Published:Updated:

நீங்கள் அருந்தும் பாலில் கெமிக்கல்? - ஜூ.வி ஆக்‌ஷன் ரிப்போர்ட்

நீங்கள் அருந்தும் பாலில் கெமிக்கல்? - ஜூ.வி ஆக்‌ஷன் ரிப்போர்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
நீங்கள் அருந்தும் பாலில் கெமிக்கல்? - ஜூ.வி ஆக்‌ஷன் ரிப்போர்ட்

நீங்கள் அருந்தும் பாலில் கெமிக்கல்? - ஜூ.வி ஆக்‌ஷன் ரிப்போர்ட்

னியார் பாலில் கலப்படம் உள்ளது என்று பொத்தாம் பொதுவாக ஒரு பேட்டியைக் கொடுத்து மக்களைப் பீதிக்கு உள்ளாக்கினார், தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. அதையடுத்து, “பாக்கெட் பாலைக் குடிக்கலாமா, வேண்டாமா...” என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. 

இந்தச் சூழலில், விகடன் குழுமம் சார்பில், பால் மற்றும் பால் பொருள்களில் கலப்படம் உள்ளதா என்பதை ஆய்வு செய்து கண்டுபிடிக்க, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் விஜய் உதவியுடன் திட்டமிட்டோம். சென்னை, அசோக் நகரில் உள்ள ஆவின் பாலகத்தில், ஆவின் பால் பாக்கெட், பால் பவுடர் மற்றும் ஆவின் தயிர் ஆகியவற்றைக் கடந்த ஜூன் 12-ம் தேதி வாங்கினோம். மேலும், அசோக் நகர் ரிலையன்ஸ் ஃப்ரஷ் சூப்பர் மார்க்கெட்டில் நெஸ்லே, ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்களின் பால் பவுடர் பாக்கெட்களை வாங்கினோம். அவற்றை கிண்டியில் உள்ள ‘சென்னை மெட்டக்ஸ் லேப் பிரைவேட் லிமிடெட்’ என்ற தனியார் நிறுவனத்தில் ஆய்வுக்காகக் கொடுத்தோம். அந்த ஆய்வில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் டைரி ஒய்ட்னர் பால் பவுடர் பாக்கெட்டில், ‘நியூட்ரலைசர்’ (சமநிலைப்படுத்தி) இருப்பது உறுதி செய்யப்பட்டது. நெஸ்லே எவரி டே பால் பவுடர் பாக்கெட்டிலும் ‘நியூட்ரலைசர்’ இருப்பது உறுதி செய்யப்பட்டது.

நீங்கள் அருந்தும் பாலில் கெமிக்கல்? - ஜூ.வி ஆக்‌ஷன் ரிப்போர்ட்

நியூட்ரலைசர் என்பது என்ன?

பால் அல்லது பால் பொருள்கள் கெட்டுப்போகாமல் இருக்க, சமநிலைப்படுத்தும் பொருள்கள் (நியூட்ரலைசர்) சேர்க்கப்படுகின்றன. காஸ்டிக் சோடா, ப்ளீச்சிங் பவுடர், ஆப்ப சோடா அல்லது பேக்கிங் சோடா போன்ற பொருள்களை சமநிலைப்படுத்தியாகப் பயன்படுத்துகிறார்கள். இதில் காஸ்டிக் சோடா, ப்ளீச்சிங் பவுடர் போன்றவற்றைப் பயன்படுத்துவது, நமக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியது. ஆப்ப சோடாவை அளவோடு பயன்படுத்தினால், பிரச்னை இல்லை.  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சென்னை மெட்டக்ஸ் லேப் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் செல்வகுமாரிடம் பேசினோம். “நீங்கள் கொடுத்த பால் பாக்கெட்கள், பால்பொருள்களை இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் (Food Safety and Standards Authority of India) விதிமுறைப்படி ஆய்வுசெய்தோம். ஆவின் பால் மற்றும் பால் பவுடரில், சமநிலைப்படுத்தும் பொருள்கள் கலப்படம் செய்யப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் டைரி ஒய்ட்னர் பால் பவுடரை ஆய்வு செய்தோம். அவற்றில் நியூட்ரலைசர் கலந்திருப்பது உறுதியானது. நெஸ்லே எவரி டே பால் பவுடரை ஆய்வு செய்தோம். அதிலும் நியூட்ரலைசர் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு பால் பவுடர் பாக்கெட் ஆய்வுகளை, ‘இந்திய சுகாதார சேவைகள் பொது இயக்குநரக’ (DGHS method) பரிசோதனை விதிகளின்படியே மேற்கொண்டோம். எந்தவித அரசு அல்லது சம்பந்தப்பட்ட பால் நிறுவனங்களின் அழுத்தத்துக்கு உட்பட்டு, ஒருதலைப்பட்சமாக எந்தத் தகவலையும் நாங்கள் சொல்லவில்லை” என்றார் உறுதியோடு. 

இதற்கிடையில், வழக்கறிஞர் விஜய் மூலமாக, ஆய்வகத்தின் பரிசோதனை முடிவுகளை முன்கூட்டியே பெற்றுவிட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கடந்த 27-ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்து, அந்த ஆய்வின் முடிவுகளை வெளியிட்டார். ‘ஜூனியர் விகடன்’ சார்பில் நாமும் அமைச்சரிடம் பேசினோம். “தனியார் பால் பவுடர் பாக்கெட்களில் கலப்படம் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது குறித்து முதல்வர், தலைமைச் செயலாளர் மற்றும் சுகாதாரத் துறைச் செயலாளர் ஆகியோரிடம் ஆலோசனை செய்திருக்கிறேன்.

பால் கலப்படம் குறித்து தொடர்ச்சியாகப் பேசிவருகிறேன். இப்போது ஜூ.வி ஆய்வின் மூலம் அது தெரியவந்திருக்கிறது. தனியார் பால் பவுடர் பாக்கெட்களில் செய்யப்பட்ட ஆய்வில், நியூட்ரலைசர் இருப்பது உறுதி
செய்யப்பட்டிருக்கிறது. அது காஸ்டிக் சோடா, ப்ளீச்சிங் பவுடர், யூரியா என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், கலப்படம் செய்யப்பட்ட பாலையோ, பால் பொருள்களையோ அருந்தும் மக்களுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்படும் என்பதை மறுக்க முடியாது. எனவே, இது குறித்து தமிழக மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டியது அவசியம். அதனால்தான் இந்த ஆய்வு முடிவை நாங்கள் முன்கூட்டியே வெளியிட்டோம். அரசு ஆய்வகங்களில் பரிசோதனைக்குக் கொடுத்தால், அத்தகைய ஆய்வகங்களைக் கூட, அழுத்தம் கொடுத்து மாற்றிச் சொல்ல வைத்து விடுகிறார்கள். எனவேதான், உங்கள் பரிசோதனை முடிவை நாங்கள் வெளியிட்டோம்” என்றார் அமைச்சர். 

இந்த விவகாரம் தொடர்பாக, நெஸ்லே நிறுவனத்துக்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பி விளக்கம் கேட்டோம். அந்த நிறுவனத்தின் கார்ப்பரேட் செய்தித்தொடர்பாளர் ஷாஷங் குமார் நாயர் நமக்கு அளித்த விளக்கத்தில், “இது, முற்றிலும் உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டு. எங்கள் நிறுவனத்தின் எவரி டே டைரி, நூறு சதவிகிதம் பாதுகாப்பான உணவுப் பொருள். ஊடகங்களில் குறிப்பிட்டிருப்பது போன்ற உடலுக்கு அச்சுறுத்தலான பொருள்கள் கலப்படம் செய்யப்பட வில்லை. எங்கள் தயாரிப்புக்காகப் பயன்படுத்தும் மூலப்பொருள்கள், ஒவ்வொரு கட்டத்திலும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இறுதித் தயாரிப்பு முழுமையான தரத்துடன் உறுதிசெய்யப்பட்ட பிறகு தான், விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. எங்கள் மீதான இந்தப் புகார் குறித்து நாங்கள் ஆய்வுசெய்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனமோ, “எங்கள் நிறுவனத்தின் டைரி ஒய்ட்னர் பால் பவுடரில், மீடியாக்களில் சொல்வது போல ஆபத்தான எந்தப் பொருளும் இல்லை. வாடிக்கையாளர்களின் நலனும், பொருள்களின் தரமுமே முக்கியம் என்பது எங்கள் நிறுவனத்தின் கொள்கை. இந்த ஆய்வைச் செய்த குறிப்பிட்ட நிறுவனம், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் அங்கீகாரம் பெற்றது அல்ல” என்று விளக்கம் தந்தது.

நீங்கள் அருந்தும் பாலில் கெமிக்கல்? - ஜூ.வி ஆக்‌ஷன் ரிப்போர்ட்

பால் கலப்படம் பற்றிய செய்திகளால் மக்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து மருத்துவர் கு.சிவராமனிடம் பேசினோம். “என்றைக்குத் தொழில்நுட்பம் மற்றும் அறிவியலைப் பயன்படுத்தி பாலைப் பதப்படுத்தும் முறைகள் தோன்ற ஆரம்பித்ததோ, அன்றிலிருந்தே வணிகம் உள்ளே புகுந்துவிட்டது. மாட்டின் மடியிலிருந்து கறந்த மூன்று அல்லது நான்கு மணி நேரத்துக்குள் பால் கெட்டு விடும். அதுவரை கெடாமல் வைத்து இருப்பதற்கான பொருள், இயற்கையிலேயே பாலில் கலந்துள்ளது. ஆனால், இப்போது செயற்கை முறையில் பால் மற்றும் பால் பொருள்களின் இயல்பைப் பாதுகாக்கிறார்கள். வெயில் காலத்தில் பால் சீக்கிரம் கெட்டுப்போகிறது என்பதற்காக, பாலின் அமிலத்தன்மையை நீக்க, காரத் தன்மையுள்ள நியூட்ரலைசர்களைப் பயன்படுத்துகின்றனர்.

மிகப்பெரிய அளவில் பாலில் கலப்படம் நடக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு விசாரணை நடந்தபோது, ஒட்டுமொத்த இந்தியாவில் விற்கப்படும் பாலில் 68 சதவிகிதம்  கலப்படப் பாலே என்று தெரியவந்தது. இப்போது பால்வளத்துறை அமைச்சரே பாலில் கலப்படம் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார். கலப்படம் இல்லாமல் பாலைக் கொடுக்க வேண்டியது அரசின் கடமை” என்றார்.

2011 முதல் 2016 வரை, பால் கலப்படம் தொடர்பாகத் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளில் பல உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. “பாலில் கலப்படம் செய்யப்படுவதை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. இந்தியாவின் எதிர்கால சந்ததியினர் தொடர்புடைய விஷயம் இது” என்று நீதிமன்றம் கடுமை காட்டியுள்ளது. ‘‘பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்’’ என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பரிந்துரை செய்துள்ளனர்.

தமிழக அரசு மக்களிடம் பீதியை ஏற்படுத்துவதற்குப் பதில், கலப்படம் செய்பவர்களைத் தண்டிக்க உரிய சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

- கே.பாலசுப்பிரமணி
படங்கள்; சொ.பாலசுப்ரமணியன், ப.சரவணகுமார்

என்னென்ன கலப்படம்?

சோப்புத்தூள்: பால் வெள்ளையாக இருக்கிறது என்பதைக் காட்ட இதைக் கலப்பார்கள். இது இரைப்பைக்குப் பாதிப்பு ஏற்படுத்தும்

யூரியா: பால் வெள்ளையாகத் தோற்றம் அளிப்பதற்காக சேர்க்கிறார்கள். இது, கிட்னிக்கு அதிக வேலையைக் கொடுத்து நம் உடலில் இருந்து யூரியாவை வெளியேறச் செய்துவிடும்.

ஹைட்ரஜன் பெராக்சைடு: பால், நீண்ட நேரம் ஃப்ரஷ் ஆக இருப்பதற்காகச் சேர்க்கப்படுகிறது. இது கலந்த பாலைக் குடித்தால், இரைப்பை, குடல் செல்கள் கடுமையாகப் பாதிக்கப்படும்.

ஸ்டார்ச்: பாலின் அடர்த்தியை அதிகரிக்கிறது. அதிக அளவு ஸ்டார்ச் கலந்த பாலைக் குடிக்கும்போது, வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.