Published:Updated:

மொட்டை அடிக்கப்படும் மேகமலை! - குற்றவாளிகளைப் பாதுகாக்கும் அமைச்சர்

மொட்டை அடிக்கப்படும் மேகமலை! - குற்றவாளிகளைப் பாதுகாக்கும் அமைச்சர்
பிரீமியம் ஸ்டோரி
News
மொட்டை அடிக்கப்படும் மேகமலை! - குற்றவாளிகளைப் பாதுகாக்கும் அமைச்சர்

மொட்டை அடிக்கப்படும் மேகமலை! - குற்றவாளிகளைப் பாதுகாக்கும் அமைச்சர்

பாதுகாக்கப்பட்ட வனத்தில் உள்ள மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்படுவதைக் கண்டுகொள்ளாத வனத்துறையினர், பொதுமக்களின் பயன்பாட்டுக்காக ஆழ்குழாய் அமைப்பதைத் தடுக்கிறார்கள் என்ற பிரச்னையால் தகிக்கிறது, தேனி மாவட்டம்.

தேனி, ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதிக்குள் உள்ளது மேகமலை. அடர்ந்த வனப்பகுதியான மேகமலையில், பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் தனியாருக்குச் சொந்தமான காபி, ஏலக்காய் மற்றும் தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. சுமார் மூவாயிரம் ஏக்கர் பரப்பளவில் இருந்த தேயிலைத் தோட்டங்கள், தற்போது 12 ஆயிரம் ஏக்கரில் விரிவடைந்துள்ளன. இதற்காக, பல்லாயிரக்கணக்கான மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

பொம்முராஜபுரம் அருகே வெள்ளிமலைப் பகுதியில், நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் காபியும் ஏலக்காயும் பயிரிடப்படுகின்றன. அவற்றை, மலையில் இருந்து காட்டுப்பாதையில் குதிரைகள் மூலமாகவே இறக்கிக்கொண்டுவர முடியும். அதனால், அந்தப் பகுதியில் உள்ள பெரிய தோட்டங்களின் உரிமையாளர்கள், சுமார் 200 மரங்களை வெட்டி வீழ்த்திவிட்டு, சாலை ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

மொட்டை அடிக்கப்படும் மேகமலை! - குற்றவாளிகளைப் பாதுகாக்கும் அமைச்சர்

இது ஒருபுறம் இருக்க, குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டதால், கடமலைக்குண்டு பகுதி மக்கள் சமீபத்தில் போராட்டம் நடத்தினர். அதையடுத்து, பொதுமக்களுக்காக ஆழ்குழாய் ஏற்படுத்திக்கொடுக்க மாவட்ட நிர்வாகம் முயற்சி செய்தது. அப்போது, ‘இது வனத்துறைக்குச் சொந்தமான இடம். இங்கே ஆழ்குழாய்க் கிணறு அமைக்கக்கூடாது’ என்று வனத்துறை அதிகாரிகள் பிரச்னை செய்துள்ளனர். உடனே வனத்துறையினருடன்  கலெக்டர் வெங்கடாசலம் பேசினார். ‘வனத்துறையினரை கலெக்டர் திட்டினார்’ என இது சமூக ஊடகங்களில் கசிய விடப்பட்டது. அப்போதுதான், மேகமலையில் மரங்களை வெட்டி சட்டவிரோதமாக சாலை அமைக்கப்பட்ட விஷயமும் வெளியே வந்தது. 

புலிகள் வாழுகிற, பல்லுயிரினப் பெருக்கம்கொண்ட பகுதியில், மரங்களை வெட்டி சாலை அமைத்தது குறித்து மதுரை மண்டல வனப் பாதுகாவலர் நிகாரஞ்சனிடம் கேட்டோம். “யானை, கரடி, மான், காட்டு மாடு உள்ளிட்ட விலங்குகள் இந்தப் பகுதியில் அதிகமாக உள்ளன. புலிகளின் பெருக்கம் அதிகமாக இருப்பதால், புலிகள் காப்பகமாகக் கூட மேகமலை அறிவிக்கப்படலாம். இந்தச் சூழலில், இங்கிருந்த மரங்கள் வெட்டப்பட்ட விவகாரம் என் கவனத்துக்கு வந்தது. உடனே விசாரணையில் இறங்கினேன். உடனடியாக, வனத்துறையைச் சேர்ந்த ஐந்து பேரை சஸ்பெண்ட் செய்தேன். வெட்டப்பட்ட மரங்கள், தனியார் தோட்டங்களுக்குச் சொந்தமான பட்டா நிலத்தில் உள்ளவை எனச் சொல்கிறார்கள். அப்படியிருந்தால் எங்களால் நடவடிக்கை எடுக்க முடியாது. அவை பட்டா நிலம்தானா என்பதை அறிய வனநில தீர்ப்பாய அலுவலர் மணிமாறன் தலைமையில் ஒரு குழுவை அனுப்பியுள்ளேன். பாதுகாக்கப்பட்ட வனத்துக்குள் ஒரு சதுர அடி நிலத்தில் சாலை இருந்தால்கூட, அதில் சம்பந்தப்பட்டவர்களைக் கைதுசெய்ய உத்தரவிடுவேன். தனியார் தோட்டங்களில் மரம் வெட்டினால், கலெக்டர்தான் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க முடியும்” என்றார்.

கலெக்டர் வெங்கடாசலத்தைச் சந்தித்தோம். “மேகமலை விவகாரம் பற்றி அறிந்து மிகவும் வருத்தப்பட்டேன். நான்தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், அதை உடனடியாகச் செய்கிறேன். மரங்களை வெட்டி சாலை போட்ட தோட்ட  உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மொட்டை அடிக்கப்படும் மேகமலை! - குற்றவாளிகளைப் பாதுகாக்கும் அமைச்சர்

இந்நிலையில், “மேகமலையில் மரங்கள் வெட்டப்படுவது ஒன்றும் புதிதல்ல” என்கிறார்கள் இயற்கை ஆர்வலர்கள். “இங்கு ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டுள்ளதாக அந்தப் பகுதியில் 2013-ம் ஆண்டு ஆய்வுசெய்த வனத்துறை குழு ஒன்று கண்டறிந்தது. அதையடுத்து, சில அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். வனத்தில் நடக்கும் எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கையும், வனத்துறைக்குத் தெரியாமல் நடக்காது. இப்போது, ஐந்து பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதுகூட ஒரு கண் துடைப்பு நாடகம்தான். மேகமலை அழிக்கப்படுவதால், மழை அளவு மிகவும் குறைந்துள்ளது. இதனால் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நேர்மையான அதிகாரிகளால் மட்டுமே மேகமலையை மீட்க முடியும். அதற்குள் மேகமலையை மேகத்தோடு கரைத்துவிடுவார்கள்’’ என்கிறார்கள் ஆதங்கத்தோடு.

அரசியல் வட்டாரத்தில் பேசியபோது,  ‘‘ ‘பாடம் சொல்லித் தரும்’ சீனியர் அமைச்சர் ஒருவரின் நெருங்கிய உறவினருக்கு மேகமலையில் எஸ்டேட் உள்ளது. ‘கோட்டை’ அதிகார மட்டத்திலிருந்து உத்தரவு வந்ததாலேயே, அதிகாரிகள் அமைதி காக்கிறார்கள்” என்றனர்.

வெட்டப்பட்ட மரங்கள், தனியாருடைய பட்டா நிலங்களில் இருந்ததாக அதிகாரிகள் சொன்னாலும், ‘‘அவை வனத்துறைக்குச் சொந்தமான இடங்களில் இருந்தவை’’ என்கிறார்கள் உள்ளூர் மக்கள்.

குற்றவாளிகள் மீது சட்டம் பாயுமா?

- எம்.கணேஷ்
படங்கள்: வீ.சக்தி அருணகிரி