Published:Updated:

மம்மூதன் - சிறுகதை

மம்மூதன் - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
மம்மூதன் - சிறுகதை

வரவணை செந்தில், ஓவியங்கள்: ஸ்யாம்

மம்மூதன் - சிறுகதை

வரவணை செந்தில், ஓவியங்கள்: ஸ்யாம்

Published:Updated:
மம்மூதன் - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
மம்மூதன் - சிறுகதை

ந்தடித் தெருக்கள் சந்திக்கும் இடத்தில் வெளிர் சந்தன நூற்பாவுகளைத் தகதகக்கும் பச்சை நிறச் சாயத்தில் முக்கி எடுத்துக்கொண்டிருந்தனர் பட்டு நூல்காரர்கள். ஒரு கையில் வேல்கம்பும், மறுகையில் சோழவந்தான் கொழுந்து வெற்றிலையும், கதுப்பில் அடக்கிய பாக்குமாக அவர்களிடம் சுண்ணாம்பு கேட்டுக்கொண்டிருந்தார் தலையாரி பொன்னன்.

``ஏப்பா ஏய்... வடக்க இருந்துவந்த தலையாரியா, நாயக்கர் கூப்புடுறாரு...’’ என்று திடுதிடுவென ஓடிவந்து காவல்காரன் அழைக்கவும், பாக்கைத் துப்பிவிட்டு, வேல் முனையைப் பின்பக்கமாகத் திருப்பிக் கையிடுக்கில் வைத்துக்கொண்டு, குனிந்து பவ்யமாக மஹாலுக்குள் ஓட்டமும் நடையுமாகத் தலையாரி நுழைந்தார்.

வெள்ளிப்பூண் போட்ட சாய்வு நாற்காலியில் படுத்திருந்த நாயக்கர், நெடிதுயர்ந்த மஹாலின் உத்திரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார். அவரின் வலது கண் ரத்தினச் சிவப்பாக இருந்தது. அருகில் நின்ற வைத்தியர் இவர்களை விடுத்து, பின்னால் வந்த பெண்ணை விரைந்து வருமாறு அவசரமாக சைகை காட்டிக் கொண்டிருந்தார்.

மம்மூதன் - சிறுகதை

``சாமி... ரெங்கமலைக்கு வடக்கே ராசமங்கலத்துலருந்து தலையாரி வந்திருக்கேங்க’’ என்றபடி தரையில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து எழுந்தார் பொன்னன்.

``என்ன அலுவல்... தலையாரியை எல்லாம் ராசாவைப் பார்க்க அனுப்பிட்டு ஊர் நாயக்கர் என்ன பண்ணுறாரு?’’ உத்திரத்தைப் பார்த்தவாறே நாயக்கர் கேட்டார்.

``சாமீ... நல்லது நடந்துருக்குங்க. ஊர்க்குளம் பெரிசு பண்ணிக்க உத்தரவு போட்டுருந்தீங்க இல்லியா? அதுக்கு வெங்கம்பாறையைக் கீதாரி அம்மையப்பனும் ஊர் இளந்தாரிகளும் சேர்ந்து ஒடைக்கும்போது, பொறந்த குழவி தண்டிக்கி மரகதக்கல்லு கெடைச்சதுங்க. இதுவரைக்கும் இல்லாத அதிசயமா அதுகூடவே தீட்டின மாதிரி, சோவி அளவுக்கு ஒரு ரத்தினக்கல்லும் கெடச்சிருக்குங்கய்யா. ஊர் நாயக்கர் இம்புட்டு தூரம் எடுத்துட்டு வர்றதுக்கு, காவல் துணைக்கு ஆளே இல்லீங்க. ஆண்டிப்பட்டி கணவாயைத் தாண்டணுமில்லையா... அதுக்குத்தான் சாமி நல்லது சொல்லிட்டு, காவலுக்கு ஆள் கேக்க தலையாரி வந்திருக்கேன்...’’

அப்போது இவர்களுக்குப் பின்னால் வந்த பெண், தன் தனங்களில் இருந்து வெள்ளிச்சங்கில் பால் எடுத்து வைத்தியரிடம் கொடுத்தாள்.

மன்னர் சிரித்தபடியே, ``நேத்திக்கிதான் கால் வழுக்கிக் கழிசலில் விழுந்த மாதிரி கனவு கண்டேன், யோகத்தைப் பாரேன்’’ எனத் தானாகச் சொல்லிக்கொண்டார்.
 
``சரி... நானே வர்றேன். இன்னிக்கு குதிரையோட வால் மயிர் கண்ணில் பட்டுருச்சு. ரெண்டு நாளைக்குத் தாய்ப்பால் ஊத்தணும். நாளைக்கும், மக்யா நாளும் செவ்வாய், புதன் வடக்க சூலம். `குருவாரம் ராசா வர்றாரு’னு சொல்லிடு’’ என்றவர், தலையாரிக்கு ஒரு மூட்டை சம்பா நெல்லும், குட்டியுடன் உள்ள ஆடுகளாகப் பார்த்து நான்கும் கொடுத்துத் துணைக்கு ஆட்களையும் அனுப்ப உத்தரவிட்டார்.

குளத்துக்கரையில் கூடி நின்றது ராசமங்கலம். சட்டியிலிருந்து வெந்தயக்களியை இரண்டு அகப்பை எடுத்து இலையில் வைத்தான் அம்மையப்பன். அதில் கையால் குழி வைத்து நல்லெண்ணெய் ஊற்றினார். இன்னொரு அகப்பை நிறையச் சூடான வெள்ளாட்டுக்கறியை குழம்புடன் அள்ளி, களி மீது ஊற்ற, அரசன் அள்ளியள்ளிச் சாப்பிட்டதை ஊர் மக்கள் சந்தோஷமாகப் பார்த்துக்கொண்டிருந்தனர். 
 
கைகழுவி நின்ற மன்னரிடம்  மரகதக்கல்லை அம்மையப்பன் எடுத்து வந்து கொடுத்தார். ``ஹா...’’ என்கிற சத்தம் வர, அதிசயமாகப் பார்த்தார். உடன் வந்திருந்த மஹால் விஸ்வகர்மா அதை வாங்கி, நான்கைந்து முறை திருப்பிப் பார்த்து ``என் ஆயுசுக்கும் இப்பத்தான் இவ்வளவு பெருசைப் பார்க்கிறேன் சாமி...’’ எனக் கண்களில் ஒற்றிக்கொண்டார்.

பழம்பட்டுத் துணியில் சுருட்டி வைத்திருந்த ரத்தினத்தையும் கொடுத்தான் அம்மையப்பன். வாங்கி அப்படியும் இப்படியுமாகப் பார்த்த அரண்மனை விஸ்வகர்மா, ``நயம்... நயம்’’ என்றபடியே அரசனிடம் கொடுத்தார். மனசுக்குள் அவ்வளவு சந்தோஷம் பொங்கியது நாயக்கருக்கு. ஊர்க் கணக்கரை அழைத்து, உடனே அம்மையப்பனுக்கு 300 குழி நிலம் தானம் கொடுக்க உத்தரவு போட்டார். ராசமங்கலத்தைச் சுற்றியுள்ள பத்து கிராமங்களில் வரி வசூலித்து, மதுரைக்கு அனுப்பும் உரிமையையும் கொடுத்தார். கல் கிடைத்த சந்தோஷத்துக்கு ஐந்து திங்கள்கிழமைகளில் ஊர் முழுசுக்கும் கெடாக்கறியும், உப்புக்கண்ட வத்தலும் போட்டுக் கேப்பைக் கூழ் ஊற்றவும் சொன்னார்.

அம்மையப்பன், குடும்பத்தை அழைத்துவந்து வணங்கினான். அவனைத் தனியாகக் கூப்பிட்ட நாயக்கர் ``நான் ரெங்கமலைக்குப் போயி சேவிக்கப் போறேன்.  நாளைக்குக் காலையில வர்றேன். உன் அக்காவைக் கட்டிக்கிட முடிவு பண்ணிட்டேன். உன் அப்பன் உயிரோட இல்லைனு சொன்னாங்க, அதான் உன்கிட்ட சொல்றேன்’’ என்றார். 

அம்மையப்பனுக்கு வெல்லப்பாகில் குளித்த மாதிரி உடம்பே இனித்தது. ``உத்தரவு ராசா’’ என்றான்.

ராசா மேற்கே நடக்கத் தொடங்கினார். விஸ்வகர்மா, அரசனின் காதருகே போய், ``சாமி... ரெண்டுமே மரகதம்தான். அத்தனை சாமுத்திரிகா லட்சணமும் இருக்கு. யோகம் அள்ளி வரப்போகுது’’ என்றார்.

மறுநாள் காலை அம்மையப்பன் குளித்துவிட்டு, குளத்தின் கரையில் புங்கமரத்தின் கீழ் நின்றபோது, தன் தாய் ஓடி வருவதைக் கண்டான். ``தீயை வாரிப் போட்டுட்டு உன் அக்கா போயிட்டாடா... விடியறதுக்கு முன்ன எப்பவோ வெளியே போனவ, இன்னமும் காணாம். ராத்திரி முழுக்க தூங்காம அழுதுக்கிட்டே இருந்தா. அய்யோ... என் புள்ளை மானமே போச்சே, இனி ராசா முன்னாடி எப்படிக் கொண்டையை அள்ளி முடிவான்...’’ என ஒப்பாரியை ஆரம்பித்தாள்.

அரசனின் உத்தரவுக்குப் பிறகு, முதல்நாள் மாலைதான் அம்மையப்பனின் கைகளில் சூரிக்கத்தியும் தடியும் கொடுக்கப்பட்டிருந்தன. குதிரை பிடிக்கவென ஊருக்குக் கிழக்கிலிருந்த சக்கிலியக் குடியிலிருந்து ஓர் ஆளை அனுப்ப உத்தரவிட்டனர். சுப்பு என்கிற இளைஞனை அனுப்பியிருந்தனர். அம்மையப்பனுக்குக் குதிரையில் ஏறிப் பழக்கமில்லை. அதைச் சொல்லிக் கொடுக்க, சூலநாயக்கன் பாளையத்திலிருந்து ஒரு குடியானவ வீட்டு ஆளை, சுப்பு கூட்டி வந்திருந்தான். அம்மையப்பனின் தாய் போட்ட சத்தத்தைக் கேட்டு குதிரை ஏறச் சொல்லிக்கொடுக்க வந்தவன், நமுட்டுச் சிரிப்பை அடக்க மாட்டாமல் நின்றான். சுப்பு, சிரித்தவனைப் பார்த்து முறைத்தபடியிருந்தான்.

அக்காவுக்குப் பிடித்தமில்லை என்று தெரிந்தவுடன் அவளைத் தனியாக அழைத்துப் பேசினான். `ராசா வாக்கை மீற முடியாது’ என்று தம்பி சொன்ன சமாதானத்தை ஏற்றுக் கொண்டாள். அவன் கண்களை நேருக்கு நேராகப் பார்த்து `சரி’ என்றாள். அவளைச் சமாதானப்படுத்திவிட்ட நிம்மதியில்தான் அன்று நன்கு உறங்கினான். ஆனால், அவளே காலையில் இப்படிச் செய்வாள் என ஒரு கணம்கூட அம்மையப்பன் எதிர்பார்த்திருக்க வில்லை. தூரத்தில் ராசாவும் ஆட்களும் வருவது தெரிந்தது. மரத்தின் கீழ் வைத்திருந்த சூரியை எடுத்து, கழுத்தின் வலது அள்ளையில் சொருகி உச்சக்கட்ட வலுவைக் கொடுத்து முன்நோக்கி இழுத்தான் அம்மையப்பன். அவ்வளவு தொலைவில் வந்த அரசருக்கே தெரிந்தது, பீய்ச்சி அடித்த ரத்தம்.

கறட்டு கறட்டு என இழுத்துக்கொண்டிருந்த அம்மையப்பனின் உடலருகே வந்தான் சுப்பு. நாயக்கர் உத்தரவுக்குப் பணிந்து, ஊர் வேலைக்காகத் தன்னைத் தன் குடியில் இருந்து அனுப்பிய இரண்டாம் நாள் இது. தன் தலைவனின் முடிவைக் கண்டு கீழே கிடந்த சூரியை எடுத்து, ஒருகணம்கூட யோசிக்காமல் தானும் அதுபோலவே அறுத்துக்கொண்டான். குளித்துக்கொண்டிருந்த பெண்களின் சத்தத்தில் ஊர் கூடிவிட்டது. குளத்தின் மேற்குக் கரையில் இழுத்துக்கொண்டிருந்த சுப்பனை மடியில் போட்டு, தலைதலையாக அடித்தபடி அம்மையப்பனின் தாய் `கீதாரி’ அழுது கொண்டிருந்தாள்.

ஊரின் முன்பு கலங்கிப்போய் நின்ற நாயக்க மன்னர், உடனடியாக அங்கு நடுகல்லும், பட்டவன் கோயிலும் கட்டி வருடா வருடம் பொங்கல் வைக்கச் சொல்லி ஒரு குடும்பத்துக்கு உத்தரவு போட்டார். சிற்பம் புடைக்கும்போது, ஒரே கல்லில் அம்மையப்பனும் சுப்பனும் இருக்கும்படி அமைக்கவும் உத்தரவிட்டார். அப்போது ஒர் இளம்பெண்ணுக்கு மாரியாயி வந்து இறங்கியது. ``மீனாட்சி கோபம் பொல்லாதது’’ என்று சொல்லி மலையேறினாள். உடனடியாகக் கொஞ்சமும் தயங்காமல், காடை முட்டை போலிருந்த ரத்தினத்தை மீனாட்சி கோயிலுக்குக் கொடுத்தார். மரகதக் குழவியை சிவலிங்கம் செய்து கோயிலில் வைப்பதாக அறிவித்துவிட்டுக் கிளம்பினார் - என்று கதையை முடித்தார் கோபாலு மகன் சாமியாடி மோகன்.

நான் ஒருமுறை திரும்பி, பட்டவன் கோயிலைப் பார்த்தேன். சின்னஞ்சிறியதாக கேரளா ஓடு வேய்ந்த கூரையும், நான்கு தூண்களுமாக தனக்கென அமைதியும் எளிமையுமாக இருந்தது. 

``பட்டவனுக்கு நாயக்கர் பூசை போடச் சொன்ன குடும்பம் எங்களுடையதுதான். அதுக்குதான் இருவத்தஞ்சு குழி குளத்துக்கரையில் ராசா கொடுத்திருந்தார். இன்னிக்கு வரைக்கும் அதுல பிட்டு விக்கலையே...’’ என்றார் சாமியாடி மோகன். ஆனால், இந்தக் கதையைச் சொல்வதற்கு இல்லாத பிகு செய்து, பின்னர் ஃபீஸாக `ஒரு 1848 குவாட்டர்’ கேட்டார். அதை வாங்கி, முதல் ரவுண்டை முடித்த பின்னர்தான், தலையாரி பொன்னன் வேல்கம்பை எடுத்துக்கொண்டு மதுரைக்குக் கிளம்பினார்.

ஒவ்வொரு பங்குனியின்போதும் ஏதோ ஒரு மச்சினன் மாத்துக் கட்டில் நேர்ந்துகொள்ளும் கிடா வெட்டுகளில் ஒன்றுக்கு வந்திருந்தேன். மரகதக்குளத்தின் நடுநாயகமான புங்கமரத்தின் அடியில் உட்கார்ந்திருந்தேன். எதிரே பட்டவன் கோயிலில் பொங்கலுக்கு அடுப்பு பற்றவைக்கப்பட்டிருந்தது. பொங்கியவுடன் கெடா வெட்டப்படும். அடுப்பைப் பற்றவைத்துவிட்டு, என்னை நோக்கி வெற்றுக்குளத்தில் டி.வி.எஸ் 50 வண்டிகள் ஓடி ஓடி உருவாகியிருந்த ஒத்தையடிப் பாதையில் நடந்து வந்துகொண்டிருந்தார் வீராயி கிழவி; என் மனைவியின் அத்தை; எனக்குப் பெரியம்மா முறை. 87 வயதிலும் தடி கிடையாது, நடுக்கம் இல்லை. ஐந்தாறு பிள்ளைகள் இருந்தும், யாருடனும் இல்லாமல் தனியே வசிக்கிறார்.

``இந்த புங்கம் இருக்கில்ல... கெட்ட கழுதை. அவுகளுக்கு புடிச்ச எடத்துலதான் வளருவாக. ஆடு, மாடு மேய்க்கிறவகளுக்குத்தான் வேப்பமரம் நெனலுக்கும், புங்க மரத்து நெனலுக்கும் நல்லா வித்தியாசம் தெரியும். வேப்ப மரத்தைத் தாய் கணக்கா சொன்னோம்னா, புங்கமரம் பொண்டாட்டி மாதிரி. அந்த அணைப்பே காட்டிக் கொடுத்திரும். குளத்துல தண்ணி நிக்கிதோ, இல்லையோ... இங்கே இவ மட்டும் சிலுப்பிக்கிட்டே இருப்பா. இதுல இருந்து கிளை வெட்டி ஊருக்குள்ள நாலு மரம் கொண்டு போயி நட்டு வெச்சாங்க... தழைப்பனாங்குது. இங்கனதான் குத்தவைக்க இஷ்டம் போலருக்கு...’’ என நான் அமர்ந்திருந்த புங்கமரத்தை ஆளாகக் கருதிப் பேசியபடியே, எனக்குப் போட்டிருந்த கயிற்றுக் கட்டிலின் கீழே இருந்த பட்டியக் கல்லில் உட்கார்ந்தார்.

``ஏன் சாமி, உன்கிட்ட கோபால் மகன் வந்தானே... குவாட்டரு வாங்கிக் குடுத்தியா?’’ என்று கேட்டார்.

வீராயி கிழவியும் குடிக்கும். இதுவும் ஒரு காலத்தில் சாராயம் விற்றதுதான். 15 வருஷத்துக்கு முன்பு வரைக்கும் ஊறல் போடுபவர்களுக்குப் பதம் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தார். 2003-ம் வருட ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் ஒருநாள் தாசில்தார் வந்து, ``இனிமே காய்ச்ச மாட்டோம் என எழுதிக்கொடுத்தால், அரசு புதுப் பிழைப்புக்கு பசுமாடு தரும். மேற்கொண்டு பழைய சாராய கேஸ்கள் எல்லாம் வாபஸ் வாங்கப்படும்’’ என்று சொல்லவும், அவரிடம் இனி சாராயத் தொழில் செய்வதில்லை எனப் பாலில் சத்தியம் செய்துவிட்டார்.

அன்றைக்கு இருந்து சாராய சங்காத்தமே இல்லை. ஆனால், எப்போதாவது லேசாகத் தொண்டையில் சளி கட்டுவதுபோலத் தெரிந்தாலும், சட்டென கோழி அடித்துச் சமைத்துவிடுவார். பக்கத்து ஊருக்குப் போகும் இளந்தாரிகளிடம் ``எம்சி இருந்தா வாங்கு. இல்லைன்னா, கறுப்பு ரம்மு எதையாவது வாங்கிட்டு வா’’’ எனக் காசு கொடுத்து சொல்லியனுப்பி, வாங்கிக்கொள்வார். 

``அவரு ஏன் பரம்பரைப் பூசாரியா இருக்காருனு கேட்டேன். அதுக்கு சரக்கு வாங்கித் தந்தாதான் சொல்வேன்னு சொன்னாரு. சாப்பிட்டுட்டுப் போகட்டும். என்னைக்கோ ஒரு நாதானே...’’ என்றேன்.

``சரி, என்ன கதை சொன்னான்?’’

சொன்னேன்.

சீலை மடிப்புக்குள்ளிருந்து கோயிலுக்கு வந்த யாரோ படைத்த 'ராயல் அக்கார்டு' குவார்ட்டர் பாட்டிலை எடுத்து, எனக்குக் குடிக்கத் தண்ணீர் வைத்திருந்த செம்பில் ஊற்றி, ஒரே மடக்கில் குடித்தார்.

``பட்டவன் கதை கேட்டல்ல... மம்மூதன் கதை சொல்றேன் கேளு...’’  எனச் சொல்லத் தொடங்கினார்.

``காலையில கொல்லைக்குப் போன இடத்துல, பகல்ல பருத்திக்கொட்டை அரைக்கையில, இறுங்குச் சோளம் புடைக்கையில, கேப்பையை சாலையில கொட்டி பரப்பையிலனு, பொண்டு புள்ளைக தனியா எந்த வேலை செஞ்சாலும், பேச்சுக்குள்ள மம்மூதன் வந்திருவான். சூலநாயக்கன் பாளையத்துல இருந்த சாயபுதான் அவனைக் கூட்டியாந்தது. அந்தச் சாயபுதான் இந்தப் பக்கம் இருந்து மொத மொத வடநாட்டுக்கு வட்டிக்கு விடப்போனது. டெல்லிக்கெல்லாம் அந்தப் பக்கம் போய் வட்டி யாவாரம் பார்த்தாப்ல. அங்கே இவரு தங்கியிருந்த வீட்டுல ஊடமாட ஒத்தாசைக்குத்தான் மம்மூதன் இருந்திருக்கான். பத்து மாசத்துக்கு ஒருக்க ஊருக்கு வருவாரு. பதினஞ்சு நாளு இருந்துட்டு திரும்பிப் போவாரு. ஊருக்கு வரும்போதும், துணைக்கு மம்மூதனைக் கூட்டிக்கிட்டு வந்தாரு. ஏதோ டான்ஸ் குதிரையை வேடிக்கை பார்க்குறது கணக்கா, அவனை ஊரே சுத்திச் சுத்தி பார்த்தாங்க. அப்படி ஒரு நிறத்துல இருந்தான். சாயபு வீட்டு மாமிமாருகூட அப்படி ஒரு நிறத்துல இருந்ததில்லை.

மம்மூதன் - சிறுகதை

அவன் இங்கே வந்து நாலஞ்சு நாளிலேயே சாயபு கேணியில் தொப்பரை மேட்டில் நின்னு எட்டிப் பார்த்திருக்காரு. காலு வழுக்கி விழுந்து, குறுக்கொடிஞ்சுப்போச்சு. `ஆறு மாசத்துக்கு நகரவே கூடாது’ன்னுட்டாரு வைத்தியரு. கோழி ரசம் மட்டும்தான் சாயபுக்கு இறங்கிச்சு. அவங்க ஊருல இருந்து வெடக்கோழி வாங்க ஒவ்வொரு ஊரா போக ஆரம்பிச்சவன் அப்படியே ஊர்சுத்திப் பயலா போயிட்டான். மூணே மாசத்துல தெலுங்கும், தமிழும் உருட்டி உருட்டிப் பேச ஆரம்பிச்சுட்டான். வெவசாய வேலையெல்லாம் ஒண்ணும் தெரியாது. எப்பப் போய் பாய் திண்ணையில அடைஞ்சாலும், சோறு போட்டுருவாங்க. அவன் புத்தி அப்படியா... இல்லே, இங்கே உள்ளவளுக கெட்டவளுகளான்னு தெரியலை. `அவனை அந்தக் காட்டுல அவகூட பார்த்தேன்’, `இந்தக் காட்டுல பார்த்தேன்’னு பேச்சு வர ஆரம்பிச்சுது...’’ என்று நிறுத்தினார்.

வானம் இருட்டுக் கட்டியது. குளத்தின் பரப்பில் காய்ந்து, மஞ்சள் நிறமாக இருந்த அடிப் புற்களைப் பெரிதாகக் காதுகள் வளர்ந்த ஜமுனாபாரி ஆடுகள் மண்டியிட்டு கரம்பிக்கொண்டிருந்தன.

``ஊர் இளந்தாரிகளுக்கு எதிரியாகிப் போனான் மம்மூதன். ஆனா, கை வெக்க முடியாது. சாயபுக்கு அன்னைக்கே நூறு ஏக்கராவுக்கு மேல நிலம் இருந்துச்சு. சுத்துப்பட்டியில ஒருத்தர் பாக்கியில்லாம அந்தாளுகிட்ட கடன் வாங்கியிருந்தாங்க. அந்தத் திமிருல மம்மூதனும் கூச்ச நாச்சம் பார்க்காம எல்லாப் பக்கமும் புகுந்து வந்தான். `ஒரு நா வசமா மாட்டுவான். அன்னைக்கு இருக்கு பச்சைக் கண்ணனுக்குத் தீவாளி'ன்னு கருவிக்கிட்டுத் திரிஞ்சாங்க ஊருக்குள்ள. ஆம்பளைப் பயக இப்படிப் பேசினா, பொம்பளைப் புள்ளைகளுக்கோ `அவனைப் பார்த்தே ஆகணும்’னு அப்படி ஒரு இதுவாகிப் போச்சு. நான் சும்மானாச்சுக்கும், `அவனை அங்கே பார்த்தேன்... இங்கே பார்த்தேன்’னு அள்ளிவிடுவேன். ஒருநா காலையில எங்க அப்பா வாசலில் நின்னுக்கிட்டு தண்ணி கொண்டாரச் சத்தம் கொடுத்தாரு. எடுத்துட்டுப் போனேன். வாங்கி, அங்கே நின்ன ஆளுகிட்ட கொடுத்தார். அவன் அப்படி ஒரு அம்சமான அழகு. கண்ணு அப்படியே பச்சை நிறத்துல மின்னுது. `மம்மூதன்லாம் இவன் பக்கத்துலகூட வர முடியாது’னு நெனைச்சுக்கிட்டேன். `இவன் பேரு மொகமது. இவனைத்தான் நம்ம பயலுக மம்மூதனாக்கிப்புட்டாங்க'னு என் அண்ணன்கிட்ட சொல்லிக்கிட்டிருந்தார் அப்பா. அவ்ளோதான்... சொம்பையும் வாங்கலை, ஒண்ணையும் வாங்கலை... உள்ளார ஓடி வந்துட்டேன். அப்புறம் ஊர்ல இருக்குற குமரிக பூராம் என்னைய கேலி பேசிக்கிட்டுத் திரிஞ்சாளுக. செல்வி ஒருத்திதான் அவளுகளை `அப்படியெல்லாம் பேசாதீங்கடி'னு சத்தம் போடுவா...’’
 
``நானும் எருமை மேய்க்கிறப்போ வேணும்னே அவங்க ஊருகிட்ட போய் மேய்ப்பேன். நாலைஞ்சு தடவை அவனைப் பார்த்திருக்கேன். இவளுக சொன்னதாலயா... இல்லே, அவனைப் புடிச்சுப் போயிடுச்சானு தெரியலை. ஆனா, அவன் கூப்பிட்டிருந்தா, எப்போ வேணும்னாலும் ஓடிப்போயிருந்திருப்பேன். அவ்வளவு ஆசையாகிப் போச்சு. ஆளும் நெகுநெகுனு சாட்டையாட்டம் இருப்பான். நெத்தியில கன்னங்கரேல்னு முடி விழும். சின்னக் காத்து அடிச்சாக்கூட அப்படிப் பறக்கும். `என்னா... எர்ம மேய்றியா'னு ஒரு தடவை என்னையப் பார்த்துக் கேட்டான். அன்னைக்கு எனக்கு இருந்த சந்தோஷம், மொதப்புள்ளை பொறந்தப்பதான் மறுபடி வாய்ச்சுது...’’ எனக் கிழவி சொல்லிக்கொண்டிருந்தபோது, சோளம் வெடித்ததுபோல் தூறல் ஒன்றிரண்டாக விழுந்துகொண்டிருந்தது. மழை வரலாம்... வராமலும் போகலாம் என்பதுபோல் இருந்தது. சமையல் ஆரம்பித்திருந்தது. மழை பெய்தாலும், வேலை கெடாமல் இருக்க பழைய ஃப்ளெக்ஸ்களை மறைப்பாகக் கட்டினர்.

``ஒரு நா காலையில, `அம்மையப்பன் கோயில்ல யாரோ தொங்குறாங்க’னு யாரோ சொல்லிவிட, ஊரே ஒடிப்போய் பார்த்துச்சு. நான் போறதுக்குள்ள இறக்கிட்டாங்க. கும்பலை விலக்கிட்டுப் போய்ப் பார்த்தா, மம்மூதன் செத்துக் கிடக்கான். எனக்கு உசுரே இல்லை. பால் ஊத்தப் போயிட்டு வந்துகிட்டு இருந்த சின்னப்புள்ளதான் தூக்கு மாட்டி குதிக்கிறதைப் பாத்திருக்கா. 'ரெண்டு பேரு பட்டவன் சிலை மேல ஏறி நின்னாங்க. ஒருத்தரு அதுல பொம்பளையாளு'னு சொல்லவும் ஓடிப்போய் கொட்டகை மேலே மூங்கில் உத்திரத்தைப் பார்த்தாங்க. ரெண்டு கயிறு கட்டியிருந்தது. ஒண்ணு பாதி அறுந்து மம்மூதனின் கழுத்துல கெடந்தது. இன்னொண்ணு, உத்திரத்துல தொங்கிட்டுருந்துச்சு...’’

`பட்டவன் அடிச்சிட்டாரு’ என்றுதான் இந்தக் கிழவி கதையை முடிப்பாள் எனத் தெரிந்துவிட்டது. அசுவாரஸ்யமாக `ஊம்...’ கொட்டிக்கொண்டிருந்தேன்.

``அந்த இன்னொரு தூக்குக் கயிறு செல்விக்குப் போட்டது. மம்மூதனுக்கும் செல்விக்கும் தொடுப்பாகிப் போச்சு. அவன் அன்னைக்கு எங்க வூட்டுக்கு வந்ததே அவளை நோட்டம்விடத்தான். நான்தான் அவனைப் பார்த்துப் பார்த்து மருகிக்கிட்டு இருந்தேன். அப்ப ஓடிப்போனவளை அப்புறம் ஒரு மாசம் கழிச்சு  நாகலாபுரத்துக்கிட்ட இருந்து கூட்டியாந்தாங்க. குடியான ஆளுக மட்டும் சேர்ந்து, நடுக்காட்டுல பஞ்சாயத்துப் பேசினாங்க. அந்தப் பஞ்சாயத்துல `செய்யுறது தப்புனு தெரிஞ்சுது. ஓடிப்போலாம்னு அவன் கூப்பிட்டான். ஆனா, அவன் எந்த ஊருனு தெரியலை. கூடப் போயி எங்கியாவது விட்டுட்டுப்  போயிட்டா என்னா பண்றதுனுதான், நாண்டுக்கிடலாம்னு சொன்னேன். மொதல்ல அவன் குதிச்சுட்டான். அவன் துள்ளுனதைப் பார்த்து எனக்கு பயம் ஆகிப்போச்சு. செலையில இருந்து எறங்கிட்டேன். `அவனே போயிட்டான்... இனிமே நாம செத்து ஆகப்போறது என்னா?’னு வூட்டுக்குப் போகப் போனேன். அப்பத்தான் கோனாரு வூட்டுப் புள்ளை தூரத்துல இருந்து வந்துருச்சு. நான் மானத்துக்குப் பயந்து சின்னம்மா வீட்டுக்குப் போயிட்டேன்'னு சொன்னா. பஞ்சாயத்துல அவ தலையை சிரைச்சு, வீட்டுக்குள்ளயே பூட்டிவைக்கச் சொல்லிட்டாங்க. அடுத்த மூணாம் நாளு ஒரு சமைஞ்ச புள்ளைக்கு சாமி வந்து `செல்வி மகன்ல ஆரம்பிச்சு யாரெல்லாம் அந்தத் தலைமுறையில முதல் ஆம்பளையா பொறக்குறாங்களோ... அவங்கதான் பட்டவன் கோயில் பூசாரி’னு சொல்லிடுச்சு. `பொம்பளைப் புள்ளை பொறந்தா, அப்பலருந்து நிறுத்திக்கலாம்’னும் சொல்லிடுச்சு. கோபாலு மகனோட இது மூணாவது தலைமுறை. இன்னிய வரைக்கும் பொம்பளைப் புள்ளை கிடையாது. பொம்பளைப் புள்ளையே பொறக்காத வூடு நரகம். ஆனா விதிச்சிருச்சு...’’
 
எனக்கு வியர்த்துவிட்டது. கிழவி வெற்றிலையைக் கடித்துக்கொண்டிருந்தார். நான் கட்டிலைவிட்டு இறங்கிக் கோயிலை நோக்கிப் போனேன். கோபால் மகன், வெட்டிய ஆட்டின் தலையைத் தனியாக எடுத்து அதன் வாயைப் பிளந்து, அதில் ஆட்டின் கால் ஒன்றினைக் கவ்வக் கொடுத்துக்கொண்டிருந்தார். என்னைப் பார்த்தவுடன் பெரிதாகச் சிரித்துக்கொண்டே ``மழையெல்லாம் வராதுங்க. சும்மா சீன் காட்டுது...’’ என்றபடி, கால் கவ்வக் கொடுத்திருந்த ஆட்டுத் தலையை எடுத்து இலையில் வைத்து பட்டவன் முன்னால் படைத்தார்.

திறந்தபடி இருந்த அந்த வெள்ளாட்டின் கண்கள் மரகதப்பச்சை நிறத்தில் இருந்தன.