
மாநகரைப் பாதியாக்கியிருக்கிறது மிக நீண்ட பகல்
நடைமேம்பாலச் சிறுமியின் மெலிந்த பாடலில் ஒளிந்துகொண்டிருந்த நகரவாசிகள்
மிக மெதுவாக வெளியேறுகின்றனர்
அவ்வளவு சிறிய வாழ்விலிருந்து.
இந்த வாரம் காணாமல்போன முதியவர் சரிந்த சுவரொட்டியிலிருந்தபடி
தன்னிருப்பிடம் அழைத்துச்செல்ல அவர்களிடம் மன்றாடிக்கொண்டிருக்கிறார்.
எல்லோரையும் வரவேற்றிடும்
வணிக வளாகத்தின் மிகப் பெரிய பொம்மைகளுக்குள்ளிருக்கும்
உயிருள்ள சிறிய இதயத்திற்கு, எப்போதும் மிகவும் பசிக்கிறது


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இப்பிரபஞ்சத்திலிருந்தே தனித்திருக்க வேண்டுமது
விழுகின்ற மனிதவுருவம் பதித்த சிக்னலுக்கென நிற்பதற்கும் நகர்வதற்கும்
இடையில் சாவதற்கும் எஞ்சியவர்கள் எவரேனுமிருக்கிறார்கள்.
யாரும் யாருடனுமற்ற நெரிசலில்
முழுவதும் காலியான மனிதர்களின் இருப்பை
மிக அவசரமாக நேர்த்தியாக்க வேண்டும் மாநகருக்கு.
காய்ந்த நிலத்தில்
முடியத் தொடங்கிய இன்றையப் பகலில் பசிக்கென ஒற்றைக்காகம் கரைகிறது,
அவ்வளவு தனிமையாக
அவ்வளவு வன்மையாக...
ஓர் இடைவெளியில் நிறைய்ய காலிசெய்வதற்கென யிருந்த பேரன்புகளை
துண்டு நோட்டீஸென வருவோர்போவோரிடமெல்லாம் விநியோகித்துக்கொண்டிருக்கிறது நகரம்.
ஒவ்வொரு முறையும் விற்கின்ற கத்தும் நாய்பொம்மைகளின் ஞாபகங்களை
நடைபாதையிலே விட்டுச் செல்கிறானவன்.
மதியத்தில் விரைந்திடும் பீட்சாக்காரனின் மோட்டார் சைக்கிளைப் பின்தொடர்கிறது
அந்நகரின் பெரும் பசி.
ஏடிஎம் வரிசையில் மிகக் கடைசியில் நின்றுபார்த்து மகிழ்கிறது எதுவுமற்ற வாழ்வு
திரும்பத் திரும்ப சிரித்தும் அழுதும் தன்னைத் தகவமைத்துக்கொள்கிற தது
அவ்வளவொன்றும் துயரமிருப்பதாய் தெரிவதில்லை
தினசரியின் நோய்கள் எல்லோருக்கும் பழக்கமாகிவிட்டது
நீங்கள் வந்தடைந்திருக்கும் மிகப் பெரிய கட்டடத்திலிருக்கும் சின்ன ஜன்னல் வழியே
நகரைப் பார்த்துக்கொண்டிருப்பதென்பது
மிகப் பெரிய ஆனந்தமானதுதான்.
ஆனால்.
இப்போதிருந்தே ஆரம்பிக்க வேண்டும் எவனைப்போலவோ இந்நிலத்தில்.
சற்று கரடுமுரடாக அலைந்து திரிவதற்கு.