Published:Updated:

இது உங்களின் காதல் கதை - சிறுகதை

இது உங்களின் காதல் கதை - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
இது உங்களின் காதல் கதை - சிறுகதை

சிறுகதை: வா.மு.கோமு, ஓவியம்/மருது

இது உங்களின் காதல் கதை - சிறுகதை

சிறுகதை: வா.மு.கோமு, ஓவியம்/மருது

Published:Updated:
இது உங்களின் காதல் கதை - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
இது உங்களின் காதல் கதை - சிறுகதை

நீங்கள் பார்வைக்கு எந்த நடிகரையும் ஞாபகப் படுத்தாத உருவ அமைப்பு கொண்டவர். திரையில் உங்கள் உருவத்தை ஒத்த எந்த முகத்தையும் நான் கண்டதேயில்லை. உங்களைப் பற்றி நான் சரியான இடத்தில்தான் பேசுகிறேன் என்று நம்புகிறேன். இது உங்களின் காதல்கதை. அதை ஓரளவேனும் அறிந்தவன் என்கிற முறையில் அதை என் மனதில் பூட்டி வைத்திருப்பது சரிப்படாது என்று பட்டமையால் வெளியே கொட்டிவிடலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். நிற்க. 

உங்களுக்கு கி என்று பெயர் சூட்டலாமா என்று எனக்குள் யோசனை ஓடுகிறது. அது தவறுதான். காலைக்காட்சி படங்களின் சுவரொட்டிகளில் உங்கள் பெயரைப் பார்த்திருக்கிறேன் என்று சொல்லி விடுவார்கள். வேண்டாம் ஙி என்று பெயர் சூட்டி விடுகிறேன்.

இது உங்களின் காதல் கதை - சிறுகதை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஙி ஆகிய நீங்கள் திருப்பூரில் பழைய பேருந்து நிலையம் அருகில் குணா போட்டோ ஸ்டுடியோ வைத்திருக்கிறீர்கள். உங்கள் சொந்த ஊர் ஊத்துக்குளி. காலையில் ஒன்பது மணிக்கு கடை ஷட்டரை உயர்த்தினீர்கள். என்றால் அதை இழுத்துப் பூட்டும் நேரம் இரவு ஒன்பது என்பதை வழக்கப்படுத்தி இருந்தீர்கள்.

நீங்கள் சிக்கண்ணா கல்லூரியில் டிகிரி படிப்பு முடித்தவர். இந்த ஸ்டுடியோ உங்கள் நண்பரின் தந்தையார் வைத்திருந்தது சுமார் பதினைந்து வருடங்களாக. உங்கள் நண்பரின் தந்தையார் விபத்தொன்றில் மரணமடைந்த சமயம் கடையை விற்பனைக்கு பேசிக் கொண்டிருந்த நண்பனிடம் பேசி பணம் புரட்டி அவன் கையில் வைத்துவிட்டு கடை சாவியை வாங்கிக் கொண்டீர்கள்.

ஆறு மாத காலம் தனி ஆளாய் சிரமப்பட்டுக் கொண்டிருந்த நீங்கள் துணைக்கு ஆள் வேண்டும் என்று உங்கள் வீட்டின் அருகாமை வீட்டுக்காரனான என்னை அழைத்தீர்கள். பன்னிரெண்டாம் வகுப்பு பரீட்சையில் மூன்று பாடங்களில் கோட்டை விட்டு மேற்கொண்டு பனியன் கம்பெனியில் ஒரு வருடமாக அயர்னிங் செக்சனில் நின்று கொண்டிருந்த நான் உங்களின் அழைப்பை நிராகரிக்க முடியாமல் போட்டோ ஸ்டூடியோவுக்குள் கால் வைத்தேன்.

இது உங்களின் காதல் கதை - சிறுகதை

ஙி ஆகிய நீங்கள் ஒரு கலைஞர்தான். ஒரு மாத காலத்தில் உங்களிடமிருந்து கலை நுணுக்கங்களை ஓரளவு நான் கற்றுக் கொண்டேன். திருப்பூரில் அயர்னிங் மாஸ்டராகி கம்பெனி கம்பெனியாய் மாறி மாறி ஓடி தேய்த்து, வாரக் கூலி வாங்கி டாஸ்மாக், தியேட்டர் என்று அலைந்து திரியப்போன என்னையும் கலைஞன்தானோ என்று உணர வைத்த தொழில் இது. நீங்கள் நம் கடையில் இல்லாவிடினும் வரும் வாடிக் கையாளர்களை அன்பாய் அமரவைத்து பாஸ்போர்ட் சைஸ், ஸ்டாம்ப் சைஸ் புகைப்படங்கள் எடுத்து அதற்குண்டான தொகை பெற்று கல்லாவில் போடும் நிலைக்கு வந்து விட்டேன்.

இப்படியாக எனக்கு மாதக்கூலி தரும் எஜமானராக நீங்கள் மாறிப் போனீர்கள். உங்களிடம் கை நீட்டி அதை நான் வாங்கிக் கொள்வதில்லை. நீங்களாக என் சட்டை மேல் பாக்கெட்டில் வைத்துவிட்டு, 'விடுமுறை வேண்டுமா?’ என்பீர்கள். கலைஞர்களுக்கு விடுமுறை ஏது? என்றால், என் தோள் தட்டி உண்மைதான் என்பீர்கள்.

உங்களுக்கும் எனக்கும் வயது வித்தி யாசம் என்று பார்த்தால் என்னைவிட நீங்கள் இரண்டு வயது மூத்தவர். டாஸ்மாக் நுழைந்து வாரம் ஒரு முறையேனும் தொண்டை நனைத்துக்கொள்ளும் பழக்கம் உங்களுக்கு இருந்தது. அந்த சமயத்தில் நீங்கள் நூறு சதவிகிதம் தங்கம்தான். ''உன்னப் பார்த்த பர்ஸ்ட்டு செகண்ட்ல என்னக் காணம்... தேடிப் பாக்குறேன் கண்டபடி நானும்... இல்ல தயவுசெஞ்சு ஒரு கன் எடுத்து என்னைச் சுடு'' என்று ஒரே பாடலையும் இந்த இரண்டு வரியையும் பாடி என்னை நோகடிப்பீர்கள். நண்பேன்டா! என்று வேறு திடீரென கட்டிக் கொள்வீர்கள். நீயும் துளி நனைச்சுக்கிறியா நண்பா! என்று மட்டும் தப்பித் தவறியும் கேட்க மாட்டேன் என்கிறீர்கள்.

நானும் துளி அளவேனும் நனைத்துக் கொண் டேன் என்றால் உங்களுக்கு இணையாக கூத்து கட்டலாம். உங்களில் நண்பேன்டா உச்சரிப்புகூட தவறாக இருக்கிறது. அதை சரிப்படுத்தலாம். நானும் பாடலாம். 'உன்னு உன்னாரே உன்னு உன்னா... வர்றான் வர்றான் பூச்சாண்டி ரயிலு வண்டியிலே...’ என்று பாட்டமும் ஆட்டமும் களைகட்டும். ஆனால் எனக்கு ஙி ஆகிய நீங்கள் எஜமான் என்ற உணர்வு இன்னமும் என்னுள் இருந்து கொண்டேயிருக்கிறது. இந்த உணர்வு போகப்போக உடைந்தும் போனது.

உங்கள் தாவாங்கட்டையில் ஏன் கோரைப்புற்கள் போல முடிக்கற்றைகளை வளர்க்கிறீர்கள்? என்றும் அது உங்கள் முக லட் சணத்தைக் கெடுக்கிறதே என்றும் உங்களிடம் நான் வினவினேன்.  உன் அண்ணிக்குகூட இதில் சங்கடம்தான். உன் அண்ணி அடிக்கடி என்னை கோபித்துக் கொள்கிறாள். சுத்தமாக மழித்து அமுல் பேபி போல அவள் முன் நின்றால் சந்தோசமாய் பேசுகிறாள். பின் ஏதோ காரணத்தில் உடனே கோபித்துக் கொள்கிறாள். என் சோகத்தை பப்ளிஷ் செய்ய உடனே எனக்கு தாடி வேண்டும். இது கொஞ்சூண்டு வெளியே முட்டி வளர வாரக்கணக்காகி விடுகிறது! அதற்குள் அவள் பலமுறை கோபித்துக் கொள்வதால் தொடர்ந்து இருக்கட்டுமே என்று விட்டுவிட்டேன் நண்பா! என்றீர்கள்.

அண்ணியைப் பற்றி நீங்கள் அன்னிக்கி ஆரம்பித்ததுதான். இன்றுவரை என்னிடம் எந்த நேரமும் அண்ணி புராணமே பாடிக் கொண்டிருக்கிறீர்கள். இருபத்தி நான்கு வயதில் நல்ல தொழிலில் இருக்கும் உங்களுக்கு காதல் வந்ததில் தப்பு ஒன்றுமில்லைதான். அந்தக் காதலால் நீங்கள் படும் வேதனைகள்தான் எனக்குள் பயமாகவே இருந்தது! ஒன்று தெரிகிறது, காதல் ஒரு பக்கம் மகிழ்ச்சியை தருகிறதுதான். அதன் இன்னொரு பக்கம் எல்லையே அற்ற மகிழ்ச்சிக்கான ஏக்கத் தையும் தந்து விடுகிறது.

அண்ணிக்கு ஷி என்று நான் பெயரிடுகிறேன். யெஸ் இது சரியானதும் கூட நான் அரைக்கை சட்டை அணிபவன். நீங்களும்தான் ஆனால் சென்ற மாதத்தில் முழுக்கை சட்டை அணிந்திருந்தீர்கள். என்ன அதிசயம்! ஆனால் அழகாய் இருக்கிறது என்றேன் இருக்கும்டா உனக்கு என்று கூறி பட்டனை விலக்கி, ஹா என்ற வலியோடு துணியை உயர்த்திக் காட்டினீர்கள். ஐயோ... என்ன இது கொப்புளம் கொப்புளமாய்? உங்கள் காதலியின் பெயரை சூடு வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அது ஷி என்ற எழுத்தில் தான் ஆரம்பித்திருந்தது.

ஷி ஆகிய என் அண்ணி திருப்பூர் விவேகானந்தா மெட்ரிக் பள்ளியில் ஆசிரி யையாக இருக்கிறார். வீடு ஊத்துக்குளி செல்லும் சாலையில் மண்ணரை. வீட்டுக்கு ஒரே பெண் அப்பா நடுநிலைப்பள்ளி ஒன்றில் ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். அண்ணிக்கு வயது ஙி ஆகிய உங்களின் வயதே. பேருந்தில் வந்து பேருந்தில் சென்று கொண்டிருக்கும் அண்ணியை பேருந்திலேயே ஏறி ஆறு மாதம் போல நாய்படாத பாடு (இதை நீங்கள்தான் சொன்னீர்கள்) பட்டு காலில் விழாக்குறையாய் கெஞ்சி காதலை வாங்கியதாக என்னிடம் தெரிவித்தீர்கள். இதில் இத்தனை சிரமம் உள்ளதா?

அட, இந்த திரைப்படங்களில்தான் தடுக்கி விழுந்த பெண்ணை கை கொடுத்து தூக்கி விட்டாலே காதல் வந்து விடுவதாகக் காட்டி என்னையும், என் போன்ற பாமர மனிதர்களையும் கிராபிக்ஸ் கலக்கலாய் தாக்கிவிட்டார்களோ!

காதலில் தன் குடிகார காதலனைத் தேடி பாருக்குள் நுழைவதாய் எஸ்.எம்.எஸ்., படத்தில் காட்டியிருக்கிறார்கள். பயங்கரம் என்று நான் பேச்சு வாக்கில் சொல்ல அதை தனித்துப் பார்க்கும் எண்ணத்தைக் கைவிட்டு அண்ணியை கூப்பிட்டிருக்கிறீர்கள். அண்ணியோ, சினிமாவா... அதுவும் தாலிக்கயிறு ஏறும் முன்பாகவா? என்று தன் பரம்பரையே கேவலப்பட்டுவிட்டதாய் காய்ச்சி எடுத்து விட்டதாகவும், கடைசியில் உங்களில் இம்மென்ற சோக முகம் காணச்சகியாமல், 'ஒரு வாட்டிதான்’ என்று கண்டிசன் போட்டு வந்ததாகவும் தெரிவித்தீர்கள். சரிதான். டீச்சர் அல்லவா என்று நான் நினைத்துக் கொண்டேன்.

பாதிப் படம் ஓடிக்கொண்டிருந்த சமயத்தில் உரிமையாய் உங்கள் காதலியின் தோளில் கை போட்டபோது, தட்டி விட்டாள் என்ற எக்குத்தப்பான விசயம்தான் இந்த சூட்டுப்புண் என்றீர்கள். எனக்கு காதலி என்றொருத்தி வந்தால் அவள் ஆசிரியையாக இருக்கும்பட்சத்தில் முதலிலேயே மரியாதையாக ஒதுங்கிக் கொள்வதுதான் சாலச்சிறந்தது.

இது உங்களின் காதல் கதை - சிறுகதை

தொடர்ந்து இரண்டாவது வாரத்தில் அண்ணியை பேருந்து ஏற்றி வழி அனுப்பிவிட்டு வந்த நீங்கள் போதையில் இருந்தது தெரிந்து உங்களிடம் பேச்சுக் கொடுக்காமல் இருந்தேன். உங்கள் இடது உள்ளங்கையில் கர்ச்சீப் கட்டு ஒன்று இருந்தது! அது ரத்தத்தால் நனைந்திருந்தது! ச்சே... ச்சை... என்று தலையை திடீர் திடீரென ஆட்டிக் கொண்டீர்கள். விசயத்தை நீங்களாக துவங்கவேண்டும் என்று எதிர்பார்த் திருந்தேன். எனக்கு அந்த முகம் காணாத அண்ணி மீது கோபம்தான். என் எஜமானின் துன்பத்துக்குக் காரணம் அண்ணிதானே!

நாளை பேருந்து நிலையம் சென்று நிலையத் தூணில் இடது காலை வைத்து ஒரு உந்து உந்தி கிறுச் கிறுச்சென சுழன்று ஸ்லோமோசனில் அண்ணிக்கு ஒரு பேக் ஷாட் உதை கொடுத்து, தலைமுடி கலைய கோபப் பார்வையால் விழிகளை உருட்டி ஒற்றை விரலை கீழே கிடக்கும் அண்ணி நோக்கி நீட்டி, 'ஏய்ய்ய்....!' என்று சப்தமிட்டு பஞ்ச் டயலாக் பேசவேண்டும் என்று ஆசை எழுந்தது!

எனக்கு உன் அண்ணி என்கிட்ட டீச்சர் மாதிரியே நடந்துக்கறது பிடிக்கலைடா எப்போப்பாரு தொணத்தொணன்னுஅப்படிப் பண்ணக்கூடாது, விரல் சூப்பக் கூடாது. கண்ணடிக்கக் கூடாது, இப்புடிப் பண்ணக்கூடாதுன்னு ஆர்டர் மேல ஆர்டர் போடறாடா! எதைப் பண்ணினாலும் தப்புங்றா! அவ மனசுக்குப் புடிச்சா மாதிரி எப்படி நடந்துக்கறதுன்னும் எனக்குத்தெரியல. உனக்கு காதலி உண்டா? அவளும் இப்படிப் பண்றாளா? நீ எப்படி கைக்குள்ளார போட்டு வச்சிருக்கே? என்று நீங்கள் கேட்டபோது இரு கையையும் உயர்த்தி தேர்தலில் ஓட்டு கேட்பது போல கும்பிடு வைத்தேன்.

ஒரு குயர் நோட்டு முழுக்கவும் அண்ணியின் பெயரை ஒரு வாரம் எழுதி நிரப்பி இன்று கொண்டு போய் நீட்டியிருக்கிறீர்கள். அண்ணி அதை விரித்துப் பார்த்து செமக்கடுப்பாகி, 'இதென்ன சின்னப் பசங்க போல பண்ணிட்டு இருக்கீங்க... இதைப் பார்த்துட்டு உங்களுக்கு நான் முத்தம் தரணுமா? செல்லம் கொஞ்சணுமா? போய் பத்தாம் கிளாஸ் பொண்ணுகிட்ட நீட்டுங்க, அவளுக்குத்தான் இதெல்லாம் பிடிக்கும்... சொல்லச் சொல்ல என்ன பண்றீங்க?' என்று அண்ணி தடுப்பதற்குள் கீழே கிடந்த பிளைடு துண்டை எடுத்து உங்கள் உள்ளங்கையில் கீச்சுப் போட்டுக் கொண்டதாகக் கூறினீர்கள். கடை சியாக, சத்தியமா உங்களை கட்டிக்கிறேன் நான் உங்களுக்குத்தான் இந்த மாதிரி எல்லாம் பண்ணாதீங்க, என்று அண்ணி சொன்னதாகவும், இது அவளோட கர்ச்சீப்தான் என்று காட்டி முத்தம் ஒன்று கர்ச்சீப்புக்கு கொடுத்தீர்கள் போதையில்.

அடுத்த நாள் மதியம் போல் இருக்கும். ஷி ஆகிய அண்ணி என் எஜமான் ஙி யைத் தேடி ஸ்டுடியோவுக்கு வருகை புரிந்தார். என்ன இருந்தாலும் என் வருங்கால எஜமானி அல்லவா அவர். படபடப்பில் கையும் காலும் எனக்கு அங்கும் இங்குமென பறந்தன. சோபாவில் அமர வைத்து விட்டு வெளி ஓடிவந்து ஜில் என்று கொக்கோகோலா பாட்டிலோடு ஓடிப்போய் நீட்டினேன். அண்ணி மறுக்காமல் வாங்கிக் கொண்டார். உள் அறை விளக்குப் போடாமலேயே பிரகாசமாய் இருந்தது மறுப் பதற்கில்லை.

''நீங்கள் தான் சீ என்பவரா? உங்களைப் பற்றி அவர் சொல்லி இருக்கிறார். எங்கே அவர் செல்போன் ஒரு மணி நேரமாகவே சுவிட்ச் ஆஃப் என்றே சொல்கிறதே. ஏன் அப்படி? தாடி வைத்துக்கொள்வதுதான் நாகரிகமா? உங்கள் முகத்திலும் ஏன் அது? கடை தேடிவரும் வாடிக்கையாளர்களுக்கு இது சங்கடத்தை உருவாக்காதா? கழுதையோடு சேர்ந்து பசுவாகிய நீங்களும் போஸ்டர் மேய ஆரம்பித்து விட்டீர்களா?" இப்படி அடுக்கிக் கொண்டே போகத்தான், எந்த நேரமும் ஆசிரியை யாகவேதான் இருப்பீர்களா? படுக்கையில் படுக்கும் போது கூட, 'நான் ஆசிரியை... நான் ஆசிரியை’ என்று சொல்லிக்கொண்டேதான் துங்குவீர்களா?'' என்று கேட்டதும்தான் அமைதியானார் என் அண்ணி.

அண்ணி குடித்து நீட்டிய பாட்டிலை வாங்கி டேபிள் ஓரம் வைத்தேன். இனி என்ன பேசுவது? என்று எனக்கும் புரிபடவில்லை ஆனால் இந்த நிசப்த மௌனம் அண்ணியிடம் தேவையில்லாத ஒன்றுதான். ''வெளியில் வண்டியில் போறப்ப, பார்ட்டி கிட்ட பேசுறப்ப எஜமான் செல்போனை அணைத்துத்தான் வைத்திருப்பார்...'' என்றேன். அண்ணி, ''சரி...'' என தலையாட்டினார்.

''உங்க புகைப்படம் கூட என்கையில இல்லை யேன்னு ரொம்ப வருத்தப்பட்டார். எனக்குகூட காட்ட முடியலையேன்னு வருத்தப்பட்டார். கேட்டால் நீங்க கோபிச்சுக்குவீங்களாம்! கையை அறுத்துக்கிறார், சூடு வச்சுக்கறார்... ரொம்ப பாவமா இருக்குங்க அண்ணி. கூடிய சீக்கிரம் நீங்க பிரிஞ்சுடுவீங்க. அவர் உங்களை வெறுத்துடுவார். நீங்களும் இன்னொருத்தரை கட்டிட்டு போயிடுவீங்க. பின்ன எதுக்காக இத்தனை துன்பம் இந்த இடைப்பட்ட காலத்துல உங்க ரெண்டு பேருக்கும்?'' என்று நான் கேட்கவும் அண்ணி கண்ணீர் சிந்தி குலுங்கினார்.

''ஒரு ஐஸ்கிரீம் சாப்பிடலாம் வா, ஒரு டீ சாப்பிடலாம் தலை வலிக்கிறா மாதிரி இருக்குன்னு ஒரு வார்த்தை உங்களை கூப்பிடமுடியலையாம். பூ வாங்கிக் குடுக்கலாம்னாகூட பயமா இருக்குன்னு போதையில என்கிட்ட அழறார். முகமே தெரியாத உங்க மேல எனக்கு கோபம் வருது. என் எஜமானை அழ வச்சு பார்த்துட்டனே... அண்ணியை கொன்னுடலாம்னு தோணுது! யார் கூடத்தான் நீங்க டீ சாப்பிடப்போவீங்க? நான் தியேட்டர்ல உங்க தோள்ல என் ஆள்னு கை போட முடியுமா? உங்காளுங்க என் எஜமான். இதை புரிஞ்சுக்காம நீங்க ஆசிரியையா இருந்து என்ன பண்ண? நீங்க என் எஜமானை விரும்பியிருக்க வேண்டியதே இல்லை. இதற்கும் மேல் எனக்கு சொல்லவும் தெரியவில்லை."

அண்ணி கண்ணீரைத் துடைத்துக் கொண்டு எழுந்து, ''என்னை அழகா அழுத முகத்தோட இப்படியே நான் கைந்து புகைப்படம் பிடிங்க!'' என்றார். நான் சந்தோசமாய் அதைச் செய்தேன். பிலிம் சுருளில் ஒரு கல்வெட்டு என்று என் எஜமான் பாராட்ட வேண்டும். அதற்காக என் உச்சபட்ச திறமையை காட்டினேன். என் எஜமான் செல் போன் இன்னமும் அணைந்து கிடக்கவே அண்ணி புறப்படும் நோக்கில் எழுந்தார்.

''எனக்காக சிரமம் பார்க்காம ஒரு உதவி பண்ணுங்க சீ. உங்க எஜமான் வந்ததும் நாளை டைமண்ட் தியேட் டருக்கு காலைக் காட்சிக்கு நான் வரச் சொன்னதா சொல்லிடுங்க... நான்தான் அவர் தோள் மேல கை போட்டு படம் பார்ப்பேன்னும் சொல்லிடுங்க!'' ''என்று அண்ணி சொன்னதும், ''இருங்க வெளிய ஓடிப்போய் மழை வந்துடுமான்னு பார்த்துட்டு வந்துடறேன்... அப்புறம் போங்க அண்ணி''! என்றேன்.

''நீங்க அவரை விட குசும்பு புடிச்சவரா இருப்பீங்க போலிருக்கு'' சிரித்தபடி அண்ணி வெளியேறினார்.

நான் ஸ்டூடியோ வாயிலுக்கு வந்து நின்று பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காய் காத்து நின்றிருக்கும் ஜிங்குச்சா கலர்களைப் பார்த்தேன். அதில் ஒரு மஞ்சள் தாவணி என்னை ஒரு பார்வை பார்த்த மாதிரியும் இருந்தது. அது வேறு கதை என்றாலும் அது என் கதை. ஆச்சர்யம் என்னவென்றால் அவள் பெயரும் ஷி-ல் தான் துவங்குகிறது.

இது உங்களின் காதல் கதை - சிறுகதை

''ஆசிரமம் ஆரம்பிக்கறதுக்கு லைசென்ஸ் வாங்கிட்டீங்களா சாமி?''

''முன்ஜாமீன் வாங்கியாச்சு!''

- சிக்ஸ் முகம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism