Published:Updated:

சுவாதி முதல் ராம்குமார் வரை... - ஓராண்டு முடிந்தும் விலகாத மர்மங்கள்!

சுவாதி முதல் ராம்குமார் வரை... - ஓராண்டு முடிந்தும் விலகாத மர்மங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
சுவாதி முதல் ராம்குமார் வரை... - ஓராண்டு முடிந்தும் விலகாத மர்மங்கள்!

சுவாதி முதல் ராம்குமார் வரை... - ஓராண்டு முடிந்தும் விலகாத மர்மங்கள்!

ன் மரணத்தால் ஒட்டுமொத்த இந்திய சமூகத்தையும் உலுக்கினார் சுவாதி. ‘பொது இடங்களில் ஒரு பெண்ணுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லையா... ஒரு இளம்பெண் உதவி கேட்டு அபயக்குரல் எழுப்பும்போது யாருமே உதவிக்கு வர மாட்டார்களா... எவருக்கும் கேட்காமலே உதவி செய்யும் இயல்பான உணர்வை நம் சமூகம் எப்போது தொலைத்தது?’ என ஏராளமான கேள்விகள் அந்த நிமிடத்தில் எழுந்தன. ஆனால், அந்த வழக்கு விசாரணை தொடர்ந்த நாட்களில், இன்னும் ஏராளமான கேள்விகள் எழ ஆரம்பித்தன. கடந்த 2016 ஜூன் 24-ம் தேதி காலை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் சுவாதி. ஓராண்டு முடிந்த நிலையில், விடை தெரியாத கேள்விகளும் விலகாத மர்மங்களுமே சுவாதியின் மரணத்தைச் சூழ்ந்திருக்கின்றன.

சுவாதி கொலை வழக்கை ஆரம்பத்தில் ரயில்வே போலீஸ் விசாரித்தது. பிறகு தமிழக போலீஸ் வழக்கைக் கையில் எடுத்தது. நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் தேவராஜ் தலைமையில் 8 தேடுதல் குழுக்கள் அமைக்கப்பட்டன. எட்டாவது நாளில், ராம்குமாரைக் குற்றவாளி என அறிவித்து, கைது செய்தது போலீஸ். சுவாதி இறந்து சரியாக 87-வது நாள். ‘மின் கம்பியைக் கடித்து ராம்குமார் தற்கொலை செய்துகொண்டார்’ என்றது சிறை நிர்வாகம். சுவாதி கொலையில் குற்றவாளி ராம்குமார் இறந்துவிட்டதால், வழக்கை முடித்துக்கொண்டது காவல்துறை. நீதிமன்றமும் கடந்த பிப்ரவரி மாதம் இந்த வழக்கை முறைப்படி முடித்து வைத்துவிட்டது. ஆனால், ராம்குமார் மரணத்தையொட்டி புதுப் புது சந்தேகங்களை எழுப்புகிறது, ராம்குமாருக்கு நீதி வேண்டி போராடி வரும் முற்போக்கு வழக்கறிஞர் குழு.

சுவாதி முதல் ராம்குமார் வரை... - ஓராண்டு முடிந்தும் விலகாத மர்மங்கள்!

இதுகுறித்து நம்மிடம் பேசிய வழக்கறிஞர் மார்க்ஸ், ‘‘திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தில் ராம்குமார் கைதான உடனே, அப்போதைய சென்னை போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன், ‘தன்னைத் தேவாங்கு என்று திட்டியதால் கோபமுற்று சுவாதியை ராம்குமார் கொன்றுவிட்டார்’ என்றார். பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டதாகச் சொல்லப்பட்ட ராம்குமாரால் பேசவே முடியாது. அப்படியிருக்க எப்படி அவரால் இப்படியொரு வாக்குமூலம் கொடுத்திருக்க முடியும்? மேலும் கமிஷனரே இவ்வாறு கூறியதால், அடுத்து இந்த வழக்கை விசாரித்த போலீஸ் டீம், ராம்குமாரைக் கடந்து வேறு திசையில் விசாரணையைக் கொண்டு செல்லவில்லை. சுவாதிக்கு ஒரு இஸ்லாமியருடன் காதல் ஏற்பட்டு, அவர்களுக்கு பெங்களூரில் பதிவுத் திருமணமும் நடந்துள்ளதாகக் கேள்விப்பட்டோம். இதையொட்டி அங்கு ஒரு பஞ்சாயத்தும் நடந்ததாகச் சொன்னார்கள். இந்துத்வா அமைப்புகளும் இதில் களமிறங்கின. 90 நாள்கள் சிறைவாசத்துக்குப் பிறகு இயல்பாகவே ராம்குமாருக்கு ஜாமீன் கிடைக்க சட்டரீதியாக வாய்ப்பிருந்தது. ஆனால், வெளியே வந்தால் உண்மைகள் தெரிந்துவிடும் என்று, அதற்குச் சில நாள்கள் முன்பாக அவர் சிறையில் கொல்லப்படுகிறார். சுவாதி மரணத்தின் பின்னணியில் மிகப் பெரிய நெட்வொர்க்கே உண்டு’’ என நிறுத்தினார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சுவாதி முதல் ராம்குமார் வரை... - ஓராண்டு முடிந்தும் விலகாத மர்மங்கள்!

‘‘அதை விரிவாக நான் சொல்கிறேன்’’ என்று தொடங்கினார், ராம்குமாரின் வழக்குகளைப் பார்த்துவரும் வழக்கறிஞர் ராம்ராஜ். ‘‘சுவாதி, ராம்குமார் வழக்குக் குறித்து இதுவரை எந்த ஆவணங்களையும் கோர்ட் எங்களுக்குத் தரவில்லை. ராம்குமாரின் பிரேதப்பரிசோதனை அறிக்கையைக்கூட எங்களுக்குத் தரவில்லை. இதையொட்டி ‘அனைத்து ஆவணங்களையும் எங்களுக்கு வழங்க வேண்டும்’ என்று 20.3.2017 அன்று எழும்பூர் 14-வது நீதிமன்ற நீதிபதி கோபிநாத்முன் மனுதாக்கல் செய்தோம். ‘வழக்கின் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. அதனைச் சரிபார்த்துவிட்டு அழைக்கிறோம்’ என்று இரண்டு வாரங்களுக்கு வழக்கைத் தள்ளி வைத்தார். ஆனால், செய்தித்தாளில், ‘ராம்குமார் இறந்துவிட்டதால் வழக்கை முடித்து வைக்கக்கோரி அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்ற குற்றவியல் நடுவர், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்’ என்று செய்தி வெளியாகி இருந்தது. இதைச் சுட்டிக் காட்டி ஆவணங்களைக் கேட்டோம். இன்றுவரை எங்களுக்கு எந்த ஆவணங்களையும் தரவில்லை. ஒரு வழக்கு முடிந்துவிட்டால், அதுகுறித்த ஆவணங்களைத் தரவேண்டும் என்பது சட்டவிதி. ஆனால், ஏன் தர மறுக்கிறார்கள்? காரணம், இதன் பின்னுள்ள பகீர் விவகாரங்கள்தான்.

ராம்குமார் நிரபராதி என்பதை நிரூபிக்க, சுவாதி கொலை குறித்த உண்மைகளை அறியும் விசாரணையில் நாங்கள் இறங்கினோம். கிடைத்த தகவல்கள் எல்லாவற்றுக்கும் ஒரு சங்கிலித் தொடர்பு உண்டு.

சுவாதி பணியாற்றிய நிறுவனத்தில் முக்கியமான ஒருவருக்கு, ஹவாலா நபர்களுடன் தொடர்பு உள்ளது. அவரின் பரிவர்த்தனைகள் தொடர்பான சில முக்கியக் கோப்புகள் கொண்ட டிஸ்க் சுவாதியிடம் இருந்தது. இதைத் தேடி மிகப் பெரிய அளவில் ஒரு டீம் சுவாதியைச் சுற்றியபடியே இருந்துள்ளது.

சுவாதி மென்பொருள்களைக் கையாள்வதில் கைதேர்ந்தவர். ஆளும்கட்சித் தலைமைப் பீடத்தில் இருந்த ஒருவருக்குத் தெரியாமல், அவருடைய பன்னாட்டு வங்கிக் கணக்கில் இருந்து, அவருக்கு விசுவாசமாக இருந்த பெண்மணி ஒருவரே பணத்தை அபகரிக்கத் திட்டமிட்டார். இதைச் சாமர்த்தியமாக செய்து முடிக்க அந்தப் பெண்மணிக்கு ஒரு நிபுணர் தேவைப்பட்டார். அப்படி அந்த ‘விசுவாசமானவருக்கு’ இந்த விவகாரத்தில் உதவுவதற்காக அழைத்து வரப்பட்டார் சுவாதி. இது தலைமைப் பீடத்துக்குத் தெரிய வந்தபோது, சுவாதி எச்சரிக்கப்பட்டார்.

மூன்றாவது விஷயம், சுவாதிக்கும் இஸ்லாமியர் ஒருவருக்கும் நடந்த காதல் பதிவுத் திருமணமும், அதையொட்டி எழுந்த பஞ்சாயத்துகளும்.

சுவாதியின் படுகொலைக்கு மேற்கண்ட அனைத்துக்கும் நெருங்கிய தொடர்புண்டு. கூலிப்படைதான் சுவாதியைக் கொன்றது. போஸ்ட் மார்ட்டம் செய்த மருத்துவக் குழுவில் இருந்த நண்பர்கள், ‘ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு இந்தக் கொலையில் பங்கு இருக்கிறது’ என்று எனக்குச் சொன்னார்கள். இந்தக் கொலையில் பெரும் புள்ளிகள் தொடர்பும், மேலிடத்தில் இருந்துவந்த அழுத்தமும் ராம்குமாரைச் சிக்க வைத்துவிட்டது. வெளியே வந்தால் உண்மைகள் தெரிந்துவிடும் என்றே ராம்குமார் சிறைக்குள்ளேயே கொல்லப்பட்டார். இவை அனைத்துக்கும் எங்களிடம் வலுவான ஆதாரங்கள் உள்ளன. அவற்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் போகிறோம். சுவாதி, ராம்குமார் மரணங்களைத் தேசியப் புலனாய்வுக் குழு விசாரிக்க வேண்டும் என்றும் வழக்குத் தாக்கல் செய்ய உள்ளோம். ‘சுவாதி கொலை வழக்கு’ என்று ஒரு படம் தயாரானது. ‘காவல்துறையின் இயலாமையைத்தான் பதிவு செஞ்சுருக்கேன்’ என்று படத்தின் இயக்குநர் ரமேஷ் செல்வன் என்னிடம் சொன்னார். இது தெரிந்துதான் அந்தப் படத்துக்கு சுவாதியின் அப்பா தடை கேட்கிறார். காவல்துறையும் படத்தைத் தடை செய்ய முயல்கிறது’’ என்றார் அழுத்தம் திருத்தமாக.
வழக்கறிஞர் ராம்ராஜ் சொன்ன விஷயங்கள் குறித்து விளக்கம் பெறுவதற்காக உதவி ஆணையர் தேவராஜைத் தொடர்புகொண்டோம். ‘மீட்டிங்கில் இருக்கிறேன்’ என்று இரண்டு முறை கூறியவர், அதன்பிறகு நமது அழைப்பை ஏற்கவேயில்லை.

சுவாதி முதல் ராம்குமார் வரை... - ஓராண்டு முடிந்தும் விலகாத மர்மங்கள்!

சுவாதியின் நெருங்கிய நண்பராக அறியப்பட்ட பிலால் சித்திக்கிடம் பேசினோம். “எங்களை தயவுசெய்து நிம்மதியா இருக்க விடுங்க. சுவாதி மரணத்தில் சந்தேகம் இருப்பவங்க தாராளமா வழக்குப் போடுங்க. எங்களை விடுங்க. நான் எதுவும் பேச விரும்பல’’ என்றார் கெஞ்சல் தொனியில். சுவாதியின் முதலாமாண்டு அஞ்சலி நிகழ்ச்சியில் இருந்ததால் சுவாதியின் அப்பாவைத் தொடர்புகொள்ள இயலவில்லை. அடுத்து நாம் ராம்குமார் பெரியப்பா ஆதிமூலத்திடம் பேசினோம். “எங்க பையனுக்கும், இந்தக் கொலைக்கும் சம்மந்தமில்லைங்க. என் தம்பிக்கு ஒரே பையன் ராம்குமார். அவனை இழந்து அவங்கம்மா பித்துப் பிடிச்ச மாதிரி இருக்காங்க. என் தம்பி பரமசிவமோ, மனநிலை பாதிக்கப்பட்டது போல இருக்காரு. இன்னும் அந்தப் பாதிப்பில் இருந்து மீள முடியல. சுவாதியைக் கொடூரமாக் கொன்ற குடும்பம்னு சமூகம் பேசுறதைத் தாங்கிக்க முடியல. உண்மையில ராம்குமார் அந்த கொலையைச் செய்யலைங்க. அவன் நிரபராதி. அது நிரூபணம் ஆனாதான் அவன் ஆத்மா சாந்தியடையும்’’ என்றார் கண்ணீரோடு.

சுவாதிக்கு முதலாமாண்டு அஞ்சலி செலுத்தும் நிலையிலும் அவர் மரணத்தைச் சுற்றிய மர்மங்கள் மட்டும் கன்னித்தீவு தொடராக நீண்டு வருகின்றன.

ஓர் உயிரைக் கொல்வது குற்றம் என்றால் உண்மைகளைக் கொல்வது பெருங்குற்றம்.

- சே.த.இளங்கோவன்

இன்னும் வராத கேமரா!

சுவாதி படுகொலையைத் தொடர்ந்து, ‘ரயில் நிலையங்களில் சி.சி.டி.வி கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்’ எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ரயில் நிலையங்களிலும் ரயில்களிலும் போலீஸ் பாதுகாப்பு, இருளான இடங்களில் விளக்குகள், 24 மணி நேர ஹெல்ப்லைன் எனப் பல விஷயங்களைச் செய்வதாக ரயில்வே நிர்வாகம் உறுதியளித்தது.

ஓராண்டு முடிந்து இன்னமும், சுவாதி கொலை செய்யப்பட்ட நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கே கண்காணிப்பு கேமரா வரவில்லை. இதற்குக் காரணம், ரயில்வே நிர்வாகத்தின் மெத்தனம்தான். மத்திய அரசு உருவாக்கி இருக்கும் நிர்பயா நிதியிலிருந்து பணம் பெற்று, சென்னை கோட்டத்தில் உள்ள 52 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்குத் திட்டம் தீட்டப்பட்டது. ஆரம்பத்தில் இதை ரயில்வே போலீஸ் செய்வதாக இருந்தது. பிறகு ‘ரயில்டெல்’ நிறுவனத்துக்கு இந்தப் பணி வழங்கப்பட்டது. சுவாதி நினைவஞ்சலி நேரத்தில் ஏதாவது கேள்வி வரும் என்பதற்காக, அவர்கள் இப்போதுதான் நுங்கம்பாக்கத்தில் வேலையை ஆரம்பித்து இருக்கிறார்கள்.

நல்ல ‘வேகம்!’