Published:Updated:

மெட்ராஸ் காக்கைகள்! - சிறுகதை

மெட்ராஸ் காக்கைகள்! - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
மெட்ராஸ் காக்கைகள்! - சிறுகதை

சிறுகதை: எஸ்.கதிரேசன், ஓவியம்/ஹரன்

மெட்ராஸ் காக்கைகள்! - சிறுகதை

சிறுகதை: எஸ்.கதிரேசன், ஓவியம்/ஹரன்

Published:Updated:
மெட்ராஸ் காக்கைகள்! - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
மெட்ராஸ் காக்கைகள்! - சிறுகதை

”இன்னிக்கு மட்டும் இதை நீ சாப்பிடலை... நாளையிலேர்ந்து உன்னைத் திரும்பிக்கூட பார்க்க மாட்டேன்!'' என்று சத்தம் போட்டுக் கொண்டே பதிலுக்குக் காத்திருக்காமல் உள்ளே போனார் சுப்பு ஐயர். 

அவருக்கும் காக்கைகளுக்கும் இடையிலான இந்தப் பரிச்சயம் இன்றைக்கு நேற்றைக்கு உண்டானதல்ல. சிறு பிராயம்தொட்டே காகங்களுடன் பழகி வருபவர் அவர். காக்கை என்றால் அவருக்கு அவ்வளவு பிரியம். அதன் கறுப்பு வண்ணம் மனசுக்குள் ஆயிரமாயிரம் ரகசியங்களைச் சொல்லிவிட்டுப் போகும். இருட்டுத் துணுக்குகளுக்கு சின்னச் சின்ன றெக்கைகள் முளைத்தது போல் இருக்கும். சுப்பிரமணிய பாரதியை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணத்துக்காகப் பிடிக்கும். இந்த சுப்பு ஐயருக்கு, 'காக்கைச் சிறகினிலே நந்தலாலா... உன் கரிய நிறம் தோன்றுதடா நந்தலாலா’ என்று அவர் பாடியதாலேயே பிடித்துப் போனது. காக்கைகள் இல்லாத உலகத்தை அவரால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. காகம் கரையும் என்பார்கள். காகத்துக்காக இவர் மனசு இப்போது கரைந்தது.

மெட்ராஸ் காக்கைகள்! - சிறுகதை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அப்படிப்பட்டவரை இந்த மெட்ராஸ் காக்கைகள் சட்டை செய்யாமல் இருப்பது... அவருக்கு வருத்தத்தையும், தாங்க முடியாத அவமானத்தையும் தந்தது. விஷயம் வேறொன்றும் இல்லை, அவர் நளபாகமாக சமைத்து வைத்த புளியோதரையை இந்தக் காக்கைகள் சட்டையே செய்யாமல், தன் நீண்ட அலகால் கிளறிவிட்டுப் பறந்து போய் கொய்யா மரக் கிளையில் உட்கார்ந்துகொள் வதுதான் அவரது வருத்தத்துக்கு முக்கியக் காரணம்.

துறையூர் அக்ரஹாரமே தனது பிரபஞ்சமாக எண்ணி வாழ்ந்த சுப்பு ஐயர் படிக்கிற காலத்தில் அப்படியொன்றும் சுட்டியில்லை. ஆனால், அந்தக்கால பள்ளி நாடகங்களில் சின்னச் சின்ன வேடங்களில் நடித்தும் அவ்வப்போது ஹாஸ்யங்களைத் துணுக்குகளைத் தூவியும் எல்லோரையும் சிரிக்கப் பண்ணுவார். எம்.கே.தியாகராஜ பாகவதரின், 'சொப்பன வாழ்வில் மகிழ்ந்து...’ பற்றி நாளெல்லாம் பேசிக் கொண்டு இருப்பார்.

படிப்பு வராமல் போகவே, கடைசியில் கணேஷ் ஐயர் சமையல் குரூப்பில் அங்கமாக சேர்ந்துவிட்டார் சுப்பு. .

காலம் உருண்டோடிப் போகப் பல பேருக்கு கல்யாணச் சாப்பாடு பண்ணி போட்ட சுப்பு ஐயர், தனது கல்யாணச் சாப்பாட்டை யாருக்குமே போட முடியவில்லை. அப்படி ஒரு பாக்கியம் அமையவேயில்லை. 'ஏண்டா இன்னும் கல்யாணம் பண்ணிக்கலையா?’ என்று ஆதரவாகக் கேட்பதற்கு அம்மாவும் இல்லை... அப்பாவும் இல்லை.

கல்யாணம் சிலருக்குத் தேவை; சிலருக்கு விருப்பம், சிலருக்கு நிர்ப்பந்தம். சுப்பு ஐயரது அகராதியைப் பொறுத்த வரை கல்யாணம் என்பது தேவையற்ற ஆறாவது விரல் என்றே எண்ணிவிட்டார். ஆக வேண்டிய காலத்தில் கல்யாணம் முடியவில்லை என்றால், அதன் பிறகு கல்யாணம் பண்ணிக்கொள்ளாமல் இருப்பதே மேல் என்பது அவரது கட்சி.

பழைய சாதம், பொங்கல், புளியோதரை என்று எது இருக்கிறதோ... அதைக் காலையில் எழுந்ததும் காகங்களுக்கு வைத்துவிட்டு, மொட்டை மாடியில் காபி குடித்துக் கொண்டே காலையை அனுபவிக்கும்போது, அவர் மனதில் கோடி நட்சத்திரங்கள் ஒரே சமயத்தில் புன்னகைப்பதைப் போல் ஆனந்தம் பொங்கும்.

சில வேளைகளில், பழைய சினிமாப் படங்களை இரண்டாவது ஆட்டம் பார்த்து லேட்டாகப் படுத்து (சினிமாவுக்குப் போவதென்றால் அது இரவுக் காட்சிதான் என்பதில் கொள்கை உறுதிமிக்கவர்), கண்ணயர்ந்து போனால், காகங்கள் ஒன்றுகூடி கத்தி எழுப்பும் அளவுக்கு அவருக்கும் காகங்களுக்கும் பந்தம் உண்டு.

தானுண்டு... தனது காக்கைகள் உண்டு என்று இருந்தவர்தான் இப்போது சென்னை வந்து அவஸ்தையில் நெளிகிறார். அக்கா மகன் சுரேந்தர் திரைப்பட இயக்குநராகும் ஆசையில் சென்னை வந்தவுடன் தானும் புறப்பட்டு வந்துவிட்டார். 'மணிவண்ணன், கவுண்டமணி போல் மிகப்பெரிய காமெடி நடிகராக்குகிறேன்’ என்ற இனிப்பு தடவிய மருமகனின் மருந்துதான் இன்னமும் வேலை செய்கிறது அவரிடம்.

நினைவு தெரிந்த நாள் முதலாக சுப்பு ஐயருக்கும் மாடி போர்ஷனுக்கும் அப்படி ஒரு பந்தம். வடபழனி குமரன் காலனியில் அதே ராசிப்படிதான் சென்னையிலும் அவருக்கும் சுரேந்தருக்கும் ஜாகை அமைந்தது. அங்குதான் சென்னை காக்கைகளின் திருவிளையாடல்களும் தொடங்கின.

காலையில் தயார் செய்யும் டிபன் வகையறாக்கள், பொங்கல், புளியோதரை போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைத் தன் வழக்கப்படி சுப்பு ஐயர் கர்மசிரத்தையாக காகங்களுக்கு வைப்பார். அவை டீ எஸ்டேட்களில் பணிபுரியும், டீ டெஸ்ட்டர்களைப் போன்று லேசாகக் கொத்திப் பார்ப்பதும், அலகில் எடுத்ததை விழுங்கலாமா அல்லது கீழே போடலாமா என்று யோசிப்பதும் அவரை வெகுவாக வெறுப்பேற்றின.

எத்தனை சுவையாகச் சமைத்து வைத்தாலும், அவற்றைக் கண்டு கொள்ளாமல், காப்பரேஷன் லாரிக்குக் காத்திருக்கும் குப்பைகளிலிருந்து மீன் செதில்களைத் தேடிப்பிடித்து கொத்திச் சாப்பிடுவதைப் பார்க்க அவருக்கு ஆத்திரமாக இருந்தது.

இந்த விஷயத்தைத் தன் மருமகன் சுரேந்தரிடம் சொல்லி சலித்துக் கொண்டார். அவனோ, தான் புறப்பட்டுச் செல்லும் அவசரத்தில் காதில் வாங்கிக் கொள்ளவேயில்லை. சுப்பு ஐயருக்கு ஏகவருத்தம். தன் ஆதங்கத்தை எவரிடம் சொல்லுவது என்று தெரியாமல் விழித்தார்.

வாய்ப்பு தேடி வெளியில் போன சுரேந்தர் வெறுத்துப் போய், வழக்கத்துக்கு மாறாக மாலையிலேயே அறைக்கு வந்துவிட்டான். தலைநகரை நோக்கி அவர்கள் படையெடுத்து வந்து ஏறத்தாழ ஆறு மாதங்களாகி விட்டன. இன்னும் சொல்லிக் கொள்ளும் விதமாக எவரிடமும் சேரவில்லை. மிகவும் குழப்பமாக இருந்ததால், மாலையில் மெரீனா பீச்சுக்குப் போகலாம் என்று சுப்பு ஐயரை இழுத்துக் கொண்டு கிளம்பினான்.

கடற்கரை மணலில் சுப்பு ஐயர் பழங்கதைகளை விலாவாரியாகக் கூறிக்கொண்டே போக... இருட்டி வெகுநேரமாகிவிட்டது. பஸ் பிடித்து வடபழனி புறப்பட்டனர். திருவல்லிக்கேணியில் சாப்பிட்டுப் போனால் கடைசி பஸ் போய்விடும். கடைசி பஸ்ஸின் கடைசி இருக்கை, முதல் பஸ்ஸின் முதல் இருக்கையைவிட மதிப்புமிக்கது என்பதை சுரேந்தர் உணர்ந்திருந்ததால் சாப்பிடாமலே பஸ்ஸைப் பிடித்தனர்.

வடபழனியில் எல்லா ஹோட்டல்களையும் கிட்டத்தட்ட அடைத்திருந்தனர். ஃபாஸ்ட் ஃபுட் கடைகள் நியான் விளக்கின் ஒளியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக மின்னிக்கொண்டிருக்க... வெஜிடபிள் ஃபிரைடு ரைஸை பார்சல் வாங்கிக்கொண்டு மொட்டை மாடிக்கு வந்து சேர்ந்தனர்.

பசி காதை அடைத்தது. கைகால்களை அலம்பி சாப்பிட உட்கார்ந்தனர். ஃபிரைடு ரைஸ் சுரேந்தருக்கு பழகிப் போன ஒன்று. சென்னை வாலிபர்களின் இரவு சாப்பாட்டின் ஆபத்பாந்தவன் இதுதான். சுப்பு ஐயருக்கோ இது முதல் அனுபவம். சாப்பாட்டில் எந்தச் சுவையும் இல்லை. இரண்டு கவளம் எடுத்து வாயில் போட்டார். இது சரிப்பட்டு வராது என்று எழுந்து சட்டையைப் போட்டுக் கொண்டார். ரஸ்தாளிப் பழம் இரண்டு மட்டும் இருந்தால் போதும் என்று தோன்றியது.

சுரேந்தர் கனைத்துக் கொண்டு பேசினான்.

''மாமா... காலையிலே காகம் சாப்பிடுறதே இல்லைன்னு கவலைப்பட்டீங்களே... பழக்கம்தான் மாமா காரணம். இங்கே இருக்கற காக்கைகள் இந்த வாழ்க்கைக்கும், இந்த உணவு வழக்கத்துக்கும் ஒருமாதிரி பழகிப் போச்சு. நீங்க எப்படி ஃபிரைடு ரைஸ் சாப்பிடவில்லையோ... அப்படித்தான் அதுவும்...''

''இந்த அர்த்தஜாமத்திலே எண்ணெய்யில் வதக்கின சாதத்தை நீ திங்கிறதைப் பார்த்தா... நீயும் மெட்ராஸ் காக்கையாத்தான் மாறிட்டே... பழம் வாங்க வர்றியா, இல்லையா?'' என்றபடி கீழே இறங்கத் தொடங்கினார்.

மெட்ராஸ் காக்கைகள்! - சிறுகதை

 ''இன்னிக்கு ஒரு நாளாவது  நீ சமையல் பண்ணேன்!''

''வேணாம், என்னை கொலைக்காரி ஆக்கிடாதீங்க...'' 

- சிக்ஸ் முகம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism