Published:Updated:

நீண்ட பகை... தொடர் கொலைகள்... பழிக்குப் பழியால் பதறும் மதுரை!

நீண்ட பகை... தொடர் கொலைகள்... பழிக்குப் பழியால் பதறும் மதுரை!
பிரீமியம் ஸ்டோரி
News
நீண்ட பகை... தொடர் கொலைகள்... பழிக்குப் பழியால் பதறும் மதுரை!

நீண்ட பகை... தொடர் கொலைகள்... பழிக்குப் பழியால் பதறும் மதுரை!

அது வெறுமனே இரண்டு அரசியல் புள்ளிகளுக்கு இடையிலான மோதல்தான். ஆனால், அந்த மோதலில் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட கொலைகள் நடந்திருக்கின்றன. இந்த நீண்ட பகையின் லேட்டஸ்ட் பலி, அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் மதுரை மக்களைத் தள்ளி இருக்கிறது. 

மதுரை மாநகராட்சியின் முன்னாள் மண்டலத் தலைவர்களான அ.தி.மு.க-வைச் சேர்ந்த ராஜபாண்டிக்கும், தி.மு.க-வைச் சேர்ந்த வி.கே.குருசாமிக்கும் இடையிலான பகை காரணமாக நிகழ்ந்துவரும் கொலைகளால், மதுரை மக்கள் அமைதி இழந்துள்ளனர். இப்போது ராஜபாண்டியின் மகன் தொப்புளி முனியசாமியை, ஒரு கும்பல் கடத்திச் சென்று கொலை செய்துள்ளது. இந்தக் கொலையில் தொடர்புடையதாகக் கூறப்படும் குருசாமியின் மகன் உள்பட சிலர் இப்போது சரணடைந்துள்ளனர்.

குருசாமி, ராஜபாண்டி ஆகியோர் இடையே இருக்கும் நீண்ட காலப் பகையால், பழிக்குப்பழி கொலைகள் தொடர்ச்சியாக நடந்துவருகின்றன. அதன் உச்சமாகத்தான், ராஜபாண்டியின் மகன் முனியசாமி கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளார். ஜூன் 13-ம் தேதி வெளியே சென்ற முனியசாமி, வீட்டுக்குத்  திரும்பி வரவில்லை. தன் கணவனைக் காணவில்லை என்று முனியசாமியின் மனைவி உமாமகேஸ்வரி, மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

நீண்ட பகை... தொடர் கொலைகள்... பழிக்குப் பழியால் பதறும் மதுரை!

ஒருபக்கம் போலீஸில் புகார் கொடுத்தாலும், இன்னொருபுறம் குருசாமியின் ஆட்களால் முனியசாமிக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் ராஜபாண்டி தரப்புக்கு ஏற்பட்டது. அதனால், மதுரை, கமுதி, அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ராஜபாண்டியின் ஆட்கள் சல்லடை போட்டுத் தேடினர். நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவையும் முனியசாமி குடும்பத்தினர் தாக்கல் செய்தனர். முனியசாமியைக் கண்டுபிடிக்க, மதுரை போலீஸ் துணை ஆணையர் மணிவண்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீஸார் குருசாமி தரப்பை நெருக்கவே, குருசாமியின் மகன் வி.கே.ஜி.மணியும் அவருடைய உறவினரான அரியமங்களத்தைச் சேர்ந்த பழனிமுருகனும் வண்டியூர் கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்தனர். பிறகு அவர்களைக் கைது செய்தது போலீஸ். “என் தந்தை குருசாமியையும், என் குடும்பத்தினரையும், உறவினர்களையும் கொல்வதற்கு ராஜபாண்டியும் அவருடைய மகன் முனியசாமியும் தொடர்ந்து முயற்சி செய்துவந்தார்கள். அதனால், முனியசாமியை உயிருடன் விட்டுவைக்கக் கூடாது என்று முடிவுசெய்தோம். கடந்த 13-ம் தேதி மதுரை ரிங் ரோட்டில் பைக்கில் வந்த முனியசாமியை காரில் கடத்தினோம். கமுதி அரியமங்களம் காட்டுப்பகுதிக்குக் கொண்டு சென்று, அவரை இரும்புக்கம்பியால் அடித்துக் கொலை செய்தோம். உடலைப் பெட்ரோல் ஊற்றி எரித்தோம்’’ என்று போலீஸாரிடம் அவர்கள் பகீர் வாக்குமூலம் கொடுத்தனர்.

செங்கல்பட்டில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்தின் பேரில் மதுரையைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் என்ற இளைஞரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, ‘முனியசாமியைக் கமுதியில் கொலை செய்து எரித்து விட்டோம்’ என்று அவர் கூறியுள்ளார். அவரை மதுரை போலீஸார் அழைத்து வந்து விசாரித்து வருகிறார்கள். கடந்த 21-ம் தேதி, இதே வழக்கில் காளீஸ்வரன், அழகுராஜா, கணக்கன் என்ற முனியசாமி ஆகியோர் உசிலம்பட்டி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். தலைமறைவாகியுள்ள குருசாமி, விரைவில் நீதிமன்றத்தில் சரணடைவார் என்று சொல்லப்படுகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நீண்ட பகை... தொடர் கொலைகள்... பழிக்குப் பழியால் பதறும் மதுரை!

குருசாமிக்கும், ராஜபாண்டிக்கும் இடையே அப்படி என்னதான் பிரச்னை? போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம்.

“இவர்கள் இரண்டு பேருமே கமுதி பகுதியிலிருந்து பிழைப்புக்காக மதுரைக்கு வந்தவர்கள். சிறு சிறு தொழில்களைச் செய்த இவர்கள், ஒரு கட்டத்தில் அரசியல் பக்கம் சென்றனர். இரண்டு தரப்பு மீதும் குற்ற வழக்குகள் அதிகமாக உள்ளன. மு.க.அழகிரியின் ஆதரவைப் பெற்று தி.மு.க-வில் முக்கிய இடத்துக்கு வந்தார் குருசாமி. அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, ஏலம் எடுத்தல் என கீழ்மதுரைப் பகுதியில் தனக்கென்று செல்வாக்கை வளர்த்துக்கொண்ட குருசாமி, மாநகராட்சி கவுன்சிலராகி, கிழக்கு மண்டலத் தலைவர் ஆனார். நிறைய சம்பாதித்தார்.

ராஜபாண்டியும், குருசாமியும் ஒரே ஊர்க்காரர்கள், ஒரே சாதிக்காரர்கள் என்பதால், அவர்களுக்குள் யார் பெரியவர் என்ற ஈகோ மோதல் தொடர்ந்து இருந்துவந்தது. ஒவ்வொரு விஷயத்திலும் அவர்கள் மோதிக் கொண்டனர். ராஜபாண்டியின் உறவினர் ஒருவரை, பத்து வருடங்களுக்கு முன்பு குருசாமியின் ஆட்கள் கொலை செய்ய, அதைத் தொடர்ந்து குருசாமியின் உறவினர் ஒருவரை ராஜபாண்டி தரப்பு கொலை செய்துள்ளனர். இப்படியே கடந்த சில வருடங்களாக இரு தரப்பும் மாறி மாறி பழிவாங்கியதில், பத்துக்கும் மேற்பட்ட கொலைகள் நிகழ்ந்துள்ளன.

கடந்த உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க-வில் கவுன்சிலர் சீட் வாங்கி வெற்றிபெற்ற ராஜபாண்டி, கிழக்கு மண்டலத் தலைவர் ஆனார். அந்தப் பகுதியில் வீடு கட்டிய ஒருவரிடம் கமிஷன் கேட்டு ராஜபாண்டி மிரட்டியுள்ளார். கமிஷன் கொடுக்காததால், அவரை ராஜபாண்டி தாக்கினார். இந்த விவகாரம் பெரிய அளவில் வெடித்து, போராட்டம் நடத்தும் அளவுக்குப் போனது. அதனால், இவருடைய மண்டலத் தலைவர் பதவியைக் காலி செய்த ஜெயலலிதா, கட்சியிலிருந்தும் ராஜபாண்டியை நீக்கினார்.

ஆனாலும் ராஜபாண்டிக்கும் குருசாமிக்குமான யுத்தம் தொடர்ந்து கொண்டிருந்தது. இருவரும் மாறி மாறி சிறைக்குச் செல்வார்கள், வெளியே வருவார்கள். ஆள் பலத்தோடுதான் எங்கும் செல்வார்கள். இவர்கள் இருவரின் அட்ராசிட்டியில் பாதிக்கப்பட்டது என்னவோ முனிச்சாலை, காமராஜபுரம், பழைய குயவர் பாளையம் ரோடு, சிந்தாமணி, மாகாளிபட்டி, கீரைத்துரை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள்தான்.

சில மாதங்களுக்கு முன்பு, குருசாமியைக் கொலை செய்வதற்கு அவருடைய வீட்டை முற்றுகை யிட்டார்கள், ராஜபாண்டியின் மகன் முனியசாமி தலைமையில் வந்த ஆட்கள். அந்தச் சமயத்தில், ரோந்து சென்ற இன்ஸ்பெக்டர் துப்பாக்கி எடுத்து சுட்டதால் குருசாமி தப்பித்தார். இப்படி இரண்டு தரப்புமே, உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் நடமாடி வந்த நிலையில்தான், முனியசாமி கொல்லப்பட்டுள்ளார்’’ என்றனர்.

நீண்ட பகை... தொடர் கொலைகள்... பழிக்குப் பழியால் பதறும் மதுரை!

இந்தக் கொலை தொடர்பாக துணை  கமிஷனர் மணிவண்ணனிடம் கேட்டதற்கு, ‘‘விசாரணை நடைபெற்று வருகிறது. பிற குற்றவாளிகளைத் தேடிவருகிறோம்’’ என்றார்.  

இப்போது முனியசாமியின் கொலைக்குப் பழி வாங்குவோம் என்று ராஜபாண்டி குடும்பத்தினர் சபதம் எடுத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இவர்களின் கொலைவெறி மோதலால், திகிலில் உறைந்திருப்பது என்னவோ, மதுரை மக்கள்தான்.

- செ.சல்மான்
படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்

‘‘அக்கறை காட்டுகிறார்கள்!’’

டந்த இதழ் ஜூ.வி-யில் ‘கபாலீஸ்வரர் கோயில் நிலம் அப்போலோவுக்குத் தரப்படுகிறதா?’ என்ற கட்டுரை வெளியானது. கோயில் நிலத்தில் அமைந்துள்ள ரானடே நூலகம் மற்றும் மயிலாப்பூர் க்ளப் போன்றவற்றைக் காலி செய்யுமாறு கோயில் நிர்வாகம் நெருக்கடி கொடுப்பது பற்றி எழுதி இருந்தோம். இது தொடர்பாக மயிலாப்பூர் க்ளப் துணைத் தலைவர் பிரமிட் நடராஜன் நம்மைத் தொடர்பு கொண்டார். ‘‘மயிலாப்பூர் க்ளப்பை காலி செய்யுமாறு கபாலீஸ்வரர் கோயில் நிர்வாகம் நோட்டீஸ் ஏதும் அனுப்பவில்லை. 115 ஆண்டுகளாக ஒரு பாரம்பர்யத்தோடு செயல்பட்டு வரும் மயிலாப்பூர் க்ளப்பின் வளர்ச்சியில், கபாலீஸ்வரர் கோயில் நிர்வாகம் ஆர்வம் காட்டுகிறது. குறிப்பாக, அதன் அறங்காவலர் விஜயகுமார் ரெட்டி மிகவும் அக்கறை கொண்டவராகவே விளங்குகிறார்” என்றார்.