பிரீமியம் ஸ்டோரி

புத்தரின் தலைமை மடாலயத்தில் ஏராளமான சீடர்கள் இருந்தனர். அவர்கள்  தங்கள் பயிற்சிகளை முடித்ததும், மக்களுக்குத் தியானம் கற்றுத் தருவதற்காக நாடு முழுவதும் அனுப்பப்படுவார்கள். அப்படி ஒரு தருணம். ஒரு சீடனை அழைத்த புத்தர், ‘‘நீ செல்ல நினைக்கும் இடம் எது?’’ எனக் கேட்டார். 

மூன்று கேள்விகள்!

அந்தச் சீடன் இடத்தைச் சொன்னதும், ‘‘அங்கே இருப்பவர்கள் பக்தியோ, தியான உணர்வோ கொஞ்சமும் இல்லாதவர்கள். மிகவும் முரடர்கள். இவையெல்லாம் தெரிந்தே அங்கு செல்ல நினைக்கிறாயா?’’ எனக் கேட்டார்.  

‘‘ஆமாம்’’ என்றான் சீடன்.

சீடனின் மன உறுதியைப் பரிசோதிக்க நினைத்த புத்தர், ‘‘அப்படியானால் உன்னிடம் மூன்று கேள்விகள் கேட்பேன். சரியான பதில்களை அளித்துவிட்டால் நீ அங்கு செல்லலாம். முதல் கேள்வி, நீ அங்கே சென்றதும் அவர்கள் உன்னை வரவேற்பதற்குப் பதிலாக வசைபாடி அவமானப்படுத்தினால் என்ன செய்வாய்?’’ என்று கேட்டார்.  

மூன்று கேள்விகள்!

சீடன் முகத்தில் மகிழ்ச்சி. ‘‘நான் மிகவும் ஆனந்தமடைவேன் ஏனெனில், அவர்கள் என்னை அடிக்கவில்லை; துன்புறுத்தவில்லை. வசைபாடுவதோடு நிறுத்திக்கொண்டார்களே என்று நன்றி சொல்வேன்’’ என்றான்.

இரண்டாவது கேள்வியை முன்வைத்தார் புத்தர். ‘‘ஒருவேளை அவர்கள் உன்னை அடித்து உதைத்தால் என்ன செய்வாய்?’’

‘‘அப்போதும் எனக்கு மகிழ்ச்சிதான். ஏனெனில், அவர்கள் என்னை அடிப்பதோடு நிறுத்திக்கொள்கிறார்களே. என்னைக் கொல்லவில்லை என்று ஆனந்தம் அடைவேன்’’ என்றான் சீடன்.         

மூன்று கேள்விகள்!

‘‘ஒருவேளை அவர்கள் உன்னைக் கொன்றுவிட்டால் என்ன செய்வாய்?’’ என்று மூன்றாவது கேள்வியைக் கேட்டார் புத்தர்.

‘‘ஆஹா இன்னும் மகிழ்ச்சியே. இந்தப் பூலோக வாழ்வில் இருந்து எனக்குச் சுதந்திரம் தருகிறார்களே’’ என்றான் சீடன்.

புத்தர் புன்னகைத்தார். ‘‘மற்றவர்களுக்குப் பயிற்றுவிக்கும் மனப்பக்குவத்தை நீ பெற்றுவிட்டாய். இந்த உலகத்தில் எங்கு சென்றாலும் உன்னை யாராலும் வீழ்த்த முடியாது. சென்று வா’’ என்று வாழ்த்தி அனுப்பினார். 

மூன்று கேள்விகள்!

வே.கேசவன், ஸ்ரீ சங்கரா மேல்நிலைப் பள்ளி, திருவான்மியூர், சென்னை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு