Published:Updated:

நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 8 - சி.மோகன்

நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 8 - சி.மோகன்
பிரீமியம் ஸ்டோரி
நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 8 - சி.மோகன்

அரூப ஓவியம் வாஸ்ஸிலிகாண்டின்ஸ்கி: ஓவிய வெளியில் அரூப இசை

நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 8 - சி.மோகன்

அரூப ஓவியம் வாஸ்ஸிலிகாண்டின்ஸ்கி: ஓவிய வெளியில் அரூப இசை

Published:Updated:
நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 8 - சி.மோகன்
பிரீமியம் ஸ்டோரி
நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 8 - சி.மோகன்

வீன ஓவியக்கலை வளர்ச்சியில் முற்றிலும் புதிதான ஒரு பிராந்தியத்தைக் கண்டடைந்த மகத்தான கலை எழுச்சி வடிவம், அரூப ஓவியம். ஃபாவிஸ ஹென்றி மத்தீஸ் வண்ணத்திலும், க்யூபிஸ பிகாஸோ வடிவத்திலும் நிகழ்த்திய பாய்ச்சல்கள், நவீன ஓவியக்கலை மரபில், அதன் பிராந்தியத்தில், சில புதிய திறப்புகளாக அமைந்தபோதிலும், வாஸ்ஸிலி காண்டின்ஸ்கியின் அரூப வெளிப்பாடுகள் நவீன ஓவியக்கலைவெளியில் ஒரு புதிய பிராந்தியத்தைக் கண்டடைந்தன. அதே சமயம், அரூப ஓவியத்தின் முன்னோடிகள் என மத்தீஸையும் பிகாஸோவையும் காண்டின்ஸ்கி போற்றினார். “மத்தீஸ் – வண்ணம், பிகாஸோ – வடிவம். ஒரு மகத்தான குறிக்கோளின் இரண்டு இலக்குகள்” என்று காண்டின்ஸ்கி குறிப்பிட்டிருக்கிறார். 1905-ல் படைக்கப்பட்ட மத்தீஸின் ‘தொப்பியணிந்த இளம்பெண்’ ஓவியம் (மத்தீஸின் மனைவி அமேலியின் உருவப் படைப்பு) வண்ணத்தில் பிரத்யேக உணர்வுகளை அரூபக் குணத்துடன் வசப்படுத்தியது. பிகாஸோவின் ‘அவிக்நோன் இளம் பெண்கள்’ வடிவத்தில் பகுப்புரீதியான அணுகுமுறையின் மூலம் உருவங்களை அரூப குணத்துடன் வெளிப்படுத்தியது. ஆனால், காண்டின்ஸ்கி 1910-ல் உருவாக்கிய தலைப்பிடப்படாத  ஓர் ஓவியம்தான் முதல் முழுமையான அரூப ஓவியம். முற்றிலுமான ஒரு புதிய அனுபவவெளிக்குப் பார்வையாளனை அழைத்துச் சென்ற படைப்பு. எவ்வித    முன்மாதிரியும் அற்ற ஓவியம். உலகம் முழுவதும் வலுவாகத் தடம் பதித்த ஒரு கலை இயக்கத்துக்கு வித்திட்ட படைப்பு.

நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 8 - சி.மோகன்

காண்டின்ஸ்கி (1866-1944) ரஷ்யாவில் பிறந்தவர். சிறுவயதிலேயே இசையிலும் ஓவியத்திலும் ஈடுபாட்டுடன் பயிற்சியும் பெற்றவர். 1896-ல், தன்னுடைய 30-வது வயதில், ஜெர்மனியின் ‘முனிச்’ நகரில் குடியேறினார். அங்கு சில முற்போக்குக் கலைஞர்களுடன் இணைந்து ‘புதிய கலைஞர்கள் குழுமம்’ (New Artists’ Association) என்ற அமைப்பினை முன்னின்று நடத்தி கலைச் செயல்பாடுகளில் ஈடுபட்டார். கலைஞராக மட்டுமல்லாமல் கலைச் சிந்தனையாளராகவும் கோட்பாட்டாளராகவும் செயல்பட்டு, பல கட்டுரைகளும் நூல்களும் எழுதியவர். தத்துவம், சமயம், ஆன்மிகம், வரலாறு, அறிவியல் மற்றும் பிற கலைகள், குறிப்பாக இசை குறித்து ஆழ்ந்த வாசிப்பும் ஞானமும் கொண்ட உண்மையான அறிவுஜீவி. சில ஆண்டுகளுக்குள்ளாகவே அந்த அமைப்பிலிருந்து வெளியேறி நண்பர் மார்க் உட்பட ஒத்திசைவான சக கலைஞர்களுடன் இணைந்து ‘ப்ளூ ரைடர்’ என்ற கலை இயக்கத்தை உருவாக்கி படைப்பாக்கங்களில் ஈடுபட்டார். இக்காலகட்டத்தில் பொருள் முதல்வாதத்தை நிராகரித்து ஆன்மிகத்தை ஏற்றார். வாழ்வின் அன்றாட நடைமுறைகள் சார்ந்ததிலிருந்து விடுபட்டது கலை என்று கருதினார். கலை என்பது இயற்கையின் கண்ணாடி அல்ல. அது உள்ளார்ந்த உணர்வுகளின் வெளிப்பாடு. ‘அகத் தேவை’யின் இலக்குதான் எல்லாக் கலைகளினதும் அடிப்படை என்பது அவருடைய எண்ணமாக இருந்தது. இக்காலகட்டத்தில் இவர் எழுதிய ‘கலையில் ஆன்மிகம் பற்றி’ (On the Spirtual in Art) என்ற நூல், கலைத் தத்துவம் மற்றும் அரூப ஓவியக் கோட்பாடு பற்றிய காண்டின்ஸ்கியின் பார்வையை வெளிப்படுத்தியது.

அரூப வெளிப்பாடுகளில் மிகவும் ஆற்றல்மிக்க கலை வடிவம் இசை. கேட்பவர்களின் மனங்களில் சப்தங்கள் மூலம் இசைக் கலைஞர்கள் படிமங்களை உருவாக்குகிறார்கள். வண்ணங்களும் வடிவங்களும் இசையைப் போலவே மனித ஆன்மாவின் ஆழங்களிலிருந்து எழுகின்றன என்று அறிந்த காண்டின்ஸ்கி மனிதனின் அகத் தேவையை நிறைவுசெய்ய கலை, இசை போன்றே அரூப குணம் கொண்டிருக்க வேண்டும் என்று உத்வேகம் பெற்றார். இதுவே அரூப ஓவியப் படைப்பாக்கங்களுக்கு அவரை இட்டுச் சென்றது. இசைக்கு வார்த்தைகளோ தீர்மானமான படைப்புப் பொருளோ அவசியம் இல்லை. அதனால்தான் மொழி அறியாத பாடலை அல்லது கருவி இசையை நம்மால் உணர்வுரீதியாக அனுபவிக்க முடிகிறது. மேலும், இசை அதன் அபூர்வ வெளிப்பாட்டில், நம் மனதில் காட்சிப் படிமங்களை உருவாக்கி அதன் உள்ளுறையான ‘செய்தி’யை நமக்குள் கடத்துகிறது. அதாவது, ஒரு புலன் சார்ந்த அனுபவத்தை இன்னொரு புலன் வழியாக நம்மால் கிரகிக்க முடிகிறது.

தி.ஜானகிராமனின் ‘செய்தி’ சிறுகதை இத்தன்மையை வெகு அபூர்வமாக உணர்த்தியிருக்கும் அருமையான படைப்பு.

மனித மன நாண்களில் இசையை மீட்டும் பிரயாசை கொண்டவை இவருடைய அரூப ஓவியங்கள். “வண்ணம், கீ-போர்டு. கண், மீட்டும் கருவி. ஆன்மா, பல நாண்கள் கொண்ட பியானோ” என்பது இவருடைய ஓவியப் பார்வை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 8 - சி.மோகன்

காண்டின்ஸ்கியின் முதல் அரூப ஓவியம், தாளில் நீர்வண்ணம், மை மற்றும் பென்சிலால் வரையப்பட்டது. இப்படைப்பின் மிக முக்கியமான, அசாதாரணமான அம்சம் அதன் கட்டமைப்பற்ற தன்மை. கோடுகளும் வண்ணங்களும் துண்டு துணுக்காக ஒன்றோடொன்று எவ்விதத் தொடர்புமின்றி மிதந்துகொண்டிருக்கின்றன; சஞ்சாரம் செய்கின்றன. குறிப்பிட்ட வடிவம் ஏதுமின்றி அமைந்திருக்கும் ஒவ்வோர் அம்சமும் ஆற்றலோடு சலனிக்கின்றன. இப்படைப்பில் மையமென்று ஏதுமில்லை. மாறாக, பெரும் எண்ணிக்கையிலான வடிவமற்ற வடிவங்கள் ஒரே சமயத்தில் எல்லா திசைகளிலும் சஞ்சரிக்கின்றன. ஒவ்வொன்றும் தன்னளவில் இயக்கம்கொண்டு விரைகின்றன. அவற்றுள் சில படைப்புத் தளத்திலிருந்து அதற்கப்பாலுள்ள வெளிக்குப் பறக்கின்றன. ஓர் அகவெளிப் பயணமாக இசையின் ஆற்றலோடு அமைந்திருக்கும் ஓவியம்.

காண்டின்ஸ்கியைப் பொறுத்தவரை, ஓவியம் என்பது மிக ஆழமான ஆன்மிக வெளிப்பாடு. கீழைத்தேய ஆன்மிக மரபில் வேரோடிய மனம் அவருடையது. காத்திரமான ஆன்மிகத்தையும் மனித உணர்வுகளின் ஆழத்தையும் கலாசார மற்றும் தேச எல்லைகளைக் கடந்து நிற்கக்கூடிய அரூபமான வண்ணங்கள் மற்றும் வடிவங்கள் மூலம் உலகளாவிய காட்சி மொழியில் வெளிப்படுத்துவதே அவருடைய கலை நோக்கமாகவும் அணுகுமுறையாகவும் இருந்தது. அவருடைய ‘அந்நேரத்திய கற்பனை’ (Improvisation) என்ற வரிசை ஓவியங்கள் பற்றிக் குறிப்பிடும்போது, அவை உள்ளார்ந்த ஆன்மிகப் பண்பின் வெளிப்பாடுகள் என்கிறார் காண்டின்ஸ்கி. இந்த வரிசை ஓவியங்கள் பெரும் எண்ணிக்கையிலானவை. அவற்றுள் பிரசித்தி பெற்ற ஒன்று, ‘அந்நேரத்திய கற்பனை – 28’ (Improvisation – 28). அவருடைய ‘ப்ளூ ரைடர்’ காலகட்டத்தில் உருவான ஓவியம். அந்நேரத்திய கற்பனை என்பதே இசைத்துறை சார்ந்த ஒரு சொல்லாட்சி. அவருடைய அரூப ஓவிய வரிசையில் ஒன்றான இதுவும் ஆன்மிகப் பண்பும் இசைத்தன்மையும் முயங்கிய காட்சி மொழியால் ஆனது. வண்ணம், வடிவம், கோடு மற்றும் ஓவியவெளி ஆகிய அம்சங்களின் ஒருங்கிணைந்த லயத்தில் ஒரு கூட்டிசையை உருவாக்குவதன் மூலம் ஆழ்மன உணர்வுகளை எழுப்புவதும் ஆன்மிகத் தளத்துக்கு இட்டுச் செல்வதுமே அவருடைய கலைப் பிரயாசையாக இருந்தது. அதன் வெளிப்பாடுகளில் ஒன்றுதான் இந்த ஓவியம்.

நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 8 - சி.மோகன்


முதல் உலகப் போரின்போது, 1914-ல் ரஷ்யா திரும்பிய இவர், போரின் முடிவுக்குப் பின்னர் மீண்டும் 1920-ல் ஜெர்மனி சென்றார். 1936-ல் பிரான்ஸ் சென்று வாழ்வின் கடைசி வருடங்களை பாரிஸில் அமைத்துக்கொண்டார். அதேசமயம், வாழ்நாள் முழுவதும் அவர் இடையறாதும் தீவிரமாகவும் மேற்கொண்ட ஓவியப் படைப்புகள் மற்றும் உரையாடல்கள் மூலம் உலகின் கலைவெளிகளில் பெரும் தாக்கங்களை நிகழ்த்தினார்.

தன் வாழ்வின் கடைசிக் கட்டத்தில், பாரிஸில் வாழ்ந்தபோது, அவர் வரைந்த முக்கியமான ஓவியங்களில் ஒன்று, ‘வான் நீலம்’ (1940). இத்தலைப்பு ஓவியத்தின் பின்புல வண்ணத்தைக்கொண்டிருக்கிறது. வானம் போலத் தோற்றமளிக்கும் ஒரு வெளியில், பளிச்சிடும் வண்ண வடிவங்கள் வெவ்வேறு அளவுகளிலும் வண்ணங்களிலும் அங்குமிங்குமாக சஞ்சரிக்கின்றன. இந்த வடிவங்கள் இந்தப் பூமியிலுள்ள எது போன்றும் தோற்றமளிக்கவில்லை. ஒழுங்கற்ற வடிவங்களாகவும் ஒளிரும் வண்ணங்களாலும் அமைந்திருக்கும் இந்த விந்தைஉயிரிகள் காற்று வெளியில், அந்தரத்தில் சுற்றித் திரிகின்றன. படைப்பு வெளியின் விளிம்புகளில் நீல வண்ணம் தேய்ந்து கரைந்திருப்பது, அந்த வெளி திட்டவட்டமானதாக இல்லாமல் எல்லைகளற்ற தன்மை கொண்டிருப்பதைக் குறிப்பதுபோலிருக்கிறது. நாம் அறிந்திராத ஓர் உலகமாகப் படைப்பு இயங்குகிறது. அதேசமயம், அதன் இருப்பை நம்மால் உணர முடிகிறது. ஒரு மாய உலகில் நாம் வசப்பட்டு நிற்கிறோம். நம்மால் ஒருபோதும் காணவோ, விளங்கவோ முடியாத மாய யதார்த்தமாக ஓவியப் புனைவு அமைந்திருக்கிறது.

நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 8 - சி.மோகன்

ஓர் ஓவியப் படைப்பின் நோக்கம் பற்றி வார்த்தைகளின் மூலம் நாம் ஒருபோதும் தெளிவாகக் கூறிவிட முடியாது. அதிலும் நம் உணர்வுகளோடு உறவாடும் அரூப ஓவியங்கள், எந்த ஒன்றையும் நம் மூளையால் அறிந்துகொள்ள விழையும் மனோபாவத்துக்கு இடமளிக்காதவை. அதைவிடவும் மேலான அனுபவ எல்லைகளுக்கு நம்மை அழைத்துச் செல்பவை. புரிதலுக்கும் அதன் வழி அர்த்தங்களை நோக்கி நகர்வதற்கும் எந்த அளவு முக்கியத்துவம் உண்டோ, அதே அளவு முக்கியத்துவம் பிடிபடாப் புதிர்களுக்கும் இனம் புரியா உணர்வுகளுக்கும் உண்டு. அரூப ஓவியங்களை அணுகுவதற்கு இத்தகைய புரிதல் மிகவும் அவசியம். அதனால்தான் இக்கட்டுரையில் முன்வைக்கப்பட்டுள்ள காண்டின்ஸ்கியின் மூன்று ஓவியங்கள் பற்றி சிறுகுறிப்புகளை மட்டுமே கொடுத்திருக்கிறேன். விளக்கம், தர்க்கம் போன்ற  அபாயகரமான பாதையில் சென்று அவற்றைப் புரிந்துகொள்ள முனைவது, உணர்வனுபவங்களின் பெறுமதிக்கு ஊறு விளைவிப்பதாகவே முடியும்.

அரூப வெளிப்பாடென்பது மிகவும் சவாலான, மேம்பட்ட ஒரு கலைச் செயல்பாடு. காண்டின்ஸ்கி கூறுகிறார்: “எல்லாக் கலைகளைவிடவும் அரூப ஓவியம்தான் மிகவும் கடினமானது. அதற்கு உங்களுக்கு மிக நன்றாக வரையத் தெரிந்திருக்க வேண்டும் என்பது மிகவும் அவசியம். வடிவமைப்பு மற்றும் வண்ணம் சார்ந்த மிகவும் மேம்பட்ட, நுட்பமான அறிவுத்திறன் அத்தியாவசியம். இவற்றைவிடவும் முக்கியமானது, நீங்கள் உண்மையான கவிஞனாக இருக்க வேண்டும்” காண்டின்ஸ்கியின் இந்தக் கருத்தின் உண்மையை நம் அரூப ஓவியக் கலை மேதையான ஆதிமூலத்தின் நெடிய கலைப் பயணம் நமக்குத் தெளிவாக உணர்த்துகிறது.

காலப்போக்கில் காண்டின்ஸ்கியின் ஓவிய மொழி பல மாற்றங்களுக்கு உட்பட்டது. எனினும் அவருடைய கற்பனை உலகின் அடிப்படையானது எப்போதும் நிலைத்த ஒன்றாகவே இருந்தது. (இக்கட்டுரையில் முன்வைக்கப்பட்டிருக்கும் மூன்று ஓவியங்களிலிருந்துகூட இதை நாம் அறியவும் உணரவும் முடியும்.) அவரைப் பொறுத்தவரை, கலையானது ஓர் ஆன்மிக உலகம்; அது இயற்கை உலகோடு பக்கம் பக்கமாகத்தான் இருந்துகொண்டிருக்கிறது. இரண்டுமே பிரபஞ்ச உலகின் நியதிகளுக்குக் கட்டுப்பட்டும் பிரபஞ்ச இசைமைக்கு உட்பட்டும்தான் இயங்குகின்றன. 1938-ல் காண்டின்ஸ்கி வெளிப்படுத்திய ஒரு கருத்து, அவருடைய கலைப் பார்வையையும் படைப்புகளின் குணத்தையும் உணர்த்தும்: “அரூப உலகமானது, நிஜ உலகுக்குப் பக்கமாக ஒரு புதிய உலகத்தை நிர்மாணிக்கிறது. நிஜ உலகின் தளத்தில் அது அமைக்கப்பட்டாலும் அந்த நிஜ உலகோடு அதற்கு எந்தச் சம்பந்தமும் இல்லை. இவ்வகையில், இயற்கை உலகுக்குப் பக்கமாக நிர்மாணிக்கப்பட்ட புதிய கலை உலகமும் தன்னளவில் உண்மையானது; உணரக்கூடியது.”       

காண்டின்ஸ்கியைத் தொடர்ந்து அவருடைய காலத்திலேயே உருவான ஓர் அற்புத நிகழ்வு, பால் லீ.    
        
(பாதை நீளும்)