Published:Updated:

கழுதையின் மனமாற்றம்!

விகடன் விமர்சனக்குழு

சுட்டி ஸ்டார்ஸ் ஸ்பெஷல்ஓவியங்கள்: ஜி.ராமமூர்த்தி

பிரீமியம் ஸ்டோரி

ர் ஏழை விறகு வெட்டியிடம் ஒரு கழுதை இருந்தது. அவர் நாள்தோறும் காட்டுக்குப் போய் விறகு வெட்டுவார். விறகுகளைக் கழுதைமேல் ஏற்றிக்கொண்டு சந்தைக்குச்செல்வார். அவற்றை விற்றுக் குடும்பத்தை நடத்துவார். கழுதைக்கும் உணவு கொடுப்பார். ஆனால், கழுதைக்கு அந்த உணவும் போதவில்லை; அந்த வாழ்க்கையும் பிடிக்கவில்லை. அதனால், அடிக்கடி முரண்டுப்பிடித்து வேலையில் ஒத்துழைக்காமல் இருந்தது. சரியாகச் சாப்பிடாமலும் மெலிய ஆரம்பித்தது.     

கழுதையின் மனமாற்றம்!

ஒரு நாள் அந்த ஊர் வழியே அந்த நாட்டின் குதிரைப் படை வந்தது. படை அதிகாரியும் விறகுவெட்டியும் சிறுவயது நண்பர்கள். படை அதிகாரி பார்வையில் கழுதை பட்டது. ‘‘ஏன் இப்படி மெலிந்திருக்கிறது?’’ என அதிகாரி கேட்டார்.
 
விறகுவெட்டி விஷயத்தைச் சொன்னதும், ‘‘சில நாட்கள் உன் கழுதை என் குதிரைகளுடன் இருக்கட்டும். அதற்கு நல்ல உணவு கிடைக்கும்’’ என்றார் அதிகாரி. விறகுவெட்டியும் கழுதையை அனுப்பிவைத்தார்.

கழுதை அவர்களோடு உற்சாகமாகப் புறப்பட்டது. சென்ற இடத்தில் நன்றாகச் சாப்பிட்டு உறங்கியது. அங்கிருந்த குதிரைகளோடு வம்பு பேசித்திரிந்தது. ‘‘சீக்கிரமே நானும் உங்களோடு போர் முனைக்கு வருவேன். குதிரைக்கான தகுதி என்னிடமும் இருக்கிறது’’ என்றது.

ஒருநாள் குதிரைகளுக்குச் சேணம் பூட்டப்பட்டது. ஆயுதமணிந்த வீரர்கள் அவற்றின் மீதேறிப் போருக்குச் சென்றனர். அன்று மாலை குதிரைகள் திரும்பி வந்தன. அவற்றின் உடல்களில் காயங்கள் இருந்தன.     

கழுதையின் மனமாற்றம்!

‘‘என்ன ஆச்சு? ஏன் காயங்களாக இருக்கிறது?’’ எனக் கேட்டது கழுதை.

‘‘பின்னே போர் முனையில் பட்டுச் சாமரமா வீசுவார்கள். வீரர்கள் மீது பாயும் அம்புகள் எங்கள் மீதும்தான் பாயும்’’ என்றது ஒரு குதிரை.

குதிரைகளின் வாழ்க்கை சொகுசானது அல்ல என்பதைப் புரிந்துகொண்ட கழுதை, அன்றிரவே தன் எஜமான் விறகுவெட்டியைத் தேடிக் கிளம்பியது.  

கழுதையின் மனமாற்றம்!

ஆர்.தக்‌ஷா, நியூ மார்டன் வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளி, முத்தையால் பேட்டை, புதுச்சேரி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு