்தபோது அவனுக்குச் சிரிப்பு வந்தது. அப்பா வெளியே சென்று குடித்துவிட்டு வருவார். நாள் பூராவும் இந்தக் கேள்வியும் குடியுமாகக் கழிந்தது.

இரவு என்ன ஆயிற்று எனத் தெரியவில்லை. வீடு நாறும்படி வாந்தி எடுத்தார். பிறகு, ரத்தமாய்க் கக்கிவிட்டு மயங்கிப் படுத்தவர், பெண்களுக்கு மணம் செய்துவைக்கிற சிரமத்தைத் தட்டிக் கழித்துவிட்டுப் போய்ச் சேர்ந்தார்.

அப்புறம், எல்லாம் அம்மா பொறுப்பு!

அம்மா பொறுப்பு என்றால், அவள் பிரமாதமாய் என்ன சாதித்துவிட்டாள்? குழந்தைகளை வாட்டிவதக்கி வேலை வாங்கி வயிற்றை நிரப்பிக்கொள்கிறாள். வயிற்றில் கொட்டிக்கொள்வதைத் தவிர அவளுக்கு வேறொன்றும் தெரியாது.

எவ்வளவு ஜாக்கிரதையாகச் சத்தமில்லாமல் அவன் எழுந்து பல்துலக்கிவிட்டு காபி குடிக்கக் கடைக்குக் கிளம்பினாலும் புறப்படும் நேரத்தில் அம்மா விழித்துக்கொண்டாள். காபி குடித்துவிட்டு தனக்கு தோசையும் ஒரு டம்ளர் நிறைய சாம்பாரும் வாங்கி வரச் சொல்கிறாள். இவன் ``காசு கொடுத்தால் வாங்கி வருகிறேன்'' என்று சொல்கிறான். சண்டை ஆரம்பமாகிவிடுகிறது.

அவளுக்கு முன்னால் நின்று பேச்சுக்கொடுக்க முடியாது என்று ராஜத்துக்குப் புரிந்தது. அவனே ஒரு எவர்சில்வர் டம்ளரை எடுத்துக்கொண்டு ஹோட்டலுக்குப் புறப்பட்டான்.

அவன் பேசாமல் கிளம்பிய பிறகு அம்மா விடவில்லை. ``எனக்காக நீ ஒண்ணும் வாங்கிட்டுவராதே. வாங்கிட்டு வந்தா சாக்கடையிலே கொட்டுவேன்.”

அவன் பதில் பேசாமல் புறப்பட்டான். ஒரு விநாடி தயங்கி நின்றான். அம்மாவைப் பிடித்து இழுத்து, தலை முடியை உலுக்கிக் கன்னங்களில் மாறி மாறி அறைந்து, முகத்திலும் முதுகிலும் குத்தி, ``விட்டுட்றா, விட்டுட்றா, இனிமே நான் உன் வழிக்கு வரலை. நீ பங்கஜத்தைக் கட்டிண்டு சுகமாயிரு. என்னை விட்டுடு'' என்று கதறக் கதற உதைத்துச் சக்கையாக மூலையில் எறிந்துவிடலாமா என்ற ஒரு கேள்வி காட்சியாகக் கண்களுக்கு முன்னால் வந்தபோது அவன் மனசுக்கு சௌகரியமாயிருந்தது. `அப்பா அடிக்கும்போது வலி தாங்க முடியாமல் அவரைக் கடிக்கப் பாய்வாளே, அப்படிக் கடிக்க வருவாளோ? வரட்டுமே... என்னிடம் பலிக்காது; பல்லைத் தட்டிக் கையில் தருவேன்’ என்று மனத்துக்குள் கறுவிக்கொண்டான்.

ஒரு விநாடிக்குமேல் இந்த மனசுகம் நீடிக்கவில்லை. அம்மா தாடகை; பல்லைவிட அவள் சொல்லுக்குக் கூர் அதிகம். அவன் கை ஓங்கும்போதே அவள், `கொலை... கொலை...’ என்று சத்தம்போட ஆரம்பிப்பாள். ஐந்து குடிகள் இருக்கும் வீடு, இருபது பேராவது இருப்பார்கள். எல்லாரும் எழுந்து ஓடிவந்துவிடுவார்கள். அவனைத்தான் கண்டிப்பார்கள்.

அம்மாவை ஜெயிக்க முடியாது.

அவன் பேசாமல் நடந்தான்.

``அவன் வாங்கி வந்த சாம்பாரை சாக்கடையில் கொட்டு'' என்று கத்துகிறாள் அம்மா. அவன் தங்கை குள்ளியை அழைத்து தறிக்குப் போகிறான்.

குள்ளிக்கு ஒன்பது வயசு இருக்கும். கடைக்குட்டி. அண்ணன் வருகையை எதிர்ப்பார்த்துக் காத்திருந்தாள். ராஜம் மாடத்தில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தான். மணி 5:30.

அம்மா சளைக்கவில்லை. ``நீ வாங்கிட்டு வந்ததை நான் ஏண்டா தொடுறேன்? உன் பொண்டாட்டிகிட்ட கொண்டுபோய்க் கொடு!”

``ஊர்ப் பொண்ணுங்களைப் பற்றி இப்படிப் பேசினா... நல்லா இருக்காது!”

``நல்லா இல்லான்னா என்ன ஆகிடும்? ரெண்டு இட்லி வாங்கிட்டு வாடான்னா, எவ்வளவு பேச்சு பேசுறே? நாய்ங்கிறே; குரங்குங்கிறே. பெத்தவளுக்கு வாங்கித் தரணும்னா காசு கிடைக்கலை. வரப்போறவளுக்கு ஜரிகைச் சேலை, தாம்புக்கயிறு சங்கிலி, பவுன் தாலி எல்லாம் செஞ்சு பெட்டியிலே பூட்டிவெச்சியிருக்கியே. எனக்குத் தெரியாதுன்னா நினைச்சே? அதுக்கெல்லாம் எங்கேருந்து பணம் வருது?”

எதிர்வீட்டுப் பெண் பங்கஜத்தை ராஜம் கல்யாணம் கட்டிக்கொள்ளப்போகிறான். அம்மாவுக்குத் தெரியாமல் முதலாளியை வைத்துப் பேசி முடிவுசெய்துவிட்டதில் அம்மாவுக்கு ஆத்திரம். யாருக்கும் தெரியாமல் அவன் தன் கல்யாணத்துக்காகப் பட்டுச்சேலை, தாலி, நூறு ரூபாய் பணம் எல்லாம் சேமித்து ரகசியமாகப் பெட்டியில் பூட்டிவைத்திருக்கிறான். கள்ளச்சாவி போட்டு அம்மா பெட்டியைத் திறந்து பார்த்திருக்கிறாள். அந்த நூறு ரூபாய் மீது அம்மாவுக்குக் கண் இப்போது.

வேலை நடந்துகொண்டிருக்கும்போது அம்மா புதிய திட்டத்துடன் மகள் குள்ளியை அழைக்கிறாள்.

``நீ இனிமே இந்தத் தறிக்குப் போக வேண்டாம். புதுத்தெரு சென்னப்பன் நூறு ரூபா பணம் தர்றேன்னான். பழையது கொட்டிக்கிட்டு அங்கே போ.”

குள்ளியாலே அந்த அநியாயத்தைப் பொறுக்க முடியவில்லை. ``அண்ணன் தறியிலே இன்னும் ஒண்ணேமுக்கால் முழம் இருக்கு. முதலாளி அவசரமா சேலை வேணும்னு…”

``அதெல்லாம் உன்னை யார் கேட்டா? பேசாம பழையது கொட்டிக்கிட்டுத் தொலை!” என்னும்போது குள்ளியின் தலையில் நறுக்கென ஒரு குட்டு விழுந்தது.

எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த ராஜம், தறிமேடையைவிட்டுக் கீழே இறங்கினான்.

``ஏண்டி, என்ன சொல்றே..?”

``புதுத்தெரு சென்னப்பன் குள்ளிக்கு நூறு ரூபா முன் பணம் தர்றேன்னான். அவளை அங்கே போகச் சொன்னேன்.”

கரை கோத்துக் கொடுக்கும் சிறுவர் சிறுமிகளுக்கு இப்போது நல்ல கிராக்கி. ஐம்பதும் நூறும் முன்பணம் தந்து நெசவாளர்கள் அவர்களை வேலைக்கு அமர்த்திக்கொள்கிறார்கள். அம்மாவுக்கு இந்த விஷயம் தெரியும்.

``அவளை அங்கே அனுப்பிவிட்டா நான் என்ன செய்றது?”

``நீ வேறே ஆளைப் பார்த்துக்கோ. குள்ளிதான் வேணும்னா நூறு ரூபா முன் பணம் கொடு.”

ராஜத்துக்கு அவளுடைய தந்திரம் புரிந்தது. களவாணித்தனமாய்ப் பெட்டியைத் திறந்துபார்த்தாளா? பெட்டியில் தாலி, சேலை செயினோடு நூறு ரூபா பணம் இருப்பதைக் கண்டுவிட்டாள். அந்தப் பணத்தைப் பறிக்கத்தான் இந்தக் குறுக்குவழியில் போகிறாள்.

ராஜத்துக்கு மனம் வெறுத்துப்போகிறது.

பெற்றவளுக்கு இவ்வளவு கெட்ட மனசு இருக்குமா? ராட்சசி, ராட்சசி!

அப்பா இருந்தவரை எலிக்குஞ்சுபோல இருந்தவள், அப்பா போனவுடனே பெருச்சாளிபோல் ஆகிவிட்டாள். பிள்ளைகளும் பெண்களும் சம்பாதித்துப் போடப் போட இவளுக்குச் சதை கூடிக்கொண்டேபோகிறது. ஏன் கூடாது? தறிவேலை செய்து கொடுக்கக்கூட இவளுக்கு உடம்பு வளைவதில்லை; கூலி வாங்கிக்கொண்டு அவனிடமே பாதி வேலை வாங்கிவிடுகிறாள். நாள் முழுவதும் கொறிக்கிற கொழுப்புதான் இவளை இப்படியெல்லாம் பேசவைக்கிறது, செய்யவைக்கிறது. இந்தத் திமிரை ஒடுக்க வேண்டும். அப்பா செத்தபோது ஊருக்காக ஒப்பாரிவைத்தாள். இவள் உடம்பு கரைய ஒப்பாரிவைத்துக் கதறிக் கதறி அழவேண்டும்.

``நீயே எடுத்துக்கோ, இந்தா!” என அவன் ஆணியில் தொங்கிக்கொண்டிருந்த பெட்டிச் சாவியை அவளிடம் எறிந்தான். சட்டையை மாட்டிக்கொண்டான். கண்ணாடியில் முகம் பார்த்து பவுடர் போட்டுக்கொண்டான். கிராப்பை ஒழுங்கு செய்துகொண்டான். அவனுடைய வாயிலிருந்து வெளிவந்த சொற்கள் செத்து அழுகி வெளிவருவதாகவும் நாறுவதாகவும் அவனுக்குத் தோன்றியது.

``பெட்டியிலே நூறு ரூபா இருக்கு. எடுத்துக்கோ, சேலை கட்டிக்கோ, செயின் போட்டுக்கோ, போ… போ…”

அவளிடம் பேசுவதற்குத் தன்னிடம் சொற்களே இல்லை, எல்லாம் தீர்ந்துவிட்டன என்று அவனுக்குப் புரிந்தது. அவன் பதில் பேசாமல் கீழே குனிந்தவாறு நடந்தவன் தயங்கி நின்றான்.

``காய்ஃதா?” (என்ன அண்ணா) – என்றவாறு அவள் ஓடிவந்தாள்.

``ராஜாமணிகிட்ட நான் அஞ்சு ரூபா கடன் வாங்கினேன். அவ சாப்பிட வார்றப்போ ஒரு ரூபா சேர்த்து அவகிட்ட கொடுத்துடு.”

``ஏழு ரூபா எதுக்கு அண்ணா?”

``உனக்கு ஒரு ரூபா, ப்ரியப்பட்டதை வாங்கித் தின்னு. அம்மாகிட்ட காட்டாதே.”

``ஒரு ரூபா எதுக்கு அண்ணா?”

``வெச்சுக்கோ, வெச்சுக்கோ”

சொல்லிக்கொண்டே அவன் நடந்தான்.

போனவன் ரயில் முன் பாய்ந்து தன்னை மாய்த்துக்கொள்கிறான். பிணமாக அவனைத் தூக்கி வருகிறார்கள்

அம்மா அழாமல் இருக்க முடியுமா... கதறிக் கதறி அழுதாள். இந்தத் தெருவாசிகள் மட்டுமல்ல, பல தெருக்களிலிருந்து மக்கள் கூட்டமாக வந்து பார்த்துக் கலங்கினார்கள்.

எதிர்வீட்டில்தான் பங்கஜம் இருந்தாள். அவளுடைய பெற்றோர் எதிர்வீட்டுக்குப் போய்விட்டதால், அவள் தன் சகோதரர்களோடு இருந்தாள்.

``ஹய்யா, தூ ஜீதோ?” (ஏண்டி, நீ போய்ப் பார்க்கவில்லையா?) என்று அண்ணன் கேட்டான்.

``பார்க்காமே என்ன? பைத்தியக்காரப் பிள்ளை! கலியாணம் ஆனப்பறம் இந்த வேலை செய்யாமல் இருந்தானே!” என்ற பங்கஜம்  போர்வையால் தலையையும் சேர்த்து மூடிக்கொண்டாள்.

குளிர் மட்டும் அல்ல; கும்பகோணத்தில் கொசுத்தொல்லையும் அதிகம். இப்படிக் கதை முடிகிறது.

வாழ்வின் அழகுகளை மட்டுமல்ல, குரூரங்களையும் படம்பிடித்து நமக்கே காட்டுபவன்தான் அசலான கலைஞன். இந்தக் கதை அப்படியான ஒரு கதை. வறுமையும் இயலாமையும் பீடித்த ஒரு வாழ்க்கையை இணைந்து எதிர்கொள்ளாமல் தாய் இப்படியான சுயநலக் குணத்துடன் இருக்கிறாள். விரும்பிய பெண்ணான பங்கஜமோ அவனைப் `பைத்தியக்காரப் பிள்ளை' என்கிறாள். காலம் முழுவதும் விதவையாகத் தன்னை வாழவைக்காமல் திருமணத்துக்கு முன்பே செத்துத்தொலைந்தானே என்கிற நிம்மதிப்பெருமூச்சும் பங்கஜத்தின் பேச்சில் தொனிக்கிறது. ஒன்பது வயதுக் குள்ளியும் 13 வயது தங்கை ராஜாமணியும் குழந்தைத் தொழிலாளிகளாக உழல்கிறார்கள். அந்தக் குடும்பத்தின் பொருளியல் வாழ்வை எம்.வி.வி நேரடியாகப் பேசாவிட்டாலும் பின்புலமாக அது நின்று நம் மனங்களை ஊடறுக்கிறது. 20-ம் நூற்றாண்டின் இணையற்ற எழுத்தாளர்களில் ஒருவர் எம்.வி.வி என்பதற்கு அவரது பைத்தியக்காரப் பிள்ளையே சான்று என்று அசோக மித்திரன் குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக ஆழ்மன வேட்கைகளை வெளிப்படுத்துவதாகவே எம்.வி.வி-யின் கதைகள் அமையும். குறிப்பாக, பால் வேட்கை அவருடைய பல கதைகளின் உள்ளடக்கமாக அமையும். `பனி முடி மீது ஒரு கண்ணகி' என்றொரு கதை. அநாதைகளான ஒரு சிறுவனையும் (கண்ணன்) சிறுமியையும் (கண்ணகி) தன்னோடு இமயமலைக்கு அழைத்துச் செல்கிறார் ஒரு சாமியார். ஒவ்வொரு ஷேத்திரமாகத் தரிசனம் செய்துகொண்டே மலை உச்சிக்கு அழைத்துச் செல்கிறார். ஆறு ஆண்டுகள் தமிழ் ஞானம் முழுவதும் அளித்தார். மூன்று ஆண்டுகள் மௌன சாதனை செய்வித்தார். பிறகு, அவர்கள் இருவரையும் தனித்து விட்டுவிட்டு எங்கோ புறப்படுகிறார். நீங்கள் இருவரும் தனித்திருந்து சாதனை செய்க என்று கூறி குடிலைவிட்டு அகல்கிறார். ஆனால், இளைஞனுக்கு யுவதியாகிவிட்ட அந்தப் பெண் கண்ணகியின் உடல் மீது மோகம் வந்துவிடுகிறது. அவள் நம் தவத்துக்கு இது தவறல்லவா என மறுதலிக்கிறாள். உடலைவிடுத்து, உயிர்நிலையில் நின்று ஆத்மானந்தம் நுகர இந்தக் காம உணர்வு தடையாக இருக்குமே என்கிறாள். ஆனால், அவனுடைய பிடிவாதத்தில் பிறகு சற்றுக் கரைகிறாள்.

``இந்த உடம்பு ஒரு விந்தைப்பொருள். எந்தப் பயன் கருதி இது சிருஷ்டிக்கப்பட்டதோ, அதன் பயனைக் குருதேவரின் உதவியால் நான் அடைந்துவிட்டேன். இனி இந்த உடல் எனக்குத் தேவையில்லை. உனக்கு இதனிடம் கவர்ச்சி ஏற்பட்டுள்ளது. நீ உன் விருப்பம்போல் இதை உபயோகித்துக்கொள்ளலாம். ஆனால், பன்னிரண்டு வருஷங்களாக நீ தேடிய பொருள் இதனால் கிடைக்கும் என ஏமாந்துவிடாதே.”

கண்ணன் கேட்டுக்கொண்டிருந்தான். கேட்டு முடிந்ததும் திரும்பினான். எதிரில் மலைச்சிகரங்கள் தீப்பற்றி எரிந்தன. மரங்கள், பறவைகள், ஆகாயம், செடிகள், கொடிகள், பாறைகள் அனைத்திலும் தீ தொத்திப் பரவி எங்கும் நிறைந்தது.

மீண்டும் திரும்பினான். எதிரில் சிவப்பு - நெருப்பு.

``ஹரஹர மகாதேவ்..!” கணீரென வாசலில் கேட்டது குருதேவரின் குரல் என்று கதையை முடிப்பார். உடல்சார்ந்த இயல்பான வேட்கை செயற்கையான தவத்தை வெல்லுவதாக கதையை முடிக்காமல், குருதேவரைக் கொண்டுவந்து வாசலில் நிறுத்தி கதையைத் திருப்பிவிட்டார் எம்.வி.வி. எனினும், இதை ஒரு விவாதப்பொருளாக்கியிருக்கிறார்.

அவரது `வேள்வித் தீ', ‘அரும்பு’, `நித்திய கன்னி’ முதல் சாகித்ய அகாடமி விருது பெற்ற `காதுகள்’ நாவல் வரை நாவல்களுக்காக தமிழ் இலக்கிய உலகம் முழுமையாலும் அவர் கொண்டாடப்பட்டிருக்கிறார். இருந்தாலும் இவரது சிறுகதைகள், கவிதைகள் உலகம் பற்றி தமிழ் உலகம் அவ்வளவாக அறியாது. தினமும் சவரம் செய்து, இஸ்திரி செய்யப்பட்ட உடைகளை அணிந்து, நெற்றியில் விபூதி-குங்குமம் அழியாமல் `பளிச்’ என்று இறுதிநாள் வரை வாழ்ந்தவர் எம்.வி.வி.

``பட்டாடை நெய்யும் சௌராஷ்டிரர்கள் சமூகத்தில் பிறந்த அவரது வாழ்வில் பட்டின் மினுமினுப்பு ஒருபோதும் இருந்ததில்லை. அவரது பால்ய காலத்தின் சில வருஷங்கள் தவிர. அந்த பால்யகாலத்திலும் அவருக்கு இன்னொரு அவஸ்தை நிகழ்ந்தது. தனது சொந்த அப்பா-அம்மாவால் அவரது தாய்மாமனுக்கு சிறுவயதிலேயே தத்துக்கொடுக்கப்பட்டவர் எம்.வி.வி. மாமாவை `அப்பா' என்றும், அத்தையை `அம்மா' என்றும் அழைக்க நிர்பந்திக்கப்படுகிறார். அவரது அத்தை ``இவ்வளவு செலவு செய்து உன்னைத் தத்தெடுத்தேனே `அம்மா' என்று கூப்பிட மாட்டேன் என்கிறாயே! அம்மா என்று கூப்பிடு'' என்று சொல்லி தண்டிக்கிறார். வாய் அம்மா என்றாலும், மனம் ஒட்டாமல் தத்தளிக்கிறார் வெங்கட்ராம். அவரது மன அழுத்தத்தில் தொடக்கப்புள்ளி இது எனச் சொல்லலாம்.

இவ்வளவுக்கு மத்தியில் சுவாரஸ்யமான பல அடுக்குகளைக்கொண்டது அவரது வாழ்க்கை. அப்பா-அம்மா வீட்டில் வறுமை. தத்துப்போன வீட்டில் கோடீஸ்வர வாழ்க்கை. 13 வயதில் எழுத்தத் தொடங்கியது, 16 வயதில் மணிக்கொடியில் `சிட்டுக்குருவி' என்ற கதை பிரசுரம். பி.ஏ.பொருளாதாரம் படிக்கும்போதே தி.ஜானகிராமன் இவரை குருபோல வியந்து பார்த்து நட்பாக்கிக்கொள்வது. இந்தி விஷாரத் படிப்பில் தேர்ச்சி. ஆங்கில இலக்கியப் புலமை. இளம் வயது திருமணம். பட்டு ஜவுளி ஜரிகை வியாபாரம்.

1948-ல் தேனி பத்திரிகை தொடங்கியது. பத்திரிகையில் நஷ்டம். அதனால் வியாபாரத்தில் நஷ்டம். அடியாள்களை வைத்துக்கொண்டு ரெளடியாக சில காலம். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து கவுன்சிலர் பதவிக்கு நின்று தோற்றது ஒரு நேரம். பல பெண்களாலும் காதலிக்கப்பட்ட வசீகரனாக இருந்தது ஒரு காலம். ``இந்த அனுபவங்களும்கூட இல்லாவிட்டால் எழுத்தைத் தவிர என்னதான் மிஞ்சியிருக்கும் என் வாழ்வில்!'' என்பார் எம்.வி.வி. என்று அவரைப் பற்றிய ஒரு சித்திரத்தை அவரது சொந்த ஊர்க்காரரான கவிஞர் ரவி சுப்பிரமணியன் தீட்டுகிறார்.

தஞ்சை மாவட்டத்தின் கோயில் நகரமாம் கும்பகோணத்தில் 1920-ம் ஆண்டு மே 18-ல் பிறந்தவர் எம்.வி.வி. கும்பகோணம் நகரம் 1930, 40களில் கதைகளின் கருவூலமாகத் திகழ்ந்து வந்தது. மகாமகக் குளத்தின் படிக்கட்டுகள், நகர மேல்நிலைப் பள்ளி எதிரில் உள்ள `தொண்டரடிப் பொடிக்கடை’ ஆகியவைதான் கதைஞர்களின் கூடலரங்குகளாக இருந்ததாக இந்திரா பார்த்தசாரதி குறிப்பிடுகிறார்.

எழுத்துலகை அதிரச்செய்த கதைகளை உருவாக்கிய எம்.வி.வெங்கட்ராம், கு.ப.ரா., கரிச்சான்குஞ்சு, தி.ஜானகிராமன் போன்றோர் குடந்தையில் உற்சாகமாக இயங்கிய காலம் அது. அந்த வரிசையில் எம்.வி.வெங்கட்ராம் ஒரு பிறவிக்கதைஞர்.

நவீன இலக்கிய இதழான `மணிக்கொடி’, பட்டொளி வீசிப் பறந்துகொண்டிருந்த நேரம் அது. தனது 16 வயதில் `சிட்டுக்குருவி’ என்ற சிறுகதை மூலம் இலக்கிய வானில் இடம்பிடித்தார் எம்.வி.வெங்கட்ராம். சௌராஷ்டிர மொழிபேசும் பட்டு நெசவாளர் குடும்பத்தில் பிறந்து, இருநூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், நாவல்கள், வரலாற்று நூல்களை எழுதியவர். ஒரு மேடை நாடகமும் இதில் சேரும்.

அவரது சிறுகதைகளில் பால்ய வேட்கையை மட்டுமன்றி வேறுபல மன உணர்வுகளையும் எழுத்தில் வடித்துள்ளார். குறிப்பாக, `வயிறு பேசுகிறது' என்றொரு கதை. பட்டினிப் பட்டாளத்தில் ஒருவனான ரகு, கோடீஸ்வரக் குடும்பத்தில் பிறந்த நிர்மலாவைக் காதலிக்கிறான். பணக்காரக் குடும்பம் இதை அறிந்து நிர்மலாவை அந்த ஊரைவிட்டே கடத்தி வேறு நகரத்துக்கு அழைத்துச் சென்றுவிடுகிறார்கள். அவள் நினைவுகளோடும் பட்டினியோடும் உழன்றுகொண்டிருக்கிறான் ரகு. இரண்டு ஆண்டுகள் கழித்து நிர்மலாவிடமிருந்து ஒரு திங்கட்கிழமை அன்று கடிதம் வருகிறது. `வியாழக்கிழமை நாம் வழக்கமாகச் சந்திக்கும் ரயில் பாதைக்கு அருகில் உள்ள ஆலமரத்தடியில் சந்திப்போம்' என்று எழுதுகிறாள். நான்கு நாள்களும் அவளைச் சந்திக்கத் தன்னை ரகு ஆயத்தப்படுத்திக்கொள்வதே கதையின் பெரும்பகுதி. ஆயத்தம் என்றால், மன ஆயத்தம் மட்டுமல்ல. இருக்கும் வேட்டிச்சட்டையைத் துவைத்து தயார்செய்வது. கிடைக்கிற சோற்றைத் தின்று தெம்பாக்கிக்கொள்வது என்கிற தயாரிப்பும்தான்.

வியாழனன்று அம்மா வயிற்றைப் பட்டினிப்போட்டு, இருப்பதை இவனே சாப்பிட்டுவிட்டுக் கிளம்புகிறான். ஆனாலும் வயிற்றுக்கு அது போதவில்லை. எட்டணா கிடைத்தால் ஹோட்டலில் வயிறாரச் சாப்பிட்டுவிட்டு தெம்புடன் அவளைச் சந்திக்கலாமே என எண்ணியபடியே வெயிலில் நடக்கிறான். நீண்ட தூரம் நடந்து களைப்புடன் அந்த ஆலமரத்தடியை அடைகிறான். உடல் சோர்வுற்று, கால்கள் மரத்துப்போய் சரிந்து உட்கார்ந்து கண்களை மூடிக்கொள்கிறான். நிர்மலா வருகிறாள். தன் அப்பா, திருமணத்துக்கு ஒப்புக்கொண்டதாகக் கூறுகிறாள்.

பசிக்கிறக்கத்தில் மூளை அவனைக் கைவிட்டது, இதயம் அவனைக் கைவிட்டது. கை-கால்களும் அவனைக் கைவிட்டன. வெறும் வயிறாகவே அவன் மாறிப்போனான்.

``அந்தத் தோடுகள் வைரம்தானே?”

``வைரம்தான் ஏன்?”

``என்ன பெறும்?”

``மூவாயிரம் ஆகும்.”

``மூவாயிரமா! 150 மூட்டை நெல் வாங்கலாம். ஒரு வருஷம் என்ன, ரெண்டு வருஷம்கூட நிம்மதியாச் சாப்பிடலாம்.”

அவனுடைய வார்த்தைகள் அவளுக்குப் புரிந்தன. அவன் ஏன் இப்படிப் பேசுகிறான் எனப் புரியாமல் அவள் விழித்தாள். ``நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” கிசுகிசுக்கும் குரலில் அவன் கூறினான். ``அம்மாவுக்கு ரொம்பப் பசி... இல்லை... சும்மா சொன்னேன். அம்மாவும் நானும்தான் சாப்பிட்டோம்... இல்லை... எனக்கும் ரொம்பப் பசி!'' என்று கதை முடிகிறது. வயிற்றின் குரலை அழுத்தமாகப் பதிவுசெய்த கதை இது. இதுபோன்ற கதைகளை யாரும் எடுத்துப் பேசாமல் அவரது பாலியல் வேட்கைப் பார்வையையே கூடுதலாகப் பேசிவிட்டார்களோ என்கிற ஐயம் எனக்கு ஏற்படுகிறது.

`மழை’ என்கிற கதையிலும் நீண்டகாலம் கழித்து தன் பழைய காதலன் வீட்டுக்கு வரும் கல்யாணி தன் குழந்தையின் இரண்டு நாள் பட்டினிக்கு அவனிடம் நீராகாரம் வாங்கி ஊட்டிவிட்டு மழையோடு புறப்பட்டுப்போகிறாள். தன் இரண்டு நாள் பட்டினிக்கு ஒன்றும் தராமலேயே!

பசியை அறிந்த கலைஞன். பசியைப் பாடிய கலைஞன் என எம்.வி-விக்கு இன்னொரு முகம் இருப்பதை நாம் எடுத்துச் சொல்ல வேண்டும். முருக பக்தரான அவர், 1992-ல் கரிச்சான் குஞ்சு அவர்களின் நினைவு நாளில் இப்படிப் பேசினார், ``நான் கல்லாப்பெட்டியை மூடிவிட்டேன். விளக்கையும் அணைத்தாயிற்று. என் கடையை கட்டிப் பூட்டிவிட்டேன். சூடமும் கொளுத்தியாகிவிட்டது. அதுவும் கொஞ்ச நேரத்தில் அணையும். இப்போது நான் என் குருநாதனின் (அதாவது முருகனின்) சொல்லுக்குக் காத்திருக்கிறேன்.”

14-01-2000-ல் கும்பகோணத்தில் அவர் காலமானார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism