போலீஸுக்கு எதிராக மட்டுமல்ல... அவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டாலும் ஒருவன் எத்தகைய சித்ரவதைகளை அனுபவித்தாக வேண்டும் என்பதற்கு ரண உதாரணம், மொகமது ஆமிர் கானின் வாழ்க்கை.
19 வயதே ஆன மொகமது ஆமிர் கான், பாகிஸ்தானில் வாடும் தனது சகோதரியைப் பார்க்க டெல்லியில் இருந்து புறப்படுகிறார். இப்படி ஒருவர் பாகிஸ்தான் போகிறார் என்பதைத் தெரிந்துகொண்ட இந்திய உளவுத்துறை அதிகாரி ஒருவர், ‘‘பாகிஸ்தான் கடற்படைத்தள அலுவலகத்தைச் சுற்றுலா பயணி போல் புகைப்படம் எடுத்துவிட்டு வரவேண்டும்’’ என்கிறார். அதோடு, ‘‘அங்கிருந்து ஒருவர் ஒரு பார்சலைத் தருவார்... அதை வாங்கிவந்து என்னிடம் ஒப்படைக்க வேண்டும்’’ என்றும் கட்டளை இடுகிறார்.

நாட்டுப்பற்றுள்ள இந்தியரான ஆமிர் கான், இதனை ஏற்கிறார். ஆனால், மனதளவில் பயந்த சுபாவமுள்ள ஆமிர் கானால், அதைப் புகைப்படம் எடுக்க முடியவில்லை. தன்னிடம் தரப்பட்ட பார்சலை, கடுமையான சோதனை நடப்பது தெரிந்து கராச்சி விமான நிலையக் கழிவறையில் போட்டுவிட்டு வந்துவிடுகிறார். இதை, இந்திய உளவுத்துறை அதிகாரி நம்பவில்லை. ‘நீ பாகிஸ்தான் கைக்கூலி ஆகிவிட்டாய்’ என்று குற்றம்சாட்டி, பல்வேறு வெடிகுண்டு வழக்குகளில் இவரது பெயரையும் சேர்த்துவிடுகிறார்.
24 குண்டு வெடிப்புகள் தொடர்பாக 19 வழக்குகளில் ஆமிர் கான் சேர்க்கப்பட்டு, 14 ஆண்டுகள் சிறையில் இருந்து, அனைத்து வழக்குகளில் இருந்தும் குற்றமற்றவர் என்று விடுதலை ஆகிவிடுகிறார். விடுதலை ஆனது சிறையில் இருந்து... ஆனால், ‘இது நீதியின், சட்டத்தின் பெருமையா’ என்ற கேள்விதான் இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது விரிகிறது.
மகனது விடுதலைக்காகப் போராடிய ஆமிர் கானின் தந்தை, ‘‘நீதி (அதிக விலையுள்ளது என்பதால் அதைப்) பெற, ஒருவரின் கைகள் தங்கத்தாலும், (ஓடிக்கொண்டே இருக்க வேண்டுமென்பதால்) கால்கள் இரும்பாலும் செய்யப்பட்டிருக்க வேண்டும்’’ என்பாராம். படிக்கும் ஒவ்வொருவரையும் அறைகிறது ஒவ்வொரு வரியும்.
பதறவைக்கும் இந்தப் புத்தகத்தை அப்பணசாமியின் காந்த வார்த்தைகளில் படிக்கும்போது கோபமும் துயரமும் ஒருசேரக் கூடி நிற்கிறது. ஜனநாயகம், மதச்சார்பின்மை எனும் இரண்டு சொற்களின் தேவையை இந்த நூல் கூட்டுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பயங்கரவாதி என புனையப்பட்டேன்
- மொகமது ஆமிர்கான்
நந்திதா ஹக்ஸர்
தமிழில்: அப்பணசாமி
எதிர் வெளியீடு,
96, நியூ ஸ்கீம் ரோடு,
பொள்ளாச்சி - 642 002.
தொடர்புக்கு: 9865005084
விலை: ரூ.200
- புத்தகன்