Published:Updated:

மூன்று சீலைகள் - நரன்

மூன்று சீலைகள் - நரன்
பிரீமியம் ஸ்டோரி
News
மூன்று சீலைகள் - நரன்

ஓவியங்கள் : ரவி

ச்சி வெயிலில் கருநாயொன்று அண்ணாந்து, ஆகாசத்தை நோக்கி மூஞ்சியைத் தூக்கி ஊளையிட்டது. பின் கொஞ்சம் இடைவெளிவிட்டு ஊளையிட்டபடியே காசியின் நிழலைத் தொடர்ந்தது. கண் முன்னே வெயில் அலைபோலத் திரிந்துகொண்டிருந்தது. கருவேலம் மண்டிக்கிடக்கும் நீரற்ற கண்மாய்க்குள் இறங்கி, முழங்காலுக்குக் கீழே முட்கள் காலில் கிழிப்பதைப் பொருட்படுத்தாது, சுரத்தே இல்லாமல் நடந்துகொண்டிருந்தான் காசி. 

காசியின் செருப்பில்லாத கால்களில் புழுதி அப்பிக்கிடந்தது. எப்போதோ கால்கள் கல்லில் எத்தி, பெருவிரலில் ரத்தம் வழிந்து உறைந்திருந்தது. மூன்றோ, நான்கோ அழுக்கேறிப்போன கிழிந்த வேஷ்டிகளை இடுப்பில் சுற்றியிருந்தான். கிழிசல்கள் நடுவே கட்டம்போட்ட லுங்கி ஒன்று. `உள்ளே நானும் இருக்கிறேன்’ என்பதுபோல் தெரிந்தது. மெலிந்த முரட்டு தேகம். பல ஆண்டுகளாக உறக்கத்தைத் தேக்கி வைத்திருப்பவனைப்போல் எப்போதும் உறக்கச் சொக்கு நிறைந்த கண்கள். தலையிலும் முகத்திலும் கொயகொயவெனச் செம்பட்டையும் சிக்கும் பிடித்த முடிகள்.

காசி, எப்போதும் கையோடு எடுத்துக்கொண்டு திரியும் அழுக்குப் பொதிக்குள் மூன்று சீலைகளை  வைத்திருந்தான். மூன்றிலும் வெவ்வேறு தன்மை, நிறம், வாசம்... உருவி வெளியே எடுத்துப்போட்ட பெரிய மிருகம் ஒன்றின் குடல்கள்போல் ஒழுங்கற்றுக் கிடந்தன. அதற்குள் வேறு சில பொருள்களும்  இருந்தன. வேறு வேறு அளவுகளில், நிறங்களில்  முழு வட்டமாய், அரைவட்டமாய்,  சில்லுகளாய் கொஞ்சம் கண்ணாடி வளையல்கள், கருத்த சிரட்டைப் பொட்டு, காய்ந்த ரோஜாச் சருகு மாலை ஒன்று, உரசுக்குச்சிகள் இல்லாத காலித் தீப்பெட்டிகள், சட்டகக் கண்ணாடி உடைந்து உள்ளே புகைப்படத்தில் எங்கேயோ பார்த்தபடியிருக்கும் குழந்தையின் கறுப்புவெள்ளைப் புகைப்படம்.

மூன்று சீலைகள் - நரன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இறுதியாக, அம்மையும் இறந்த பின்னால் அவனுக்கு மனப்பிசகு என்பதுபோல் ஊரில் பேசினார்கள். அது உண்மைதான் என்பதுபோலவே அவனும் அதற்குப் பிறகு தெற்குத் தெருவுக்குள் நுழைவதில்லை. அம்மாவின் சீலை மட்டும் இறந்த உடலிலிருந்து அவிழ்த்துப்போட்ட ஈரச் சுருக்கத்தோடு ஜன்னல் கம்பியில் கட்டப்பட்ட கயிற்றுக்கொடியில் தொங்கியது. மற்ற இரண்டு சீலைகளை அப்பாவின் மரப்பெட்டிக்குள் இருந்து வெளியே எடுத்தான்.                   

அம்மாவின் சீலை தளிர் வெற்றிலை நிறம். முழுக்க விரித்துப்போட்டால், வாரத்துக்கு முன் புதிய நாத்தூன்றிய வயற்காட்டைப்போல் இருக்கும். அம்மாவைப்போலவே முரட்டுக் கைத்தறிச் சீலை அது. எடுத்து அதன் நடுப்புறத்தை விரித்து கோம்பை நாயைப்போல, நாசி விடைக்க அவன் அதை நுகர்ந்து பார்க்கும்போது எல்லாம் தீட்டுக் கவிச்சியோடு அம்மாவின் வாடையடிக்கும். தீர்மானமாகச் சாவதற்கு முன்பான அவளின் கடைசி விடாய்க் காலமாய் இருந்திருக்க வேண்டும். அம்மா புளியிட்டு நன்கு தேய்த்து விளக்கிய பித்தளை நிறம்.     

மூன்று சீலைகள் - நரன்


இரவெல்லாம் அடைமழை பெய்த நாள் ஒன்றில், ஊரே கதவையும் ஜன்னலையும் இறுக்க மூடியிருந்த பேயிருட்டு ஜாமத்தில், தன் கதவைச் சத்தமின்றி திறந்து வீட்டை விட்டு நீங்கினாள். அவள் தன் இறுதி நாள் குளியலைப் பச்சையாய் பாசிநீர் படிந்த புழக்கமற்ற கிணற்றுக்குள் தலை குப்புற  விழுந்து இரண்டு நாட்களாகக் குளித்தாள். மூன்றாம் நாள், விரிந்தமுடி பிரிபிரியாகக் கிணற்றின் நான்கு திசைக்கும் கிடந்தது. மரத் தக்கையைப்போல மிதந்த அவளது முதுகின் மீது ஒரு பெரிய தவளை ஒன்று ஏறி அமர்ந்திருந்தது. தவளையின் அசைவு அவள் உடலில் அப்போதும் உயிர் இருப்பதைப் போலவே ஏமாற்றியது.

ரவில் ஊரின் வெளிப்புறத்தில் ஒற்றைக் கல்விளக்கு எரியும் மண்டபத்தில்தான் வாசம். நாய்கள் அவனைப் பார்த்து ஏனோ குறைப்பதில்லை. வெயிலில் அலைந்து காசியின் உடலெல்லாம் உப்பரித்துக் கிடக்கும். நாய்கள் எப்போதாவது அவன் உடலிலிருக்கும் உப்பை நக்கும். அவனோடு திரியும் எல்லா நாய்களும் அந்த உப்புச்சுவை பழகியவை. அவனும் பிரயாசையோடு நக்கக் கொடுப்பான். அரிதான சமயங்களில் கொஞ்சமாய் நீரிருக்கும் கண்மாயின் தெற்கு மூலையில் விறுவிறுவென நீரைக் கிழித்துக்கொண்டு நடந்து இடுப்புளவு நீரில்  ஒரே முங்கு. உடனே வெளியேறிவிடுவான். ஈரம் சொட்டச் சொட்ட நடந்துபோகிறவனை வெயில் துவட்டிவிடும். அந்த வழியில் ஊர்க்காரர்கள் எப்போதாவது கடந்தால்,  அவன் கண்ணை நேருக்குநேர் பார்க்காமல் முகத்தை இறுக்கமும் மௌனமுமாய் வைத்துக்கொண்டு கடந்துபோவார்கள். 

பல நேரம் பிடிப்பற்று உறைந்த பார்வையால், எதையாவது பார்த்துக் கொண்டிருப்பான். கரும்பனையோ, அரணையோ, காட்டுப் பறவையோ, நெளி பாம்போ அப்படி ஏதோவொன்றில் குத்தி நிற்கும் அவன் விழிகள். எப்போதாவது அந்தத் திசைக்கு மயில்கள் வரும்; அப்போது வேகமாகப் பொதியைப் பிரித்து, குட்டிப் பாப்பாவின் சீலையை எடுத்துப் பார்ப்பான். குட்டிப் பாப்பாவின் சீலை, மயில் கழுத்து நிறத்தில் இருந்தது. அந்தச் சீலைதான் மயிலாய் மாறி நகர்ந்துபோய்விட்டதோ என்பது போலிருக்கும் அவனுக்கு.

மயில் சீலை முழுக்கப் பிஞ்சு வாசமும்  நோய் வீச்சமும் அடித்தது. குட்டிப் பாப்பாவுக்குப் பெயர்வைக்க  முடியாத ஏதோ ஒரு நோய். தேய்மானமான உடல். சொஸ்தமடைய வாய்ப்பில்லை என்றபோதும், அம்மா அவளை நன்றாகப் பராமரித்தாள். கோணல் வாய், உண்ணவும் கழிக்கவும் கழுவவும் நிச்சயம் யாராவது வேண்டும். கிடத்திய இடத்தில் படுத்தபடிஇருப்பாள். ஊரில் அவளின் வயதுப் பெண்களில் பாதிக்குமேல் திருமணம் கழிந்தாகிவிட்டது. ஒருநாள் காசியின் அம்மா அவளுக்கு இந்த மயில் சீலையை வாங்கிவந்து உடுத்திவிட்டாள். குட்டிப் பாப்பா கிட்டத்தட்ட அந்தச் சீலைக்குள் புதைந்துகிடந்தாள். அப்படித்தான் சொல்ல வேண்டும். அவளுக்குப் பிடித்திருக்க வேண்டும்; முகமெல்லாம் சிரிப்பாய்  இருந்தாள். அன்று எங்கிருந்தோ குட்டிப் பாப்பாவுக்கு மிகவும் பிடித்திருந்த கறுப்புத் திராட்சைக் கொத்துகள் வாங்கி வந்திருந்தாள். வீட்டைக் கழுவி, முக்கோண மாடக் குழிக்குள் விளக்குவைத்து, குட்டிப் பாப்பாவின் சூம்பிய முடியில் நிறைய பூ கோத்துச் சூட்டினாள். பூ வாசனையைத் தாண்டியும் வீட்டில் நோய்மையின் வீச்சம் அடித்தது. அன்று குட்டிப் பாப்பா நிறைந்த வெளிச்சமாக இருந்தாள். அம்மா நள்ளிரவு சோறு போட்டுக்கொண்டே சொன்னாள். குட்டிப் பாப்பாவின் முகம் சாவுக்களை கண்டுவிட்டது. அதுபோலவே அடுத்த பதினொன்றாம் நாள் விடிகையில் இறந்துகிடந்தாள் குட்டிப் பாப்பா.

மூன்று சீலைகள் - நரன்

மூணாவது சீலை யாருடையது என்று சொன்னால் நம்ப மாட்டீர்கள். அது காசியின் அப்பனுடையது. உண்மைதான், மோந்து பாருங்கள். அதில் சகாய விலைப் பவுடரும் ஓர் ஆணின் முரட்டு வியர்வைக் கவிச்சியும் அடிக்கும். 

பகலில் காசி, கண்மாயின் எதிர்க் கரையிலிருக்கும்  கனமான மதகின் அருகில் கிடப்பான். பழைய மரத்தாலான திடகாத்திரமான மதகை வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கையில் காசிக்குக் குறுக்குக் கட்டையாய் இருந்த வீட்டின் மர உத்திரம்தான் ஞாபகத்துக்கு வரும். உடனே பொதியைப் பிரித்து அப்பனின்  சீலையைத் தேடுவான். கேப்பையின் நிறத்தில் நாசூக்கான சீலை. நிறையப் பூக்கள் அதில் பூத்திருந்தன. எடை குறைவு; மிருது.

அப்பா குறுமிளகின் நிறத்தில் இருந்தார். மெலிந்த குரலும் தேகமும் அவருக்கு. கை பார்ப்பார். ஓரளவு சரியாகச் சொல்வார். ஆனால், ஜோடனையாகச் சொல்ல வராது. பெரும்பாலும் ஓசிக்குதான் பார்ப்பார். சில நேரம் வெத்திலைக்கும் களிப்பாக்குக்கும் ரெண்டு வார்த்தைகள் சேர்த்துச் சொல்வார். சோடாவுக்கு என்றால் எத்தனை தாரம்,  வம்ச நீட்சி, ஆண் குழந்தை யோகம், பரிகாரம் வரை சொல்வார். மங்கிய வெள்ளையாக உடுத்துவார். பிடரிவரை சுருள்சுருள் முடிகள். திருநீறிட்டுக் கொள்வார். துளி மயிரற்ற சுத்த முகச்சவரம். பல்லெல்லாம் வெற்றிலைக் காவி.       

மாட்டுக்குச் சுழி பார்ப்பார். சமையல் வேலை,  நிலத்தரகு, மாட்டுத் தரகு.  ஆனால், நெற்றிக்காசு சம்பாத்தியம்கூட வீடு வந்ததில்லை. ஒருமுறை மட்டும் மாட்டுத் தரகு பார்த்து மூத்த மகள் கோமதிக்கு ஓர் எடை குறைந்த கால் கொலுசு வாங்கும் தொகையை மரப்பெட்டியில் வைத்திருந்தார். வாரக் கடைசியில் போய் ஆசாரியைப் பார்க்கலாம் என்று நினைத்திருந்தபோது, வாங்கிக் கொடுத்த பசு, கோமாரி வந்து பால்மடியில் கொப்புளமும், வாயில் எச்சில் சுரப்பும் அதிகமாகி  விழுந்து சரிந்தது . பசு இறந்தது வம்ச இருள் என்று சொல்லி, வேங்கடய்யரின் சம்சாரம் வாசலில் மண்ணள்ளித் தூற்றினாள். தரகுத் தொகையை மகள் கோமதியிடம் திருப்பிக்கொடுத்தனுப்பினார்.

மாரியம்மன் கோயில் ஏழாம்  திருவிழா நாளில் எல்லோரும் ஆசையாகக் கூத்துப்  பார்க்க

மூன்று சீலைகள் - நரன்

உட்கார்ந்திருந்தபோது, கூத்தில் ராணி வேடமிட்டவளின் தோழியாகச் சீலை அணிந்து பெண் வேடமிட்டு ஒவ்வோர் அசைவிலும் நளினம் மிளிர நடித்துக் கொண்டிருந்த அப்பாவை, அம்மா அடையாளம் கண்டுவிட்டாள். அவள் இவ்வளவு நளினமாக அவரைப் பார்த்ததில்லை. பிள்ளைகளும்தான். கோமதியைக் கிளம்பச் சொல்லி, உட்கார விரித்திருந்த உரச்சாக்கை எடுத்துக்கொண்டு கிளம்பினாள் அம்மா. காசி வரவில்லை எனச் சொல்லிவிட்டான். பதினைந்து வயதுக்காரனை முதுகில் அறைந்து  இழுத்துப் போனாள். திருவிழா பந்தலைப் பிரிக்கும்வரை அப்பன் வீடு திரும்பவில்லை. அதன் பிறகு, பல காலமாய் இருவருக்கும் வார்த்தைப் புழக்கமற்று இருந்தது. அவரும் நிறைய இரவுகளில் வீடு தங்குவதில்லை. கரகாட்டம், கூத்து செட்டுகளோடு திரிந்தார்.

வீடு, கெதியற்ற, சம்பாத்தியமற்ற ஆண்களால் இருந்தது. அம்மா இறுக்கமும், வைராக்கியமுமானவள். ஏதேதோ வேலைசெய்து மூத்தமகள் கோமதியைக் கரையேற்றினாள். காசியும் இருபத்தியேழு வயது வரை எந்த வேலைக்கும் போகாதிருந்தான். ஏதும் கேட்காமல் அம்மா சோறிட்டாள்.

குட்டிப் பாப்பா இறந்த அடுத்த வாரம், அப்பா தன் கையை விரித்துப் பார்த்துக்கொண்டே இருந்தார். விரிந்த கையில் பெரிய வெற்றிலை நரம்புகள் போலிருந்த பள்ளமான கோடுகளைக் கணிக்கப் பார்த்தார்.

எவருக்கும் தனக்குத்தானே கைப்பார்த்துக்கொள்ள முடியாது. சொந்தக் கை ஏமாற்றும். வீட்டில் கோமதிக்கு மட்டுமே ஜாதகம் இருந்தது. ஓரங்களில் மஞ்சள் தடவிய ருது ஜாதகத்தை எடுத்துக்கொண்டு சடாச்சாரத்திடம் போனார். உச்சிவெயிலில் திரும்ப வீடடைந்தவர், ஒற்றை மரக்கதவைத் தாழிட்டு, பூக்கள் நிறைந்த சீலையால் முடிச்சிட்டு உத்திரத்தில் தொங்கினார். கழுத்தில் காட்டுக்கொடி ஒன்று  சுற்றியிருப்பது போலிருந்தது. அடுத்த சில மாதத்தில் அம்மாவும்! அவள் இறந்த காரணம் மட்டும் காசிக்குக் கடைசிவரை மட்டுப்படவே இல்லை. 

மூன்று சீலைகள் - நரன்

வருஷம் திரும்புவதற்குள் அடுத்தடுத்து மூன்று சாவுகள். ஓன்று விட்டத்தில், ஓன்று சமதளத்தில், அம்மா கிணற்றுப் பள்ளத்துக்குள். வீடு,  இருள் அப்பி பராமரிப் பின்றி வசிக்க ஏதுவற்றுக் கிடந்தது. ரெட்டைத் திருணைபோட்ட அந்த வீட்டுக்கு எப்போதாவது மூத்தவள் கோமதி கிழக்கே சூரம்பட்டியிலிருந்து வருவாள். பேச்சி அத்தை வீட்டில் சாவி இருக்கும். வீட்டைப் பெருக்கி விளக்குப் பொருத்திவைத்தாலும், வீடு அச்சமூட்டும் பீடை நிறைந்துபோய் விட்டது. ஒருமுறை கதவைத் திறந்தபோது கூகை அடைந்திருந்தது.                       

பசிகொண்ட பொழுதுகளில், உரிமையாய் பேச்சி அத்தையின் வீட்டு ஆடாதோடா படலைக்கு வெளியே நிற்பான் காசி. கோமதி வரும்போதெல்லாம் தன் தம்பிக்கு  உணவளிக்கச் சொல்லி சோற்றுத்தொகை கொடுப்பாள். பேச்சி அத்தை வாங்கிக்கொள்ள மாட்டாள். சாமி விளக்கிருக்கும் சிறு மரத்திண்டில் கோமதி வைத்துவிட்டுப் போவாள்.

 காசி, ஆள்அண்டாப் பிறவியாய் இருந்தான். சிறு தொடுதலுக்கும் சுருங்கிக்கொள்ளும் ரயில்பூச்சி ரகம். பல நேரம் வீட்டைவிட்டுக் கிளம்ப ஆயத்தமாகியிருக்கிறான். வடக்குச் சாலையில் இலக்கின்றி நடந்தாலோ, கிழக்குப்பக்கம் நீண்ட தனிமையைப் போலிருக்கும் சரளைக் கற்களுக்குள் கிடக்கும் இரும்புத் தண்டவாளங்களைத் தொடர்ந்தாலோ, எல்லா ஊர்களுக்கும் போய்விடலாம் என்று நினைத்தான். ஆனால், என்னவென்று சொல்லத் தெரியாத ஏதோ ஓன்று தடுத்துக்கொண்டே இருந்தது. அவனால் ஊர் எல்லையைத் தாண்டக்கூட திராணி இல்லை. முதுகுப்புறமாகத் திரும்பி நடந்து மீண்டும் வீடு வந்துவிடுவான்.

உத்தேசித்திருந்த இடத்துக்கு வந்துவிட்டான். வேம்பு மரத்தின் நிழலில் நின்று பொதியைப் பிரித்து சீலைகளை எடுத்தான். ஜடை பின்னுவதுபோல மூன்று சீலைகளையும்  முறுக்கினான். அதை மரத்தின் கிளையில் இரு புறத்திலும் கோத்து ஊஞ்சல் சுற்றினான். வேகவேகமாகச் சுற்றினான். இருபுறமும் சுற்றிக்கொண்டு ஒரே பிரியாகப் பின்னிக்கொண்டு நேர்க்கோடாக அவன் தலை வரை வந்துவிட்டது. கால்களைக் குறுக்கிக்கொண்டு வெறுமென  இருந்தான். முறுக்கல் திரும்பிச் சுழன்றது. வேகமாக கிறுகிறுவெனச் சுற்ற... தலை சுற்றி திடுமெனக் கீழே விழுந்தான். முகத்தில் ஒட்டியிருந்த மண்ணோடு திரும்பிப் படுத்து ஆகாசத்தைப்  பார்த்தான். எல்லாமே சுழன்றது. பயம்கொண்டு கண்களை இறுக்கமாய் மூடிக்கொண்டான். வாயிலிருந்து எச்சில் கோழையாக வழிந்தது. துடைத்துக் கொள்ளவில்லை. சிறிது நேரத்தில் எழுந்து நின்றான். நிற்க  முடியவில்லை; கிறுகிறுப்பு கொண்டுபோய் தள்ளியது.
 
மரக்கிளையிலிருந்து கழற்றி மூன்று சீலைகளையும் தன் உடல்மேல் பிரித்துப் போட்டுக்கொண்டு கொஞ்ச நேரம் உறங்கினான். உறக்கம் என்றால், அது ஒரு பாசாங்கு உறக்கம். கண்களும் உடலும் மட்டும் மூடிக்கொண்டு ஊற்றுக்கண் திறக்காத நீர் மலைக்குள் அங்கேயும் இங்கேயுமாக அல்லாடிப் பாய்ந்து கொண்டிருப்பதுபோல. மனசு எதிலிருந்தோ விடுபட வேண்டும் என்ற நினைப்பு தீவிரமாக எழுந்தது.

விருட்டென எழுந்து அழுக்கு வேட்டிகளை உரித்துப்போட்டுவிட்டு மூன்று சீலைகளையும் ஒன்றின் மேலென்றாக உடுத்தினான். முதலில் தன் உடலின் மேல் அம்மாவின் தளிர் வெற்றிலை  நிறச் சீலை.பின் அப்பனின் பூக்கள் நிறைந்த சீலை. குட்டிப் பாப்பா மேலே கிடந்தாள். அவளின் மயில் கழுத்து நிறச் சீலை மேலே கிடந்தது.குட்டிப் பாப்பாவைத் தடவிக் கொடுத்துக்கொண்டே இருந்தான். ஒரு துண்டுக் காட்டை எடுத்து உடுத்திக்கொண்டதைப் போலிருந்தது.

சிறிது நேரத்தில் உடலிலிருந்து அனைத்தையும் உரித்துப்போட்டான். மீண்டும் எல்லா சீலைகளையும் முறுக்கி ஒரு முனையை மரத்திலும், மறுமுனையை  கழுத்திலும் கோத்து தன் உடலைத் தொங்கவிட்டான். நிர்வாணமாக உடல் ஏகாந்த ஊஞ்சல் ஆடியது. சிறிது நேரத்தில் அவனின் ஆண்குறியின் மீது ஓரிரு கடி எறும்புகள் ஏறிக்கொண்டிருந்தன. கீழே கருநிற நாய் அவன் உடலில் இருக்கும் உப்பை நக்க முடியாமல், அண்ணாந்து பார்த்து ஊளையிட்டது.