Published:Updated:

“முதல்வரின் பெயரை எஃப்.ஐ.ஆரில் ஏன் சேர்க்கவில்லை?” - கொந்தளித்த உயர் நீதிமன்றம்

“முதல்வரின் பெயரை எஃப்.ஐ.ஆரில் ஏன் சேர்க்கவில்லை?” - கொந்தளித்த உயர் நீதிமன்றம்
பிரீமியம் ஸ்டோரி
News
“முதல்வரின் பெயரை எஃப்.ஐ.ஆரில் ஏன் சேர்க்கவில்லை?” - கொந்தளித்த உயர் நீதிமன்றம்

தேர்தல் கமிஷனையும் நீதிமன்றத்தையும் ஏமாற்றிய எடப்பாடி ஆட்சி

குற்றம் நடந்த இடம்: காவேரி இல்லம், கிரீன்வேஸ் சாலை, சென்னை (சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு).

குற்றத்தில் தொடர்புடையவர்களாகக் கருதப்படுபவர்கள்:

டி.டி.வி.தினகரன் (அ.தி.மு.க துணைப்பொதுச் செயலாளர்)
எடப்பாடி கே.பழனிசாமி (தமிழக முதலமைச்சர்)
செங்கோட்டையன் (பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்)
செல்லூர் கே.ராஜு (கூட்டுறவுத்துறை அமைச்சர்)
தங்கமணி (மின் துறை அமைச்சர்)
விஜயபாஸ்கர் (சுகாதாரத் துறை அமைச்சர்).

புகார்: மேற்கண்ட 6 பேரும் ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டனர். எனவே, இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புகார்தாரர்: இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி, தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் ஆர்.கே. நகர் தேர்தல் அதிகாரி.

இந்தப் புகாரின் அடிப்படையில், அபிராமபுரம் போலீஸ், ஒரு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது. பொதுவாக, குற்றம் செய்தவர் அடையாளம் தெரிந்தவராக இருந்தால், அவரின் பெயர் குறிப்பிடப்பட்டு எஃப்.ஐ.ஆர் போடப்படும். அடையாளம் தெரியாதவர் என்றால், ‘அடையாளம் தெரியாத நபர்கள்’ என்று குறிக்கப்படும். அடையாளம் தெரிந்து பெயர் மட்டும் தெரியவில்லை என்றால், ‘அடையாளம் தெரிந்த பெயர் தெரியாத நபர்கள்’ என்று குறிப்பிடுவார்கள். ஆனால், இந்த வழக்கில் குற்றவாளிகள் விவரம் தொடர்பாக உள்ள பகுதிகளையெல்லாம் வெறுமனே விட்டுவிட்டு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர். ஏறத்தாழ வெற்றுக் காகிதத்தில் கையெழுத்து வாங்குவதற்கு சமமான செயல் இது. அப்படிப்பட்ட ஒரு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த எஃப்.ஐ.ஆரைப் பதிவு செய்துள்ளது அபிராமபுரம் போலீஸ். 

“முதல்வரின் பெயரை எஃப்.ஐ.ஆரில் ஏன் சேர்க்கவில்லை?” - கொந்தளித்த உயர் நீதிமன்றம்

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் கிடைத்த ஆதாரங்களை இணைத்து, தெளிவாக, விரிவாக புகார் கொடுத்தது தேர்தல் ஆணையம். தமிழக காவல்துறை வேண்டாவெறுப்பாக ஒரு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ததோடு, எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அதை ரகசியமாகவும் வைத்திருந்தது. ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வைரக்கண்ணன், பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த வழக்கு விசாரணையில், இந்த எஃப்.ஐ.ஆர் முறைகேடும் வெளியில் வந்தது. அதைப் பார்த்து நீதிபதிகளே அதிர்ச்சியில் ஆழ்ந்துவிட்டனர்.

முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்ததை அடுத்து, ஆர்.கே. நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் வந்தது. அதில் ஆளும் கட்சியான அ.தி.மு.க-வே இரண்டு அணிகளாகப் பிரிந்து போட்டியிட்டன. அ.தி.மு.க (அம்மா அணி) சார்பில் டி.டி.வி.தினகரன் போட்டியிட்டார். அவரை வெற்றி பெற வைப்பதற்காக வாக்காளர்களுக்குச் சேலைகள், துண்டுகள், ஆயிரக்கணக்கில் பணம், பரிசுப் பொருள்கள் என்று கொடுத்து பெரும் முறைகேட்டில் தினகரன் தரப்பு ஈடுபட்டதாக புகார் எழுந்தது. அந்த நேரத்தில், கிரீன்வேஸ் சாலையில் இருக்கும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிரடியாக சோதனை நடத்தியது. அந்தச் சோதனையில் கணக்கில் வராத பணம் பெரிதாகச் சிக்கவில்லை; வருமான வரித்துறையும் இதுவரை அதுபற்றி எதுவும் சொல்லவில்லை. ஆனால், புதையலைப்போல அவர்களிடம் வேறு சில ஆதாரங்கள் வசமாகச் சிக்கின. ஆர்.கே. நகர் தேர்தலைத் தீர்மானிக்க அ.தி.மு.க அமைச்சர்கள் செலவழித்த தொகை, யார் யார் எவ்வளவு செலவழித்தார்கள் என்பன பற்றிய ஆவணங்கள் விஜயபாஸ்கர் வீட்டில் அள்ளப்பட்டன. வாக்காளர்களுக்கு அமைச்சர்கள் செலவழித்த தொகை ஏறத்தாழ 89 கோடி ரூபாய்க்கும் மேல் என்று அந்த ஆவணங்கள் கணக்குச் சொல்லின. இதில் மிரண்டுபோன தேர்தல் ஆணையம், ஏப்ரல் 12-ம் தேதி நடைபெற இருந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை ரத்து செய்வதாக அறிவித்தது.

வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததால் தேர்தலை ரத்து செய்த தேர்தல் ஆணையம், வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. இதையடுத்து வழக்கறிஞர் வைரக்கண்ணன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி ஒன்பது கேள்விகளைத் தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி பதில் கேட்டார். அதில், ‘ஆர்.கே. நகர் தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்ட டி.டி.வி.தினகரன், எடப்பாடி கே.பழனிசாமி, செங்கோட்டையன், செல்லூர் ராஜு, தங்கமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்’ என்று வைரக்கண்ணன் கேட்டிருந்த கேள்விக்கு, ‘அவர்கள் மீது முறையாக போலீஸில் புகார் கொடுக்கப்பட்டு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது’ எனத் தேர்தல் ஆணையம் பதில் அளித்தது.

ஆனால், அந்த எஃப்.ஐ.ஆரின் பேரில் போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே என யோசித்த வைரக்கண்ணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். ‘ஆர்.கே. நகர் தொகுதியில் வேட்பாளர்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டது ஆதாரபூர்வமாக தெரிய வந்ததையடுத்து, தேர்தல் ஆணையம் அந்தத் தொகுதியில் தேர்தலை ரத்து செய்தது. ஆனால், முறைகேடுகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக தேர்தல் ஆணையம் சார்பில் புகார் கொடுத்தும், போலீஸ் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தினகரன், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்’ என அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்யநாராயணன், சுந்தர் ஆகியோர், அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர் நகலைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதன்பிறகு, ‘‘தேர்தல் ஆணையம், குறிப்பிட்ட நபர்கள்மீது வழக்குப்பதிவு செய்யுமாறு புகார் கொடுத்ததே? எஃப்.ஐ.ஆரில் அவர்களின் பெயர் இடம்பெறாதது ஏன்? இது எங்களுக்குக் காவல்துறை மீது அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது’’ என்று தெரிவித்தனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“முதல்வரின் பெயரை எஃப்.ஐ.ஆரில் ஏன் சேர்க்கவில்லை?” - கொந்தளித்த உயர் நீதிமன்றம்

போலீஸ் தரப்பில் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் சொன்ன, அரசுத் தலைமை வழக்கறிஞர் முத்துக்குமாரசுவாமி, “முதல்கட்ட விசாரணையை முடித்து, யார் தவறு செய்தவர்கள் என்று தெரியவருகிறதோ அவர்கள் பெயர்களை அதில் சேர்த்துக் கொள்ளலாம் என்பதற்காக அதை அப்படியே விட்டு வைத்துள்ளோம். எஃப்.ஐ.ஆரோடு, தேர்தல் ஆணையத்தின் புகாரும் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, குற்றம் சுமத்தப்பட்டவர்கள் யார் என்பதில் குழப்பம் ஏற்பட வாய்ப்பில்லை” என்றார். அதைக் கேட்ட நீதிபதிகள், “அடுத்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது, போலீஸ் கேஸ் டயரி, தேர்தல் ஆணையம் புகார் நகலோடு இணைத்து அனுப்பிய ஆர்.கே.நகர் தேர்தல் முறைகேடு தொடர்பான 34 பக்க அறிக்கை ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்” என உத்தரவிட்டனர். தற்போது அந்த விவரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டன. வரும் ஜூலை 14-ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போதுதான், இதில் வசமாகச் சிக்கப்போவது யார் என்பதும், எஃப்.ஐ.ஆரில் யார் பெயர்கள் சேர்க்கப்படும் என்பதும் தெரியவரும்.

இந்த வழக்கு குறித்து, வைரக்கண்ணன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி, வழக்கறிஞர் வி.இளங்கோவனிடம் பேசினோம்.  “இந்தியாவிலேயே இப்படி ஒரு எஃப்.ஐ.ஆர் எங்கும் பதிவு செய்யப்பட்டதாக நாங்கள் கேள்விப்பட்டதில்லை. சந்தேகப்படுபவர்களின் பெயர்களை எஃப்.ஐ.ஆரில் சேர்க்கலாம். விசாரணையில், ‘அவர்கள் குற்றம் செய்தவர்கள் இல்லை’ என்று தெரிந்தால், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்போது அவர்களின் பெயரை நீக்கிவிடலாம். அதுதான் நடைமுறை. ஆனால், தேர்தல் ஆணையம் தெளிவாக 34 பக்க அறிக்கையையும் கொடுத்து, பெயர் விவரங்களையும் கொடுத்து, அவர்களுடைய செல்போன் எண்களையும் கொடுத்த பிறகும், காவல்துறை இப்படி ஒரு எஃப்.ஐ.ஆரைப் பதிவு செய்துள்ளதே ஒரு குற்றம். நீதிபதிகளும் அதனால்தான் கேஸ் டயரி, தேர்தல் ஆணையத்தின் அறிக்கைகளைக் கேட்டுப் பெற்றுள்ளனர். அத்துடன் இதுகுறித்து உரிய பதில் அளிக்கவும் உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்தின் அறிக்கை, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் கிடைத்த ஆவணங்கள் போன்றவை, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக மிக வலுவாக இருக்கின்றன. அதனால்தான் வழக்கின் ஆரம்ப கட்டத்திலேயே இதை மூடி மறைக்க அரசு முயல்கிறது. வழக்கு தொடர்ந்து நடக்கும்போது, அவர்களால் இதிலிருந்து தப்ப முடியாது” என்றனர்.

இதுபற்றி போலீஸ் உயரதிகாரிகள் பலரிடமும் கருத்துக் கேட்க முயற்சி செய்தோம். ‘‘வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும்போது கருத்து சொல்வது பொருத்தமாக இருக்காது’’ என்றே நழுவினர்.

அரசுத் தரப்பின் மௌனம், தவறுகளை உறுதிப்படுத்துவதாகவே புரிந்துகொள்ளப்படும்.

- ஜோ.ஸ்டாலின்
படம்: சொ.பாலசுப்பிரமணியம்