Published:Updated:

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 24 - மருத்துவக் காப்பீடு! - கசக்கும் உண்மைகள்

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 24 - மருத்துவக் காப்பீடு! - கசக்கும் உண்மைகள்
பிரீமியம் ஸ்டோரி
மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 24 - மருத்துவக் காப்பீடு! - கசக்கும் உண்மைகள்

டாக்டர் வெ.ஜீவானந்தம்

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 24 - மருத்துவக் காப்பீடு! - கசக்கும் உண்மைகள்

டாக்டர் வெ.ஜீவானந்தம்

Published:Updated:
மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 24 - மருத்துவக் காப்பீடு! - கசக்கும் உண்மைகள்
பிரீமியம் ஸ்டோரி
மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 24 - மருத்துவக் காப்பீடு! - கசக்கும் உண்மைகள்

‘லை ஃப் இன்ஷூரன்ஸ் என்பது உண்மையில் டெத் இன்ஷூரன்ஸே. நாம் வாழும்போது பயன்படாமல், செத்தபின் வரும் பணமே அது’ என்பார் ஓஷோ. உண்மையில், ‘வாழ்வுக்கான காப்பீடு’ என்பது மரணத்துக்கான காப்பீடே. வாழ்க்கைக்கான உண்மையான காப்பீடு, மருத்துவக் காப்பீடு மட்டுமே. வாழும்போது ஒருவர் நோயில் படுத்துவிட்டால், அவருக்கான மருத்துவச் செலவுக்குக் கை கொடுப்பது அது மட்டுமே.

மருத்துவம் என்பது மனிதாபிமானம் உள்ள மருத்துவர்கள் கைகளிலிருந்து நழுவி, கார்ப்பரேட் மருத்துவமனைகளின் கைகளுக்குத் தாரை வார்க்கப்பட்டுவிட்ட காலம் இது. மனிதாபிமான முள்ள மற்றொரு மனிதனுக்குப் பதிலாக, மற்றொரு கணினிமயமான கம்பெனியே மனிதனைக் காக்க முடியும் என்ற நிலை நம்மீது சுமத்தப்பட்டுவிட்டது. இனி, மருத்துவக் காப்பீடின்றி யாரும் வாழ முடியாது.

தனி நபர்களுக்கோ, குடும்பத்துக்கோ மருத்துவக் காப்பீடு செய்துகொள்ளும்போது, கண்ணுக்குத் தெரியாத பொடி எழுத்தில் அச்சிடப்பட்ட பல காகிதங்களில் கம்பெனி கையெழுத்து கேட்கும். நாமும் படித்துப் பார்க்காமல் கையெழுத்துப் போட்டுவருகிறோம். அது பல வழக்கறிஞர்களும் கணக்காயர்களும் மிக புத்திசாலித்தனமாக விரித்த சட்ட வலை என்பது காலம் கடந்தபின்தான் புரியும். ‘நம் தேவைக்குப் பொருத்தமான காப்பீடு செய்துகொள்கிறோமா’ என்ற கவனம் இதில் மிக முக்கியம். என்னென்ன நிபந்தனைகள், எதெல்லாம் விதிவிலக்குகள் என்று முழுமையாகத் தெரிந்து கொண்டு காப்பீடு திட்டத்தில் இணைவது முக்கியம். நடுத்தர வர்க்கக் குடும்பங்களில் வாழ்நாள் சேமிப்பைக் கரைக்கும் விஷயமாக திடீர் நோய்களே இருக்கின்றன. அப்படிப்பட்ட ஆபத்து நேரச் செலவுகளைத் தாங்குவதாகக் காப்பீடு இருக்க வேண்டும்.

ஆனால், இந்தியா போன்ற 70 சதவிகிதம் ஏழைகள்கொண்ட நாட்டின் மருத்துவப் பாதுகாப்பை, முற்றிலுமாக இன்ஷூரன்ஸ் கம்பெனிகளின் கைகளில் தந்துவிட முடியுமா? அது பயன் தருமா? ஆனால், மக்கள் அரசுகள் அதைத்தான் செய்து வருகின்றன.

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 24 - மருத்துவக் காப்பீடு! - கசக்கும் உண்மைகள்

30 சதவிகித நடுத்தர, பணக்கார வர்க்கங்களைப் பாதுகாக்கும் பொறுப்பை, பல தனியார் மருத்துவக் காப்பீட்டுக் கம்பெனிகள் சிறப்பாகப் பலனுள்ள வகையில் செய்து வருகின்றன என்பது உண்மையே. அதுபோல, பல்வேறு தனியார், அரசு நிறுவனங்களில் பணிபுரிவோர்க்கு மருத்துவப் பாதுகாப்புச் செலவுக்கான நிதி வழங்கப்படுகிறது. அதற்கு, ‘எந்தெந்த தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்று மருத்துவம் பெறலாம்’ என்ற பட்டியலும் அவர்களுக்குத் தரப்படுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை குடும்பத்துக்கே மாஸ்டர் ஹெல்த் செக்கப் மற்றும் மருத்துவம் பெறவும் சில திட்டங்களில் வழி செய்யப் பட்டுள்ளது. கார்ப்பரேட் மருத்துவமனையில் ராஜ மரியாதையுடன் வரவேற்று, பணத் தகுதிக்கு ஏற்றபடி அறைகள் தந்து, தேவையானதும் தேவையற்றதுமான அனைத்துப் பரிசோதனை களும் செய்து, மருந்துகளும் தந்து மகிழ்ச்சியுடன் வெளியே அனுப்புகிறார்கள். கடைசியில், மருத்துவ பில்லுக்கு அடியில் கையெழுத்திட்டால் போதும். எத்தனை மடங்கு அதிகமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்ற கவலை, கையெழுத்துப் போடுபவர்களுக்கும் இல்லை; கேட்பவர்களுக்கும் இல்லை. ‘யாரோதானே தருகிறார்கள்’ என்ற அக்கறையின்மையின் அடையாளமாக, எவ்வித சமூக உணர்வுமின்றி அந்தச் சடங்கு நடந்து முடிகிறது. கம்பெனியின் செலவில் ரயிலின் முதல் வகுப்பு ஏ.சி கோச்சில் பயணிப்பவர், தன் செலவில் செல்லும்போது இரண்டாம் வகுப்பு ஏ.சி இல்லாத பெட்டியில் பயணிப்பது போன்ற மனநிலைதான் எங்கும் நிலவுகிறது.

இன்னொரு பக்கம், மத்திய, மாநில அரசுகள் வழங்கும் மருத்துவக் காப்பீடுகள் பெரும்பாலும் தனியார் கம்பெனிகளுக்கே குத்தகைக்கு விடப்படுகின்றன. இப்படிப்பட்ட திட்டங்களின் முன்னோடியாகத் தமிழ்நாடு இருக்கிறது. இந்த அரசுக் காப்பீட்டுத் திட்டங்கள் எத்தகைய உன்னத உதவியை ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்குச் செய்து வருகின்றன என்பதை நான் அறிவேன்.

ஆனால், இதிலிருக்கும் சங்கடங்கள் பற்றியும் பேசியாக வேண்டும். ‘முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தத் திட்டம், தமிழ்நாட்டில் 1 கோடியே 57 லட்சம் குடும்பங்களுக்குக் காப்பீட்டு வசதியைச் செய்திருப்பதாக அரசு கூறுகிறது. கிட்டத்தட்ட தமிழ்நாட்டு மக்கள்தொகையில் 56 சதவிகிதம் பேருக்கு இந்தக் காப்பீடு பொருந்துகிறது. சுமார் 1,100 வகையான சிகிச்சைகளை இந்தத் திட்டத்தின்மூலம் இலவசமாக மக்கள் பெற முடியும். ஆனால், எத்தனை பேருக்கு இந்த விஷயம் தெரியும்? இந்தியப் பொதுச் சுகாதார அறக்கட்டளை அமைப்பும், சென்னை ஐ.ஐ.டி-யும் இணைந்து தமிழ்நாட்டின் பத்து மாவட்டங்களில் 2,773 குடும் பங்களிடம் ஓர் ஆய்வு நடத்தினர். அதில் தெரிந்த  ஓர் அவலமான உண்மை, ‘இந்தக் காப்பீட்டுத் திட்டம் என்ன வசதிகளைத் தருகிறது?’ என்ற தகவல்களோ, ‘உயிர் காக்கும் அறுவை சிகிச்சைகளைத் தனியார் மருத்துவமனைகளில் செய்துகொள்ள இந்தக் காப்பீடு உதவுகிறது’ என்ற உண்மையோ... சுமார் 60 சதவிகிதம் மக்களுக்குத் தெரியவில்லை.

சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் ஒரு பொதுநல வழக்கு போடப்பட்டிருக்கிறது. ‘கேஷ்லெஸ் சிகிச்சை என்று சொல்லப்பட்டாலும், இதற்கு நிறைய தனியார் மருத்துவமனைகளில் கூடுதலாகப் பணம் கேட்கிறார்கள். காப்பீட்டுத் திட்டம் தொடர்பாக ஏதாவது பிரச்னை என்றால் யாரிடம் புகார் செய்வது என ஒரு போர்டு, தனியார் மருத்துவமனைகளில் மக்கள் பார்வையில்படும்படி இருக்க வேண்டும் என்பது சட்டம். ஆனால், பெரும்பாலான மருத்துவமனைகளில் அப்படி வைப்பதில்லை’ என்பதே அந்த வழக்கு. ‘மாவட்ட கலெக்டரிடம் புகார் செய்யலாம்’ என்று பதில் தந்தார் அரசு வழக்கறிஞர். ஒரு நோயாளி, மருத்துவமனைக்கும் கலெக்டர் அலுவலகத்துக்கும் நடந்துகொண்டிருக்க முடியுமா?

இந்த ஆண்டுக்கு மட்டுமே மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்காகத் தமிழக அரசு தந்திருக்கும் தொகை, 1,069 கோடி ரூபாய். இதே தொகையைத் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் தருவதற்குச் சமீபத்தில்தான் ஒப்பந்தம் போட்டார்கள். இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்திருக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்காகவும் முன்பு 497 ரூபாயை அரசு கொடுத்தது. இந்த ஆண்டு, இது 699 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பல சிறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்காகச் செய்யும் குரூப் இன்ஷூரன்ஸ் திட்டத்துக்காகச் செலவிடும் காப்பீட்டுத் தொகையைவிட இது மிக அதிகம். அதுபோன்ற காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்திருப்பவர்கள், உரிமையோடு சிகிச்சையைக் கேட்டுப் பெற முடிகிறது. ஆனால், அரசுக் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை பெற வரும் பொதுமக்களை, ‘யாசகம் கேட்க வந்தவர்கள்’ போல சிலர் நடத்துகிறார்கள். ‘தனியார் மருத்துவமனைகள் தங்களுக்காகச் செய்யும் எல்லா சிகிச்சைகளுக்கும் தங்கள் சார்பாக ஒரு இன்ஷூரன்ஸ் நிறுவனம் பணம் செலுத்தி விடுகிறது. அவர்களுக்கு அரசு பணம் தந்திருக்கிறது’ என்ற விழிப்பு உணர்வு மக்களுக்கு வர வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 24 - மருத்துவக் காப்பீடு! - கசக்கும் உண்மைகள்

ஒரு தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் ஆண்டுக்கு 1,069 கோடி ரூபாய் தரும் தமிழக அரசு, இதில் 50 சதவிகிதத்தைச் செலவழித்து அரசு மருத்துவமனைகளை உயர் சிகிச்சை மையங்களாக மாற்றியிருக்க முடியும். ஏன் அரசு செய்யவில்லை? எது தடுக்கிறது? எய்ம்ஸ் போன்ற மத்திய அரசு மருத்துவமனைகளில் பிரதமர், அமைச்சர்கள் போன்றவர்களே சிகிச்சை பெறுவது சாத்தியமாகிறது. அப்படிப்பட்ட தரமான சிகிச்சை தரக்கூடிய மருத்துவர்கள் இங்கும் அரசுப்பணியில் ஏராளமானோர் இருக்கிறார்கள். அரசு மருத்துவமனைக் கட்டமைப்பை மேம்படுத்தினால், இப்படி ஒரு திட்டமே தேவைப்படாது என்பதுதான் உண்மை.

கிராமம், நகரம், மலைப்பகுதிகள் எனும் பாகுபாடின்றி ஒரே தரமான மருத்துவம் அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டியது அரசின் பொறுப்பு. முதலாளித்துவ நாடான பிரிட்டனிலும், பல ஐரோப்பிய நாடுகளிலும் இந்த இலவச  
சமத்துவம் உருவாக்கப்பட முடிகிறபோது, ஏழை நாடான இந்தியாவில் இதைச் சாதிக்க முடியாவிட்டால் என்ன ஜனநாயகம் இது? மக்கள் சிந்திக்கவும், கேள்வி கேட்கவும், தாமே தீர்வு காணவும் துணிந்தால் என்ன ஆகும்?

குறிப்பாக விபத்து, இதயநோய், புற்றுநோய் போன்ற அதிகச் செலவு பிடிக்கும் பிரச்னைகளோ... ரத்த அழுத்தம், சர்க்கரை போன்ற நீண்ட கால சிகிச்சை பெற வேண்டிய நோய்களோ வந்தால் அவ்வளவுதான்.

இப்படி ஏதாவது பிரச்னையில் சிக்கியவர்கள், தங்கள் வருமானத்தில் 25 சதவிகிதத்தை மருத்துவத்துக்கும் மருந்துகளுக்கும் செலவு செய்ய வேண்டியுள்ளது. இத்தகைய சூழலில், மருத்துவக் காப்பீட்டை அனைத்து மக்களுக்கும் கிடைக்கச் செய்வதே உண்மையான பாதுகாப்பாகும்.

(நலம் அறிவோம்)