Published:Updated:

“ஒரே மொழி... இந்தியாவுக்கு சனி!”

“ஒரே மொழி... இந்தியாவுக்கு சனி!”
பிரீமியம் ஸ்டோரி
News
“ஒரே மொழி... இந்தியாவுக்கு சனி!”

“ஒரே மொழி... இந்தியாவுக்கு சனி!”

ரசியல், தேர்தல் நோக்கம் இல்லாத ஒரு மேடையாக அது இருந்தது. எதிரெதிர் திசையில் பயணித்தவர்களைத் தமிழும் தமிழர் பண்பாடும் மீண்டும் இணைத்துள்ளது. கடந்த ஜூன் 26-ம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும், இந்திய மாணவர் சங்கமும் இணைந்து  சென்னை காமராஜர் அரங்கத்தில் நடத்திய ‘தமிழர் உரிமை மாநாட்டில்’தான் இந்தக் காட்சி. எழுத்தாளர்கள் ச.தமிழ்செல்வனும் சு.வெங்கடேசனும் இதற்கான முன்முயற்சிகளை எடுத்திருந்தனர். இதில் தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், திராவிடர் கழகம் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் மேடையேறி, கீழடி அகழாய்வுக்காகவும் இந்தி எதிர்ப்புக்காகவும் குரல் கொடுத்தனர்.

இந்த மாநாட்டுக்காகக் கீழடியில் இருந்து பிடிமண், மண்பானைகளில் எடுத்து வரப்பட்டிருந்தது. அதைப் பெற்றுக்கொள்ள நல்லகண்ணு அழைக்கப்பட்டார். சட்டென்று தன் துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு நல்லகண்ணு பிடிமண்ணை வாங்கியது அரங்கில் ஆச்சர்யத்தை உருவாக்கியது. மூத்த மார்க்சிஸ்ட் தலைவர் சங்கரய்யா, ‘‘தமிழ் மொழிக்காக அரங்கில் வந்து அமர்ந்திருக்கும் குமரி அனந்தனுக்கு நன்றி’’ என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.கம்யூனிஸ்ட் மேடையில் காங்கிரஸுக்கு அங்கீகாரம் தரப்பட்டது.

“ஒரே மொழி... இந்தியாவுக்கு சனி!”

உணவுக்குப் பின் நடைபெற்ற கீழடி பாதுகாப்புக் கருத்தரங்கில் பேசிய முன்னாள் தொல்லியல் துறை இயக்குநர் தயாளன், ‘‘இந்திய அளவில் இதுவரை நடந்த அகழாய்வுகளில், அரசியல்வாதிகள் மத்தியில் அதிகம் பேசப்பட்டது கீழடி அகழாய்வுதான். அது போலவே தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியிலும் அதிகம் பேசப்படுவது கீழடிதான். ஒப்பீட்டு அளவில் மற்ற ஆய்வுகளை விட இதுவே மிகப்பெரியது. இதை மேலும் தொடர்ந்து செய்ய வேண்டும். எந்தச் சூழலிலும் கை விட்டு விடக்கூடாது. மிகப்பெரிய கட்டடங்கள் உள்ளே இருக்கக்கூடும் என்று நம்புகிறேன். எல்லாவற்றையும் விட முக்கிய செய்தி... இந்தக் கீழடிக்கும் சிந்து சமவெளி நாகரிகத்துக்கும் மிக நெருங்கிய தொடர்புகள் உள்ளன. தமிழர்கள் கீழடியை எந்த அரசும் மூடிவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்” என்று குறிப்பிட்டார்.

அதன் பின்னர் பேச வந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை எம்.பி-யான டி.கே.ரங்கராஜன், ‘‘கீழடி, ஹரப்பா, மொகஞ்சதாரோ ஆகியவை ஒரு திராவிட வளையம். இந்த உண்மை விரைவில் வெளியாகும். தொல்லியல் துறையில் ஒரு ஆய்வைத் தொடங்கும் அதிகாரிதான் அதை முடிக்கவேண்டும் என்கிற நடைமுறை உள்ளது. அதை உடைத்து வேண்டுமென்றே, கீழடி ஆய்வைத் தொடங்கிய அமர்நாத் ராமகிருஷ்ணனை இடமாற்றம் செய்துள்ளனர்” என்றார்.

‘‘இடதுசாரி அமைப்புகள் இந்தி திணிப்புக்கு எதிராகவும், தமிழ் பண்பாட்டு ஆய்வுகள் குறித்தும் போராட முன்வந்திருப்பது மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது. இப்படி ஒரு சூழலில் நம்மைத் தள்ளிய பி.ஜே.பி அரசுக்கு நன்றி’’ என்று தொடங்கிய தி.மு.க எம்.பி கனிமொழி, ‘‘எப்போது இந்தக் கீழடி அகழாய்வு, சங்க காலத்தைச் சேர்ந்தது என்று அமர்நாத் பேசத் துவங்கினாரோ, அப்போதே அவரை இடம் மாற்றும் எண்ணத்துக்கு வந்துவிட்டார்கள். தமிழர் நாகரிகம் தொன்மையானது என்கிற உண்மையை வெளியில் சொல்லக்கூடாது என்பதற்காகவே அவர் மாற்றப்பட்டுள்ளார். அடுத்ததாக பாஸ்போர்ட்டில் இந்தியைத் திணிக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது. இதற்கு எதிராக முற்போக்கு சக்திகள் உடனடியாக இணையவேண்டும்” என்றார்.     

மாலையில் நடைபெற்ற பன்முக பாதுகாப்பு மேடையில் தா.பாண்டியன் பேசிக் கொண்டிருந்தபோது, “நாங்க பேசுறது உங்களுக்கு புரியுதா?” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் சீதாராம் யெச்சூரியிடம் துரைமுருகன் கேட்டார். யெச்சூரி, “தா.பா பேசும் தமிழ் மட்டும் புரிகிறது” என்றார்.

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், ‘‘நீட் தேர்வினை வலுக்கட்டாயமாக திணித்த மத்திய அரசு, அடுத்தகட்டமாக பொறியியல் மற்றும் கலைக்கல்லூரிகளிலும் ஒற்றைத் தேர்வு முறையைக் கொண்டு வர இருக்கிறார்கள். மோடி அரசு இந்திய மக்களின் பன்மைத்துவத்தை ஒழித்து ஒற்றைக் கலாசாரத்தைக் கொண்டுவர முனைகிறது. கீழடி குறித்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உண்டு’’ என்றார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“ஒரே மொழி... இந்தியாவுக்கு சனி!”

‘‘இன்றைக்கு ஒரு பொதுக்கூட்டம் இருக்கிறது. அதனால் இந்த நிகழ்ச்சிக்கு வரமுடியாது என்று முதலில் மறுத்திருந்தேன். ஆனால், வராமல் இருந்திருந்தால் பெரும் தவறு செய்திருப்பேன். அரங்கத்துக்கு இந்தி எதிர்ப்பு போராளிகள் தாளமுத்து, நடராசன் பெயரை வைத்திருப்பதற்கு இரு கரம் கூப்பி வணங்குகிறேன். இந்தியா இதுவரைக் கண்ட பிரதமர்கள் அனைவருமே இந்தியைத் திணித்தார்கள். ஆனால், அப்படித் திணித்தவர்கள் அனைவரும் சூடுபட்டுக் கொண்டார்கள். ஒரே மொழி என்கிற முழக்கம் இந்தியாவின் சனி” என்று உணர்ச்சிமயமாகப் பேசத் தொடங்கிய தி.மு.க-வின் முதன்மைச் செயலாளர் துரைமுருகன், ‘‘இந்த அரசிடமா கீழடிக்கு நல்லது செய்யக் கேட்கமுடியும்?’’ என விரக்தியோடு கேட்டார். .

சர்வதேசியம் பேசும் மார்க்சிஸ்ட்டுகள் நடத்திய இந்த மாநாட்டில், தமிழ்த் தேசியமும் திராவிட தேசியமும் பட்டொளி வீசிப் பறந்தன.

- வரவனை செந்தில்
படங்கள்: ப.சரவணகுமார்