Published:Updated:

“நாம் அவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது!” - டிராட்ஸ்கி மருது

“நாம் அவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது!” -  டிராட்ஸ்கி மருது
பிரீமியம் ஸ்டோரி
“நாம் அவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது!” - டிராட்ஸ்கி மருது

சந்திப்பு: வெய்யில், வெ.நீலகண்டன்

“நாம் அவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது!” - டிராட்ஸ்கி மருது

சந்திப்பு: வெய்யில், வெ.நீலகண்டன்

Published:Updated:
“நாம் அவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது!” -  டிராட்ஸ்கி மருது
பிரீமியம் ஸ்டோரி
“நாம் அவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது!” - டிராட்ஸ்கி மருது

னக்கு ஒரு நீங்கா கனவு இருந்தது. அனைத்துக் கலைகளும் ஒருங்கிணைந்த, அருகருகே வகுப்புக் கூடங்கள்கொண்ட ஒரு பயிற்சி மையத்தைத் தொடங்க வேண்டும்!

தமிழகத்தைப் பொறுத்தவரை கலைஞர்களும் கலைகளும் சிதறிக் கிடக்கின்றன/ர். இசை கற்பவர்கள் தனியாக, நடனம் பயில்பவர்கள் தனியாக, ஓவியம் கற்பவர்கள் தனியாக என ஒவ்வொரு கலையும் தனித்தே இயங்குகிறது. கலைஞர்களும் அப்படியே. கலைஞர்களுக்கு, கலை மாணவனுக்கு அதன் இணைகலைகள் குறித்த அறிதல் வேண்டும். ஒரு கலைஞனாக  எதிர்காலத்திற்கு நீங்கள் தயாராக வேண்டும் எனில், ஓவியம், புகைப்படம், கிராஃபிக்ஸ், அனிமேஷன், இசை, நாடகம், சினிமா என அனைத்துக் கலைவடிவங்களின்மீதும் ஈடுபாடு வேண்டும்.

1970-களில் நான் ஓவியக் கல்லூரியில் படித்தபோது, நான்காவது ஆண்டில் அஹமதாபாத்தில் உள்ள, ‘நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைனு’க்கு நாங்கள் சுற்றுலா சென்றோம். அங்கு சென்ற பிறகுதான் அங்கே அனிமேஷன் கற்றுக்கொடுக்கப்படும் செய்தியே எனக்குத் தெரிந்தது. `அடடா... இங்கு வந்து படித்திருக்கலாமே’ என்று தோன்றியது. அனிமேஷனுக்கு என்று ஒரு பயிற்சி மையம் இருப்பதையே தெரிந்துகொள்ள முடியாத அளவுக்குத்தான் இங்கே கலைப் படிப்புகளில் ஒருங்கிணைப்பு இருக்கிறது.

“நாம் அவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது!” -  டிராட்ஸ்கி மருது

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதன் பிறகு, நானே என் சுய முயற்சியில் அனிமேஷன் கற்றுக்கொண்டேன். ஆனால், சென்னை ஓவியக் கல்லூரியில் நான் படித்தபோது யாரிடமும் அதுபற்றிப் பேசக்கூட முடியாது. காரணம்,  ஆசிரியர்களுக்கும்கூட அனிமேஷன் பற்றியோ, காமிக்ஸ் குறித்தோ பெரிய பார்வையெல்லாம் இல்லை. அதை அறிந்து கொள்ளும் ஆர்வமும் இல்லை.

வீடியோ டெக்னாலஜி வளர்ந்து கொண்டிருக்கிறது. சினிமா வளர்ந்து கொண்டிருக்கிறது. இசை, நடனம், கணிப்பொறித் தொழில்நுட்பம் என அது சார்ந்த கலைகளும் வளர்கின்றன. ஆனால், இவையனைத்தும் அருகருகே இருக்க வேண்டிய, ஒன்றோடு ஒன்று கலக்க வேண்டிய அவசியத்தை யாரும் உணரவில்லை. இந்தியாவில் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைனுக்கு மாற்றாக வேறு நிறுவனங்கள் இல்லை. தென்பகுதியில் இருந்து அஹமதாபாத் சென்று படிப்பவர்கள் பெரும்பாலும் திரும்பவும் இங்கு வருவதில்லை. அந்தப் பகுதிகளிலேயே தங்கி விடுகிறார்கள். அல்லது வெளிநாடுகளுக்குச் சென்றுவிடுகிறார்கள். இங்கு திரும்பிவரும் சிலரும் ஏதோ ஒரு விதத்தில் கரைந்துவிடுகிறார்கள்.

அண்மையில் நான் பிரான்ஸ் சென்றிருந்தபோது, மௌனகுரு அங்கே வந்திருந்தார். இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பெரிய அரங்கக் கலைஞர். நாங்கள் அங்கிருக்கும் அரங்கக் கலைஞர்கள் பலரையும் சந்தித்துப் பேசினோம். அந்தத் தருணத்தில்தான் இப்படி ஓர் ஒருங்கிணைந்த பயிற்சிக்கூடம் பற்றிய கனவை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டோம். பல்கலைக்கழகப் பொறுப்பில் இருக்கும் ஜெய்சங்கர், சிறீ ரத்னம் உள்ளிட்டோரும் அதை முன்னெடுத்தனர். அதன் தொடர்ச்சியாக, ‘நீங்கள் இலங்கை வரவேண்டும்’ என்று அழைத்தார்கள்.
அதன் அடிப்படையில், அண்மையில் 16 நாள்கள் பயணமாக இலங்கைக்குச் சென்றிருந்தேன். ஏற்கெனவே மூன்று முறை நான் இலங்கை சென்றிருக்கிறேன். ஆனால், இப்போதைய பயணம் பல முக்கியமான திறப்புகளை உருவாக்குவதாக அமைந்தது.

இதுநாள்வரை நான் கனவு கண்டுகொண்டிருந்ததைப் போல, மட்டக்களப்பில் உள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான ‘விபுலானந்தர் அழகியல் கற்கை நிறுவனம்’ செயல்படுவதைக் கண்டேன். சுமார் 1000 மாணவர்கள் அங்கே கற்கிறார்கள். தியேட்டர், பெயின்டிங், மியூஸிக், டான்ஸ் என அனைத்துத் துறை மாணவர்களும் ஒரே வளாகத்தில் பயில்கிறார்கள். தொடர் யுத்தம், நெருக்கடியான வாழ்வாதாரச் சிக்கல்களைக் கடந்துவந்ததால், அவர்கள் உருவாக்குகிற நுண்கலைகள், நிகழ்த்துகிற நாடகங்கள், மிகவும் உணர்வுபூர்வமாகவும் உக்கிரமானதாகவும் இருக்கின்றன.அரங்கியல் மாணவர்களுக்கு அங்கு படிக்கும் ஓவியத்துறை மாணவர்கள் போஸ்டர் டிசைன் செய்து தருகிறார்கள். இசை படிப்பவர்களும், நடனம் படிப்பவர்களும் தியேட்டரில் பங்கேற்கிறார்கள். பர்தா போட்டுக்கொண்டு இஸ்லாமியப் பெண்கள் ஓவியம் கற்க வருகிறார்கள். மிகவும் உற்சாகமான மனநிலையில் நான் கிழக்குப் பல்கலைக்கழக நிகழ்வுகளில் பங்கேற்றேன். வேலைவாய்ப்பை அதிகரிக்கச் செய்ய வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினேன். ‘இனி அனிமேஷனைத் தவிர்த்துவிட்டு எந்தத் துறையும் இயங்கப்போவதில்லை. அதுபோலவே காமிக்ஸ் புத்தகம் வரையும் நுட்பமான ‘சீக்வென்டல் ஆர்ட்’, சினிமா உட்பட அனைத்துக் கலைகளும் அவற்றை நோக்கி வந்துவிட்டன. பொதுவான அழகான உலகப் பெருமொழியாகிவிட்டது அனிமேஷன். அதனால், இவை இரண்டையும் பாடத்திட்டத்தில் அவசியம் சேர்க்க வேண்டும்’ என்று வலியுறுத்தினேன்.

“நாம் அவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது!” -  டிராட்ஸ்கி மருது

இன்று உலகம் எவ்வளவோ மாறிவிட்டது. கலை குறித்த பார்வைகள் மாறிவிட்டன. ஒரு திரைப்படத்திற்கு வரையப்படும் ‘ஸ்டோரி போர்டு’ அந்தப் படம் எடுக்கப்பட்ட பின்  மதிப்பிழந்துவிடுகிறது, தேவையற்றதாகிவிடுகிறது அல்லவா? ஆனால், பிரான்ஸில் அதைக் கொண்டாடுகிறார்கள். பொக்கிஷமாகப் பாதுகாக்கிறார்கள். ஸ்டோரி போர்டுகளுக்கு எனத் தனியே ஓர் இதழே வெளியாகிறது. இணையதளங்களில் நமது இளைஞர்கள் உருவாக்கிப் பகிர்கிற ‘மீம்ஸ்’கூட கலைதான். ஒருவகையில் அதை ‘புவர்மேன்  அனிமேஷன்’ (Poor Man Animation) என்று சொல்லலாம்.  இப்படியாக, டிஜிட்டல் ஆர்ட், போட்டோ கிராஃபி, அனிமேஷன், இசை, வேலைவாய்ப்பு சாத்தியங்கள் என மாணவர்களோடு நிறைய உரையாட முடிந்தது. 

நான் சென்ற நேரத்தில், நாடக விழா நடந்துகொண்டிருந்தது. அந்த மாணவர்கள் நிகழ்த்திய ஏழு நாடகங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.  அரங்கியல் கலையில் பெரும் உயரத்தில் அவர்கள் இருக்கிறார்கள். சகல உத்திகளையும் கையாள்கிறார்கள். பிரச்னைகளை, வலியை கலைவடிவங்க ளோடு பிசைந்து அற்புதமாகக் காட்சிப் படுத்திக் கடத்துகிறார்கள். அவர்களது ஓவியமாகட்டும் நாடகமாகட்டும் மிகவும் அரசியல்பூர்வமாக இருக்கின்றன.  ஒரு பிரசாரமாக அல்லாமல் அரசியல் நுண்ணுணர்வோடும் கலைத்தன்மையோடும் வெளிப்படுகின்றன. ஒரு நாடகம் பார்த்தேன்,  போரில், இடிபாடுகளுக்குள்ளும், குழிகளுக்குள்ளும், சேற்றில் சிக்கிக்கொண்டும் காணாமல்போனவர்களின் புகைப்படங்களை ஏந்திக்கொண்டு  தனது உறவுகளைத் தேடும் காட்சி என்னை உலுக்கிவிட்டது. ஊர் திரும்பிய பின்னும் என்னை மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளாக்கிக்கொண்டிருந்தது. நான் அந்தக் காட்சியின் பாதிப்பை சில ஓவியங்களாக வரைந்தேன்.

இந்தப் பயணத்தில் இரண்டு நாள்கள் யாழ்ப்பாணத்துக்குச் சென்றிருந்தேன். முதன்முறை நான் யாழ்ப்பாணம் சென்றபோது அது இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. அப்போது அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து வந்தது. புலிகள், ‘மானுடத்தின் ஒன்றுகூடல்’ என்ற நிகழ்ச்சியை நடத்தினார்கள். அந்த நிகழ்ச்சிக்கான லோகோ, போஸ்டர்களை நான்தான் வடிவமைத்திருந்தேன். நிகழ்ச்சியில் விருந்தினராகவும் பங்கேற்றேன். இரண்டாம் முறை, ஒரு முகாமுக்காகச் சென்றிருந்தேன், அப்போது கவிதாபாரதி உடன் வந்திருந்தார். அந்த நேரத்தில்தான் வாழ்வில் மறக்க முடியாத சுனாமி அனுபவத்துக்கு ஆளானேன். அதை நினைத்தாலே இப்போதும் சிறு நடுக்கம் வரும். அப்போது நான் கண்ட பேரழிவுக்  காட்சிகள் எல்லாம் இன்னும் என் கண் முன்னால் நிற்கிறது.

“நாம் அவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது!” -  டிராட்ஸ்கி மருது

அன்று நான் இலங்கைக்குச் சென்றபோது கிடைத்த அனுபவங்களுக்கு நேர்முரணான அனுபவம் இந்த முறை கிடைத்தது. போர் முடிந்து, மீட்ட பொருள்களை எல்லாம்  வெற்றிச் சின்னங்களாகக் குவித்து, சுற்றுலாத் தளமாக்கிவைத்திருக்கிறது இலங்கை அரசு. ஈழப் பிரச்னை, யுத்தம் பற்றியெல்லாம் அனுபவமில்லாத புலம்பெயர் ஈழ மக்களின் மூன்றாம் தலைமுறைப் பிள்ளைகள் அவற்றைப் பார்க்க சுற்றுலா வருகிறார்கள். போரில் இரண்டு கால்களையும் இழந்த போராளி, தள்ளுவண்டியில் அமர்ந்தபடி அவர்களிடம் கடலை விற்றுக் கொண்டிருக்கிறார். நினைத்துக்கூடப் பார்க்க முடியாத கொடுமை. போர்ச்சூழலில் தங்களையும் பிள்ளைகளையும் பாதுகாப்பதே பெரிய விஷயம் எனும்போது தெரு நாய்களை எப்படிக் கவனித்துக்கொள்ள முடியும்? கடல்தாண்டி புலம்பெயரும்போதும் தங்களது வளர்ப்புப் பிராணிகளை கையோடு தூக்கிக்கொண்டு செல்வதை நாம் பார்த்திருக்கிறோம் என்றாலும், இன்று அங்கே தெருநாய்களின் நிலை மிகவும் பரிதாபம். அதன் கண்களை  என்னால் எதிர்கொள்ளவே முடியவில்லை.   

“நாம் அவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது!” -  டிராட்ஸ்கி மருது


மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மேல் எழுந்து வருகிறார்கள். ஆனால், அரசின் நிலையோ, செயல்பாடுகளோ இன்னும் மாறவில்லை. ஆக்கிரமிக்கப்பட்ட  பெருமளவு காணிகள் இன்னும் உரியவர்களுக்கு வழங்கப்படவில்லை. கோயில்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. சீனர்கள் சாலை போடும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள். சில தீவுகள் சாலைகளால் இணைக்கப் பட்டுள்ளன. அந்தத் தீவுகளில் மிகக்குறைவான மக்களே வாழ்கிறார்கள்.  ‘அங்கெல்லாம் நிறைய வளங்கள் கொட்டிக்கிடக்கின்றன. அதையெல்லாம் கொள்ளை அடிக்கத்தான் தீவுகளை இணைத்து சாலை போடுகிறார்கள்’ என்று மக்கள் கூறுகிறார்கள்.

அதேசமயம், இந்தப் பயணத்தில் அந்த மக்கள் மத்தியில் ஒரு மெல்லிய நம்பிக்கை துளிர்த்திருப்பதையும் பார்த்தேன். கடந்தமுறை சென்றபோது, யாரையும் நம்பி பேசக்கூட முடியாத நிலையில் அவர்கள் இருந்தார்கள். இன்று அந்த நிலை மாறியிருக்கிறது. கொஞ்சம் அச்சம் தளர்ந்திருக்கிறது.

“நாம் அவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது!” -  டிராட்ஸ்கி மருது

சனாதனன் என் நெடுநாளைய நண்பன். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக நுண்கலைத்துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறான். நான் நெசவாளர் சேவை மையத்தில் இருந்தபோது,  சென்னைக்கு வருவான். சென்னையில் படிக்க அவனுக்கு விருப்பம். ஆனால், அப்போதிருந்த அரசியல் சூழலில் சென்னையில் இடம் கிடைக்கவில்லை. பிறகு, ‘டெல்லி காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸி’ல் சேர்ந்தான். நான் டெல்லி சென்றால், அவனோடுதான் தங்குவேன். அப்போதே தீவிரமாக எழுதுவான். நான் ஈழம் செல்லும்போதெல்லாம், கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவுப் பகுதிகளில்  ஒரு காட்சியைப் பார்ப்பதுண்டு, போராளிகளில் சிலர் நன்றாக வரைவார்கள். போரில் உயிர்நீத்தவர்களின் படங்களை வரைந்து பேனர் வைப்பார்கள். அந்த ஓவியங்களில் சினிமா, காலண்டர் படங்களின் தாக்கம் இருக்கும். நானும் சனாதனனும் இதுபற்றித் தீவிரமாக விவாதிப்போம். அந்த விவாதத்தின் அடிப்படையில் ‘சமகாலத்துக் கடவுளர்களின் முகங்கள்’ என்ற தலைப்பில் அவன் ஒரு கட்டுரை எழுதினான்.  ‘காலச்சுவடு’ இதழில் வெளிவந்த அந்தக் கட்டுரை பெரிதும் கவனம் பெற்றது.

1985-ல் சாரங்கனோடு இணைந்து நான்  ஒரு முயற்சி செய்தேன். கும்பகோணம் கண்ணையா ஸ்டூடியோ, மதுரை கைலாஷ் ஸ்டூடியோ மாதிரி தமிழகத்தின் ஆகப்பழமையான போட்டோ ஸ்டூடியோக்களைப் பற்றி டாகுமென்ட் செய்யக் கிளம்பினோம். ஆனால், பல காரணங்களால் அந்தப் பணி நிறைவடையவில்லை. இதே வேலையை சனாதனன் இலங்கையில் செய்தான். குண்டு வெடிப்புகளில் தரைமட்டமான வீடுகளின் பழைய புகைப்படங்களைச் சேகரித்து, இலங்கையில் ஒரு கண்காட்சி நடத்தினான்.  சுமார் 180 போட்டோக்கள்... நாடகக் கலைஞர்களின் படங்கள், குடும்பப் படங்கள், குழந்தைப் பருவப் படங்கள் என மிக முக்கிய ஆவணங்கள் அவை.

“நாம் அவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது!” -  டிராட்ஸ்கி மருது

சமீபத்தில் நான் இலங்கை சென்றபோது, சனாதனன் எனக்கு ஒரு புத்தகத்தைக் கொடுத்தான். போரில் வீட்டைப் பறிகொடுத்த 150 பேரிடம் தங்கள் வீட்டைப் பற்றிக் கேட்டு, அவர்களின் நினைவுகளைத் தொகுத்திருக்கிறார்கள்.  அற்புதமான பணி.

மட்டக்களப்பில் உமாவரதராஜன் ஏற்பாட்டில் இலக்கிய ஆளுமைகள், பத்திரிகையாளர்கள் பலரையும் சந்தித்து உரையாடினேன். அவ்வளவு உக்கிரமான போர்ச்சூழலிலும் தனது இசையால் மக்களை ஒன்றிணைத்த கண்ணன் மாஸ்டரோடு இரண்டு நாள்கள் தங்கியிருந்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.  

புகழ்பெற்ற ஓவியங்கள் இருக்கும் சிக்கிரியாவுக்கும், புலனருவைக்கும் செல்ல வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. இந்தப் பயணத்தில் அது சாத்தியமானது. என்னோடு ஓவிய மாணவர்களும் பேராசிரியர்களும் வந்தார்கள். சிக்கிரியா, மட்டக்களப்புக்கு அருகில் இருக்கிறது. அந்த மலைப்பிரதேசத்தில் கால் வைத்தபோது, மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. சிக்கிரியாவின் மேலே செல்ல முடியவில்லை. கீழே இருந்த ஓவியங்கள் அழிந்துவிட்டன. சறுக்கலான மலையின் உச்சியில் பூக்களுடன் கூடிய எட்டு உருவங்கள் இடம் பெற்றிருக்கின்றன. புலனருவையில் படுத்தபடி இருக்கும் புத்தர் சிலை அற்புதமானது. ஹம்பிக்கு இணையான தொல்பொருள் சின்னம் அது. சோழர் காலத்திய சிற்பம். ஆனால், இலங்கை அரசு, நம் பெயரை அழித்துவிட்டு சுற்றுலாப் பயணிகளுக்குத் தவறான வரலாற்றைச் சொல்லி வருகிறது.

கடும் யுத்தம், பேரழிவு, நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ஈழத்தமிழர்கள் கலை வடிவங்களில் மிகப்பெரும் இலக்கைத் தொட்டிருக்கிறார்கள். வேகம் குறையாமல் பயணித்துக்கொண்டும் இருக்கிறார்கள். தமிழகத்தில் நாம் செய்ய எண்ணிய செயல்களை எல்லாம் அவர்கள் வெற்றிகரமாகச்  செய்து முடித்திருக்கிறார்கள். அரங்கியல் கலையில் குறிப்பிடத்தகுந்த இடத்தைப் பிடித்துவிட்டார்கள். செயல்பாடுகளைப் பொறுத்தவரை நாம் அவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism