Published:Updated:

சிறியவர்களும் பெரியவர்களும்! - சிறுகதை

சிறியவர்களும் பெரியவர்களும்! - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறியவர்களும் பெரியவர்களும்! - சிறுகதை

சிறுகதை: இமையம், ஓவியம்/ஹாசிப்கான், படங்கள்/ஆ.வின்சென்ட் பால்

சிறியவர்களும் பெரியவர்களும்! - சிறுகதை

சிறுகதை: இமையம், ஓவியம்/ஹாசிப்கான், படங்கள்/ஆ.வின்சென்ட் பால்

Published:Updated:
சிறியவர்களும் பெரியவர்களும்! - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறியவர்களும் பெரியவர்களும்! - சிறுகதை

“புதுசா வந்து இருக்கீங்க.  நல்லா நடத்துங்க.  தூரமா இருக்கு, கிராமமா இருக்குன்னு நெனக்காதீங்க.  இந்த ஊருல இட்லி கட, டீ கடனு ஒண்ணும் கெடயாது. ஒரு வாரத்துக்கு காட்டுல வுட்ட மாரிதான் இருக்கும். அப்புறம் பழகிக்கும்!'' என்று சொன்ன தலைமை ஆசிரியர் பொடி போட்டார். சர்சர்ரென்று மூக்கை உறிஞ்சினார். கையை உதறிவிட்டுக்கொண்டு இரண்டு முறை தும்மினார். பிறகு, 

  ''இங்க நான் வந்து எட்டு வருசமாவுது. மிடில் ஸ்கூலா அப்கிரேடு ஆனப்ப வந்தன். இன்னம் ஆறு வருசம்தான் இருக்கு. ரெண்டாயிரத்து பதினெட்டுல ரிட்டயர்மண்டு!'' என்று சொல்லிவிட்டு கர்ச்சீப்பை எடுத்து மூக்கைச் சிந்தினார். ''நான் இங்க வந்தப்ப முந்நூத்தி எம்பது புள்ளங்க இருந்துச்சி. இப்ப வெறும் நூத்தி இருவதுதான். சனங்ககிட்ட பணம் வந்துடுச்சி. அரசாங்க பள்ளிக்கூடம் வாணாமின்னுட்டு ஓடுதுவா. அரசாங்கம் சரியில்ல. அதனால பள்ளிக்கூடமும் சரியில்ல. இன்னம் எவ்வளவு காலத்துக்கு அரசாங்கப் பள்ளிக்கூடம் இருக்குமின்னு சொல்ல முடியாது!''  என்று சொன்னார். பிறகு அவரே, 'இதுக்கு முன்னாடி எங்கியாச்சும் வேல பாத்துக்கிட்டு இருந்தீங்களா?'' என்று கேட்டார்.

சிறியவர்களும் பெரியவர்களும்! - சிறுகதை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'விருத்தாசலத்தில மகாத்மா காந்தி மெட்ரிக் ஸ்கூல்ல வேல பாத்துக்கிட்டிருந்தன் சார்.'

'எத்தன வருசமா?'

'ஆறு வருசம் சார்.'

'சம்பளம் எவ்வளவு வாங்குனீங்க?'

'ஆரம்பத்தில ரெண்டாயிரம்தான் கொடுத்தாங்க.'

'இங்க நீங்க வாங்கப் போறது இருபத்தி நாலாயிரம்...'

'ஓ...'

'மெட்ரிக்ல நீங்க வேல செஞ்சதில இங்க நூத்தில ஒரு பங்கு செஞ்சாலே போதும்' என்று சொன்ன தலைமை ஆசிரியர் லேசாகச் சிரித்தார். அப்போது ஒரு பையன் ஓடி வந்து, 'தினேஷ் எங்கம்மாவ இயித்து கெட்ட வாத்த சொல்லித் திட்டுறான் சார்' என்று சொன்னான்.

'ஒங்களோட ஒரே எழவாப் போச்சி.  செத்த நேரம் பேச வுடுறீங்களாடா?  ஒங்ககிட்ட கத்திக் கத்தியே என்னோட தொண்ட ஆவி போயி டிச்சிடா. போ!  போயி ஒழுங்கா ஒக்காரு.  இந்தா வரன்' என்று சொன்னார் தலைமை ஆசிரியர்.

தயக்கத்துடன், 'நான் வேணுமின்னா அந்த கிளாசைப் பாத்துக்கிட்டுமா சார்?' என்று பாக்கியராஜ் கேட்டான்.  கடகடவென்று சிரித்த தலைமை ஆசிரியர், 'வாத்தியாருன்னா இப்பிடித்தான் இருக்கணும். சந்தோசம். ந்தா, மொதல்ல இருக்கில்ல எட்டாவது... அதுக்குப் போங்க.  இன்னிக்கிப் பாத்து ரெண்டு பேரு லீவ், ரெண்டு பேருக்கு ட்ரெயினிங். ஆபீசில ஒரு புள்ளி விவரம் கேக்குறான்.  அதெ நான் ரெடி பண்றன்' என்று சொல்லிவிட்டு மீண்டும் பொடிபோட ஆரம்பித்தார்.  பாக்கியராஜ் எழுந்து எட்டாம் வகுப்புக்குள் நுழைந்தான்.

வகுப்பறையைப் பார்த்ததுமே பகீர் என்றிருந்தது. பத்து மாணவிகள், எட்டு மாணவர்கள்தான் இருந்தனர்.  அதிர்ச்சியடைந்த பாக்கியராஜ் 'மொத்தமே இவ்வளவுதானா?' என்று கேட்டான்.

'இன்னம் நாலுபேரு வரல சார்' என்று ஒரு பையன் சொன்னான்.

'வருவாங்களா?'

'மூணு பேரு என்னிக்காச்சும் வருவாங்க.  மோனிகா மட்டும் வராது சார்.'

'ஏன்?'

'அவுங்கம்மாகூட வடநாட்டுக்குப் போயிடிச்சி சார்.'

'சரி ஒவ்வொருத்தரா எழுந்து பேரச் சொல்லுங்க' என்று பாக்கியராஜ் சொன்னதும், மாணவ மாணவிகள் வரிசையாகத் தங்களுடைய பெயர்களைச் சொன்னார்கள்.

'ஒரு இங்கிலிஷ் புக் கொடுங்க' என்று கேட்டதும் மூன்று நான்கு பேர் ஒரே நேரத்தில் ஓடிவந்து புத்தகத்தை கொடுத்தனர். ஒரு புத்தகத்தை மட்டும் வாங்கிக்கொண்ட பாக்கியராஜ் 'எதுக்கு மொத்தமா ஓடியாறீங்க?' என்று கேட்டுவிட்டு புத்தகத்தைப் புரட்டினான்.  திடீரென்று நினைவுக்கு வந்த மாதிரி 'இதுவர எத்தன பாடம் நடந்திருக்கு?' என்று கேட்டான். பையன்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.  பையன்கள் பேசாததால் திரும்பவும் கேட்டான். பையன்கள் வாயைத் திறக்கவில்லை.  மீண்டும் கேட்டபோதுதான், 'இங்கிலீஸ் பாடமெல்லாம் அவ்வளவா நடக்காது சாரு' என்று சொன்னான்.

'ஏன்?' என்று கேட்டான் பாக்கியராஜ். பையன்கள் சொல்லி வைத்ததுமாதிரி பேசாமல் இருந்தனர்.

'இங்கிலீஷ் கிளாசில என்னா நடத்துவாங்க?'

'ஏ, பி, சி, டி எழுதச் சொல்வாங்க சார். இல்லன்னா போயம் எழுதச்சொல்லு​வாங்க சார்' என்று ஒரு பையன் சொன்னான்.

பையன் பொய் சொல்கிறானோ... ஆகஸ்ட் மாதம்வரை எப்படி ஒரு பாடம்கூட நடத்தாமல் இருப்பார்கள் என்று பாக்கியராஜ் சந்தேகப்பட்டான். பிறகு புத்தகத்தை ஒவ்வொரு பக்கமாகப் புரட்ட ஆரம்பித்தான்.  அப்போது ஒரு பையன் எழுந்து நின்று, 'எங்கம்மா கூப்புடுது சார்' என்று சொன்னான்.  பாக்கியராஜ் வாசல் பக்கம் பார்த்து, 'யாருமில்லியே' என்றான்.

'இங்க, சன்னலுகிட்ட நிக்குது சார்.'

'ஸ்கூல்ல வந்து சன்னல் வழியா கூப்புடுறது என்னா பழக்கம்?  இங்க வரச்சொல்லு' என்று சொன்னான் பாக்கியராஜ்.  பையன் முகத்தைச் சுளித்துக் கொண்டு கோபமாக சன்னல் பக்கம் கையைக் காட்டி ஏதோ சொன்னான்.  அந்த பெண் வந்து வாசலில் நின்றாள்.  இடுப்பிலிருந்த குழந்தை கத்திக்கொண்டிருந்தது.  'நேரா வந்து கூப்புடுறதுக்கு என்னா?' என்று பாக்கியராஜ் கேட்டான். அவனுக்கு பதில் சொல்லாமல் பையனிடம் 'ஊட்டுல சாவிய வைக்காம எதுக்குடா எடுத்தாந்த? கொண்டா சாவிய' என்று சொல்லி கேட்டாள். பையன் தயங்கியபடியே சாவியைக் கொடுத்தான்.  பாக்கியராஜை பொருட்படுத்தாமல், பையனைத் திட்டிக் கொண்டே அந்தப் பெண் போய்விட்டாள்.  நின்றுகொண்டிருந்த பையனை, 'போயி ஒக்காருடா' என்று சொல்லி முறைத்துவிட்டு மீண்டும் புத்தகத்தைப் புரட்ட ஆரம்பித்தான். அவனுடைய கவனம் புத்தகத்தில் பதியவில்லை. பதில் சொல்லாமல் போன பெண் மீது கோபம் உண்டாயிற்று.

சிறியவர்களும் பெரியவர்களும்! - சிறுகதை

புத்தகத்தைப் புரட்டிக்கொண்டே வரும்போது  ‘ How the little kite learn to fly’ என்ற கவிதை கண்ணில் பட்டது.  கவிதையைப் படித்தான்.  கவிதை பிடித்து இருந்ததால் அதை நடத்தலாம் என்று முடிவெடுத்து, 'சாக்பீஸ் இருக்கா?' என்று கேட்டான்.  திடுதிடுவென்று நான்கு ஐந்து பையன்கள் வெளியே ஓடி தலைமை ஆசிரியரிடமிருந்து சாக்பீஸை வாங்கிக்கொண்டு வந்தனர். சாக்பீஸை வாங்கிய பாக்கியராஜ், 'ஒருத்தன் போனாப் போதும். புரியுதா? இனிமே இத்தன பேரு ஓடக் கூடாது' என்று சொல்லிவிட்டு கவிதையின் தலைப்பை போர்டில் எழுதிவிட்டு, பட்டங்கள் பற்றி பேசினான்.  அப்போது 'விஜய்... விஜய்..' என்று கூப்பிட்டுக்கொண்டே ஒரு ஆள் வந்து வாசலில் நின்றுகொண்டு, 'இங்க வாடா' என்று கூப்பிட்டான்.  விஜய் எழுந்து நின்றான்.  பாக்கியராஜையும், அவனுடைய அப்பாவையும் மாறிமாறி பார்த்தான்.

'என்னா விசயங்க?' என்று பாக்கியராஜ் கேட்டான்.  அவனுக்குப் பதில் சொல்லாமல்,  'வாடா!  வந்து தம்பியப் புடி.  நான் போயி பயிறு கட்ட தூக்கியாரணும்' என்று சொன்னான் அந்த ஆள்.  பாக்கியராஜுக்கு ஒன்றும் புரியவில்லை.  'என்னா சொல்றீங்க?' என்று அந்த ஆளிடம் கேட்டான்.

'வயக்காட்டுல ஆளுவோ பயிறு நட்டுக்கிட்டு இருக்கு சாரு.  பயிறு பத்தல.  ஒரு எடத்தில கேட்டன்.  நாலு கட்டு இருக்கு, வான்னு சொன்னாங்க. நானும் எம் பொண்டாட்டியும் ரெண்டு நடயா போனாத்தான் பயிறு கட்டு வந்து சேரும்.  நடவும் முடியும். அதான் புள்ளய செத்த பாத்துக்கச் சொல்லிட்டு போவ வந்தன்' என்று சொன்னதோடு விஜயிடம் மூன்று நான்கு வயது குழந்தையைக் கொடுத்தான்.

'எட்டாவது படிக்கிற பையன்கிட்ட, அதுவும் பள்ளிக் கூடத்தில கொண்டாந்து புள்ளய கொடுக்கிறீங்க...  என்னா பழக்கம் இது?'

'செத்த நேரம்தான் சாரு. திரும்பி வந்து எம் பொண்டாட்டி புள்ளய வாங்கிக்குவா.'

'புள்ள கத்துமே.'

'அதெல்லாம் கத்தாது சாரு.  சாரு புதுசா. என்னா ஊரு?'

'புதுசுதான்.  புள்ளய வாங்கிக்கிட்டுப் போங்க' என்று பாக்கியராஜ் சொன்னான்.

'கண்ணு சிமிட்டுகிற நேரத்தில வந்துடுவா சாரு.  செத்த பொறுத்துக்குங்க.  ஆளுவோ காட்டுல நிக்குது' என்று சொல்லிவிட்டு அந்த ஆள் வேகமாக நடக்க ஆரம்பித்தான்.  அப்போது பாக்கியராஜுக்கு வந்த கோபத்துக்கு அளவே இல்லை. பிள்ளையுடன் நின்றுகொண்டிருந்த விஜயை முறைத்துப் பார்த்தான்.  இவன் முறைத்துப் பார்த்ததும் விஜயின் கண்கள் லேசாக கலங்கின.  ஒன்றும் செய்யத் தோன்றாமல், 'போ... போயி ஒக்காரு' என்று கோபத்துடனும், வெறுப்புடனும் சொல்லிவிட்டு மீண்டும் பாடத்தை  நடத்த ஆரம்பித்தான்.  நான்கு ஐந்து முறை கவிதையைப் படித்துக்காட்டி, விளக்கம் சொன்னான்.  பட்டம் எப்படிப் பறக்கிறது என்பதோடு, பறவைகள் எப்படிப் பறக்கின்றன, குழந்தைகள் எப்படி நடக்கின்றன என்பதை எல்லாம் சொல்லிவிட்டு, 'யாருக்கு படிக்கத் தெரியும்?' என்று கேட்டான்.  ரஞ்சித் என்ற பையன் மட்டும் எழுந்து நின்றான்.  ஓரளவுதான் அவன் கவிதையைப் படித்தான்.  அதனால் பாக்கியராஜ் மீண்டும் பல முறை கவிதையைப் படித்துக் காட்டினான்.  இடையில் 'தண்ணீ இருக்குமா?' என்று கேட்டான்.  'ஆபீஸ் ரூமில இருக்கு சார்' என்று ஒரே நேரத்தில் எல்லாப் பையன்களும் சொன்னார்கள்.  'போயி எடுத்துக்கிட்டு வா' என்றதுதான்... போட்டி போட்டுக்கொண்டு மூன்று நான்குபேர் வெளியே ஓடினார்கள்.  அவன் தனியார் மெட்ரிக் பள்ளியில் ஆறு வருடங்கள் வேலை செய்திருக்கிறான்.  ஒருநாள்கூட அவன் பிள்ளைகளிடம் வேலை எதையும் சொன்னதில்லை.  மீறி சொன்னாலும் செய்யமாட்டார்கள்.  பேசாமல் போய்விடுவார்கள்.  ஆனால், இங்கு ஆசிரியர் என்ன வேலை சொல்வார்கள் என்று காத்திருந்து போட்டி போட்டுக்கொண்டு செய்கிறார்கள்.  அவன் ஆறாவது படிக்கும்போது எப்படியிருந்தானோ, அதேமாதிரி இப்போதும் பையன்கள் இருக்கிறார்களே என்று ஆச்சரியப்பட்டான்.

தண்ணீரைக் குடித்த பாக்கியராஜ் பையன்களைப் பார்த்து 'எதுக்கு எப்பப் பாத்தாலும் மூணு நாலு பேருன்னு ஓடுறீங்க?  சொல்றவங்க மட்டும்தான் வெளிய போவணும்' என்று சொல்லிவிட்டு மீண்டும் பாடத்தை ஆரம்பித்தான்.  அப்போது பக்கத்து அறையில் ஒரே சத்தமாக இருந்தது.  பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு ஏழாம் வகுப்புக்கு போனான்.  பிள்ளைகள் ஓடியாடி விளையாடிக்கொண்டிருந்தனர்.  ஆசிரியர் மேஜை மீது தலை சாய்த்துத் தூங்கிக்கொண்டிருந்தார். பாக்கியராஜை கண்டதும் பிள்ளைகள் அமைதியாயின.  சத்தம் இல்லாததால் சட்டென்று விழித்துப் பார்த்த ஆசிரியர், 'என்ன சார் விசயம்?' என்று கேட்டார்.  பாக்கியராஜுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.  வேலையில் சேர்ந்த முதல் நாளே பிரச்னை வந்துவிடப்போகிறது என்று, 'சும்மாதான் சார் வந்தன்.  கிளாஸ் எப்படி இருக்குன்னு பாக்கலாமின்னு' என்று சொல்லி மழுப்பினான்.  

அதற்குள் எட்டாம் வகுப்பில் ஒரே சத்தமாக இருந்தது.  அதனால், 'வரன் சார்.  சத்தம் போடுறாங்க' என்று சொல்லிவிட்டுத் திரும்பி வந்தான்.  அப்போது ஒரு பெண் பிள்ளை வந்து, 'வரலாமா சார்' என்று கேட்டாள்.

'இங்க படிக்கிறியா?' என்று பாக்கியராஜ் கேட்டான்.  'ஆமாம்' என்பதுபோல அந்த பிள்ளை தலையை மட்டும் ஆட்டினாள்.  அவள் போட்டிருந்த உடை, நகை, வளையல், நக பாலிஷ், பொட்டு, பவுடர், தலை குஞ்சம், பூ, செருப்பு, பை எல்லாமே புதிதாக மட்டுமல்ல...  விநோதமாகவும் இருந்தன.  அவளை ஏற இறங்கப் பார்த்த பாக்கியராஜ், 'இவ்வளவு லேட்டா வர?' என்று கேட்டான்.

'எங்கம்மா வந்திருக்கு சார்.'

'ஒங்கம்மா எங்கிருந்து வந்திருக்காங்க?'

'வடநாட்டுலயிருந்து... ராத்திரிதான் வந்துச்சி.'

'வடநாட்டுல ஒங்கம்மா வேல பாக்குறாங்களா?'

'ம்'

'பேரென்னா?'

'ரஞ்சிதா!'

பாக்கியராஜுக்கு அடுத்து என்ன பேசுவது என்ற தெரியவில்லை  உட்காரச் சொல்வதா வெளியே அனுப்புவதா என்று குழம்பினான்.  நெற்றியை தடவிக்கொண்டே சலிப்புடன், 'போயி ஒக்காரு' என்று சொன்னான்.  புத்தகத்தை எடுத்து, 'சிறிய பட்டங்கள் எப்படி பறக்கின்றன என்றால்...' என்று சொன்னபோது ரஞ்சிதா குசுகுசுவென்று பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது. எல்லாப் பையன்களும், பிள்ளைகளும் அவளையே

பார்த்துக் கொண்டிருப்பதும் தெரிந்தது. அவனுக்கு கோபம் வந்து விட்டது.  'வந்ததே லேட்டு. இதுல பேச்சு வேற. அறிவு இருக்க வாணாம்?' என்று கேட்டதுதான்... ரஞ்சிதாவின் கண்களிலிருந்து பொல பொலவென்று கண்ணீர் கொட்டியது. முன்பைவிட இப்போதுதான் பாக்கியராஜுக்கு கூடுதலாகக் கோபம் உண்டாயிற்று.  'இப்ப என்ன கேட்டன்னு அழுவுற?' என்று சத்தமாகக் கேட்டான்.  முன்னைவிட இப்போது ரஞ்சிதாவின் கண்களில் கண்ணீர் அதிகமாக வர ஆரம்பித்தது.  அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.  நூற்றி இருபது பேர் மட்டுமே இருக்கக்கூடிய, அதிலும் பாதிக்குமேல் ஆப்சென்ட் ஆகி இருக்கிற, எல்லாவற்றுக்கும் மேலாகப் போக்குவரத்து வசதி இல்லாத, சரியான பட்டிக்காட்டில் தன்னை எதற்காக பணி நியமனம் செய்தார்கள் என்று அரசாங்கத்தை மனதுக்குள்ளேயே திட்டினான்.  எழுந்து நின்ற ரஞ்சிதாவை கோபத்துடன், 'உட்காரு' என்று சொன்னான்.  

பாக்கியராஜுக்கு பாடம் நடத்த முடியவில்லை.  அந்தப் பள்ளிக்கூடமே அவனுக்குப் பிடிக்காமல் போய்விட்டது.  அலுப்பும், சலிப்புமாக, 'போர்டுல எழுதியிருக்கிற தமிழ் மீனிங்ஸ எழுதுங்க' என்று சொல்லிவிட்டு நாற்காலியில் உட்கார்ந்தான்.  அப்போது 'ஒண்ணுக்கு' மணி அடித்தது. பிள்ளைகள் எல்லாம் வெளியே ஓடினர். ரஞ்சிதா மட்டும் எல்லாருக்கும் கடைசியாக எழுந்து வந்தாள்.  வகுப்புக்கு வந்தபோது அவளுடைய முகத்தில் இருந்த மலர்ச்சி இப்போது செத்துப்போய்விட்டிருந்தது. அவளைக் கூப்பிட்டு, 'எதுக்காக அழுவுற?' என்று பாக்கியராஜ் கேட்டான்.  ரஞ்சிதா பதில் பேசவில்லை.  மீண்டும் அழுது விடுவாள் மாதிரி தெரிந்தது.  அவளுடைய மனதை மாற்ற நினைத்து, 'ட்ரசெல்லாம் புதுசா?' என்று கேட்டான்.

'ம்.'

'வடநாட்டுல ஒங்கம்மா என்னா வேல செய்யுறாங்க?'

'ரயில்வேயில வேல'

'அங்கயிருந்து வாங்கியாந்ததா இதெல்லாம்?'

'ம்'

'வேற யாரெல்லாம் வந்து இருக்காங்க?'

'எங்கம்மா மட்டும்தான்.'

'உங்கப்பா?'

'அவுரு வரமாட்டாரு'

'ஏன்?'

'வேற பொம்பளகூட இருக்காரு'

'அப்பிடின்னா ஒங்கம்மா தனியாவா இருக்காங்க?'

'இல்ல.'

'பின்னெ?'

ரஞ்சிதா பேசவில்லை.  அவளுடைய முகம் மாறிவிட்டது.  தலையைக் கவிழ்த்துக்கொண்டாள்.  பாக்கியராஜுக்கு அவளிடம் பேசியிருக்க வேண்டாமோ என்று தோன்றியது.  வேலையில் சேர்ந்த அன்றே பெண் பிள்ளையுடன் பேசிக்கொண்டிருப்பதற்காக மற்ற ஆசிரியர்கள் ஏதாவது தவறாகப் பேசுவார்களோ என்ற கவலை வந்தது.  இருந்தாலும் 'இங்க யாருகூட இருக்க?' என்று கேட்டான்.

'எங்கம்மாவ பெத்த ஆயாகூட.'

'எப்பயிலிருந்து?'

'மூணாவது படிக்கிறப்பலயிருந்து.'

'ஒங்கப்பாவ பாப்பியா?'

'தீபாவளி, பொங்கலுக்கு, ஊர் திருநாவுக்கு வரும்போது ஏதாச்சும் பணம் கொடுப்பாரு'

'வாங்கிக்கிவியா?'

'நான் வாங்க மாட்டன்.  எங்க ஆயாதான் வாங்கும்.'

'ஒங்கம்மாகூட நீ போக வேண்டி யதுதான?'

'அது ஒரு ஆள கட்டிக்கிச்சி.  அதனால போவமாட்டன்'

சிறியவர்களும் பெரியவர்களும்! - சிறுகதை

பாக்கியராஜ் ரஞ்சிதாவை கூர்ந்து பார்த்தான்.  முகத்தில் எந்த விதமான சலனமுமில்லை. முன்பு அவளுடைய முகத்திலிருந்த  இறுக்கம் இப்போது குறைந்திருந்தது.  அவள் வருத்தப்படுவது மாதிரியோ சங்கடப்படுவது மாதிரியோ தெரியவில்லை. போட்டிருந்த உடையிலும் மற்ற பொருட்கள் சார்ந்தும் அவளுக்கு அதிகமான மகிழ்ச்சி இருப்பதாகத் தோன்றியது.  

'சாப்பாட்டுக்கு என்னா செய்ற?' என்று கேட்டான்.

'எங்க ஆயா வேலக்கி போவும்.  நானும் போவன் சார்.'

'நீயா?' என்று ஆச்சரியத்துடன் கேட்டான்.  எட்டாம் வகுப்பு படிக்கிற பிள்ளை என்ன வேலைக்குப் போக முடியும் என்று சந்தேகப்பட்டான்.

'கல்ல செடி புடுங்கப் போவன்.  பயிறு நடப் போவன்.  கரும்புக் கட்டுத் தூக்கப் போவன்.  காலாண்டு, அரயாண்டு, முழாண்டு லீவ்ல சித்தாள் வேலக்கி விருத் தாசலத்துக்குப் போவன்...'

'என்ன சொல்ற?' என்று கேட்டான். பக்கத்தில் நின்று கொண்டிருந்த பெண்,  'போவும் சார்' என்ற சிரித்துக்கொண்டே சொன்னாள்.  பாக்கியராஜுக்கு எதையுமே நம்ப முடியவில்லை.  விருத்தாசலம் குறைந்தது முப்பது கிலோ மீட்டர் தூரமாவது இருக்கும்.  எப்படிப் போய் எப்படி வர முடியும் என்று சந்தேகப்பட்டு கேட்டான்.  'நிசமாவே சித்தாள் வேலக்கிப் போயிருக்கியா?'

'போன சனி ஞாயிறு லீவுலகூட போனன் சார்.'

'இங்கேயிருந்து எப்பிடிப் போவ?'

'இங்கயிருந்து நடந்து நல்லூர் போயி, அங்க ஆறு மணி டவுனு பஸ் புடிச்சிப் போவம் சார்.'

'எப்ப வருவ?'

'ராத்திரி ஒம்போது மணி டவுனு பஸ்ஸில சார்' என்று சொன்ன ரஞ்சிதா சிரித்தாள்.  இதெல்லாம் ஒரு அதிசயமா என்பதுபோல் இருந்தது அவளுடைய சிரிப்பு.  

'நீ ஒங்கம்மா கூடவே போயிட்டா என்ன?'

'எனக்கு புடிக்காது.'

'அவுரு என்னா ஊரு?  தமிழ் ஆளா?'

'இந்த ஊருதான்.'  

'ஒங்கப்பா கட்டிக்கிட்டது?'

'வடநாட்டுக்காரி' என்று சிரித்துக்கொண்டே சொன்னாள்.  விசயம் புரிந்துதான் பேசுகிறாளா, புரியாமல் பேசுகிறாளா என்பது சந்தேகமாக இருந்தது.  பெரிய விசயத்தைச் சொல்லும்போதும் எப்படிச் சிரிக்க முடியும்?  அப்போது எல்.கே.ஜி. படிக்கிற தன்னுடைய மகனை ஆறு மணிக்கே எழுப்பி குளிக்க வைத்து, டை, ஷ§ எல்லாம் மாட்டிவிட்டு, சாப்பிட வைத்து ஏழு மணிக்கு நெய்வேலி ஜவஹர் பள்ளிக்குப் போகும் தனியார் வேனில் அனுப்பி வைத்தது நினைவுக்கு வந்தது.  

'வீட்டு வேலயெல்லாம் யாரு செய்வா?' என்று கேட்டான்.  

அதற்கு ரொம்ப உற்சாகத்துடன், 'நாந்தான் செய்வன்.  சோறு ஆக்குறது, ஏனம் கழுவுறது, ஊடு கூட்டுறது, தண்ணீர் எடுத்தாறது எல்லாம் நாந்தான் செய்வன்'

'ஒங்க ஆயா ஒண்ணும் செய்யமாட் டாங்களா?'

'அதுக்கு சரியா கண்ணு தெரியாது சார்' என்று சொன்னதோடு லேசாகச் சிரிக்கவும் செய்தாள்.  பக்கத்தில் நின்று கொண்டிருந்த இரண்டு மூன்று பிள்ளைகளும் சிரித்தன.

'ஒங்க அப்பாவ பெத்த ஆயா வீட்டுக்குப் போவியா?'

'போவமாட்டன்.'

'ஏன்?'

'எங்கம்மாவ எப்பப் பாத்தாலும் எங்க ஆயா திட்டிக்கிட்டே இருக்கும் சார்.'

'ஒங்கம்மா எப்பத் திருப்பிப் போவாங்க?'

'எங்க சின்னம்மா கண்ணாலத்துக்கு வந்திருக்கு.  கண்ணாலம் முடிஞ்சதும் போயிடும்.'

'கல்யாணம் என்னிக்கு?'

'நாளக்கித்தான் சார்.'

'திருப்பி எப்ப வருவாங்க?'

'பொங்கலுக்கு.'

'சரி போ' என்று சொல்லி விட்டு எழுந்து தலைமை ஆசிரியர் அறைக்கு வந்தான் பாக்கியராஜ். புது ஆசிரியர் என்பதால் அவனைப் பார்ப்பதற்காக பிள்ளைகள் வந்தனர். அப்போது ரஞ்சிதா போவதைப் பார்த்த தலைமை ஆசிரியர் அவளைக் கூப்பிட்டு, 'என்னா சினிமாக்காரி மாதிரி ஃபுல் மேக்கப்போட வந்து இருக்கிற?' என்று கேட்டார் அதற்கு சிரித்துக்கொண்டே,  'எங்கம்மா வந்திருக்கு சார்' என்று சொன்னாள்.  என்ன தோன்றியதோ... 'போ' என்று ரஞ்சிதாவை அனுப்பினான் பாக்கியராஜ். சூழ்ந்து நின்ற பிள்ளைகளையும் துரத்திவிட்டு, 'என்ன சார் அதிசயமான கதயெல்லாம் அந்தப் புள்ள சொல்லுது' என்று கேட்டான்.

'இதென்ன அதிசயம்.  இந்த ஊருல இன்னும் எம்மானோ இருக்கு.  காலாண்டு, அரயாண்டு, முழு ஆண்டுன்னு எப்பல்லாம் லீவு வுடுறமோ அப்பலாம் ஊர்க்கார பயலுவோ இங்க வந்துதான் பீடி, சிக ரெட்டு, பீர் பிராந்தியெல்லாம் குடிப்பானுவோ.  சன்னல், கதவ ஒடச்சி வச்சிருப்பானுவோ.'

'என்ன சார் சொல்றீங்க?'

'அட நீங்க வேற.  கக்கூஸே இருந்து வைப்பானுங்க!  பள்ளிக்கூடம் தொறக்கிறப்ப அதத்தான் மொதல்ல கிளீன் பண்ணணும்.  என்னா பண்ணித் தொலைக்கிறது?' என்று சொல்லிவிட்டு பொடி போட்டுக்கொண்டு மூன்று நான்கு முறை மூக்கை உறிஞ்சினார்.

'வரமுறை கெட்ட பயலுவோ இருக்கிற ஊரு சார் இது.  இப்ப அந்த ரஞ்சிதாவப் பாத்திங்கிள்ல? அவ அப்பனும் அம்மாளும் இந்த ஊருதான். அவ அப்பனுக்கு சொந்த அக்கா மவதான் அவ அம்மா. அப்பியே அவன கட்டிக்கமாட்டன்னு அந்தப் புள்ள சொல்லிச்சி. வலுக்கட்டாயமா கட்டி வச்சாங்க. கண்ணாலம் முடிஞ்ச கையோட வட நாட்டுக்குப் போனாங்க. மூணு நாலு வருசம்தான் போச்சி. அந்த நேரம் பாத்து உள்ளூர் பய ஒருத்தன் அங்கப் போனான். அவனுக்கும் ரஞ்சிதா அம்மாவுக்கும் தொடுப்பு ஆயிப் போச்சின்னு, அவன் வட நாட்டுக்காரி ஒருத்தியப் புடிச்சிக்கிட்டான்.  பிரச்சன முத்திப்போயி கடசியில, 'நீ இப்பிடிப்போ, நான் இப்பிடிப்போறன்'னு ஊர்ப் பஞ்சாயத்தில வெவகாரத்த முடிச்சிக்கிட்டாங்க.  ரஞ்சிதா அம்மாவுக்கு இப்ப ரெண்டு புள்ள இருக்கு.  அவ அப்பனுக்கும்  வடநாட்டுக்காரிக்கும் மூணு புள்ள இருக்கு.  யாரு என்னா சார் சொல்ல முடியும்?  ஊருன்னு இருந்தா பலதும் பல ரகமாத்தான் இருக்கும். குளமின்னு இருந்தா அதுல மீனு மட்டுமா இருக்கும்?  பாம்பு, நண்டு, நத்த, நாரைன்னு பலதும் இருக்குமில்லியா?  அந்த மாரிதான் இதுவும்.  ஊருல ஆயிரம் இருக்கும்.  நமக்கென்ன? நாம அரசாங்க குரங்கு.  பத்து மணிக்கு வந்தமா, நாலு மணிக்குப் போனமான்னு போயிடணும்' என்று சொல்லிவிட்டு லேசாகச் சிரித்தார்.  

அப்போது ஒரு பையனை கூப்பிட்டு, 'மணி அடிறா' என்று சொன்னார். மணி அடித்ததும் பிள்ளைகள் அந்தந்த வகுப்புகளுக்குள் ஓடின.  எட்டாம் வகுப்பிலிருந்து மூன்று பையன்கள் வந்து, 'சார் ரேசன் கடயில அரிசி போடுறாங்க. எங்கம்மா போவச் சொல்லுச்சு சார்' என்று சொன்னார்கள்.  'போயிட்டு வேல முடிஞ்சதும் வந்துருங்க...  அப்பிடியே ஊர்ச் சுத்தப் போயிடாதீங்க' என்று சொன்னதும் பையன்கள் மூவரும் வேகமாக ஓட ஆரம்பித்தனர்.

'என்ன சார் இது?' என்று தயக்கத்துடன் கேட்டான் பாக்கியராஜ்.  அதற்கு கடகடவென்று சிரித்த தலைமை ஆசிரியர், ''இன்னிக்கித்தான வந்து இருக்கீங்க.  எல்லாம் தன்னால பழகிக்கும்.  இன்னிக்கி அதிசயமா இருக்கிறது நாளக்கி ஒங்களுக்கு சகஜமா இருக்கும்' என்று சொல்லிவிட்டு பாட்டிலிலிருந்த தண்ணீரைக் குடித்தார்.  'பசங்க போயி எவ்வளவு நேரம் நிப்பாங்க?'

'என்னா செய்யச் சொல்லுறீங்க? கடய எப்ப தொறப்பான், என்னிக்கித் தொறப்பான்னு சனங்களுக்குத் தெரியுமா?  அதெ நம்பி ஊட்டுலியே தெனம் தெனம் குந்தியிருக்க முடியுமா? அதான் புள்ளங்ககிட்ட கொடுத்திட்டுப் போயிருப்பாங்க.  சட்டம், ரூல்ஸ்னு பேசி அத ஏன் நாம்ப கெடுக்கணும்? மீறி தடுத்தா ஊர்க்கார பயலுவோ ஒண்ணா திரண்டு கிட்டு வந்து 'ஆச்சா போச்சா’ம்பானுங்க. சனியன் எப்பிடியோ போவுதுன்னு வுட்டுட்டுப் போவ வேண்டியதுதான. மாசத்துக்கு சும்மா வர இருவத்தி அஞ்சி கிலோ அரிசிய நாம்ப கெடுத்தமின்னு பேராயிப் புடும் சார்' என்று சொல்லி விட்டுப் பொடி போட ஆரம்பித்தார்.

'எழுதப் படிக்கத் தெரியாதவங்க எப்பிடி சார் வட நாட்டுல வேல பாக்க முடியும்?'

'இந்த ஊருன்னு இல்ல. இந்தப் பக்கத்தில பாதிக்குப் பாதிப் பேரு வடநாட்டுலதான் வேல பாக்குறாங்க.  கூலி வேலதான செய்யுறாங்க.  ஆபீசு வேலயா?  மொழிப் பிரச்சினை வந்துடுச்சு?'

'நான் இப்ப எந்த வகுப்பு சார் போவணும்?'

'ஆறாவதிலதான் ஆளு இல்ல. அஞ்சாவதும் ஆறாவதும் ஒண்ணா இருக்கு.  இன்னிக்கி மூணு பேருதான் இருக்கம். எப்பிடி எட்டு கிளாஸப் பாத்துக்கிறது?  இதுல தெனம் தெனம் ஒரு புள்ளி விவரம் கேட்டு கழுத்த அறுக்கிறானுவ.'

'சரி சார்.  நான் ஆறாவத பாத்துக்கிறன்' என்று சொல்லிவிட்டு எழுந்து நடந்தான். பாக்கியராஜ் ஆறாம் வகுப்புக்குள் நுழையவும் இரண்டு பிள்ளைகள் வெளியே வரவும் சரியாக இருந்தது.  என்ன விசயம் என்று கேட்டான். 'ரேசன் கடக்கிப் போவணும் சார்'

பாக்கியராஜுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. 'போயி எச்.எம்-கிட்ட சொல்லி ட்டுப் போங்க' என்று சொல்லிவிட்டு நாற்காலியில் போய் உட்கார்ந்தான்.  'இங்கிலீஷ் புக் கொடுங்க' என்று கேட்டான்.  அப்போது 'ஸ்நேகா' என்று கூப்பிடுகிற சத்தம் கேட்டு வாசல் பக்கம் பார்த்தான்.  ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள்.  'என்னம்மா விசயம்' என்று கேட்டான்.

'காலயில எங்க பாப்பாகிட்ட புள்ளய வுட்டுட்டு  போனன்.  அதெ தூக்கிக்கிட்டுப் போவலாமின்னு வந்தன். சாரு புதுசா?' என்று கேட்டாள்.  அவளுக்குப் பதில் சொல்லாமல் 'ஸ்நேகா யாரு?' என்று கேட்டான்.  குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஒரு பிள்ளை வாசலுக்குப் போயிற்று.

பாக்கியராஜ் ஆங்கிலப் புத்தகத்தைப் புரட்ட ஆரம்பித்தான்.  பிஷீஷ்  tலீமீ றீவீttறீமீ ளீவீtமீ றீமீணீக்ஷீஸீ tஷீ யீறீஹ்  என்பது புரிய ஆரம்பித்தது.

சிறியவர்களும் பெரியவர்களும்! - சிறுகதை

''மன்னர் ஏன் அலங்கோலமா போறார்?''

 ''பெண் வேஷத்துல நகர்வலம் கிளம்பினவரை தளபதி நாசம் பண்ணிட்டாராம்!''

- அ.ரியாஸ்.

சிறியவர்களும் பெரியவர்களும்! - சிறுகதை

'' மன்னர் ரொம்ப மோசம்! ''

'' ஏன்!''

'' அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்க பணிப்பெண்களை டாப்-லெஸ்ல வரச் சொல்றார்!''

- அ.ரியாஸ்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism