Published:Updated:

நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 9 - சி.மோகன்

நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 9 - சி.மோகன்
பிரீமியம் ஸ்டோரி
News
நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 9 - சி.மோகன்

பால் லீ : விந்தைக் கலைஞன்

வீன ஓவியர்களில் புத்தம் புதுப் புனைவாக்கங்களில் மிக அதிகபட்ச சாத்தியங்களைக் கண்டடைந்தவர், சுவிஸ் – ஜெர்மன் ஓவிய மேதையான பால் லீ (1879-1940). மிகவும் தனித்துவமான ஓவிய மொழி மூலம், புலப்படும் தோற்ற உலகுக்கு அப்பாற்பட்ட புலப்படா உலகின் மெய்மையையும், கனவுலகில் உறைந்திருக்கும் மனித ஆழ்மனக் குணங்களையும் ஓவியப் படைப்புகளாக உருவாக்கிய விந்தைக் கலைஞன். தன் வாழ்நாளில் 9,000 ஓவியங்களுக்கு மேல் உருவாக்கிய அற்புதப் படைப்பாளி. தன் இளமைக்கால நாள்குறிப்பில் அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்; `முன்னதாக, பூமியில் தோற்றம்கொண்டிருக்கும் பொருள்களை வெளிப்படுத்தினோம். நாம் பார்த்தவற்றை, பார்க்க விரும்பியவற்றைப் படைத்தோம். ஆனால், இன்று புலப்படும் பொருள்களுக்கு அப்பாலுள்ள மெய்மையை அறிய பிரயாசைப்படுகிறோம்’. இந்தப் பிரயாசைகளின் வெளிப்பாடுகளே இவருடைய ஓவியங்கள்.

மனித ஆழ்மன வெளிப்பாடுகளான கனவுப் பிரதேசத்தில் சஞ்சரிப்பதன் வாயிலாக அவற்றின் மெய்மையைத் தம் படைப்புவெளியில் கண்டறிய பால் லீ முற்பட்டார். தொன்மையான வடிவமைப்பு முறைகள், குறியீடுகள் மற்றும் படிமங்கள் மூலம் அறியும் பிரயாசைகளாக அவருடைய ஓவிய ஆக்கங்கள் அமைந்தன. மனித இனத்தைத் தொன்மமாகத் தொடரும் கூட்டு நனவிலியை (collective unconscious) ஃப்ராய்டுக்குப் பிந்தைய உளவியல் மேதையான யுங்கைப்போலவே ஏற்றுக்கொண்டவர். ‘இன்றைய நவீனக் கலைகளில் இடம்பெறும் தொன்மையான வடிவமைப்புக் கூறுகளும் சங்கேதங்களும் இப்படியாகத் தொடர்ந்துகொண்டிருப்பவைதாம்’ என்று அவர் கருதினார்.

நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 9 - சி.மோகன்

ஓவிய வாழ்வின் தொடக்கத்தில், நண்பரும் முதல் அரூபப் படைப்பாளியுமான காண்டின்ஸ்கியின் ‘ப்ளூ ரைடர்’ இயக்கத்தில் சக ஓவியராக இணைந்து படைப்பாக்கங்களில் ஈடுபட்ட பால் லீ, தன் ஆரம்பகால ஓவியங்களில் காண்டின்ஸ்கியைப்போலவே ஓவியவெளியில் இசையின் அதிர்வுகளை உருவாக்கும் முனைப்புக்கொண்டிருந்தார். அதே சமயம், அரூப வெளிப்பாடுகளுக்குப் பதிலாக, உருவ வெளிப்பாடுகளிலேயே அவருடைய நாட்டம் இருந்தது.

இசைக் குடும்பத்தில் பிறந்த இவர், இளம் வயதில் ஒரு வயலின் இசைக் கலைஞர். அம்மா பாடகி; அப்பா இசை ஆசிரியர். சிறு வயதில் அம்மா வரைவதற்கும், அப்பா வயலின் வாசிப்பதற்கும் கற்றுக்கொடுத்தனர். இசை, ஓவியம் என்ற இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பது என்ற ஊசலாட்டம் தொடக்கத்தில் அவரிடமிருந்தது. கடைசியில் அவர் ஓவியத்தைத் தேர்வுசெய்தார்.

ஓவியம், இசையைப்போல மகத்தான வளர்ச்சியைப் பெற்றிருக்கவில்லை என்று கருதிய அவர், ஓவியக் கலைக்கு, தான் பங்காற்றவேண்டியது அவசியமானது என்று முடிவெடுத்தார். 1898-ம் ஆண்டில் (அவருடைய 19-வது வயதில்) கலை பயில ஜெர்மனியின் ‘முனிச்’ நகரம் சென்றார்.இசையைப் போலவே ஓவியமும் வண்ணம், கோடு மற்றும் வடிவத்தை மேதமையுடன் பயன்படுத்தும்போது, அதன் வெளிப்பாட்டில் பார்வையாளனின் ஆன்மாவைத் தொடும் வல்லமை பெற்றதென்பது அவருடைய சிந்தனையாக இருந்தது. இந்தச் சிந்தனையின் வெளிப்பாடுகளாகவே அவருடைய தொடக்ககாலப் படைப்புகள் அமைந்தன.

அடுத்தகட்ட நகர்வாக, தோற்றத்துக்கு அப்பாலுள்ள மெய்மையைக் கண்டறிதல், கனவுலகின் விந்தையை வசப்படுத்துதல் என்பதாக அவருடைய ஓவியப் புனைவுகள் அமைந்தன. விந்தைப் புனைவுலகை வடிவமைத்த முதல் கலைஞன். `ஓர் ஓவியன் கவிஞனாகவும், இயற்கை விஞ்ஞானியாகவும், தத்துவவாதியாகவும் இருக்க வேண்டியது அவசியம்’ என்று கருதிய பால் லீ, பன்முகத் திறன்கொண்ட அறிவாற்றல் மிக்க கலைஞன். இயற்கை விஞ்ஞானம், உலக இலக்கியம் (கிரேக்க செவ்வியல் இலக்கியங்களை, மூலமொழியிலேயே வாசித்தவர்), தத்துவம், இசை ஆகியவற்றில் வளமான ஞானம் கொண்டவர். அவருடைய பரந்துபட்ட ஞானமும் அபாரமான படைப்பாற்றலும் முயங்கிய இசைமையில் அவருடைய ஓவியங்கள் நுட்பங்கள் கூடிப் பிரகாசித்தன. அவருடைய தனித்துவமான சித்திர மொழியும், நுண்வசீகரமிக்க வண்ண ஆளுமையும் ஆற்றல்மிக்கப் படைப்பாளியாக அவரை சிகரத்துக்கு இட்டுச் சென்றன. அவருடைய முழு வாழ்வும் மகத்தான ஒரு படைப்பாக ஒளிர்ந்தது.

பால் லீயின் மிகவும் பிரசித்தி பெற்ற படைப்புகளில் ஒன்று, 1922-ம் ஆண்டில் அவர் படைத்த ‘ஒலி இயந்திரம்’ என்ற ஓவியம். இசையைக் காட்சிப்படுத்துவதில் அவருடைய கலை மேதமையைப் புலப்படுத்தும் படைப்பு.

`20-ம் நூற்றாண்டின் எந்த ஓர் ஓவியரும் பால் லீ கண்டடைந்த அலாதியான கலை நுட்பங்களை எட்டவில்லை’ என்று கார்டுனரின் ‘Art through the Ages’ நூல் குறிப்பிடுவதற்கு ஏதுவாக அமைந்த ஓவியங்களில் இதுவும் ஒன்று. தைலம் தோய்க்கப்பட்ட ஒரு தாளில் நீர்வண்ணம் மற்றும் பேனா மையினால் உருவாக்கப்பட்டிருக்கும் படைப்பு, குழந்தை ஓவியத்தன்மையிலான எளிமை கூடியது. மிகக் குறைந்த எளிய கோடுகள் மூலம், நவீன வாழ்க்கையின் முரண்களையும் சிடுக்குகளையும் சங்கேதங்களின் மொழியில், வடிவமைப்பின் செறிவில் வசப்படுத்தியிருக்கும் படைப்பு.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 9 - சி.மோகன்

நான்கு பறவைகள், ஒரு திருகல் கைப்பிடி இயந்திரத்தின் கம்பிகளில் பிணைக்கப்பட்டிருக்கின்றன. மூட்டமும் குளுமையும்கூடிய நீலவண்ண இரவு, இளம்சிவப்பு வண்ணப் பிரகாசமான விடியலுக்கு வழிவிடும் தருணம் பின்புலமாக இருக்கிறது. அந்தத் தருணத்தை வரவேற்கும் இசையோடு பறவைகள் தங்கள் அலகுகளைத் திறந்தபடி நின்றுகொண்டிருப்பதுபோல் இருக்கிறது. வாயில் ஆச்சர்யக் குறியுடன் இருக்கிறது ஒரு பறவை. அலகில் அம்புகுறியுடன் இருக்கிறது இன்னொரு பறவை. மையத்தில் இருக்கும் பறவையின் நாக்கு சோம்பிக்கிடப்பதுபோல் இருக்கிறது. மற்றொரு பறவை தடுமாற்றத்துடன் தென்படுகிறது. கைப்பிடியைத் திருகும்போது அவை முழுவேகத்தில் ஒலி எழுப்பக்கூடும். இயற்கைக்கும் தொழில்நுட்ப உலகுக்குமான ஒரு பிணைப்பை இந்த ஓவியம் உட்கொண்டிருப்பதாகக் கருதலாம்.

இந்த ஓவியக் காட்சி நம் பார்வைக்குப் புலப்படும் உலகைச் சார்ந்தவை என்றபோதிலும், அவை பறவைகள் என நாம் தெளிவாக அறிய முடிகிறபோதிலும், படைப்பு ஒரு மாயத்தன்மையில் சுடர்வதை உணரலாம். ஒரு குழந்தையின் படைப்புபோல எளிமைகொண்டிருக்கும் அதே சமயம், கவித்துவ உணர்ச்சியில் தோய்ந்து, ஒரு பிடிபடாக் கனவுலகுக்குள் நம்மைப் பிரவேசிக்க அழைக்கிறது.

குழந்தை ஓவியம் போன்றும், கேலிச்சித்திரம்போலவும், தன்னிச்சையாக வரைந்து செல்லும் சர்ரியலிஸ பாணி மாதிரியும் பலவித நுட்பமான உத்திகள் இயல்பாகவும், பால் லீக்குக்கே உரிய கலைஞானத்தோடும் இந்தப் படைப்பில் முயங்கியிருக்கின்றன. அதனாலேயே ஒவ்வொரு பார்வையாளனும் பிரத்தியேக அனுபவம் பெறத்தக்க வகையிலும், வெவ்வேறு புரிதல்களுக்கும் விளக்கங்களுக்கும் அர்த்தங்களுக்கும் இடமளிக்கக்கூடிய வகையிலும் நுட்பங்கள் உள்ளுறைந்த படைப்பாகவும் பால் லீயின் விசேஷத்தன்மை சூடிய ஓவியங்களில் ஒன்றாகவும் இது இருக்கிறது.

1933-ம் ஆண்டில் ஜெர்மனியில் முதன்முறையாக இந்த ஓவியம் காட்சிக்கு வைக்கப்பட்டபோது, ஹிட்லர் இதை ‘சீர்கேடான கலை’ என அறிவித்து தடைசெய்தார். நல்லவேளையாக, அது அழிக்கப்படவில்லை. 1939-ம் ஆண்டில் ‘நாஜி’ கட்சியால் விற்கப்பட்டு, இந்த ஓவியம் நியூயார்க் அடைந்தது.  இன்று குழந்தைகளால் மிக அதிகமாக நேசிக்கப்படும் ஓவியமாக இருந்துகொண்டிருக்கிறது. 1987-ம் ஆண்டில் ‘நியூயார்க்’ இதழ் நடத்திய ஒரு கருத்துக் கணிப்பில் குழந்தைகள் தங்கள் படுக்கையறையில் இடம்பெற வேண்டும் என அதிகம் விரும்பும் பிரசித்திபெற்ற ஓவியமாக இதைத் தேர்ந்தெடுத்தனர்.

1922-ம் ஆண்டில் லீ உருவாக்கிய ‘மனிதனின் தலை’ என்ற ஓவியம், அவருடைய கலை நுட்பங்களில் ஒளிரும் மற்றுமொரு மாயப்புனைவு. குழந்தைமையும் முதிர்ச்சியும் கூடி முயங்கியிருக்கும் மாய வடிவம்கொண்டது. அவருடைய நகையுணர்வும் ஆப்பிரிக்கக் கலைஞானமும் கூடித் திளைத்திருக்கும் ஓவியம்,  க்யூபிஸத் தன்மையிலானது. இந்த ஓவியத்தில் க்யூபிஸப் பாதிப்பு உண்டென்றாலும் பழங்குடிக் கலைமரபிலும், குழந்தை ஓவியப் பாங்கிலும் உயிர்கொண்டிருப்பது. எளிமையான, தட்டையான கட்டுமானங்களாலும், மிக எளிமையான வடிவங்களாலும், ஆரஞ்சு, சிவப்பு மற்றும் மஞ்சள் வண்ணங்களின் பல்வேறு சாயைகளாலும் அமைந்த ஒரு முதியவரின் உருவச் சித்திரம்.

வட்டம் என்பதை அடிப்படை வடிவமாகக்கொண்டிருக்கும் இந்த ஓவியம், வடிவவியல் சார்ந்த வண்ணப் பகுதிகளால் பிரித்து இணைக்கப்பட்டிருக்கிறது. இடது கண் புருவம் ஒரு முக்கோணத்தால் பிரதிநிதித்துவம் பெற்றிருக்கிறது. வலது புருவம் ஓர் எளிமையான வளைகோட்டால் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. செங்குத்துக்கோடாக மூக்கும், சதுரங்கள் வாயாகவும், வட்டமானது தலையாகவும் வடிவம் பெற்ற உருவச்சித்திரம். வடிவவியல் பாணியில், மிகக் குறைந்த முக விவரிப்புகளுடன் சித்திரிக்கப்பட்டிருக்கும் இந்த ‘முதுமையடைந்துகொண்டிருக்கும் ஒரு மனிதனின் தலை’ ஓவியம், ஒரு குழந்தையால் வரையப்பட்டது போன்ற பாவனையோடு அமைந்திருக்கும் மாயம், விசேஷ தொனி கொண்டிருக்கிறது.

நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 9 - சி.மோகன்

‘ஒரு குழந்தையின் சுயவெளிப்பாடு, மிகவும் தூய்மையானது; கருத்தின் சாரத்துக்கு மிகவும் நெருக்கமானது’ என்று அவர் கருதினார். அதனாலேயே, குழந்தை ஓவியத்தன்மை ஒரு மந்திரச் சக்தியாகக் கடைசிவரை அவரிடம் வெளிப்பட்டபடி இருந்தது. வண்ணப் பகுதிகளும் கோடுகளும் படைப்பாளியின் மனக்கண் பார்வையிலிருந்து உருவாகி, ஓவியவெளியில் தீர்க்கமாக நகர்ந்து, ஒரு மாய முழுமையை இந்தப் படைப்பில் எய்தியிருக்கிறது. `கோட்டை நடப்பதற்கு அழைத்துச் செல்’ என்ற அவருடைய சொல்லாடலுக்கு ஏற்ப, கோட்டுடனான பயணத்தில் கூடி வந்திருக்கும் ஓவியம்.

பொதுவாக, ஒரே சமயத்தில் பத்துக்கும் மேற்பட்ட படைப்பாக்கங்களில் ஈடுபடும் இவர், ‘மனிதனின் தலை’ ஓவியத்தை நிறைவுசெய்ய சில ஆண்டுகள் எடுத்துக்கொண்டார். வண்ணங்களிலும் வடிவங்களிலும் தொடர்ந்து மாற்றங்கள் நிகழ்த்தியபடி இருந்தார். கட்டமைப்பும் வண்ணங்களின் இசைமையும் அவரின் படைப்பு மனதின் விருப்பத்துக்கு நிறைவளிக்கும் வரை, படைப்பு பரிபூரணம் அடையத் தன்னை அதில் ஈடுபடுத்தியபடி இருந்தார்.

`தோற்றத்தை மறு ஆக்கம் செய்வதல்ல கலை. மாறாக, தனதான உலகைத் தோற்றப்படுத்துவது’ என்ற அவருடைய சிந்தனையின் வெளிப்பாடுகளாக அமைந்த ஆயிரக்கணக்கான ஓவியங்களில் முக்கியமானது, 1919-ம் ஆண்டில் அவர் உருவாக்கிய ‘வில்லா R.’ இயற்கை எழில் சூழ்ந்த நாட்டுப்புறப் பகுதியில் வடிவம்கொண்டிருக்கும் ஒரு வீட்டின் அரூபத் தோற்றம். பொதுவாக, உருவங்களின் ஆதார சக்தியிலிருந்து படைப்பாக்கத்தில் ஈடுபடும் இயல்புகொண்டவர் லீ. மாறாக, அரூப திசையில் நகர்ந்திருக்கும் ஓவியம் இது.

ஓவியத்தின் முன்புலத்தில் பசுமையான சிறு குன்று அமைந்திருக்கிறது. அதில் வரைமாதிரி வடிவிலான மரங்கள் காணப்படுகின்றன. அவற்றுக்குப் பின்னால் பச்சை வண்ணத்தில் ‘R’ என்ற எழுத்து ஒரு நினைவுச் சின்னம்போல் நின்றுகொண்டிருக்கிறது. ஒரு சிவப்பு வண்ணப் பாதை, நீல வெளியினூடாக, சாய்வாக வளைந்து செல்கிறது. வீடானது, தட்டையாகவும், உள்ளீடுகளோ பரிமாணங்களோ அற்றதாகவும், அடர்த்தியோ வாழ்வெளியோ இன்றியும் ஓர் அலங்காரத் தோற்றத்துடன் அரூப வடிவில் தென்படுகிறது.

பின்புல மலைகளும் கட்டமைப்புரீதியான அடர்த்தியின்றி ஓர் அலங்காரத் தோற்றமாகவே காட்சியளிக்கின்றன. இடது பக்கமாக அமைந்திருக்கும் வளர்பிறைச் சந்திரனும் வலது பக்கமாக இடம்பெற்றிருக்கும் மஞ்சள் சூரியனும் அந்த மலைகளை ஒரு சட்டகத்துக்குள் அடக்குகின்றன. மேற்பகுதியின் இரு முனைகளிலும் ஒளிரும் வண்ணப் பகுதிகள் இந்த ஓவியத்தை ஒட்டுமொத்தமாக ஓர் அழகிய கவித்துவ மாயையில் ஒருங்கிணைக்கின்றன. கருமையான மற்றும் ஒளிரும் வண்ணச் சேர்க்கைகள் மூலம், திரை விலக்கப்பட்ட ஒரு கண்ணாடி ஜன்னலிலிருந்து காணும் அழகிய மாயமாக, அழ்ந்த அரூபப் படிமமாக பால் லீ இந்தப் படைப்பை உருவாக்கியிருக்கிறார்.

எந்தவொரு படைப்பாக்கமும் மாய அனுபவம்கொண்டது. படைப்பாக்கத்தின்போது, படைப்பாளியின் உள்ளார்ந்த பார்வையும் வெளிஉலக அனுபவமும் ஒரு மந்திரகதியில் இணைகின்றன. அப்படியான மாயப் பிணைப்புகூடிய நுட்பங்கள் ஒளிரும், கவித்துவம் மிளிரும் ஓவியம் இது.

பால் லீயின் சில ஓவியங்களில் சர்ரியலிஸ சாயல் தென்பட்டாலும், அவருடைய கனவுத்தன்மைகொண்ட படைப்புகளில் விந்தைத் தன்மையும் அதன் மெய்மையுமே பிரதானமாக அமைந்தன. அவருடைய காலகட்டத்திலேயே சர்ரியலிஸ பாணி வடிவம் கொண்டுவிட்டபோதிலும் அவர் அந்த இயக்கத்தோடு தன்னைப் பிணைத்துக்கொள்ளவில்லை. எனினும், பால் லீயின் கனவுப் பாங்கான படைப்புவெளி, கனவுலகின் ஆழ்மனப் படிமங்களை வசப்படுத்தும், ஆழ்மன யதார்த்தத்தைக் கண்டறியும் சர்ரியலிஸ பாணிக்குப் பெரிதும் உத்வேகமாக அமைந்தது.

- பாதை நீளும்...