Published:Updated:

நெல்வயல்களுக்கு அப்பால் - சிவகுமார் முத்தய்யா

நெல்வயல்களுக்கு அப்பால் -  சிவகுமார் முத்தய்யா
பிரீமியம் ஸ்டோரி
நெல்வயல்களுக்கு அப்பால் - சிவகுமார் முத்தய்யா

ஓவியங்கள் : செந்தில்

நெல்வயல்களுக்கு அப்பால் - சிவகுமார் முத்தய்யா

ஓவியங்கள் : செந்தில்

Published:Updated:
நெல்வயல்களுக்கு அப்பால் -  சிவகுமார் முத்தய்யா
பிரீமியம் ஸ்டோரி
நெல்வயல்களுக்கு அப்பால் - சிவகுமார் முத்தய்யா

ந்தச் சித்திரை மாதத்தில், மூலங்குடியின் தெற்கு பார்த்த பண்ணைவீட்டுக்கு வந்துசேர்ந்தபோது, சுட்டெரித்த வெயில் தணிந்துபோய் வானம் இருள்கொண்டிருந்தது. சடுதியில் புழுக்கம் எழுந்து உடம்பெங்கும் வியர்வையை வரச்செய்தது. ஆட்கள் யாருமற்று அந்த வீடு தனிமையில் உறைந்துபோயிருந்தது. தனிவீடுகளில் அதிக அளவில் நாய்கள் வளர்ப்பார்கள். ஆனால், இங்கு நாய் இல்லாமலிருந்தது வியப்பு அளித்தது. புறவாசல் பக்கம் எட்டிப்பார்த்தான். வயிறு பசித்தது; காலையில் குடித்த பச்சைப்பயறுக் கஞ்சி போன இடம் தெரியவில்லை. வீட்டின் பின்புறம் நீண்டிருந்த தென்னந்தோப்பில் நிறைய மரங்கள் தெரிந்தன. கருங்குயில் ஒன்று குரல் எழுப்பியது. சட்டென்று சூழல் மாறியது. குளிர்ந்த காற்று உடல் தழுவ மழை பிடித்துக்கொண்டது. கடும்காற்றுடன் பெரும் மழை கொட்டியது. உற்சாகம் பீறிட பழைய நடவுப் பாடல் ஒன்றை முணுமுணுத்தான். பெய்துகொண்டேயிருந்தது மழை.

மரங்கள் அடர்ந்த தோப்பில் பெய்த மழை, அவனுக்குப் பருவமழைக் காலத்தை ஞாபகப்படுத்தியது. நினைவுகள் முன்னும் பின்னுமாகச் சுழன்றன. ஆளில்லாத வீட்டிலிருப்பது பயமாக இருந்தது  என்றாலும், யாராவது ஆட்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்தான். அப்போது தொப்பலாக நனைந்த மேனியோடு ஆடைகள் உடம்பில் ஒட்டியிருக்க, சரசரக்க வந்துகொண்டிருந்தாள் நீலப்பெருங்கண்ணி. ‘அவர் சொன்ன பெண் இவள்தானோ?’ ஐந்தடிக்கும் குறையாத உயரத்தில் சற்று உடல் பருத்து, கன்னம் குழிவிழும் சதுரமான முகஅமைப்பில் இருந்தாள். வயது நாற்பதுக்கு இரண்டு மூன்று கூடக்குறைச்சலாக இருக்கலாம். முகத்தில் நல்ல தெளிவு தெரிந்தது.

நெல்வயல்களுக்கு அப்பால் -  சிவகுமார் முத்தய்யா

கரியப்பன் அவளைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டான்.

``யார் நீ... யாரைப் பார்க்கணும்?’’ - சற்று அதட்டும் தொனியில் கேட்டாள்.

சட்டென்று பதற்றம் பற்றிக்கொண்டது. அந்த வீட்டின் ஆளோடியில் இருந்து எழுந்துகொண்டான். மழை உக்கிரமாகப் பெய்துகொண்டிருந்தது. காற்றில் மரங்கள் குலுங்கின. காகங்களும் மாடப்புறாக்களும் நனைந்தபடி குரலிட்டுக்கொண்டு பறந்தன.

`‘சுந்தரமூர்த்தி அனுப்பினார்ங்க.’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நெல்வயல்களுக்கு அப்பால் -  சிவகுமார் முத்தய்யா


நீலப்பெருங்கண்ணி அவனைக்  குழப்பமாகப் பார்த்தாள்.

`‘என்னைய சுந்தரமூர்த்தி அனுப்பிவெச்சாருங்க. `கொல்லையைப் பார்த்துக்க ஆள் வேணும்’னு கேட்டீங்களாமே.’’

``‘ம்... உனக்கு எந்த ஊரு?’’

`‘தண்டலைச்சேரி.’’

`‘உன் பேர்?’’

`‘கரியப்பன்.’’

அவள் முகத்தில் மாற்றம் எழுந்தது. தலையை அசைத்துவிட்டு, ‘இங்கே நில்லு’ என்று சைகையால் காண்பித்து, வீட்டைத் திறந்து உள்ளே நுழைந்தாள். அப்போது மழையின் தீவிரம் குறைந்து சிறிதாகத் தூறல் விழுந்துகொண்டிருந்தது.

சில மணி நேரத்துக்கு முன்பு அடித்த வெயிலின் தாக்கம் அடியோடு குறைந்துபோய் திடீரென்று குளிர்மை பரவியதால், உடல் அதை ஏற்றுக்கொள்ளத் தடுமாறியது. உள்ளே அவள் செல்போனில் எவரிடமோ பேசுவது கேட்டது. காதுகளைக் கூர்மைப்படுத்தினான். சில நிமிடங்கள் கழித்து உடையை மாற்றிக்கொண்டு வெளியே வந்தாள்.

``சம்பளம் எவ்வளவு கேட்கிற?’’

`‘நீங்க எம்புட்டுக் குடுத்தாலும் அவுங்க வாங்கிக்கச் சொன்னாங்க.’’

``மூணு வேளை சோறு உண்டு. வயக்காட்டுத் தோட்டத்துல இருக்கிற கொட்டாயில தங்கிக்கணும். மாசம் ரெண்டாயிரம் சம்பளம். இன்னக்கி நாளு சரியில்லை; ஊருக்குப் போய்ட்டு நாளைக்கி மறுநா வந்துடு.’’

``சரிங்க’’ என்று தலையாட்டிவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் நடக்கத் தொடங்கினான்.

2

இரவு வந்திருந்தது. எரியும் ட்யூப் லைட்டைச் சுற்றி விட்டில்பூச்சிகள் வட்டமடித்துக்கொண்டிருந்தன. பள்ளிக்குச் சென்று திரும்பிய ப்ரிதா, நடுஅறையில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்தாள்.

நீலப்பெருங்கண்ணி டிபன் ரெடி செய்து மகளை அழைத்தாள். இருவருமாகச் சாப்பிட்டார்கள். ப்ரிதா, எட்டாம் வகுப்பு படித்தாள். நாளைக்கு மிட்-டேர்ம் பரீட்சை இருப்பதால், `ரூமில் உட்கார்ந்து படிக்கப் போறேன்’ எனச் சொல்லிச் சென்றுவிட்டாள். பாத்திரங்களைச் சமையல்கட்டில் அள்ளிப்போட்டாள். நன்றாகச் சாப்பிட்டதில் வயிறு நிறைவுகொண்டிருந்தது. அறைக்குச் சென்று படுக்கையைச் சரிசெய்து, கட்டிலில் முதுகுக்குச் சாய்மானம் கொடுத்து அமர்ந்தாள். எதிரே மாட்டியிருந்த  ‘அப்பாவும் அம்மாவும் சேர்ந்து எடுத்த’ போட்டோவைப் பார்த்தாள். அப்பா உற்றுப்பார்த்து ஏதோ சொல்ல வருவதுபோல பிரமை தட்டியது. நினைவுகள் மெள்ளக் கசிந்தன. கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

3

மைசூரிலிருந்து 20 மைல் தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலையின் எட்டாவது கொண்டை ஊசி வளைவில் இருந்தது பட்டனப்பள்ளி கிராமம். தொடர்ந்து பெய்ந்த அடைமழையில் நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கேயிருந்து தப்பிய மூன்று குடும்பங்களில் அவளுடைய தாத்தா சித்தண்ணன் செட்டிக் குடும்பமும் ஒன்று. அப்போது அப்பா சிங்கபுண்ணன் செட்டிக்கு ஐந்து வயது. கூடப்பிறந்த நான்கு குழந்தைகளில் இரண்டு பெண்கள் மட்டுமே அப்பாவோடு மிஞ்சினார்கள். அந்தக் காலத்திலேயே உபாத்தியார் படிப்புப் பயிற்சிபெற்ற தாத்தா, மைசூர் அரண்மனைச் சேவகர்களின் குழந்தைகளுக்கு மாலை நேரங்களில் பாடம் சொல்லிக்கொடுத்தார். காலை நேரங்களில் பலசரக்கு வணிகர்களிடம் சென்று கணக்கு எழுதிக் கொடுத்தார். சொற்ப வருமானத்தில் குடும்பம் தள்ளாடியது. தாத்தாவின் கஷ்ட ஜீவனத்தைப் போக்க அப்பா மதராஸ் வந்து, தெரிந்த உறவினர் மூலம் ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியில் 16 வயதிலேயே வேலைக்குச் சேர்ந்தார். சில வருடங்களிலேயே மதராஸ் ஸ்டேட் ஆங்கிலேயர் வசமாகியது. நெல்லைச் சீமை கலெக்டர் ஆஷ் துரைக்கு தபேதராகப் பணிக்கு அனுப்பப்பட்டார். நெல்லையில் பணிக்குச் சேர்ந்த சில மாதங்களிலேயே மைசூரிலிருந்து வந்த தாத்தா, கல்யாணம் செய்துவைக்க அப்பாவை அழைத்துச் சென்றார். ஒரு வார விடுமுறையில் ஊருக்குச் சென்ற அப்பா, அம்மா கெங்கம்மாவை மணம் முடித்து அழைத்துவந்தார். வருடம் ஏழு ஆகியும் குழந்தைப்பேறு இல்லாமல் இருந்தாள் அம்மா. சித்த வைத்தியர்களின் வைத்தியங்கள் பலன் தரவில்லை. கோயில், குளம் எனச் சுற்றிக்கொண்டிருந்தார்கள்.

ஆஷ் துரை சுடப்பட்ட ஒரு மாதம் கழித்து, ஒருநாள் மதுரை கள்ளழகர் கோயிலில் பெருமாள் தரிசனம் செய்துவிட்டு, மலையிலிருந்து இறங்கி வந்தபோதுதான் மதுரை கலெக்டரிடம் தபேதராக வேலைபார்க்கும் சிதம்பரத்தைப் பாத்தார்கள். அவர்தான் கோலாட்டி சித்தர் பற்றிச் சொன்னார். அவர் குற்றாலத்தில் ஐந்தருவி அருகில் ஒரு குகையில் இருப்பதாகவும், அவரை உடனே பாருங்கள் என்றும் சொல்லிச் சென்றார். சித்தரைப் பார்க்கச் சென்ற அந்த வியாழக்கிழமை இளம் மதியப்பொழுதில் உடலில் உறுத்தாத இதமான வெயில். ஐந்தருவியில் குறைவாகத் தண்ணீர் கொட்டிக்கொண்டிருந்தது. அங்கே சித்தர் அமர ஒரு கல் இருந்தது. தொலைவில் கரடுமுரடான பாதையில், மலையின் சரிவுக்குள் இருந்தது குகை. நாலைந்து ஆட்கள் வெளியே நின்றார்கள். `சித்தர் தியானத்தில் இருக்கிறார்’ என்றார்கள். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு உள்ளே இருந்து வந்தார். ஆறடி உயரத்தில் சாந்தமான முகத்துடன் வந்து முட்டுக்கல்லில் அமர்ந்தார். அங்கு இருந்தவர்கள் கையெடுத்துக் கும்பிட்டார்கள்.

``சிங்கபுண்ணன் இங்கன வாடா’’

`‘சாமி...’’

`‘உன் பொஞ்சாதிய ஒன்பது நாள், கழுதை சாணியைக் கரைச்சி வெறும் வயித்துல குடிக்கச் சொல்லுடா. அடுத்த ஒரு பௌர்ணமியில கரு தரிக்கும். புள்ளயைத் தூக்கிட்டு வாடா...’’

இருவரும் ஆசிபெற்று வீடு வந்தனர். வாரத்துக்கு இரண்டு நாள் என்று சாணம் குடித்த அம்மா துவண்டுபோனாள். அடுத்த மாதமே வாந்தி எடுத்தாள். பத்து மாதங்கள் நாழிகையாக ஓடின. அதே பௌர்ணமி வெள்ளிக்கிழமையில் பெண் குழந்தை பிறந்தது. தூக்கிக்கொண்டு கோலாட்டி சித்தரிடம் ஓடினார்கள். குழந்தையை உற்றுப் பார்த்த அவர், ‘நல்ல ராசியில பொறந்திருக்கா... சொத்து பெருகும். ஆனா, உனக்கு ஆண் வாரிசு கிடையாது. இவளுக்குப் பஞ்சவர்ணம்னு பேர் வை’ எனச் சொல்லிவிட்டு, மலை உச்சியை நோக்கி நடக்கத் தொடங்கினார். அதன் பிறகு, சில மாதங்களில் திருச்சிக்கு மாற்றலாகி வந்தார் சிங்கபுண்ணன். பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் விசுவாசமாக நடந்துகொண்டதால், தஞ்சாவூருக்குப் பக்கத்தில் மூலங்குடியில் 30 வேலியும், கும்பகோணம் சுவாமிமலையில் 23 வேலியும் தனது பெயரில் பட்டா போட்டுக்கொண்டார். அவர்கள் நாட்டை விட்டுப் போகும்போது நிறைய நகைகளைக் கொடுத்துச் சென்றார்கள். மூலங்குடியில் வந்து வீட்டைக் கட்டிக்கொண்டு, நிலத்தை வளைத்துப்போட்டு விவசாயம் செய்து பண்ணையாராக வலம்வரத் தொடங்கினார்.

நெல்வயல்களுக்கு அப்பால் -  சிவகுமார் முத்தய்யா

4

கரியப்பன், சுந்தரமூர்த்தியைப் பார்க்க குளிக்கரை மேட்டுத் தெருவுக்கு வந்தபோது, மாடுகளுக்கு உண்ணி பிடுங்கிக்கொண்டிருந்தார் சுந்தரமூர்த்தி. ஒருநாள் மழையில் வயல்வெளி, தோட்டங்கள், புதர்க்காடுகள் என எங்கும் அலாதியான அழகில் பச்சை துயில்கொண்டிருந்தது. வெகுநாளுக்குப் பிறகு பச்சைக்கிளிகளையும் செண்பக வகையறாக்களையும் பார்த்தான். ஒரு மஞ்சள்பைக்குள் நிறைய ஆடைகளைத் திணித்திருந்தான்.

`‘வாடா... கிளம்பிட்டியா? அந்தச் செட்டியார் குடும்பம் எனக்கு ரொம்ப வேண்டப்பட்டதுடா. எங்க அப்பாரும் செட்டியாரும் திருச்சியில உத்தியோகம் பார்த்தவங்க. ரொம்பக் கால சினேகிதம். ஒண்ணா சேர்ந்து மில்லு நடத்தினவங்க. அந்தப் பொண்ணு உன்னை அன்னக்கிப் பார்த்ததும் கொஞ்சம் தயக்கமாப் பேசுச்சு. நான் உன்னைப் பத்தி நல்லமாதிரி சொல்லியிருக்கேன். மரியாதையா நடந்து, என் பேரைக் காப்பாத்து.’’

`‘சரிங்க... போயிட்டு வர்றேன்.’’

5

மூலங்குடிக்கு வந்திருந்தான். வீட்டு வாசலில் நின்று, ‘`ஆச்சி...’’ எனக் குரலிட்டான். உள் அறையிலிருந்து எட்டிப்பார்த்துவிட்டு வெளியே வந்தாள் நீலப்பெருங்கண்ணி. எதுவும் பேசமால் புறவாசல் பார்த்து, ``அம்மாசி இங்க வா...’’ என்றாள். சற்று நேரத்தில் வயதான ஒருவர் வந்தார்.

``இவர்தான் நான் சொன்ன ஆளு. இவரைக் கொண்டுபோயி நம்ம வயக்காடு எல்லாத்தையும் சுத்திக் காட்டிட்டு, கொட்டகையத் திறந்து விட்டுட்டு வா. இந்தா சாவி...’’

அம்மாசி வேகமாக நடந்தார். வயது எழுபதுக்கு மேலிருக்கும். ஆனாலும், அவ்வளவு சுறுசுறுப்பு. இரண்டு மணி நேரத்துக்குள் ஒரு கிராமம் முழுவதையும் சுற்றி முடித்திருந்தனர். கொட்டகையைத் திறந்து இருவரும் உட்கார்ந்தார்கள். அம்மாசி இடுப்பில் செருகியிருந்த வெற்றிலைப் பொட்டலத்தைப் பிரித்தார். காய்ந்த சுண்ணாம்பு வாசனை எழுந்தது. இந்தக் கிராமத்தைப் பற்றியும் செட்டியார் குடும்பம் குறித்தும், அவர் வாய் அசைபோடத் தொடங்கியது.

6

சித்திரை மாதம் என்பதால், விவசாய வேலைக்கு ஏற்ற பருவம் இது இல்லை. பண்ணை வீட்டுக்குப் பின்னே நீண்டு கிடந்த தோட்டத்தில் மழை பெய்த ஈரம் இருந்ததால், புற்கள் முளைத்திருந்தன. கரியப்பன் மாடுகளை அவிழ்த்து மேய்த்துக் கொண்டிருந்தான். அம்மாவின் முகம் நினைவுக்கு வந்தது. அம்மா இருந்தவரை சாப்பாட்டுக்குக் கவலையில்லை. எப்படியாவது ருசியான சாப்பாடு கிடைத்துவிடும். அப்பாவின் முகத்தைக்கூட பார்த்தது கிடையாது. அம்மா வயிற்றில் நான் மூன்று மாதச் சிசுவாக இருந்தபோது நடந்த குஸ்திப் போட்டியில் அப்பா கலந்துகொண்டதாகவும், யாரும் அவரை வீழ்த்த முடியாத அளவுக்கு அசுர பலம் நிறைந்தவராக இருந்தார் என்பதால், மான்கொம்பில் விஷம் தடவியோ, அவர் குடித்த கள்ளில் எதையோ கலந்தோ கொன்றுவிட்டார்கள் என்று அப்பாவின் ஞாபகம் வரும்போது எல்லாம் அம்மா புலம்புவாள். தாத்தா சின்னசாமி, விடுதலை போராட்டத் தியாகி. அவருக்கு அரசு வழங்கிய ஒரு ஏக்கர் வயலில் எந்த நேரமும் உழைத்துக்கிடந்தாள் அம்மா. தாத்தாவை ஆங்கிலேய போலீஸார் அடிக்கடி தேடி வருவார்கள். அதற்குப் பயந்துகொண்டு நெருங்கிய உறவினர்கள் திருச்சி குளித்தலை பக்கமாகப் போய்விட்டார்கள். தாத்தாவுக்கு அப்பா ஒரே பிள்ளை. அதேபோல, இவனும் ஒத்தையாக அமைந்துவிட்டான் என்ற வருத்தம் அம்மாவுக்கு இருந்தது. இவனுக்குக் காலாகாலத்தில் கல்யாணம் செய்துவைக்க பல வழிகளில் பெண் தேடினாள். ஆனால், அந்தப் பெண்களை எல்லாம் வேண்டாம் என்று மறுத்தான். அம்மா வகை உறவில் பார்த்துப் பேசிய லெட்சுமியைக்கூட வேண்டாம் என்று மறுத்துவிட்டான். வயது நாற்பதுக்கு மேல் ஆகிவிட்டது. அம்மா இருந்த நாட்களில் எல்லாம் மராமத்து வேலைபார்த்துச் சேர்த்துவைத்த பணத்தை எடுத்துக்கொண்டு, சரக்கு அடிக்க நண்பர்களோடு காரைக்கால் கிளம்பிவிடுவான். அம்மா இறந்த பிறகு அந்தப் பழக்கத்தை நிறுத்திவிட்டான். அதன் பிறகுதான் கொத்து வேலைக்குப் போனபோது ஆண்டிபாளையம் விஜயாவோடு பழக்கம் ஏற்பட்டது. இவனுக்குத் திருமணம் ஆகவில்லை என்பது தெரிந்ததும் நெருங்கிப் பழகிவந்தாள். அவள் கணவன் மாரிமுத்து மரத்திலிருந்து தவறிவிழுந்து இறந்துபோனதால், பிழைக்க வேறு வழியின்றி வேலைக்கு வந்ததாகச் சொன்னாள். பூதமங்கலத்தில் சுல்தான் பாய் வீட்டு கான்கிரீட் வேலை முடிந்து இருவரும் திரும்பிக்கொண்டிருந்தார்கள். அன்று பௌர்ணமி மூன்றாவது நாள். இரவில் மற்ற ஆட்கள் வேலை முடிந்து போய்விட, இருவரும் பஸ்ஸைப் பிடிக்க வேகமாக நடந்தார்கள். ஒரு மைல் தொலைவில் ஒரு சிறிய பஸ் நிறுத்தம் இருந்தது. கடும் உழைப்புக்குப் பிறகான உடல் தளர்ச்சியோடுதான் நடந்தார்கள் என்றாலும், குளிர்ந்த காற்று இதமாக வருடியது. ஆள் அரவமற்ற சாலையில் அவளுடன் நடக்கையில் திடீரென அவனுக்குள் பரவசம் சுடர்ந்தது. அவள் ஏதோ முணுமுணுத்துக்கொண்டே நடந்தாள். பேச வாத்தைகளைத் தேடினான். நாக்கு உலர்ந்துபோனது. அவள் கையைப் பற்றினான். முனகிக்கொண்டே தோளில் சாய்ந்தாள். வயலில் இறங்கி களத்துமேட்டில் ஏறினார்கள். முதன்முதலாக நிலா வெளிச்சத்தில் பெண்ணுடலின் பரிபூரண இன்பத்தை அடைந்தான். ஆறு மாத காலம் அவளைச் சுற்றியே படர்ந்தான். ஒருநாள் கொத்தனார் முருகேசனுடன் அவள் பைக்கில் போவதைப் பார்த்தான். அது பற்றி அவளிடம் கேட்டான். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மெள்ள இவனைத் தவிர்க்கத் தொடங்கினாள். பேசுவதையும் குறைத்துக்கொண்டாள். தூரத்தில் நின்று பார்க்க மட்டும்தான் முடிந்தது. சில நேரங்களில் அவள் நினைவு வரும்போது போய்ச் சந்திக்கலாம் என்று எண்ணம் எழும். தவிர்த்துவிடுவான்.

அம்மாசி சத்தம் போட்டுக்கொண்டே வேகமாக நடந்து வந்தாள்.

``கரியப்பா... எம்புட்டு நேரமா கூப்பிடுறேன். காதுல விழல? சாப்பிட வா’’

பொழுது உச்சிக்குப் போயிருந்தது.

7

ஆடிப்பெருக்குக்கு இரண்டு நாள்களுக்கு முன்பாகவே ஓடம்போக்கி ஆற்றில் நுங்கும் நுரையுமாகப் பழுப்பு நிறத்தில் தண்ணீர் கரைகளைத் தொட்டுப் போய்க்கொண்டிருந்தது. நாவல் பழம் பறிக்க மரத்தில் ஏறிய அம்மாசி, தவறிவிழுந்ததில் இடுப்பு முறிந்து படுத்த படுக்கையாகக் கிடந்தாள். கரியப்பன் பண்ணையின் எல்லா வேலைகளையும் பார்த்துக்கொண்டான். நீலப்பெருங்கண்ணி இவனிடம் முகம்கொடுத்துப் பேசத் தொடங்கியிருந்தாள். இவனால் அவளை இயல்பாகப் பார்க்க முடியவில்லை. அவள் நெருங்கிவந்து பேசும்போது, இவனுக்குள் நடுக்கம் பரவியது. இரவில் உறங்கும்போது அவள் நிழலைக் கிடத்தி உறங்கினான்.

8

நீலப்பெருங்கண்ணி வீட்டில் கடைசிப் பெண்ணாகப் பிறந்திருந்தாள். இவளுக்கு ஜாதகம் எழுதிய சீர்காழி ஜோதிடர் சிவசிதம்பரம், `ஆண்களை அடக்கி ஆள நினைக்கும் ராசியில் பிறந்திருக்கிறாள்’ என்றார். இவளுடன் பிறந்த இரண்டு சகோதரிகளும் நல்ல வசதி வாய்ப்புகளுடன் வாழ்ந்துவருகிறார்கள். காரைக்குடியில் பெரிய அக்காவும், அடுத்தவள் குடும்பத்துடன் சிங்கப்பூரிலும் இருக்கிறார்கள். இவளுக்கு இரண்டு வயது இருக்கும்போது செட்டியார் மாடு முட்டி இறந்துபோனார். அப்போது அவருக்கு 66 வயது. பத்தாம் வகுப்பு வரை படித்தாள். 18 வயதிலேயே வரன் தேடும் படலம் தொடங்கியது. ஆனால், நான்கு வருடத் தேடலுக்குப் பிறகு, 22 வயதில்தான் வீட்டோடு மாப்பிள்ளை சம்பந்தம் அமைந்தது. தடபுடலாகத் திருமணம் நடந்தது. மாப்பிள்ளை தண்டபாணி ஒரு மாதம்கூட முழுமையாக இவளோடு வாழவில்லை. விட்டால்போதும் என்று ஓட்டம் பிடித்துவிட்டான். அவன் சொந்த ஊருக்குப் போய் விசாரித்ததில், ``ஆள் இங்கே வரவில்லை...’’ என்றார்கள். இரண்டு வருடங்கள் ஓடின. நீலப்பெருங்கண்ணி அலட்டிக்கொள்ளவில்லை. கொழுந்தியாளின் வாழ்க்கையை எப்படியாவது நல்லவிதமாக அமைத்துத் தரவேண்டும் என்று பெரியக்கா வீட்டுக்காரர் புண்ணியகோடி முயன்றார். மறுமணம் செய்துவைக்க அவருடைய நெருங்கிய உறவினர் ஒருவரை மணமகனாகப் பார்த்து வந்தார். இவள் தயங்கினாள். எல்லோரும் எடுத்துச் சொல்லிச் சம்மதிக்கவைத்தார்கள். எண்கண் முருகன் கோயிலில்வைத்து எளிமையாகத் திருமணத்தை நடத்திமுடித்தார்கள். ஆறு மாத காலம் சந்தோசமாகக் கழிந்தது. தாம்பத்ய வாழ்வின் ருசி புரிந்தது. ஒருநாள் சாராயம் குடித்துவிட்டு வந்து குடும்பச் சொத்துகளில் பாதியைப் பிரித்து தன் பெயரில் எழுதிவைக்க வேண்டும் என்று பிரச்னை செய்தான் புதுமாப்பிள்ளை. இரண்டு நாள் கழித்து வந்து சமாதானம் செய்த பெரியக்கா வீட்டுக்காரரை எடுத்தெறிந்து பேசினான். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த நீலப்பெருங்கண்ணி, ஒருகட்டத்தில் அவன் சட்டையைப் பிடித்து வெளியே தள்ளினாள். அதற்குப் பின்புதான் செட்டிநாட்டில் இருந்து ப்ரிதாவை 6 வயதுக் குழந்தையாகத் தத்தெடுத்து வந்தாள். இனி, தனது வாழ்வில் ஆண்களுக்கே இடமில்லை என முடிவெடுத்தாள். ஆனால், தனிமையில் உறக்கமின்றிப் புரண்டு தகிக்கும் இரவுகளில் அவன் ஞாபகம் எழும். அவசரப்பட்டு அவனை வெளியேற்றியது தப்பு என்று தோன்றும்.

நெல்வயல்களுக்கு அப்பால் -  சிவகுமார் முத்தய்யா

ஒருநாள் அம்மா சொன்னாள், ``நம்ம நெல் வயல்கள் எல்லாம் செழுமையாக விளையக்கூடியவை. இந்த நிலம் உன் அப்பாவுக்கு இனாமாகக் கிடைத்திருக்கலாம். ஆனால், இதை ஒரு செழுமையான வயலாக மாற்றியது உன் அப்பா. அப்போது இது கரம்பை நிலமாகக் கிடந்தது. இந்தப் பகுதி மக்கள் தங்களின் கடும்உழைப்பைச் செலுத்திதான் மேட்டையும் வரப்பையும் சீர்செய்து விளைநிலமாக மாற்றினார்கள். இந்தச் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு `மா’வுக்கு இருபது கலம் நெல் விளையும் வயல்கள் இவற்றைவிட்டால் வேறில்லை. வாய்க்கால்கள் அவ்வளவு நேர்த்தியாக அமைந்தவை. காவிரி ஆற்றுப் பாசனம்தான். தண்ணீர் திறந்துவைத்தால் போதும், நண்டு வளையில் கோடை மழை பாய்வதைப் போல கடகடவென்று பாய்ந்துவிடும். எவ்வளவு மழை பெய்தாலும் வெள்ளம் நிற்காது. இங்குள்ள கூலியாட்களுக்கு என்றைக்கும் நம் குடும்பம் கடமைப்பட்டுள்ளது. அப்பா உன்னை ஆணாகவே வளர்க்கச் சொன்னார். இந்த நெல் வயல்களைத் தொடர்ந்து வேளாண்மை செய்ய வேண்டும். இதை நம்பியுள்ள விவசாயக் கூலிகளுக்கு வேலை தர வேண்டும் என்று விரும்பினார். அவர் இறக்கும் தருவாயில்கூட `இங்கிலீஷ்காரனுக்கு ஜால்ரா போட்டு இந்த நிலங்களை நான் வாங்கியிருந்தாலும், தொடர்ந்து விவசாயம் பண்ணி நாலு பேருக்குச் சோறு போடுறது மூலமா அந்தப் பாவத்தை தீர்த்துவிடலாமென்று செய்து வந்தேன். ஆனால், மாடு முட்டி எனக்கு உரிய தண்டனையைக் கொடுத்திருச்சு. இந்த நெல்வயல்களுக்கு அப்பாலயும் நானும் கூலியாட்களோட கனவும் எப்பவும் உறைஞ்சிருப்போம்’ இதை என் மகள்களிடம் சொல்’’ என்றார்.

9

விவசாய வேலைகள் முடிந்து இரண்டு வார காலம் ஆகியிருந்தது. நெல் பயிர் பச்சை பிடித்துவிட்டது. கூட்டுறவு சொசைட்டிக்குப் போய் டிராக்டரில் உரம் ஏற்றி வந்தான். கிணற்றுக் கொட்டகையில் ஆட்களோடு உர மூட்டைகளை இறக்கிவைத்துவிட்டு, வாய்க்கால் நீரில் சின்னதாகக் குளியல் போட்டுவிட்டு வந்தான். எதிரே கையில் தூக்குவாளியோடு வந்த கனகம், ``ஆச்சி சாப்பிட வரச்சொன்னாங்க போ...’’ என்று சொல்லிவிட்டு அவள் வீட்டுக்குப் போனாள்.

ப்ரிதா பள்ளிக்குப் போயிருந்தாள். புறவாசல் பக்கமாக வந்தான். எப்போதும் அங்குள்ள சிமென்ட் கட்டையில் சாப்பாடு வைக்கப்பட்டு, பூனை வாய் வைக்காமல் இருக்க மூங்கில் கூடையால் மூடப்பட்டு, மேலே செங்கல் வைக்கப்பட்டிருக்கும். தினமும் மூன்று வேளையும் இப்படித்தான் வந்து எடுத்துச் சாப்பிடுவான். பாத்திரங்களைக் கழுவிவைத்துவிடுவான். கட்டையில் கூடையைக் காணவில்லை. புறவாசல் பக்கமாக நெருங்கிவந்தான். அவள் உள்ளே குளிக்கும் சப்தம் கேட்டது. ஏதோ ஒன்று தொண்டைக்குள் உருண்டது. உள்ளே போய் காலில் விழுந்து தனது தாபத்தைச் சொல்லிவிடலாமா? மறுத்துத் திட்டினால், எங்கேயாவது கண்காணாத இடத்துக்குச் சென்றுவிடலாமா? மனம் குழம்பியது; உடல் நடுங்கியது. உள்ளே எட்டிப் பார்த்துக்கொண்டே நின்றான். அவள் குளித்துவிட்டு வெளியில் வருவது தெரிந்தது. சட்டென்று பின்வாங்கி விலகி நடந்தான்.

புறவாசலில் வந்து எட்டிப்பார்த்தாள். சற்று தூரத்தில் இருந்த புன்னை மர நிழலில் நின்றான். `வா’ என்று சைகையால் அழைத்தாள். லேசாக வதங்கிய வாழை இலையை எடுத்துவந்து நீட்டினாள்.

``தண்ணி படாம மூட்டையை அடுக்கியாச்சா..?’’

``ம்... தலையாட்டி அமர்ந்தான். அன்னச்சட்டி நிறைய சுடுசோறும், வறுத்த மீன் துண்டுகளும் இருந்தன. பெரிய கிண்ணத்தில் மீன் குழம்பையும் வைத்தாள்.  வறுவல் மீன் வாசம், சாப்பாட்டின் மீது ஆவலைக் கிளர்த்தியது. நல்ல வெண்ணிறம் கலந்த மெல்லிய நீலநிறத்தில் புடைவையும் அதற்கேற்ற ஜாக்கெட்டும் அணிந்திருந்தாள். ஒரு செம்பில் தண்ணீரை வைத்துவிட்டு எதிரே நாற்காலியைப் போட்டு அமர்ந்தாள்.சோற்றைக் கரண்டியால் அள்ளிப் போட்டுவிட்டு அவள் முகத்தைப் பார்த்தான்.

நெல்வயல்களுக்கு அப்பால் -  சிவகுமார் முத்தய்யா


``உனக்குப் பொண்ணு பார்க்கிறேன். கல்யாணம் பண்ணிக்கிறியா... கடைசிக் காலத்துல மனுஷ ஒத்தாசை தேவைப்படும். அதான் சொல்றேன்... நான் சொல்றது விளங்குதா?’’

`‘இல்லீங்க... இனிமே அது சரிவராதுங்க. அந்த மனநிலையும் எனக்கு இல்ல.’’

``செலவ நான் பார்த்துக்கிறேன். தோட்டத்துல வீடு கட்டித் தர்றேன்.’’

``அது மட்டும் வேண்டாங்க. வேற என்ன சொன்னாலும் கேட்டுக்கிறேன்.’’

`‘நீ ஆம்பளதானே?’’

பதில் எதுவும் சொல்லாமல் சாப்பாட்டைப் பிசைந்தான். விருட்டென்று எழுந்து உள்ளே போனாள். விறுவிறுவென அரைகுறையாகச் சாப்பிட்டுவிட்டு, மீதமுள்ள சாப்பாட்டை எடுத்துக்கொண்டு, இரவு சாப்பிட்டுக்கொள்வதாகச் சொல்லிவிட்டுக் கிளம்ப நினைத்தான். கோண வயல் பகுதிக்கு மேய்ச்சலுக்கு வரும் ஆடுமாடுகளைத் தடுக்க தாண்டு வேலி கட்டும் வேலை பாக்கியிருந்தது. வீட்டைப் பார்த்துக் குரல் கொடுத்தான்.

வெளியே வந்தவள்... ``மழைக்காலம் ஆரம்பிக்கப்போவுது. கொட்டகையைப் பூட்டிட்டு துணிகளை எடுத்துக்கிட்டு வந்துடு. இனிமே உனக்கு திண்ணையிலதான் படுக்கை’’ என்றாள்.

அடிவயிற்றில் ஏதோ உருள, நடக்கத் தொடங்கினான். குளிர்ந்த ஈரக்காற்று வடகிழக்கில் இருந்து வீசத் தொடங்கியது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism