Published:Updated:

அடுத்து என்ன? - கரன் கார்க்கி

அடுத்து என்ன?  - கரன் கார்க்கி
பிரீமியம் ஸ்டோரி
News
அடுத்து என்ன? - கரன் கார்க்கி

வரலாற்றின் மீதெழும் புனைவுச் சித்திரம்படங்கள் : டி.அசோக்குமார்

சுற்றுப்புறத்தில் நடக்கும் ஏதோ ஒன்று தாக்கி, உள்ளம் ஓயாமல் கூக்குரலிடும். அதற்குப் பதிலளித்து ஆறுதல் தந்து அமைதியாக்கவே நான் எழுதுகிறேன். உள்ளத்திலிருந்து எழுத்தாய் வடித்த பின்னும்கூட உள்ளம் அமைதியடைவதே இல்லை. காரணம், போற்றக்கூடிய மானுட மாண்புகளும், மானுடத்துக்கு எதிரானவையும், பகலும் இரவுமாய் தனது நாடகங்களை இங்கே அரங்கேற்றியபடியே இருக்க, எழுதுகிறவன் பேனாவுடன் மேசைக்குப் போவது தவிர்க்க முடியாததாகிறது.

வழக்கமாக நான் எழுதத் தொடங்கும் முன் திட்டமிட்ட எதையும் இதுவரையும் எழுத முடிந்ததே இல்லை. ‘அறுபடும் விலங்கு’ புதினத்தில் மணியைப் பற்றி எழுதத் தொடங்க, அவர் பிணமான காட்சி தொடக்கத்திலேயே வந்து புதினம் முடியும்போது அவரின் பிணமேட்டிலேயே முடிந்தது. இடையிலே சாமுவேல், சங்கரன், விஜயா, பீமன் என வந்து அந்தப் புதினத்தை நிரப்பினார்கள். எப்போதும் இப்படித்தான் எழுத்தின் திசைவழிப் புதிர்கள்...

அடுத்து என்ன?  - கரன் கார்க்கி

எதைப்பற்றிப் பேசப் போகிறேன் என்பது ஓரளவு தீர்மானமாகியிருக்கும். படைப்பில் வரக்கூடிய முக்கியமான முகங்கள் மட்டும் எனக்கு உடல்மொழியோடு பளிச்செனத் தெரிய வேண்டும். அந்த முகங்களுக்கு உரியவர்கள் இப்போது என்னுடன் வாழ்பவர்களாகவோ அல்லது வாழ்ந்து முடித்தவர்களாகவோ இருக்கலாம். என் திட்டப்படி மீண்டும் அவர்கள் வாழத் தொடங்கிவிடுவார்கள். பிறகு, நான் வெறுமனே அவர்களைப் பின்தொடர வேண்டியதுதான்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அடுத்து என்ன?  - கரன் கார்க்கி


நான் வாசித்துக் கற்றதைவிடவும், எழுதுவது குறித்து ஒவ்வொரு புதினம் எழுதும்போதும் நிறைய கற்றுக் கொண்டேன் என உறுதியாகச் சொல்ல முடியும். அப்படிக் கற்ற படிப்பினைகளைக் கொண்டு தற்போது ‘மரப்பாலம்’ என்கிற தலைப்பில், இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் தமிழர்களுக்கு நடந்த பெருந்துயரமொன்றைப் புதினமாக்கிக் கொண்டிருக்கிறேன். வரலாற்றில் கால அளவில் நோக்கும்போது, 1940-கள் நமக்கு மிகச் சமீபம்தான். அப்போது நடந்த சயாம்-பர்மா ரயில் பாதை அமைக்கும் திட்டத்தில், அங்கு பணிபுரிந்த தமிழர்கள் சந்தித்தது மிகப்பெரும் கொடூரத் துயரம். ஆனால், அந்த வரலாறு குறித்து நம்மில் பெரும்பாலானோருக்குத் தெரியவேயில்லை என்பதுதான் வரலாற்றுச் சோகம்.

அந்த ரயில் பாதை அமைக்கும் சமயத்தில்,  ஜப்பானிய ராணுவத்தால் கொல்லப்பட்ட இரண்டு லட்சம் ஆசியர்களில் குறைந்த எண்ணிக்கையாக எடுத்துக்கொண்டாலும் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களை நினைவுகூரும் சின்னம் என்று ஒன்றுகூட அந்த நிலத்தில் இல்லை. அதே நேரம், நேசப்படைப் போர்க்கைதிகளான அமெரிக்க, பிரிட்டிஷ், ஆஸ்திரேலிய, டச்சுக்காரர்களில் 16,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.  ஆனால், அவர்களுக்கு நினைவுக் கற்களுடன்கூடிய பெரிய நினைவிடங்கள், பத்துக்கும் மேலான புதினங்கள், புகழ்பெற்ற திரைப்படங்கள் என ஏராளமான வரலாற்றுப் பதிவுகள் இன்று உள்ளன.

அடுத்து என்ன?  - கரன் கார்க்கி

வரலாற்றைத் தொலைத்த சமூகமாய் நாம் இருப்பதன் துயரத்தை நமது அடுத்த தலைமுறைக்கும் விட்டுச் செல்லப் போகிறோம். அந்தத் துயரத்தின் சிறு புள்ளியைக் கலைவதற்கான முயற்சியாகவே மரப்பாலத்தை 2014-ம் ஆண்டில் தொடங்கி எழுதி வருகிறேன். இதுவும் வரலாற்றின் மீதெழும் புனைவுச் சித்திரம்தான் என்றாலும், உணவு, உடை, கட்டடத் தொழில்நுட்பம், அந்த நாள்களின் போர்க் கருவிகள், தளபதிகள், சண்டைகளென நிறைய விவரச் சேகரிப்புகள், ஆண்டுகளும் சம்பவங்களும் துல்லியமாக ஒத்துப்போக வேண்டும்... என்னளவில் இது கடின முயற்சியே.

இரண்டாம் உலகப்போர் குறித்த ஒரு விரிவான சித்திரத்தைக் காட்ட முயல்கிறேன். பிழைப்புக்காகக் கடல் கடந்தபின்னும் தமிழர்கள் மேல் திணிக்கப்பட்ட சமூக உளவியல், அதை எதிர்த்து எழுப்பப்பட்ட கலகக்குரல், யுத்தகாலத்தில் மனிதர்கள் மத்தியில் ஏற்படும் கையறு நிலையிலான துயரம், வன்முறை என யுத்தத்தின் கோரத்தை வடித்துக்காட்ட முயன்று வருகிறேன். நவீன யுத்தம் குறித்தும் அது நிகழ்த்தும் துயரம் குறித்தும் எந்த அவதானிப்பும் அற்ற சமூகத்துக்கு இரண்டாம் உலகப் போரின் வரலாற்றைச் சொல்ல வேண்டியுள்ளது.

போர் குறித்து, அதன் வழி உருவான பாசிச வெறியர்கள் குறித்து அறியாமல் அங்கு சிக்கிக்கொண்ட மக்களின் எண்ணிக்கை லட்சத்துக்கும் மேல்.  அதி பயங்கரமான இந்த சயாம் மரண ரயில் பற்றிய புதினமொன்றை வாசித்த பிறகு, தேடிச் சேகரித்த குறிப்புகளே 300 பக்கங்களுக்கு மேலிருந்தது. இதைச் செப்பமான புதினமாக்க எட்டு ஆண்டுகளாவது ஆகும் எனக் கணக்கிட்டிருந்தேன். தமிழ் இலக்கியச் சூழலில் அது தற்கொலைக்கு ஒப்பான முயற்சி என்பதை நான் உணர்ந்தேன்.  கடந்த நான்கு ஆண்டுகளாய் எழுதிவருகிற புதினம் 75 சதவிகிதம் முடிந்துவிட்டது. மீதப் பகுதியை முடிப்பதற்கு இன்னும் ஒரு வருட காலமும், மரப்பாலத்தின் மீதான கவனக் குவிப்பும், ஓயாத உழைப்பும் தேவை. அதற்கான சூழல் நிலவாததால், அது நிறைவுறக் கூடுதலான காலம் தேவைப்படுகிறது.

இந்த மரண ரயில் பாதையைக் குறித்து தீவிரமாகத் தேடும்போது, என்னை உலுக்கிப் படாதபாடுபடுத்திய நூற்றுக்கணக்கான வரலாற்றுப் பதிவுகளைக் கண்டடைந்து அவதிக்குள்ளானேன். பெரும் வலியாக அது உள்ளத்தை உறுத்துகிறது. உறுத்தலைத் தனித்துக்கொள்ள அறுவைமேடையில் படுத்து நானே சிகிச்சையளித்துக்கொள்ளும் முயற்சிதான் இந்தப் புதினம்.  நான் அப்படித்தான் உணர்கிறேன். இது கவனிக்கப்படாத ஒரு வரலாற்றை மீளுருவாக்கம் செய்யும் முயற்சி.