Published:Updated:

புலிகள் முத்தமிட்டுக்கொள்ளும் குகை ஓவியம் - கவிதை

புலிகள் முத்தமிட்டுக்கொள்ளும் குகை ஓவியம் - கவிதை
பிரீமியம் ஸ்டோரி
புலிகள் முத்தமிட்டுக்கொள்ளும் குகை ஓவியம் - கவிதை

கவிதை: வெய்யில், ஓவியங்கள்: செந்தில்

புலிகள் முத்தமிட்டுக்கொள்ளும் குகை ஓவியம் - கவிதை

கவிதை: வெய்யில், ஓவியங்கள்: செந்தில்

Published:Updated:
புலிகள் முத்தமிட்டுக்கொள்ளும் குகை ஓவியம் - கவிதை
பிரீமியம் ஸ்டோரி
புலிகள் முத்தமிட்டுக்கொள்ளும் குகை ஓவியம் - கவிதை

1
நிலமிழந்த சிறுவர்கள்
மிச்சமிருக்கும்
ஒரு பனங்கிழங்கை
சூரியனின்மீது வைத்துச் சுடுகிறார்கள்
சனமிழந்த காகத்துக்கும் நாய்க்கும்
இரு துண்டுகளை ஈயும்
அவர்களை
கடலின் கண்கள் வெறித்துப் பார்க்கின்றன
ஈழத்துக்கும் தனுஷ்கோடிக்கும்
மாறிமாறி நீந்தும் ஆமைக்கு
அந்த ஒரு சேதி இன்னும் சொல்லப்படவில்லை.

2
முப்பது வயதிருக்கும்.
பிள்ளைகளை உறக்கத்தில் ஆழவிட்டு
புலியேறிப் போனாள்.
காட்டில் நிறைய்ய நிறைய்ய மூங்கில்கள்
வளர்ந்தன பூத்தன எரிந்தன வளர்ந்தன எரிந்தன பூத்தன.
தள்ளாடி வருகின்றன கால்கள்
திரும்பி
காற்றை நரைகூந்தல் நடமிடுகிறது
கிழட்டுப்புலிகள் அவள் தோள்களில் உறங்குகின்றன
அவற்றின் கண்பீளைகள் மூங்கில் பூக்களென.
அனாதைப் பிள்ளைகள்
பொதுநடைபாதையின் நடுவே தீமூட்டி விளையாடுகின்றனர்.
மாட்டுத்தோல் உரிக்கும் கலைஞனே
புலியின் உடலிலிருந்து
இரவின் வரிகளை மட்டும் கோதி எடுத்துவா
கவனமாயிரு
வலிக்காதிருக்கட்டும்
யாருக்கும்.

புலிகள் முத்தமிட்டுக்கொள்ளும் குகை ஓவியம் - கவிதை

3
துணைநீங்கிய இளம்பெண்ணின்
இரவு வானொலிப் பாடல்களுக்கு எரியும்
இரண்டு பேட்டரிக்கட்டைகள்.
அதன் மின்மம் தீர்ந்த கரிமருந்தை
சர்க்கரையுடன் பிசைந்து
திருவிழாச் சாராயத்துக்கு ஊறல் போட்டிருக்கிறோம்.
‘புதையல்களை நாமே வைத்து
நாமே எடுக்கும் விளையாட்டுக்குப் பெயர்தான்
சாராயம் வடித்தல்’
இது
நெற்றியை உயர்த்தி அளவான புன்னகையோடு
அவரது எல்லைமுடிவில்
நம் அப்பா சொன்னது.
சிலநேரம் பாடல்கள் எரிகின்றன சாரயத்தைப் போல
குருதியை இசைத்தாட்டும் திரவம்
மண்ணாழத்தில் புளித்துப் பொங்குகிறது தாயே
‘உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே’
வான் வெரித்து முனகும் குறுந்தொகையாளே
விம்மும் யாமக் கபிலமுலைகளே
என் இரவுப்பரிசு
இரண்டு புதிய பேட்டரிக்கட்டைகள்
அதில் இடமும் வலமும் சீறிப்பாயும்
சங்ககாலப்பூனைகள்.

4
அம்மாவின் வயிற்றுக்குள்
பாவனையாக நுழைகிறாள் என் மகள்
தாயைக் கெஞ்சி தானும் அவளின் கருப்பைக்குள்
நுழைகிறாள் என் கிழத்தி
ஒருவருக்குள் ஒருவர்
திறந்துகொண்டே போவதைப் பார்க்கிறேன்
மூவருமாக அந்தப் பாறை ஓவியத்தில்
குச்சி மனிதர்களாக ஓடுகிறார்கள்
அவர்களின் முன்னே எத்தனை எத்தனை மான்கள்!
அன்றைய பசிக்காக வேட்டையாடினார்கள்
கிட்டத்தட்ட தம்மைப்போலவே
ஆனால்,
இடுப்புக்குக் கீழே கொஞ்சம் கூடுதலாக
தொங்கும் சதையுள்ள
ஒரு வினோத விலங்கை.
அதன் கொழுப்பில் தீட்டிய
ஓவியத்தின் கீழே உறங்கிப்போயினர்
வேட்டை ஓவியம் மினுங்கி மினுங்கி உலர
மீந்த சுடுநெருப்பு காற்றில் ஆடிக்கொண்டிருக்கிறது
அதனருகே காயும் மாரெலும்புக்கு என் சாயல்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism