Published:Updated:

மதுவந்தி - சிறுகதை

மதுவந்தி - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
மதுவந்தி - சிறுகதை

சிறுகதை: ஜி.ஆர்.சுரேந்தர்நாத், ஓவியங்கள்: ஸ்யாம்

மதுவந்தி - சிறுகதை

சிறுகதை: ஜி.ஆர்.சுரேந்தர்நாத், ஓவியங்கள்: ஸ்யாம்

Published:Updated:
மதுவந்தி - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
மதுவந்தி - சிறுகதை

டவுள் ஒரு நாள் எழுந்தார். அழகின் கோடி துளிகளை ஒரு கோப்பையில் ஏந்தினார். உலகிலுள்ள அனைவர் மீதும் அந்தத் துளிகளைத் தெளிப்பதற்காக விண்ணில் பறந்தார். கோப்பை கை தவறி கடவுளின்  கையிலிருந்து நழுவி விழ…. அழகின் அத்தனைத் துளிகளும்  ஷ்ரவந்தியின் கண்களில் விழுந்தது.

இயக்குநர் ஜோவின் டைரியிலிருந்து...

மாலையிலிருந்து ஆறாவது முறையாக, க்யூ நியூஸில் காண்பித்துக்கொண்டிருந்த எனது நேர்காணலைப் பார்த்துக்கொண்டிருந்தேன். டி.வி-யில் அந்த இளைஞன் என்னிடம், “டைரக்டர் ஜோவோட பொற்காலம் முடிஞ்சு போச்சுன்னு சொல்ற விமர்சனங்களைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?” என்று கேட்கிறான்.  சுள்ளென்று வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு, “எப்படி முடிஞ்சுபோச்சுன்னு சொல்றீங்க?” என்கிறேன் நான்.
“கடைசியா வந்த மூணு படமும் ஃபெயிலியர். கிரிட்டிகளாவும்  சரியில்லன்னு சொல்றாங்க….”

“நீங்க அடுத்த கேள்விக்குப் போங்க” என்ற எனது முகத்தில் இறுக்கம்.

மதுவந்தி - சிறுகதை

“இதுக்கு பதில் சொல்லி முடிச்சவுடனே, அடுத்த கேள்விக்குப் போறேன் சார்.”

அவ்வளவுதான். அதற்கு மேல் என்னால் பொறுக்க முடியவில்லை.  நான் ஆக்ரோஷத்துடன், “என்னோட பொற்காலம் முடிஞ்சுபோச்சுன்னு சொல்றதுக்கு நீ யாருடா? என்னோட ‘மதுவந்தி’ படம் பார்த்துருக்கியா நீ? இருபது வருஷத்துக்கு முன்னாடி, இந்தியாவையே தமிழ்நாட்டுப் பக்கம் திரும்பிப் பார்க்க வெச்ச படம்டா அது.”

“சார்… கேமரா ஓடுது. கொஞ்சம் நாகரிகமா பேசுங்க” என்கிறான் அவன். நான், “நீங்க டி.ஆர். பி-க்காக என்ன வேணும்னாலும் கேப்பீங்க. நான் எதுக்கு நாகரிகமா பேசணும்?” என்றபடி எழுந்து, சட்டைக்குள் செருகியிருந்த மைக்கை எடுத்து வீசியெறிந்துவிட்டு, வேகமாக வெளியேறுகிறேன்.

திடீரென்று டி.வி அணைய, நான் திரும்பிப் பார்த்தேன். கையில் ரிமோட்டுடன் என் மனைவி கவிதா, “இதையே ஏன் திருப்பித் திருப்பி பார்த்துக்கிட்டிருக்கீங்க?” என்றாள். இன்னும் அந்த உணர்ச்சிக் கொந்தளிப்பிலிருந்து வெளிவராத நான், எதிரேயிருந்த ஸ்காட்ச் விஸ்கி பாட்டிலை வேகமாக எடுத்து, அப்படியே குடிக்கத் தொடங்கினேன். கவிதா பாட்டிலைப் பிடுங்கியபடி, “போதுங்க…இன்னைக்கி ரொம்ப குடிச்சிட்டீங்க…” என்றாள். நான் பாட்டிலை விடாமல், “விடு. இன்னைக்கி ராத்திரி ஃபுல்லா குடிச்சுக் குடிச்சு சாகப்போறேன்” என்றேன்.

“பைத்தியம் மாதிரி பண்ணாதீங்க. ஏதோ சின்னப்பையன். தெரியாம கேட்டுட்டான்” என்றவளை உற்றுப் பார்த்தேன். சட்டென்று அவள் தோளைப் பிடித்து, “கவி… நீ சொல்லு. என் பொற்காலம் முடிஞ்சிடுச்சா?” என்று கேட்டவுடன் அவள் கண்கள் தடுமாறின. “அது எப்படிங்க முடியும்?” என்றாள் கண்களைத் தாழ்த்திக்கொண்டு.

“ஏய்... தலையக் குனியாத. என் கண்ணப் பார்த்துச் சொல்லு. எனக்கு நெருங்கியவங்க யாராச்சும், உண்மைய மறைக்காம சொன்னாதான், நான் என்ன நிலைமைல இருக்கேன்னு தெரியும். சொல்லு… இனிமே நான் அவ்ளோதானா? என்கிட்ட சரக்கு தீந்துடுச்சா?”

கவிதா பதில் சொல்லாமல் தலையைக் குனிந்துகொண்டாள். அவள் முகத்தைப் பிடித்து நிமிர்த்திய நான், “சொல்லு…” என்றேன் உறுதியான குரலில்.  என் முகத்தை சில வினாடிகள் பார்த்த கவிதா, “உங்க கடைசி மூணு படமும் அவ்ளோவா நல்லால்லங்க. பழைய டச் போயிடுச்சு” என்று கூறி முடிப்பதற்குள் நான் அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தேன். ஒரு கலைஞனிடம், “நீ படைப்புத்திறனை இழந்துவிட்டாய்” என்று கூறுவது, ஓர் ஆணிடம், ‘நீ ஆண்மையை இழந்துவிட்டாய்' என்று கூறுவதற்கு இணையான துயரம்.

கவிதா என்னை அதிர்ச்சியுடன் பார்க்க… நான், ``அவ்ளோ சினிமா தெரிஞ்சிடுச்சா உனக்கு? 29 வயசுலேயே ‘மதுவந்தி’ படத்துக்காக பெஸ்ட் டைரக்டர் நேஷனல் அவார்டு வாங்கினவன்டி நான்” என்றேன். கன்னத்தைப் பிடித்தபடி சில வினாடிகள் என்னைப் பார்த்த கவிதா, கண்ணோரம் நீர் வழிய அறையிலிருந்து வெளியேறினாள். வேகமாக விஸ்கி பாட்டிலை எடுத்து மடமடவென்று குடித்தபோது, என் மொபைல் அடித்தது. அதில் ‘ஜெகன்’ என்று ஒளிர்ந்த பெயரைப் பார்த்தவுடன், உள்ளுக்குள் சந்தோஷம். ஜெகன்தான் என் ‘மதுவந்தி’ படத்தின் கதாநாயகன். மொபைலை எடுத்து, “ஹலோ…” என்றேன்.

“ஜோ... எப்படியிருக்கீங்க? இப்பதான் நியூஸ்ல பாத்தோம். என்னாச்சு ஜோ?”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மதுவந்தி - சிறுகதை

“ஜெகன்… இங்க நான் கொஞ்சம், கொஞ்சமா செத்துக்கிட்டிருக்கேன். இப்ப உன்னால உடனே என் வீட்டுக்கு வர முடியுமா?”
 
“ஜோ… இப்போ நான் சென்னையில இல்லை. நானும், ஷ்ரவந்தியும் ஒரு மலையாளப் பட ஷீட்டிங்குக்காக கொச்சின் வந்துருக்கோம்” என்றவுடன், என் மனதில் வேகமாக ஒரு அலையடித்து ஓய்ந்தது. ஷ்ரவந்தி, என் ‘மதுவந்தி’ படத்தின் கதாநாயகி. மதுவந்தியில்தான் அவள் அறிமுகம். அறிமுகமான முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றாள்.

“ஜோ… ஒரு கலைஞனுக்கு ஏற்றமும், சரிவும் சகஜம். டி.வி-ல ஏன் அவ்ளோ கோபமா பேசுனீங்க?”

“அந்தப் பையன் அப்பட்டமா உண்மையை உரிச்சுக் காட்டினப்போ, என்னால தாங்கிக்க முடியலை ஜெகன். நான் நாலு வருஷமா, மூணு படமா சரிஞ்சுக்கிட்டேயிருக்கேன் ஜெகன்.”

“ஜோ… ரொம்ப டிப்ரஷ்டா இருக்கீங்க. பேசாம கொச்சின் புறப்பட்டு வாங்க.  உங்களுக்கு சேஞ்சா இருக்கும். ஒரு நிமிஷம்…. ஷ்ரவந்தி பேசணும்ங்கிறாங்க” என்றவுடன் மீண்டும் உள்ளுக்குள் அலைகள் ஆக்ரோஷமாக அடித்தன.

“ஜோ சார்…” என்ற ஷ்ரவந்தியின் குரலைக் கேட்டவுடன், மனசுக்குள் அப்படியே நொறுங்கிப்போய், “ஷ்ரவந்தி…” என்ற எனக்கு தொண்டை அடைத்து, அழ ஆரம்பித்துவிட்டேன்.
“ஜோ சார்… என்ன இது? சின்னப்பையன் மாதிரி…”

“முடியல ஷ்ரவந்தி. ஒரு கலைஞனோட இறுதிக் காலங்கள் ரொம்பத் துயரமானதுன்னு எனக்குத் தெரியும். போன வாரம் என் படம் ரிலீஸானப்போ தியேட்டருக்குப் போயிருந்தேன். படம் முடிஞ்சு, ‘எ ஃபிலிம் பை ஜோ’ன்னு பேர் போட்டப்போ, ஒருத்தன் செருப்பை ஸ்கீரினைப் பார்த்து  விட்டெறிஞ்சான். நான் அன்னைக்கே செத்துருக்கணும் ஷ்ரவந்தி. எனக்கு நாப்பத்தெட்டு வயசுதான் ஆகுது. அதுக்குள்ள ஃபீல்ட் அவுட்னா?”
“உங்களை யாரு ஃபீல்ட் அவுட்டுன்னு சொன்னா? சினிமாவுல தோக்குறதும், ஜெயிக்கிறதும் சகஜம். நீங்க அதையே நினைச்சுட்டுருக்காதீங்க. முதல்ல அதுலேர்ந்து  வெளிய வாங்க. நீங்க கொச்சின் வாங்க. நீங்களும், ஜெகனும், நானும் போகலாம்.”

“எங்க?”

“நம்ம ‘மதுவந்தி’ ஷீட்டிங் எடுத்த ஆலப்புழைக்குப் போவோம். இருபது வருஷத்துக்கு முந்தைய அந்த `மதுவந்தி’ நாட்களுக்குப் போவோம் சார். க்ளைமாக்ஸ்ல, மதுவந்தி கதறிக் கதறி அழுதுட்டிருந்த அந்த காயல்கரை தென்னை மரத்தடிக்குப் போலாம் சார். க்ளைமாக்ஸ் ஷாட் ஓகே ஆனவுடனே, என்னைக் கட்டிப்பிடிச்சு கண்ணு கலங்க பாராட்டினீங்களே ஜோ சார். அந்த காயல் கரைக்குப் போகலாம். அங்கே நான் சாப்பிட்டுட்டு துப்பின நாவல்பழக் கொட்டைங்க, எங்கயாச்சும் மரமாகியிருக்கான்னு பார்க்கலாம் ஜோ சார்” என்று கவிதைபோல் ஷ்ரவந்தி பேசப்பேச… மனசெல்லாம் லேசானது. “உங்களுக்கு ஷீட்டிங்…” என்று இழுத்தேன்.

“நாங்க என்ன ஹீரோ, ஹீரோயினாவா நடிக்கிறோம்? அண்ணன், அண்ணி. முக்கால்வாசி நேரம் செட் ப்ராப்பர்ட்டி மாதிரி நின்னுட்டிருக்கோம். அதெல்லாம் பிரேக் எடுத்துக்கலாம். நாளைக்கு காலையில ஆறேகாலுக்கு ஒரு இண்டிகோ ஃப்ளைட் இருக்கு. அதுல கிளம்பினா ஒண்ணேகால் மணி நேரத்துல கொச்சின் வந்துடலாம். வந்து உங்க மதுவந்தியோட உலகத்துக்குப் போவோம். ஃப்ளைட் டிக்கெட் இருக்கான்னு செக் பண்ணிட்டு நான் போன் பண்றேன்” என்று ஷ்ரவந்தி போனை வைத்தாள். இதயம் முழுவதும் நிரம்பி வழிந்த பரவசத்துடன் போனையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

சரியாக 22 ஆண்டுகளுக்கு முன்பு, நான் இரண்டு படங்கள் எடுத்து, ஒன்று ஃப்ளாப்பாகி, ஒன்று சுமாராகப் போய், இதற்கிடையே என் மாமா பெண்ணுடன் திருமணம் நிச்சயமாகி, தடுமாறிக்கொண்டிருந்த காலகட்டம். அப்போது வி.ஜி.பி-யில் எனது அடுத்த படத்துக்கான ஸ்டோரி டிஸ்கஷனில் இருந்தோம். வேகமாக அறைக்கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்த சர்மா, “சார்…. புதுசா றெக்க முளைச்ச பச்சைக்கிளி மாதிரி ஒரு பொண்ணு. சினிமாவுக்கு சான்ஸ் கேட்டு வந்துருக்கு” என்றார்.

“யோவ்… இங்க ஏன்யா அழைச்சுட்டு வந்த? இன்னும் கதை ஒன்லைன்கூடப் பிடிக்கலை.”

“நீங்க முதல்ல வந்து பாருங்க சார்… இவ்ளோ லேட்டா ஏன்யா அழைச்சுட்டு வந்தேன்னு கேட்ப்ீங்க…” என்றவுடன் எழுந்து வெளியே ஹாலுக்கு வந்தேன். சோபாவில் ஏதோ ஆங்கிலப் புத்தகம் படித்தபடி அமர்ந்திருந்த அந்தப் பெண் நிமிர… எனக்குள் ஏதோ நிகழ்வதை என்னால் துல்லியமாக உணரமுடிந்தது. அழகிய மாநிற முகம். முகத்தின் ஒவ்வொரு செல்லும், `நான்  ஓர் அழகியின் முகத்தில் இருக்கிறேன்’ என்று சத்தமாகச் சொன்னது. சின்ன அளவான உதடுகள். இதையெல்லாம் விட, அந்தக் கண்கள்தான் என்னை அசரடித்தன. உலகின் அனைத்து ரகசியங்களையும் ஒளித்து வைத்திருப்பது போன்ற, அப்படி  ஓர் உணர்ச்சிபூர்வமான, மகா ஒளிப் பொருந்திய அகன்ற கண்கள். அந்தக் கண்களால் பார்க்கப்படுவர்களின் பாவங்கள் உடனடியாகக் கழுவப்பட்டால், நான் ஆச்சர்யப்பட மாட்டேன்.

எழுந்து வணக்கம் சொன்ன ஷ்ரவந்தியைப்  பார்த்துக்கொண்டேயிருந்தேன். சர்மா, “இன்னைக்கே ஒரு ஸ்க்ரீன் டெஸ்ட் எடுத்துடுவோமா சார்?” என்றார். “தேவையே இல்லை” என்ற நான் ஷ்ரவந்தியின் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். உண்மையில் மதுவந்தியின் கதை, அந்த வினாடியில் அவள் கண்களி லிருந்துதான் பிறந்தது. எப்போதும் பரவசத்துடன் ஒளிர்ந்துகொண்டிருக்கும் அழகிய கண்களுடைய ஒரு பெண். க்ளைமாக்ஸில் அவளுடைய கண்களில் ஒரு காவியத் துயரத்தை உருவாக்க வேண்டும். அந்தத் துயரத்தை எப்படி உருவாக்குவது?

இரண்டு மாதத்தில் நான் மட்டுமே தனியாக அந்தக் கதையை உருவாக்கினேன். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு கொலைக்குற்றவாளி, கேரளாவுக்குத் தப்பிச்சென்று தலைமறைவாக தங்கியிருக்கு ம்போது, அங்கு சந்திக்கும் தமிழ் பேசத் தெரிந்த ஒரு மலையாளப் பெண்ணுடன் ஏற்படும் காதலைப் பற்றிய கதை.

இரண்டு மாதங்கள் கழித்து, என் திருமணம் முடிந்து, படப்பிடிப்புக்குச் சென்றோம். படம் முழுவதும் கேரளாவின் ஆலப்புழை மாவட்டத்தின் காயல்கரை கிராமங்களில் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பின் முதல் நாள் காயல் கரையோரம், மலையாளப் பெண்கள் அணிந்திருப்பது போன்ற கறுப்பு நிறச் சட்டை, வெள்ளைப் பாவாடை, நெற்றியில் சந்தனத்துடன் ஷ்ரவந்தி வந்து நின்ற முதல் நொடியிலிருந்து நான் அவளைக் காதலிக்க ஆரம்பித்துவிட்டேன். இனிமேல் திருமணம்தான் செய்துகொள்ள முடியாது. ஆனால் காதலிக்கலாம் அல்லவா? அந்தப் படம் எடுத்த ஒவ்வொரு விநாடியும், ஒரு புனிதமான பரிசுத்தத்துடன் நான் ஷ்ரவந்தியைக் காதலித்தேன். அவளை ஒருமுறைகூட காமக்கண்ணோட்டத்துடன் எண்ணவோ, அணுகவோ தோன்றவேயில்லை. அவள் என்னைப் பார்த்த, சிரித்த, பேசிய ஒவ்வொரு முறையும் நான் புதிதாகப் பிறந்தேன். அவள் மீது எனக்கிருக்கும் காதலை ஒரு துளிகூட அவளிடம் காண்பித்துக்கொள்ளவே இல்லை. ஆனால் அந்தக் காதலின் மகத்தான ஆற்றலில்தான், அந்தப் படம் அவ்வளவு கவித்துவமாக வந்தது. 

பின்னர், ‘மதுவந்தி’ திரைப்படம் வெளிவந்து, தமிழ்நாடே மதுவந்தியைத் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடியது.  இரண்டு தீபாவளிகள் 17 தியேட்டர்களில் ஓடிய படம்.  இன்று வரையிலும் அந்தச் சாதனை  முறியடிக்கப்படவேயில்லை. தமிழ்நாட்டில் நான் சென்ற இடமெல்லாம், என்னை ஒரு நடிகன் போல் சூழ்ந்துகொண்டார்கள். அதன் பிறகு, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும், நான் திரும்பிப் பார்க்கவேயில்லை. இதுவரையிலும் மொத்தம் 36 படங்கள். அதில் 80 சதவிகிதம் ஹிட். ஷ்ரவந்தி தமிழ், மலையாளம், தெலுங்கு என்று பத்து வருடங்களில் 120 படங்கள் நடித்தாள். பின்னர் மெல்ல ஓய்ந்து இப்போதும் அக்கா, அண்ணி வேடங்கள் என்று பிஸியாக இருக்கிறாள்.

 கொச்சின் ஏர்போர்ட்டில் இறங்கியதிலிருந்து, எப்போது ஷ்ரவந்தியைப் பார்ப்போம் என்று பரபரப்பாக இருந்தது. விசிட்டர் பகுதியில் முதலில் ஜெகனைத்தான் பார்த்தேன். கையை உயர்த்தி ஆட்டிய ஜெகனுக்குப் பின்னாலிருந்த ஷ்ரவந்தியைப் பார்த்தவுடன் மனம் பொங்கி வழிந்தது. ‘மதுவந்தி’ படத்தில் ஷ்ரவந்தி வரும்போதெல்லாம் ஒலிக்கும் புல்லாங்குழல் இசை மனதிற்குள் ஒலித்தது. நான் ஜெகனை அணைத்துவிட்டு, ஷ்ரவந்தியின் கையைப் பிடித்துக் குலுக்கியபோது, எப்போதும் அவளிடமிருந்து அடிக்கும் கால்வின் க்ளெய்ன் பர்ஃப்யூமின் மணம்.

“இன்னும் பர்ஃப்யூமை மாத்தலை” என்றேன்.

“தி ஸேம் கால்வின் க்ளெய்ன் அண்ட் தி ஸேம் ஷ்ரவந்தி” என்ற ஷ்ரவந்தியின் முகத்தைப் பார்த்தேன். அவளுக்கு இப்போது வயது நாற்பதைத் தாண்டியிருக்கும். இருப்பினும் முதல் பார்வையில் ஒருவன் கண்ணுக்குள் தேவதையாக விழுந்தவர்கள், எத்தனை வயதானாலும் தேவதையாகவே இருக்கிறார்கள். மஞ்சள் நிறத்தில் சல்வார் அணிந்திருந்தாள். நான் வழிபடும் அந்தக் கண்கள் எந்தச் சேதாரமும் இன்றி, உலகின் மொத்த இருட்டையும் விரட்டும் அளவுக்கு அதே தீட்சண்யத்துடன் ஒளிர்ந்தன.

காரின் பின்சீட்டில் அமர்ந்துகொண்ட நான், முன்னால் அமர்ந்திருந்த ஜெகனிடம், “இங்கேர்ந்து ஆலப்புழா போக எவ்வளவு நேரமாகும்?” என்றேன். “ரெண்டு மணி நேரமாகும்” என்றான் ஜெகன். என்னருகில் உட்கார்ந்திருந்த ஷ்ரவந்தியைப் பார்த்து, “நாம ரெண்டு பேரும் எப்போ கடைசியா பார்த்தோம்னு ஞாபகமிருக்கா?” என்றேன்.

“அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி, மியூசிக் டைரக்டர் ஹேமந்த்குமார் மேரேஜ்ல பாத்தோம். ஆம் ஐ ரைட்?”

“ரைட்… ஹஸ்பெண்ட் எப்படி இருக்காரு?”

“ஆஸ் யூஸ்வல் பிசினஸ். நாடு நாடா பறந்து பணம் எண்ணிக்கிட்டிருக்காரு. அவர் வீட்டுக்கு வர்றப்போ, அவர் லேப்டாப்ல சார்ஜ் இல்லாம இருந்தா, லைட்டா குடும்பம் நடத்துவோம்” என்றாள் சிரித்தபடி. நான் சத்தமாக சிரித்தேன். அப்போது என் மொபைலில் மெசேஜ் சத்தம் கேட்டது. நான் சட்டை பாக்கெட்டிலிருந்த கண்ணாடியை எடுத்து அணிய ஷ்ரவந்தி, “ஜோ சார்…கண்ணாடில்லாம் போட ஆரம்பிச் சிட்டீங்க?” என்றாள்.

“ம்… கெட்டிங் ஓல்டர்.”

“மீசைல்லாம்கூட நரைக்க ஆரம்பிச்சிடுச்சு.”

“ஏய்…. சத்தமா சொல்லாத” என்றேன். உடனே ஷ்ரவந்தி என் அருகில் நெருங்கி, அவளுக்கே உரிய குறும்புணர்வுடன் கிசுகிசுப்பாக, “மீசைல்லாம்கூட நரைக்க ஆரம்பிச்சிடுச்சு” என்றாள். தொடர்ந்து அவள் கிசுகிசுப்பாக, “எனக்கும் காதோரம் லேசா நரைக்க ஆரம்பிச் சிடுச்சு. டை அடிச்சிருக்கேன்” என்று என் காதருகில் சாக்லேட் வாசனையுடன் சொன்ன போது சில வினாடிகள் பறந்து, மிதந்து, அடங்கினேன்.
ஆலப்புழையிலிருந்து ஏழு கிலோமீட்டர் தள்ளியிருந்த கெஸ்ட் ஹவுஸை நோக்கிப் படகில் சென்றுகொண்டிருந்தோம். மேலே கூரை யெல்லாம் இல்லாத,  சிறிய சாதாரண நேரோ கேனால் படகு. ஷ்ரவந்திதான் அடம் பிடித்து, அந்தப் படகில்தான் போகவேண்டும் என்றாள்.

படகு நகர ஆரம்பித்ததும், சுற்றிலும் பார்த்தேன். காயல்கரையோரத் தென்னை மரங்கள், காற்றில் லேசாக ஆடிக்கொண்டிருந்தன. நீரலைகள் கட்டுச்சுவரில் மோதித் ததும்புவதைக் காண அழகாக இருந்தது. யாரோ ஒருவர் தென்னை மரத்திலிருந்து தேங்காயைப் பறித்து நீரில் போட, ஒரு சிறுவன் நீந்தி நீந்தி அவற்றை எடுத்து, அருகிலிருந்த படகில் போட்டுக் கொண்டிருந்தான். எங்களைக் கடந்து சென்ற போட் ஹவுஸில் இருந்த வெள்ளைக்காரர்கள் ஒயின் க்ளாஸுடன் எங்களைப் பார்த்து ‘ச்சியர்ஸ்’ சொன்னார்கள்.

ஷ்ரவந்தி, “இங்க வந்தவுடனே, நான் மதுவந்தி நடிச்சப்போ இருந்த சின்ன வயசுக்குப் போய்ட்ட மாதிரி இருக்கு. நான் ஏன் இந்த சாதாரண போட் வேணும்னு சொன்னேன் தெரியுமா? மதுவந்தியோட முதல் சீன் இந்த மாதிரி சாதாரண போட்லதான் ஆரம்பிக்கும்” என்றவுடன், என்னைப் போலவே என் மதுவந்தியை நேசிக்கும் ஷ்ரவந்தியைப் பிரியத்துடன் நோக்கினேன். ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்தபடி, “மதுவந்தியோட முதல் சீன் என்னன்னு ஞாபகமிருக்கா ஜெகன்?” என்றேன். ஜெகன் தலைக்கு மேல் கும்பிடு போட்டான். நான் திரும்பி ஷ்ரவந்தியைப் பார்த்தேன்.

“மறக்க முடியுமா சார்? இதே மாதிரி போட்ல, மதுவந்தி மஞ்சகலர் சட்டையும், வெள்ளைகலர் பாவாடையும் போட்டுக்கிட்டு, படகுக் கட்டையில குப்புறப்படுத்துக்கிட்டு, தலையைப் படகுக்கு வெளியே நீட்டி, காயல் தண்ணியை அள்ளி அள்ளி முகத்துல தெளிச்சுப்பா” என்ற ஷ்ரவந்தி, “மைகாட்… நானும் இப்ப மஞ்சகலர் ட்ரெஸ்தான் போட்ருக்கேன்” என்றவுடன் எனக்கு உற்சாகமாகிவிட்டது. ஷ்ரவந்தி,
`` இப்போ அந்த ஃபர்ஸ்ட் சீனை ப்ளே பண்ணப் போறேன்'' என்று சட்டென்று அந்தப் படகின் பலகையில் குப்புறப் படுத்தாள். நான், “ஏய்… ட்ரெஸ் அழுக்காயிடும். வேண்டாம்” என்றேன்.

“வேணும்.… நான் மறுபடியும் மதுவந்தியா வாழ்றதுக்காகத்தான் இங்க வந்துருக்கேன்” என்றவள் சட்டென்று தலையைப் படகுக்கு வெளியே நீட்டி, இரண்டு கைகளாலும் காயல் நீரை அள்ளி முகத்தில் மீண்டும் மீண்டும் தெளித்துக்கொண்டாள். பின்னர் தலையை நிமிர்த்தி வானத்தைப் பார்த்து, “மழையே… நீ எங்கருக்க? சீக்கிரம் வந்து, என் மேல மட்டுமாச்சும் கொஞ்சோண்டு பெஞ்சுட்டுப் போ…” என்று கத்த, எனக்கு சிலிர்த்துப்போனது. படத்தின் முதல் வசனம் அது.  இந்த வசனம் முடிந்தவுடன், படத்தில் அவள்மீது மட்டும் மழை பெய்ய ஆரம்பித்து பிறகு, காயல் முழுவதும் பெய்யும்.

மதுவந்தி - சிறுகதை

எழுந்து என்னருகில் அமர்ந்த ஷ்ரவந்தியை உற்றுப் பார்த்தேன்.  முகத்தில் ஊற்றிக்கொண்ட தண்ணீரை அவள் துடைக்கவே இல்லை. காதோர முடியிலிருந்து நீர் வழிந்து, கன்னத்தைக் கடந்து, தாடையிலிருந்து மெதுவாகச் சொட்டியது.

“நான் இப்ப கொஞ்சம் கொஞ்சமா மதுவந்தியா மாறிக்கிட்டிருக்கேன் ஜோ சார்…”

“அப்ப நான் மதுவந்தி ஹீரோ மனோஜா மாறணுமா?” என்றான் ஜெகன்.

“ஆமாம். மாறி என்னைப் பிடிச்சு தலைக்கு மேல தூக்கணும்.”

“நான் செத்தேன்.”

அந்த கெஸ்ட் ஹவுஸ், ஒரு குறுகிய வாய்க்காலின் கரையிலிருந்து பத்தடி தொலைவிற்குள் இருந்தது. அனைத்தும் கேரள பாணி ஓட்டு வீடுபோல் கட்டப்பட்டிருந்த சூட்கள். எங்களுக்கும், ஷ்ரவந்திக்கும் தனித்தனியாக சூட் புக் செய்திருந்தோம்.  நாங்கள் குளித்து, உடை மாற்றி உடனே வெளியே கிளம்பிவிட்டோம். ஷ்ரவந்தி இளம் நீல நிற காட்டன் புடைவைக் கட்டிக்கொண்டு, தலை முடியைப் பின்னாமல்,  காதோர முடிகளை இழுத்து முடிந்துவிட்டிருந்தாள்.

நான், “பக்கத்துலதான் அந்த ‘இஷ்டம்’ டயலாக் சீன் எடுத்த ஸ்பாட் இருக்கு. அங்க போவோம்” என்றேன். ‘மௌனராகம்’ படத்தின் “சந்திரமௌலி’ டயலாக் சீன்போல, ‘மதுவந்தி’ படத்தின் ‘இஷ்டம்’ டயலாக் சீனும் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலம்.

படகு மெல்ல நகர கரையை ஒட்டியபடி, சிறிய அழகழகான வீடுகள். படகில் வந்த காய்கறி வியாபாரி, ஒரு வீட்டின் வாசலில் நிறுத்தி, `பாம்… பாம்…' என்று ஹாரன் அடிக்க, நைட்டியுடன் வெளியே வந்த பெண் படகில் இருந்த காய்கறிகளைப் பொறுக்க ஆரம்பித்தாள். படகு ஒரு குறுகலான வாய்க்காலில் திரும்ப, ஒரு திருமண ஜோடி எதிர் படகில் ஊர்வலமாகச் சென்றனர். சற்று தூரத்தில் தெரிந்த அந்தச் சிறு கோயிலைப் பார்த்தவுடன், “ஸ்டாப்… ஸ்டாப்… இங்கதான்” என்று கத்தினேன். கரையில் இறங்கி நடந்தபோது, எனக்குள் என்னன்னவோ செய்தது. அந்த என்னன்னவோவைக் கலைக்க விரும்பாமல் அமைதியாக நடந்து சென்றோம்.

“காயல்ல இருந்து கோயிலுக்குப் போற ஒற்றையடிப் பாதை இருக்கும். அங்கதான் அந்த சீனை எடுத்தோம்” என்ற நான் அந்த ஒற்றையடிப் பாதையைத் தேடினேன். கோயிலுக்கு நேரே  இருந்த அந்த ஒற்றையபடிப் பாதையைப் பார்த்தவுடன் எனக்குள் சந்தோஷம். அதை விட ஆச்சர்யம், கரையை நோக்கி நன்கு வளைந்திருக்கும் அந்தத் தென்னை மரமும் இன்னும் இருந்தது. பழைய நினைவுகளின் பாரத்தைத் தாங்கமுடியாமல், பேன்ட் பாக்கெட்டில் இருந்த வோட்கா பாட்டிலை எடுத்து குடிக்க ஆரம்பித்தேன். முழு பாட்டிலையும் குடித்து முடித்துவிட்டு பாட்டிலை நீரில் வீசியெறிய, அது ‘க்ளக்’ என்று மூழ்கியது.

“நீங்க ரொம்பவும் குடிக்கிறீங்க ஜோ சார். போட்ல வர்றப்போவும் குடிச்சுக்கிட்டே வந்தீங்க” என்று ஷ்ரவந்தி கூற, நான் பதில் சொல்லவில்லை. இப்போது போதை நல்ல உச்சத்தில் இருக்க… நான், “ஷ்ரவந்தி… இப்ப நாம அந்த ‘இஷ்டம்’ சீனை  ஷீட் பண்ணுவோமா?” என்றேன். “ஜோ…” என்று சிரித்த ஜெகன், “யாராச்சும் பார்த்தா பைத்தியக்காரங்கன்னு நினைப்பாங்க” என்றான். “யாருமில்லை. நான் கவனிச்சுட்டேன்” என்று  சுற்றிலும் பார்த்தபடி, “உனக்கு டயலாக்லாம் ஞாபகமிருக்கா?” என்றேன்.

“தமிழ்நாட்டுல முப்பது வயசுக்கு மேல இருக்கிற எல்லா ஆளுங்களுக்கும் அந்த டயலாக் தெரியும். எனக்குத் தெரியாதா?” என்றான் ஜெகன்.

“ஓகே… லெட்ஸ் ஸ்டார்ட்” என்ற நான் கைவிரல்களை காமிரா போல் விரித்து கோணம் பார்த்தேன். “ஜெகன்… நீ அந்தத் தென்னைமர வளைவில் உட்கார்ந்துக்கணும். ஷ்ரவந்தி நீ புல்லுல உட்கார்ந்து, ஜெகன் மடில உன் தாடையை வெச்சுக்கிட்டுப் பேசணும்” என்றவுடன் அவர்கள் அவ்வாறே அமர்ந்தனர். நான், “ஆக்‌ஷன்…” என்றவுடன், ஷ்ரவந்தியின் முகத்தைப் பார்த்த ஜெகன் வெடித்துச் சிரித்து, “ஜோ… இந்த நாப்பது வயசு முகத்தைப் பார்க்குறப்ப எனக்கு ரொமான்ஸே வரலை” என்றான்.

“எனக்கு மட்டும் உங்க 50 வயசு முகத்தைப் பாத்து ரொமான்ஸ் வருமா?” என்றாள் ஷ்ரவந்தி சிணுங்கலுடன். “ப்ளீஸ்… பீ சீரியஸ்” என்று நான் கோபத்துடன் கத்தினேன். அவர்கள் ஒரு வினாடி என்னை ஆச்சர்யத்துடன் பார்த்துவிட்டு, வசனத்தைப் பேச ஆரம்பித்தனர்.

ஜெகன், “மதுவந்தி… காலைல ஆறு மணிக்கு எழுந்திரிச்சவுடனே என்ன நினைப்ப?” என்றான்.

“உன்னை நினைச்சுட்டிருப்பேன்” என்றாள் ஷ்ரவந்தி ஜெகனின் கண்களைப் பார்த்தபடி.

“ஆறு பத்துக்கு.”

“உன்னை நினைச்சுட்டிருப்பேன். ஆறரை, ஏழரை, பத்தரை, ரெண்டு, எட்டு, ராத்திரி பத்து மணின்னு 24 மணி நேரமும் ஒரு செகண்ட்கூட விடாம உன்னைத்தான் நினைச்சுட்டிருப்பேன்”

ஷ்ரவந்தியை நெகிழ்ச்சியுடன் பார்த்த ஜெகன், “நான்னா அவ்வளவு இஷ்டமா?” என்றான்.

“வெறும் இஷ்டம் இல்லை.  இஷ்டம்2. உனக்கு?”

“இஷ்டம்3.''

“கட் இட். டேக் ஓகே” என்றேன். மதுவந்தி படம் வெளிவந்த சமயத்தில், தமிழ்நாட்டில் காதல் கடிதம் எழுதுபவர்கள் எல்லாம், தங்கள் காதலைக் காதல்2, லவ்3, இஷ்டம்4 என்றுதான் தெரிவித்தார்கள்.
“ `மதுவந்தி' படத்துல மட்டும், டயலாக்லாம் எப்படி சார் அவ்ளோ ரொமான்ஸா இருந்துச்சு?” என்ற ஷ்ரவந்தியைப் பார்த்து மனதிற்குள், “ஒரு கலைஞன் காதலில் இருக்கும்போது, அவன் தனது படைப்பாற்றலின் உச்சத்தில் இருப்பான் ஷ்ரவந்தி” என்றேன். அடுத்து வந்த இரண்டு நாள்களும், மதுவந்தி படப்பிடிப்பு நடந்த பல்வேறு இடங்களுக்குச் சென்று, அந்தத் திரைப்படத்தைப்பற்றியே பேசிக் கொண்டிருந்தோம்.

இன்று நாங்கள் கிளம்பவேண்டிய நாள். இரவு நான் கொச்சினில் விமானம் ஏறவேண்டும். மதியம் நானும், ஜெகனும் தண்ணியடித்துவிட்டுத் தூங்கிவிட்டோம். நான் எழுந்தபோது மாலை மணி நான்கு. ஜெகன் அசந்து தூங்கிக் கொண்டிருந்தான். தலை கடுமையாக வலித்தது. எழுந்து ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டு வெளியே வந்தேன்.

வெளியே, வரவேற்பறை சோபாவில் அமர்ந்திருந்த ஷ்ரவந்தியைப் பார்த்தவுடன் அசந்துபோனேன். ஷ்ரவந்தி குளித்துவிட்டு,   கேரளத்துப் பெண்கள்போல் சந்தன நிறச் சேலை உடுத்திக்கொண்டு, தலையில் முல்லைப்பூவுடன், நூறு தேவதைகள் ஒரே உடலில் குடியேறியது போல் அவ்வளவு அழகாக அமர்ந்திருந்தாள். என்னைப் பார்த்தவுடன், “பக்கத்துல இருக்கிற பகவதி கோயிலுக்குப் போறேன்.  நீங்களும் வர்றீங்களா?” என்றவுடன் மனம் பரபரத்தது. வந்து இரண்டு நாள்களில் இப்போதுதான் தனியாகச் செல்லப்போகிறோம். “இதோ…. பத்து நிமிஷத்துல வந்துடுறேன்” என்ற நான் குளித்து முடித்துவிட்டு,  வேட்டி சட்டை அணிந்துகொண்டு வெளியே வந்தேன்.

காயல் கரையின் ஒற்றையடிப் பாதையில் மெதுவாக நடக்க ஆரம்பித்தோம். மழை பெய்யப்போவதுபோல் வானம் நன்கு இருட்டியிருந்தது. தென்னைமரங்கள் காற்றில் லேசாக சலசலத்துக்கொண்டிருந்தன. ஒரு வீட்டு வாசலில், காயல் நீரில் ஒரு பெண் துணி துவைத்துக்கொண்டிருக்க…. அருகில் நான்கைந்து சிறுவர்கள் உற்சாகத்துடன் சத்தமிட்டுக் குளித்துக்கொண்டிருந்தனர்.

நான்,  “கடைசி வரைக்கும்  சின்னப்பசங்களாவே இருந்துட்டா பிரச்னையில்லல்ல? அதுவும் சினிமாக்காரனா ஆகியிருக்கவே கூடாது ஷ்ரவந்தி.  சினிமாவில் ஜெயிக்கிறது, இமயமலையில ஏறுற மாதிரி. எப்படியோ கஷ்டப்பட்டு உச்சியில ஏறிடுறோம். ஆனா ஏறின பிறகு அங்கேர்ந்து இறங்கவே கூடாது. கடைசி வரைக்கும் ஜெயிச்சுக்கிட்டு அங்கயே இருக்கணும். இல்லைனா உச்சியில இருக்கிறப்பவே செத்துப்போயிடணும். இப்ப நான் மலை உச்சியிலேர்ந்து இறங்கிட்டிருக்கேன். Its painful” என்றேன்.

“ஜோ சார். நீங்க மலையிலேர்ந்து இறங்கிட்டு தான் இருக்கீங்க. இன்னும் அடிவாரத்துக்கு வந்துடல. இப்போகூட நீங்க நினைச்சா மறுபடியும் திரும்பி மலை ஏற முடியும்.”
 
“எனக்கு நம்பிக்கை போயிடுச்சு. ஹார்வீங்கிறவரு ‘ஏஜ் அண்ட் அச்சீவ்மென்ட்’னு ஒரு புக் எழுதியிருக்கார். அதுல கவிஞர்கள் 26-31 வயசுலயும், நாவலாசிரியர்கள் 40-44 வயசுலயும், ஃபிலிம் டைரக்டர்ஸ் 35-39 வயசுலயும் ரொம்ப க்ரியேட்டிவிட்டியோட இருக்கிறதா சொல்றார்.”

“அது தப்பு. எனக்கு ரொம்பப் பிடிச்ச ‘சாகர சங்கமம்’ படம் எடுத்தப்போ, கே.விஸ்வநாத்தோட வயசு 53. பாலச்சந்தரோட பெஸ்ட் ஃப்லிம்ஸ்ல ஒண்ணான ‘சிந்துபைரவி’ எடுத்தப்போ பாலச்சந்தரோட வயசு 56. கல்கி அவரோட மாஸ்டர்பீஸான ‘பொன்னியின் செல்வன்’ எழுதினப்போ அவருக்கு வயசு 50-க்கு மேல.”

“அப்புறம் ஏன் மறுபடியும் மறுபடியும் தோக்குறேன்?” என்றவுடன் என்னை உற்றுப் பார்த்த ஷ்ரவந்தி, “தமிழ்நாட்டுல இன்னைக்கி ரோட்சைட் டீக்கடையில, ஒரு டீ எவ்ளோன்னு தெரியுமா?” என்றாள்.
“தெரியலை. என்ன…  அஞ்சு ரூபா இருக்குமா?”

“இல்லை. எட்டு ரூபாய். அதுதான் நம்ப சினிமாக்காரங்க பண்ற தப்பு, கொஞ்சம் வளர்ந்தவுடனே, ஒளிவட்டம் வந்துடுது, யாரும் அணுகமுடியாத ஒரு உச்சியில போய் உட்கார்ந்துக்கிறோம். சமகாலத்துல என்ன நடந்துட்டிருக்குன்னு தெரியறதே இல்லை. நாம எது செஞ்சாலும்,“அண்ணன்…  சூப்பர்’ங்கிற வனைத்தான் கூட வெச்சிருக்கோம்.”

“சரி… நான் இப்ப என்ன பண்றது?”

“இந்த மாதிரி நிறைய பயணம் போங்க. நிறைய புது மனிதர்களோட பழகுங்க” என்றபோது கோயில் வந்திருந்தது.

கோயிலிலிருந்து சந்தனத்தை நெற்றியில் வைத்தபடி வெளியே வந்தோம். “சந்தனத்தை எப்படி வெச்சுருக்கீங்க?” என்ற ஷ்ரவந்தி, இயல்பாக என் நெற்றி சந்தனத்தை சரி செய்தபோது, எனக்குக் காற்றில் பறப்பதுபோல் இருந்தது. 

மதுவந்தி - சிறுகதை

“ஷ்ரவந்தி… இப்படியே கொஞ்சம் தூரம் நடந்துபோனா, மதுவந்தியோட க்ளைமாக்ஸ் சூட் பண்ண மூங்கில்பாலக்கரை வந்துடும். போலாமா?” என்றேன். “ஷ்யூர்…” என்ற ஷ்ரவந்தி உற்சாகத்துடன் நடக்க ஆரம்பித்தாள். சிறிது தூரத்தில், அந்த மூங்கில்பாலக்கரை வந்தபோது, வானம் நன்கு இருட்டிவிட்டது. ‘மதுவந்தி’ க்ளைமாக்ஸில், கதாநாயகனின் உடலை போலீஸ் படகில் ஏற்றிக்கொண்டு செல்வார்கள். அப்போது மதுவந்தி அழுதுகொண்டிருந்த கரையில் இப்போது நின்றபோது, மனசுக்குள் ஏதேதோ செய்தது. ஷ்ரவந்திக்கு ‘சிறந்த நடிகை’ விருது வாங்கித் தந்த நடிப்பு அது. ஷ்ரவந்தியின் முகத்திலும் அந்தத் தவிப்பு தெரிந்தது.

எந்நேரத்திலும் மழை பெய்யலாம் போல இருந்தது. எதிரே படகு ஸ்டாப்பில், அரசுப் படகு நின்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பிறகு, அங்கு ஒரு ஜீவனும் இல்லை. இப்போது லேசாகத் தூற ஆரம்பித்தது. காயலின் மேல் சென்ற  மூங்கில் பாலத்தில்,  ஒரு முதிய பெண்மணி மட்டும் குடையை விரித்தபடி நடந்துகொண்டிருந்தாள். இருவரும் ஒன்றும் பேசாமல் தூறலில் நனைந்தபடி காயலையே பார்த்துக்கொண்டிருந்தோம். மழை வலுக்க, “ஜோ சார்… மழை பெருசாகுது. இங்க ஒதுங்கக்கூட இடமில்லை” என்றாள்.

“அந்த மூங்கில் பாலத்துக்குக் கீழ, ஒரு படகு கட்டிப்போட்டுருக்காங்க பாரு. அங்க போயிடலாம்” என்று நான் வேகமாக நடந்தேன். இருவரும் படிக்கட்டு நீரில் இறங்கி, மூங்கில் பாலத்துக்குக் கீழே கட்டப்பட்டிருந்த அந்தப் படகில் ஏறி அமரவும், மழை நன்கு வலுக்கவும் சரியாக இருந்தது. படகு லேசாக நீரில் ஆடிக்கொண்டிருக்க, பாலத்தின் இரு பக்கத்திலிருந்தும் மழைநீர் எங்கள் மேல் சாரலாகத் தெளித்தது. சட்டென்று தலையை பாலத்துக்கு வெளியே நீட்டி, முகத்தில் நீரை வாங்கிய ஷ்ரவந்தி, திரும்பி என்னைப் பார்த்து, “தேங்க்யூ சார். எனக்கு ஒரு பெரிய படத்தைக் கொடுத்தீங்க. பெரிய வாழ்க்கையைக் கொடுத்தீங்க” என்றாள்.
“நான்தான் உனக்கு தேங்க்ஸ் சொல்லணும் ஷ்ரவந்தி. உன்னப் பார்க்கிறதுக்கு முன்னாடி வரைக்கும், எந்தக் கதையும் என் மனசுல இல்லை. உன் கண்ணைப் பார்த்தவுடனே தோணுன கதை அது” என்றபடி எழுந்து நின்றுகொண்டேன். ஷ்ரவந்தியும் எழுந்து, “அப்படியா?” என்று என்னை ஆழமாகப் பார்க்க, தவித்துப்போன நான், ”ஏய்… அப்படிப் பார்க்காத” என்று தலையைக் குனிந்துகொண்டேன்.

“ஏன் பார்க்கக் கூடாது?” என்ற ஷ்ரவந்தி முழங்காலை லேசாக மடக்கி, லேசாகக் குனிந்து, கீழேயிருந்து தன் அழகிய கண்களை உயர்த்தி என்னைப் பார்த்தபடி, காதில் ஜிமிக்கிகள்  அசைந்தாட, மீண்டும், “ஏன் பார்க்கக் கூடாது?” என்று கேட்க என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மதுவந்தி படப்பிடிப்பு நடந்த அத்தனை நாட்களிலும், பிறகு எத்தனையோ முறை ஷ்ரவந்தியைப் பார்த்தபோதும், அவளிடம் எனது காதலைச் சொல்லவேண்டும் என்று தோன்றியதே இல்லை. ஆனால் ஒரு தோற்றுப்போனக் கலைஞனாக உலவிக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், அனைவராலும் கைவிடப்பட்ட இந்தத் தருணத்தில்,எனது காதலைச் சொல்லிவிடவேண்டும் போலத் தோன்றியது.

தனது கண்களைக் கொஞ்சம்கூட இமைக்காமல், “ஏன்… பார்த்தா என்ன?” என்று ஷ்ரவந்தி கேட்டதுதான் தாமதம். சட்டென்று உணர்ச்சி வசப்பட்ட நான், “ஷ்ரவந்தி… உனக்கு ஒண்ணு தெரியுமா? நான் அப்ப உன்னை லவ் பண்ணிட்டிருந்தேன்” என்று தடாலடியாகக் கூறிவிட்டேன். அப்போது ஷ்ரவந்தியின் கண்களில் ஏற்பட்ட உணர்ச்சிக்கு, என்ன பெயர் வைப்பது என்றே எனக்குத் தெரியவில்லை. அப்படியே என்னைப் பார்த்தபடி நிமிர்ந்து நின்றாள்.

“அப்ப ஒவ்வொரு செகண்டும், உன்னை இடைவிடாம லவ் பண்ணிக்கிட்டேயிருந்தேன். இங்க ஷீட்டிங் நடந்த அந்த 80 நாளும், இன்னும் என் மனசுல அப்படியே இருக்கு ஷ்ரவந்தி. அதுல ஒரு நாளைக்கூட என்னால கிழிச்சுத் தூக்கிப்போட முடியல. ஒவ்வொரு நாளும் நீ போட்டிருந்த ட்ரெஸ், திடீர்னு உன் தலைக்கு மேலிருந்து தேங்காய் விழுந்தவுடனே நீ பயந்து போய் ஓடினது, நீ காயல்ல வாழைமட்டையில மிதந்துக்கிட்டு எதிர்க்கரைக்குப் போனது, நீ சாப்பிட்டது, சிரிச்சது, ஷீட்டிங் பிரேக்ல தூங்கினது அத்தனையும் இன்னும் இந்த நெஞ்சுக்குள்ளேயே இருக்கு. அநேகமா ஒரு வார்த்தையில்கூட தன் காதலைச் சொல்லாமலேயே, என் அளவுக்கு ஒரு பொண்ண நேசிச்சவன் உலகத்துலயே இருக்க மாட்டான் ஷ்ரவந்தி” என்று உணர்ச்சிகரமாக பேசி முடித்துவிட்டு வேகமாக ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைக்க முயற்சித்தேன். சிகரெட்டை பற்ற வைக்க முடியாமல் கைகள் நடுங்கின.

ஷ்ரவந்தி லைட்டரை வாங்கி என் சிகரெட்டைப் பற்றவைக்க நான் திரும்பி வேகமாகப் புகையை விட்டேன். நான் திரும்பிய திசைக்கு வந்து நின்றுகொண்ட ஷ்ரவந்தி, என் கண்களை உற்றுப் பார்த்தபடி, “நீங்க என்னைக் காதலிச்சுக் கிட்டிருந்தது எனக்குத் தெரியும் ஜோ சார்” என்றபோது நான் ஆச்சர்யத்துடன் ஷ்ரவந்தியைப் பார்த்தேன். மழைத்துளிகள் சாரலாக அவள்  முகத்தில் விழுந்துகொண்டிருந்தன.

“உங்க இதயத்துக்குள்ள மறைச்சு வெச்சுக்க முடிஞ்ச காதலை, உங்க கண்ணால மறைக்க முடியலை ஜோ சார். ஒவ்வொரு நாளும் நான் ஷீட்டிங் ஸ்பாட் வந்தவுடனே, உங்க கண்ணுல தெரிஞ்ச அந்த மலர்ச்சியை, அதுக்குப் பிறகு இன்னைக்கு வரைக்கும், நான் வேற யாரு கண்ணுலேயும் பார்த்ததே இல்லை ஜோ சார். அதே மலர்ச்சியை இப்போ கொச்சின் ஏர்போர்ட்லேயும் உங்க கண்ணுல பார்த்தேன். உங்களுக்கு ஒண்ணு தெரியுமா சார்?''

“என்ன?”

மதுவந்தி - சிறுகதை

மழைநீர்த் துளிகள் முகத்தில் வழிய, என்னை சில வினாடிகள் உற்றுப் பார்த்த ஷ்ரவந்தி, “அப்ப நானும் உங்களை லவ் பண்ணிக்கிட்டிருந்தேன் ஜோ சார்” என்று தனது மகா அற்புதமான கண்களில் காதல் வழியக் கூறியபோது, நான்  ஆடிப்போய்விட்டேன். சந்தோஷத்தில் என் கால்கள் மெலிதாக நடுங்கின. “கடவுளே” என்று சிகரெட்டை நீரில் வீசியெறிந்தேன். தொடர்ந்து ஷ்ரவந்தி, “ஒவ்வொரு காதல் காட்சியும், அவ்வளவு நுணுக்கமான ரசனையோட எடுத்த ஒரு படத்தை அதுக்குப் பிறகு நான் பார்க்கவே இல்லை. அந்தப் படத்துல வொர்க் பண்ணிக்கிட் டிருந்த நாள்கள்ல உங்க கண்ணுல ஒரு காதலும், கலையும் கலந்த வெறியைப் பார்க்க முடிஞ்சது. அந்தக் காதலும், கலையும்தான் உங்களைக் காதலிக்க வெச்சது. ஆனா உங்களுக்கு கல்யாண மாயிருந்தது. என்ன பண்ண முடியும்?” என்று பேச்சை நிறுத்தினாள். என் நெஞ்செல்லாம் சந்தோஷம் ததும்பி வழிய, “ஷ்ரவந்தி” என்று அவள் தோளைப் பிடித்தேன்.

“ஸ்டில் ஐ லவ் யூ ஃப்ரம் தி பாட்டம் ஆஃப் மை ஹார்ட்” என்ற ஷ்ரவந்தியை அப்படியே இழுத்து அணைத்துக்கொண்டேன். என்னை அறியாமல் என் கண்களிலிருந்து வழிந்த கண்ணீர், ஷ்ரவந்தியின் பின்கழுத்தில் பெய்த மழைநீரில் கலந்தது. இருவரும் பேசாமல் அப்படியே கட்டிப்பிடித்தபடி நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தோம். எவ்வளவு நேரம் நின்றோம் என்றே எங்களுக்குத் தெரியவில்லை. சாரல் துளிகள் விடாமல் முதுகில் அடித்துக் கொண்டேயிருந்தன.

சில நிமிடங்களுக்குப் பிறகு என் தோளிலிருந்து விலகிக்கொண்ட ஷ்ரவந்தி, “நாம கிளம்பலாம் ஜோ சார். ஆனா இந்தக் காதல் கதை இப்போ, இந்தப் படகோட முடிஞ்சுடட்டும். இதுக்கு மேலே போனா, ரெண்டு பேரும் ரொம்பக் கஷ்டப்படுவோம். ஆனாலும் என் காதலை ஏன் சொன்னேன்னா, உங்ககிட்ட சொல்லாம இருந்தது,  இந்த வாழ்க்கையை ஏதோ குறையோடவே வாழ்ந்துட்டிருக்கிற மாதிரி இருந்துச்சு. இப்போ அது சரியாகிடுச்சு.”

மதுவந்தி - சிறுகதை

“எனக்கும் இப்போ அப்படியே புதுசா பிறந்த மாதிரி ஆகிடுச்சு. மறுபடியும் 18, 20 வயசுக்குள்ள போன மாதிரி இருக்கு.. உடம்புக்குள்ள ஒரு புது எனர்ஜி ஊறுது. மதுவந்தி பார்ட் 2 எடுக்கலாம்னு பார்க்கிறேன்” என்றேன் உற்சாகத்துடன்.

“நீங்க மறுபடியும் மலையில ஏற ஆரம்பிச்சுட்டீங்க ஜோ சார்.”

“நீதான் என் கையைப் பிடிச்சு, மறுபடியும் மலையில ஏத்திவிட்டிருக்க” என்ற என்னை, உலகிலுள்ள அனைத்துக் காதலர்களின் நேசத்தையும் தன் கண்களில் சுமந்தபடி பார்த்தாள் ஷ்ரவந்தி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism