Published:Updated:

உயிர் சோறு - சிறுகதை

உயிர் சோறு - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
உயிர் சோறு - சிறுகதை

சிறுகதை: கணேசகுமாரன், ஓவியங்கள்: ஸ்யாம்

உயிர் சோறு - சிறுகதை

சிறுகதை: கணேசகுமாரன், ஓவியங்கள்: ஸ்யாம்

Published:Updated:
உயிர் சோறு - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
உயிர் சோறு - சிறுகதை

ரவணனிடம் தலையசைத்து விடைபெற்று வீதியில் இறங்கினேன். நல்ல வெயில். இப்படிப் பெரு வெளிச்சமாய் மட்டும் வந்து நம் உடல் முழுவதும் தழுவும் வெயிலை நல்ல வெயில் என்றுதானே சொல்ல வேண்டும். ஆனால் சுள்ளென்று தோல் சுட்டு எரிக்கும் வெயிலுக்கும் நாம் நல்ல வெயில் என்றுதான் சொல்கிறோம். நல்ல என்ற சொல்லுக்குத் தரும் அழுத்தத்தில் அர்த்தமே மாறிப்போய்விடுகிறதுதானே.
வெயிலில் ஏது கெட்ட வெயில். கையில் விஜி கொடுத்தனுப்பிய நகைகள் அடங்கிய பை அப்படியே எந்த மாற்றமும் இன்றி இருந்தது. நான் வாழ்ந்த வாழ்க்கை பற்றி சரவணனுக்குத் தெரியும். நகைகளை என்னிடமே வைத்துக்கொள்ளச் சொல்லிவிட்டான். பணம் தருகிறேன்; பின்பு உனக்கு வசதிப்பட்ட நாளில் திருப்பிக்கொடு என்று பேசிக்கொண்டிருக்கும் போதுதான் போன் வந்து எல்லாவற்றையும் மாற்றிவிட்டது.

வீதி திரும்பியதும் எதிரில் ஒரு பெண்மணி வந்துகொண்டிருந்தார். பார்க்க இந்திராணி போலத்தான் இருந்தது. இந்திராணியைக் கடைசியாய் பார்க்கையில் இதே போன்று பச்சைப் புடவைதான் அணிந்திருந்ததாய் ஞாபகம். ஆனால் அது கிளிப்பச்சை நிறம். பத்து வருடங்களுக்கு மேல் இருக்கும். பத்து வருடங்களுக்கு முந்தைய இந்திராணியின் முகம்தான் இப்போது ஞாபகத்திலிருக்கிறது. பத்து வருடம் என்றதும்தான் கீர்த்தனா பிறந்ததற்குக்கூட இந்திராணி வரவில்லை என்ற ஞாபகம் வந்தது. இப்படித்தான் தரையில் தவறிவிழும் வாளிநீர் தன் போக்குக்குப் பல கோடுகளின் வழி வெவ்வேறு பாதையைத் தேர்ந்தெடுப்பது போல ஒவ்வொன்றாய் ஞாபகம் வந்துவிடுகிறது. ஒருவரின் மரணம் அவரைப் பற்றிய ஞாபகங்களை மட்டும்தானே கிளறிவிட முடியும். இனிமேல் இறந்துபோன நபருடன் நமக்குப் பேச என்ன இருக்கிறது என்பதுபோல் பழைய நினைவுகளை அசைபோட ஆரம்பித்து விடுகிறோம். பேருந்தில் ஏறினேன்.

உயிர் சோறு - சிறுகதை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விஜியிடம் இப்போதே போன் செய்து சொன்னால்தான் அவளும் ஸ்கூலுக்கு லீவ் சொல்லிக் கிளம்ப சரியாயிருக்கும். பஸ் பாம்பன் பாலத்தைத் தாண்டியது. நிறைய மீன்பிடிப் படகுகள் கடல் நீரில் தள்ளாடியபடி இருந்தன. பாலத்தின் ஓரத்தில் நின்றபடி பலரும் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தார்கள். எதையும் ரசிக்கும் மனநிலை இப்போது இல்லை. இப்போது என்றில்லை. அதெல்லாம் வளரும் காலத்திலேயே இல்லாமல் போய்விட்டது. பேருந்தின் ஜன்னலோர இருக்கைக்கு ஆசைப்படாத மனம் வாய்த்தது சாபமின்றி வரமில்லை. ரிங் போய்க்கொண்டே இருந்தது. காலையில் பிள்ளைகளை பள்ளிக்கூடத்துக்கு அழைத்துச் செல்கையில் விஜியின் முகம் வாடித்தான் இருந்தது. என்னதான் சமாதானமாய் பேசினாலும் பெண்களுக்கு நகைகள் மீது உள்ள மோகம் எப்போதுமே மாறாது. அதை மோகம் என்றெல்லாம் குறைவாய்ச் சொல்லிவிட முடியாது. அதுதானே அவர்களுக்குப் பெரிய பாதுகாப்பாய் இருக்க முடியும். அது என்னமோ எனக்கு ஆரம்பத்திலிருந்து எதன் மீதும் பெரிதாய் விருப்பமற்றுப் போயிற்று. பிள்ளைகளுக்கும் விஜிக்கும் உயர்ந்த விலையில் ட்ரெஸ் எடுத்தாலும் எனக்கு மட்டும் சாதாரண விலையில் சாதாரணமான டிசைனில் ஒரு சட்டை. அவ்வளவுதான். விஜியிடமிருந்து போன் வந்தது. கட் செய்தேன். சில நொடிகள் நிதானித்து என்ன பேச வேண்டுமென மனதுக்குள் சின்னதாய் ஓர் ஒத்திகை. விஜிக்கு போன் செய்ய, இரண்டாவது ரிங்கிலேயே போன் எடுக்கப்பட்டது.

``என்னங்க... சரவணனைப் பார்த்தீங்களா?''

``ம். பார்த்தேன்.''

``ஏன்... சொணக்கமா பேசுறீங்க'' என்றாள். போன காரியம் நல்லபடியாய் முடிந்திருக்காதோ என்ற கவலையில்தான் அவள் கேட்டாள். முகம் மட்டுமல்ல, குரலும் பல சமயங்களில் எல்லாவற்றையும் காட்டிக்கொடுத்துவிடுகிறது.

``மதுரையில இந்திராணி எறந்துடுச்சாம். நல்லதம்பி போன் பண்ணிச் சொன்னாரு.''

``என்னங்க சொல்றீங்க. எப்போ?''

``நான் நேர்ல வந்து சொல்றேன். நீ ஸ்கூலுக்கு லீவ் சொல்லிட்டு பிள்ளைகளையும் அழைச்சிட்டு வந்திடு. நாளைக்குதான் எடுக்கிறாங்களாம்.'' போனை வைத்த பிறகு உள்ளுக்குள் புதிதாய் கேள்வி சுழன்று வந்தது. இந்திராணியை எப்போதும் அக்கா என்றுதானே அழைத்திருக்கிறேன். பஞ்சாயத்தில் நிறுத்தி பத்திரத்தில் கையெழுத்துப் போட்டால்தான் ஆயிற்று என்று ஆங்காரமாய் கத்தியபோதுகூட அக்கா என்ற உறவின் வாசனை கொஞ்சமாய் ஒட்டிக்கொண்டு இருந்ததே. நான்கு பெண் குழந்தைகளுக்குப் பிறகு பிறந்தவன் என்பதில் என்மீது அம்மாவுக்கு அதிக பாசம். ஒருவேளை கொள்ளி போட ஒரு வாரிசு வந்துவிட்டது என்ற சந்தோசம்கூட இருக்கலாம். எனக்கு அடுத்து இரண்டுவருடம் கழித்துதான் முருகன் பிறந்தான். எங்கள் வழக்கத்தில் கொள்ளி வைப்பதில் தாய்க்குத் தலைமகன், தகப்பனுக்குக் கடைசி என்பார்கள். ஒருவேளை முருகன் பிறந்ததற்கு அப்பா வேண்டுமானால் அதிகமாய் சந்தோசப்பட்டிருக்கலாம்.

அக்காக்களுடன் வளர்ந்தவன் என்பதாலே அவர்கள் குடித்த மிச்சப்பால்தானே நாம் குடித்தது என்று வளரும்போதே எனக்கொரு எண்ணமிருந்தது. ஆனாலும் வளர வளர அந்த உறுத்தல் வேறு மாதிரி மாறிப்போயிற்று. எல்லாம் தாத்தா பண்ணிய வேலை. உயில் எழுதிவைத்து செத்துப்போன தாத்தாவை நான் பார்த்ததுகூட கிடையாது. `என் மகன் ஜெகந்நாதனுக்குப் பிறக்கும் மூத்த ஆண் வாரிசுக்கே இந்தச் சொத்து அனைத்தும் சொந்தமாகும். அவன் விரும்பினால் மட்டுமே பிறர் அந்தச் சொத்துகளை அனுபவிக்கலாம்.' எப்போதும் எனக்கொரு யோசனை வரும். தாத்தா யார் மீது பாசம்கொண்டு இப்படி ஓர் உயிலை எழுதி வைத்தார். தன் மகன் மீது என்றால் அப்பா பெயருக்கே எழுதியிருக்கலாம். இல்லை மருமகள்  மீது எழுதியிருக்கலாம். அது என்ன... இன்னும் பிறக்காத, பிறப்பானா என்று தெரியாத ஒரு பேரப்பிள்ளைக்கு சொத்தெல்லாம் எழுதி வைப்பது? அவர் இறந்தபோது அவர்கூட வராத அந்தச் சொத்து அவரின் மூத்த பேரனை என்னவெல்லாம் செய்தது, எங்கெல்லாம் கொண்டுசென்று நிறுத்தியது என்று அவருக்குத் தெரியுமா? பேருந்திலிருந்து இறங்கி ஸ்கூட்டர் நிறுத்தி வைத்திருந்த இடத்துக்குச் சென்றேன்.

வீட்டுக்குள் நுழைந்ததுமே ஆரம்பித்து விட்டாள் விஜி. எப்போ, எப்படி, ஏன்... எந்தக் கேள்விக்கும் என்னிடம் பதில் இல்லை. நிஜமும் அதுதானே. மாமா போனில் பேசியது மனதுக்குள் கிடந்தது. ``உங்க அக்கா போயிட்டா மச்சான். கடைசிவரைக்கும் தம்பி வரும்னு வாசலையே பாத்துக்கிட்டிருந்தா... வைராக்கியமா இருந்துட்டீங்க. கூடப் பொறந்ததுக்கு செய்ற கடைசிக் கடமையை செஞ்சிட்டுப் போய்டுங்க. காலையில எடுக்குறோம்.'' வருத்தமோ, கவலையோ குரலில் இல்லை. கோபம் இருந்தது போல்தான் தெரிந்தது. இருக்கத்தான் செய்யும். ஆனால் எனக்கு இருந்ததன் பெயர் வைராக்கியமா... ஆறாத வடுதானே அப்படி ஒரு சொந்தம் இருப்பதையே மறக்கச் செய்தது.

கூடப் பிறந்திருந்தாலும் முருகனும் கல்யாணம் முடிக்கும்வரைக்கும் எந்தக் கேள்வியும் எழுப்பாமல்தான் இருந்தான். திருமணம் ஆகி தனிக்குடித்தனம் வைத்தபின்புகூட அப்பாவிடம் மல்லுக்கட்டிக்கொண்டு இருந்தானே தவிர ஒன்றுகூடி எனக்கு எதிராய் திரும்பியதெல்லாம் முருகனுக்குக் குழந்தைகள் பிறந்தபின்புதான். சொத்தினை வாரிசுகள் அனைவருக்கும் சமமாய் பிரிக்க வேண்டும் என்று எல்லோரும் ஒற்றைக்காலில் நின்றபோது அப்பாவும் அவர்களுடன் நின்றதுதான் என் எல்லாச் செயல்பாடுகளையும் முறித்துப் போட்டது. மன உளைச்சல் அதிகமாகி இரவெல்லாம் தூக்கம் தொலைத்து எழுந்து உட்கார்ந்து இருட்டையே வெறிக்கப் பார்த்துக்கொண்டிருந்த தெல்லாம் அப்புறம்தான். எல்லோரையும் விட்டுத் தனித்துவந்து வாடகை வீட்டில் குடியேறிய பின்பும் மனத்தளர்வு குறையவில்லை. அம்மாவின் மடி மட்டும் வயது தாண்டியும் ஆறுதல் தந்துகொண்டிருந்தது.

உயிர் சோறு - சிறுகதை

கையில் காசு இருப்பதால் மட்டுமில்லை. மனதில் ஈரமும் இருந்ததால்தான் உதவி என்று வந்த சொந்தங்களுக்கெல்லாம் அள்ளி அள்ளித் தந்தது. ``மாரி இருக்கிறப்போ என்ன கவலை. என் பொண்ணு பொறந்ததிலேர்ந்து தலைக்குத் தண்ணி ஊத்துன வரைக்கும் எல்லாச் செலவையும் மாரிதானே பார்த்தது. அவளுக்குக் கல்யாணம்னா, அவன் எதுவும் செய்ய மாட்டானா என்ன?'' தூரத்துப் பெரியம்மா வகை வழி வந்த அக்கா அப்படிச் சொல்லியபோதெல்லாம் பெருமிதமாகத்தான் இருந்தது. மனிதர்கள் அப்படியில்லை என்பதெல்லாம் கையில் காசில்லாமல் கடனாளியாக நின்றபோதுதான் புரிந்தது. இருந்த வீடு, நிலமெல்லாம் நான்கு அக்காக்களுக்கும் தம்பிக்கும் பிரித்தது போக மிஞ்சியதே எனக்கு ஒதுங்கியது. பிறகு பல மனிதர்களுக்கும் நான் சந்தேகப் பொருளாகிப் போனேன். எப்போதும் எல்லோருக்கும் நல்லவராகவே இருப்பதென்பதெல்லாம் ஒரு கொடுப்பினை. அனைவருக்கும் வாய்க்காது. அவசர அவசரமாகத் தங்கள் பணத்தினை திருப்பிக் கேட்டபோதுதான் நானும் என் தகுதிக்கு மீறி நிறையக் கடன் வாங்கியிருக்கிறேன் என்பது உறைத்தது. எதற்குக் கடன் வாங்கினேன் என்று யோசித்தால், அது மேலும் மனச்சிக்கலையே உண்டாக்கியது. கடன் வாங்கித் தந்து இந்த உலகத்தில் நல்லவனாக வாழ வேண்டிய அவசியமென்ன இருக்கப் போகிறது? அவசரத்துக்குப் பணம் கேட்டவர்களுக்கு அதே அவசரத்தில் நான் வாங்கித் தந்த பணம்தான் வட்டிமேல் வட்டிபோட்டு என்னை எல்லாவிதத்திலும் தனிமைப்படுத்தியது. அப்பாவுக்கு முருகன்தான் இஷ்டம். நானும் வேலைக்குப் போய் சம்பாரித்தாலும் விஜியும் ஸ்கூலுக்குப் போய் வந்தாலும் இருவரின் சம்பளமும் வீட்டு வாடகைக்கும் கடனுக்கு வட்டிகட்டவுமே போதவில்லை. நான் வாழ்ந்து கெட்டவனில்லை. கெட்டு வாழ்பவனுமில்லை. தூக்கம் வராத இரவை மாத்திரைகளின் வழி மாற்றத் தொடங்கியபோதுதான் விஜி அந்த மாற்று யோசனையைச் சொன்னாள்.

நான் சுயமாக சம்பாரித்துதான் விஜிக்கு நகை செய்துபோட்டது. அதில் எனக்கு கூடுதல் திமிர்கூட உண்டு. ஏதாவது விசேஷ வீடுகளுக்கு கழுத்து கொள்ளாத நகையுடன் விஜி செல்லும்போதெல்லாம் அவளை பொறாமையுடன் பார்த்த கண்களைவிட என்னை எரிச்சலுடன் பார்த்த கண்கள்தான் அதிகம். இவ்வளவு கஷ்டத்திலும் குடும்பத்தைக் காப்பாத்துகிறானடா இவன் என்ற வெறுப்பு, மனித இயல்பின் ஒன்றுதானே. மூத்தவள் நிவேதா பிறந்தபோதுகூட இவ்வளவு கஷ்டமில்லை. இளையவள் கீர்த்தனா பிறந்தபின்புதான் எல்லாம் ஆரம்பம். எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பதுபோல் பிள்ளைகளின் ஜாதகத்தினைக் கொண்டுசென்று காட்டிப் பரிகாரம் தேடினோம். தேடிய இடத்தில் வேறொன்று கிடைத்தது. எப்போதும் அப்படித்தானே. எல்லாவற்றையும் தேடிய இடத்திலே கிடைத்துவிட்டால் வாழ்க்கை சுவாரஸ்யமற்றுப் போய்விடும். என் ஜாதகம் பார்த்த ஜோஸியர் சொன்னதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள் விஜி. `` மாரிமுத்துவாகிய உங்கள் ஜாதகத்தில் வெளிநாடு செல்லும் வாய்ப்பு உள்ளது''. எல்லா நகையும் கழட்டிக் கொடுத்து விற்றுவிட்டு வெளிநாடு செல்ல ஏற்பாடு செய்யுமாறு சொன்னாள். அவளைப் பொறுத்தவரை நான் வெளிநாடு செல்வது என்பது பணம் சம்பாரிக்க என்பதில்லை. ஏதாவது ஒரு வழியில் என்னை நான் மீட்டெடுக்கும் வழியாய் அவள் தேர்ந்தெடுத்ததுதான் காலையில் சரவணனைப் பார்க்கச் சொன்னது.

விரைந்துகொண்டிருந்த பஸ்ஸில் ஜன்னலோர சீட்டில் கீர்த்தனா அமர்ந்திருந்தாள். விஜியும் நிவேதாவும் அருகில் இருக்க, நான் அதே வரிசையில் எதிரே இரண்டு பேர் அமரும் சீட்டில் உட்கார்ந்திருந்தேன். வீட்டைவிட்டுக் கிளம்பும்போது விஜி கேட்ட கேள்வியை ஜன்னலோர காற்று கேட்டுக்கொண்டிருந்தது. `` வளர்ந்த காலத்துல உங்க அக்கா வீட்டு உப்பையும் சாப்பிட்டுதானே வளந்துருப்பீங்க. சொத்தைப் பிரிச்சி நம்மளை இப்படி ஆக்கினதுல உங்ககூடப் பொறந்த எல்லாருக்கும் பங்கிருக்கில்லியா... மத்தவங்ககூட பேசிக்கிட்டுதான இருக்கீங்க. அதென்ன அந்த அக்கா மேல மட்டும் அப்படி ஒரு வெறுப்பு?'' அத்தனை எளிதில் சொல்லித்தீர்ந்துவிட  முடிகிறதா அந்த வெறுப்பு? எல்லாம் அந்த உப்பைத் தின்றதால் வந்த வெறுப்புதானே. நான் அந்த உப்பைத் தின்றிருக்கக் கூடாது.

*
ப்போது மாரிமுத்துவுக்கு பதினோரு வயது. இரண்டாவது அக்காளான இந்திராணிக்கு கல்யாணம் ஆகியிருந்தது. குடும்பத்திலேயே நல்ல நிறம் என்றால் அது இந்திராணியும் மாரிமுத்துவும்தான்.

மற்றவர்களெல்லாம் மாநிறம். வறுமைப்பட்ட குடும்பம் என்றாலும் இந்திராணியின் அழகு, நல்லதம்பியை யோசிக்கவிடாமல் எந்தவித எதிர்பார்ப்புமின்றி தாலி கட்ட வைத்தது. பக்கத்து பக்கத்து ஊர்கள்தான். மாரிமுத்துவுக்கும் சந்தோசம். தன் ஊரிலிருந்து சைக்கிளிலேயே அக்கா வீட்டுக்குச் சென்றுவிடலாம். மாரிமுத்துவுக்கு எவ்வளவு சாப்பிட்டாலும் சாப்பிட்ட திருப்தியே இருக்காது. அடுத்த ஐந்தாவது நிமிடத்திலே பசிக்கத் தொடங்கிவிடும். ஒருநாள் பள்ளிக்கூடத்துக்குச் சென்றவன் மதியம் சைக்கிள் மிதித்துக்கொண்டு இந்திராணி வீட்டுக்குச் சென்றான்.

``வாடா... ஸ்கூலுக்குப் போகலையா?''

``பள்ளிக்கூடத்திலேர்ந்துதான் வரேன். மதியானம் லீவு. வாத்தியாரு அம்மா செத்துட்டாங்க. மீன் கொழம்பா வெச்சிருக்க. வாசம் வருது. சோறு போடுக்கா. பசிக்குது.''

``ஒரு வேலை பண்றியா. உங்க மாமா தெற்குவாடியில புதுசா ஒரு போட்டு வாங்கிக் கட்டிட்டு இருக்காருல்ல. அங்கே போய் உங்க மாமாவுக்கு சாப்பாடு குடுத்துட்டு வந்துடு. வந்ததும் இங்க சாப்பிடலாம். அதான் சைக்கிள் இருக்குல்ல. ஒரு மிதி மிதிச்சா கா மணி நேரத்துல போயிட்டு வந்திடலாம். குடுத்துட்டு வந்துடுடா... சாப்பாடு எடுக்க வர்றவன் இன்னிக்கி போட்டடிக்கு வல்லியாம்.''

``ரொம்ப பசிக்குதுக்கா. சாப்புட்டுப் போறேன்.'' வயிற்றில் கைவைத்தபடியே முகம் சுளித்துப் பேசினான் மாரிமுத்து.

``செத்த நேரம் பல்ல கடிச்சிக்கப்பா. காலையிலையும் உங்க மாமா சாப்புடல. பசி தாங்க மாட்டார் மனுசன். அவருதான் மீனு வாங்கி அனுப்புனாரு. எதிர்பார்த்துட்டு இருப்பாரு. இல்லாட்டி நான்தான் பஸ்ல போய் குடுத்துட்டு வரணும். கொஞ்சம் போயிட்டு வா மாரி'' அக்கா பஸ்ஸில் போய் சாப்பாடு கொடுத்துவிட்டு வருவதற்குள் தன் வயிறு பொறுமையாய் இருக்காது என்பதை உணர்ந்தவன் ``சரி குடு'' என்றான் தலையாட்டி.

கடல் சார்ந்த கிராமங்கள். மீனவர்கள் அங்கங்கே வலையினை விரித்து வெயிலில் காயவைத்துக் கொண்டிருந் தார்கள். சில இடங்களில் விரிந்த வெயிலில் மீன்கள் கருவாடாகிக் கொண்டிருந்தன. எதிர்காற்றில் சைக்கிள் மிதித்துக்கொண்டி ருந்தான் மாரிமுத்து. பசியில் வயிறு ஏங்கிக் கிடந்தது. அழுந்த சைக்கிள் மிதிக்கையில் குடல் இழுத்தது. அவனைக் கடந்து சென்ற பஸ் இன்னும் அவன் வேகத்தை மட்டுப்படுத்தியது. தெற்குவாடிக்கும் குந்துகாலுக்கும் இடையில் ஒரு பாலம் உண்டு. கடலிலிருந்து கொஞ்சமாய் நீர் பிரிந்து ஏதோ போக்குவரத்து விதியை மீறி நுழையும் நாகம் போல் சென்றுகொண்டிருக்கும். அதன் மீது ஒரு பஸ் போகும் அளவுக்குப் பாலம் கட்டப்பட்டு இரண்டு பக்கமும் சிமென்ட்டால் திட்டொன்றும் அமைத்திருப்பார்கள். சாயங்காலங்களில் சிலர் அத்திட்டில் அமர்ந்து கடலினைப் பார்த்தவாறு கதை பேசுவார்கள். சைக்கிளை அதன் அருகில் நிறுத்தினான் மாரிமுத்து. ஹேண்டில் பாரில் மாட்டப்பட்டிருந்த கூடையைக் கழற்றினான். அவனின் ஒல்லியான கைகளுக்கு மிக பாரமாக இருந்தது சாப்பாட்டுக் கூடை. திட்டில் அமர்ந்து கூடையிலிருந்த கேரியரை வெளியே எடுத்தான். பசியோ, பயமோ கை நடுங்கிற்று. கேரியரைத் திறந்து கொஞ்சமாய் சாதம் எடுத்து வாயில் போட்டான். மெல்லத் துவங்கினான். கேரியரின் அடுத்த அடுக்கைத் திறக்க நான்கு பொரித்த மீன் துண்டுகள் சூரியனில் பளபளத்தன. இப்போது மாரிமுத்துவுக்கு பயம் போயிற்று. பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்னும்போது பத்தில் ஒன்று பயமாகவும் இருக்கலாம்தானே. மாமா சாப்பிடும் தட்டை எடுத்து சிமென்ட் திட்டில் வைத்து, கை நிறைய சோற்றை அள்ளி தட்டில் கொட்டிப் பரப்பினான். இரண்டு கை அள்ளியதும் சோறு வைக்கப்பட்டிருந்த அடுக்கில் இருந்த குழி தெரியாதவாறு சமமாக்கினான்.  மீன் துண்டுகளில் ஒன்றை எடுத்து தட்டில் வைத்தான். குழம்பு எதுவும் ஊற்றிக்கொள்ளாமல் வெறும் சோற்றைப் பிசைந்து உருண்டையாக்கி சாப்பிடத் துவங்கினான். வயிறு அடங்கியதும் பாலத்தின் கீழ் தேங்கியிருந்த நீரில் தட்டைக் கழுவிவிட்டு கேரியரைப் பழையபடி அடுக்கிக் கூடையில் வைத்தபின் சைக்கிளை எடுத்தான். இப்போது எதிர்காற்று மாறியிருந்தது.

ஒரு வாரம் கழிந்த ஞாயிறு. அக்கா வீட்டு மீன்வறுவல் வாசம் மாரிமுத்துவின் உள்ளங்கையை விட்டு விலக மறுத்திருந்தது. அக்கா வீடு நோக்கி சைக்கிள் மிதித்தான். மாமா வீட்டில் இருந்தார். வீட்டின் உள்ளே நுழைந்த மாரிமுத்துவின் மூக்கைத் தாக்கியது அக்காவின் கைமணத்தில் வீட்டில் எங்கும் பரவியிருந்த மீன் குழம்பின் வாசனை. ``அக்கா'' என்றபடி இந்திராணியைப் பார்த்த மாரிமுத்துவின் முகத்தில் சந்தேகம் தன்னை எழுதியது. அக்கா முகம் எப்போதும் இப்படி இருந்ததில்லையே... ஏன்? பசி வயிற்றைக் கிள்ளியது. அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தவன் வினோதமாய் ஒன்றைக் கவனித்தான். இந்திராணி ஒரே ஒரு சாப்பாட்டுத்தட்டை மட்டும் கழுவி எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வந்து வைத்தாள். தட்டின் முன்னால் மாமா அமர்வதைக் கவனித்துக்கொண்டி ருந்தவன் `` அக்கா எனக்கும் சோறு'' என்றான். குழம்புடன் அவனைக் கடந்தவள் நின்று திரும்பி அவனை முறைத்துப் பார்த்தாள். மாமா சாப்பிடத் தொடங்கினார். ``அக்கா'' என்றான் மறுபடியும். அவனை நோக்கி வந்தவள் ``எந்திரிடா'' என்றாள். மாரிமுத்து எழுந்து நின்றான். அவனின் கையை இறுகப் பிடித்தவள் வேகமாக சமையற்கட்டுக்கு அழைத்துப் போனாள்.  ``போனவாரம் மாமாவுக்கு சாப்பாடு குடுத்துவிட்டேனே. என்ன பண்ணினே நீ'' அவளிடமிருந்து வெளிப்பட்ட ஒவ்வொரு சொல்லிலும் ஆத்திரம் மிகுந்திருந்தது.

``ரொம்பப் பசிச்சிதுக்கா. அதான் கொஞ்சம் எடுத்துச் சாப்புட்டேன்'' மாரிமுத்துவுக்கு அழுகை திமிறி வந்தது. இந்திராணியின் கை இறுக்கம் கூடிக்கொண்டே போக வலியில் திணறினான்.

``ஏன்... ஒருவேளை திங்காம பட்டினி கெடந்தா செத்துப்போய்டுவியோ. எதுவுமில்லாத வீட்ல இருந்து நான் பட்ட கஷ்டமெல்லாம் போதும்னுதான் ஆண்டவனா பாத்து இப்படி ஒரு வாழ்க்கையைக் குடுத்துருக்கான். அதுக்கு நீ ஒல வைக்கிறியாடா...''

``இல்லக்கா... தெரியாம கொஞ்சமா...'' மாரிமுத்துவிடமிருந்து வெட்டுப்பட்டு வெளிவந்து விழுந்த வார்த்தைகளில் கண்ணீர் சொட்டியது.

``என்னது... கொஞ்சமா. ராத்திரி ஒங்க மாமா வந்து சொல்றப்ப எனக்கு நாக்க பிடுங்கிட்டு சாகலாம்போல இருந்துச்சி. நீ தின்ன பாதியைத்  தின்னுட்டு மீதியைத் திங்க அவரு என்ன உங்கப்பனாட்டம் வக்கத்துப் போயா இருக்காரு. சாப்பாடு கம்மியாயிருந்துச்சி. மீனும் வழக்கமா வைக்கிற மாதிரி இல்ல. என்னாச்சி ஒனக்குன்னு கேட்டப்போ என் ஈரக்கொலையே நடுங்கிடுச்சி. அப்பகூட சந்தேகம் வரல. கேரியரை நீட்டுன உன் தம்பி கைல மீன் வாசனை வந்துச்சே. சாப்புட்டு வந்தானான்னு கேட்டப்பதான்டா உன் திருட்டு புத்தி தெரிஞ்சிச்சி. ஏன்டா... கூடப்பொறந்த அக்கா சோத்தையே திருடித் திங்கத் தோணுதே. வளந்து வந்தா நீ என்னன்ன பண்ணுவே.'' மாரிமுத்துவுக்கு இந்திராணி பேசியதில் பாதிப் புரியவே இல்லை. பசிக்கு சாப்பிட்டது இவ்வளவு பெரிய குற்றமா என்றுதான் குழம்பியது அவன் மனம்.

``எல்லாருக்கும்தான் பசிக்குது. அதுக்காக பொறுத்துதான் இருக்கணும். நம்ம வீட்ல நமக்கு வேளாவேளைக்கு சோறு கெடைச்சுச்சா... இல்லீல்ல. மூணு வேளைக்கு ரெண்டு வேளையும் ஒரு வேளையுமா கொறச்சித்தான்டா சாப்புட்டோம். நம்ம அப்பன் பாடுக்குப் போனாதான் காசு. அம்மா கூடைய எடுத்துக்கிட்டு மீனு வித்துட்டு வந்தாதான் காசு. இல்லாட்டி பட்டினி. ஒனக்கு பசிச்சா நீ இங்க வந்து தின்னுருக்கணும். குடுத்துவிட்ட சாப்பாட்டையும் தின்னுட்டு இங்கையும் வந்து கமுக்கமா தின்னுட்டுப் போனவந்தானே நீ. இன்னிக்கி ஒனக்கு சோறு கெடையாது. போ'' இந்திராணி பிடித்திருந்த கை இறுக்கம் மாறாமல் மாரிமுத்துவை இழுத்துக்கொண்டு ஹாலினைக் கடந்தாள். நிமிர்ந்து பார்க்காமல் சாப்பிட்டுக் கொண்டிருந்த மாமாவைப் பார்த்தான் மாரிமுத்து. சிறுகுடலைப் பெருங்குடல் தின்றுகொண்டிருக்க, வீட்டை விட்டு வெளியேறி சைக்கிளை எடுத்தான்.

*

மாட்டுத்தாவணியில் இறங்கி நல்லதம்பிக்கு போன் செய்து அட்ரஸ் விசாரித்தபடியே ஆட்டோவில் போனோம். சொத்து பிரித்தபிறகு மதுரையில் இடம் வாங்கி வீடு கட்டி செட்டில் ஆனதெல்லாம் செவி வழிச் செய்திகள்தான் எனக்கு. எக்கேடோ கெட்டுப் போகட்டும் என்று அந்தப் பஞ்சாயத்தின் முன்னால் மனதுக்குள் எல்லோருக்கும் சாபம் விட்டு விலகியவன்தான். எந்த நல்லது கெட்டதுக்கும் கலந்துகொள்ளாமல் எதையும் எவரிடமும் வெளிப்படுத்தாமலே வாழ்ந்தாயிற்று. எனக்காக விஜியும் தன் குடும்பத்தையும் என் குடும்பத்தையும் வெறுத்து விலகி வாழ்ந்தவள்தான். இப்போது சாவு என்றதும்தான் வந்து நிற்க வேண்டியிருக்கிறது. சாயங்கால வெயில் துக்கத்துடன் விடைபெற்றுக் கிளம்பியிருக்க, வீட்டின் வாசலில் ஷாமியானா பந்தல் போடப்பட்டிருந்தது. நிறைய ப்ளாஸ்டிக் நாற்காலிகளில் நிறைய மனிதர்கள். நீல நிற நாற்காலிகள் என்றால்கூட துக்கம் தெரியாது. இவை சாம்பல் நிறத்தில் அடுக்கப்பட்டிருந்தன. யாராவது வந்து பிரித்துப்போட்டு அமர்ந்தால் அந்த துக்கம் சமாதானமாகிவிடும்போல.

வீட்டின் உள்ளே நுழைந்தேன். என்னைப் பார்த்ததும் யாரோ பெருங்குரலெடுத்து ``எலேய் மாரி... உன் அக்காளப் பாருடா'' என்று கதறத் தொடங்கினார்கள். யாரென்றுதான் தெரியவில்லை. யாரையுமே அடையாளம் தெரியவில்லை. குளிர் கண்ணாடிப் பெட்டிக்குள் படுத்துக் கிடந்தது அக்காதானாவென்றே தெரியவில்லை. பிணமாய் முகம் பார்க்க முடியாமல் வெளியில் வந்து நாற்காலியில் அமர்ந்தேன். கீர்த்தனா ஓடிவந்து மடிமீது ஏறி உட்கார்ந்தாள். மாமா என்னை நோக்கி வந்தார். யாரோ இன்னொரு நாற்காலி எடுத்துப் போட மாமா அதில் அமர்ந்தார். நிறைய சதையுடன் அடர் தாடியில் இருந்தார். லேசாக பிராந்தி வாடை வந்தது. குடித்திருக்கிறார். ஆறுதலாய் அவரின் கையைப் பற்றினேன். தோளில் போட்டிருந்த துண்டை எடுத்தவர் வாய்பொத்தி உடல் குலுங்க அழத் தொடங்கினார். என் ஒரு கை அவரின் இடது கையைத் தொட்டபடியிருக்க வலதுகையால் துண்டை அழுத்தியபடி அழுதவர் அப்படியே துண்டால் கண்களைத் துடைத்துக்கொண்டார். தொண்டையைச் செருமினார்.

``ரொம்ப நல்லது மச்சான். பழசு எல்லாத்தையும் ஞாபகம் வெச்சிருந்து பொணத்து மூஞ்சிலகூட முழிக்காம இருந்துடுவீங்களோன்னு கலங்கிக் கெடந்தேன். வந்துட்டீங்க.'' சாராய வாடையுடன் வார்த்தைகள் வந்தாலும் தெளிவான உச்சரிப்பு. நீளமாய் பெருமூச்சு விட்டார்.

``பட்டுத்தான் மச்சான் உங்க அக்கா செத்துருக்கா. எத்தனையோ ஆஸ்பத்திரி, டாக்டருங்க. பணம் இருந்து என்ன புண்ணியம். காப்பாத்த முடியல.'' தொடர்ந்து பேச முடியாமல் நிறுத்தி நிறுத்திப் பேசினார்.
``ஆனா மூணு நாளா நல்ல தெளிவு. சாகப்போறோம்னு அவளுக்கே தெரிஞ்சிருக்கு போல. நேத்துதான் உங்க பேரைச் சொல்லி பொலம்ப ஆரம்பிச்சா. என் தம்பி வயித்துல அடிச்ச பாவம்தான் இப்பிடி வயித்துல கட்டியா வந்து கெடக்குன்னு அழுகை. நேத்து ராத்திரி என்னைக் கூப்பிட்டுச் சொன்னா. என் தம்பிக்கு வைராக்கியம் அதிகம். நான் சாகுறவரைக்கும் வர மாட்டான். செத்தது தெரிஞ்சி வந்தான்னா அவன் கொண்டு வர்ற வாய்க்கரிசியை எனக்குப் போட வேணாம். நம்ம வீட்ல சமைச்ச சோறு கொஞ்சம் என் வாயில போடச் சொல்லுங்க. அப்பதான் என் கட்ட வேகும்னா. அதுதான் மச்சான் அவ கடைசி ஆச. கொஞ்சம் இருங்க. வர்றேன்.'' எழுந்து போனார்.

அந்தப் பெரிய வீடெங்கும் அழுகையும் கதறலும் பெண்களின் ஒப்பாரிச் சத்தமுமாய் நிரம்பத் தொடங்கின. இரவு மேலும் இருளாய் அவ்வீட்டில் பெருகியது. நிவேதாவும் கீர்த்தனாவும் சாப்பிட்டுவிட்டு வீட்டின் ஏதோ ஓர் அறையில் படுத்து உறங்க விஜி என்னை வந்து அழைத்தாள். நான் மறுத்துவிட்டு அந்த நாற்காலியிலே அமர்ந்திருந்தேன். டீ மட்டும் குடித்திருந்தேன். பசிக்கவில்லை. நடு ராத்திரி போல் மாமா வந்தார். சில பத்திரத்தாள்களை என்னிடம் நீட்டினார்.

'' உங்க அக்கா சுய நினைவோடு கையெழுத்துப் போட்டுக் குடுத்த பத்திரம் மச்சான். அவளுக்குன்னு இருந்த நெலம், வீடு எல்லாம் உங்க பேருக்கு எழுதியிருக்கா. நீங்க வந்தா குடுக்கச்சொன்னா. குடுத்துட்டேன்.'' எழுந்தார். விறுவிறுவென்று அடர் இருள் நிரம்பியிருந்த பாதையை நோக்கி நடந்தார். கையில் வைத்திருந்த பத்திரத்தாள்களுடனே நான் நாற்காலியில் சரிந்து அமர்ந்து கண்களை மூடினேன். விடிந்தது. வர வேண்டியவர்களெல்லாம் வந்துவிட்டார்கள். எந்த உறவையும் எனக்குத் தெரியவில்லை. வந்தவர்களெல்லாம் உள்ளே சென்று ஒருமுறை அழுதுவிட்டு வெளியே வந்து என்னைக் கட்டிப்பிடித்து அழுது போனார்கள். முதல்நாள் இரவு சாப்பிடாததும் சரியாக உறங்காததும் மிகவும் தளர்வாக்கியிருந்தது என்னை. பத்து மணி போல் பெண்கள் நிறையப் பேர் வீட்டிற்குள்ளிருந்து முக்காடிட்டபடி வெளியே வந்தார்கள். விஜியும் வந்தாள். அவள் இடுப்பில் ஒரு சில்வர் பாத்திரம் இருந்தது. வாய்க்கரிசி எடுத்துவரக் கிளம்பிவிட்டார்கள்.

``வாய்க்கரிசி போடுறவங்கல்லாம் போடலாம்'' சுடுகாட்டில் யாரோ கத்த, நான் பாக்கெட்டுக்குள் கைவிட்டு சில்லறைக் காசுக்கு துழாவிக் கொண்டிருக்கையில் மாமா என் கையில் எதையோ திணித்தார். சிறியதாய் டிபன் பாக்ஸ். புரியாமல் அவரை ஏறிட்டேன்.

உயிர் சோறு - சிறுகதை

``சாவு வூட்டுல சமைக்கக் கூடாது மச்சான். இது நேத்து உங்க அக்கா கடைசியா சாப்பிட்ட ரசம் சோறு. கொஞ்சம் எடுத்து அவ வாயில வெச்சி விட்டுடுங்க. அவ நெஞ்சு வேகட்டும். செஞ்சிடுங்க மச்சான்.'' கரகரத்த குரலில் மாமா சொல்ல நிற்காமல் வழிந்துகொண்டிருந்தது கண்ணீர். எனக்கு உள்ளுக்குள் உடைந்தது. பாறை கனம் கனக்கத் தொடங்கியது கையில் வைத்திருந்த டிபன் பாக்ஸ். படுக்கவைக்கப்பட்டிருந்த அக்காவின் உடம்பைச் சுற்றிலும் வறட்டிகள் அடுக்கி வைக்கோல் திணிக்கப்பட்டிருந்தது. நான் அருகில் போய் நின்றேன். அக்காவின் முகத்தையே பார்த்தேன். கையில் வைத்திருந்த பாக்ஸைப் பிரிக்க உள்ளே ரசம் ஊற்றி சாதம் பிசைந்து வைத்திருந்தார்கள். மற்றவர்கள் அங்கே வைக்கப்பட்டிருந்த அரிசியிலிருந்து ஒரு பிடி அள்ளி அக்காவின் வாயில் போட்டு நெஞ்சில் காசைத் தூக்கிப்போட்டு விலக, நான் அந்தக் காரியம் செய்தேன்.

இந்திராணியின் கண்கள் திறந்து என்னையே பார்த்துக்கொண்டிருப்பதுபோல் தெரிந்தது.

நான் ரசம் சாதம் பிசைந்து சாப்பிடத் தொடங்கினேன். சுற்றியுள்ளவர்கள் வினோதமாய் என்னைப் பார்க்க கண்ணீர் வழிந்து, என் கையில் பட்டுத் தெறித்து சாதத்தில் விழுந்து சோற்றில் குறைந்த உப்பின் ருசியை சமன்படுத்தியது. யாரோ என் தோள் தொட்டார்கள். எதையும் கவனிக்காமல் என்னையே பார்த்துக்கொண்டிருக்கும் இந்திராணியின் கண்களைப் பார்த்தவாறே முழுவதும் சாப்பிட்டு முடித்தேன். அந்த டிபன் பாக்ஸை வெகு கோபமாய் கை உயர்த்தி தூர எறிந்தேன். என் கண்ணீர் நின்றிருந்தது. மாமாவிடம் வந்து நின்று என் பேன்ட் பாக்கெட்டில் மடித்து வைத்திருந்த பத்திரத்தை எடுத்து நீட்டினேன்.  அழுதுகொண்டே முடியாது என்று தலையசைத்து மறுத்தவரின் கைகளில் பத்திரத்தாளைத் திணித்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் நடக்கத் தொடங்கினேன். நெஞ்சுக்கூடு வேக, திகுதிகுவென்று ஜோராய் எரிந்துகொண்டிருந்தது அக்காவின் பிணம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism