Published:Updated:

இந்திரா பார்த்தசாரதி - வடிவப் பிரக்ஞையுடன் சிறுகதை படைப்பவர்! கதை சொல்லிகளின் கதை 32

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
இந்திரா பார்த்தசாரதி - வடிவப் பிரக்ஞையுடன் சிறுகதை படைப்பவர்! கதை சொல்லிகளின் கதை 32
இந்திரா பார்த்தசாரதி - வடிவப் பிரக்ஞையுடன் சிறுகதை படைப்பவர்! கதை சொல்லிகளின் கதை 32

ஒரு உருதுப் பாட்டு உண்டு. `கடந்துபோன நிமிஷம், நிகழும் நிமிஷத்தைப் பார்த்துக் கேட்கிறது... யார் இந்த அயலான்?’ நான் வளர்ந்த சூழ்நிலை இப்படி.

``இலக்கியம் தனிமொழியன்று, உரையாடல். உரையாடல் எனும்போது, நடையைப் பொறுத்த விஷயம். நடை என்பது சிந்தனையின் நிழல். காற்றாடி பறப்பதற்கு எதிர்க்காற்று தேவைப்படுவதுபோல படைப்பாளிக்கு ஒரு வாசகன் தேவை. `நான் எனக்காக எழுதுகிறேன்’ என்று சொல்வதெல்லாம் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வதாகும். இலக்கியம், மனிதன் சமுதாயத்தோடு கொள்கின்ற உறவுகளை நிச்சயப்படுத்தும் உணர்ச்சிகளின் பரிமாற்றம்” என்கிற தெளிவான பார்வையுடன் தன் படைப்புப் பயணத்தை, கடந்த 55 ஆண்டுகளாகத் தொய்வின்றித் தொடர்பவர் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி.

தந்திரபூமி, குருதிப்புனல், சுதந்திரபூமி, வேதபுரத்து வியாபாரிகள், ஆகாசத்தாமரை, மாயமான் வேட்டை, திரைகளுக்கு அப்பால், ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன உள்ளிட்ட அவரது நாவல்களுக்காகவும் மழை, போர்வை போர்த்திய உடல்கள், கால எந்திரம், நந்தன் கதை, ஒளரங்கசீப், ராமானுஜர், கொங்கைத் தீ, பசி போன்ற நாடகங்களுக்காகவும் கொண்டாடப்படும் அவர், நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். கிழக்குப் பதிப்பகம் அந்தக் கதைகளைத் தொகுத்து இரு தொகுதிகளாக வெளியிட்டுள்ளது.

அவர் எழுதிய முதல் சிறுகதையே (மனித யந்திரம்) முத்திரைக் கதையாக ஆனந்த விகடன் இதழில் பிரசுரமாயிற்று. அவர் எழுதிய காலத்திலேயே விகடனில் ஜெயகாந்தன் தொடர்ந்து எழுதிவந்தார். வெகுசன இதழ்களில் தரமான இலக்கியப் படைப்பாளிகள் பங்கேற்பதை ஜெயகாந்தனும் இ.பா-வுமே தொடங்கிவைத்தார்கள் எனலாம்.

வடிவப் பிரக்ஞையுடன் சிறுகதை படைக்கும் படைப்பாளி என்று இ.பா அவர்களைக் குறிப்பிடலாம். ``சிறுகதையின் வடிவம் அந்தந்தப் படைப்பாளியின் உள்மனத்தோற்றத்திற்கேற்ப உருக்கொள்கிறது. இதற்கு இலக்கணம் ஏதும் கிடையாது. கோட்பாட்டிற்கேற்ப இலக்கியம் படைப்பதற்கும், பெண் மருத்துவ இயல் படித்த பிறகுதான் ஒருத்தி பிள்ளைப்பெற வேண்டும் என்று சொல்வதற்கும் வித்தியாசமில்லை” என்று சொல்லும் இ.பா., நிகழ்வின் யதார்த்தத்தைக் காட்டிலும் கதாபாத்திரங்களின் செயல்பாட்டு யதார்த்தமே மனதில் நின்று காலத்தை வெல்லும் என்பதில் நம்பிக்கைகொண்டவர்.

`ஒரு நல்ல சிறுகதை, எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் இடையே நிகழ்கிற உரையாடலாக இருக்க வேண்டும். வாசகன் அந்தக் கதையைப் படித்து முடித்த பிறகு அவன் சிந்தனையைத் தூண்டும் முறையில், அதன் கருத்து எல்லை அதிகரித்துக்கொண்டு போதல் அவசியம். ஒரு பிரச்னையை மையமாக வைத்துக்கொண்டு எழுதப்படும் கதைகளுக்குத்தாம் இந்த ஆற்றல் உண்டு. பிரச்னையை நேரடியாகச் சுட்டிக்காட்டுவது தினசரிகளின் வேலை. இலக்கியத்தின் பரிபாஷையின் அழகுணர்ச்சியோடு பிரச்னையைச் சொல்வதுதான் ஒரு சிறந்த படைப்பாளியின் திறமை.

ஒரு கதை, தன் உள்ளடக்க வலுவிலேயே ஒரு பிரச்னையின் தீவிரத்தை உணர்த்த வேண்டுமே தவிர, அதை எழுதுகிறவனுடைய இலக்கியப் புறம்பான கட்சி அல்லது குழுச் சார்பினால் விளைகின்ற உரத்த குரலினால் அல்ல. உரத்த குரல் இடைச்செருகலாய் ஒலித்துவிடக்கூடிய வாய்ப்புண்டு. `வெறும் ஏமாற்றத்தையும், விரக்தியையும், தோல்வி மனப்பான்மையையும் இலக்கியமாக்கிவிடக் கூடாது' என்று தன் சிறுகதைகளுக்கான லட்சணங்களைப் பற்றிய தன்னுணர்வு அவருக்குண்டு.

`தொலைவு' என்கிற அவரது புகழ்பெற்ற சிறுகதை, இப்படித் தொடங்குகிறது:

``ஜன்பத் போக்குவரத்துத் தீவு. பச்சை ஒளி தந்த அனுமதியில் அதுவரையில் சிலையாய் நின்ற ராட்சச பஸ்கள் சீறிக்கொண்டு புறப்பட்டன.

``அப்பா, அதோ ஸ்கூட்டர்…” என்று கூவியவாறே வாசுவின் பாதுகாப்பிலிருந்து விடுவித்துக்கொண்டு சிவப்பு ஒளியையும் பாராமல் வீதியின் குறுக்கே ஓடினாள் கமலி.

``கமலி..!” என்று கத்தினான் வாசு.

அவள் ஏமாற்றத்துடன் திரும்பிப் பார்த்தாள். வாசு அவள் கையைப் பற்றி வேகமாகப் பின்னால் இழுத்துக்கொண்டு வந்தான்.

`` `வாக்'னு வந்தப்புறம்தான் போகணும்னு நான் எத்தனை தடவை சொல்லியிருக்கேன்? வயது ஏழாச்சு. இதுகூடத் தெரியலியே!”

``அந்த ஸ்கூட்டர் காலியாயிருக்கு. யாரானும் ஏறிடுவாப்பா.”

``ஏறிட்டுப் போகட்டும். ரோடை இப்போ க்ராஸ் பண்ணக் கூடாது.” ————— டெல்லியில் ஆட்டோரிக்‌ஷாவை `ஸ்கூட்டர்' எனக் குறிப்பிடுவது வழக்கம்.

``அதோ எல்லாரும் பண்றாளேப்பா!”

``ஒத்தர் தப்புப்பண்ணினா எல்லாரும் பண்ணணுமா?”

கமலிக்கு அப்பாவின் பேரில் கோபம் கோபமாக வந்தது. அரை மணி நேரமாக இருவரும் ஸ்கூட்டருக்காக அலைகிறார்கள். பிளாஸாவிலிருந்து அவளை இதுவரை நடத்தியே அழைத்து வந்துவிட்டான் வாசு.

அவர்கள் பஸ்ஸில் போயிருக்கலாம். ஆனால், ஒவ்வொரு பஸ்ஸிலும் கூட்டம் பொங்கிவழிந்தது. குழந்தையையும் இழுத்துக்கொண்டு முண்டியடித்து ஏற முடியுமா? – வாசுவால் இதை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. டாக்ஸியில் போகலாம் என்றால் அதற்கு வசதியில்லை. லோதி காலனி போவதற்கு நாலு ரூபாய் ஆகும். இடைக்கால நிவாரணம் கொடுக்கப்போகிறார்கள். வாஸ்தவம்தான். போன மாதம் அக்காவுக்கு உடம்பு சரியில்லை என்று அவன் பம்பாய் போய் வரும்படியாக ஆகிவிட்டது. அதற்கு வாங்கிய கடன் தீர வேண்டும். கடன் வாங்குவது என்பது அவனுக்குப் பிடிக்காத காரியம். ஆனால், திடீர் திடீரெனச் செலவுகள் ஏற்படும்போது அவற்றை எப்படிச் சமாளிப்பது?

``அப்பா, அந்த ஸ்கூட்டர்ல யாரோ ஏறிட்டா” என்று அலுத்துக்கொண்டே சொன்னாள் கமலா.

குழந்தையின் எரிச்சல் அவனுக்குப் புரிந்தது. ஆனால், என்ன செய்ய முடியும்? சாயந்தரம் ஐந்து மணிக்கு மேல் ஆகிவிட்டால் ஒரு ஸ்கூட்டர்கூடக் கனாட் பிளேசில் கிடைக்காது. கிடைப்பதும், கிடைக்காமல் இருப்பதும் ஒவ்வொருவருடைய அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது.

40 ஆண்டுகளுக்குமேலாக டெல்லியில் வாழ்ந்த இ.பா-வின் கதைகள் பலவற்றின் களமாக டெல்லி மாநகர் இருப்பதைக் காணலாம். இந்தக் கதையும் அப்படியே டெல்லியின் போக்குவரத்துகுறித்த கதையாகத் தொடங்குகிறது. `ஸ்கூட்டர்' எனப்படும் ஆட்டோ கிடைக்காமல் தகப்பனும் மகளும் நெடுநேரம் காத்திருக்கிறார்கள்.

``டாக்ஸியிலே போகலாமாப்பா?” என்று கேட்டாள் கமலி. அவளுக்குக் கால் வலிக்கிறது என்ற பிரத்தியட்ச உண்மையைத் தவிர, மாதத்தின் கடைசி வாரத்தில் மத்திய சர்க்கார் அசிஸ்டென்ட்டால் இதைப் பற்றி யோசித்துப்பார்க்க முடியுமா என்ற பொருளாதாரப் பிரச்னையைப் பற்றிக் கவலையில்லை. இப்போது அவனால் அது முடியாது என்பது இருக்கட்டும். மாத முதல் வாரத்தில்கூட என்றைக்காவது குற்ற உணர்ச்சி இல்லாமல் அவனால் டாக்ஸியில் போக முடிவதில்லை. பொருளாதாரத்தை அடிப்படையாகக்கொண்ட இயந்திரபூர்வமாகிவிட்ட சமூகத்தின் ஒழுக்க நியதிகள், ஒருவனைக் குற்ற உணர்ச்சியால் அவஸ்தைப்படும் நிலைக்கு கண்டிஷன் செய்துவிடுகின்றனபோல் இருக்கின்றன.

``ஸ்கூட்டரே கிடைக்காது” என்று சாபம் கொடுப்பதுபோல் சொன்னாள் கமலி.

``அவசரப்படாதே, கிடைக்கும்.”

``பஸ்ஸிலே போகலாமே!” அப்பா தன்னை டாக்ஸியில் அழைத்துச் செல்லத் தயாராக இல்லை என்பது அவளுக்குப் புரிந்துவிட்டது. ஸ்கூட்டரே குறிக்கோளாய் அலைவதைக் காட்டிலும் பஸ்ஸில் போகலாமே என அவளுக்குத் தோன்றிற்று.

``கூட்டத்துல ஏற முடியுமா உன்னால?”

``பின்னாலே என்னதான் பண்றது? ஆத்துக்குப் போகாமலேயே இருக்கலாங்கறேளா?”

இந்தக் கேள்வி பயங்கரமான ஓர் எதிர்காலத்தை அவன் மனக்கண் முன்பு நிறுத்தியது. ஸ்கூட்டரே கிடைக்காமல் ஸ்கூட்டரைத் தேடி இருவரும் வாழ்நாள் முழுவதும் கனாட் பிளேஸில் அலைந்துகொண்டிருக்கிறார்கள். அவன் கிழவனாகிவிடுகிறான். கமலியும் வளர்ந்து பெரிய பெண்ணாகிவிடுகிறாள். ஸ்கூட்டர்க்காரர்களின் அடுத்த தலைமுறையும் அவர்களை ஏற்றிச் செல்ல மறுத்துவிடுகிறது.

``அப்பா, இதோ பஸ் காலியா வரது. போயிடலாம்.”

ஆனால், அந்த பஸ் லோதி காலனி போகாது. அதற்குப் பிறகு அந்த வழியாக வாசுவின் பழைய நண்பன் ஒருவன் காரில் போகிறான். அவன் லிப்ஃட் தருவதாகக் கூறுகிறான். ஆனால், அவன் கடைந்தெடுத்த ஊழல் பெருச்சாளி. அதனால் அவனோடு செல்ல வாசுவுக்கு விருப்பமில்லை. மறுத்துவிடுகிறான். பிறகு, ரொம்ப நேரம் கழித்து இரண்டு ஆட்டோக்கள் வருகின்றன. அவர்கள் நெடுநேரமாகக் காத்திருக்கும் இவர்களை ஏற்றாமல், இவர்களுக்குப் பிறகு வந்த அழகான பெண்கள் இருவரை ஏற்றிக்கொண்டு போய்விடுகின்றன. கமலிக்கு அழுகை அழுகையாய் வருகிறது.

``அவ‌ன் உட‌ம்பு கோப‌த்தால் ஆடிய‌து. அங்கு இருந்த‌ இன்னொரு ஸ்கூட்ட‌ரையும், டாக்ஸி ஸ்டாண்டில் இருந்த‌ டாக்ஸிக‌ளையும், தெருவில் போய்க்கொண்டிருந்த‌ கார், பஸ் என எல்லாவற்றையும் அடித்து நொறுக்கிவிட வேண்டுமென்ற வெறிவந்தது. கும்பகோணத்திலிருந்து சுவாமிமலைக்குப் போவதற்கு அவன் பத்து வருஷத்துக்கு முன்னால் பஸ்ஸையோ, ஸ்கூட்டரையோ அல்லது டாக்ஸியையோ எதிர்ப்பார்த்துகொண்டா இருந்தான்? – தன்னால் இப்போது கமலியைத் தூக்கிக்கொண்டு லோதி காலனிக்கு நடந்துபோக முடியாதா?

கமலி `தூக்கக் கூடாது' என முரண்டுபிடிக்கலாம். அவளைச் சமாதானப்படுத்தித் தூக்கிக்கொண்டு போகலாம் என்றாலும், அவனுக்குப் `பைத்தியக்காரன்' என்ற பட்டம்தான் கிடைக்கும். சிக்கலாகிவிட்ட சமூகத்தில் ஒருவன், `சமுகம் என்றால் தன்னைத் தவிர மற்றவர்கள்’ என்ற பிரக்ஞையோடு அவர்கள் அபிப்பிராயத்துக்கு இசைந்து வாழவேண்டியிருக்கிறது. ஆனால், இதை எதிர்த்துப் போராட வேண்டும்.

``கமலி வா, நடந்தே போயிடலாம்” என்றான் வாசு.

``நடந்தேவா?!” என்று அவள் திகைத்தாள்.

``நடக்க முடியலைன்னா சொல்லு, தூக்கிண்டு போறேன்” என்றான் வாசு.

வரிசை வரிசையாக கார்களும் டாக்ஸிகளும் விரைந்துகொண்டிருந்தன.

வாசுவும் கமலியும் இன்னும் வெகுதூரம் போகவேண்டும்...

இந்தக் கதை வெறுமனே போக்குவரத்து வசதிகுறித்த கதையாக அல்லாமல் வாசு, கமலி என்கிற இரு மனித ஜீவன்களைப் பற்றியும் அவர்கள் இந்த மனித சமூகத்தோடுகொள்ளும் உறவு பற்றியதாகவும் அறம், நியாயம் பற்றிய கதையாகவும் வடிவம்கொண்டு நகர்கிறது. அவரவர் நியாயங்களுக்கிடையிலான தொலைவையும் பேசுவதாகக்கொள்ள முடியும்.

அவரது பல நாவல்களைப்போலவே சிறுகதைகளும் தனிமனித அறம்குறித்து ஆழ்ந்த அக்கறைகொள்கின்றன. டெல்லியின் உயர் அலுவலகங்களில் அழிந்துகொண்டிருக்கும் பணிக்கலாசாரம், நியாயம், நீதி குறித்தும் உரத்த குரலில் பேசுகின்றன.

வரது இன்னொரு முக்கியமான சிறுகதை `குதுப்மினாரும் குழந்தையின் புன்னகையும்’.

பாஸ்கரன் டை கட்டிக்கொண்டிருந்தான். பின்னால் கதவருகே புடவையின் சலசலப்பு. அம்புஜம் நின்றுகொண்டிருக்கிறாள் என்பதை அவன் உணர்ந்தான். அவள் தன்னையே உற்றுக் கவனித்துக்கொண்டிருக்கிறாள் என்று அவனுக்குப் பட்டது. அந்தப் பார்வை முதுகைத் தொடுவதுபோலிருந்தது அவனுக்கு.

``எங்கே... டிரெஸ் எல்லாம் பலமாயிருக்கு?”

அவன் பதில் சொல்லவில்லை. பதில் சொல்லவும் தேவையில்லை. இரண்டு ஆண்டுகள் ஆஸ்பத்திரியில் இருந்துவிட்டு வந்தாலும் வந்தாள், வியாதி போனதோடு மட்டுமல்லாமல், அவள் புத்தியும் போய்விட்டது. இப்படியா எதற்கெடுத்தாலும் சந்தேகம்..?

பாஸ்கரன் கோட்டை எடுத்து மாட்டினான்.

``வர நேரமாகுமா?”

பாஸ்கரனுக்கு ஞாபகம் வந்தது, அன்று மாலை ஆங்கில டிராமா ஒன்றுக்குப் போவதாக இருந்தான். இந்தச் செய்தியைச் சொல்லும்படியான சகஜமான ஒரு சூழ்நிலை வீட்டில் இல்லை. அதனால் அவன் சொல்லவுமில்லை. இப்போது அவள் கேட்டதால் சொன்னான்.

``ஆமாம். ஒரு இங்கிலீஷ் பிளே, ஐஃபாக்ஸ் ஹாலிலே. போகப்போறேன்.”

``இன்னொரு டிக்கெட் யாருக்கு?”

கோட்டுப்பைகளை அவள் குடைந்திருக்கிறாள். இரண்டு டிக்கெட்டுகளையும் பார்த்திருக்கிறாள்! தினம்தோறும் இந்தப் பரிசோதனை எதற்காக... அவ்வளவு நம்பிக்கையின்மையா?

``ராஜு வந்தாலும் வரலாம். இல்லாட்டா, நீ வர்றீயா?”

``இல்லாட்டதானே... முதல்லேயே கேட்கத் தோணித்தோ?”

``இது கொஞ்சம் சீரியஸ் பிளே. உனக்கு இன்ட்ரெஸ்ட் இருக்காதுன்னு நினைச்சேன்.”

``நான்தான் ரசனை கெட்டவ .ரசனை இருக்கிறவளா பார்த்து அழைச்சிண்டு போங்கோ. ராஜுவோ வேறா யாரோ?”

``வேற யாரோன்னா, என்ன அர்த்தம்?” பாஸ்கரனுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக ஆத்திரம் தலைக்கேறியது.

இந்த மனநிலையோடு டெல்லியில் உள்ள தனது அலுவலகத்துக்குச் செல்கிறான் பாஸ்கரன். கம்பெனியின் மேனேஜிங் டைரக்டர் சோப்ரா, புத்தகங்கள் வாசிக்கும் மனிதன். பாஸ்கரன் மீது தனிப்பிரியம்கொண்டவன். வாசித்த புத்தகங்கள்குறித்தும் வாழ்க்கைக்குறித்தும் விவாதிக்க அந்த அலுவலகத்தில் அவனுக்கு பாஸ்கரனைவிட்டால் வேறு துணை இல்லை. கல்யாணம் ஆகாதவன். ஒழுக்கம், மனக்கட்டுப்பாடு என்பதெல்லாம் குறை அமைப்பில் பலவீனமானவர்களுக்குத்தான் என்பது அவன் அபிப்பிராயம். இவற்றை ஒரு கொள்கை அளவில் ஏற்றிப் பேசவேண்டிய அவசியமில்லை என்பது அவன் கொள்கை. ஒரு பெண்ணோடு ஏற்படுகிற உடலுறவு, நிறைந்த அனுபவமாக இருந்தால்தான், மனிதனால் வாழ்க்கையின் முக்கியமான பிரச்னைகளை கவனிக்க முடியுமென்று அவன் அடிக்கடி கூறுவது வழக்கம்.

பாஸ்கரனின் மனைவிக்கு உடல் நலம் இல்லாததால் அவனுக்கு அந்த உறவில் குறை இருப்பதாக சோப்ரா கருதுகிறான்.

``நீங்கள் ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள். மனைவியையோ, வேறு யாரையோ அழைத்துக்கொண்டு இரண்டு நாள் பிக்னிக் போய்விட்டு வாருங்கள்.”

``என்ன சொன்னீர்கள்... மனைவியையோ வேறு யாரையோவா?”

``ஆமாம். யாராக இருந்தால் என்ன? அடுத்த நிமிஷத்து அதிசயத்தையோ, மாறுதலையோ எதிர்நோக்குவதுதான் வாழ்க்கையின் சுவாரஸ்யம்.”

``நான் அந்தச் சூழ்நிலையில் வளரவில்லை.”

ஆனால் சோப்ரா வளர்ந்த சூழல் வேறுதான். அதை அவன் குழப்பமின்றிக் கூறுகிறான். ``என்னைப் பொறுத்தவரையில் எனக்கு ஒவ்வொரு புதிய நிமிஷத்திலும் புதிய வாழ்க்கை. ஒரு உருதுப் பாட்டு உண்டு. `கடந்துபோன நிமிஷம், நிகழும் நிமிஷத்தைப் பார்த்துக் கேட்கிறது... யார் இந்த அயலான்?’ நான் வளர்ந்த சூழ்நிலை இப்படி.

சோப்ராவிடம் மறுத்துவிட்டுப் போன பாஸ்கரன் சற்று நேரத்தில் திரும்ப வந்து இரண்டு நாள் விடுப்பு தனக்கும் சோப்ராவின் அந்தரங்கக் காரியதரிசி உஷாவுக்கும் சேர்த்துத் தருமாறு கேட்கிறான். சோப்ரா சிரித்துக்கொண்டே சம்மதிக்கிறான். உஷாவும் சம்மதித்துத் தன் ஒப்பனைகளைக் கலைத்துவிட்டு பாஸ்கரனுடன் வருகிறாள். எங்கே போகலாம் என்கிற இலக்கின்றி, டாக்ஸியில் ஏறுகிறார்கள். பிறகு, ``குதுப்மினார் போகலாம்'' என பாஸ்கரன் சொல்கிறான்.

``குதுப்மினார் எதற்காகக் கட்டப்பட்டது?” என்று கேட்டாள் உஷா.

``ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு காரணம் பற்றி ஒன்று செய்கிறார்கள். ஆனால், குதுப்மினார் ஒன்றுதான் ஒரு காரணமும் இல்லாமல் விண்ணளந்து எழுந்த கட்டடம். வாழ்க்கையின் லட்சியமற்ற வெறும் போக்கை உருவகப்படுத்துவதற்காக உருவான கட்டடம். இது மந்திரமுமில்லை, மசூதியுமில்லை, சமாதியுமில்லை. அரசனின் உள்ளத்துச் சூன்யத்தை, சிந்தனையின் வெட்டவெளியைக் கல்லிலே வடித்துக்காட்டும் பிரமாண்ட வெறுமை.”

மூன்று வயதுக்குழந்தை ஒன்று தள்ளாடிக்கொண்டே வந்தது. ஓடி ஓடிக் களைத்துவிட்டதுபோல் இருக்கிறது. அது உஷா அருகில் வந்து அவளை நிமிர்ந்து பார்த்தது. அப்படியே அந்தக் குழந்தையைத் தூக்கிக்கொண்டாள்.

``குதுப்மினாருக்கு அர்த்தம் கிடையாது என்றீர்களே... இதற்கு அர்த்தம் உண்டா, இல்லையா?'' குழந்தையை அவள் அப்படியே கட்டிக்கொண்டாள்.

பாஸ்கரனுக்கு, காலையில் வீட்டில் தன் மகள் ரமா ஓடிவந்து தன் கால்களைக் கட்டிக்கொண்ட காட்சி நினைவுக்கு வருகிறது.

குழந்தையின் தாய் சிரித்துக்கொண்டே வந்தாள். தன் குழந்தையை மற்றவர்கள் கொஞ்சுவதைக் கண்டதும் உண்டான பெருமிதம் அவள் முகத்தில் தெரிந்தது. அவள் கணவனும் அவள் அருகில் வந்து நின்றான்.

குழந்தையைத் தாயிடம் கொடுத்துவிட்டு மேலே நடந்த உஷா சொன்னாள், ``கல்யாணமாகியும் குழந்தையில்லாத மலடி என்று என்னைப் பற்றி அவள் நினைத்திருக்க வேண்டும்.''

சர்வசாதாரணமாக அவள் இதைச் சொன்னாலும், அவள் குரலில் ஓர் ஏக்கம் நிழலிட்டுக்கொண்டிருப்பதுபோல் பாஸ்கரனுக்குப் பட்டது.

அவள் ஏன் சோப்ராவைக் கல்யாணம் செய்துகொள்ளக் கூடாது என்று பாஸ்கரன் கேட்கிறான். அதற்கு அவள், ``சோப்ராவை உங்களைக் காட்டிலும் நான் அந்தரங்கமாக அறிவேன்'' என்கிறாள்.

``நீ அவரை அறிந்த அந்தரங்கம் வேறு, நான் அவரை அறிந்துகொண்ட அந்தரங்கம் வேறு.”

``நான் சோப்ராவை மணந்து, நேர்மையான மனைவியாக இருந்தால், என் குழந்தையைக் கொஞ்சக்கூடிய வாய்ப்பு எனக்கு என்றுமே ஏற்படாது. இதுதான் நான் அறிந்த அந்தரங்கம். நீங்கள் அவரை அறிந்துகொண்ட அந்தரங்கத்துக்கும் அடிப்படை இதுதான்.”

எதிரே வானளாவி நின்ற `பிரமாண்டமான வெறுமை'யின் சின்னமாகிய குதுப்மினார், இடிந்து தகர்ந்து தரைமட்டமாகியது. சோப்ரா, தன்னைப் பற்றி உலகம் எந்தவிதமான அபிப்பிராயம்கொள்ள வேண்டும் என்பதற்காக எவ்வளவு பாடுபட்டுக்கொண்டிருக்கிறான். வாழ்க்கையை ஒரு குதுப்மினாராகக் கட்டி, எல்லோரையும் குடியேற்ற முயலுகிறான். நிமிஷத்துக்கு நிமிஷம் செத்துக்கொண்டிருக்கும் அவன் `ஒவ்வொரு நிமிஷத்தையும் சாசுவாதமாக்கிக்கொண்டிருக்கிறேன்’ என்று சொல்வதில் ஆச்சர்யமில்லை. சோப்ராவுக்கும் அம்புஜத்துக்கும் என்ன வேறுபாடு? தண்ணீரைக் கானல் என்கிறான் சோப்ரா. கானல் நீரைக்கூட தண்ணீர் என்று சொல்லி, வேலிக்குமேல் வேலி இடுகிறாள் அம்புஜம்.

அந்தக் குழந்தையின் புன்னகைக்கு முன்னே குதுப்மினாருக்கு எந்தப் பொருளுமில்லை என்பதைப் புரிந்துகொண்ட பாஸ்கரன், விடுமுறை போதும் என்கிற உணர்வுடன் திரும்புவதாகக் கதை முடிகிறது.

உணர்வுதளத்தில் தொடங்கும் கதை அறிவார்ந்த தளத்திலான உரையாடலாகவும் விவாதமாகவும் உருமாற்றம்கொள்வதை இந்தக் கதையில் நாம் காணலாம். இது இந்திரா பார்த்தசாரதி அவர்களின் எழுத்தின் சாரம் என்று சொல்லலாம். மத்தியதர வர்க்கம், உயர் மத்தியதர வர்க்கம் அதிலும் குறிப்பாக டெல்லியில் உயர் பதவிகளில் இருக்கும் வர்க்கத்தினர் இவர்களைக் கதாபாத்திரமாக்கி அதனூடாக ஒட்டுமொத்த இந்திய நடுத்தர வர்க்கத்தின் வாழ்வையும் வாழ்வின் சாரத்தையும் சொல்ல முயல்பவை அவரது சிறுகதைகள் எனப்படுகிறது.

``ஓர் எழுத்தாளன் எழுத முனையும்போது தன்னை நேரடியாகப் பாதித்த விஷயங்களை எழுதுகிறான். அவன் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டிருக்கிறான் என்பதை அவனது கல்வி, வளர்ந்த சூழ்நிலை, பண்பாட்டுச்சூழல், மனப்பரிமாணம் ஆகியவையே முடிவுசெய்கின்றன. அவன் எப்படி உருவாகி இருக்கிறானோ, அந்த அளவிலிருந்து பிரதிபலிப்பு செய்கிறான். தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறான். அப்போது அது பகிர்ந்துகொள்ளவேண்டிய விஷயமாகிறது. பகிர்ந்துகொள்ளல் வருகிறபோதே வடிவம் வந்துவிடுகிறது. உரையாடல் தேவையாகிறது. அது தனிமொழியாக இருக்க முடியாது” என்று தன் இலக்கியக் கொள்கைக்குக் கூடுதல் விளக்கம் தரும் இ.பா., முதுகலைப் பட்டம் பெற்று முனைவர் பட்டமும் பெற்ற படிப்பாளி. பேராசிரியராகப் பணியாற்றியவர். 40 ஆண்டுகாலம் டெல்லியில் வாழ்ந்தவர். போலந்தில் பணியாற்றியவர். இந்தப் பின்னணி அவர் சொல்வதுபோல, அவர் எழுத்தின் திசை வழியைத் தீர்மானித்திருப்பதை நாம் உணர முடிகிறது.

அவருக்கேயான தனி பாணியில் அறிவார்ந்த உரையாடல்களோடு சிறுகதைகள் படைத்து, சிறுகதை வரலாற்றில் தனித்த இடம் பிடித்துள்ளவர் இந்திரா பார்த்தசாரதி.

இலக்கியத்துக்கு வெளியே அவர் ஓர் உறுதியான மதச்சார்பற்ற, ஜனநாயக அரசியலின் பக்கம் நிற்பவர் என்பது அவரது கூடுதல் சிறப்பு.

பாகம்1- வ.வே.சு.ஐயர் பாகம்-2- ஆ.மாதவய்யா பாகம்-3- பாரதியார்
பாகம்-4-புதுமைப்பித்தன் பாகம்-5- மௌனி பாகம்-6 - கு.பா.ரா
பாகம்-7- ந.பிச்சமூர்த்தி பாகம்- 8 - பி.எஸ்.ராமையா பாகம்- 9 - தொ.மு.சி. ரகுநாதன்
பாகம் -10- அறிஞர்.அண்ணா பாகம்-11- சி.சு.செல்லப்பா    பாகம்-12- ந. சிதம்பர சுப்ரமணியன்
பாகம் - 13 - எஸ்.வி.வி பாகம்-14-  தி.ஜ.ரங்கராஜன் பாகம்- 15.1  கல்கி
பாகம்-15.2 கல்கி பாகம்- 16- ராஜாஜி பாகம்-17 -அநுத்தமா
பாகம்18.1-கு.அழகிரிசாமி பாகம் 18.2- கு.அழகிரிசாமி பாகம் 19- கிருஷ்ணன் நம்பி
பாகம்-20- ல.சா.ரா பாகம்-21 - விந்தன் பாகம்-22-  மா.அரங்கநாதன்
பாகம்-23- ஜி.நாகராஜன் பாகம்- 24-  பெண் படைப்பாளிகள் பாகம்-1 பாகம்-25 - பெண் படைப்பாளிகள் பாகம்-2
பாகம்- 26 - ஆ.மாதவன்  பாகம்-27 - ஜெயகாந்தன் பாகம்-28 - கிருத்திகா
பாகம்-29 தி.ஜானகிராமன் பாகம்-30- அசோகமித்திரன் பாகம்-31-

எம்.வி.வெங்கட்ராம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு