Published:Updated:

என்ன பேரு வைக்கலாம்... எப்படி அழைக்கலாம்!

என்ன பேரு  வைக்கலாம்... எப்படி  அழைக்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
என்ன பேரு வைக்கலாம்... எப்படி அழைக்கலாம்!

சிறுகதை / வீயெஸ்வி, ஓவியங்கள்/ நடனம்

என்ன பேரு வைக்கலாம்... எப்படி அழைக்கலாம்!

சிறுகதை / வீயெஸ்வி, ஓவியங்கள்/ நடனம்

Published:Updated:
என்ன பேரு  வைக்கலாம்... எப்படி  அழைக்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
என்ன பேரு வைக்கலாம்... எப்படி அழைக்கலாம்!

யிற்றில் புழு நெளியப் போவதையும், பூச்சி பறக்கப் போவதையும் உறுதிப்படுத்தும் தினுசில் முதல் வாந்தி எடுத்தாள் வர்ஷா. வாஷ் பேஸினில் அவளுடைய 'உவ்... வைய்...’ சத்தம் உள்ளே இருந்த அத்தனை பேரையும் அலறி அடித்துக்கொண்டு ஓடிவர வைத்தது. 

''அஜீரணம்...''

''நேத்து லேட் நைட் சாப்பிட்ட பாவ்​பாஜி ஒத்துக்கலே...''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''வேறு ஏதாவது காரணமா இருக்கு​மோ?''

ஆள் ஆளுக்கு யூகங்களை அவிழ்த்துவிட... மொபைலில் லேடி டாக்டரை அழைத்தான் நவீன். முழுப்பெயர் நவநீத கிருஷ்ணன்.

என்ன பேரு  வைக்கலாம்... எப்படி  அழைக்கலாம்!

வந்த டாக்டர், வர்ஷாவின் பல்ஸ் பார்த்தார். நவீன் தனது பர்ஸைப் பார்த்துக் கொண்​டான்.

''கங்கிராட்ஸ்... நீங்க அப்பா ஆகப் போறீங்க... உங்க மனைவி வர்ஷா அம்மாவா ஆகப் போறா...'' என்றார் டாக்டர். அவரே தொடர்ந்து, வேறு   யாரெல்லாம் அடுத்த பத்தாவதுமாதத்தில் என்னவெல்லாம் ஆகபோகிறார்கள் என்ற உறவு முறையை

அடுக்கினார்.

''நீங்க தாத்தாவாகப் போறீங்க...''

''ஆன்ட்டி... உங்களுக்கு பாட்டி புரமோ​ஷன்...''

''அகிலா... நீ அத்தை ஆகப் போறேம்மா... மெத்தையை, அதான் உன் மடியை, ரெடியா வெச்சுக்க...'' என்ற டாக்டர், சுற்றும் முற்றும் கழுத்தைத் திருப்பினார். வேறு யாரையாவது உறவு சொல்ல விட்டுவிடப் போகிறோமே என்ற பயத்தில்.

''டாக்டர்... நீங்க என்னவா ஆகப் போறீங்கன்னு சொல்லவே இல்லை​யே!''

''வர்ஷாவுக்கு டெலிவரி பார்த்து இன்னும் கொஞ்சம் பணக் காரியாஆகப்போறேன்! நார்மலா இல்லாம சிஸேரியனா இருக்கணும்னு பெருமாளை வேண்டிக்குங்க!'' என்ற டாக்டர், வர்ஷாவை க்ளினிக்குக்கு அழைத்து வரும்படி நவீனிடம் சொல்லி​விட்டு, வரும்படியையும் வாங்கிக்கொண்டு காரில் ஏறினார். (நான் வாலியின் விசிறி!) 

டாக்டரின் க்ளினிக்கில் கூட்டம் அலை மோதியது. வரிசை கட்டி பெண்கள் அதிகமாக உட்கார்ந்து இருந்தார்கள். ஒவ்வொருவரின் வயிற்றுப் பகுதியும் ஒவ்வொரு டயா மீட்டரில் இருந்தது. வர்ஷா மட்டுமே ஜுரத்துக்கு மாத்திரை வாங்கிச் செல்ல வந்திருப்பதுபோல் தெரிந்தாள். 118 நிமிடக் காத்திருப்புக்குப் பின், தேவையான பரிசோதனைகளைச் செய்துவிட்டு வர்ஷாவின் கர்ப்பத்தை மீண்டும் ஒரு முறை உறுதி செய்தார் லேடி டாக்டர்.

''வெயிட் தூக்கக் கூடாது, மாடிப் படி ஏறக் கூடாது, திகில் படங்கள் பார்க்கக் கூடாது, ஆட்டோவில் பயணிக்கக் கூடாது...'' என்று நிறைய கூடாதுகளை அடுக்கிக்கொண்டே போனார். ''மாதாந்திர செக் _ அப்கள் செய்து கொள்ளவேண்டும்!'' என்றார்.

''டயட் எப்படி டாக்டர்?'' என்று கேட்டான் நவீன்.

''இப்போதைக்கு கட்டுப்பாடு எதுவும் கிடை யாது... வாய்க்குப் பிடிச்சதை சாப்பிடலாம்...''

''ரொம்ப நன்றி டாக்டர்... நான் எனக்குத்தான் கேட்டேன்!'' என்றான் நவீன். 

படுக்கை அறையில் ஜீரோ வாட்ஸ் பல்ப் மங்கலான வெளிச்சம் பரப்பிக்கொண்டு இருந்தது. (எப்படி? சிறுகதை களைகட்டி விட்டதா?) ஏ.சியை ஓடவிட்டான் நவீன்.

''மெதுவா... மெதுவா...'' என்றான்.

''நான் இப்ப எதுவுமே செய்ய​லையே... சும்மா படுத்துக்கிட்​டுத்தானே இருக்கேன்...'' என்றாள் வர்ஷா.

''சும்மா சொல்லிப் பார்த்தேன்... இன்னொரு ஏழெட்டு மாசத்துக்கு 'மெதுவா... மெதுவா...’வை நிறையத் தடவை சொல்ல வேண்டிவருமே... அதுக்கான ரிகர்சல் இது...''

''நவீன்...'' என்று ரொமான்ட்டிக் குரலில் அழைத்தாள் வர்ஷா...

''என்ன டார்லிங்? வாமிட் வரும்போல இருக்கா!''

''இல்லேடா...''

''பின்னே... மிளகாய்த் தூள் தடவி மாங்கா பத்தை சாப்பிடணும்போல இருக்கா செல்லம்?''

''சே! எப்பவும் சாப்பாடும், வாந்தியும்தான் உனக்கு டாபிக்கா? என்னை கொஞ்சம் பேசவி​டேன்...''

''தாரளமா பேசு... ஆனா மெதுவா பேசு...''

''அந்த சி.டி. பிளேயரை ஓடவிடேன்...''

''ப்பூ! இதுக்குத்தான் இத்தனை பீடி​கையா?''

ஓடவிட்டான் நவீன். பாம்பே ஜெயஸ்ரீ வாத்சல்யமாகப் பாடினார்.

''நவீன்... நமக்கு ஆண் குழந்தை பிறக்குமா... இல்லே பெண் குழந்தையா..?''

''எனக்கு ஜோசியம் தெரியாதே... வேணும்னா டாஸ் போட்டுப் பார்க்கலாமா?''

''விளையாடாதேடா... ஒரு காரணத்துக் காகத்தான் கேட்கறேன்... சொல்லு... ஆணா, பெண்ணா?''

''ம்... எனக்கு ரெண்டும் ஓகே... இரட்டையா இருந்தா டபுள் ஓகே... வர்ஷா மாதிரி அழகா ஒண்ணு... ஐயா மாதிரி படுஸ்மார்ட்டா ஒண்ணு...''

''உனக்கு ஆனாலும் பேராசை அதிகம் நவீன்...''

அவனுடைய கன்னத்தை செல்லமாகக் கிள்ளிவிட்டுக் கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்தாள் வர்ஷா. அதுவே வசதியாகப் போக, அவள் மடியில் தலைவைத்துப் படுத்தான் நவீன்.

''நவீன்... நாம முக்கியமான முடிவு எடுத்​தாகணும்... அதுக்கான நேரம் வந்தாச்சு...''

''என்ன சொல்றே வர்ஷ்? கர்ப்பம் கலைக்கப் போறியா? இப்ப குழந்தை வேண்டாமா?''

''ஏன் இப்படி அபசகுனமா பேசற? பொறக்கப் போற குழந்தைக்கு நாம பேர் முடிவு பண்ணணும்...'' என்றாள் வர்ஷா.

தூக்கிவாரிப் போட்டது  நவீனுக்கு! சடார் என்று எழுந்து உட்கார்ந்தான்.

என்ன பேரு  வைக்கலாம்... எப்படி  அழைக்கலாம்!

''வாட்! இன்னிக்குத்தானே டாக்டர் கன்ஃபர்ம் பண்ணாங்க... இன்னும் எத்தனை மாசம் இருக்கு டெலிவரிக்கு... இப்பவே பெயருக்கு என்ன அவசரம் வர்ஷ்?''

''உனக்குத் தெரியாது நவீன்... ஏழெட்டு மாசமெல்லாம் ரொம்ப கம்மி... ஆண் குழந்தையா இருந்தா என்ன பேர், பெண் குழந்தையா இருந்தா என்ன பேர் வெக்கணும், அதை எப்படி அழைக்கணும்கறதை எல்லாம் டீப்பா ஆராய்ச்சி பண்ணி முடிவு எடுக்கணும்... இப்படி ஒரு பேரை எங்கே பிடிச்சாங்கன்னு ஊரே மூக்கு மேல விரல் வெச்சு ஆச்சர்யப்படணும்...''

நவீனுக்குப் புரிந்தது. இது மாடர்ன் யுகம். ஐ.டி.மேஜர் ஒன்றில் பணிபுரியும் நவீனப் பெண் வர்ஷா. தனக்கும் மல்டி நேஷனல் வங்கியில் உயர்ந்த பதவி. இப்படியான ஒரு தம்பதியின் குழந்தைக்கு அத்தனை சாதாரணமாகப் பெயர் வைத்துவிட முடியாது. அதற்குத் தீவிரமாக யோசனை செய்ய வேண்டும். தலைமுடியின் பெரும் பகுதியை இழக்க வேண்டும். தேவையானால், தாடி வளர்க்கணும்!

''ஓ.கே வர்ஷ்... இப்ப தூங்கலாம்...  வீ வில் டு சம்திங் அபவுட் இட்...''

ஷார்ட்ஸ் எடுத்து மாட்டிக் கொண்டான் நவீன். விளக்கை அணைத்து​விட்டு வந்து படுத்தான். வர்ஷா அதற்குள் தூங்கிவிட்டாள்.    நவீனுக்குத் தூக்கம் வரவில்லை. பிறக்கப்போகும் குழந்தைக்குப் பெயர் தீர்மானிப்பதற்குத் தேவையான முக்கிய அளவு கோல்களை நினைத்துப் பார்த்தான். அலுவலக நண்பர்கள் அவனுக்கு அது பற்றி ஏற்கெனவே சொல்லி இருக்கிறார்கள்.

குழந்தையின் பெயர் புத்தம் புதியதாக இருக்க வேண்டும். இதற்கு முன் யாரும் வைக்காத பெயராக இருக்க வேண்டும். குழந்தையின் பெயர் யாருடைய வாயிலும் நுழையக்கூடாது. இது மிகவும் முக்கியம்.

நவீனுக்குத் தலை சுற்றியது. லேசாக மயக்கம் வருவதுபோல் இருந்தது. எப்போது தூங்கினான் என்று அவனுக்கே தெரியாது! 

மூன்று மாதங்கள் ஓடியதே தெரியவில்லை.

வர்ஷாவின் 'ஸோனோ’ ரிசல்ட்டைப் பார்த்துவிட்டுப் பிரகாசம் அடைந்தார் லேடி டாக்டர்.

''குழந்தையோட க்ரோத் நல்லா இருக்கு... எந்தப் பிரச்னையும் இல்லே...'' என்றார்.

''வாமிட் நிக்கவே இல்லே டாக்டர்...'' என்றான் நவீன்.

''அதுக்கு எல்லாம் பிரேக் போட முடியாது... சில கேஸ்ல டெலிவரிக்கு அப்புறம்கூட வாந்தி எடுக்கறது உண்டு...''

''டாக்டர்... அது அடுத்த குழந்தைக்கான வாந்தியாகவும் இருக்கலாம் இல்லியா?''

''குட் ஜோக்!' வர்ஷாவின் அடுத்த செக்-அப் நாளைக் குறித்துக் கொடுத்து அனுப்பிவைத்தார் டாக்டர். 

வர்ஷாவுக்கு இப்போது ஆறாவது மாதம். மாலை நேரங்களில் 'வாக்’ போகிறாள். வாய்க்கு ருசியாகச் சாப்பிட அவளுக்குக் கேட்டது எல்லாம் கிடைக்கிறது. கேட்காததை எல்லாம் கூட நவீன் வாங்கி வந்துவிடுகிறான். ஸ்பெஷல் சலுகையை நன்றாகவே அனுபவிக்கிறாள் வர்ஷா.

பிறக்கப் போகும் குழந்தைக்கு இன்னமும் பெயர் நிச்சயம் ஆக​வில்லை. அவனுக்குப் பிடித்தால் அவளுக்குப் பிடிக்கவில்லை; அவளுக்குப் பிடித்தால் அவனுக்குப் பிடிப் பதில்லை. இரண்டு பேருக்கும் பிடித்தால், அது ஏற்கெனவே வேறு குழந்தைக்கு சூட்டப்பட்ட பெயராக இருக்கிறது.

அன்று விடுமுறை தினம். ஆளுக்கு ஒரு லேப்-டாப்பை மடியில் கிடத்திக் கொண்டு, இருவரும் கூகுளில் சர்ச்சி​னார்கள். கட்டில் முழுவதும் விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாமம், திருமூலரின் திருமந்திரம், விவேக சூடாமணி, சீவக சிந்தாமணி, கம்பராமாயணம் என்று பல புத்தகங்கள் இறைந்துகிடந்தன. அகநானூறு, புறநானூறு இனிமேல்தான் வாங்கவேண்டும். இவற்றில் எதில் இருந்தாவது ஏதாவது ஓர் பெயர் கிடைத்துவிடாதா என்று நப்பாசை. லேண்ட்மார்க்கிலிருந்து நவீன், பில்லோ மாதிரி தடிமனான ஒரு ஆங்கிலப் புத்தகம் வாங்கி வந்திருந்தான். நானூற்று சொச்சம் பக்கங்கள். அதில் ஆண்-பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் அகர வரிசையில்.

''வர்ஷ்... ஆண் குழந்தை பிறந்தா 'க்ரிஷ்’னு பேர் வைக்கலாமா?'' என்று கேட்டான் நவீன்.

''வேண்டாம்... ஆயில் போடாத கதவை திறந்து மூடறச்சே ஏற்படற சத்தம் மாதிரி இருக்குது... கூப்பிடறவங்க, வாய்ல கிரீஸ் தட விக்க வேண்டியிருக்கும்.!'' என்றாள் வர்ஷா.

''சரி... 'நிழோனி’, இது எப்படி இருக்கு?''

''அப்படின்னா என்ன அர்த்தம்?''

''அழகுன்னு அர்த்தம்... ஆப்பிரிக்​காவுல ஆம்பிளைக் குழந்தைகளுக்கு வைக்கற பேர் இது... 'நெட்’ல பார்த்தேன்...''

''வேண்டாம் நவீன்... வாய்ல 'ழ’ நுழையாதவங்க பாடு திண்டாட்டமா போயிடும்...''

''சரி... அன்பெந்தி..?''

''அகர்பத்தி மாதிரி இருக்கு! என்ன அர்த்தமாம் இதுக்கு?''

''கருணைன்னு அர்த்தம்... பெண் குழந்தைக்கான பேர் இது...''

கொஞ்சம் நேரம் மௌனம் நிலவியது.

''சரி... பரிசீலனையில் வெச்சுப்போம்... 'ஹச்சிந்த்தியா...’ ஓகேவா?'' என்று கேட்டாப் நவீன்.

இதையும் நிராகரித்தாள் வர்ஷா. ''தும்மல் ஏற்படும்போது வெளிப்படும் சவுண்ட் மாதிரி இருக்கு...'' என்றாள். 'மனவ்’ என்று ஒரு பெயரை பிரபோஸ் செய்தாள். அதை நவீன் டிஸ்போஸ் செய்துவிட்டான்!

''வர்ஷ்... நமக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்து, வளர்ந்து ஆளானதும் சமூகத்தில் ஒரு பெரிய புள்ளியா அது திகழலாம்... யார் கண்டது? நம்ப மகன் அரசியல்லே நுழைஞ்சு, மக்களின் பேராதாரவைப் பெற்று தனிக் கட்சி ஆரம்பிச்சு, தேர்தல்லே அமோகமாக ஜெயிச்சு, முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்து, மக்களுக்கு இலவசமா மாடி வீடு கட்டித் தரலாம்... அவன் காலம் முடிஞ்சதும், அவனோட பேரை ஒரு தெருவுக்கோ, மேம்பாலத்துக்கோ வெக்கலாம்... அதுக்குப் பொருத்தமா ஒரு பேரை நாம யோசிச்சா என்ன? உதாரணமா, 'இரண்டாம் திருவல்லிக் கேணி சோழன்’!''

''முதல் சோழன் நீயா? நவீன்... என்னை விட்டுடு... இந்த விளையாட்டுக்கு நான் வரலே...'' என்றாள் வர்ஷா.

''ஏன்?''

''எண்பது, நூறு வருஷங்​களுக்குப் பின் நடக்கப் போற ஒரு விஷயத்துக்கு இப்பவே மண்டையை உடைச்சுக்க நான் தயாரா இல்லே...''

''சரி... உன் இஷ்டம்... 'கேல்ரத்’, பிடிச்சிருக்கா?''

''கேல்ரத்னாங்கற விருதுக்கான பேரை சுருக்கி வெச்சா மாதிரி இருக்கு...''

''ஓகே... இப்போதைக்கு சாப்பிட்டு படுக்கலாம்...'' 

எட்டு மாத கர்ப்பிணி வர்ஷா டெலிவரிக்கு லேடி டாக்டர் குறித்துக் கொடுத்த தேதி நெருங்கிக் கொண்டு இருந்தது.

ஆண் குழந்தையாக இருந்தால் இரண்டு பெயர்களில் ஏதாவது ஒன்று. பெண் குழந்தையாக இருந்தால் இரண்டு. அதில் ஒன்று என்ற கணக்கில் மொத்தம் நான்கு பெயர்களை 'ஷார்ட் லிஸ்ட்’ செய்து, ஓட்டுஎடுப்புக்குவிட முடிவு செய்தார்கள் நவீனும், வர்ஷாவும். இந்த நான்கு பெயர்களையும் நெருங்கிய நண்பர்களுக்கும், உறவுகளுக்கும் எஸ்.எம்.எஸ். மூலமும், இ-மெயில் மூலமும் அனுப்பிவைத்தார்கள். ஃபேஸ் புக்கிலும் எழுதி கருத்துக் கேட்டார்கள்.

''எந்தப் பேருமே சகிக்கலே... உங்க ரெண்டு பேருக்கும் பைத்தியம் பிடிச்சுடுச்சா...'' என்று பற்களை நறநறவென்று கடித்துக் கொண்டே ஃபேஸ்புக்கில் ஒருவர் கமென்ட் எழுதி இருந்தார்.

''இப்ப எந்தப் பெயரும் வைக்க வேண்டாம்... பொதுப்படையா 'பாப்பா’ன்னு கூப்பிடுங்க... குழந்தை வளர்ந்ததும் அதுவே ஒரு பெயரை வெச்சுக்கட்டும்...'' என்று இன்னொரு நக்கல் கமென்ட். 

''கங்கிராட்ஸ்... உனக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கு வர்ஷா...'' என்று சொன்ன லேடி டாக்டரின் முகம் லேசாக வாடி இருந்தது. காரணம் வர்ஷாவுக்கு சுகப் பிரசவம்!

இரண்டாவது நாள் டிஸ்சார்ஜ். பதினோராவது நாள் நாமகரணம்.

நவீன் வீட்டில் கொஞ்சமாகக் கூட்டம் சேர்ந்திருந்தது. தோராயமாக, முப்பது பேர். சாப்பாட்டுக்கு வெளியே ஆர்டர் கொடுத்திருந்தார்கள்.

நவீனின் மடியில் குழந்தையை விட்டிருந்தார்கள். ரோஜாப் பூ மாதிரி இருந்தது குழந்தை. கண் மூடி இருந்தது. பக்கத்தில் உட்கார்ந்த வர்ஷா, குழந்தையின் மிருதுவான கால்களைத் தடவித் தடவி மகிழ்ந்தாள்.

''மாப்பிள்ளை... குழந்தைக்கு என்ன பேர்னு முடிவு செய்துட்டீங்களா?'' என்று கேட்டார் ஐயர்.

''ம்...'' என்ற நவீன், வர்ஷாவைப் பார்த்து சிரித்தாள். (தேவை எனில், 'அர்த்த புஷ்டியுடன்’ என்பதை சேர்த்துக் கொண்டு வாசிக்கலாம்!)

''நீங்க முடிவு செய்திருக்கற பெயரை குழந்தையின் வலது காதுல மூன்று தடவை உரக்க சொல்லுங்க...'' என்றார் ஐயர்.

சுற்றமும், நட்பும் ஆர்வத்துடன் நவீனின் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தது. தாங்கள் டிக் செய்திருந்த பெயர் தேர்வாகி இருக்கிறதா என்பதை அறியக் காத்திருந்தார்கள் சிலர் - ஏதோ போட்டியில் கலந்து கொண்டு, குலுக்கல் முறையில் பரிசுக்காகக் காத்திருப்பது  மாதிரி!

தொண்டையைக்கனைத்துக் கொண்டான் நவீன். தலை குனிந்து குழந்தையின் காதருகில் போனான்.

ஹாலில் சஸ்பென்ஸ் கூடியது.

''கோவிந்த கிருபாகர சந்திரசேகரன்... கோவிந்த கிருபாகர சந்திரசேகரன்... கோவிந்த கிருபாகர சந்திரசேகரன்...'' என்று குழந்தையின் காதில் மூன்று முறை உச்சரித்தான் நவீன். அவ னுக்கு மேல்மூச்சு வாங்கியது. மூன்று மடக்குத் தண்ணீர் குடித்தான்.

''ஏதோ மாடர்னா, யாருமே இதுவரை வைக்காத பெயர் வைக்கப் போறதா அலட்டல் விட்டானே...'' கூட்டம் முணுமுணுத்தது.

குழந்தைதான் பாவம். எல்.கே.ஜி. இன்டர்வியூவில் 'வாட் இஸ் யுவர் நேம்’ என்று பிரின்ஸி மேடம் கேட்டால், முழுப் பெயரையும் மறக்காமல் சொல்ல வேண்டும். அதே மாதிரி, பாஸ்போர்ட்டிலும், 'கோவிந்த கிருபாகர சந்திரசேகரன் நவநீதகிருஷ்ணன்’ என்று எழுதுவதற்குள் தாவு தீர்ந்துவிடும்! ஆனால், நவீன், வர்ஷாவால் நீளத்தைத் தவிர்க்க முடியவில்லை. மாடர்ன் பெயர் எதுவும் இருவராலும் ஏகமனதாக முடிவு செய்ய முடியவில்லை. எனவே, 'புதியன கழிதலும் பழையன புகுதலும்’ வழியில் சென்று விட்டார்கள்!

நவீனின் அப்பாவை அழைத்தார் ஐயர்.

''நீங்க என்ன பெயர் வைக்கறதா இருக்கீங்க... அதை குழந்தைக் காதுல மூணு தடவை சொல்லுங்க...

நவீனின் அப்பா குனிந்தபடியே குழந்தையின் காதுக்கு அருகே சென்று, ''பிட்ஸ்யூ... பிட்ஸ் யூ... பிட்ஸ்யூ...'' என்று மூன்று தடவை அறிவித்துவிட்டு ஆச்சர்ய அலைகளை எழுப்பினார். கூடியிருந்தவர்களில் சிலர் அதை உச்சரித்துப் பார்த்தார்கள். வாயில் இருந்து காற்று மட்டுமே  வெளியேறியது!

அடுத்த வாய்ப்பு, வர்ஷாவின் அப்பாவுக்கு.

''வேண்டாம் ஐயரே... நாங்க ஆஃப்டர் ஆல் பெண் வீட்டுக்காரங்க... நாங்க என்ன பேர் வெச்சாலும் அதை யாரும் கணக்குல எடுத்துக்கப் போறதில்லே....  அத ஒரு பொருட்டா மதிச்சு யாரும் கூப்பிடவும் போறதில்லே... அதனாலே குழந்தைக்கு ரெண்டு பெயரே போதும்...'' என்று தனது தரப்பு ஆதங்கத்தை வெளிப்படுத்திவிட்டு, ஓரமாக ஒதுங்கிக்கொண்டார் வர்ஷாவின் அப்பா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism