Published:Updated:

மரணக்கூடாரங்களாக அச்சுறுத்தும் சிறைச்சாலைகள்!

மரணக்கூடாரங்களாக அச்சுறுத்தும் சிறைச்சாலைகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
மரணக்கூடாரங்களாக அச்சுறுத்தும் சிறைச்சாலைகள்!

ஜூவி ஸ்பெஷல் ஸ்டோரி

சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார், ஆசிரியை நிவேதிதா கொலையில் கைதான இளையராஜா ஆகியோர் புழல் சிறையில் தற்கொலை, அடுத்து செந்தில்குமார் மரணம் எனச் சிறை மர்ம மரணங்கள் தொடர்கதையாகி வருகின்றன.

‘‘சிறைச்சாலைகள் மரணக் கூடாரங்களாக அச்சுறுத்துகின்றன’’ எனக் குற்றம் சாட்டுகிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள்.    

மரணக்கூடாரங்களாக அச்சுறுத்தும் சிறைச்சாலைகள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz


தமிழகச் சிறைகளில் 2000 முதல் 2015-ம் ஆண்டு வரை 1,289 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. (2016-க்கான தகவலை தமிழக அரசு தரவில்லை.)  ‘சிறைவாசிகள் ஒவ்வொருவரின் உயிருக்கும், உணர்வுக்கும் பாதுகாப்பு அளிப்போம். அவர்களை நல்வழியில் சீர்திருத்தி, நல்மனிதராக வெளியே அனுப்புவதற்கு உறுதியேற்கிறோம்’ - சிறைத்துறைப் பணிக்கு வரும் ஒவ்வொருவரும் எடுத்துக்கொள்ளும் உறுதிமொழி இது.    

மரணக்கூடாரங்களாக அச்சுறுத்தும் சிறைச்சாலைகள்!

சிறைச்சாலைகள் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி சில விதிமுறைகளை ஐ.நா வகுத்துள்ளது. ‘திறந்தவெளி சிறைச்சாலைகள் வேண்டும். சுகாதாரமான சிகிச்சை தரும் மருத்துவமனை இருக்க வேண்டும். சிறைவாசிகள் தங்களின் தனித் திறமையை வளர்த்துக் கொள்வதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும். நூலகம் அமைக்கப்பட வேண்டும். உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர் வந்து பார்க்க அனுமதிக்க வேண்டும். சிறைச்சாலைக் கையேடு, சிறைவாசிக்குத் தரப்படவேண்டும். தங்களுக்கான உரிமைகள் குறித்து அவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்’ என்பவை அதில் சில அம்சங்கள்.   யதார்த்தத்தில் இங்கு சிறைச்சாலைகள் எப்படி உள்ளன? சிறைச்சாலைகளின் பிரமாண்டச் சுவர்களைக் கடந்து, உள்ளே நிலவும் உண்மை நிலையை அறியும் முயற்சியில் இறங்கினோம். புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில்குமார் என்ற கைதி சமீபத்தில் மரணம் அடைந்தார். அவர் தற்கொலை செய்துகொண்டதாக சிறை நிர்வாகம் கூறியது. ஆனால், செந்தில்குமார் மரணம் குறித்து சந்தேகம் எழுப்புகிறார், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன். “செந்தில்குமார் சிறை ஜன்னல் கம்பியில் லுங்கியை மாட்டி, தற்கொலை செய்துகொண்டதாக சிறை நிர்வாகம் சொல்கிறது. ஆனால், கொலைக் குற்றத்துக்காக சரணடைந்தபோதே, காவல் நிலையத்தில் அவர் கடுமையாகத் தாக்கப்பட்டார். அதில், அவருடைய வலது தோளில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் தற்கொலை செய்துகொண்டார் என்பது ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. சிறைக்குள் நடக்கும் பல மரணங்கள் சந்தேகத்துக்கு உரியவையாக உள்ளன. இவை குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று டி.ஜி.பி-யிடம் மனு அளித்துள்ளேன்” என்றார்.   

மரணக்கூடாரங்களாக அச்சுறுத்தும் சிறைச்சாலைகள்!

சிறை நிர்வாகத்தின் அணுகுமுறை மோசமாக இருப்பதாகக் குற்றம்சாட்டுகிறார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு. “சமீபத்தில் மதுவுக்கு எதிரான போராட்டம் நடத்தியதற்காக, சிறையில் அடைக்கப்பட்டேன். சிறைக்குள், கைதி ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. ஒரு கி.மீ தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்குள் அவர் இறந்துவிட்டார். அதை நேரில் பார்த்தபோது, பெரும் துயரமாக இருந்தது” என்றார்.
தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தன்னுடைய வாழ்க்கையை 18 ஆண்டுகள் சிறையில் கழித்த ‘தடா’ ரகீமிடம் பேசினோம்.

“சிறைவாசிகள், நீதிமன்றக் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டியவர்கள். ஏனெனில், அவர்களைக் காவலில் வைப்பது நீதிமன்றம்தான். ஆனால், முழுக்க முழுக்க காவல்துறையின் கட்டுப்பாட்டில்தான் சிறைகள் உள்ளன. உளவுப்பிரிவு போலீஸார் அனைவரும் நேரடியாக ப்ளாக் வரை வந்து விசாரிக்கிறார்கள். இது சட்டவிரோதம். எந்த விதிமுறைகளையும் அவர்கள் மதிப்பதில்லை. இது, சிறைவாசிகளின் மன உணர்வை ரொம்பவே பாதிக்கிறது. கஞ்சா, சிகரெட் என அனைத்தும் சிறைக்குள் புழங்குகின்றன. இதை யாரும் கண்டுகொள்வதில்லை.இந்தச் சட்டவிரோதச் செயலுக்கு ஒத்துழைப்புத் தராத கைதிகள் மிக மோசமாக நடத்தப் படுகிறார்கள். கழிவுநீர் அகற்றுவதிலிருந்து அனைத்து வேலைகளும் அவர்கள் மீது திணிக்கப்படும். கொடூரமான தாக்குதலும் நடக்கும். உள்காயங்கள், நீண்ட நாள் கழித்து மரணத்தை ஏற்படுத்திய சம்பவங்களும் உண்டு” என்றார் வேதனையுடன்.

இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், ‘‘சிறைக்குள் நிகழும் தற்கொலைகூட, மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் மரணம் என்று பதிவு செய்யப்படுகிறது. துறைரீதியான நடவடிக்கைகளிலிருந்து தப்பிக்கவே, இவ்வாறு சிறைத்துறை கூறுகிறது. சிறைச்சாலைகளில் போதிய மருத்துவர்கள் இல்லை; மருந்துகளும் இருப்பதில்லை. மனித உரிமை மீறல்கள் இல்லாத இடமாக சிறைகளைக் கொண்டுவருவதே சிறைத்துறைக்கான அழகு” என்றார்.

தமிழ்நாட்டில் 137 சிறைச்சாலைகள் உள்ளன. இந்தச் சிறைகளில் 26 மருத்துவ அதிகாரிகள், 18 ஆலோசகர்கள், 12 உளவியல் ஆலோசகர்கள், 18 மருந்தாளுநர்கள், 16 செவிலியர்கள் ஆகியோர் கொண்ட மருத்துவக் குழுவே உள்ளது. இது மிகக்குறைந்த எண்ணிக்கை.  

மரணக்கூடாரங்களாக அச்சுறுத்தும் சிறைச்சாலைகள்!

‘சிறைவாசிகளின் மரணங்கள் தொடர்பாக முதன்மை அமர்வு நீதிபதி விசாரித்து, விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருப்பவர், வழக்கறிஞர் கேசவன். ‘‘ஒவ்வொரு சிறைச்சாலையிலும் ஒரு எம்.டி முடித்த மருத்துவர், அவருக்குக் கீழ் ஆறு உதவியாளர்கள், ஆறு செவிலியர்கள், மூன்று ஆய்வக வல்லுநர்கள், ஒரு மருந்தாளுநர், ஒரு உதவியாளருடன் கூடிய இரண்டு மனநல ஆலோசகர்கள் ஆகியோர் இருக்க வேண்டும். பொது அறுவைச் சிகிச்சை, எலும்பியல், தோல் நோய், மயக்கவியல், பல் மருத்துவம் என ஐந்து துறை நிபுணர்கள் இருக்க வேண்டும். இதுகுறித்து மத்திய அரசு 1998-ல் வழிகாட்டுதல் கொடுத்து, அவற்றை அமல்படுத்த வேண்டும் என 2004-ல் தேசிய மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியது. ஆனால், இவை எதுவும் இன்றுவரை நடைமுறைக்கு வரவில்லை.   

மரணக்கூடாரங்களாக அச்சுறுத்தும் சிறைச்சாலைகள்!

(Source: NCRB 2015)

‘கடும் போக்குவரத்து நெரிசலில், புழலில் இருந்து 30 கி.மீ தள்ளியிருக்கும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கைதிகளை அழைத்து வருவது ஏன்? அருகிலுள்ள மருத்துவ மனையில் சேர்த்தால், உயிர்கள் காப்பாற்றப்படுமே’ என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் கேள்வி கேட்டிருந்தது. அதை வைத்து, ‘சிறைவாசிகளுக்கு அருகில் இருக்கும் ஸ்டான்லி மருத்துவமனையில் ஏன் சிகிச்சை கொடுக்கக் கூடாது?’ என்று சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியது. அதற்கான ஏற்பாடு நடப்பதாக தமிழக அரசு பதில் அளித்தது. இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. எதுவும் நடக்க வில்லை” என்கிறார், வழக்கறிஞர் கேசவன்.

‘பொடா’ சட்டத்தில் நான்கு ஆண்டுகள் சிறையில் இருந்தவர், பொதுமையர் பரப்புரை மன்றத்தைச் சேர்ந்த பாஸ்கர். இவர், “சிறைக்குள், பெயரளவுக்கு மனநல ஆலோசகர் ஒருவர் இருப்பார். பெரும்பாலும் அவர் சிறைவாசிகளைப் பார்ப்பதில்லை. பல ஆண்டுகளாக தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் மீது கரிசனப் பார்வை தேவை என்ற கருத்து, சர்வதேச அளவில் முன்வைக்கப்படுகிறது. இதை அரசு உணருமானால் நளினி, பேரறிவாளன் உள்பட பல ஆண்டுகளாக சிறையில் வாடுபவர்களின் துயரம் நீங்கும்” என்கிறார்.   

மரணக்கூடாரங்களாக அச்சுறுத்தும் சிறைச்சாலைகள்!

சிறை விவகாரங்கள் குறித்து தமிழகச் சிறைத்துறை கூடுதல்     டி.ஜி.பி சைலேந்திரபாபுவிடம் பேசினோம். “பொதுவாக, குற்றச்செயல்களில் ஈடுபட்டு சிறைக்குள் வருபவர்களில் பலர், பல நோய்களுடன் வருகிறார்கள். அவர்கள் மீது சிறைத்துறை தனி கவனம் எடுத்து சிகிச்சை அளிக்கிறது. உளவியல் ரீதியாக பாதிப்படைப்பவர்களைக் கண்டறிந்து, அவர்கள் மனரீதியாக பலம் பெற தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. பல செயல்பாடுகளில் அவர்களை ஈடுபடுத்துகிறோம். புழல் சிறையில் பேக்கரி, நாப்கின் தயாரிப்பு, தையல் பயிற்சி உள்ளிட்ட யூனிட்கள் உள்ளன. இரண்டரை ஏக்கர் நிலத்தில் காய்கறிகள் பயிர் செய்யும் வேலையிலும் கைதிகளை ஈடுபடுத்துகிறோம். கோவையில் சிறைக்கு உள்ளேயும் வெளியேயும் டெக்ஸ்டைல் மில்கள் உள்ளன. அவற்றில் கைதிகள் வேலை செய்கிறார்கள். இப்படியாக அவர்களின் மனத்தடைகளை உடைக்க, குற்ற உணர்ச்சியில் இருந்து விடுபட, பெரும் முயற்சிகள் எடுத்துவருகிறோம். சிறைத்துறை அதிகாரிகளும் சிறைவாசிகளை சக உயிராக மதித்து, அவர்களை முழுமனிதராக மாற்றுவதற்கு முயற்சி செய்து வருகின்றனர். நான் இப்போதுதான் இந்தத் துறையின் பொறுப்புக்கு வந்துள்ளேன். நிச்சயமாக, கைதிகளின் பிரச்னைகளில் கூடுதல் கவனம் செலுத்துவேன்” என்றார் அக்கறையுடன்.

ஜூன் 26-ம் தேதி, சித்ரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான ஐ.நா-வின் ஆதரவு தினம். சித்ரவதைகளுக்கு எதிரான சீர்திருத்தங்கள், சிறைச்சாலைகளில் இருந்து தொடங்கட்டும். 

- சே.த. இளங்கோவன்