Published:Updated:

பத்து நிமிடமே நடக்கும் Short + Sweet Theatre நாடகங்கள்... சென்னையில் நாடகத் திருவிழா!

நாடகங்கள் எல்லாம் வெறும் 10 நிமிடங்களில் முடிந்துவிடுபவைதான். அதுவும் வெவ்வேறு கதைக்களங்கள் வெவ்வேறு நடிகர்களைக் கொண்டு எனும்போது இது சுவாரஸ்யமாகவே இருக்கின்றன.

பத்து நிமிடமே நடக்கும் Short + Sweet Theatre நாடகங்கள்... சென்னையில் நாடகத் திருவிழா!
பத்து நிமிடமே நடக்கும் Short + Sweet Theatre நாடகங்கள்... சென்னையில் நாடகத் திருவிழா!

சென்னையில் நாடகத் திருவிழா. ஆம், அப்படித்தான் இருந்தது. மொத்தம் ஒன்பது வகையான நாடகங்கள். சமூகம், விமர்சனம், நகைச்சுவை, கேலி, சோகம், பழைமைவாத விமர்சனம் எனப் பல உணர்வுகளை உள்ளடக்கியதாக அமைந்திருந்தது. இப்படிப் பல்வேறு வகையும் ஒரே இடத்தில் கிடைக்கும்போது அதை `நாடகத் திருவிழா' என்றுதானே சொல்லவேண்டும். இது நேற்று மட்டும்தான். இதேமாதிரி இந்த மாதம் முழுவதும் வாரத்துக்கு நான்கு நாள்கள் நடத்தப்படுகிறது. திரௌபதை, பென்சிவ், மஞ்சள், சக்தி, டக்குன்னு ஒரு படம், ஷேக்ஸ்பியிர்ஸ் அன் பப்ளிஷ்டு லவ் ஸ்டோரிஸ், துரியன் படுகளம், பர்சூட், தி ஆடிஷன் என்ற ஒன்பது நாடகங்கள் நிகழ்த்தப்பட்டன. ஒவ்வொரு நாடகமும் வெறும் பத்து நிமிடம்தான். ஓரங்க நாடகம், குழு நாடகம், தெருக்கூத்து எனவும் இவை பல வகையில் அமைந்திருந்தன. அவை பேசிய விஷயங்கள் பெரியவை.

இந்த நாடகங்களில் பெரும்பாலானவை பெண்கள் பிரச்னையையே பேசின. பெண்கள் கட்டுப்பாடுகளை உடைத்துக்கொண்டு வெளியே வரவேண்டிய தேவை, சமூகத்தின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் எப்படி பெண்களுக்கே மிகப்பெரிய பாதிப்பாக இருக்கின்றன என்பதை அழுத்தமாகச் சொன்ன நாடகங்கள்தான் மிகுதி. அப்படிப் பேசவேண்டியது இன்றைய தேவையும்கூட.

உலகத்தில் Short + Sweet Theatre என்பது பத்து நிமிடம் மட்டுமே நிகழ்த்தப்படும் நாடகங்களுக்கான ஒரு போட்டி எனச் சொல்லலாம். இது முதன்முதலில் ஆஸ்திரேலியாவில் 2002-ல் தொடங்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் 7 நாடுகளில் சென்னை உள்பட 30 நகரங்களில் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. சென்னையில் 2011-ல்தான் முதன்முதலாகத் தொடங்கப்பட்டுள்ளது. இது 7-வது முறையாக சென்னையில் நடந்துகொண்டிருக்கிறது. இதில் பெரிய - சிறிய என்றோ, அனுபவம், அனுபவமின்மை, நவீனமானது, பழைமையானது என்றோ எந்த வேறுபாடும் இல்லாமல் நாடகத்தின் மீது ஆர்வம் இருப்பவர்களான ஒரு களத்தை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நடத்தப்படுகிறது. 

இந்த அமைப்பின் ஏற்பாட்டாளர் மீராவிடம் கேட்டபோது ``பிராகிருத் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பு 1998-ல் ரன்விர் ஷா என்பவரால் தொடங்கப்பட்டது. இது, இசை விழாக்கள், புதிய கான்செப்ட்டுகளுக்கான ஒரு தனி விழா எனப் பலவிதமான நிகழ்ச்சிகளை தொடந்து நடத்திவந்தது. அதன் ஒரு பகுதியாகத்தான் நாடகத்துக்கான `ஷார்ட் அண்ட் ஸ்வீட்’ என்ற இந்த நிகழ்ச்சியை நடத்தலாம் எனத் திட்டமிட்டோம். இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் உலகின் பிற பகுதிகளில் இருக்கின்றன என்றாலும், இந்தியாவில் அப்படி எதுவும் இல்லை என்றுதான் தோன்றுகிறது. அப்படியான ஒரு நிகழ்ச்சி தமிழ்நாட்டில் மட்டும்தான் நடத்தப்படுகிறது என்பது ஒரு பெருமைதான்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக எந்த வகையிலும் நாடகக் குழுக்களிடம் பணமோ வேறு வகையில் உதவிகளோ வாங்குவதில்லை. ரிகர்சல் தொடங்கி நாடகம் முடியும் வரையிலான அவர்களது அனைத்து செலவுகளை பிராகிருத் அமைப்புதான் செய்கிறது. எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்றுதான், நல்ல திறமையோடு குறுகிய காலத்தில் சுவாரஸ்யமான நாடகத்தைக் கொடுக்க வேண்டும். அப்படியிருந்தால் மட்டும் போதும். எந்தக் கருத்தையும் கலைஞர்கள் முழு சுதந்திரத்துடன் இங்கே அரங்கேற்றலாம். அதில் நாங்கள் தலையிடுவதேயில்லை.

ஒவ்வோர் ஆண்டும் இதில் ஆங்கில நாடகங்களே அதிகமாகக் கலந்துகொள்ளும். ஆனால், இந்த ஆண்டு தமிழ் நாடகங்கள் அதிக அளவில் கலந்துகொண்டுள்ளன. இது அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிகரிக்க வேண்டும். இதற்கு தேவையான சப்போர்ட் இருக்குமானால், இன்னும் பெரிய அளவில் எடுத்துச்செல்ல முடியும். எங்களுக்கு இப்போது இருக்கும் பெரிய சப்போர்ட்டே அலையன்ஸ் பிரான்சிஸ் அரங்கம் கொடுத்திருப்பதுதான்” என்றார்.

இன்று சினிமா, அரசியல் என்ற தளங்களில் பெரிய அளவில் சாதித்திருப்பவர்கள் பெரும்பாலும் ஒருகாலகட்டத்தில் மிகத் தீவிரமாக நாடகத் தளத்தில் இயங்கியவர்களாகத்தான் இருப்பார்கள். அதனால்தான் அவர்கள் துறை சார்ந்த தெளிவு அவர்களிடமிருந்தது. இப்போது இருப்பவர்களிடமும் அந்தத் தெளிவு இருந்தாலும் முன்பு இருந்த அளவுக்கு இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அப்படி மீண்டும் நாடகங்கள் தொடர்பாக இயங்க ஒரு நல்ல களமாக இந்த ஷார்ட் அண்ட் ஸ்வீட் நிகழ்வு இருக்கிறது.

இப்போது இருக்கும் காலகட்டத்தில் இந்த மாதிரியான நாடகங்களுக்கெல்லாம் நேரமில்லை. இதைக் கவனிக்க யாருமில்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் இடம்பெறும் நாடகங்கள் எல்லாம் வெறும் 10 நிமிடத்தில் முடிந்துவிடுபவைதான். அதுவும் வெவ்வேறு கதைக்களங்கள் வெவ்வேறு நடிகர்களைக்கொண்டு எனும்போது இவை சுவாரஸ்யமாகவே இருக்கின்றன. இதற்குச் செல்வதற்கு 200 ரூபாய் கட்டணம் என்றாலும் ஆர்வம் இருந்து செல்பவர்களை அவர்கள் தடுப்பதுமில்லை. அதே நேரத்தில் 200 ரூபாயில் பத்து நாடகங்கள் என்பது எந்த வகையில் குறைந்ததுமில்லை. எனவே, இதெல்லாம் பெரிய விஷயமாகப் பார்க்காமல் சென்றால் நிச்சயம் இது ஒரு நல்ல அனுபவமாக இருக்கும்.