Published:Updated:

அமைச்சர், டி.ஜி.பி-யை வீழ்த்துமா பான் குட்கா விவகாரம்?

அமைச்சர், டி.ஜி.பி-யை வீழ்த்துமா பான் குட்கா விவகாரம்?
பிரீமியம் ஸ்டோரி
News
அமைச்சர், டி.ஜி.பி-யை வீழ்த்துமா பான் குட்கா விவகாரம்?

அமைச்சர், டி.ஜி.பி-யை வீழ்த்துமா பான் குட்கா விவகாரம்?

குட்கா போதை விற்பனையாளர்களுடன் ஆட்சியாளர்கள் கூட்டணி போட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இதுபற்றி ஜூ.வி-யில் தொடர்ந்து எழுதி வந்திருக்கிறோம்.

“பணம் வாங்கிக்கொண்டு போதை விற்பனை யாளர்களுக்குத் துணைபோகும் அமைச்சர் விஜயபாஸ்கர் கொலைக்குற்றத்துக்கு இணையான தவறைச் செய்திருக்கிறார். லஞ்சம் வாங்கிய கமிஷனர், டி.ஜி.பி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது?” எனச் சட்டசபையில் ஸ்டாலின் திரி கொளுத்திப் போட்டிருக்கிறார். 

2013-ம் ஆண்டு ஜூன் முதல் தமிழகத்தில் பான் மசாலா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருள் களைத் தயாரிக்கவும் விற்கவும் தடை விதிக்கப் பட்டது. ஆனால், பான் குட்கா தொழில் முற்றிலும் முடங்கவில்லை. மாமூல் வழிகாட்டுதலுடன் ரகசியமாக நடந்தது. மாதம் சுமார் 100 கோடி ரூபாய்க்கும் மேல் பணம் புழங்குகிற பிசினஸாக, வெளியில் தெரியாமல் அது இயங்கியது. இந்நிலையில், 2016 ஜூலையில் தமிழகம், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வருமான வரித்துறைக்குக் கிடைத்த ஆவணங்களோடு, தமிழக போலீஸை அலறவைத்த ஒரு முக்கியமான டைரியும் சிக்கியது. குட்கா வியாபாரிகள், எந்தெந்த அரசியல்வாதி களுக்கும் போலீஸ் அதிகாரிகளுக்கும் கமிஷன் கொடுத்தார்கள், சென்னையில் முக்கியப் பொறுப்பில் உள்ள ஐ.பி.எஸ்-களுக்கு மாதம் எத்தனை லட்சம் ‘மாமூல்’ போனது என்ற தகவல்கள் எல்லாம் அந்த டைரியில் இருந்தன. அந்த டைரியை  அமுக்க, பெரும் முயற்சி நடந்தது.

அமைச்சர், டி.ஜி.பி-யை வீழ்த்துமா பான் குட்கா விவகாரம்?

சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த ஜார்ஜ், உள்துறைச் செயலாளருக்கு அப்போது எழுதிய கடிதத்தில், ‘பான் மசாலா விற்பனையில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகளிடம், நேர்மையாகவும் ஒளிவுமறைவு இல்லாமலும் விசாரணை நடத்தப்பட வேண்டும்’ எனச் சொல்லப்பட்டிருந்தது. பான் குட்கா தயாரிப்பாளர்களிடம் மாமூல் பெற்ற அதிகாரிகளின் பெயர் விவரங்களையும் அந்தக் கடிதத்தில் ஜார்ஜ் குறிப்பிட்டிருந்தார். வருமான வரித்துறையினரிடம் சிக்கிய டைரியில் ஜார்ஜ் பெயரும் இடம்பெற்றிருந்த நிலையில் கடிதத்தில் பலருடைய பெயரையும் சேர்த்துக் குற்றம்சாட்டினார் ஜார்ஜ்.

ரெய்டில் சிக்கிய டைரியில் இருந்த விவரங்களை, தமிழக அரசுக்கு வருமான வரித்துறை அனுப்பியது. அதை வைத்துக்கொண்டு, அப்போதே ரகசிய விசாரணையும் நடந்தது. போலீஸ் டி.ஜி.பி-யாக இருந்த அசோக்குமார், திடீரென்று ஒருநாள் விருப்ப ஓய்வில் செல்வதற்கு டைரி விவகாரமும், ஜார்ஜ் அனுப்பிய கடிதமும்தான் காரணம் என்றும் சொல்லப்பட்டது.

இந்த நிலையில்தான் ரெய்டில் சிக்கிய எம்.டி.எம் பான் குட்கா தொழிற்சாலையின் பங்குதாரர் மாதவ ராவ் அளித்த வாக்குமூலம் இப்போது வெளியில் கசிந்துள்ளது. ‘போலீஸில் உதவி கமிஷனரில் தொடங்கி கமிஷனர், டி.ஜி.பி வரையிலும், அரசியலில் கவுன்சிலரில் ஆரம்பித்து அமைச்சர்கள் வரையிலும் மாமூல் கொடுத்துதான் பான் குட்கா தொழிற்சாலையை நடத்தி வந்தோம். பான் தொழிற்சாலை இருந்த செங்குன்றம் பகுதி போலீஸ் உதவி கமிஷனருக்கு மட்டுமே மாதம் பத்து லட்ச ரூபாயைக் கொடுத்தோம். சென்னை போலீஸ் கமிஷனராக இருந்தவர்களுக்கு மாதம் 20 லட்ச ரூபாய் கொடுத்தோம்’ என்று வாக்குமூலத்தில் கலங்கடித்திருக்கிறார் மாதவ ராவ். இந்த விவரங்களை 2016 ஆகஸ்ட் 11-ம் தேதியே தமிழக அரசுக்கு வருமான வரித்துறை அனுப்பியிருக்கிறது. ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை.

கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றுக்கொண்டு அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. ராஜேந்திரன், முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோர் குட்கா விற்பனையை அனுமதித்தாக மீடியாவில் இப்போது செய்திகள் கசிய ஆரம்பித்தன. ‘‘விஜயபாஸ்கர் 40 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளார்’’ என ஸ்டாலின் குற்றம்சாட்டினார். விரைவில் இந்த விவகாரம் தொடர்பான விசாரணைப் பொறுப்பை சி.பி.ஐ கையில் எடுத்துக்கொள்ளவும் வாய்ப்புள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அமைச்சர், டி.ஜி.பி-யை வீழ்த்துமா பான் குட்கா விவகாரம்?

இதுகுறித்து டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரனிடம் பேசியபோது, “இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு அரசு சார்பில் பதில் சொல்லப்பட்டிருக்கிறது. நான் தனியாகச் சொல்ல ஒன்றுமில்லை” என முடித்துக் கொண்டார். முன்னாள் சென்னை கமிஷனரும் தீயணைப்புத் துறை டி.ஜி.பி-யுமான ஜார்ஜிடம் கேட்டபோது, ‘‘அப்புறம் கூப்பிடுகிறேன்” என்று தவிர்த்தார். தமிழகத்தில் குட்கா பொருள்களைத் தடைசெய்ய மேற்கொண்ட நடவடிக்கைகளையும் பட்டியலிட்ட அமைச்சர் விஜயபாஸ்கர், ‘‘தமிழகத்தில் இதுவரை 544.59 டன்னுக்கும் அதிகமாக குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குட்கா அதிபர் மாதவ ராவ் யார் என்றே எனக்குத் தெரியாது. அவருக்கு எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அரசியலில் பெரிய பொறுப்புக்கு வந்தது சிலருடைய கண்களை உறுத்தி வருகிறது.  அவர்கள்தான் எனக்கு எதிராகத் தொடர்ந்து அவதூறுகளைக் கிளப்புகிறார்கள்.’’ என்றார்.

பான் போதையில் தள்ளாடுகிறது அரசு.

- ந.பா.சேதுராமன்
படம்: கே.ஜெரோம்