Published:Updated:

காலிகிராபி - வரவனை செந்தில்

காலிகிராபி - வரவனை செந்தில்
பிரீமியம் ஸ்டோரி
News
காலிகிராபி - வரவனை செந்தில்

ஓவியங்கள் : ரமணன்

‘ப’போன்றதொரு அமைப்புடன் இரண்டு கால்பந்து மைதானம் அளவிலான அந்த காம்பவுண்டில், எழுத்தால் எழுத்தர்களை வாழவைக்கும் மூன்று முக்கிய அரசு அலுவலகங்கள் இருந்தன. அந்த மாவட்டதுக்கான கிளைச் சிறையும், நான்கைந்து தாசில்தார்களை உள்ளடக்கிய தாலுகா அலுவலகமும், சப்-ரிஜிஸ்டரர் ஆபீஸ் என்கிற பத்திரப் பதிவு அலுவலகமும் இருந்தன. ‘வாயிருந்தால் அழுதுவிடும்’ என்று சொல்லக்கூடிய அளவில், வாடிப்பட்டி தோற்பறையாய் ஓயா உழைப்பு அந்த அலுவலக காம்பவுண்டின் இரும்புக்கிராதி கதவுகளுக்கு எப்போதும் உண்டு. காலை ஏழு மணிக்கெல்லாம் பத்திர எழுத்தர்களின் உதவியாளர்கள் வரிசையாக வந்துவிடுவார்கள். பழைய மல் துணியைக்கொண்டு கையோடு எடுத்து வந்த தட்டச்சு மெஷின்களை அங்கே வைத்துத் துடைக்கத் தொடங்கிவிடுவார்கள். அந்த அலுவலக வாசல்களில் உள்ள தரைதான் அவர்களின் அலுவலகங்கள். அதைக் கூட்டிப் பெருக்கி, சாணி தெளித்து வைத்திருப்பார்கள். சாணியின் டிகிரி கலவை ஆளாளுக்கு மாறுபடும். தெளித்த சதுரங்களின் நிறம் கூடக்குறைய இருப்பதைக்கொண்டு இடத்தை அடையாளம் காணலாம். சரியாக எட்டு மணிக்கெல்லாம் பத்திர எழுத்தர்களும் ஸடாம்ப் வெண்டர்களும் வந்துவிடுவார்கள். ‘பத்தி கொளுத்தி, மந்திரம் சொல்லி, முணுமுணுத்து’ என ஆளுக்கு ஒரு ஸ்டைலில் தொழிலைத் தொடங்குவார்கள். பத்திர எழுத்தர்கள் இருபுறமும் சேர்த்து நூறுக்கும் மேலிருப்பார்கள். அவர்களிடம் எழுதக் கொடுத்திருக்கும் ஆள்கள் என அவர்கள் ஒரு முந்நூறு நானூறு பேர் இருப்பார்கள். வேம்பும், அரசும், வாகை மரங்களும் கலந்து கட்டி நிறைந்துள்ள அந்த இடத்தில் எப்போதும் நிழல் மேயும்.

பத்திரப்பதிவு அலுவலகத்தின் அரச மரத்து அடியில், ‘கர்சிவ்’ பூலோகம் பிள்ளை அமர்ந்திருப்பார். அவருக்கு நேர் எதிரே பத்திரப்பதிவு அலுவலக வாசல். பூலோகம் பிள்ளை அமர்ந்திருந்து பார்த்தால், சப்-ரிஜிஸ்டரர் ‘டயாஸில்’ வீற்றிருப்பது பளிச்சென்று தெரியும். அவரிடம் யார் நின்று பேசுகிறார்கள் என்றுகூட தெளிவாகத் தெரியும். அதனால்தான் கூட்டம் அம்மும். அஷ்டமி, நவமியற்ற வளர்பிறை நாட்களில்கூட பதிவு அலுவலக வாசலை மறைக்கும்படி யாரையும்  நிற்கவிட மாட்டார். இங்கிருந்தே ரிஜிஸ்டரர் அய்யாக்களின் மனவோட்டத்தைக் கணித்துவிடுவார். அதனால்தானோ என்னவோ, அவரிடம் மட்டும் கூட்டம் குமியும். ஊரில் உள்ள பெரிய மனிதர்கள் பதிவுக்கோ, தாலுகா வேலையாகவோ வந்தால், கூட்டத்தைவிட்டுத் தள்ளி நின்றபடியே, “என்ன பூலோகம்...” என்று சத்தமாகக் கூப்பிட்டு, அதற்குப் பூலோகம் போடும் பவ்யக் கும்பிடைப் பெற்று, அவரிடத்தில் தங்கள் அதிகாரம் செல்லும் என்பதை ருது செய்துகாட்டி நகர்வார்கள்.

காலிகிராபி - வரவனை செந்தில்

கிட்டத்தட்ட 100 எண்ணிக்கைகள் கொண்ட டைப்ரைட்டர்கள் இயங்கும் ‘கடகட’ ‘மடமட’ ‘சடசட’ சத்தம் காலை ஒன்பது மணிக்கே அந்தப் பகுதி முழுவதும் நிறைந்து இருக்கும். மார்ஜின் முடிந்ததும் மெஷின் எழுப்பும் ‘க்ளிங்’ சத்தமும் கேரேஜ் ரிலீஸ் லிவரை எடுத்துவிடும் சத்தமும் இணைந்து இயங்கும் ஓசை, சொற்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாய் அந்த இடத்தை மாற்றிவைத்திருக்கும்.தட்டச்சர்களில் பத்திரம் அடிப்பவர்கள், அதிலும் ‘கிரயப் பத்திரம்’ மட்டும் தட்டச்சும் எலைட் எழுத்தர்கள், கடன், ஒத்தி, கிரயம், பவர், தான பத்திரங்கள் என அனைத்தும் எழுதும் பத்திர எழுத்தர்கள். கிடைத்த வேலையைச் செய்யும் மனப்போக்கில் இறங்கி சிறைப் பார்வை மனு தொடங்கி, விதவை பென்சன் மனு, மாற்றுத்திறனாளி உதவித்தொகை வேண்டும் மனு, முதியோர் உதவித்தொகை மனு, வாடகை ரசீது என எது டைப்படிக்கச் சொன்னாலும் பேஜுக்கு 10 ரூபாய் எனக் கறார் பேசி அடிக்கும் எளிய தட்டச்சர்கள் என வர்க்க, வர்ண வேறுபாடுகளுடன் இயங்கிக்கொண்டிருப்பார்கள்.

சில வெற்றிகரமான எழுத்தர்கள் இரண்டு மூன்று தட்டச்சர்களை வைத்திருப்பார்கள். நல்ல வேலை நாளில் சென்றால், நடுவில் அமர்ந்து தன்னைச் சுற்றி டைப்ரைட்டிங் மெஷின்கள் இசைக்க ஏதோ இசைக் கச்சேரி நிகழ்த்திக்கொண்டிருக்கும் வித்துவான்களின் தோற்றத்தில் காட்சியளிப்பார்கள். பூலோகமும் அப்படித்தான் அமர்ந்திருப்பார். ஆனால், பூலோகத்தின் சிறப்பு என்னவென்றால், இன்றைக்கும் அவர்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
காலிகிராபி - வரவனை செந்தில்

முக்கியமானவர்களின் பத்திரங்களைக் கைகளால்தான் எழுதித் தருவார். அவரிடம் பழைய ரெமிங்டன் ஒன்றும், அதிநவீன டிஜிட்டல் டைப்ரைட்டர் ஒன்றும் இருக்கின்றன. பூலோகத்தின் கையெழுத்து, ‘காலிகிராபி’ போல் இருக்கும். “கண்ணுல ஒத்திக்கிற மாதிரி கையெழுத்து இருந்தாலும் தெருவுல உக்காந்து பொழைக்கணும்னு விதி” எனப் பெருஞ்சிரிப்புடன் வாரம் ஒருமுறையாவது சொல்லிக்கொள்வார் பூலோகம். அவர் நினைத்தால், அந்த காம்பவுண்டின் எதிரிலேயே ஏ.சி-யுடன் அலுவலகம் போட்டு உட்கார முடியும். இருந்தாலும், உள்ளேயே அதிகாரிகளின் கண் பார்வையில் இருப்பதே தொழிலுக்கு நல்லது என்பதால், தரையில் அமர்ந்து பிழைப்பை ஓட்டுகிறார்.

“என் அப்பாரு சொர்ணம் பிள்ளை, கர்ணமா இருந்தவரு. இன்னிக்கும் அவரு கையில் எழுதின பத்திரம் ஆயிரக்கணக்குல மாவட்டத்தில் சுத்துது. அவரு மட்டுமே நாற்பதாயிரம்  ஏக்கரு பங்கு பாக்கியதைக்குக் கையால் பத்திரம் எழுதினவரு. மெட்ராசு எக்மோருல, அரசாங்கப் பத்திர கொடவுன்லகூட அவரு கையால எழுதின பத்திரம் எரநூறு இருக்கு. இந்த மலையாளி எம்.ஜி.ஆர் வந்து கொலையா கொன்னு எங்க வம்சப் பொழப்புல மண்ணப் போடலைன்னா, ஊர்ல கணக்கு வேலை பாத்துக்கிட்டு இருந்திருப்பேன். வந்தான் மவராசன்... இந்தா பாக்குறீங்களே... உங்களுக்கு எதுத்தாப்புல உக்காந்து வித்தை அடிச்சிக்கிட்டு இருக்கேன்” - அந்தப் பத்திரப்பதிவு அலுவலகத்துக்குப் புதிதாக வரும் சப்-ரிஜிஸ்டரர்களிடம் அறிமுகமாகும்போதெல்லாம் பூலோகம் இதே வசனங்களை மறக்காமல் பேசிவிடுவார்.

பூலோகத்துக்கு எம்.ஜி.ஆரைப் பிடிக்காது.அவர் தீவிர எம்.ஜி.ஆர் ரசிகராக இருந்தவர்தான். “கணக்குப் புள்ள மகன் சினிமா  கொட்டாய்ள கொடி கட்டுறானு ஊரே பேசுது, மானத்தைக் கெடுக்காத” எனத் தந்தை திட்டியதற்குப் பிறகு, எம்.ஜி.ஆரின் ஒவ்வொரு பட ரிலீஸின் போதும் திருச்சிக்கு பஸ் ஏறிப்போய் முதல் காட்சியில் விசிலடித்துவிட்டு வருவார். சப்-கலெக்டரிடம் மேற்படி ஊரின் கணக்கெல்லாம் என்னிடம்தான் இருக்கிறது என நிரூபித்தாலே, கர்ணம் பதவி கிடைத்துவிடும் காலம் அது. பக்கத்துக் கிராமத்தில் வாரிசு இல்லாத பெரியப்பனின் வாரிசாகப் பூலோகத்தை காட்டி, அவரின் வேலையை வாங்கிவிட்டார், அவரின் அப்பா சொர்ணம்பிள்ளை.

வேலை கிடைத்த ஆறே மாதங்களில் கர்ணம் பதவியை எம்.ஜி.ஆர் ஒழித்தார். கிராம நிர்வாக அலுவலர் வேலையை உருவாக்கி, பத்தாவது பாஸ் செய்திருந்தால் மட்டுமே கர்ணமாக இருந்தவர்கள் வி.ஏ.ஓ-வாக வேலை செய்ய முடியும் என அறிவித்துவிட்டார். பூலோகத்தைப் போல வேலை செய்தவர்கள் பத்தாவது எழுதி வேலைக்குப்போக, இவர் ஃபெயிலாகிவிட்டார். ஊரில் ஒருவரின் முகத்திலும் விழிக்க முடியாமல் திரிந்தவர், எம்.ஜி.ஆர் படத்தைத் தூக்கி ரோட்டில் போட்டு உடைத்தார். ஆனாலும், இன்றும் குருவிக்கூடு ஹேர் ஸ்டைலும், கைகளின் பை-செப்ஸ் தெரியுமளவுக்குப் பொடியாக மடித்துவிடப்பட்ட முழுக்கைச் சட்டை என ரசிக மிச்சசொச்சங்கள் அவரிடம் மிளிர்ந்தபடிதான் இருக்கும்.

வேலைபோய் அவமானப்பட்டதற்குப் பிறகு, டவுனுக்கு வந்து பார்த்தால், ஸ்டாம்பு வெண்டருக்கும் அவருக்குப் பிடிக்காத பத்தாம் வகுப்பு குவாலிஃபிகேஷன் வந்து நிற்கவும் தனக்குத் தெரிந்த பத்திரம் எழுதும் வேலையில் உட்கார்ந்து விட்டார். அந்த ஊரிலேயே அழகான ஓவியக் கையெழுத்து, தொழில் நேர்த்தி என ஆட்டம் பிடித்து வருடங்கள் மளமளவென ஓடி, ஒரே மகன் பி.காம் படித்து வெளியே வந்தான். ஆடிட்டர் ஆபீஸில் வேலைக்குச் சேர்த்து விட்டிருந்தார். எப்படியாவது ஆடிட்டராக்கி விடவேண்டும் என நினைத்துக்கொண்டி ருந்தார். பதிவு இல்லாத நாட்களில் மட்டும்தான் வீட்டுக்குச் சாப்பிடப் போவார். அன்றும் அப்படி வீட்டில் சாப்பிடக் கிளம்பியபோது, அவரது மகன் தானும் வருகிறேன் என உடன் வந்தான். பாதி வழியில், அவரிடம் தட்டச்சராக இருந்து இப்போது தனிக்கடை போட்டுள்ள சிவமணியின் மகள் தன்னுடன் ஆடிட்டர் அலுவலகத்தில் வேலை செய்கிறாள் என்றும்  அவளைத் தனக்குக் கட்டிவைக்கச் சொல்லியும் கேட்டான். நடு வீதியில் செருப்பால் அடித்து விரட்டிவிட்டார். அதன் பின்னர் பல்வேறு பஞ்சாயத்துகள் நடந்தன. பூலோகத்தை ஒப்புக்கொள்ளவைக்க அவரின் மனைவி தெரிந்த தனக்காரர்கள் வீட்டுக்கெல்லாம் ஓடினார். ஒரு வழியாக மாதம் ஒரு வீடோ, நிலமோ பூலோகத்தின் மூலம் கிரயம் செய்யும் சண்முகம் செட்டியாரை வைத்து மடக்கிவிட்டார். “ஆத்தாளும் மகனும் பேசிக்கட்டும். எனக்கு பிரச்னையில்லை” என்றபடி செட்டியாரின் வீட்டிலிருந்து எழுந்து போனார் பூலோகம். பின்னொரு நாள், ஆடிட்டரின் தலைமையில் திருமணம் நடந்ததாகக் கேள்விப்பட்டார் பூலோகம்.

காலிகிராபி - வரவனை செந்தில்

மூன்றாம் மாதம், தாலி பிரித்துக் கட்டுவதற்காக அந்த அம்மாள் அழைத்து மகனும் மருமகளும் வீட்டுக்கு வந்திருந்தனர். அன்று பத்திரப் பதிவில்லை என்பதால், பூலோகம் சாப்பிட வீட்டுக்கு வந்திருந்தார். உள்ளே நுழைந்து பார்த்தால், நடுவீட்டில் மருமகளும் மகனும் அருகருகே உட்கார்ந்திருக்க, இலை போட்டு பரிமாறத் தொடங்கியிருந்தனர். “இந்தா... அவரும் வந்துட்டாரு... அவருக்கும் ஒரு இலை போடும்மா” என்று உறவுக்காரப் பெண்ணிடம் சொல்லியபடி, சொம்பில் நீர் எடுத்து கை கழுவக் கொடுத்தார் பூலோகத்தின் மனைவி.

சொம்பை வாங்கி வாசலுக்குக் கை கழுவப்போனவர், அப்படியே நாலு வீடு தள்ளியிருந்த குப்பை மேட்டுக்குப் போனார். எரிக்கப்பட்ட குப்பைச் சாம்பல்கள் அள்ளப்பட்டிருந்தன. அதில், இரண்டு சிறுவர்கள் டவுசர்களைத் தலையில் மாட்டியபடி பேண்டுகொண்டிருந்தனர்.காணத்துவையலை எடுப்பதுபோல் ஆட்காட்டி விரலால் நரகலை எடுத்துவந்து மருமகளின் இலை ஓரத்தில் வைத்தார். “இதை மட்டும் சாப்பிட்டுரும்மா… நீ இந்த வீட்டுக்கு மருமகளா வந்தது பற்றி நான் வேற எதுவுமே இனிப் பேச மாட்டேன்” என்றார். “அட முண்டப் பயலே” எனப் பூலோகத்தின் மனைவி தலையில் அடித்துக்கொள்ள, மகன்காரன் விருட்டென மனைவியின் கையைப் பிடித்துக்கொண்டு எச்சில் கையோடு வெளியேறினான். ஆறு வருடங்கள் ஆகிவிட்டன. அந்த நொடிப்பொழுதில் தாம் செய்த செயல் பற்றி பூலோகத்துக்கு வருத்தம் உண்டு. ஆனால், அதை யாரிடமும் ஒப்புக்கொண்டதில்லை. குறையான சாதி ஒண்ணுமில்லைதான். இருந்தாலும் ஏத்துக்கவே முடியாமல் செய்தது, தன்னிடம் தினமும் மாலையில் சம்பளத்துக்கு நின்றவனின் மகள் தன் வீட்டுக்கு மருமகளாவதைத்தான். பூலோகத்தைக் கரிச்சுக்கொட்டியபடியே இருந்தார் அவரின் மனைவி. வீட்டுக்குப் போவதே கொடூரமாக இருந்தது அவருக்கு. வாங்கிப்போட்ட ஆத்தூர் சம்பா அரிசி பொங்கித் திங்க ஆள் இல்லாமல் மூடையிலேயே புழுத்துப்போய்க்கொண்டிருந்தது.

அன்று 8-ம் தேதி, செவ்வாய் கிழமை. பதிவு ஒன்றும் இல்லை. அடுத்த நாள் ஐந்து பதிவுகள் இருந்தன. அத்தனையும் பெரிய சொத்துகள். நகைக்கடைக்காரர் தன் மருமகன் பெயரில் கடை இருக்கும் இடத்தை ‘தான பாத்தியதை’ செய்துவைக்கிறார். ஆறேழு தலைமுறைச் சொத்து ஒன்று கைமாறுகிறது என எல்லாமே பெரும் பதிவுகள். பூலோகத்தின் கையெழுத்தில்தான் கண்டிப்பாக வேண்டும் என வேண்டிக்கொள்ளப்பட்டவை என்பதால், காலை நேரமே வந்துவிட்டார். ஒவ்வொரு பத்திரத்தின் தாய்ப் பத்திர நகலை முன்னேவைத்து எழுதத் தொடங்கினார். தாய்ப் பத்திரத்தில் உள்ள பெயர்களைப் படிக்கப் படிக்க அதில் இப்போது வெறும் பெயர்களாகிவிட்ட மனிதர்களின் 60-70ஆண்டு கால வாழ்க்கை கண் முன்னால் ஓடியது. ஒரு பத்திரத்தைச் சின்னையா மாமா எழுதியிருந்தார். அவரின் மகள் செல்வி கருப்பட்டிச் சேவு அப்படிச் செய்யும். அவளைக்கூட, தான் கட்டியிருந்திருக்கலாம் என்று நினைத்துக்கொண்டே தன் புகழ்பெற்ற ஓவிய எழுத்தில் பத்திரங்களை எழுதிக்கொண்டிருந்தார். ‘இதை எழுதியதும் - சாட்சியுமாகிய’ என எழுதிக் கையெழுத்துப் போடும்போது மகன் நினைப்பு வந்தது. “முண்டப் பயல் அப்பன் பெருமை தெரியாம நாசமாப் போயிருச்சு” எனத் திட்டிக்கொண்டே நிமிர்ந்து பார்த்தபோது, அந்தப் பெண் உட்கார்ந்திருந்தாள். ஏழெட்டு மாதப் பிள்ளையைக் கையில் பிடித்திருந்தாள். அந்தப் பிள்ளை... இல்லை பையன்! டவுசர் போடவில்லை. பெரிய பனியன் போட்டிருந்ததால், பிள்ளை என நினைக்கும்படியாயிற்று. பால் குடிக்கும் பிள்ளை போலிருக்கு, கன்னங்கள் ஊதாகாமாலை வந்ததைப்போல ஊதிக்கொண்டிருந்தன. ஆயிக்காம்பை நல்லா கடிச்சி உறிஞ்சும் குழந்தைகளுக்கு இப்படித்தான் கன்னம் ஊறும். இப்ப ரப்பர் கடிக்கக் கொடுக்கிற குழந்தைகளுக்கும் இப்படி ஆகிவிடுகிறது. தன் மகனும் இப்படித்தான் கன்னம் செழித்து இருந்தான். ஒண்ணாவது போகும் வரை தாயிடம் ‘செல்லப் பால்’ குடித்துக்கொண்டிருந்தான். விளையாடி களைத்து வீட்டுக்குள் வந்து, ‘தான் வைத்துவிட்டுப் போனதைப்போல்’ தூங்கிக்கொண்டிருக்கும் தாயின் ரவிக்கை விலக்கி கொஞ்சூண்டு குடித்துவிட்டு மறுபடி விளையாடப் போவான். பக்கத்து வீடு அக்கத்து வீடெல்லாம் கேலி பேசி, முலைக் காம்பில் தினமும் வேப்பெண்ணை தடவித்தான் பால்குடியை மறக்கச் செய்தார்கள். தன் மகனுக்கும் பையன்தான். மனைவி போய்விட்டு வந்து, “கருகருன்னு உன்னையக் கணக்கா பெத்து வெச்சிருக்கா, நார முண்ட...” என மருமகளைத் திட்டுவதுபோல சேதி சொன்னாள். இவளின் பிள்ளை வயதுதான் இப்போது தன் பேரனுக்கும் இருக்கக்கூடும் என நினைத்துக்கொண்டார்.

ஆத்தாக்காரி அழுக்கும் தொத்தலுமாய் இருந்தாள். பத்திர அலுவலக வாசலின் பக்கவாட்டுத் திண்ணையில் உட்கார்ந்து போவோர் வருவோரை வாய்பார்த்துக் கொண்டிருந்தாள். கையில் ஒரு காங்கர் பேப்பர். காலை நேரத்தில் தாசில்தார் அலுவலகத்துக்கு வந்தவளாக இருக்கும் என நினைத்தபடி தொடர்ந்து எழுதப் போனார்.அந்தப் பையன் சிணுங்க ஆரம்பித்தான். அந்தச் சிணுங்கல் இவரைத் தொல்லை செய்தது.

“ஏம்மா... எதுக்கு இங்க ஒக்காந்திருக்க...?”

“இந்தப் புள்ள பொறந்த சர்ட்டிஃபிகேட்டுல பேரு மாத்தணும்ங்க.”

“அங்க இருக்கு பாரு தாலுகா ஆபீஸ், அங்க போய் கேளு... இது பத்திர ஆபீஸு” எனத் தாட்டிவிட்டார்.
அந்தக் குழந்தை ஒரு பிஸ்கெட்டை மூக்குச்சளியில் தோய்த்துக் கரும்பிக்
கொண்டிருந்தது. அந்தப் பெண்ணின் மீது எரிச்சலும் அந்தப் பையன் மீது வாஞ்சையும் எழுந்தது.

வரிசையாகத் தட்டச்சர்கள் வந்தனர். ஆளுக்கொரு வேலை சொல்லிவிட்டு ஓட்டலுக்கு டிபன் சாப்பிடப் போனார். போகும் வழியில் டீக்கடையில் அந்தப் பெண் குழந்தையுடன் நின்று கொண்டிருந்தாள். சிறைக்கு எதிராக இருக்கும் ஹோட்டல் என்பதால், காலையிலேயே சுக்கா வறுவல், கோழி எனத் தயாராக இருந்தது. தோசையை மட்டும் சாப்பிட்டுத் திரும்பி வந்தபோதும் அந்தப் பெண் டீக்கடையின் அருகே நின்றிருந்தாள்.

காலிகிராபி - வரவனை செந்தில்

“என்னம்மா போய்க் கேட்டியா...? இந்நேரம் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் வந்திருப்பாப்டியே.”

“பெயரு மாத்த மனு கொடுக்கணுமாம் சார்... அதான் டீக்கடைகிட்ட எழுத ஆளு வருவாங்கன்னு சொன்னாங்க. ஆளுக்காகக் காத்திருக்கேன்.”

“இங்க எழுதறவன் வர்றதுக்கு இன்னும் நேரமாகும்... நான் உக்காந்த இடத்துக்கு தெக்க ஒருத்தரு வழுக்கைத் தலைக்காரர் இருப்பாப்டி, அவருட்ட போய் எழுது” என்றபடி போய்விட்டார்.எழுத்து வேலை எல்லாம் 12 மணிக்கே முடிந்தது. அஞ்சாறு வருஷம் முன்னாடி என்றால், வீட்டுக்குப் போய் தூங்கி எழுந்து வருவார். இப்போதெல்லாம் ஆளைக் கண்டாலே மனைவி சாடை பேசுவதால், போவதில்லை. மெதுவாக நடந்து மாரியம்மன் கோயிலுக்குப் போனார். நடை சாத்திவிட்டனர். திரும்ப பத்திர ஆபீஸுக்கே வந்தார். அந்தப் பெண் எதிரில் பார்த்த அதே இடத்தில் அமர்ந்திருந்தாள். எழுதிய பத்திரங்களை ஒருமுறை சீர் பார்த்தார். அதை டைப்படிக்கச் சொல்லி அந்தப் பிரதியை ப்ரூஃப் பார்க்க பத்திர ஆபீஸுக்கும் ஒருவரை அனுப்பிவைத்தார். அந்தப் பையன் அம்மாவின் சீலையை இழுத்து பாலுக்கு அழுதுகொண்டிருந்தான். காலையிலிருந்து அவள் எதுவுமே சாப்பிட்டதுபோல் தெரியவில்லை.

“இந்தாம்மா இங்க வா... என்னாதான் உன் பிரச்னை...?”

“அய்யா... நாங்க தர்மபுரிக்குப் பக்கத்துல இருமாத்தூர்ங்க. நால்ரோடு வேலைக்கு வந்தவங்க. எனக்கு எட்டு வயசிருக்கும்போது அப்பா அம்மாவோட வேலைக்கு வந்தேன். சேலத்துக்கிட்ட நால்ரோடு வரும்போது எனக்குப் பத்து வயசிருக்கும். அப்ப இந்திக்காரங்களும் வந்தாங்க வேலைக்கு. அதுல வந்ததுதான் இந்தப் புள்ளயோட அப்பாவும். கரூர்-நாமக்கல் போடும்போது அதுகூடப் போயிட்டேன். எங்க நயினா தேடிப் புடிச்சு இந்தரால கூட்டியாந்துச்சு. போன வருஷம் புள்ள பொறந்துச்சு. அப்பைக்கு ஜன்னி வந்து மயக்கமாக் கெடந்தனா... பொறப்பு பதிய வந்தப்ப இந்தப் பயலோட அப்பாதான் பெயரைக் குமாருன்னு கொடுத்திருந்திருக்கு. ஆறு மாசத்துக்கு முன்ன அது செத்துப் போயிடுச்சு. தனக்கு யாருமே இல்லன்னு சொல்லியிருந்துச்சு. செத்ததுக்கு அப்புறமா அவங்க ஊருல இருந்து மூணு பேர் வந்தாங்க. அதுக்கு அங்க ஒரு பொண்டாட்டி இருந்திருக்கு. இந்த ஓட்டுப்போடுற கார்டை வேற கொடுத்துட்டுப் போயிட்டாங்க. இதில அதோட பேரு வேறென்னமோ போட்டிருக்குன்னு இஞ்சினியரு சொன்னாரு. அதான் மாத்தறதுக்கு வந்தேன்.நீங்க சொல்லிவுட்டவரு வேலை இருக்குன்னு உட்க்காந்திருக்கச் சொல்லிட்டாரு” எனச் சொன்னாள்.

பூலோகம் பத்திர எழுத்தர் காந்தியைப் பார்த்தார். தலையில் துளிர்த்த வேர்வையை ஒற்றியபடி எழுத்து வேலையாக இருந்தார்.

“யோவ் காந்தி... தாலுகா ரிஜிஸ்டரர் இப்ப யாருய்யா இருக்கா?”

காலிகிராபி - வரவனை செந்தில்“கார்த்தின்னு ஒரு பையன்ணே” என்றார் நிமிராமல்.பி-9 ஃபார்ம் வாங்க வேண்டும். அதன் பின் ஃபார்ம் 37. இரண்டையும் நிரப்பி தலையாரியிடம் கடிதம் வாங்கி, அப்பா அம்மா புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை மற்றும் பெற்றோரின் பிறப்புச் சான்றிதழின் பிரதியை இணைத்து, பெற்றோர் திருமணச் சான்றிதழின் நகலை இணைக்க வேண்டும். இந்த வழிமுறையில் ஒன்றுகூட இந்தப் பெண்ணிடம் இருக்காது.இவள் இருக்கும் நிலைமைக்கு இன்னும் பத்து நாள் அலைஞ்சாலும் முடியாது. இரக்கம் துளிர்க்கவும்...
“என்னா பேரும்மா மாத்தணும்..”

“இந்த அட்டையில இருக்கிற பேரைப் போட்டுத் தரச்சொல்லுங்கய்யா. அடுத்த மாசம் ஊருக்கே போறோம்.பள்ளியோடத்துல சேக்கணும்.”

லேமினேஷன் உரிந்திருந்த அந்த வாக்காளர் அடையாள அட்டையில் அவனின் முகம் கொஞ்சம்கூட தெரியவில்லை. 2001-லேயே அதில் வயது 34 என போட்டிருந்தது. பெயர் ‘மங்கள் யாதவ்.’

தன்னையறியாமல் அவளின் கையில் இருந்த பச்சை நிற காங்கர் பேப்பரை வாங்கி பெயர் மாற்ற விண்ணப்பம் எழுதத் தொடங்கிய பூலோகத்தைத் தட்டச்சர்கள் வினோதமாகப் பார்த்தனர். அவர் இதுபோன்ற சின்ன விண்ணப்பமெல்லாம் எழுதி அவர்கள் யாரும் பார்த்ததே இல்லை.

“மங்கள் யாதவ்னு போட்டிருக்குமா, யாதவ்ங்கிறது சாதி பேரு. அதையும் சேக்கணுமா” என்றார்.

“அது பேரு அப்படித்தான் போட்டிருந்தா... அதையே போட்டிருங்கய்யா.”

“இந்தா இதை எடுத்துட்டுப் போய் அந்தா சின்னக் கதவு தொறந்து மூடிக்கிட்டு இருக்கில்லையா... அந்த வரிசையில் நில்லு.உள்ள கூப்பிடுவாங்க. அங்க தாசில்தார் இருப்பாரு. அவருகிட்ட கொடு. என் கையெழுத்தைப் பாத்தவுடனே போட்டுக் கொடுத்துருவாரு. போய் வரிசைல நில்லு.”

“சரிங்கய்யா” என்றபடி அவள் எழுந்தாள்.பிள்ளையோடு குனிந்து எழுந்ததில் அந்தப் பையனுக்கு எதுக்களித்துக் குடித்திருந்த பாலை அமர்ந்திருந்த பூலோகத்தின் மேல் வாந்தி எடுத்தான். அவரின் இடது கைகளில் தயிரைப்போல் தாய்ப்பால் வழிந்துகொண்டிருந்தது.

நொடிகூட யோசிக்காமல் அத்தனை அழகான பூலோகத்தின் புகழ் பெற்ற ‘காலிகிராபி’ கையெழுத்தால் ஆன அந்தப் பெயர் மாற்ற விண்ணப்பத்தைக்கொண்டு பிள்ளை கக்கிய பாலை அவள் துடைத்துவிட்டாள்.

“இதங்கெட்டத்தனமாத்தான் இவன் பண்ணுவான். அய்யா கோச்சுகாதீங்க... இன்னொரு பேப்பரு இதோ வாங்கியாரேன்” என்றபடி பிள்ளையுடன் கடைக்கு ஓடினாள். அவளின் தோளில் டவுசரில்லாமல் அரைக் குண்டியுடன் தொங்கியபடி போய்க்கொண்டிருந்த அந்தப் பையனின் கண்கள் பூலோகத்தின் கண்களை நேருக்கு நேராய் பார்த்தது போலிருந்தது. அவரின் மேல் மணத்த பாலின் புளித்த வாடையில் ஒரு சுகந்தம் இருப்பதைக் கண்டார். வெய்யில் உக்கிரமாகவும் இதமாகவும் ஒரே நேரத்தில் வீசிக்கொண்டிருந்தது.