Published:Updated:

தறிகெட்ட தார் ஊழல்! - 600 கோடி ரூபாய் முறைகேடு - ஜூ.வி லென்ஸ்

தறிகெட்ட தார் ஊழல்! - 600 கோடி ரூபாய் முறைகேடு - ஜூ.வி லென்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
தறிகெட்ட தார் ஊழல்! - 600 கோடி ரூபாய் முறைகேடு - ஜூ.வி லென்ஸ்

தறிகெட்ட தார் ஊழல்! - 600 கோடி ரூபாய் முறைகேடு - ஜூ.வி லென்ஸ்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைக்குமேல் கத்தி தொங்குகிறது என்று சொல்வதைவிட... அவர், தலைக்கு மேலே தார் டின் தொங்குகிறது என்றே சொல்லலாம். 2011-ம் ஆண்டு முதல் 2016 வரை நெடுஞ்சாலைத் துறையின் பவர்ஃபுல் அமைச்சராக வலம்வந்தார் எடப்பாடி. இப்போது அவர் தமிழக முதல்வர் பதவியில் அமர்ந்திருந்தாலும், நெடுஞ்சாலைத் துறையையும் அவரேதான் கவனிக்கிறார். 2014-15, 2015-16 ஆகிய இரண்டு நிதி ஆண்டுகளில் சாலைப்பணிகளுக்காக தார் பயன்படுத்திய வகையில் சுமார் 600 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையில் ஒரு வழக்கும் இப்போது பதிவு செய்யப்பட, வில்லங்கம் வீதிக்கு வந்திருக்கிறது.

தறிகெட்ட தார் ஊழல்! - 600 கோடி ரூபாய் முறைகேடு - ஜூ.வி லென்ஸ்

விலை குறையும் தார்!

நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் போன்ற பல அரசுத் துறைகளில் பல பணிகளும் கான்ட்ராக்டர் களுக்கு டென்டர் விட்டே செய்யப் படுகின்றன. சிமென்ட், இரும்பு, தார் மற்றும் பெட்ரோலியப் பொருள்கள் என்று பலவற்றை இந்தக் கட்டுமானம் மற்றும் சாலைப் பணிகளுக்காக கான்ட்ராக்டர்கள் வாங்க வேண்டியுள்ளது. பணிக்கு எஸ்டிமேட் போட்டு, டென்டர் விட்டு, அவர்கள் பணிகளைச் செய்ய ஆரம்பிக்க பல மாதங்கள் ஆகிவிடும். டென்டர் விடும்போது பொருள்களின் விலை ஒன்றாக இருக்கும். ஆனால், பணிகளைச் செய்ய ஆரம்பிக்கும்போது அந்த விலை ஏறவோ, இறங்கவோ செய்யும். விலை ஏறினால் கான்ட்ராக்டர்களுக்கு நஷ்டம்; விலை குறைந்தால் அரசுக்கு நஷ்டம்.

இதைத் தவிர்ப்பதற்காக தமிழக அரசு இரண்டு அரசாணைகளைப் பிறப்பித்தது. 14.3.2008-ல் வெளியான அரசாணை எண் 60 மற்றும் 10.6.2009-ல் வெளியான அரசாணை எண் 101 ஆகிய அந்த இரண்டின் சாராம்சம் இதுதான்... ‘ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள, 12 மாதங்களுக்கு மேல் செய்ய வேண்டிய ஒப்பந்தப் பணிகளில் விலை விகித ஏற்ற, இறக்கங்களைச் சரிக்கட்டியே இறுதியில் பணம் தரப்பட வேண்டும்’. அதாவது, விலைகூடினால்... விலை விகித மாறுபாட்டுத் தொகையைச் சம்பந்தப்பட்ட கான்ட்ராக்டருக்கு அரசு தரும். விலை குறைந்தால், அதை கான்ட்ராக்டர்களின் பில்லில் பிடித்தம் செய்ய வேண்டும். இந்த விதியில்தான் விளையாடி இருக்கிறார்கள் அதிகாரிகள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தறிகெட்ட தார் ஊழல்! - 600 கோடி ரூபாய் முறைகேடு - ஜூ.வி லென்ஸ்

சாலை போடுவதற்கு உதவும் தார், பெட்ரோலியச் சுத்திகரிப்புப் பணியின்போது கிடைக்கும் ஒரு பொருள். இந்தியாவில் இதன் விலையை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம்தான் நிர்ணயிக்கிறது. கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலே பெட்ரோலியப்பொருள்களின் விலை குறைந்து வருகிறது. அதுமட்டுமில்லை... நெடுஞ்சாலைத் துறையில் பல பணிகளுக்கு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில்தான் டென்டர் விடுவார்கள். அப்போது தார் விலை உச்சத்தில் இருக்கும். மழைக்காலம் முடிந்து பிப்ரவரி, மார்ச் மாதங்களில்தான் கான்ட்ராக்டர்கள் பணியைத் தொடங்குவார்கள். அப்போது தார் விலை குறைந்துவிடும். இந்த விலை வித்தியாசத்தின் பலன், அரசுக்குத்தான் கிடைக்க வேண்டும். ஆனால், கடந்த 2014-15, 2015-16 ஆகிய நிதி ஆண்டுகளில் இதில் அரசுக்கு சுமார் 600 கோடி ரூபாய் வரை அதிகாரிகள் இழப்பீடு ஏற்படுத்த முயன்றனர் என்பதுதான் குற்றச்சாட்டு.

என்னென்ன தகிடுதத்தங்கள்?

2014-2015, 2015-2016 ஆகிய நிதி ஆண்டுகளில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்புத் திட்டத்தின்கீழ் சுமார் 5,800 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கான்ட்ராக்ட் விடப்பட்டது. இதுதவிர தேசிய நெடுஞ்சாலைகள் பிரிவு, கிராமச் சாலைகள் திட்டம், நகரச் சாலைகள் என பல பிரிவுகளில் வேலைகள் நடக்கின்றன. எல்லாப் பணிகளுக்குமே தார் அவசியமாகத் தேவை.

2014-15 நிதியாண்டில் சாலைப் பணிகளுக்கான எஸ்டிமேட் ரெடியான 2014 செப்டம்பர் மாதத்தில், தார் விலை ஒரு மெட்ரிக் டன் 41,360 ரூபாய். அடுத்து வந்த மாதங்களில் இந்த விலை படிப்படியாகக் குறைந்தது. 2015 மார்ச் மாதத்தில் இதன் விலை, 30,260 ரூபாய்.

தறிகெட்ட தார் ஊழல்! - 600 கோடி ரூபாய் முறைகேடு - ஜூ.வி லென்ஸ்

இதேபோல 2015-16 நிதியாண்டில் சாலைப் பணிகளுக்கான எஸ்டிமேட் ரெடியான 2015 செப் டம்பர் மாதத்தில், தார் விலை ஒரு மெட்ரிக் டன் 31,100 ரூபாய். அடுத்து வந்த மாதங்களில் இந்த விலை படிப்படியாகக் குறைந்தது. 2016 மார்ச் மாதத்தில் இதன் விலை, 23,146 ரூபாய்.

‘‘நெடுஞ்சாலைத் துறையில் உள்ள டெக்னிக்கல் அளவுகோல்களின்படி, 2014-15-ம் ஆண்டில், மூன்று லட்சத்து 68 ஆயிரம் மெட்ரிக் டன் தார் உபயோகப்படுத்தப்பட்டிருக்கலாம் என்று சொல்கிறார்கள். இதன் அடிப்படையில் பார்த்தால், தார் விலை விகித மாறுபாட்டுத் தொகை சுமார் 361 கோடி ரூபாய். 2015-16-ம் நிதியாண்டில் இந்த விலை விகித மாறுபாட்டுத் தொகை 251 கோடி ரூபாய். ஆக, சுமார் 600 கோடி ரூபாயைக் கான்ட்ராக்டர்களின் பில்லில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பிடித்தம் செய்திருக்க வேண்டும்’’ என்கிறார் ஆர்.டி.ஐ ஆர்வலர் பாலாஜி.

தறிகெட்ட தார் ஊழல்! - 600 கோடி ரூபாய் முறைகேடு - ஜூ.வி லென்ஸ்

சென்னையைச் சேர்ந்த பாலாஜி, இந்த விவகாரம் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பல கேள்விகளை எழுப்பி, தொடர்ச்சியாகப் போராடி வருகிறார். அவரின் முயற்சியால், பல விநோதங்களைச் சந்தித்தது இந்த விவகாரம். அதுபற்றி அவரே சொல்கிறார்.

முதல் சஸ்பெண்ட்

‘‘திருச்சி நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளராக இருந்தவர் சத்தியமூர்த்தி. இவரைக் கடந்த 2016 ஜூன் மாதத்தில் திடீரென சஸ்பெண்ட் செய்தார்கள். காரணம், தார் விவகாரம். 2014-2015-ம் நிதியாண்டில் செய்யப்பட்ட சாலைப் பணிகளுக்கு, தார் விலை குறைந்தபோதும், பில் தொகையை செட்டில் செய்யும்போது அந்த வித்தியாசத்தைப் பிடித்தம் செய்யாமல் விட்டார் என்பது குற்றச்சாட்டு. அரசுக்கு 6 கோடியே 36 லட்ச ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக அவர்மீது குற்றம் சுமத்தியிருந்தார்கள்.

இதைத் தொடர்ந்து நான் விசாரித்தபோது, ‘இது திருச்சியில் மட்டும் நடந்த விவகாரம் அல்ல... தமிழகம் முழுக்க பல அதிகாரிகள் தவறு செய்திருக்கிறார்கள். சுமார் 600 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது’ என்று கேள்விப்பட்டேன். இதைத்தொடர்ந்து முதல்வருக்குப் புகார் அனுப்பினேன். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றவுடன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தமிழகத்தில் உள்ள எல்லா நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர்களிடமும் விவரங்களைக் கேட்டேன்.

எனக்கு வந்த பெரும்பாலான தகவல்களில் முரண்பாடுகள் தெரிந்தன. இதை நான் மோப்பம் பிடித்தவுடன், நெடுஞ்சாலைத் துறையின் உயர் அதிகாரிகள் மின்னல் வேகத்தில் கான்ட்ராக்டர்களிடம் அவசரமாகப் பணத்தைப் பிடித்தம் செய்ய ஆரம்பித்தனர். சுமார் 423 கோடி ரூபாய் அளவுக்குக் கான்ட்ராக்டர்களிடம் பணத்தைப் பிடித்தம் செய்துவிட்டதாக 18.11.2016-ல் எழுத்துபூர்வமாக எனக்குத் தகவல் சொன்னார்கள். எல்லாம் சரி. சட்டப்படி உரிய காலத்தில் பிடிக்காமல், முறைகேடு விவகாரம் கிளம்பியவுடன் விறுவிறுவென பிடித்தம் செய்வது ஏன்... முன்பே, பணத்தைப் பிடித்தம் செய்யாமல்விட்டதற்குப் பின்னணி காரணம் என்ன? ஒருவரை மட்டும் சஸ்பெண்ட் செய்துவிட்டு மற்றவர்களை விட்டது ஏன்? இதையெல்லாம் சுட்டிக்காட்டி நான் நீதிமன்றப் படியேறினேன். துறையின் அமைச்சராக அப்போது இருந்தவரும், இப்போது முதல்வராக இருப்பவருமான எடப்பாடிக்குத் தெரியாமல் இது நடந்திருக்க முடியாது” என்றார் பாலாஜி.

தீர்ப்புக்கு முதல் நாள் வழக்கு 

தவறு செய்த நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள்மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கு, ஜூன் 20-ம் தேதியன்று விசாரணைக்கு வந்தது. பாலாஜியின் புகார்மீது பல மாதங்களாக நடவடிக்கை எடுக்காமல்விட்டிருந்த லஞ்ச ஒழிப்புப் போலீஸார், திடீரென சோம்பலை முறித்து ஜூன் 19-ம் தேதியன்று சத்தியமூர்த்தி உள்பட திருச்சியைச் சேர்ந்த நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, மற்ற மாவட்டங்களிலும் இதுபற்றி விசாரணை சூடு பிடித்திருக்கிறது. மத்திய உளவுத் துறையினரும் இந்த முறைகேடு தொடர்பான ஆவணங்களை மின்னல் வேகத்தில் சேகரித்து வருகின்றனர். எப்போதும் இல்லாத பரபரப்பு நெடுஞ்சாலைத் துறை வட்டாரங்களில் தென்படுகிறது.

தறிகெட்ட தார் ஊழல்! - 600 கோடி ரூபாய் முறைகேடு - ஜூ.வி லென்ஸ்

‘‘நடவடிக்கை எடுப்போம்!’’

தார் முறைகேடு பற்றி நெடுஞ்சாலைத் துறையின் உயரதிகாரி ஒருவரிடம் கேட்டோம். ‘‘நெடுஞ்சாலைத் துறையில் ரோடு கான்ட்ராக்ட் எடுப்பவர்கள் வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு இடங்களில் ரோடு பணி செய்வார்கள். அவ்வப்போது செய்யும் பணிக்கு ஏற்றபடி, பணப்பட்டுவாடா செய்யப்படும். ஏதாவது பணம் பிடித்தம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், அதையும் உடனே செய்கிறோம். தார் விவகாரத்தில் கடந்த 2015-ம் ஆண்டே, தமிழகத்தில் உள்ள 41 கோட்டப் பொறியாளர்களுக்கும் சென்னையிலுள்ள தலைமைப் பொறியாளர் கடிதம் எழுதினார். ‘தார் விலை சரிகிறது. கான்ட்ராக்டர்களிடம் விலை விகித மாறுபாட்டைக் கணக்கிட்டுப் பிடித்தம் செய்யுங்கள்’ என்று அதில் சொல்லியிருக்கிறார்.

அதன்படி, கோட்டப் பொறியாளர்களும் 2015-ம் வருடம் மே மாதம் முதல் பிடித்தம் செய்யத் தொடங்கிவிட்டனர். 2016-ம் ஆண்டு மத்தியில் திருச்சி கோட்டப் பொறியாளர் பிடித்தம் செய்யவில்லை என்று புகார் வந்தது. முறைப்படி விசாரணை நடத்தி அவரை சஸ்பெண்ட் செய்து விட்டோம். வேறு சில கோட்டங்களில், குறிப்பிட்ட அந்த பில்லில் பிடித்தம் செய்யாமல், அதே கான்ட்ராக்டர்களின் மற்ற பில்களில் பிடித்தம் செய்திருக்கின்றனர். இதற்கிடையில், 83 கான்ட் ராக்டர்கள் இப்படிப் பணம் பிடித்தம் செய்வதை எதிர்த்து நீதிமன்றத்துக்குப் போனார்கள். எனினும், நாங்கள் துரிதமாக நடவடிக்கை எடுத்து, கடந்த மே 30-ம் தேதி வரை சுமார் 500 கோடி ரூபாயைப் பிடித்தம் செய்துவிட்டோம். அரசுக்கு இழப்பு இல்லை என்பதை இதிலிருந்தே புரிந்துகொள்ளலாம்” என்றார் அவர்.

‘‘உரிய நேரத்தில் பணத்தைப் பிடிக்காமல்விட்ட அதிகாரிகள்மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை?” என்றோம்.

அதற்கு, “சில மாதங்களுக்கு முன்பே, கண்காணிப்புப் பொறியாளர்கள் மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம்” என்றார்.

தார் பூசி எழுத்துகளை மறைப்பதுபோல, தாரில் நடந்த முறைகேட்டையும் மறைத்துவிடக் கூடாது.

- ஜூ.வி டீம்