Published:Updated:

“என் மகன் வெளியில் வருவான்!” - நம்பிக்கையில் அற்புதம்மாள்

“என் மகன் வெளியில் வருவான்!” - நம்பிக்கையில் அற்புதம்மாள்
பிரீமியம் ஸ்டோரி
News
“என் மகன் வெளியில் வருவான்!” - நம்பிக்கையில் அற்புதம்மாள்

“என் மகன் வெளியில் வருவான்!” - நம்பிக்கையில் அற்புதம்மாள்

பேரறிவாளனின் விடுதலைக்காகப் போராடி வந்த அவரது தாய் அற்புதம்மாள், அவரை பரோலிலாவது அழைத்து வர முடியாதா என்ற ஏக்கத்துடன் அதற்கான முயற்சிகளில் இறங்கி இருக்கிறார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை பெற்று, இப்போது வேலூர் சிறையில் இருக்கிறார் பேரறிவாளன். சிறைக்குப் போய், கடந்த 11-ம் தேதியுடன் 26 ஆண்டுகள் ஆகிவிட்டன. சிறைக் கம்பிகளோடு நீதிப் போராட்டம் நடத்தும் தன் மகனின் கனவை மீட்க பரோல் கேட்டு நடையாய் நடந்துகொண்டிருக்கும் அற்புதம்மாளைச் சந்தித்தோம்.

‘‘சமீபத்தில் பேரறிவாளனின் தந்தை பிறந்த நாளைக் கொண்டாடியதாகக் கேள்விப்பட்டோம். உண்மையா?”

‘‘பேரறிவாளன் சிறைக்குச் சென்ற நாள் முதல் எந்த மகிழ்ச்சியான நிகழ்வையும் எங்கள் வீட்டில் கொண்டாடியதில்லை. என்னுடைய இரண்டு பெண்களுக்குத் திருமணம் ஆனபோதுகூட, மகிழ்ச்சியாக இருப்பது போன்று நடித்துக்கொண்டே அந்த நிகழ்ச்சியை நடத்தினோம். ‘ஒரு நிகழ்ச்சியையும் நம் வீட்டில் நடத்துவதில்லை. அப்பாவுடைய பிறந்த நாளையாவது சிறப்பாகக் கொண்டாடுங்கள்’ எனப் பேரறிவாளன் சொன்னதைத் தொடர்ந்து இந்த விழாவை நடத்தினோம். இது பேரறிவாளனின் ஆசைதான்!”

“என் மகன் வெளியில் வருவான்!” - நம்பிக்கையில் அற்புதம்மாள்

‘‘பேரறிவாளனை பரோலில் அழைத்து வருவதற்கு தமிழக அரசை வலியுறுத்தத் தொடங்கி உள்ளீர்களே?”

“பேரறிவாளனின் தந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்கிறார். அவரைப் பார்ப்பதற்காகவாவது பேரறிவாளனை பரோலில் விடுவிக்க வேண்டும் எனத் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்குக் கடிதம் எழுதியிருந்தேன். அந்தக் கடிதம் முதல்வரின் மேஜைக்குப் போன நேரத்தில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ‘அவர் வந்தவுடன் உங்கள் மகனை பரோலில் விடுவிப்பதற்கான நடவடிக்கையை எடுப்பார்’ என்றனர் அதிகாரிகள். ஜெயலலிதா மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தோம். யாரும் சொல்லாத ‘விடுதலை’ என்ற வார்த்தையைக் கையாண்டு எங்கள் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்த முயன்றவர். பேரறிவாளனுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோதுகூட, முதல்வர் ஜெயலலிதா தலையிட்டதால்தான் அவருக்குச் சிறந்த சிகிச்சை தரப்பட்டது. அதனால், ஜெயலலிதாவிடம் இந்தக் கோரிக்கையை வைத்தோம். எதிர்பாராத விதமாக அவர் இறந்துபோனார். அவர் இல்லாவிட்டாலும் அவரது ஆட்சி இருக்கிறது. அதனால் இப்போதைய ஆட்சியாளர்களிடம் நடையாய் நடந்து வருகிறேன்.”

‘‘இதற்காக யாரை எல்லாம் சந்தித்தீர்கள்?”

‘‘சில நாட்களுக்கு முன்பு எங்களுடைய தொகுதி அமைச்சர் கே.சி.வீரமணியைச் சந்தித்துக் கோரிக்கை வைத்தேன். விரைவில் நடவடிக்கை எடுப்பதாகச் சொன்னார். சட்டசபையில் சிறைத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது என்பதால், சட்ட அமைச்சரைச் சந்தித்தால் ஏதேனும் விடிவு கிடைக்கும் என அவரைச் சந்தித்துப் பேசினோம். ‘இந்த வழக்கைத் தவறாகக் கையாண்டு வருகிறார்கள்’ என்பதை எங்களது வழக்கறிஞர்கள் அவரிடம் விளக்கமாகக் கூறினர். அதற்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் தருவதாக உறுதி அளித்தனர். மேலும், ‘ஆயுள் சிறைவாசிகளுக்கு பரோல் கொடுப்பது என்பது மாநில உரிமை சார்ந்தது. பேரறிவாளனுக்கு பரோல் வழங்க தமிழக அரசுக்கு உரிமை உள்ளது’ என அழுத்தமாக எடுத்துச் சொன்னார் எங்கள் வழக்கறிஞர்.

இதே வழக்கில் தொடர்புடையவர்களான நளினி, ரவிச்சந்திரன் போன்றோர் பரோலில் வந்துள்ளதையும் அவர்களுக்கு வழங்கியதைப் போன்று பேரறிவாளனுக்கும் பரோல் வழங்க வேண்டும் எனவும் கேட்டோம். அதனைக் கேட்டுக்கொண்ட அமைச்சர், ஆலோசித்து விரைவில் நல்ல முடிவு தருவதாகக் கூறியிருந்தார். முதல்வரைச் சந்திக்க முடியவில்லை. சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரைச் சந்தித்துப் பேசினோம். அப்போது அவர் கூறிய வார்த்தைகள் மிகுந்த நம்பிக்கையைக் கொடுத்துள்ளன.”

‘‘முழு விடுதலை என்று கேட்காமல் பரோல் என்று கேட்க என்ன காரணம்?’’

“எல்லோரும் ‘விடுதலை கேளுங்கள்’ என்று ஆலோசனை கூறுகிறார்கள். ஆனால், மத்திய அரசு எப்போது கேட்டாலும், ‘இந்த வழக்கு நிலுவையில் உள்ளது’ என்கிறது. உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வுதான், ‘இவர்களை விடுதலை செய்வது மாநில அரசின் உரிமையா... மத்திய அரசின் உரிமையா?’ என்பதைக் கூற வேண்டும். ஆனால், ஒரு வருடம் ஆகியும் அந்த வழக்கு இன்னும் நம்பர் கூட ஆகவில்லை. அதைக் காரணம் காட்டியே, ‘இந்த வழக்கு நிலுவையில் உள்ளது’ என்கிறது மத்திய அரசு. அந்த மூன்று நீதிபதிகள் அமர்வு ஒரு முடிவுக்கு வந்தால்தான், ‘விடுதலை’ குறித்துப் பேச முடியும். எனவே, இப்போது பேரறிவாளனுக்கு பரோல் கேட்டு இருக்கிறோம்.”

‘‘பேரறிவாளனைச் சிறையில் சந்தித்தீர்களா? அவருடைய மனநிலை எப்படி உள்ளது?’’

‘‘அவன் நம்பிக்கையுடன் இருக்கிறான். ‘நான் எந்தத் தப்பும் செய்யவில்லை அம்மா. நீங்கள் தைரியமா போங்க. நான் வெளியில் வருவேன்’ என்று உறுதியாகக் கூறுகிறான். அந்தத் தன்னம்பிக்கைதான் இன்னும் அவனை வலிமையாக வைத்துள்ளது. இந்த வலிமை அவனை விரைவில் விடுவிக்கும்...”

நம்பிக்கையுடன் முடிக்கிறார் அற்புதம்மாள்.

- கே.புவனேஸ்வரி
படம்: கே.ராஜசேகரன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz