Published:Updated:

மீச - சிறுகதை

மீச - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
மீச - சிறுகதை

தமயந்தி, ஓவியங்கள்: ஸ்யாம்

வானம் இன்னும் அடைசலாகத்தான் இருந்தது. சில நேரம் மனதின் நிறங்களுக்குத் தக்க, சூழலின் நிறங்கள் மாறும் என இவள் திண்ணமாக எண்ணினாள். புதிதாக அரைத்த காபித்தூள் வாங்கி வந்து மணத்துடன் கொதிக்க வைக்கும்போது ஒரு ப்ரவுன் கலர் பூனை ஜன்னலில் கடக்கும்.  அது ஏன் ஒரு வெள்ளைப் பூனையாக இல்லாமல், காபி நிறத்திலான பூனையாக இருக்க வேண்டும். அப்படியானால் அந்த காபி நிறப் பூனைதான் கடவுளா?

ஒருமுறை இதை செபாஸ்டியனிடம் சொன்ன போது அவன், அவள் நெற்றி முடியை ஒதுக்கியவாறு ``கர்த்தாவே... உனக்கு மட்டும் எப்படித் தோன்றுகிறது இப்படி. கொஞ்சம் எக்ஸ்ட்ரா உழைச்சிருக்கார் கர்த்தர் ஒன்ன படைக்கிறப்ப'' என்றான்.

அவன் நக்கல் அவளுக்கு விருப்பமாயில்லை. ஒரு நொடியின் அற்புதத்தைப் புரிந்துகொள்ளாத ஒருவனை எப்படித் தன்னால் காதலிக்க முடிந்தது என்று கவலைப்பட்டாள். அது அவள் முகத்தில் அப்பட்டமாகத் தெரிய அவனே ``டெபோ... என்ன இது... ச்சும்மா ஒரு வெளயாட்டுக்குதான சொன்னேன். அதுக்கு ஏன் மூஞ்சத் தூக்குற. உங்கிட்ட வெளயாடக் கூடாதா நான்?'' என்றான்.

மீச - சிறுகதை

தவறவிட்ட வார்த்தை களுக்குச் சொல்லப்படும் சால்ஜாப்புகளில் ஒருபோதும் டெபோராவுக்கு நம்பிக்கை யில்லை. செபாஸ்டியன் எதிர் வீடு.  ஏழாம் வகுப்பிலிருந்தே இவளுக்கு அவன் மேல் ஓர் ஈர்ப்பு. ஒருபோதும் அவன் இவளை விட்டுக் கொடுத்ததில்லை. ஒரு முறை சிறுவயதில் இவள் உடைத்த ஒரு கண்ணாடிக் குவளையை அவன்தான் உடைத்ததாகச் சொல்லியிருக்கிறான். எத்தனை பெரிய கோபத்தோடு டெபோரா இருந்தாலும், அவள் நெற்றிமுடியைக் கோதி அத்தனை சூட்டையும் சமன்படுத்திவிடுவான்.

அவனுக்காகவே அவன் வேலை பார்க்கும் அலுவலகத்தில் வம்படியாக வேலைக்குச் சேர்ந்தாள். அவனுக்கு அது பிடிக்கவில்லை.

``என்ன துப்பு பாக்கியாக்கும்?''

``அப்டியே வெச்சுக்கோயேன்.''

``திமிரா? நான் ஆபீஸ்ல உம் முன்னாடியே இன்னொருத்தியக் கட்டிப்பேன்.''

``கட்டிக்க.''

``ஒனக்கு வவுறு எரியும்.''

``எரியாது.''

``ஹோஹோனான்னா.''

``நிசமா. நீ எவளையும் கட்டிக்க. எவகூடயும் இரு. ஆனா எங்கிட்ட வருவ...''

``கதவுப் பக்கம் குத்துக்காலிட்டு உக்காருவியாக்கும்...''

``யேசப்பா... என்ன பேச்சு பேசுற செபா... ஆமா, அப்படித்தான் ஒக்காந்திருப்பேன். எந்தப் பொம்பள மேல நீ கை வெச்சாலும் என் வாசன இல்லாம நீ தொடவே முடியாது.''

அவள் முடிக்கும்போது அவன் கைகள் அவள் நெற்றிமுடியைக் கோதின. அவள் கண்கள் கலங்கியிருந்தன. அவனின் சின்ன தாடியை அவள் மூக்கு நுனியால் உரசினாள்.

``கழுத... கண்ணத் தொட... லூசு.''

அவள் மனதிற்குள் ஓர் அழகான வானவில் தோன்றிற்று. அந்த நேரம் தெருவில் ஒருவன் பல நிறங்களில் ஐஸ்குச்சி விற்றுப் போய்க் கொண்டிருந்தான். செபாஸ்டியன் அவள் கண்களை நிமிர்த்தி ``ஐஸ் வேணுமா'' என்றான்.
``ஆமா செபா... மனசுல இப்ப ஒரு வானவில் வந்துச்சு...''

``லூசுன்னு சொல்ல வைக்காத... நிறுத்திடு.''

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மீச - சிறுகதை

செபாவுக்கு குடும்பப் பொறுப்புகள் உண்டு. அவன் அப்பா பர்மாவிலிருந்து வந்தவர். நிரந்தரமான வருமானம் இல்லாமல் ஓர் அத்தோ கடை  வியாசர்பாடியில் போட்டிருந்தார். அதில் வரும் வருமானத்தில் ஐந்து குழந்தைகளை வளர்த்தார். டெபோராவின் அம்மாவுக்கு தன் மகள் அங்கு கல்யாணம் செய்து போவதில் விருப்பமில்லை.

``கேணக்கிறுக்கச்சி...அவம் பின்னால அலைஞ்சன்னா அறுபது வயசுல மொத புள்ள பெத்துப்ப'' என்பாள்.

இவள் இதுவரை பதில் சொன்னதில்லை. அம்மைக்கோ அது தினம் புலம்பலாக இருந்தாலும் அவனுடனே வேலை பார்க்கும் அவளை தினம் திட்டுவதற்கு அதுவே ஒரு சாக்காகிப் போனது.

``ஏம்மா... என்னையத் திட்டிக்கிட்டே இருக்க.''

```ஹாங்... கழுத காலு மாடி ஏறுறப்ப சறுக்குச்சாம். எங்காலடியில வந்து விழுது. அதான் கத்துறேன்.''

இவள் அந்த இடத்திலிருந்து எழுந்து வெளியே வந்தாள். அவனிடம் இதையெல்லாம்  சொல்வதில்லை அவள். சொன்னால் அவன் முகம் சுருங்குமென அவளாகவே நினைத்துக் கொள்வாள். பொறுமை யாய் இருக்க வேண்டும் என்றும் அவன் என்றாவது மிகப் பெரிய வேலையும் சம்பளமும் பெறுவான் என்றும் நம்பினாள். அப்போது இதே அம்மை அவனைத் தாம்பாளத்தில் ஆரத்தி வைத்து வரவேற்பாள் என்று தோன்றிற்று.

ஆனால், செபாஸ்டியன் இவள் முகச் சுணுங்கலை அடையாளம்  கண்டுகொள்வான்.

``என்னலே... மூஞ்சில மூணு ஆம்லெட் பொரிக்கிது... ஏன்?''

``க்கும்... எங்க ஊரு பாஷையைக் கிண்டல் செய்யாத.''

``பர்மா பாஷையைக் கொமைப்பியாக்கும்... ஆமா... மூஞ்சி ஏன் இப்படி இருக்கு?''

``அதெல்லாம் ஒண்ணும் இல்லியே... தல வலிக்கு.''

``நம்பிட்டேன்.''

அவன் அதற்குமேல் கேட்கிறவனும் இல்லை. கம்பெனியில் புது மேனேஜர் வருவதாய் அவன் சுழன்றுகொண்டு இருந்தான். தூர இருந்து `மயிலிறகே சிரி' என்று மெசேஜ் அனுப்பினான். அவளுக்கு காபி வாங்கிக் கொடுத்து விட்டான்.

`என்ன லவ் பொங்குது' என்று இவள் மெசேஜ் அனுப்ப, அவன் `மீச குத்த முத்தம்' என்று பதிலனுப்பினான். மறுநாள் புது மேனேஜர் வந்து ஆபீஸே களை கட்டியது. அப்படியொரு மேனேஜரை இவள் பார்த்ததேயில்லை. டை கட்டி கோட் போட்டு அத்தனை அழகாக இருந்தான். வட இந்தியாவில் படித்தவன் என்பதை நுனி நாக்கு ஆங்கிலம் மூலம் நிரூபித்தான். அது ஒரு சோப் தயாரிப்பு மற்றும் விற்பனை கம்பெனி. மாதாமாதம் சம்பள கவருடன் ஒரு மாதத் தேவைக்கான சோப்பு, துவைக்கும் தூள் எல்லாமே ஒரு குடும்பத்தின் மொத்த நபர்களைக் கணக்கில் கொண்டு கொடுக்க உத்தரவு போட்டான். இவளுடன் வேலை பார்த்த மேபலுக்கு அது பெரிய சந்தோஷம். மேபலின் கணவன் ஒரு எலெக்ட்ரீஷியன். ஒரு குழந்தை அவர்களுக்கு.  இவள் வேலை பார்ப்பதால் அம்மா வீட்டில் வளர்ந்து வருகிறது. வாராவாரம் பால்பவுடர், ஜான்சன் சோப் வாங்கிப் போய் கண்ணீருடன் கிளம்பி வந்துவிடுவாள். திங்கட்கிழமை முழுக்கக் கண்ணில் நீராடினபடியே இருக்கும்.
``எந்த நேரத்துல இந்தாளக் கட்டினேனோ தெரில... பெத்த பிள்ளய வாரம் ஒருநாள்கூட வந்து பாக்க மனசில்லாம குடிச்சிட்டு கெடக்கான். சோத்துல விஷம் வெச்சிறலாமான்னு இருக்கு...''

மேபலுக்கு இந்த சோப்பும் வாசமும் அத்தனை மகிழ்ச்சியைத் தந்திருக்க வேண்டும். மேனேஜரை அவள் அடிக்கடி ஓரக்கண்ணால் பார்த்ததை இவளும் பார்த்தாள்.

``என்னக்கா... சைட் அடிக்கியா'' என்று மேபலின் பின்புறத்தில் கிள்ளினாள்.

``அடீங்கொய்யால.. பின்ன என்னாத்துக்கு கண்ணு இருக்கு.''

``க்கும்... பின்ன ராத்திரி முழங்கால்ல நின்னு பிதாவே... பிற ஆணப் பார்த்த கண்ண மன்னியும்னு கெஞ்சுறது...''

``யார்ட்ட...''

``யேசப்பாட்டதான்.''

``அதான பாத்தேன். அந்தாளச் சொல்லுறியோன்னு நெனச்சேன். அவன் போனா போயிக்க... குவார்ட்டருக்கு மட்டும் காசு வப்பியான்னு கேப்பான்.''

மீச - சிறுகதை

அவள் சொன்னதில் இருந்த துக்கத்தை இவளால் தாங்கிக் கொள்ள இயலாது. இயல்பாகச் செய்வதுபோல் தன் கையிலிருக்கும் கண்ணாடி வளையலை அவள் கைகளுக்குள் திணித்துப் பார்த்தாள். மேபல் அதைச் சிரித்துக்கொண்டே வாங்கினவள், `திரும்பத் தர மாட்டேன்' என்றாள்.

``வச்சிக்கக்கா...''

மழை அடைத்தபடி பெய்தது. மேபல் அதையே வெறித்துகொண்டு ``டீ  குடிப்போமாட்டீ?'' என்று கேட்டாள். அடைசலாகப் பெய்யும் மழை. சாம்பல் நிறத்தில் ஏதாவது இப்போது கண்ணில் படுமென இவளுக்குத் தோன்றிற்று.  எசேக்கியலில் வருவதுபோல நான் அந்த ஜீவன்களைப் பார்த்துக் கொண்டிருக்கையில் இதோ, பூமியில் ஜீவன் களண்டையில் நாலு முகங்களையுடைய ஒரு சக்கரத்தைக் கண்டேன் வசனம் போல. சாம்பல் வண்ண சக்கரம் ஒன்றை ஒரு சிறுவன் ஓட்டிச் சென்றான். அவன் ஓட்டத்தில் மழையைத் துரத்திப் பிடிக்கும் பதற்றம் தெரிந்தது. மேபலிடம் தன் மனதில் படுவது கண்ணில் தென்படுதா என்று கேட்க விரும்பினாள். டீ குடிக்க எழுந்து போனார்கள். அந்தப் பையன் இன்னும் மழையில் அந்த சாம்பல் சக்கரத்தை உருட்டியபடி போனான். மழையில் அவன் தொப்பலாக நனைந்து, பின் மழையாகவே மாறியது போலிருந்தது.

அன்று அந்த வருடத்தின் பெருமழை. மறுநாள் பம்பாயிலிருந்து ஆட்கள் வருவதாகச் சொல்லி யிருந்தார்கள். இரவே எல்லா பணிகளையும் சற்று நேரம் ஆனாலும் முடித்து விட்டுக் கிளம்புவதாகச் சொன்னார் மேனேஜர். செபா மார்க்கெட்டிங்கில் இருப்பதால் அவன் எதிர் அறையில் இருந்தான். சட்டென மெசெஜ் ரிங் அடித்தது. இவள் மெசேஜ் பார்த்தாள். அவன்தான். `எல்லோரும் மீசை எடுத்து க்ளீன் ஷேவ் செய்ய வேண்டுமெனச் சொல்லிவிட்டார் மேனேஜர் என்றும், இரவே நல்ல ஷூ வாங்க வேண்டும்' என்றும் அதில் இருந்தது. `முடியாது என்று சொல்லி விடு' என்று இவள் அனுப்பியதை வாசித்து அவன் பாதிக் கழுத்து திரும்ப எதிர் அறையில் பார்த்தான்.  `மீச இல்லாம நீ நல்லாவே இருக்க மாட்ட. முடியாதுன்னு சொல்லு' என்று மறுபடி அனுப்பினாள். `சொன்னேன்.  அவர் கேட்கவில்லை' என்று அவன் பதில் அனுப்ப `நீ பேசவேயில்லை.  ஏன் பொய் சொல்கிறாய்?. ஃப்ராடு' என்று இவள் டைப் அடிப்பதற்குள்  மீட்டிங் முடிந்து மேனேஜர் வெளியே வந்து விட்டான். இவள் அவசரமாக செல்போனை உள்ளே வைத்தாள். செபா எதிர் ஜன்னல் வழி அதைப் பார்த்துச் சிரித்தான்.

அவன்மேல் அவளுக்கு அதுவரை அத்தனை கோபம் வந்ததில்லை.

``அவன் மீசய எடுன்னு சொல்ல யாரு... வேல சரியா பாக்கறமானுதான பாக்கணும்... இந்த மசிருலாம் எதுக்கு?''

``அட... கார்ப்பரேட் லுக் வரணும்னார்.''

``அவனுக்கு வளராதா இருக்கும்.''

``சும்மா பேசாத டெபோரா... இப்ப ஒரு மீசைக்கு பாத்தா வேலய விடணும்... அவ்ளோதான...''

``அப்டி ஒண்ணுஞ் சொல்லல... சொல்ல வேண்டியதுதான... அவன் என்ன இழுத்தாலும் ஆமாஞ்சாமி போடணுமா?''

``என்னமோ அவர் உன்ன மீச எடுக்கச் சொன்ன மாரி குதிக்கிற... இதெல்லாம் ஒரு பிரச்னையா?''

``ஆமா. இதெல்லாம் ஒரு பிரச்னை இல்ல...''

``வாழ்க்கைல உனக்கு எதெதுக்கு பிரச்னை பண்ணனும்னுகூடத் தெரில பாரு... ஒரு பைசாவுக்குப் பெறாத விஷயம்.''

``உன்னால சொல்ல முடில ஆம்பளயாட்டம்... அதான...''

``அறஞ்சேன்னா... ஏன் நீ போயி சொல்லேன் தைரியமிருந்தா.''

எங்கிருந்து வேகம் வந்ததென்று தெரியவில்லை. மேனேஜர் கதவு வரைக்கும் போனவள் திரும்ப வந்து இவனைப் பார்த்து, ``நான் யார் உனக்கு... நீ மீசய மழி... என்னத்தயும் செய்'' என்றபடி கிளம்பினாள். அடுத்த நாள் அலுவலக ஆண்கள் எல்லோருமே மீசை எடுத்து க்ளீன் ஷேவ் செய்து இன் செய்து ஷூ போட்டு வந்தார்கள். இவள் செபாவை நிமிர்ந்துகூடப் பார்க்கவில்லை. அவன் உதட்டுக்குள்ளேயே சிரித்து அவளை இடித்துவிட்டுப் போனான்.

பம்பாய்க்காரர்கள் வந்து போயும்கூட மேனேஜர், மார்க்கெட்டிங்காரர்களை மீசை வளர்க்கவிடவில்லை. `முன்ன எப்டின்னாலும் இருக்கட்டும்... இனிமே லுக் ரொம்ப முக்கியம்' என்று, ஷேவ் செய்யாமல் வந்த ராகவனை திருப்பி அனுப்பிவிட்டார். செபாவுக்குக் கோபம் வந்தது அப்போதுதான். நடு ஆபீஸில் `சார்... இது நல்லதில்ல... தப்பு' என்றான் கோபமாய்.

மீச - சிறுகதை

``என்ன... என்ன செபா... ரொம்ப சத்தமா பேசுறீங்க.''

``மீச வளந்திட்டா ஆபீஸுக்குள்ள விட மாட்டீங்களா சார்... என்ன அநியாயம்.''

``அஸ் எ மேனேஜர், அது என்னோட முடிவு. யூ ஹேவ் நத்திங் டு டூ வித் இட்.''

``அது அவர் மீச சார்.''

``ஸோ வாட்?''

``ஸோ வாட்டா...உங்களுக்கு வளராதுங்கிறதுக்காக சும்மா யாருமே வெச்சுக்கக் கூடாதுன்னு சொல்லாதீங்க.''

``ரொம்பப் பேசாதீங்க சார்... ஐ வில் சஸ்பெண்ட் யூ.''

ராகவன்கூட செபாஸ்டியனை விடு என்றான்.  அவன் கையைப் பிடிக்க முயன்றான்.

``பண்ணுங்க சார்... இங்க என்ன நடக்குன்னு எனக்குத் தெரியாதா... சரி நமக்கென்ன நமக்கென்னன்னு பொத்திட்டுப் போனா...''

மேனேஜர் சடாரென அறைக்குள் போனார். இவள் செபாஸ்டியனின் தோளை அமுக்கி உட்கார வைத்துத் தண்ணீர் கொடுத்தாள். மேபல் பையை எடுத்துக்கொண்டு இவளிடம் சொல்லாமல் கிளம்பினாள். அவள் போவதையே செபா பார்த்தபடி இருந்தான். பின் மடமடவென்று தண்ணீர் குடித்தான்.

``ஏன் செபா இவ்ளோ கோவம்?''

``வுடு.''

``அதான் ஏன்னு கேக்குறேன் இல்ல...''

``இதான உன் ஆசை. கேட்டுட்டேன்.  ஒனக்காக கேட்டுட்டேன். போறுமா?''

``போறும். கெளம்பு.''

அன்று இரவு, செபாவின் அப்பாவுக்கு மாரடைப்பு வந்தது. இரவு முழுக்க அவர் உயிர் பிழைக்கவும் செபாவின் வேலைக்காகவும் ஜெபம் செய்தாள் இவள். ஆனால், விடியற்காலையில் அவர் இறந்துவிட்டதாக ஆஸ்பத்திரியிலிருந்து செய்தி வந்தது. இவளே மேனேஜருக்கு போன் செய்து சொல்ல, கொஞ்சமும் சலனமில்லாமல் ம் கொட்டி போனை வைத்தான். சாவுக்கு வந்தவன் ஐந்து நிமிடம் இருந்துவிட்டுக் கிளம்பி விட்டான். இவளை வெளியே கூப்பிட்டு `இந்த நேரத்துல என்ன செய்யன்னு தெரில... நேத்தே நான் செபாஸ்டியன் சஸ்பென்ஷனை பாம்பேக்கு அனுப்பிட்டேன்' என்றான். இவள் ஏதும் சொல்லாமல் நிற்க `ஐ யம் ஸாரி' என்றான்.

இழவு வீட்டில் மேபல் இவளிடம் வந்து, ``ஒண்ணுஞ் செய்ய முடியாதா... செபாக்குத் தெரியுமா'' என்றாள். இவள் இல்லை என்பது போல தலையசைக்க இவள் அம்மா மேபலிடம் ``நல்ல பையனா பாத்துக் கட்டலாம்னு நெனைக்கோம்...ஆனா இவ'' என்றாள். மேபல் கேட்காதது போல இருக்க, அம்மா முனங்கினபடி இருந்தாள். மேபல் இவள் கையைப் பிடித்து வெகு நேரம் இருந்தவள் பின் மெல்ல, ``செபா உன்ட்ட ஏதும் சொல்லிச்சா?'' என்றவள்,  ``தெரியும்'' என்றாள். அவள் மேலெங்கும் வேர்த்திருந்தது.

செபாவின் அப்பாவை காஃபினில் வைத்து ஆம்புலன்ஸில் ஏற்றினார்கள். கோயிலில் கடைசியாக அவர் முகத்தைப் பார்க்கச் சொன்ன போது அழுத இவளை அத்தனை கூட்டம் முன்னமும் செபா அணைத்துக்கொண்டான். எல்லாம் முடிந்து வீட்டுக்கு வந்தபிறகு இரவு முற்றத்தில் உட்கார்ந்து செபா கேட்டான்.

``மேனேஜர் என்ன சொன்னான் உங்கிட்ட?''

``உன்ன சஸ்பெண்ட் செஞ்சு அனுப்பிட்டானாம். நான் என்ன செய்யன்னு வருத்தப்பட்டான்.''

``அச்சோ... விடு.''

``செபா...''

``என்னம்மா?''

``நீ ஏதும் சொன்னியான்னு மேபலக்கா கேட்டா...''

செபா இவளை உற்றுப் பார்த்து ``பசிக்குது... சாப்டலாமா'' என்றான். லேசாக மழை தூறியது. ``அப்டி என்ன ரகசியம், சொல்லு'' என்றவள் ``நீ சொல்லவேணாம். மேபலாக்காட்ட நான் கேட்டுக்கறேன்'' என்றாள். பின் ஒரு நொடியில் நாக்கைக் கடித்து ``நானும் வேலைக்குப் போகல'' என்றாள். அப்படிச் சொல்லும்போதே அவள் குரல் கம்மிற்று.

``நீ ஒம்பாட்டுக்கு வேலைக்குப் போ... பாக்கலாம்.''

மீச - சிறுகதை

இவள் அவன் கையைப் பிடித்துக் கொண்டாள்.இவளின் உள்ளங்கை எப்போதும்போல வேர்த்திருந்தது. அவனைப் பார்த்து ``கோவமா'' என்றாள் கிசுகிசுப்பாக.

``அட... அதெல்லாம் ஒண்ணுமில்ல...''

``மேபலக்கா நீ ஏதாச்சும் சொன்னியா சொன்னியானு கேட்டுச்சு... என்ன விஷயம்?''

அவன் அவசரமாக எழுந்திருப்பதுபோல எழும்பப் பார்த்து ``இரு புள்ளா... வெளிய ட்யூப் லைட் போட்டுட்டானானு பாக்குறன்'' என்றான். இவள் இழுத்து அவனை உட்கார வைத்து, `` உம் மூஞ்சிக்குதான் மறைக்க வராத. என்னவாம் பரம ரகசியம்... மேபலாக்காக்கு போன் போட்டு, போட்டு வாங்கவா?'' என்றாள்.

``ச்ச... வேணாம்ட்டீ... சொன்னா கேளு.''

அவன் அவளது செல்போனை வாங்க முயற்சிக்க அவள் என்ன என்பது போலப் பார்த்து, ``நான் அம்புட்டு சொன்னேன், மீசய எடுக்காதன்னு... அப்பல்லாம் ஒனக்கு ரோசம் வரல... திடுப்புன்னு பொங்கிடுச்சே... எப்படி யாக்கும்?''
அவன் தலையைக் குனிந்தபடி, ``அந்த நாசமா போனவன் மேபல்க்காட்ட...''

``என்ன சொல்லுத... நீ பாத்தியா...செவள இழுத்திருக்க வேணாமா?''

அவன் அமைதியாய் அவளையே பார்க்க அவள் பதறி, ``ஏன்... மேபலக்காவுமா?'' என்றாள்.

செபாஸ்டியன் இவள் கையை இறுக்கப் பிடித்துக் கொண்டான்.

``மேபலக்கா பாவம்... எவன்தொட்டாலும் எனக்காக ஒருத்தன் கதவோரமா குத்த வெச்சிருப்பான்னு அவளால சொல்ல முடில... அப்படி ஆரும் இல்ல இல்லியா அவளுக்கு'' என்றவன் அவள் கைகளை இறுகப் பிடித்து ``மேபலக்கா உங்கூடதான பேசும். தனியா வுட்டுறாத. இந்த நேரம்தான் அவளுக்கு ஆறுதலா இருக்கணும்... அவன்ட்ட சாக்ரதயா இருக்கச் சொல்லு. எங்கண்ணுல பட்டுடுச்சுன்னு ஏதாச்சும் எசகுபுசகா  செஞ்சிடப் போவுது. எல்லாரும் மனுசங்கதான டெபோ'' முடிக்கும்போது அவன் குரல் தழுதழுத்தது. இவள் மனதிலோ கண்ணிலோ எதுவும் தோன்றிவிடவோ  தென்பட்டுவிடவோ கூடாதெனவும் அந்த நொடி மழையில் கரைந்து போய் விட வேண்டுமெனவும் கண்களை  மூடிக் கொண்டாள்.