Published:Updated:

எனக்குப் பிடித்த சிறுகதைகள் - ஆர்.அபிலாஷ்

எனக்குப் பிடித்த சிறுகதைகள் - ஆர்.அபிலாஷ்
பிரீமியம் ஸ்டோரி
எனக்குப் பிடித்த சிறுகதைகள் - ஆர்.அபிலாஷ்

எனக்குப் பிடித்த சிறுகதைகள் - ஆர்.அபிலாஷ்

எனக்குப் பிடித்த சிறுகதைகள் - ஆர்.அபிலாஷ்

எனக்குப் பிடித்த சிறுகதைகள் - ஆர்.அபிலாஷ்

Published:Updated:
எனக்குப் பிடித்த சிறுகதைகள் - ஆர்.அபிலாஷ்
பிரீமியம் ஸ்டோரி
எனக்குப் பிடித்த சிறுகதைகள் - ஆர்.அபிலாஷ்

மிழின் சிறந்த சிறுகதையாளர்கள் என நான் கருதுபவர்களின் சிறந்த கதைகளைப் பற்றி மட்டுமே இங்கே பேசியிருக்கிறேன். அதிலும், கூடியவரை அவர்களின் அதிகப் பிரபலமான கதைகளைத் தவிர்த்திருக்கிறேன். ஓரளவுக்கு மேல் ஓர் இதழின் பக்கங்களை எடுத்துக்கொள்ள முடியாது அல்லவா? அதனால் புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, தி.ஜானகிராமன், மௌனி, கோணங்கி, இமையம், ஜே.பி.சாணக்யா போன்ற சில அற்புதமான சிறுகதையாளர்களைப் பற்றிப் பேச முடியாமல் போயிற்று. அதற்கு மற்றொரு சந்தர்ப்பம் அமையும் என நம்புகிறேன். இனி ஒவ்வொரு கதையாகப் பார்க்கலாம்...

எனக்குப் பிடித்த சிறுகதைகள் - ஆர்.அபிலாஷ்

“ராமசாமிகள் வம்ச சரித்திரம்: மறைக்கப்பட்ட உண்மைகள்”

– எஸ்.ராமகிருஷ்ணன்

எஸ்.ராமகிருஷ்ணன் தனது நெகிழ்ச்சியான, தீவிரமான, கவித்துவமான கதைகளுக்காக அறியப்பட்டவர். அவரின் கதைமாந்தர்கள் கைவிடப்பட்டவர்கள்; கசப்பின் சாற்றைக் குடித்து ஒடுங்கியவர்கள். இப்படியெல்லாம் அறியப்பட்ட எஸ்.ரா, ஓர் அட்டகாசமான நகைச்சுவைக் கதையை எழுதியிருக்கிறார். அதுதான் ‘ராமசாமிகளின் வம்ச சரித்திரம்’. ஒருநாள் ஒரு விசித்திரம் நடக்கிறது. ராமசாமி என்ற பெயர்கொண்ட அத்தனை பேரும் ஓரிடத்தில் ஒன்றுகூடி மாநாடு நடத்துவது என முடிவாகிறது. ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் ராமசாமிகள் சென்னை நகரை நோக்கி வந்துகொண்டே இருக்கிறார்கள். அப்போது நடக்கும் அபத்தங்களும் விசித்திரங்களுமே இந்தக் கதை.

‘ராமசாமிகள் நேற்றே ரயிலில், லாரிகளில் வந்து குவியத் தொடங்கிவிட்டார்கள். தாம்பரம் ரயில் நிலையத்தில் எட்டாயிரம் ராமசாமிகள் டிக்கெட் வாங்காமல் பிடிபட்டு நிற்பதாகத் தகவல் வருகிறது. ராமசாமிகளின் மாநாட்டுக்காக எல்.ஐ.சி-யின் பதினான்கு மாடிகளும் காலி செய்யப்பட்டு விட்டன. எல்லா மாடிகளிலும் ராமசாமிகள் நிறைந்துவிட்டார்கள். துவைத்துக் காயப் போட்ட ஈரவேஷ்டிகள் படபடக்க எல்லா ஜன்னல்களிலும் ராமசாமிகளின் தலை தெரிகின்றன... யாரோ ஒருவன் ராமசாமி எனக் கைதட்டிக் கூப்பிட, அலைபோல பல வயது முகங்கள் திரும்புகின்றன. ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் எழுத்தாள ராமசாமிகளைக் காண, மற்ற ராமசாமிகள் முட்டி மோதிக்கொண்டு நின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எனக்குப் பிடித்த சிறுகதைகள் - ஆர்.அபிலாஷ்… பிளாட்பாரத்தில் ரயில் வந்து நின்றது.  ‘சூடான நாவல் சார், சூடான சிறுகதை சார், கவிதை சார்... கவிதை சார்... கதை சார்…’ எனப் புத்தகங்களைக் கூவி விற்றுக்கொண்டு போனார்கள் நீலநிற ஊழியர்கள். தனிக் குளிர்சாதனப் பெட்டியில் உட்கார்ந்திருந்த நீர்வீழ்ச்சி ராமசாமி, தன் அன்பர்களிடையே சொன்னார்,

‘இந்த ஊர் நாவல் ரொம்ப நல்லாயிருக்கும். வட்டாரத்து ருசி அப்படி.’

அன்பர்கள் ஓடிப் போய் ஆளுக்கொரு நாவல் வாங்கி வந்து சுடச்சுடப் படித்தார்கள்.’

இப்படி இந்தக் கதை முழுக்க ரொம்ப சீரியஸான வரிகள், அவற்றைத் தொடர்ந்து தலைகீழாய் கவிழ்த்துப் பகடி செய்யும் ஒரு சித்திரம் என வந்துகொண்டிருக்கும். ஒரு பக்கம் இலக்கிய உலகின் மோஸ்தர்களை, மிகைகளை, தொன்மங்களை வேடிக்கை செய்கிறது. இன்னொரு பக்கம் இது எஸ்.ராவின் ஓர் அரசியல் பகடிக் கதையாகவும் உள்ளது. அது என்ன அரசியல்? சாதி அரசியல். தமிழர்கள் எப்போது சாதி எனும் ஒற்றைப் புள்ளியின் கீழ் ஒன்றுபடுகிறவர்களாக இருப்பார்கள். சாதி என்று வரும்போது அவர்களின் லட்சியவாதம், கருத்தியல், முஸ்தீபுகள் எல்லாம் காற்றில் பறந்து போகும். ராமசாமி என்னும் பெயருள்ள அனைவரும் கூடுவது என்பதை நாம் சாதி சங்கப் பேரவைகள், ஊர்வலங்கள், கருத்தரங்குகள் மீதான பகடியாகப் பார்க்கலாம்.

எனக்குப் பிடித்த சிறுகதைகள் - ஆர்.அபிலாஷ்

‘ஆயிரங்கால் மண்டபம்’

- ஜெயமோகன்

‘ஆயிரங்கால் மண்டபம்’ ஜெயமோகனின் கதைகளில் மிகவும் காட்சிப்பூர்வமானது. அவரது கதைகளில் ஆசிரியரின் கருத்துகள் துருத்தி நிற்காத கதை இது. தன் உறவு முறை அக்காவின் திருமணத்தன்று, ஆயிரங்கால் மண்டபத்துச் சிலைகளை வேடிக்கை பார்த்து, அவற்றுடன் பேசும் செண்பகக் குழல்வாய்மொழி எனும் சுட்டியான, அசட்டுத்தைரியமும் கற்பனையும் கொண்ட சிறுமியின் பார்வையில் கதை விரிகிறது.

இந்தக் கதையின் ஒரு மறக்க முடியாத பாத்திரம் அந்தச் சிறுமி செண்பகக்குழல்வாய் மொழி. முன்பு ஒருமுறை இந்தக் கதை பற்றி ஜெயமோகன் என்னிடம் பேசும்போது, செண்பகக்குழல்வாய் என்னும் பெயரைத் திரும்பத் திரும்ப மனதுக்குள் உருப்போட்டு, அதன் போதையில், அக ஊக்கத்தில் இந்தக் கதையை எழுதியதாகச் சொன்னார்.

கதையில் அந்தச் சிறுமி பேசிக்கொண்டிருக்கையில், மண்டபத்தில் சிலையாக நிற்கும் குதிரை வீரர்களும் கின்னரர்களும் உயிர்பெறுகிறார்கள். அவர்கள் கல்யாணப் பெண்ணைத் தூக்கிப் போய் விடுவார்கள் என அவள் அஞ்சுகிறாள். பிறகு, அவர்கள் தனக்குப் பிடிக்காத தன் அத்தைகளைப் போய் அச்சுறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறாள். கதையின் இறுதியில் மணப்பெண் கிணற்றில் போய்க் குதிக்கிறாள் என உணர்த்தப்படுகிறது. அவளுக்குக் கடுமையான வயிற்றுவலி என செண்பகக்குழல்வாய்மொழி நினைக்கிறாள். அது வயிற்றுவலியா, பிடிக்காத வாழ்க்கை திணிக்கப்படும்போது அந்தப் பெண் உணரும் துக்கமா? அந்தக் குழந்தைக்கும் மணப்பெண்ணுக்குமான உறவுதான் கதையில் ரொம்ப முக்கியம். பெண்ணின் வெளிப்படுத்த முடியாத கசப்பும் அச்சமும் கதையின் மையக்கரு.

கதை முடிகையில் ஆயிரங்கால் மண்டபத்துச் சிலைகள் உறைந்து நெகிழ்ந்து உயிர்கொண்டு, மீண்டும் ஏதோ ஒரு பொறியில் கால்மாட்டிக்கொண்ட விலங்கைப்போல் நகர முடியாது உறைகின்றன. இது ஒரு குறியீடாகத் தத்ரூபமாய்க் கதையில் உருப்பெறுகிறது. இந்த உறைந்த சிலைகள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம் இந்தப் பெண்களின் அக உலகம்தான். காற்றில் பறக்கும் நிலையில் உறைந்துபோன குதிரைக் கால்கள் பெண்களுடைய மனதின் குறியீடு.

எனக்குப் பிடித்த சிறுகதைகள் - ஆர்.அபிலாஷ்

‘கந்தசாமியை யாருக்கும் தெரியவில்லை’

- அசோகமித்திரன்

கடந்த மாதத்தில் என் அலுவலக நண்பர் ஒருவரின் அப்பா இறந்துவிட்டார். துக்கம் கேட்பதற்காக, அலுவலக நண்பர்கள் ஒன்றுசேர்ந்து ஒரு வாடகைக் காரில் போனோம். வீட்டைக் கண்டுபிடிப்பது எளிதாக இல்லை. நாங்கள் ஒரே தெருவிலேயே சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தோம். நண்பரின் வீட்டுக்கு இதற்கு முன்பு யாரும் போனதில்லை என்றாலும், ஒரு மரணம் நேர்ந்த வீடு பார்க்கத் தனியாகத் தெரியும் என நினைத்தேன். அந்த வீட்டுக்கு என்றே மக்கள் வந்துபோனபடி இருப்பார்கள். தெருவுக்கே ஒரு மரணக்களை இருக்கும். அங்கு போகும் வரை எனக்கு ஒரு நம்பிக்கை இருந்தது, வீட்டை எளிதாகக் கண்டுபிடித்து விடலாம் என்று. ஆனால், உண்மை அப்படி இல்லை. ஒருவழியாக வீடு இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்தோம். என்றாலும், எனது பழைய அனுமானங்கள் காலத்தில் மாறிவிட்டிருப்பதை உணர்ந்தேன்.

எனக்குப் பிடித்த சிறுகதைகள் - ஆர்.அபிலாஷ்


நான் கிராமத்து மனிதன். எங்கள் கிராமத்தில் ஒருவர் இறந்துவிட்டால், பக்கத்து டவுன் வரை எல்லோருக்கும் தெரிய வரும். பிணத்தைத் தூக்கி எரித்து, சடங்குகளை முடித்து, குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வது வரை ஊரே திரண்டு வந்து செய்யும். சென்னைக்கு வந்த பின் நான் பெரும்பாலும் கீழ்மத்திய வர்க்கக் குடியிருப்புகளில்தான் வாழ்ந்திருக்கிறேன். அங்கும் மரணம் ஒரு சமூக நிகழ்வுதான். போன வருடம் என் குடியிருப்பில் ஒரு தம்பதி தற்கொலை செய்துகொண்டனர். நூற்றுக்கணக்கான உறவினர், தெரிந்தவர்கள், நண்பர்கள் எனக் கூடி அமர்க்களப் படுத்தினார்கள். ஆனால், தொடக்கத்தில் நான் குறிப்பிட்ட நண்பர் வாழ்வது ஒரு மேல்தட்டுக் குடியிருப்பு. அங்கே தமது பக்கத்து வீட்டில் இழவு விழுந்திருப்பதுகூடத் தெரியாமல் மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். நாங்கள், “இங்கே ஒருவர் காலையில் இறந்துபோனாரே...” என விசாரிக்கிறோம். யாருக்கும் தெரியவில்லை. நண்பரின் குடியிருப்பில் வசிக்கிற ஒருவர், “அப்படி இங்கே யாரும் இறக்கவில்லையே; ஒருவேளை பக்கத்துத் தெருவிலாக இருக்கலாம்” என்றார். கடைசியில் வீட்டைக் கண்டுபிடித்துப் போனபோது, பிணத்தை ஹாலில் கிடத்தி இருந்தார்கள். நண்பரின் அம்மா பேயறைந்ததுபோல் ஒரு நாற்காலியில் இருந்தார். நண்பர் இன்னோர் அறையில் தனித்து இருந்தார். நாங்கள்தான் அங்கு விசாரிக்கச் சென்ற முதல் மனிதர்கள். அந்த உடல், அரை நாளாய் அந்த வீட்டில் மனைவி, மகனின் முன் தனித்து இருந்திருக்கிறது. துக்கத்தைப் பங்குவைக்க யாரும் இன்றி பிணத்துடன் அமர்ந்திருப்பது எப்படி இருக்கும், யோசித்துப் பாருங்கள்! இந்த அபத்தத்தை, அவலத்தை, விசித்திரத்தைச் சித்தரிக்கும் அசோகமித்திரனின் கதைதான்  ‘கந்தசாமியை யாருக்கும் தெரியவில்லை’.

 கந்தசாமி, கிராமத்துக்குப் புதிதாய் வந்து சேர்ந்த மனநலம் பிறழ்ந்த ஓர் ஆள். அவனின் மனைவி ஊமை. ஆக, கிராமத்தில் வசித்தாலும் அவர்கள் தனியர்களாக இருக்கிறார்கள். ஒரு நகரத்தில் வாழ்வதுபோல் தனித்திருக்கிறார்கள். மனைவி தன்னை விட்டுச் சென்றபின் கந்தசாமி தூக்கு மாட்டி இறக்கிறான். ஓர் இரவு முழுக்க அவன் உடலுக்குக் காவல் இருக்கும் மாட்டு வண்டிக்காரன் கோபாலுவின் பார்வையில் கதை செல்கிறது. கந்தசாமியை யாருக்கும் தெரியவில்லை என்பது மட்டுமில்லை, அவனுக்காகத் துக்கம்கொள்ளவும் யாரும் இல்லை. இந்த அந்நியத்தன்மையை அபாரமாய் அசோகமித்திரன் சித்தரித்திருப்பார்.

 ‘குதிரை’

– சுஜாதா

நவீன மனிதனுக்கு இருக்கும் முக்கியப் பிரச்னை எதுவென்றால், இந்த மாநகரத்தில் அவனும் தரையில் ஓடும் சிறு எறும்பும் ஒன்றுதான். அவனுக்கு என்று ஓர் அடையாளம் இல்லை. பெருங்கூட்டத்தின் நடுவிலும் அவன் தனியாக இருக்கிறான். அவன் தனக்கெனத் தனித்துவமான ஒரு பெயரைச் சம்பாதிக்கப் போராடுகிறான். தனக்குத்தானே பிறந்தநாள் வாழ்த்து சுவரொட்டி ஒட்டுகிறான்; டி.வி-யில் தலைகாட்ட அலை மோதுகிறான்; எப்.எம்-மில் ரேடியோ ஜாக்கியுடன் உளறிக் கொட்டுகிறான்; பத்திரிகையில் அவனது இண்டு வரிக் கவிதை பிரசுரமானால் மகிழ்ச்சியில் துள்ளுகிறான்; ஃபேஸ்புக்கில் லைக் விழத் தவமிருக்கிறான்; நவீன வாழ்வின் இந்த அபத்தத்தை மிகவும் வேடிக்கையாகப் பேசும் கதைதான் ‘குதிரை’.

இந்தக் கதையில் கிச்சாமிக்கு ஒரு தனி அடையாளம் கிடைத்துவிடுகிறது. அவரைக் குதிரை கடித்துவிடுகிறது. குதிரை கடிப்பதற்கு முன் அவன் வெறும் கிச்சாமி. கடித்த பின் அவரைப் பற்றி ஊரே பேசுகிறது. ஆஸ்பத்திரிக்குப் போனால், மருத்துவர்கள் அவரைத் தனியாய் அழைத்துக் கவனிக்கிறார்கள். தம் வாழ்வில் இதுபோல் ஒரு கேஸ் கண்டதில்லை என்கிறார்கள். இப்படி வெறும் கிச்சாமி ‘குதிரை கிச்சாமி’ ஆகிறார். ஆரம்பத்தில் குதிரைக் கடி ஏற்படுத்தும் கவனமும் அவஸ்தைகளும் கிச்சாமிக்கு வெறுப்பாக இருந்தாலும் போகப் போக உள்ளுக்குள் இதை ரசிக்க ஆரம்பிக்கிறார். கதையைக் கிச்சாமி இப்படி முடிக்கிறார்: “ஊருக்கு ஊர் கிச்சாமி இருக்கிறார்கள். ஆனால், நாட்டில் ஒரே ஒரு ‘குதிரை கிச்சாமி’ நான்தான் என்பதில் ஓர் அற்ப சந்தோஷம்”.

எனக்குப் பிடித்த சிறுகதைகள் - ஆர்.அபிலாஷ்

இந்தக் கதையின் மற்றொரு சிறப்பு அம்சம் சுஜாதாவின் அபாரமான விஷுவல் வர்ணனைகள் மற்றும் வேடிக்கையான சம்பாஷணைகள். குறிப்பாகக் குதிரை பற்றின வரிகள்:

‘குதிரைகள் என்னைச் சட்டை செய்யாமல் அவ்வப்போது உடம்பில் எதிர்பாராத இடங்களைச் சிலிர்த்துக்கொண்டு தெய்வமே என்று வண்டிக்காரன் கொடுத்ததை மென்று கொண்டிருந்தன.’

கிச்சாமியைக் கடித்த குதிரையின் பேர் சுல்தான். அது உயிருடன்தான் இருக்கிறதா எனப் பார்க்க லாயத்துக்கு கிச்சாமி அடுத்த நாள் போகிறார். குதிரை சேணம் கழற்றிய நிலையில் ஓய்வாக நிற்கிறது. அதை சுஜாதா இப்படி வர்ணிக்கிறார், ‘சேணம் எல்லாம் கழற்றிப் போட்டு, எண்ணெய் தேய்த்துக் கொள்வதற்கு முன்பிருக்கும் நங்கைபோல் இருந்தது.’

‘புத்தன் சொல்லாத பதில்’

– எஸ்.செந்தில்குமார்

தன் வீட்டில் தங்குவதற்காக வரும் புத்தருக்குத் தெரியாத் தனமாய் விஷஉணவைப் படைத்து, அவர் மரணத்துக்குக் காரணமாகும் ஓர் அப்பா மற்றும் அவரின் கர்ப்பிணி மகளின் கதை இது. இருவரும் தம் கையால் புத்தருக்கு இப்படி நேர்ந்துவிட்டதே எனக் குற்ற உணர்வு கொள்கிறார்கள். ஆனாலும், தன்னை விஷக் காளான் பறித்துச் சமைக்கச் செய்தது ஊழ்தான் என அந்த அப்பாவுக்குத் தோன்றியபடி இருக்கிறது. ஏன் இப்படியான மகாபாவத்தைச் செய்யும்படி ஊழ் தன்னைத் தூண்டியது என அவருக்குப் புரியவில்லை.

இதுதான் இந்தக் கதையில் சுவாரஸ்யமான அம்சம். ஓர் ஐரோப்பிய கதையில் என்றால், இந்தக் குற்ற உணர்வு அவர்களைத் தொடர்ந்து துரத்திக்கொண்டே இருந்திருக்கும். ஆனால், இந்திய மனம் சுலபமாய் விதி எனும் கதையாடல் மூலம் குற்றத்தில் இருந்து கடந்துசென்றுவிடுகிறது.
ஊரில் இருந்தால் ஆபத்து என இருவரும் வெளியேறுகிறார்கள். அவர்களுக்கு ஒரு திருடன் அடைக்கலம் அளிக்கிறான். அவன் மனதளவில் முதிர்ச்சியான மனிதன். புத்தரின் மரணத்துக்கு இவர்கள் காரணம் என அறிந்ததும் அவன், புத்தரின் சீடர்கள் மற்றும் பிற ஊர்க்காரர்களைப்போல், அவர்களிடத்தே கோபம் கொள்ளவில்லை. புத்தர் என்பவர் ஒரு மனிதர் அல்ல, அவர் எளிதில் மரணத்துடன் முடிந்துபோகும் இருப்பல்ல எனும் உணர்வு அவனுக்கு இருக்கிறது. அவன் அவர்களைத் தன் வீட்டுக்கு அழைத்துப் போகிறான். அவனுடைய சகோதரனுக்கும் அவனுக்கும் ஒரே பெண்தான் மனைவி. கர்ப்பிணியான அவள் குழந்தை பெறுகிறாள். புத்தரின் மரணத்துக்குக் காரணமான பெண், திருடனின் குழந்தைக்கு கௌதம புத்தன் எனப் பெயர் வைக்கிறாள். அடுத்து, புத்தருக்கு  விஷஉணவு அளித்த பெண்ணுக்குக் குழந்தை பிறக்க, அவள் அதற்கு யசோதரை எனப் பெயர் சூட்டுகிறாள். இரு குழந்தைகளிடமும் புத்தரின் சாயல் உள்ளது. இரு குழந்தைகளையும் காண்பதற்காகப் புத்தரின் முதன்மைச் சீடன் ஒருவன் வருகிறான். பிறந்துள்ள குழந்தைகள் புத்தரின் பிள்ளைகள் என்றும் அவர்களைத் தான் காண வேண்டும் என்றும் வேண்டுகிறான். பிறகு, புத்தரின் மரணத்துக்குக் காரணமான அந்தத் தகப்பன் இந்தச் சீடரின் பின்னால் சென்று விடுகிறான். அவரின் பெண், “எங்கே போகிறீர்கள்?” எனக் கேட்க, அவர் சொல்கிறார், “நான் கௌதம புத்தனின் பின்னால் போகிறேன்”.

இந்தக் கதை, பௌத்தம் பேசும் விதிக் கோட்பாடு பற்றின புரிதலைத் தருகிறது. ஒரு மனிதன், தன் செயல்களின் விளைவுக்கு ஏற்ப மீண்டும் மீண்டும் பிறந்தபடி இருக்கிறான். மறுபிறவி எல்லாம் மூடநம்பிக்கை இல்லையா? இல்லை. இது நாம் நினைப்பது போன்ற மறுபிறப்பு அல்ல.
மனித மனம் என்பது உடம்புக்குள், மூளைக்குள் இல்லை. அது மொழியில் இருக்கிறது. மொழி தொடர்ந்து நம் மனங்களை உற்பத்தி செய்தபடியே இருக்கிறது. என் எண்ணம் உங்களுக்குள் புகுந்து உங்கள் எண்ணமாகிறது. உங்கள் சலனங்கள் எனக்குள் புகுந்து ஓர் அலையாக உருவெடுக்கிறது. என்னோடு நீங்கள் பகைமை பாராட்டும்போது என்னுடைய எதிர்வினை,  என்னை உங்கள் பகைவனாகவோ நண்பனாகவோ ஆக்குகிறது. ஒவ்வொரு சூழலிலும், உறவாடலிலும், பேச்சிலும், வாசிப்பிலும் நாம் புதிது புதிதாகப் பிறவி எடுக்கிறோம்.

எனக்குப் பிடித்த சிறுகதைகள் - ஆர்.அபிலாஷ்

இப்படி ஒரு நீண்ட சங்கிலியாய் நம்  ‘பிறவிகள்’ இந்த ஒரே பௌதிக வாழ்விலேயே தொடர்கின்றன. இந்தப் பிறவிச் சங்கிலியை முறியடித்துப் புத்தனாவதற்கு மொழியில் இருந்து வெளியேற வேண்டும் (அதாவது மொழியுடன் இருக்கையில் மனம் அமைதியாக வேண்டும்; எதிர்வினையாற்றக் கூடாது) என புத்தர் கருதினார். ஆனால், புத்தராலேகூட அது சாத்தியப்படவில்லை என பௌத்தத் தொன்மங்கள் கூறுகின்றன. ஒரே பிறவியில் அவரால் புத்தராக இயலவில்லை. அஞ்ஞானமும் இந்தப் பிறவியின் சிக்கல்களும் அவரை பல பிறவிகளாய் துரத்தியபடிதான் இருந்தன. அதனால், புத்தர் தன்னுடன் உரையாடும் ஒவ்வொரு மனிதர் வழியாகவும் புதுப் பிறப்பு எடுத்தார். புத்தருடன் உரையாடும் ஒவ்வொருவரும் புத்தர் ஆகினர்.

இந்த உண்மைதான் புத்தரின் கொலைப் பழியில் இருந்து அந்த அப்பாவையும் மகளையும் காப்பாற்றுகிறது. இந்தக் கதையில் அந்த அப்பா, தனது குற்ற உணர்வில் இருந்து விடுபடும் தருணம் அபாரமானது. அவர், தான் புத்தரைக் கொல்லவில்லை. புத்தரை ஒருவராலும் கொல்ல முடியாது. உலகில் புத்தர்கள் பலர் தோன்றி மறைந்தபடியே இருப்பார்கள். அவர்களின் ஞானம் ஒன்று திரள்வதுதான் பௌத்தம் எனப் புரிந்துகொள்கிறார். அதனால்தான் அவர், தன் மகளின் குழந்தையைப் பார்க்க வரும் புத்தரின் முதன்மைச் சீடர் ஒருவிதத்தில் புத்தர்தான் எனப் புரிந்துகொண்டு அவரின் பின்னால் செல்கிறார்.

இதுபோன்ற ஒரு கதையை எழுதுவதற்கு நம் பண்பாடு, தத்துவ மரபு பற்றி ஓர் ஆழமான புரிதலும் கவித்துவமான மன எழுச்சியும் வேண்டும். எஸ்.செந்தில்குமார் ஒரு மேலான படைப்பு நிலையில் நின்று இந்தக் கதையை எழுதி இருக்கிறார்.

ஒட்டுமொத்தமாகத் தமிழின் சிறந்த கதைகளைப் பரிசீலிக்கும்போது எவ்வளவு மாறுபட்ட பாணிகளில், கருக்களுடன் நாம் கதைகள் எழுதியிருக்கிறோம் எனும் வியப்புதான் மேலோங்குகிறது. பல வகையான வாழ்க்கை நிலைகள், சிக்கல்கள், தளங்கள், மொழிகள் கொண்டவை தமிழ்ச் சிறுகதைகள். அசோகமித்திரன் - தி.ஜா, லா.சா.ரா - மௌனி, சு.ரா – வண்ணதாசன் என முரணான இலக்கிய நோக்கும் பாணியும் கொண்ட எழுத்தாளர்கள் ஒரே காலத்தில் அற்புதமான படைப்புகளை உருவாக்கி இருக்கிறார்கள். யதார்த்தம் அதகளம் பண்ணிக்கொண்டிருந்தபோது, பின்நவீனத்துவப் படைப்பாளிகள் படையெடுத்து வந்து இரண்டாயிரம் முழுக்கத் தமிழ்ச் சிறுகதைகளை உயர்ந்த தளத்துக்கு எடுத்துப் போனார்கள். யதார்த்தம் செத்துவிட்டது என்றார்கள். ஆனால், அடுத்த ஐந்தாண்டுகளில் மீண்டும் யதார்த்தக் கதைகள் எழுத ஆரம்பித்தார்கள். இன்னொரு பக்கம் பெண்ணியக் கதைகள், வட்டாரக் கதைகள், எதிர்க் கலாசாரக் கதைகள் எனக் களைகட்டியது. இந்தப் பன்முகத்தன்மைதான் தமிழ்ச் சிறுகதைகளின் முக்கியமான சிறப்பு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism