Published:Updated:

லாஸ்ட் நைட்ஸ் ரீடிங்... புக்பென்டோ... சுவாரஸ்ய இன்ஸ்டாகிராம் புத்தக பக்கங்கள்!

இன்றைய இளைஞர்கள் இந்தச் சமூக வளைதளங்களை வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டும் பயன்படுத்துவதில்லை

லாஸ்ட் நைட்ஸ் ரீடிங்... புக்பென்டோ... சுவாரஸ்ய இன்ஸ்டாகிராம் புத்தக பக்கங்கள்!
லாஸ்ட் நைட்ஸ் ரீடிங்... புக்பென்டோ... சுவாரஸ்ய இன்ஸ்டாகிராம் புத்தக பக்கங்கள்!

சமூக வலைதளங்களை வெறும் பொழுதுபோக்குக்காக மட்டும் இன்றைய இளைஞர்கள் பயன்படுத்துவதில்லை என்பதற்கு, தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் சாட்சிகளாக இருக்கின்றன. பெரும்பாலான இளைஞர்களின் சமூக வலைதளப் பக்கங்களை, புத்தக வாசிப்பும் அது தொடர்பான விவாதங்களுமே ஆக்கிரமித்துள்ளன என்பதன் மூலம் அவர்களிடம் வாசிப்பு அதிகரித்துவிட்டது என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. ஏனெனில், பரபரப்பான நம் வாழ்வில் அமைதியையும் சுயதேடலையும் தரக்கூடிய இடத்தில் புத்தகங்களால்தான் எப்போதுமே இருக்கின்றன. அப்படி சுவாரஸ்யமான சில புத்தகங்கள் பற்றிய விஷயங்களைக்கொண்ட பக்கங்கள் சில இன்ஸ்டாகிராமில் இயங்குகின்றன. அப்படியான சில அக்கவுன்ட்களைப் பார்ப்போம்...

புக்பென்டோ (@bookbento)

பென்டோ என்பது, ஜப்பானியர்களின் கலை. ஒருவருக்கான உணவை அழகாக ஒரு டப்பாவில் அடுக்கி அமைக்கும் கலையே `பென்டோ'. இதுபோலவே புத்தகங்கள் அருகில் சில பொருள்களை  அழகாக அடுக்கிவைத்திருக்கும் பக்கம் இது. பார்க்கவே  அட்டகாசமாக இருக்கும்.  https://www.instagram.com/bookbento/


சப்வே புக் ரெவ்யூ (@subwaybookreview)

இப்போது நெடுந்தூரப் பயணங்கள்தான் இளைஞர்களின் மிக முக்கியமான விடுமுறைத் திட்டம். அப்படிப் பயணிக்கும்போது எடுத்துவைக்கும் அத்தியாவசியப் பொருளாக மாறிவிட்டன புத்தகங்கள். ஏனெனில், பயணத்தில் கிடைக்கும் நேரம் என்பது, ஆடி ஆஃபர் மாதிரி. மொத்தமாகக் கிடைக்கும். இது ஒருவகை என்றால், தினமும் வேலைக்காக எலெக்ட்ரிக் டிரெயினில் பயணிப்பவரின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருக்கின்றன. எதைப் பற்றியும் யோசிக்காமல் ரயில் இன்ஜினைப்போல வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது ஒரு கூட்டம். அவர்களுக்கு வாசிக்க நேரம் இருக்குமா என்றெல்லாம் தெரியாது. இதையொட்டி சப்வே ரயில்களில் பயணிக்கும் பயணிகளை நிறுத்தி, `இப்போது என்ன படிக்கிறீர்கள்?' என்று கேட்டு, அவர்கள் சொல்வதையும் அவர்களின் புகைப்படங்களையும் பதிவுசெய்யும் பக்கம் `சப்வே புக் ரெவ்யூ'.

மெக்ஸிக்கொ சிட்டி, நியூயார்க், லண்டன், கெய்ரோ போன்ற நகர சப்வே ரயில்களின் பயணிகளுடைய கறுப்பு-வெள்ளைப் புகைப்படங்களால் நிரம்பியிருக்கிறது இந்தப் பக்கம்.
 https://www.instagram.com/subwaybookreview/

லாஸ்ட் நைட்ஸ் ரீடிங் (@lastnightsreading)

சென்னையில் வார இறுதி நாளில் பலரது நேரத்தை ஆக்கிரமித்திருப்பது, புத்தகம் வாசிப்பு, விவாதம் தொடர்பான நிகழ்ச்சிகள்தான். ஒரு ஞாயிறில் குறைந்தது நான்கு ஐந்து இலக்கிய நிகழ்வுகள் நடக்கும். அவற்றை எவரும் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை என்றாலும், அவை தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றன. `கடமையைச் செய் பலனை எதிர்பாராதே' என்ற நோக்கில், இப்படியான புத்தக வாசிப்பு நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் அதைப் பற்றிப் பதிவுசெய்வார்களா என்றால் இல்லை. ஒருவேளை அவர்கள் இருக்கும் போட்டோ ஏதாவது கிடைத்தால் அதைப் பதிவுசெய்வார்கள்.  

இதில் கேட் காவினோ, வித்தியாசமானவர். நிச்சயமாக இவர் நம் ஊர்க்காரர் அல்ல. ஒரு புத்தக நிகழ்வில் வாசிக்கப்படும் புத்தகத்தின் எழுத்தாளருடைய ஓவியத்தோடு நிகழ்வில் சொல்லப்பட்ட அழகான விஷயங்களில் ஒன்றை அந்த ஓவியத்துடன் இணைத்துப் பதிவிடுகிறார். அப்படியாக, இவரது பக்கம் முழுவதும் அழகழகான ஓவியங்களுடன் ஆழமான அறிவுசார்ந்த கருத்துகளால் நிரம்பியிருக்கிறது. இப்படி இவர் தொகுத்ததைக்கொண்டு 2015-ல் ஒரு புத்தகமாகவும் வெளியிட்டுள்ளார்.
https://www.instagram.com/lastnightsreading/

ஸ்பைன்சைடு அவுட் (@spinesideout)

இப்போது எங்கு பார்த்தாலும் ஒரே கவிதைதான். மழை பெய்தால் கவிதை, வெயில் அடித்தால் கவிதை, சாப்பிட்டால் கவிதை, தூங்கினால், எழுந்தால், காதலித்தால், சிரித்தால் என என்ன செய்தாலும் ஒரு கவிதையைத் தட்டிவிட்டுத்தான் அடுத்த வேலையே பார்க்கிறோம். அதுவும் நான்கு வார்த்தைகளை மடக்கிப்போட்டால் அது கவிதை. எப்படி இருக்கிறது என்றெல்லாம் கவலையில்லை. இதே மாதிரி வெவ்வேறு புத்தகங்களின் `ஸ்பைன்' எனப்படும் விளிம்புகளில் காணப்படும் வார்த்தைகளிலிருந்து கவிதைகளை உருவாக்கும் பக்கம் இது. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத புத்தகங்களை அடுக்கிவைத்தால் அவற்றின் விளிம்புகள் இணையும்போது அந்த வார்த்தைகளால் உருவாகும் கவிதைகள் இங்கே பதிவிடப்படுகின்றன. ஆனால், சுவாரஸ்யமான கவிதையாக இருக்கும். இதன் மூலம் பல புதிய புத்தகங்களைத் தெரிந்துகொள்ளும் அதே நேரத்தில், நல்ல கவிதையும் படித்துக்கொள்ளலாம்.
https://www.instagram.com/spinesideout/

இந்தப் பக்கங்கள் மட்டும்தான் சுவாரஸ்யமானவையா என்றால், இல்லை என்றுதான் சொல்வேன். இவற்றைவிட இன்னும் சுவாரஸ்யமான பக்கங்கள் இருக்கலாம். ஆனால், அவையும் தமிழ்ப் புத்தகங்கள் பற்றியவையாக நிச்சயம் இருக்காது. தமிழில் அவரவர் படிக்கும் புத்தகங்களை அவர்களுடைய போட்டோக்களுக்கு இடையே கொசுறாகப் பதிவுசெய்வார்களே தவிர, இந்த மாதிரி புத்தகங்களுக்காக அதுவும் குறிப்பிட்ட ஒரு பின்புலத்தில் ஒரு பக்கமாக இருப்பதெல்லாம் அரிதுதான். இந்த மாதிரியான முயற்சிகளைச் செய்துபார்க்க வேண்டும்.