Published:Updated:

மனதில் தீ சுமந்து திரிதல் - கணேசகுமாரன்

மனதில் தீ சுமந்து திரிதல் - கணேசகுமாரன்
பிரீமியம் ஸ்டோரி
News
மனதில் தீ சுமந்து திரிதல் - கணேசகுமாரன்

மனதில் தீ சுமந்து திரிதல் - கணேசகுமாரன்

வாழ்க்கை என்பது அனுபவங்களின் கூட்டுத் தொகுப்பு. ஆனால், எல்லா அனுபவங்களும் ஒருசேர நமக்குக் கையளிக்கப்படவில்லை. ஒவ்வொரு சிறுகதையும் சின்னச்சின்னதாய் வாழ்க்கையை நமக்கு அறிமுகப்படுத்துபவன. வாசிப்பின் மூலம் எல்லா அனுபவங்களையும் ஓரளவு நம்மால் வாழ்ந்துவிட முடிகிறது. இப்படித்தான் வண்ணதாசனின் கதைகள் வழியே அறிமுகமாகும் மனிதர்கள், வாழ்வின் மென்மையான பிரதேசத்தைச் சுட்டிக்காட்டி அழகூட்டிச் செல்கிறார்கள்.

லக்‌ஷ்மி சரவணகுமார் கதைகளின் கதாபாத்திரங்கள், வாழ்வின் கொடூரத்தை எவ்விதப் பூச்சுமின்றி நமக்கு அறிமுகப்படுத்துகிறார்கள். புதுமைப்பித்தனின் ‘காஞ்சனை’, வண்ணதாசனின் ‘தனுமை’, தி.ஜாவின் ‘அப்பா வந்தார்’, சுஜாதாவின் ‘நகரம்’, யூமா வாசுகியின் `ரத்த உறவு’ போன்ற கதைகள் தவிர்த்துவிட்டு நாம் சிறுகதை உலகத்தைப் பேசிவிட முடியாது என்று தெரிந்தாலும், பளிச்சென்று மனசுக்குள் தோன்றி வெவ்வேறு உணர்வுகளின் வழியே வாசித்த காலத்துக்கே என்னை இட்டுச்சென்ற கதைகள் சிலவற்றைக் குறித்து மட்டும் இங்கே பகிர்ந்திருக்கிறேன்.

மனதில் தீ சுமந்து திரிதல் - கணேசகுமாரன்

கூத்தலிங்கத்தின் ‘உயிர் நிலம்’

ஒரு கொடூரமான பாதகச் செயலில் பங்குபெறுவது குறித்தான பதற்றம் இயல்பாகவே நமக்குள் ஏற்படுவது உண்டு. ஆனால், நமக்குச் சற்றும் சம்பந்தமில்லாமல் நிகழ்ந்த ஒரு கொடுமைக்குச் சாட்சியாக இருந்தது குறித்தான குற்றஉணர்வும் பதற்றமும் காலத்துக்கும் மறக்க முடியாத ஒன்று. அப்படி ஒரு தீரா குற்றஉணர்வை ஏற்படுத்திச் செல்லும் கதைதான் கூத்தலிங்கத்தின் ‘உயிர் நிலம்.’ ஒரு கிராமம்; ஒரு புரோக்கர்; கிராமத்துப் பெரிய மனிதர்களுக்கு வெளியூரில் இருந்து பெண்களை அழைத்து வருபவன்.  தங்கராசு என்கிற அவன் ஊருக்குள் வந்திருக்கிறான் என்றாலே, கிராமம் திருவிழா களைகட்டிவிடும். ஒருநாள் இரவில் வெளியூரிலிருந்து ஒரு பெண்ணை அந்தக் கிராமத்துக்கு அவன் அழைத்து வருவதிலிருந்து கதை தொடங்குகிறது. அவளுக்கு அது தொழில். பஞ்சாயத்து பிரசிடென்ட் மகனின் இச்சை தீர்க்க, தான் செல்வதாய் அவளுக்கு நினைப்பு. அதற்குத்தான் அவளும் விலை நிர்ணயித்திருந்தாள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மனதில் தீ சுமந்து திரிதல் - கணேசகுமாரன்

ஆனால், அதன் பின் நடந்ததெல்லாம் கொடுமை. ஊரில் உள்ள அத்தனை ஆண்களுக்கும் அவள் விருந்தாகிறாள். முதலில் காசு வந்தால் போதும் என்று சம்மதிப்பவள் பின்பு, உடல் வலி தாள முடியாமல் அவர்களின் இச்சைக்கு மறுக்கிறாள். ஒரு புதரில் ஒளிந்துகொள்கிறாள். கண்டுபிடித்த தங்கராசு அவளை அடித்துத் துன்புறுத்துகிறான். வயது வித்தியாசம் இல்லாமல் ஐம்பது ஆண்களுக்கும் மேல் அந்த ஓர் இரவில் அவளுடன் வயல்வெளி, வரப்போரம், மாட்டுவண்டியின் கீழே என்று சகலவிதமான இடங்களிலும் உடலுறவுகொள்கிறார்கள். என்னதான் காசுக்கு விலைபோகும் பெண்ணென்றாலும் அவளுக்கும் உடல் உண்டு, வலி உண்டு, மனம் உண்டு என்று உணராத, உணர விரும்பாத ஆண்களால் அவள் வன்புணர்வு செய்யப்படுகிறாள்; விடிகிறது. கடைசி ஆணும் களைத்து விலக, அவள் தங்கராசுவைத் தேடுகிறாள்; காணவில்லை. அவளை மூலதனமாக வைத்து சம்பாதித்த அவ்வளவு பணத்துடன் அவன் காணாமல் போயிருக்கிறான். அடிவயிற்றில் வலியுடன் தீராத கசப்பும் உருவாகிறது. காறி உமிழ்பவள், அந்த ஊரின் பேருந்து நிலையத்தில் நின்றபடி, மண் அப்பி கசங்கி அழுக்கடைந்த உடையுடனும் வெறுப்படைந்த மனதுடனும் கைநிறைய மண்ணை அள்ளி அவ்வூர் இருக்கும் திசை நோக்கி வீசிச் சாபமிடுகிறாள். காற்றில் பறக்கும் தூசி வாசகனின் கண்களில் படிவதோடு கதை முடிகிறது. அவளுக்குக் கதையில் பெயரில்லை. வெறும் உடலாய்தான் கதை முழுவதும் இருக்கிறாள். ஓர் இரவுக்குள் முடியும் கதை, எங்கோ ஒரு கிராமத்தில் இந்த இரவு நடந்துகொண்டிருப்பதைப் போன்ற நடையில் எழுதப்பட்டிருக்கும். கதையின் மிகப் பெரிய வன்மத்தைக் கதாசிரியர் போகிறபோக்கில் சொல்லி நம் மனதில் கத்தி பாய்ச்சுகிறார். “ஆளு அழச்சிக்கிட்டு வந்தப்ப, நல்லையா பிள்ளை போர்செட்ல வச்சி ராத்திரி மொத போனி இவரு பையன் ரவி. இப்ப விடியற நேரம் பாத்து முடிச்சுவைக்க அப்பங்காரர் வந்துட்டாரு’’ - இது புரோக்கர் சொல்லும் வார்த்தைகள். கருமாதி வீட்டில் சீட்டு விளையாடிக்கொண்டிருக்கும் ஆண்கள் விஷயம் கேள்விப்பட்டு கும்பலாய் வந்து சட்டை பாக்கெட்டிலிருக்கும் காசை மொத்தமாய்க் கொட்டிக்கொடுத்து அவளுடன் புதருக்குள் செல்வதெல்லாம், எங்கோ ஒரு பெண்ணுக்கு நடந்துகொண்டிருக்கும் கொடூரத்தை எதுவும் செய்ய முடியாமல் கைகட்டி வேடிக்கை பார்க்கும் வாசகனின் மனநிலைக்குக் கதாசிரியர் உணர்த்தும் குற்ற ஊசி. வாசித்துப் பல வருடங்களாயினும் ஊவாமுள்ளாய் மனதில் உறுத்திக்கொண்டிருக்கிறது அவளின் சாபம். “எவன் பாக்கி. எல்லா ஆம்பிளயளுந்தான் வந்தாங்கெ. இந்த ஊரு நல்லாயிருக்கப்பிடாது’’ - நன்றாயிருக்குமா ஊர்?

ஜெயமோகனின் ‘சோற்றுக் கணக்கு’

பசியின் ருசி அறிந்தவர்களால், ‘சோற்றுக் கணக்கின்’ விடையை எளிதாக உணர முடியும். சென்னைக்குப் பிழைக்கவந்த புதிதில் எவ்வித வருமானமுமின்றி சாப்பாட்டுக்கு மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறேன். மதியம் ‘சாப்பாடு’ என்ற பெயரில் சாப்பிடும் இரண்டு கடலை மிட்டாய்களும், ஒரு பச்சை வாழைப்பழமும், குடிக்கும் நிறையத் தண்ணீரும்... எங்கே, சிறுநீர் கழித்துவிட்டால் வயிறு குறைந்து பசிக்க ஆரம்பித்து விடுமோவென வயிற்றில் நீர் தேக்கி அலைந்த நாள்கள் உண்டு. ‘சோற்றுக் கணக்கு’ சிறுகதையில் ஒரு ஹோட்டல் வருகிறது. அதுபோல் ஒரு ஹோட்டல் தமிழ்நாட்டின் தலைநகரில் இருந்திருந்தால், அந்த ஹோட்டல் முதலாளிக்கு நான் வாழ்நாளுக்கும் கடன்பட்டிருப்பேன். இந்தக் கதையில் வரும் நாயகன், அப்படித்தான் கெத்தேல் சாகிப்புக்கு கடன்படுகிறான். அவர்தான் அந்த ஹோட்டல் உரிமையாளர். சாகிப்பைப் பற்றிய வர்ணனை, அவரின் குடும்பம், சிறுவயதிலிருந்து நேர்மையாய் உழைத்து முன்னேறிய சாகிப்பின் குணவார்ப்பு என்று ஒரு நல்மனிதரைப் பற்றிய எந்தக்  கேள்விக்கும் நமக்கு இடம் கொடுக்காமல் நகரும் கதையில் நாயகனின் குடும்பம், அவன் நம்பிவந்த உறவுகள், அதன்மூலம் கிடைக்கும் ஏமாற்றங்கள், படிப்புக்காகவும் பசிக்காகவும் வேலைக்குச் செல்லவேண்டிய நிலை, அதுசமயம் மூன்றுவேளைக்குப் பதிலாய் ஒருவேளை சாப்பிட்டுப் பசி அடக்கும் அவனின் பிம்பம் எல்லாம் எங்காவது நாம் சந்திக்கும் ஒரு மனிதனாகத்தான் இருக்கும்; அல்லது நீங்களாகவோ, நானாகவோ இருக்கலாம். நாம் பசித்திருக்கும்போது நமக்கு ஒரு பிடிச்சோறு போடும் கரமே கடவுளின் கரம்; தான் பெற்ற பிள்ளை பசித்திருக்கக் கூடாது என நினைக்கும் தாயின் மனமும் அதுவே. கதையில் அப்படியான அம்மாவை, இறையை கதையின் நாயகன், கெத்தேல் சாகிப்பிடம் காண்கிறான். அதற்குண்டான சகல நியாயங்களும் சொல்லப்படுகின்றன. காலத்துக்குத் தெரியும் கணக்கு எப்படிப் போடுவதென்று. தன்னை வேண்டாமென்று வெறுத்து ஒதுக்கிய உறவு தன்னை அண்டிவாழும் நிலையை நாயகன் உணர்கிறான். தன் பசிக்கு உணவிட்ட, தன் தவற்றைத் தெரிந்திருந்தும் அதுபற்றி மனம் கொள்ளாத ஒரு மனிதனுக்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்கிறான். நிம்மதியுறுகிறான். இயலாமை என்றில்லை; நம் அவமானங்களையும் வலியையும் பல் கடித்துப் பொறுத்துக்கொண்டால், அந்தப் பொறுமைக்கான கூலி கண்டிப்பாக நமக்குக் கிடைத்தே தீரும். கதையில் வரும் ஒரு வரி சொல்வதுபோல்தான் இங்கு எல்லாமே. `மக்கா, நேர்மையா இருந்தா அதுக்குண்டான ருசி தன்னால வரும் பாத்துக்கோ.’ ‘சோற்றுக் கணக்கின்’ விடையும் அதுவே. வாழ்வின் ருசி அறிய நேர்மையாய் இருந்தால்போதும், இந்த வாழ்வுக்கு.

எஸ்.செந்தில்குமாரின் ‘பகலில் மறையும் வீடு’

பாட்டி சொல்லும் கதைகள் கேட்டு வளர்ந்த தலைமுறை நாம். ஏழு மலை, ஏழு கடல், ஏழு பாலை தாண்டி ஓர் அரக்கனின் உயிரை ஒரு கிளிக்குள் மறைத்துவைப்பதுபோல்தான் இங்கே எல்லா கதைகளும் குழந்தைகளுக்காக சுவாரஸ்யப்படுத்தப்படுகின்றன. ஆனால், எஸ்.செந்தில்குமார் மிக ஜாக்கிரதையாக அப்படி ஒரு சுவாரஸ்யத்தை இந்தக் கதையில் மறைத்துவைக்கிறார். பொதுவாக, ஆங்கிலேயர்கள் என்றாலே சமூகம் நமக்குள் ஏற்படுத்தியிருக்கும் பிம்பமானது, அவர்கள் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள் என்ற ஒற்றை நெகட்டிவ் இமேஜ்தான். ஆனால், அவர்களுக்கும் குடும்ப அமைப்பு என்ற ஒன்று இருந்திருக்கிறது; அவர்களும் உறவுகளைப் பிரிந்துவந்து அதனால் நிறைய கஷ்டப்பட்டிருக்கிறார்கள் என்பதெல்லாம், அவ்வளவாக நம் கவனத்தில் கொள்ளப்படாத ஒன்று. கதையில் பெரும்பாலான பாத்திரங்கள் ஆங்கிலேயர்கள். லண்டனிலிருந்து குடும்பத்தைவிட்டுப் பிரிந்து இந்தியாவுக்கு வந்திருக்கும் தகப்பனும் மகனுமாய் இரு கதாபாத்திரங்கள். முறையே டேவிஸ்சன், பிலிப். கதை ஆரம்பத்தில் இரவில் மட்டும் தெரியும் ஒரு வீடு பகலில் மறைந்துவிடுவதாக சிலரின் செவிவழிச் செய்தியில் கேள்விப்பட்டு அவ்வீட்டைக் காண மூன்று ஆங்கிலேயர்கள் இந்தியக் கிராமம் ஒன்றுக்கு வருகிறார்கள். அவர்கள் தொடர்புகொள்வது அந்தத் தகப்பனையும் மகனையும். அவர்களுக்கும் அந்த வியப்பு தொற்றிக்கொள்ளப் பகலில் மறையும் வீட்டைக் காணப் புறப்படுகிறார்கள். இதற்கிடையில் லண்டனில் இருக்கும் தாயும் ஒரே மகளும் சந்திக்கும் வறுமை டேவிஸ்சன்னுக்கு எழுதும் கடிதங்களின் வழி சொல்லப்படுகிறது. கூடவே ஓர் ஆங்கில இளைஞனுக்கும் இந்திய இளைஞிக்கும் இடையில் உண்டாகும் காதலும் அது தோல்வியுறுதலும் கதையோட்டத்தில் சொல்லப்படுகிறது. இதில் கவனிக்க வேண்டிய ஒன்று, இப்படிப் பல கிளைக்கதைகள் பிரிந்தாலும் முக்கியமான மறையும் வீடு எல்லா இடத்திலும் தொடர்ந்தே வருகிறது. கதாபாத்திரங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பை வாசகர்களாகிய நமக்கும் தந்து, அந்த வீட்டைக் காணும் ஆவலைத் தூண்டுகிறார் கதாசிரியர். ஒருவழியாய் அனைவரும் அந்த வீட்டைக் கண்டடைகிறார்கள். நிஜமாகவே மாலை மங்கி இரவு தொடங்கும் நேரத்தில்தான் அவ்வீடு கண்ணுக்குப் புலப்படுகிறது. அதிசயத்தைக் காண்பவர்கள் அதன் காரணியையும் கண்டுபிடிக்கிறார்கள். புனைவின் விறுவிறுப்பு எள்ளளவும் குறையாமல் கொண்டுசெல்வதோடு கதையின் முடிவிலும் கதை முடியாத சில ரகசியங்களைப் பொதிந்துவைப்பதுமாய் எஸ்.செந்தில்குமார் பாட்டிகளின் கதைக்குக் கொஞ்சமும் குறையாத சுவாரஸ்யத்தைச் சொல்லியிருப்பார்.

மனதில் தீ சுமந்து திரிதல் - கணேசகுமாரன்

கோணங்கியின் ‘மீதமிருக்கும் விஸ்கியுடன் பாடிக்கொண்டிரு’

கோணங்கியின் எழுத்து என்பது பலராலும் விரும்ப முடியாத, எளிதில் அணுகமுடியாத ஒன்று என்ற கற்பிதம் உள்ளது. அவரின் ஒரு பத்தியில் உள்ள பத்து வரிகளில் ஒற்றை வரியில் மொத்த நாவலுக்கான விளக்கம் அடங்கியிருக்கும். ‘பசுவின் முகத்தில் காடு அசைந்தது’ என்று ஒரு கதையில் ஒரு வரி எழுதியிருப்பார். கதை ஞாபகமில்லை. வரி ஞாபகமிருக்கிறது. அது இழந்த காட்டை, தொலைத்த இருப்பிடத்தை, வாழ்ந்த வாழ்வை என அனைத்தையும் ஞாபகப்படுத்திப்போகும் ஒற்றை வரி. இப்படித்தான் இந்தக் கதையிலும் ஒரு மாயம் நிகழ்த்தியிருப்பார். தனுஷ்கோடிக்கு அருகில் இருக்கும் விடுதியொன்றில் அறை எடுத்துத் தங்கும் ஒருவன் மொட்டை மாடிக்குச் சென்று மது அருந்துகிறான். மறுநாள் மனம் போன போக்கில் தனுஷ்கோடி நோக்கிச் செல்கிறான். இந்த இரண்டு வரிகளுக்கு நடுவில்தான் தனுஷ்கோடி ஊழியில் கரைந்துபோன ஒரு முதியவரும் அவரின் நாயும் வருகிறார்கள். அதுவும் அருவமாக. அந்தக் கிழவன் தன் நாயின் நிழலிடம் வாழ்ந்த கதை பேசுகிறான். நாயின் நிழலும் அவனிடம் உரையாடுகிறது. நேரடியான மொழியில் எதையும் சொல்லிவிடாத கோணங்கியின் மொழியில், விடுதியில் தங்குபவன்தான் அக்கிழவனா, வாழ்வின் போதாமையும் எல்லாம் வெறுத்த மனத் துறவும்தான் அவனை மீண்டும் தனுஷ்கோடிக்கே அழைத்துச் செல்கிறதா? எல்லாமே கேள்விகள்தான். விடையறிய ஓர் இரவாவது தனுஷ்கோடியின் சிதைந்த சர்ச்சினுள் நாம் உறங்கி விழிக்க வேண்டும். தனுஷ்கோடிக்கான இரவென்பது பிற நகரங்களின் இரவினைப்போல் அல்ல. இந்தக் கதையில் முடிவில்லை. கோணங்கி கூறும் முடிவினைத் தொடர்ந்து நாம் ஒரு கவிதை எழுதலாம்; இன்னொரு கதை எழுதலாம்; ஒரு நாவலே எழுதலாம். அதற்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். தனுஷ்கோடிக் கடற்கரைக் காகங்களுடன் உணவுண்டு, அங்கே அலையும் பைத்திய நாயின் வெளிறிய மஞ்சள் கண்களைப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். அவ்வளவே. தெரிந்திருந்தால் இக்கதை சொல்லும் வலி நமக்குப் புரியும். கோணங்கி தனுஷ்கோடிக்குச் செல்லும் போதெல்லாம் ஒரு முதியவர் அவரைத் துரத்தியிருக்கிறார். கோணங்கியிடம் தன் கதையைச் சொல்லி அழுதிருக்கிறார். ஓர் அழுகையை மண்ணுக்குள் புதைக்க வேண்டி கோணங்கி தேர்ந்தெடுத்த வழிதான் இந்தக் கதை. ஒரு நிஜம் புனைவாய் மாறும்போது அதன் கலைத்தன்மையில் அமானுஷ்யத் தன்மையை எந்த அளவுக்கு அனுமதிக்கலாம் என்பதற்கு உதாரணம் இந்தக் கதை. வாழ்வின் எல்லா வரிகளிலும் நாம் விழிப்படைந்த நிலையில் வாழ்ந்துவிட முடியாது. நனவிலி மனதுடன் சில காட்சிகளை நாம் அனுமதித்தே ஆக வேண்டும். இல்லை யெனில் வாழ்வு சுவாரஸ்ய மற்றுப் போய்விடும்.

 பிரபஞ்சனின் ‘சின்னி’

 ஆணோ, பெண்ணோ - குறிப்பிட்ட வயதில் ஹார்மோன் மாற்றத்துக்கு உள்ளாவார்கள். ஆண் என்றால், மீசை அரும்பி குரல் உடைந்து தன் முதிர்ச்சியை எட்டுவான். பெண்ணோ, பூப்படைவாள். கதையில் வரும் சின்னியும் அந்த வயதையும் மாற்றத்தையும் அடைகிறான். ஆனால், வேறுவிதமாக. சாலையோர ஹோட்டல் ஒன்றில் வேலை பார்க்கும் சின்னிக்கு இரண்டு பழக்கம் உண்டு. ஒன்று, சாப்பாட்டு மேசையைத் துடைக்கும் துண்டினை மாராப்புபோல நெஞ்சின் மீது போட்டுக்கொள்வது. இன்னொன்று, காலைக்கடன் கழிக்க ஆற்றங்கரைக்குச் செல்லும்போது அங்கே வரும் பிற ஆண்களின் குறி மற்றும் புட்டம் பார்ப்பது. சின்னிக்கு ஆண்களை மட்டும் பிடித்துப்போக சிறப்புக் காரணம் எதுவுமில்லை. அவன் சின்னி. அவ்வளவே. ஹோட்டலுக்குத் தினம் சாப்பிட வரும் லாரி டிரைவர் பாண்டியனின் கண்களில்படுகிறான் சின்னி. சொல்லப்போனால், சின்னியின் கண்களுக்குத்தான் பாண்டி மன்மதனாகத் தெரிகிறான். சின்னியின் ஆவலைப் பாண்டியன் ஓர் இரவு பூர்த்தி செய்கிறான். சின்னிக்கு மறுநாள் கைகால் ஓடவில்லை. தன்மேல் படர்ந்து தன் உடலைக் கைக்கொண்ட பாண்டியின் ஞாபகத்திலேயே கிடக்கிறான். பாண்டியும் அநேக இரவுகளில் சின்னியின் ஆசையைத் தொடர்ந்து பூர்த்தி செய்கிறான். சின்னி, தான் பிறவி எடுத்ததே பாண்டியனுக்காகத்தான் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்கிறான். ஒருநாள் பாண்டியன் வரவில்லை. தொடர்ந்து ஒரு வாரமாகப் பாண்டியன் வராமல் போகவே, அவனைத் தேடி சின்னி அவன் இருக்கும் ஊருக்குச் செல்கிறான். அங்கே பாண்டியைப் பார்க்கும் சின்னி  மிகுந்த சந்தோசம்கொள்கிறான். பாண்டிக்குத் தெரியாமல் அவனைப் பின்தொடர்கிறான். பாண்டியனுக்குத் தன் வரவு சர்ப்ரைஸாக இருக்க வேண்டுமென்று சின்னி செய்யும் செயல் அவன் தலையிலேயே இடி விழச் செய்கிறது. பாண்டியன் செல்வது ஒரு பெண்ணின் வீட்டுக்கு. அங்கே பாண்டியன் அவளுடன் ஒன்றாய் இருப்பதைப் பார்க்கும் சின்னி அதிர்ச்சியுடன் தன் ஊருக்குத் திரும்புகிறான். பாண்டி தனக்குத் துரோகம் செய்துவிட்டதாக நினைத்து அழும் சின்னிக்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது. பாண்டியனுடன் ‘வாழ்ந்த’ நாள்களை நினைத்தபடியே இறந்து போகிறான். கதை செல்லும் வேகத்தில் ஏதாவது ஓர் இடத்தில் எல்லாம் மாறும்; திடீரென்று எல்லாமே நல்லதாய் நிகழும் என்ற நம்பிக்கை நம் மனதில் தோன்றிக்கொண்டேயிருக்கும். ஆனால், அப்படி எதுவும் நிகழாது. சின்னி தன் நிலை உணர்ந்து சகஜமாகிவிடுவான்; அவன் வாழ்க்கை எதிர்பாராத ஒரு புள்ளியில் நிறைவடையும் என்ற நம்பிக்கையும் தோன்றும். அப்படி எதுவும் நிகழாது. கதை வாசித்து முடித்ததும் நமக்குள் ஆயிரம் கேள்விகள் சுற்றியடிக்கும். இதில் எங்கே தவறு நடந்தது? பாண்டியன் செய்தது தவறா... இல்லை சின்னியின் பிறப்பு தவறா? எதுவுமே தவறு இல்லை. எல்லாம் அதனதன் இயல்புப்படியே நிகழ்கிறது என்பதற்கு சாட்சியாய் இன்றும் பல பாண்டியன்களும் சின்னிகளும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதே நிதர்சனம்.

மனதில் தீ சுமந்து திரிதல் - கணேசகுமாரன்எஸ்.ராமகிருஷ்ணனின் ‘பால்யநதி’


காமம், இச்சை, சம்போகம், குற்றஉணர்வு, துறவு என அனைத்தையும் புத்தனின் வாயிலாகச் சொல்லவைத்ததில்தான் தனித்து நிற்கிறது கதை. சித்தார்த்தன் எதற்காகப் புத்தன் ஆனான்? இந்தக் கேள்விக்குப் பதில் ஒரே ஒருவருக்குத்தான் தெரியும். அது புத்தன். அவன் யசோதரையை நள்ளிரவில் விட்டு நீங்குவதற்கு ஏன் காமமும் ஒரு காரணமாய் இருக்கக் கூடாது? புத்தன் பதில் சொல்லாதபோது யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் யூகிக்கலாம். பெளத்த சீடர்களாய் இரு கதாபாத்திரங்கள். வாகீசனும் யசனும் துறவு மேற்கொள்ளச் செய்யும் பயணமே கதை. கண்களை மூடி அமர்ந்துவிட்ட கெளதம சித்தார்த்தன் மனதில் என்ன இருந்ததோ... தீராக் காம நதியில் அலைக்கழிக்கப்பட்ட வாகீசன் ஒரு வழியாய்க் கண்கள் மூடி துறவின் உச்சம் அடைகிறான். பிரச்னையெல்லாம் யசனுக்குத்தான். யாத்திரையெங்கும் அவனுக்குள் காமம் குமிழியிட்டபடி இருக்கிறது. சுற்றிலும் நிரம்பியுள்ள பனி சூழ்ந்த யாத்திரைப் பாதையில் மனதுள் தீ சுமந்து திரியும் யசன், கதை முடிவில் நதியிடம் தன் உடலை ஒப்புக்கொடுத்து புத்தனின் மெளனத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கிறான். ஒரு கொடுங்கோடையில் இந்தக் கதை படித்ததாய் ஞாபகம். முழுவதும் வாசித்து முடித்ததும் முதலில் நான் உணர்ந்தது என்னைச் சுற்றிலும் இருந்த பனிச் சில்லிப்பு. ஒரு புனைவு இப்படியான புற உணர்வைத் தர முடியுமா என்பதே பெரும் ஆச்சர்யமாக இருந்தது. பொதுவாக, சிறுகதை வாசிப்பின் முடிவில் அகரீதியான பாதிப்புகள் உள்ளிருந்து நீளும். அது இயல்பு. முதன்முறையாக துறவு மேற்கொள்ளாமலே புத்தனிடம் இருந்த குளிர்மையை அனுபவிக்கவைத்தது இந்தக் கதை.

இந்த வரிசையில் சந்திராவின் ‘அழகம்மா’, என்.ஸ்ரீராமின் ‘சொட்டாங்கல்’, மு.ஹரிகிருஷ்ணனின் ‘நாய்வாயி சீல’, இமையம் எழுதிய ‘சாவுசோறு’ போன்ற கதைகளும் மனதுக்குள் நிற்பவையே. டிஜிட்டல் புரட்சி நடந்த பின் வாசிப்புக் குறைந்துவிடும் என்று சொல்லப்பட்ட யூகம் பொய்த்து, இன்று அதை ஒட்டிய கதைகளும் கவிதைகளுமாக வலம் வரத் தொடங்கியிருப்பதோடு வாசிப்பும் அதிகரித்திருக்கிறது என்பதுதான் சுவாரஸ்ய உண்மை.மேலும், பா.திருச்செந்தாழை, கே.என்.செந்தில், கார்த்திகைப் பாண்டியன் போன்றவர்கள் அவரவர்களுக்கான உலகத்தை எழுத்தின் வழியே நமக்கு அறிமுகப்படுத்திக் கொண்டேதான் இருக்கிறார்கள். அன்டன் செக்காவின் எழுத்துச் சித்திரத்தை திருச்செந்தாழையின் கதைகளில் காண முடிகிறது. மு.ஹரிகிருஷ்ணனோ வட்டார வழக்கில் ஊடுருவி நாம் அறிய முடியாத அரிய மனிதர்களைத் தன் எழுத்தின் மூலம் முன்வைக்கிறார். பலவிதமான பரிசோதனை முயற்சிகளில் பலரும் தொடர்ந்து செயல்பட்டவண்ணம் இருக்கிறார்கள். புதிதாய் எழுதவருகிறவர்கள் இன்னும் இன்னுமான வாழ்க்கையை அறிமுகப்படுத்துவதில் இருந்தே புரிந்து கொள்ளலாம் தமிழ்ச் சிறுகதைகளுக்கான வெளியையும் இருப்பையும்.